வியாழன், 28 டிசம்பர், 2023

தென்மாவட்ட வெள்ளப் பேரழிவுக்குக் காரணிகள்

கடந்த ஈராண்டுகளாகத் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இந்நிலையில் மழைக்கால முடிவான திசம்பர் மாதத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான புயலால் சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் அடைமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சென்னையின் ஒருசில பகுதிகள் தவிரப் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஈருருளிகள், மகிழுந்துகள் என இலட்சக்கணக்கான வண்டிகள் தண்ணீருக்குள் மூழ்கின. வெள்ளம் புகுந்த வீடுகளில் அறைகலன்கள், மின்னணுக் கருவிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் தண்ணீரில் மூழ்கின. ஒருசில பகுதிகளில் வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டன. தன்னார்வலர்கள் முன்வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், பாதிக்கப்பட்டோருக்கு உணவு குடிநீர் பால் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கினர். செயலற்றிருந்த மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் அதிக மழை பெய்ததே வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்றும், தாங்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் தான் வெள்ளம் விரைவில் வடிந்ததாகவும் தற்பெருமை கூறிக்கொண்டனர். அவர்களின் அடிவருடிகளான ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன. அதேநேரத்தில் அரசின் செயலற்ற நிலை, பொறுப்பற்ற விளக்கம் ஆகியன குறித்துச் சமூக வலைத்தளத்தில் கடுமையாகக் கருத்துக்களைத் தெரிவித்த மக்கள் தங்கள் சினத்தைத் தணித்துக் கொண்டனர். கொள்ளையடிப்பதில் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சமாவது மக்கள் நலப் பணிகளில் காட்டக் கூடாதா என்றும் வினவினர்.

சென்னையில் பெய்து பேரழிவை ஏற்படுத்திய இந்தப் பெருமழை ஈராண்டுகளாக வறண்டுகிடக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வளங்கொழிக்கச் செய்யக் கூடாதா என்று அங்கு வாழும் மக்களும், சென்னையில் வாழும் அம்மாவட்ட மக்களும் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் சமூக வலைத்தளங்களில் கருத்துக் கூறினர். இந்த வேண்டுதல் இயற்கைக்குத் தெரிந்து, மக்களின் கவலையைத் தீர்க்கும் வகையில், திசம்பர் மூன்றாம் வாரத்தில் ஒரே நாளில் பெருமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினத்தில் அதிக அளவாக 95 செண்டிமீட்டர் மழை பெய்திருந்தது. அதையடுத்துத் திருச்செந்தூர், கோவில்பட்டி, திருவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டத்தின் மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் 60 செண்டிமீட்டருக்கு மேல் மழை பதிவானது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தாமிரபரணி, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய இடங்களில் 50 செண்டிமீட்டர் அளவில் மழை பெய்திருந்தது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கெனவே உள்மாவட்டப் பகுதிகளிலும் வரலாறு காணாப் பெருமழை பெய்திருந்ததால் ஒரே நாளில் குளங்கள் பெருகி மறுகால் பாய்ந்து அந்த நீரும் கால்வாய், ஓடை, ஆறு ஆகியவற்றில் சேர்ந்தது.



