தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு
இந்நாள் வரையுள்ள சிறந்த நூல்களின் மேற்கோள்களைக் காட்டித் திரைப்படம்
தொடங்குகிறது. இந்த வழிமுறையை வேறெந்தப் படத்திலும் பார்த்ததில்லை.
தொடக்கத்திலேயே வள்ளுவ நாட்டை நம்கண்முன் காட்டுகின்றனர். ஆங்கொரு
திண்ணைப் பள்ளி அதாவது கல்விக்கூடம் நடத்தி வருகிறார் ஐயன் திருவள்ளுவர்.
கல்விக்கூடம், ஐயன், துவர்த்து, துண்டு, வைகறை, கருக்கல், யாமம் என்று படம் முழுவதும்
தனித்தமிழ்ச் சொற்களையே செவியினிக்கக் கேட்கிறோம். கருப்பு வெள்ளைப் படக்காலத்தில்
கேட்ட தீந்தமிழை பைந்தமிழை செந்தமிழை முக்கால் நூற்றாண்டுக்குப் பின் மீண்டும்
கேட்க நமக்கோர் அரிய வரமாக அமைந்துள்ளது திருக்குறள் திரைப்படம்.
நீ என்னிடம் காதல் வயப்பட்டாய் என்பதற்கு அகப்பட்டாய் என்ற சொல்லாடலை
வைத்துள்ளனர். அது எவ்வளவு பொருத்தம். அகம் மனம். என்னுள் அகப்பட்டாய்.
மனத்துக்குள் வந்தாய். வீரமும் காதலும் தமிழரின் வாழ்வியலில் சிறந்திருந்ததாகக்
கூறும் திரைப்படம் காதலை வரம்புமீறாமல் காட்டியுள்ளது அருமை. கண்டதும் காதல். உடனே
கனவில் வெளிநாட்டில் பனிமலைக்கு அடியில், வானுயர்ந்த கட்டடங்களுக்கு இடையே அதிவிரைவாய்ச் செல்லும் வண்டியில்
துள்ளலும் ஆட்டமும் போடும் காதல் என்றிருந்த வகைப் பாடல்களையே கண்டிருந்த
தமிழர்களுக்குத் தொலைத்தொடர்புக்குச் செல்பேசி உள்ளிட்ட கருவிகள் இல்லாத சங்கக்
காலத்தில் எப்படிக் காதலித்திருப்பர் என்பதைக் காட்டும் இலக்கணமாகத் திகழ்கிறது
இந்தப் படம். அதிலும் காதலுக்குக் களவு என்கிற பெயரையே கொடுத்துள்ளனர்.
பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் மகள் உள்ளத்தைக் களவாடுவது களவு, காதல் என்கிறது இந்தத்
தமிழர் வாழ்வியல் இலக்கணம்.
ஐயனின் ஆடைகளுக்கு அகில்புகை காட்டுகிறேன் என்றொரு உரையாடல். இது
பருத்தி ஆடைகளை வெள்ளாவியில் வைத்து வெளுத்தபின் அதற்கு மணமூட்ட அகில்புகை
காட்டுவது என்கிற நமது பண்பாட்டு வழக்கத்தைக் காட்டுகிறது. வெட்கத்தை நாணம் என்றே
பல இடங்களில் கூறியுள்ளனர். பிள்ளையை மழலை என்கின்றனர்.
படத்தின் அரங்கக் காட்சிகளில் பண்டைத் தமிழர் முதல் கடந்த சில
பத்தாண்டுகளுக்கு முன்வரை தமிழர் பயன்படுத்தி வந்த சுளகு (முறம்), தண்ணீர்க் குடுவை, மூங்கில் கீற்றுக் தடுப்பு, சுரைக்குடுக்கை ஆகியன
பயன்படுத்தியுள்ளது கதையைத் திருவள்ளுவர் காலத்தில் சங்கக் காலத்தில் நடப்பதாக
நமக்குக் காட்டுவதற்கு உறுதுணையாக உள்ளது.
வள்ளுவ நாட்டில் முல்லை நிலத்தில் ஆயர்பாடி அருகே ஐயனின் கல்விக்
கூடம் அமைந்துள்ளது. அங்குச் சிறாரும் இளைஞரும் ஐயனிடம் கல்வி பயின்று
வருகின்றனர். அவர்களில் ஒருவன் நெய்தல் நிலத்தைச் சேர்ந்த சங்குமாறன்.
ஆயர்பாடியில் இருந்து ஐயனின் வீட்டுக்குத் தயிர் கொண்டு வருகிறாள் மாடத்தி.
மாடத்தியும் சங்குமாறனும் கண்களால் கவரப்பட்டுக் காதலில் ஒருவரிடம் ஒருவர்
அகப்பட்டுக் கொண்டனர்.
