வியாழன், 16 பிப்ரவரி, 2023

எழுதுகோல் உருவம் எழுப்பத்தான் வேண்டுமா?

கல்வி, மருத்துவம், ஊரக உட்கட்டமைப்பு வசதிகள் எனப் பல வகைகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதேபோலச் சாராயக் கடைகள் திறந்து அரசே மது விற்பது, சாலை விபத்துக்கள், ஒடுக்கப்பட்டோர் பெண்கள் மீதான குற்றச்செயல்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், சாலையோர ஆக்கிரமிப்புகள், இலஞ்சம் ஊழல், எளியோரை வலியோர் வாட்டி வதைத்தல், தேர்தலில் பணநாயகம் தலைவிரித்தாடுவது ஆகியவற்றிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதை அறிந்து சிறுமைப்பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டியதில் தமிழ்நாட்டைப் போல் வேறெந்த மாநிலங்களும் இருக்குமா? என ஒரு வினாவை எழுப்பி ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிய அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பேருந்து நிலையங்கள் எனப் பெரும்பாலான கட்டடங்கள் குளங்களையும் ஏரிகளையும் தூர்த்தே கட்டப்பட்டுள்ளன. சென்னைச் சைதாப்பேட்டையில் அடையாற்றிலும், அமைந்தகரையில் கூவம் ஆற்றிலும் நீரோட்டம் உள்ள பகுதிவரை சுவர் எழுப்பி ஆக்கிரமித்துத் தனியார் மிகப்பெரிய கட்டடங்கள் கட்டியுள்ளதை இன்றும் கண்கூடாகக் காணலாம். ஆற்றை ஆக்கிரமித்திருந்த ஏழை எளியோர் வெளியேற்றப்பட்ட அதேநேரத்தில் பணவலிமை மிக்க நிறுவனங்கள் அமைப்புகளின் கட்டடங்கள் இன்றும் ஆற்றை ஆக்கிரமித்து நிற்பதைக் காணலாம். ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இதை இங்கே சுட்டிக் காட்டினோம். தமிழ்நாடு முழுவதும் களமிறங்கிப் பார்த்தால் எண்ணிலடங்கா ஆக்கிரமிப்புகளைக் கண்டறியலாம்.

கடலின் உயர்ஓதம் எட்டும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவுவரை எந்த வகையிலான புதிய கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது என்பது கடற்கரை மேலாண்மை மண்டல விதிகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருச்செந்தூர், இராமேசுவரம் உட்படப் பல்வேறு கோவில்கள் கடற்கரைகளில் உள்ளன. கடற்கரை நெடுகிலும் தேவாலயங்களும் இந்த 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ளன. இவையெல்லாம் கடற்கரை மேலாண்மை மண்டல விதிகள் உருவாக்குமுன் கட்டப்பெற்றவை என்பதால் அவை விதிமீறலில் வாரா. விதிகள் நடைமுறைக்கு வந்தபின்னரும் விதிவிலக்குப் பெற்றுச் சில கட்டுமானங்கள் கட்டப்பெற்றுள்ளன. சென்னையில் அண்ணா எம்ஜிஆர் நினைவிடங்கள் கடற்கரை மேலாண்மை விதிகள் நடைமுறைக்கு வருமுன்னரும், செயலலிதா கருணாநிதி நினைவிடங்கள் பின்னரும் அமைக்கப்பட்டுள்ளன.