எப்போதும் வறட்சிக்கு இலக்கான இராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி, சாத்தான்குளம் வட்டங்களில் இந்தப் பெருமழை பெருவெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அப்பகுதிகளில் ஈராண்டுகளாக நிலவிய வறட்சியை ஒரேநாளில் போக்கி வளங்கொழிக்கச் செய்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள், உயர்மட்டப் பகுதிகளிலும் பாதிப்பு இல்லை. தாமிரபரணி, மணிமுத்தாறு, பச்சையாறு, கடனா ஆறு, இராம ஆறு, கருப்ப ஆறு ஆகியவை திருநெல்வேலிக்கு மேற்கே ஒன்று சேர்ந்து திரண்டு வருகின்றன. சமவெளியாயும், முறையற்ற நகர்ப்பெருக்கத்துக்குச் சென்னையைவிடச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழும் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி வெள்ளத்தால் பேரழிவுக்குள்ளானது. ஆற்றிலும் ஊரிலும் ஒரே மட்டத்தில் வெள்ளம் பாய்ந்தது. தொடர்வண்டி நிலையத்திலே நடைமேடை உயரத்துக்கு வெள்ளம் இருந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சந்திப்பு பேருந்து நிலையம் வெள்ளத்துக்கான நிலையம் போல் இருந்தது. அப்பகுதியில் உள்ள கட்டடங்களில் தரைத்தளத்தில் உள்ள கடைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. கொக்கிரகுளம், வண்ணார்ப்பேட்டை, வீரராகவபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கழுகுப் பார்வைக் காட்சிகளில் ஆற்றுக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டதும், அதனால் செறுக்கப்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததும் தெரியவருகிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகியவற்றைத் தாண்டிச் சீவலப்பேரியில் தாமிரபரணியுடன் சிற்றாறும் சேர்கிறது. அதன்பின் ஆற்றில் வெள்ளத்தின் அளவு இன்னும் அதிகமாகிறது. இப்படிச் சென்ற வெள்ளம் மருதூர்க் கால்வாய்கள், திருவைகுண்டம் கால்வாய்கள் ஆகியவற்றின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணிச் சமவெளியைப் பேரழிவுக்குள்ளாக்கியுள்ளது. பெருமழை, ஆற்றுவெள்ளம் ஆகியன மட்டுமல்லாமல் பல குளங்கள் உடைந்து கடல்மடை திறந்ததுபோல் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால்தான் ஒவ்வொரு ஊரிலும் வீடுகள், தொழுவங்கள் இடிந்துள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் மழை வெள்ளப் பேரழிவால் முப்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழைநின்று மூன்று நாட்களுக்குப் பிறகும் மீட்புப் படையினரால் பல ஊர்களை அணுக முடியவில்லை. குளங்கள் உடைந்த ஊர்களில் சாலைகள் அரிக்கப்பட்டுத் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறு, கால்வாய்களில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு கரைகளை உடைத்து ஊருக்குள் பாய்ந்தது. ஏரலில் தாமிரபரணி ஆற்றில் உயரமான பாலத்தின் வடக்குக் கரையில் அணுகுசாலையும் உயர்மட்டச் சாலையும் அரிக்கப்பட்டு ஆறுபோல் வெள்ளம் பாய்ந்தது. இதனால் ஏரலுக்கும் திருச்செந்தூர் - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலைக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல் ஏரல் - முக்காணி, ஏரல் - திருவைகுண்டம் சாலைகளும் துண்டிக்கப்பட்டன. வாழ்நாளில் இப்படிப் பெருமழையையும் பெருவெள்ளத்தையும் பார்த்ததில்லை என்றே அனைவரும் சொல்கின்றனர். அதேநேரத்தில் அரசும் அதன் அடிவருடியான ஊடகங்களும் வரலாற்றில் இல்லா வகையில் பெருமழை பெய்ததால் பேரழிவு ஏற்பட்டுவிட்டது என்று தங்களுக்குள் ஏற்கெனவே பேசிக்கொண்டதைப் பிறழாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கின்றன. பெருமழை பெய்துவிட்டது, வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. எத்தகைய பெருமழையையும் பெருவெள்ளத்தையும் எதிர்கொள்ளும் வகையில் பாசனக் கட்டமைப்புகளையும், நகர்ப்புற உட்கட்டமைப்புகளையும் வடிவமைப்பதும் உருவாக்குவதும் அரசின் கடமை. அவற்றைச் சரியாகப் பேண உதவுவதுடன் அதைச் செய்ய அரசுக்கு வலியுறுத்துவது மக்கள் பொறுப்பு.