உள்ளத்தைக் களவாடி அதன்வழியாகக் காதல் வயப்பட்டுத் திருமணம்
செய்துகொள்ளும் முறையே, அதுவும்
சாதி கடந்து திருமணம் செய்துகொள்வதே தமிழரின் வழக்கமாக இருந்தது என்று படத்தில்
கூறப்படுகிறது. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்பது ஏற்கெனவே அறிமுகம்
இல்லாத இருவரைத் திருமணம் என்னும் பெயரில் காலையில் தாலிகட்டி மாலையில் ஒரே
கூட்டுக்குள் அடைப்பது போலாகும் என்கின்றனர். இத்தகைய மனங்கள் எப்படிப் பொருந்தும்
என்று வினவுகின்றனர். இந்த உரையாடல்கள் ஐயன் வள்ளுவருக்கும் அம்மை வாசுகிக்கும்
இடையே நிகழ்கின்றன. பொய்யும் வழுவும் தோன்றிய பின் ஐயர் யாத்தனர் கரணம் என்று
கூறுகின்றனர். காதலித்து ஏமாற்றும் போக்கு தொடங்கியதால் பெண் ஏமாற்றப்படுவதைத்
தடுக்கும் வகையிலேயே திருமணம் என்ற சடங்கு வந்ததாகக் கூறுகின்றனர். மூன்று புறம்
கடலால் சூழப்பட்ட நம் நாட்டில் அத்திசைகளில் இருந்து எதிரிகள் வரமுடியாது.
வடக்கில் இருந்தே எதிரிகள் படையெடுத்து வந்தனர். ஆகையால் நம் தெய்வங்கள்
பெரும்பாலும் வடக்குநோக்கியே வீற்றிருக்கின்றன என்றொரு விளக்கம்.
படத்தில் முதல் காதல் காட்சியே மாடத்தி தன் வீட்டுக்குத் தெரியாமல்
சங்குமாறனைச் சந்தித்துப் பேசுவதுதான். இந்தச் சந்திப்பைப் பகல்பொழுதாகக்
காட்டவில்லை. இரவுநேரத்தில் இருவரும் ஊருக்கு வெளியே மரங்களடர்ந்த பகுதியில்
தனியாகப் பார்த்துக் காதலைப் பொழிகின்றனர். இதைக் களவு என்கின்றனர். இந்தக் காட்சி
நம் உள்ளத்தைக் களவாடுகிறது.
காதலிக்கு நாள்தோறும் காதலன் பூச்சூடி விடுகிறான். இந்தப் பூவைத்
தந்திரமாக அவள் வீட்டுக்குச் செல்லுமுன் எடுத்துவிட்டுச் சென்றாலும் அதன் மணம்
அங்கும் கமழ்கிறது. இதனால் தன் தாய் தன் மீது ஐயங்கொள்கிறாள் என்றுரைக்கிறாள்
மாடத்தி. ஊடலுக்குப் பிந்தைய கூடல் மிகவும் இன்பமானது என்றும் அத்தகைய
இன்பத்துக்குக் காதலர்கள் ஏங்கிக் கிடப்பதும் சங்கக் காலச்சூழலில் சுவையானவை.
சங்குமாறன் மாடத்தியிடம் காதல்மொழி பேசும்போது வேட்டுவப் பெண்ணிடம் முயல்கள்
இரண்டு அகப்பட்டுக் கிடக்கின்றன அவற்றை விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறான். இது
காதலிப்போர் இருவர் பேசும் பேச்சில் உண்டுதான் என்றாலும் திரைப்படத்தின் வழியே
காட்டும்போது இருபொருள் கொண்டதாக,
இல்லை இல்லை மறைமுகமாக ஒரேபொருளை உணர்த்துவதாக உள்ளது. ஆனாலும்
இரவில் காட்டும் அந்தக் காதல் காட்சி மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது வரம்பு
மீறாதது.
உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்பது தமிழரின் வாழ்வியல். வறியோர்
குப்பைக் கீரையை அவித்துக் கடைந்துண்ணும் வழக்கம் அன்றும் இருந்துள்ளது.
வள்ளுவ நாடு, குமணநாடு, எருமைநாடு, நடுநாடு, பாண்டியநாடு என்றெல்லாம்
தமிழ்நிலங்களாகவே கதைக்களம் அமைந்துள்ளது. சேரநாடும் சோழநாடும் இங்கே
காட்டப்படவில்லை.
குமணநாடு கொங்கு மண்டலத்தில் உள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது.