போரில் நாட்டைக் காத்த வீரர்களுக்கு நடுகல் எழுப்புவதும் வழிபடுவதும் தமிழர் வழக்கமாகும். பின்னாளில் பெருஞ்செல்வர்களும் மறைந்த முன்னோருக்குப் பெருஞ்செலவில் நினைவிடம் கட்டி வருகின்றனர். இது தவிர்க்கப்பட ஒன்றுதான் என்றாலும், அவர்கள் சொந்தப் பணத்தில் சொந்த நிலத்தில் கட்டுகின்றனர். நாட்டின் விடுதலைக்குப் பின்னர் 1969ஆம் ஆண்டில் மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரைக்குக் கடற்கரையில் அரசு செலவில் அரசு நிலத்தில் அந்நாளைய முதலமைச்சர் கருணாநிதியால் நினைவிடம் எழுப்பப்பட்டது. அந்த வழக்கம் இப்போது வரை தொற்றுநோய்போல் தொற்றி வருகிறது. இவை போகக் கடலின் நடுவே ஓர் எழுதுகோல் உருவம் எழுப்பத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. சென்னைக் கடற்கரையில் ஏற்கெனவே உள்ள நினைவிடங்களும், இப்போது கட்டத் திட்டமிட்டுள்ள எழுதுகோல் உருவமும் கடற்கரை மேலாண்மை விதிகளை மீறியவை என அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியும். தனியாரோ நிறுவனங்களோ விதிகளை மீறினால் தடுக்க வேண்டியது அரசின் கடமை. அப்படியிருக்க மாநில அரசே விதிகளை மீறினால் அதை யார் தடுப்பது? என்கிற வினா எழுந்துள்ளது. ஏழை எளியோருக்கு எதிரான வழக்குகளில் நீதிநெறி வழுவா நீதிமன்றங்கள், அரசுக்கு எதிரான வழக்குகளில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு ஒதுங்கிவிடும் போக்கு உள்ளது. அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் அரசுடன் ஒத்துப் போவதையே கொள்கையாகக் கொண்டுள்ளன. கூடன்குளம் அணுவுலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, காவிரிப்படுகையில் எண்ணெய் எடுக்கும் திட்டம், சென்னை – சேலம் எண்வழிச்சாலைத் திட்டம் ஆகியவற்றில் போர்க்குரல் எழுப்பியவர்களில் பெரும்பாலோர் ஓய்ந்துவிட்டாற்போல் தெரிகிறது.

இந்நிலையில் கடற்கரையிலும் கடலிலும் நினைவிடம் எழுப்புவது விதிமீறல் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் சொந்த நிலமும் சொந்த வீடும் இல்லாமல் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பிரதமர் வீட்டுவசதித் திட்டம், முதலமைச்சர் வீட்டு வசதித் திட்டம் என்கிற பெயர்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருவதே வீடில்லாதோரின் இருப்பை உறுதிப்படுத்தும். இவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்குச் சில இலட்ச ரூபாய்களும், தலைவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்குப் பல கோடி ரூபாய்களும் செலவழிப்போம் என்பது எந்த நீதியின்பாற்பட்டது? உழைப்பின் பெரும்பகுதியை வீட்டு வாடகையாகச் செலுத்துவோர், 100 அலகு இலவச மின்சாரத்துக்கும் அலகுக்கு 6 ரூபாய் என்கிற கணக்கில் உரிமையாளருக்குக் கட்டணம் செலுத்துவோர் கோடிக்கணக்கானோர் உள்ளனர். அகவை முதிர்ந்தோர் முதல் பச்சைக் குழந்தைகள் வரை குடும்பம் குடும்பமாகப் பேருந்து நிலையங்களிலும், நடைபாதைகளிலும், பெரிய குழாய்களிலும், மதில்களின் ஓரத்திலும் வெயிலிலும் மழையிலும் குளிரிலும் படுத்துக்கொண்டு கொசுக்கடிக்கு ஆளாவோர் இலட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் அடிப்படையான வீட்டு வசதி, உட்கட்டமைப்பு வசதி ஆகியவற்றை நிறைவுசெய்துவிட்டு இதுபோன்ற நினைவிடம் கட்டும் திட்டம் வேண்டுமா? என்பது பற்றி அரசு ஆராயலாம். தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். தனியொருவருக்குச் சொந்த வீடில்லாத வரையும் இத்தகைய நினைவிடத் திட்டங்களைத் தள்ளி வைப்பதே மக்களாட்சி அரசின் செயலாக இருக்கும்.

மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி மக்களாட்சி என்றார் அமெரிக்கத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு நினைவிடங்களை எழுப்பும் திமுக, அதிமுக அரசுகளின் செயல் மக்களாட்சி இலக்கணத்துக்கும், பகுத்தறிவுக்கும் உட்பட்டதா? என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். கோடிப் பேர் வறுமையின் கொடிய பிடியில் இருக்கும் நாட்டில் அவர்களின் மேம்பாட்டுக்குச் செலவிட வேண்டிய தொகையைத் தலைவருக்கு நினைவிடம் கட்டுகிறோம் என்னும் பெயரில் ஆடம்பரமாகச் செலவிட்டு வீணாக்கும் அரசு பகுத்தறிவுப் பாதையில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகச் செயல்பட்டு வரும் நல்லரசு என்றும், அத்தகைய ஆட்சி மக்களாட்சி என்றும் கூறினால் இதைவிட நகைப்புக்கிடமான செயல் வேறேது இருக்க முடியும்?

சே.பச்சைமால்கண்ணன்