கருநாடக அணைகளில் இருந்து பெருமளவு நீர் திறந்து விட்டால்தான் மேட்டூர் அணை நிரம்பும். அங்கிருந்து தண்ணீர் திறந்துவிட்டால்தான் காவிரியும் சோழமண்டலமும் உயிர்பெறும். பெரியாற்று அணையில் இருந்து நீர் திறந்து வைகை அணைக்கு வந்து அங்கிருந்து வைகையாற்றிலும் கால்வாய்களிலும் தண்ணீர் திறந்தால்தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுர மாவட்டங்கள் உயிர்பெறும். ஆனால் தென்பாண்டி நாட்டில் மேற்குத் தொடர்ச்சிமலையில் பசுமைமாறாப் பகுதியில் உருவாகும் பொருநையெனும் தாமிரபரணி ஆறு 150 கிலோமீட்டருக்கும் குறைவான நீளத்தையே கொண்டிருந்தாலும் ஆண்டுமுழுவதும் நீர் பாய்வதால் தனது இருகரைப் பகுதிகளையும் செழிப்பாக்கி வருகிறது. இதனால்தான் பொருநையென்னும் தாமிரபரணி தமிழ்நாட்டில் உயிருள்ள ஒரே ஆறு எனக் கூறப்படுகிறது. அத்தகைய ஆற்றில் ஆண்டில் தென்மேற்கு, வடகிழக்கு என இருபருவக் காற்றுக் காலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் பிசானம், முன்கார், பின்கார் என மூன்றுபூ நெல் விளைந்தது. 1940களில் ஆங்கிலேயர் ஆட்சியில் பாபநாசம் அணையும், விடுதலைக்குப் பின் காமராசர் ஆட்சியில் மணிமுத்தாறு அணையும் கட்டப்பட்டன. இதனால் உடனடி வெள்ளப்பெருக்கு தடுக்கப்பட்டது. அதேநேரத்தில் தொடர்ந்து அடைமழை பெய்யும்போது அணைகள் நிரம்பி உடையும் நிலை ஏற்படுவதைத் தடுக்கத் திடீரெனப் பெருமளவு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. 1992ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பெருமழை பெருவெள்ளம் இத்தகையதே. அப்படியிருக்கையில் இப்போது பெய்தது வரலாறுகாணாத மழை என்றும், ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்ந்தது பெருவெள்ளம் என்று கூறுவது 1992 வெள்ளத்தைப் பற்றித் தெரியாதவர்களின் உழற்றல்தான்.

தாமிரபரணியில் சேர்வலாறு, பாபநாசம் அணைகள், மணிமுத்தாறு, கடனாறு, இராம ஆறு, கருப்ப ஆறு, பச்சையாறு ஆகியவற்றில் ஒவ்வொரு அணை எனப் பல அணைகள் கட்டப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் உடனடியாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்பட்டது. அதேநேரத்தில் இத்தனை அணைகள் இருந்தாலும் என்றாவது ஒருநாள் அளவுகடந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதை இப்போது பெய்த பெருமழை மெய்ப்பித்துள்ளது. மணிமுத்தாறு அணையில் 80 அடிக்கு மேல் உள்ள நீர்தான் நான்குனேரி, திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்குச் சென்று பயனளிக்கும். இதற்கான கால்வாய் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கிப் புத்தன்தருவை முடியக் கடல் வரைக்கும் உள்ளது. இந்த ஒரு கால்வாயைத் தவிரத் தாமிரபரணி வடிநிலத்தில் உள்ள மற்ற துணையாறுகள், கால்வாய்கள் அனைத்தின் நீரும் பாசனத்துக்குப் பின் மீண்டும் தாமிரபரணியுடன் சேரும். இந்நிலையில் தான் அண்மையில் பெய்த ஒருநாள் அடைமழையில் தாமிரபரணியில் கட்டுக்கடங்கா வெள்ளம் பாய்ந்து திருவைகுண்டம் ஏரல் வட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழிவைக் கொஞ்சம் குறைக்கும் வகையில் கன்னடியன் கால்வாயில் ஒரு தடுப்பணை கட்டி அதிலிருந்து மற்றொரு கால்வாயை வெட்டிப் பச்சையாற்றையும் மணிமுத்தாற்றுக் கால்வாயையும் தாண்டிக் கருமேனியாற்றையும் இணைத்துக் கோவன்குளத்தில் நம்பியாற்றில் முடியும் வகையில் ஆறுகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கொஞ்சம் தண்ணீரைத் திருப்பி விட்டால் அந்த அளவுக்குத் தாமிரபரணிக் கரையில் அழிவு ஏற்படுவது குறையும். இந்தக் கால்வாயில் முதன்முறையாக இப்போது தண்ணீர் திறந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெருமழையால் செழிப்பான நான்குனேரி, சாத்தான்குளம், திசையன்விளை வட்டங்களில் ஆறுகள் இணைப்புக் கால்வாயில் சென்ற தண்ணீர் அப்பகுதிகளை மேலும் செழிப்பாக்கியுள்ளது.