குமணநாட்டில் மன்னன் குமணனைப் பார்க்கப் புலவர் ஒருவர் செல்கிறார். மன்னனைக் காண
அவர் வாயிலில் நிற்பதாக வாயிற் காவலர் சொல்கிறார். சான்றோர் புலவர் ஆகியோரை
வாயிலில் நிற்க வைக்கக் கூடாது என்றும், அவர்களுக்குத் தன் அரண்மனை வாயில் எப்போதும் திறந்திருக்கும் என்றும்
மன்னன் கூறுவது மன்னர்கள் புலவர்களைப் புரந்து வாழ்ந்த வரலாற்றைக் கூறுவதாக
உள்ளது. வந்த புலவர் பெருந்தலைச் சாத்தன் பசியாலும் களைப்பாலும் வந்திருப்பார்
என்பதை அறிந்த குமணன் அவரை முதலில் பசியாறச் சொல்கிறார். உப்புப் போடாத குப்பைக்
கீரை உண்ணுவதைப் பற்றிய அவரது பாடலைப் பெற்றுக்கொண்டு அவருக்குப் பொற்கிழி
வழங்குகிறார் குமணன். இது தமிழரின் விருந்தோம்பல் பண்பைக் காட்டுகிறது. இந்த
நாட்டில் பசியால் வாடியவர் எவரும் இல்லை என்பதே அந்த மன்னனின் சிறப்பைக் காட்டும்
சான்றாகும் என்று புலவர்கள் பேசிக்கொள்கின்றனர். எருமை (மைசூர்) நாட்டில் பசியால்
வாடிய மக்களை எங்கும் காணமுடிவதாகவும் பேச்சு வருகிறது. வந்த புலவருக்கும்
இரவலருக்கும் குமணன் வாரி வழங்குவதை அவன் தம்பி இளங்குமணனால் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை.
உணவுப் பண்டங்களைச் சேர்த்து வைத்துள்ள இடத்துக்குக் கிட்டங்கி என்ற
அருந்தமிழ்ச் சொல் உள்ளது. இப்போதுள்ள படங்களிலும் செய்தி அறிக்கைகளிலும் குடோன்
என்று சொல்கின்றனர். அவர்கள் இனியாவது இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது கிட்டங்கி, கிடங்கு என்று எழுதும்
வகையில் திருந்த வேண்டும்.
இந்தப் படத்தில் காணப்படும் ஓலைச்சுவடிகள் ஓர் ஓரத்தில் துளையிட்டு
நூலால் கட்டியிருக்கிறது. பெரும்பாலும் நீண்ட ஓலை இலக்குகளில் நடுவில்
துளையிட்டுப் பெரிய ஓலைச்சுவடிகளே வழக்கில் உள்ளன. அத்தகைய ஓலைச்சுவடியைப்
படப்பிடிப்புக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.
இந்தப் படத்தில் ஊர்ப்பெயர்கள் அனைத்தும் நல்ல தமிழ்ப்பெயர்களாக
உள்ளன. காயல்பட்டினம், மானூர், உவரி என்பன சான்றுக்கு
ஒருசிலவாகும்.
மாயோனை வணங்கும் முல்லைநிலத்துப் பெண்ணான ஆயர்பாடியைச் சேர்ந்த
மாடத்தி ஐயன் வள்ளுவர் வீட்டுக்குத் தயிர் விற்க வரும்போது அங்கு ஐயனிடம் கல்வி
கற்கும் சங்குமாறனிடம் காதல் வயப்படுகிறாள். இது அவளின் பெற்றோருக்குத் தெரியாது.
அந்தச் சமயத்தில் மானூரில் இருந்து அதே இனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்மகனுக்கு
மாடத்தியைப் பெண்பார்க்க வருகிறார். முதலில் மகளைக் கொடுக்க மறுக்கும் பெற்றோர்
பின்பு தங்கள் காளையை அடக்கினால் பெண் தருவதாகக் கூறுகின்றனர்.
நெய்தல் நிலத்து மாந்தனான சங்குமாறன் காளையுடன் பழகியவன் அல்லன்.
அவன் எப்படிக் காளையை அடக்கி நம்மை ஊராரறியக் கைப்பிடிப்பான் என்று எண்ணிக்
கலங்குகிறாள் மாடத்தி. தான் விரும்பியவனுக்குத் தன்னை மணமுடித்து வைக்காவிட்டால்
அவனைக் கைப்பிடிக்க உடன்போக்கே ஒரு பெண்ணுக்குச் சிறந்தது என்று ஐயன் வள்ளுவர்
உரைப்பதாக இப்படத்தில் காட்சி வைத்துள்ளனர்.
தான் விரும்பும் சங்குமாறனைக் கைப்பிடிக்கா விட்டால் அரளிவிதையை
அரைத்துத் தின்று செத்துவிடுவேனேயொழியப் பிடிக்காத ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட
மாட்டேன் என்று சூளுரைக்கிறாள் மாடத்தி.
ஐயனின் அறிவுரைப்படி சங்குமாறனுடன்போய் மாடத்தி தன் வாழ்க்கையை
அமைத்துக்கொள்கிறாள். இதையறியாமல் ஐயன் வீட்டுக்குத் தேடி வரும் மாடத்தியின்
அன்னையிடம் உங்கள் மகள் நல்ல பண்புடைய காளையைக் கைப்பிடித்துள்ளாள். ஆதலால் கலங்க
வேண்டாம் என்றுரைக்கிறார் ஐயன். இதனால் அந்தத் தாய் மனம் அமைதியாகிறது.
தமிழர் பண்பாட்டில் இருவருக்குத் திருமணம் நடக்க இருப்பதை
உறுதிசெய்யும் சடங்காகப் பூ வைத்தல் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இதில்
காட்டும் வீடுகளில் கறிச்சட்டி,
அரிவாள்மணை ஆகிய பொருட்கள் இருப்பதைப் பார்க்கவே இயல்பாக இருக்கிறது.
மாடத்தியின் காதலன் சங்குமாறனைப் பரதவன் என்கின்றனர். தமிழ்ப்
பண்பாட்டின்படி நெய்தல் நிலத்தில் வாழும் இனத்துக்குப் பரதவர் என்று எப்படிப்
பெயர் வந்தது? பரவை
என்பது கடல். அதன் மீது படகோட்டுவதாலும் அதில் மரக்கலம் செலுத்துவதாலும் பரவன்
பரவர் என்று கூறுவதே சரியாகும். நெய்தல் நில மாந்தர் பரவர் பரத்தியர் ஆவர்.
சங்குமாறனின் ஊராகக் கூறப்படும் உவரி இன்றும் பரவர் பெரும்பான்மையாக வாழும் ஊராக
உள்ளது. அந்த ஊருக்குச் சென்று படம்பிடிக்கவில்லை என்பது ஒரு குறையே. ஆனாலும்
சங்கக் காலத்தைக் காட்டும் வகையில் அவ்வூர் இப்போது இல்லை என்பதால் அதைக்
காட்டாதது ஒரு குறையல்ல என்றே சொல்லலாம்.
பிள்ளையைக் காணாமல் தேடும் மாடத்தியின் தாய் தன் மகள் சங்குமாறனைத்
தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள் என்று ஐயனிடம் கேட்டறிந்தபின் மனத்தில் ஆறுதல் கொள்கிறாள்.
அதேநேரத்தில் சங்குமாறனின்
ஊரில் பறையடித்து மகுடம் அடித்துத் திருமண விழா களைகட்டுகிறது. தெருவெங்கும்
மாவிலைத் தோரணம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டின்படி மணமக்கள் இருவரும்
ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்கின்றனர். திருமணப் பந்தலில் நிறைநாழி நெல், குலைவாழைப்பழம், தட்டிப்பந்தல், குலைவாழை ஆகியன
முப்பதாண்டுகளுக்கு முன் நம் தமிழ்நாட்டின் சிற்றூர்களில் நடைபெற்ற திருமணத்தைப்
போலவே இருக்கிறது.
இதே சமயத்தில் குமண நாட்டில் குமணனின் தம்பி இளங்குமணன் உள்ளங்
குமுறுகிறான். நண்பர்கள் அவனை இளவல் என்று அழைக்கும்போது, நான் எங்கே இளவலாக
இருக்கிறேன். அண்ணனை இரந்து வாழும் இரவலனாக அல்லவா இருக்கிறேன் என்று மனம்
புழுங்குகிறான். அண்ணனிடமே சென்று தனக்கு முடிசூட்டும்படி வேண்டுகிறான். குமணனும்
இந்த நாட்டை நாம் ஆண்டால் என்ன?
நம் தம்பி ஆண்டால் என்ன? என்ற முடிவுக்கு வந்து முடிதுறக்கிறார். இதை அரசவையில் உள்ளோர்
ஏற்கவில்லை. குமணன் உங்களுக்குத் தம்பியாக இருக்கலாம். ஆனால் இந்த
நாட்டுமக்களுக்கு நல்லவராக இருக்க வேண்டுமே என்கின்றனர்.
இளங்குமணனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டுக் காட்டுக்கு ஏகினார்
குமணன். அவர் தம்பி இளங்குமணனுக்கு முடிசூட்டப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள்
எல்லோரும் குமணனையே புகழ்கின்றனர். வரி வரியெனக் கசக்கிப் பிழியும் குமணனை
வெறுக்கின்றனர். குமணனைக்
காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுச் செல்வதற்காக மூவர் உடன் வருகின்றனர்.
அவர்களில் அமைச்சர் சொல்கிறார். தலையை வெட்டிவிட்டு வரும்படி தான் இளங்குமணன்
சொன்னான். எனினும் நாங்கள் மனமில்லாமல் விட்டுவிட்டுச் செல்கிறோம் என்கிறார்.
குமணனின் மெய்காப்பாளன் பரிதி மீண்டும் நாடுதிரும்ப மனமில்லாமல் குமணனுடன்
இருக்கிறார். குமணனைத் தலையை வெட்ட உத்தரவிட்டுள்ளான் இளங்குமணன். அவருடன் தன்னையும்
வெட்டிக்கொன்றுவிட்டதாக அமைச்சரும் படைத்தலைவரும் பொய்யுரைத்துள்ளனர். இந்நிலையில்
எங்கேனும் யாரேனும் தன்னைக் கண்டால் குமணன் உயிருக்கு ஊறாகுமே எனக் கருதும் பரிதி
அங்கிருந்து காட்டுவழியே வெண்ணிறப் புரவியில் செல்கிறான்.
இதேகாலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் வள்ளுவர் வீட்டுக்கு
வருகிறார். ஐயனின் மனைவி வாசுகி அவருக்கு மட்குவளையில் மோர் கொடுக்கிறார். அவர்
தமிழ்நாட்டின் விருந்தோம்பலைக் கண்டு வியக்கிறார். திருமணத்துக்கு முன்பு
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றி வந்த தனக்குத் திருமணம் ஒரு கால்கட்டாக
அமைந்து விட்டதாக வள்ளுவர் நினைக்கிறார். இவர்களுக்கு ஒரு பட்டுத் துணியைப்
பரிசளிக்கிறார் வெளிநாட்டுக்காரர். அது பட்டுப்புழுவைக் கொன்று அதன் கூட்டில்
இருந்து எடுத்த நூலில் நெய்தது என்பதால் அதை வாங்க மறுக்கிறார் வாசுகி. அதனாலென்ன.
ஒரு பருத்தித் துணியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கொடுக்கிறார் வெளிநாட்டுக்காரர்.
வள்ளுவ நாட்டிலிருந்து ஐயன் வள்ளுவர் கொங்குநாட்டில் தனது நண்பரைக்
காணச் செல்கிறார். வழியில் ஐயனும் பரிதியும் சந்திக்கின்றனர். குமண நாடும்
தமிழ்நாடும் இருக்கும் நிலைகண்டு இருவரும் மனம் வெதும்புகின்றனர். தன் உடன்பிறப்புக்கு
முடிசூட்டுவதைக் கண்டு குமணன் வருந்தவில்லை. ஆனால் பொல்லாத இளங்குமணன்
முடிசூட்டியதைக் கண்டு பரிதியும் மக்களும் அமைச்சர்களும் இனி இந்த நாட்டின் நிலை
என்னாகுமோ என்று கருதி அஞ்சுகின்றனர். அவர்கள் அஞ்சியதுபோலவே இளங்குமணன் கடுமையாக
வரி விதித்து மக்களைக் கசக்கிப் பிழிகிறான்.
கதையில் வரும் மாந்தர்கள் அனைவரும் காலில் சிலம்பு கையில் காப்பு
கழுத்தில் சங்குமணி எனப் பல்வேறு அணிகலன்களை அணிந்துள்ளனர். தமிழ்நாட்டு அரசியலில்
எப்போதுமே சமயவாதிகள் தலையீடு இருந்ததில்லை என்கிறார்கள் இந்தக் கதையில்.
இப்படிக் கதை நகரும்போது வள்ளுவ நாட்டில் மூங்கில் காட்டில் ஆட்கள்
நடமாட்டம் இருப்பதை அறிந்த வீரர்கள் பின்னால் முடுக்கிச் செல்கின்றனர். அங்கு ஒரு
பெண் இறந்துகிடக்கிறாள். மற்றொரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளாள்.
இதையறிந்த படைவீரர்கள் அந்தக் காமுகன் மேல் வேல் எறிகின்றனர். அது மூட்டுக்குக்
கீழே குத்தி அவன் கீழே சரிகிறான். அவனைப் பிடித்துக்கொண்டு வந்து ஊரின் நடுவே
மரத்தில் கட்டிவைக்கின்றனர். மன்னன் முன்னிலையில் அவன் மீது குற்றச்சாட்டுப்
படிக்கப்படுகிறது. அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதையறிய வள்ளுவரைக் கூட்டிவரச்
சொல்கிறார் மன்னர். அவரும் வருகிறார். இந்தக் கயவன் செய்த குற்றத்தைச் செவியால்
கேட்க முடியாத ஐயன், கொலையில்
கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர் என்னும் குறளுக்கொப்ப இந்தக்
கழுவனுக்குக் கழுமரத்தில் ஏற்றும் தண்டனை அளிக்கலாம் என்கிறார். கழுமரத்தில்
ஏற்றியதும் அவன் அழுகை ஊர்முழுவதும் கேட்கிறது. அவன் உயிர்பிரிய மூன்று நாட்கள்
ஆகும் என்றும், இப்படிக்
கொடிய தண்டனை அளித்தால்தான் இதைப் பார்க்கும் மற்றவர்க்குக் குற்றம் செய்யும்
எண்ணம் வராது என்றும் கூறுகின்றனர். கள்குடிதான் குற்றத்துக்குக் காரணம் என்பதால்
அதை இறக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மன்னனிடம் வள்ளுவர்
வேண்டிக்கொள்கிறார்.
இந்த நாட்டில் மாட்டைக்கூடத் துன்புறுத்துவதில்லை. மூக்கில் சரடு
பீறாத மாடுகளே காட்டப்பட்டுள்ளன. கதைமாந்தரின் உரையாடல்களில் பிள்ளை, திங்கள், வருத்தம், மகிழ்ச்சி, பசலை, அகப்பாடல் எனத் தமிழ்ச்
சொற்களே வழங்குகின்றன. காட்சிகளில் காட்டும் காட்டிலும் மூங்கிலும் புளியமரங்களும்
அடர்ந்து வளர்ந்துள்ளன. குமணன் இளங்குமணன் இருவரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள்
ஒருதாய் மக்கள் என்றாலும் குமணன் குடிகாத்து ஓம்பி வரும் பண்பினன் என்றும், இளங்குமணன் குடிகளைக்
கசக்கிப் பிழிந்து வரிவாங்கும் தீயவன் என்றும் பேசிக்கொள்கின்றனர். முத்திருக்கும்
நாகத்திடம் தான் கொடிய நஞ்சும் இருப்பதாகக் கூறிக்கொள்கின்றனர்.