சேரன்மாதேவியில் தாமிரபரணியில் இருந்து முப்பதாண்டுகளுக்கு முன்பே கட்டபொம்மன் கடற்படைத் தளத்துக்குக் குழாயில் தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பின் கடந்த முப்பதாண்டுகளாகத் தாமிரபரணியில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் எண்ணற்ற கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கங்கைகொண்டான், தூத்துக்குடி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் தாமிரபரணித் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் வறட்சிக்காலங்களில் ஆற்றின் நீரோட்டம் பெரிதும் குறைந்து வேளாண்மைக்குப் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. எப்போதும் குளிர்ந்த நீரைக்கொண்ட ஏரல் தண்பொருநையில் 2023 மே மாதத்தில் ஒரு நாள் குளித்தபோது நீர்ப்பரப்பில் மேலே ஒருசாண் அளவுக்கு வெந்நீராகக் கொதித்தது. இதனால் தமிழ்நாட்டின் உயிருள்ள ஒரே ஆறு நம் காலத்திலேயே செத்துப்போகுமோ என்ற ஐயம் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் அரசாலும் மக்களாலும் குற்றுயிராக்கப்பட்ட ஆறு மீண்டும் தனது முழு உருவத்தையும், நீரோட்ட வேகத்தையும் காட்டும் வகையில் ஒரு பெருவெள்ளமாகப் பாய்ந்து தனது இருப்பைக் காட்டித் தனக்குப் புத்துயிர் வந்துள்ளதை மெய்ப்பித்துள்ளது.

ஆற்றின் இருகரைகளிலும் நீர்பாயும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளைத் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஐம்பதாண்டுகளுக்கு மேல் ஆண்ட திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அரசுகளும் செய்துகொடுத்துள்ளன. பேரளவுக்கு ஏற்பட்ட வெள்ளத்தைத் தடுத்து ஊருக்குள் திசைதிருப்பும் அணைகள் போன்று விதிமீறி ஆற்றுநீரோட்டப் பகுதியிலும் ஆற்றுப் புறம்போக்கிலும் கட்டப்பட்ட வீடுகள் செயல்பட்டுள்ளன. இந்த உண்மையைத் திருநெல்வேலி வெள்ளத்தின் கழுகுப் பார்வைக் காட்சியில் காணலாம்.

1990ஆம் ஆண்டுக்குப் பின் கட்டுமானத்துறை வளர்ச்சியாலும், அந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாட்டின் எல்லா ஆறுகளிலும் கட்டுப்பாடற்ற மணற்கொள்ளையை அரசே செய்து வருகிறது. இதில் ஒருநாளில் ஆயிரம் லாரிகள் கணக்குக் காட்டி அரசுக்கு உரிமைத்தொகை கொடுத்தால், நாலாயிரம் லாரிகள் கணக்கின்றிக் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இதன்மூலம் 4700 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும் நடுவணரசின் அமலாக்கத் துறையே தெரிவித்துள்ளது. இந்த திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு என்றால் கடந்த முப்பதாண்டுகளாக எவ்வளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்பதை எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கும். அப்படி ஒட்டுமொத்தமாக மணல்வளம் சுரண்டப்பட்ட ஆறுகளில் தாமிரபரணி, நம்பியாறு ஆகியவை முதலிடத்தில் உள்ளன. இவ்விரு ஆறுகளிலும் மணல் துடைத்து அள்ளப்பட்டுவிட்டன. இதனால் ஆற்றுநீரைத் தூய்மைப்படுத்தல், நீரோட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், ஆற்று நீரின் மாசுபாடும் அதிகரித்துள்ளது. வரைமுறையின்றி மணல் அள்ளிய பள்ளங்களில் நீரின் அளவுதெரியாமல் குளித்தபோது எண்ணற்றோர் மூழ்கி உயிரிழந்த செய்திகளும் உள்ளன.