காட்சியமைப்புகளில் விலங்குகளாகக் குதிரைகள் மாடுகள் இருக்கின்றன.
வீட்டிலும் வெளியிலும் அரங்கப் பொருட்களாகத் தொட்டில், மரப்பொம்மை, ஓலைப்பாய், மண்பானை, உரல் ஆகியன இருக்கின்றன.
ஓட்டு வீடுகள், ஓலை
வீடுகள் உள்ளன. முடிதுறந்து காட்டில் வாழும் குமணன் எப்படிப் பசியாறிக்கொள்கிறார்
என்னும் பொழுது மேற்கு மலையில் பழங்கள், கிழங்குகள், தேன், தினை ஆகியன அளவின்றிக்
கிடைக்கின்றனவே அவற்றைத் தின்று பசியாறிக் கொள்வதாகக் கூறுகின்றனர். கடல்கடந்த
நாடுகளிலும் வடநாட்டிலும் அடுத்த அரசுரிமை யாருக்கு என்பதில் போட்டி வந்து
ஆட்சிக்கவிழ்ப்பும், உடன்பிறந்தாரையே
வெட்டிக்கொல்லும் வெறியும் உள்ளது சுட்டிக் காட்டப்படுகிறது. தமிழ்நாட்டில்
அப்படியொரு நிலை எப்போதுமே வந்ததில்லை என்றும் பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்.
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழிக்கேற்ப அண்ணன் நாட்டையாள்வதும் தம்பி
படைத்தலைமை ஏற்பதும் என்று உள்ளதாகக் கூறப்படுகிறது.
கெட்டோருக்கு நட்டாரில்லை என்கின்றனர். ஆனால் சாத்தனும் ஐயனும்
குமணனைப் பார்க்கும்போது அவர் வேட்டுவக் குலத்தினருடன் காட்டில் தங்கியுள்ளார்.
அங்கு நாவல், மா ஆகிய பழவகைகள்
மலிந்துள்ளன. குறிஞ்சி நில வேட்டுவர்கள் அவருக்குத் தேனும் தினைமாவும்
கொடுக்கின்றனர். அவர் அருகில் நிற்கும் சிறாரும் பழங்களை எடுத்துக்
கொடுக்கின்றனர். அப்போது பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்கின்றனர்.
இதே காலத்தில் குமண நாட்டில் வரிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது.
குடிக்கக் கஞ்சி இல்லாத வீட்டில் இரவில் சென்று வரி கேட்கின்றனர். கொடுக்க முடியாத
குடியானவரை அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர்.
குமணனுக்கும் சாத்தனுக்கும் உள்ள நட்பு கோப்பெருஞ்சோழனுக்கும்
பிசிராந்தையாருக்கும் உள்ள நட்புப் போன்றது. அண்ணன் கொல்லப்படாமல் எங்கோ காட்டில்
உயிர்வாழ்வது தம்பி இளங்குமணனுக்குத் தெரிந்து விட்டது. அண்ணன் தலைக்கு விலை
வைக்கிறான். வறுமையில் வரும் புலவர்க்குத் தன் உடைவாளை எடுத்துக்கொடுத்துத் தலையை
வெட்டிக்கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் பொற்கிழி தருவான் என்கிறார் குமணன்.
ஒரு நாடு செழிப்பாக இருந்தால் அங்குச் செங்கோல் இருந்தால் பட்டி
பெருகிப் பாற்சோறு பொங்கும் என்கின்றனர். நன்னனும் கிள்ளியும் ஐயனும் செல்வம்
நிரம்பிய நாட்டில் படைபலமும் இருந்தால்தான் அந்த நாட்டில் அமைதி நிலவும்
என்கின்றனர். இந்நிலையில் கொடுங்கோல் ஆட்சியில் நாட்டைவிட்டு மக்கள் கானாடு
செல்கின்றனர். அவர்களை வழிமறிக்கும் பரிதி நடுநாட்டுப் படையுடன் சேர்த்துப்
போர்ப்பயிற்சி அளித்துத் தன் நாட்டைக் கொடுங்கோலனிடம் இருந்து விடுவிக்க
எண்ணுகிறார். படைவீட்டில் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். இந்தப் படையெடுப்பு
தன் நாட்டுக்கு எதிராக இல்லை என்றும் அதன் குடிகளின் விடுதலைக்காக என்றும் பரிதி
தெளிவாக உணர்த்துகிறார்.
நடுநாட்டுப் படைவீட்டில் பயிற்சியளிக்கும் பரிதியைப் பார்க்க இரவில்
அவன் காதலி பவளக்கொடி காட்டுப் பகுதிக்கு வந்துபோகிறாள். காதலனை எண்ணிச் சோளக்கொல்லையில்
அவள் பாடும் பாட்டும் அந்தக் காட்சியும் கண்ணுக்குக் குளுமையாகவும் செவிக்கு
இனிமையாகவும் இருக்கின்றன. பரிதிக்கும் பவளக்கொடிக்கும் இடையில் உள்ள காதலை ஐயனும்
அறிகிறார்.
கதைமாந்தர்கள் காட்டில் உலவும்போது தண்ணீரைச் சுரைக்குடுக்கையில்
வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஐயன் வெளியூருக்குச் சென்றதால் தனியே பிரிந்திருக்கும்
வாசுகி பேச்சியிடம் அந்தத் தனிமையின் கொடுமையைச் சொல்கிறார். நாராய் நாராய்
செங்கால் நாராய் என்ற பாடலை நினைவுகூர்கிறார். அப்போது பாடும் முல்லை வாசம்
உள்ளில் ஊறி என்னை வாட்டுது என்கிற பாட்டு நமக்கும் முல்லை மணமாய்க் கமழ்கிறது.
இளையராஜாவின் இசையில் மலரின் பெயரும் மணம் வீசுகிறது. அந்தப் பாட்டில் எழுத்தாணி, கேந்திப்பூ, ஐயனார் உருவம், ஆலம் விழுது ஆகியன
வருகின்றன. இந்தப் படத்தின் நாயகியர் மருதோன்றி இட்ட பாதத்தைக்
கொண்டிருக்கின்றனர். ஐயன் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அன்றிரவு
இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வேட்கையில் ஆவல்
கூடும்போது இது முன்னிரவு என்றும் பிள்ளை விழித்து விடுவான் என்றும் சொல்கின்றனர்.
இப்படியே பேசிக்கொண்டு போகும்போது பின்னிரவு ஆகிவிட்டது என்கின்றனர். விளக்குக்
குழியில் விளக்கொளி ஒளிர்கிறது.
இதனிடையே காட்டில் இரவில் சந்திக்கும் பரிதியும் பவளக்கொடியும்
பேசிக்கொள்கின்றனர். பவளக்கொடி பூப்பதில்லை காய்ப்பதில்லை கனி வந்த மாயமென்ன? என்கிறான் பரிதி.
மண்ணில் விளையாடிவிட்டு வரும் மழலை கையால் அளைந்த கூழ் அமிழ்தினும்
இனிது என்கிறார் ஐயன். மக்கள் மெய் தீண்டல் இன்பம் என்கிறார். பிள்ளை பசியால்
விழித்துவிடும் என்கிறார் வாசுகி. அது எப்படித் தெரியும் எனும்போது பாலூறும்
மார்பகங்கள் அதை உணர்த்துவதாகக் கூறுகிறார்.
பரிதியும் பவளக்கொடியும் இரவில் களவுக் காதலில் பேசிக்கொள்ளும்போது
உன் நாயகனுக்குப் பற்களும் நகங்களும் இல்லை எனத் தன் தோழியர் தன்னைப் பார்த்துக்
கேட்பதாகக் கூறுகிறார். பார்வையை விடப் பற்களும் நகங்களும் கூர்மைதான் என்கிறான்
பரிதி. நான் போர்க்களத்தில் மாண்டால் நீ என்ன செய்வாய் என்கிறான் பரிதி. அதற்கு முன்
நானிறந்து உன்னை மேலுலகில் வரவேற்பேன் என்கிறாள் அவள். இது காதலன் மீது அவள்
எத்தகைய அன்பு வைத்திருக்கிறாள் என்பதைக் காட்டுகிறது.
பாகனுக்கு யானையால் சாவு, மன்னனுக்கு மெய்காப்பாளனால் சாவு என்பது இங்கே கூறப்படுகிறது.
இதனிடையே ஐயன் முப்பாலை எழுதி வருகிறார். தெய்வம் தொழாஅள் கொழுநன்
தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்னும் குறட்பாவுக்குப் பொருளை
விளக்குகின்றனர்.
கொல்லுப்பட்டறையில் உலைக்களங்கள் எப்போதும் கனன்றுகொண்டே
இருக்கின்றன. வாள், வில், வேல் ஆகியன
வடிக்கப்படுகின்றன. அவற்றின் தரம் பார்க்கிறான் பரிதி. அம்பு நேராக இருக்க
வேண்டும், நூலளவு
வளைந்தாலும் இலக்கைத் தைக்காமல் விலகிவிடும் என்கின்றனர். காட்டெருமைத்தோலை
அவுரிச்சாற்றில் முக்கி வைத்துக் கவசமும் கேடயமும் செய்கின்றனர்.
இதனிடையே குமணநாட்டுக்கு உதவியாக வடுகநாட்டின் ஆறலைக்கள்வர்களும்
போருக்கு வருவதாகவும், அவர்கள்
போருக்கு முன் கள்ளைக் குடித்து விட்டு வருவோர் என்றும் கூறப்படுகிறது.