ஆற்றுமணல் துடைத்தள்ளப்பட்டதால் வெள்ளக்காலங்களில் நீரோட்டத்தின் பாய்ச்சல் அதிகமாக இருக்கும். ஆற்றுநீர் நிலத்துக்குள் ஊடுருவி நிலத்தடிநீரைச் செறிவூட்டும் செயல்பாடு குறைவாக இருக்கும். அப்படி இருக்கும்போது மணல் அள்ளிய பரப்பின் வெற்றிடம் ஆற்றின் நீர்கொள்ளும் அளவையும், நீர்கொண்டுசெல்லும் திறனையும் அதிகரித்திருக்கும் என்றுதான் பலரும் நினைப்பர். ஆற்றுக்குள் மண்ணள்ளிய திருடர்கள் ஆற்றங்கரைகளில் உள்ள குறுமணலையும் விட்டுவைக்கவில்லை. இந்தக் குறுமணல் வெட்டி அள்ளப்பட்டதால் ஆற்றின் இருகரைகளும் தேய்ந்து போயின. இதனால் வெள்ளக் காலத்தில் ஆற்றின் இருகரைகளிலும் உள்ள வயல்வெளிகளின் வண்டல் மண் அரிக்கப்பட்டு ஆற்றில் படிவதும், ஏற்கெனவே மணல் லாரிகள் இரவும் பகலுமாகத் தொடர்ந்து ஊர்ந்ததால் தேய்ந்த கரைகள் மேலும் அரிக்கப்பட்டு ஆற்றுக்குள் மண் படிவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஆற்றில் மணல் இருக்கும்வரை அங்கு முட்புதர்களோ, புற்களோ முளைக்காது. முளைத்தாலும் கோடைக்காலத்தில் வெப்பத்தால் காய்ந்து பட்டுப் போய்விடும். மணல் அள்ளிய இடங்களில் படிந்துள்ள வண்டல் மண் முட்புதர்கள், சம்பு, நாணல் ஆகியன வளர்வதற்கு ஏதுவானது. கடும் வெயில் காயும் கோடைக்காலங்களில் கூட வண்டலில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு முட்புதர்கள், சம்பு, நாணல் ஆகியவை செழித்து வளரும். ஒரு கோடைக்காலத்தில் தாமிரபரணி ஆற்றை நாம் பார்த்தால் நீர் வடியும் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் மணல் இல்லாமல் வண்டல் படிந்து முட்புதரும், சம்பும், நாணலும் அடர்ந்து செழித்து வளர்ந்துள்ளதை நாம் காணலாம்.

இத்தகைய சூழலில் இப்போது ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் தேய்ந்து கரைந்துள்ள கரைகளின் வழியாக ஆற்றின் இருபுறங்களுக்கும் பாய்ந்தோடியது என்பதே உண்மை. ஆக ஆற்றின் நீரோட்டப் பகுதியில் வீடுகள் கட்டடங்கள் கட்டியது, ஆற்று மணலை முற்றிலும் துடைத்தள்ளியது, மணல் அள்ளுவதற்காக வண்டிகள் சென்றதில் கரைகள் தேய்ந்தது ஆகியனவே வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட வழிவகுத்தன என்பதை நாம் உணரலாம்.

ஆற்றில் எப்படி மணற்கொள்ளை நடந்ததோ அதேபோல அதன் கால்வாய்களிலும் மணலும் மண்ணும் கொள்ளையடிக்கப்பட்டன. ஆற்றின் நீரோட்டப்பகுதியில் எவ்வாறு வீடுகள் கட்டடங்கள் கட்டப்பட்டதோ அதேபோல் கால்வாயையும் சுருக்கி வீடுகள் கட்டடங்கள் கட்டப்பட்டன. அதன் விளைவு கால்வாய்க் கரைகள் தேய்ந்தும் அரித்தும் போய் வலுக்குன்றி வெள்ளத்தின்போது உடையும் நிலைக்கு உள்ளாயின.

இந்தக் கால்வாய்களால் பாசனம்பெறும் குளங்களிலும் வரைமுறையின்றி மண்வளம் கொள்ளையடிக்கப்பட்டது. மட்பாண்டம் செய்யவும், வேளாண் நிலத்துக்கும் கரம்பை மண் எடுப்பதாகக் கூறி ஏமாற்றி ஒவ்வொரு குளத்திலும் பல்லாயிரம் லாரிகளில் மண்ணள்ளப்பட்டது. இதனால் குளங்கள் மிகவும் ஆழமாகி மடைக்குத் தண்ணீர் செல்லாமல் உள்ளேயே தங்கிவிடும் போக்கைப் பல இடங்களில் காணலாம். குளத்தங்கரைகளில் கண்டவிடங்களில் பாதைபோட்டு மண் எடுத்தவர்கள் சில இடங்களில் கரைகளை வலுப்படுத்தாமலே விட்டுச் செல்கின்றனர். அதன்பின் மழைக்காலத்தில் குளம் பெருகும்போது அவ்விடங்களிலே உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிக்குள்ளும் ஊருக்குள்ளும் வெள்ளம் பாய்கிறது. 2023 மேமாதத்தில் களக்காட்டில் ஒரு குளத்தின் அருகில் உள்ள சாலையில் நான் சென்று வந்த ஒரு மணி நேரத்துக்குள் 200, 300 டிராக்டர்கள் அங்கிருந்து மண்ணள்ளிச் சென்றிருக்கும். அந்த டிராக்டர் சென்ற தார்ச்சாலையில் முட்டளவுக்குக் கால் புதையுமளவு புழுதிமண் நிறைந்திருந்தது. அப்படியென்றால் பல மாதங்களாக இரவுபகலாக எத்தனை ஆயிரம் டிராக்டர்களில் மண்ணள்ளியிருப்பார்கள். இது பற்றித் தெரிந்தவர்களிடம் உசாவியபோது, மட்பாண்டத் தொழிலாளர்கள் பெயரில் உரிமம்பெற்று அப்பகுதியில் உள்ள செங்கற்சூளைகளுக்கு மண்ணள்ளப்பட்டதாகவும், ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி ஒன்றியத் தலைவரும் சேர்ந்து இதைச் செய்ததாகவும் தெரியவந்தது.