போருக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. வீரர்களுக்குக்
கருப்பட்டியும் புளியும் கரைத்த பானகம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். போரில்
வீரச்சாவு அடையும் மறவர்களுக்கு நடுகல் எழுப்பக் கல்தச்சர்கள், உடலில் புண்படுவோருக்கு
மருத்துவம் அளிக்க மருத்துவர்கள் எல்லோரும் அணியமாயிருக்க அறிவுறுத்துகின்றனர்.
தன்னுடைய முப்பாலை மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்ற
மறுத்துவிட்டதாகவும் இதனால் மக்கள் மன்றத்தில் அரங்கேற்றலாம் என்று
எண்ணியுள்ளதாகவும் நடுநாட்டு மன்னனிடம் ஐயன் தெரிவிக்கிறார்.
போருக்கான அறிவிப்பில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர் ஆகியோரைப்
பாதுகாப்பான வேறிடங்களுக்குச் செல்ல அறிவுறுத்துகின்றனர். ஆடை அவிழ்ந்தவன்
புறமுதுகிட்டவன் ஆகியோரைத் தாக்காதீர் என்கின்றனர். சங்கும் போர்ப்பறையும்
முழங்குகின்றன. பெண்கள் வெற்றிக்காகப் பொங்கலிட்டுக் குலவையிடுகின்றனர்.
போர் மூள்கிறது. கடும்போர் நடக்கிறது. இந்தப் போரில் யார்
வெற்றிபெற்றார்? எத்தகைய
முடிவு ஏற்பட்டது? பரிதியும்
பவளக்கொடியும் என்ன ஆனார்கள்? ஐயனின்
முப்பால் எனப்படும் திருக்குறள் மக்கள் மன்றத்தில் அரங்கேற்றப்பட்டதா? மதுரைத் தமிழ்ச்சங்கத்தில்
அரங்கேற்றப்பட்டதா? இவற்றுக்கெல்லாம்
இந்தப் படத்தின் முடிவில் விடைகள் உள்ளன.
ஆங்கிலமும் சமஸ்கிருதமும் அரைகுறைத் தமிழும் எனக் காதில் கேட்க
முடியாத கொச்சை மொழிகள் உள்ள படங்களுக்கிடையே செவிகுளிரும் வகையில் தமிழ்மொழியை
அள்ளித் தெளித்து உரையாடலை வடித்துள்ளார் செம்பூர் ஜெயராஜ். இதனால் இந்தத் தமிழைக்
கேட்பதற்கென்றே படத்தை ஒருமுறைக்குப் பலமுறை பார்க்க வேண்டும். தமிழ்த்
திரையுலகுக்கு இளையராஜாவாக வந்தவர் திருக்குறள் படத்துக்கு இசையமைத்து
இசைமன்னராகியுள்ளார். முல்லைவாசம் உள்ளில் வீசும் என்ற பாட்டு அதை
மெய்ப்பிக்கிறது.
தமிழ்நாட்டில் அரசியலில் மதத்தின் தலையீடு இல்லை என்பது, நாட்டில் வரிக்கொடுமை
தலைவிரித்தாடுகிறது என்பது, கள்ளைத்
தடை செய்ய வேண்டும் என்பது, பெண்ணைப்
பாலியல் வன்கொடுமை செய்பவனைக் கழுவிலேற்ற வேண்டும் என்பது இவையெல்லாம் இக்காலச்
சூழலுக்கும் பொருந்துவனவாக உள்ளன.
அதேநேரத்தில் திருவள்ளுவரை நீறில்லா நெற்றியையுடையவராகக்
காட்டியுள்ளனர். அப்படியே நீறில்லாவிட்டாலும் அவர் நெற்றியில் சந்தனம் குங்குமப்
பொட்டுக்கூட இல்லாமலிருக்க முடியுமா? என்னும் வினா எழுகிறது. நீறில்லா நெற்றி பாழ் என்கிறார் ஔவையார்.
அத்தகைய நாட்டில் வள்ளுவர் திருநீறு பூசியிருக்க மாட்டாரா என்ன? இன்று நிலவும் ஆரிய, திராவிட, தமிழ்த் தேசிய முரண்களில்
வந்துள்ள கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த வள்ளுவன் (ஐயன்) மீது ஏற்றி
அவரை நீறில்லா நெற்றியுடையாராகக் காட்டியிருப்பது ஒரு பெருங்குறையே.
தமிழ் நிலம், தமிழ்ப் பண்பாடு, இயற்கை சார்ந்த பொருட்கள், தூய தமிழ்ப் பேச்சு, பண்பாடு மாறாத கதையமைப்பு, படம் முழுவதும் திருக்குறளை விளக்கும் வகையில் உள்ளது, காமராஜ் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணனின் இயக்கம், செம்பூர் ஜெயராஜின் உரையாடல், இசைமன்னன் இளையராஜாவின் இசை, இவை எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கும். உலகெங்குமுள்ள தமிழர்களிடம் இதை இணைய வழியாகக் கொண்டு சேர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம்.
- சே.பச்சைமால்கண்ணன்