மேற்கூறிய மண்கொள்ளை களக்காடு வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தும். தாமிரபரணி பாசனப் பகுதிகளில் உள்ள குளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்கு மற்ற வறண்ட பகுதிகளைவிடப் பெருமளவில் மண்கொள்ளை இருந்துள்ளது. இந்நிலையில்தான் கரைகள் தேய்ந்தும், மதகுகள் மடைகள் பேணுதலின்றியும் இருந்த பல குளங்கள் பெருமழை வெள்ளத்தின்போது ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்காக உடைந்து ஊருக்குள்ளும் வயல்வெளிகளுக்குள்ளும் கடல்மடை திறந்ததுபோல் வெள்ளம் பாய்ந்துள்ளது. இதில் ஊரே மூழ்கிப் போனபோது பழைய வீடுகள் தொழுவங்கள் இடிந்துள்ளன. அதில் சிக்கிய மக்களும் கால்நடைகளும் உயிரிழந்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் மழை வெள்ளப் பேரழிவால் முப்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மரக்காணம் வட்டாரத்தில் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரக்கப்பட்ட முதலமைச்சர் ஆளுக்குப் பத்து இலட்சம் ரூபாய் வழங்கினார் என்பது இங்குக் குறிப்பிட வேண்டிய செய்தியாகும். வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்கள் மீது அதே அளவு இரக்கம் அரசுக்கு வராது என்பது அனைவரும் அறிந்ததே. சட்டவிரோதமாக விற்கப்பட்ட சாராயத்தைக் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்குப் பத்து இலட்ச ரூபாய். அரசின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 5 இலட்ச ரூபாய். இந்த அறிவிலாச் செயலைச் சுட்டிக்காட்டி அரசை இடித்துரைக்க வேண்டிய ஊடகங்களும் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு வாயை அடைத்துக்கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் உள்ளன.  

தொடர்ந்த மணற்கொள்ளை, மண்கொள்ளை, மணல் அள்ளுவதற்கென்றே செயல்பட்டு மதகுகள், மடைகள், மறுகால்கள், மணல்வாரிகள் ஆகியவற்றைப் பேணாத பொதுப்பணித்துறை, (நீர்)மணல்வளத்துறை ஆகியவற்றின் பொறுப்பற்ற போக்கு இத்தகைய சூழலின் பின்னணியில்தான் இந்தப் பெருவெள்ளப் பேரழிவு நிகழ்ந்துள்ளது. குளங்கள் உடைந்த இடத்தின் அருகில் உள்ள சாலைகள் ஆள் உயரத்துக்குப் பள்ளமாக அரிக்கப்பட்டுள்ளன. மழைநின்று மூன்று நாட்களாகியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்புக் குழுவினரும், மறுவாழ்வுக்கான பொருட்கள் கொண்டுசென்ற ஊர்திகளும் அடைய முடியாமல் போனதற்குச் சாலைகள் பள்ளமாக அரித்துச் செல்லப்பட்டதே முழுக் காரணமாகும். ஏற்கெனவே ஊர்ப்புறங்களில் திராவிட மாடல் சாலைகள் எந்தத் தரத்தில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய சாலைகள் இத்தகைய வெள்ளத்தின் அரிப்பைத் தாங்காது. இருந்தாலும் தாமிரபரணி, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆகியவற்றில் மணல் அள்ளி விற்க ஆற்றின் நடுவே கற்கள், சரள் போட்டுச் சாலை அமைத்துக் கொள்ளையடித்த வேகத்தில் ஆர்வத்தில் செயல்பாட்டில் நூற்றில் ஒரு பங்கையாவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட சில மீட்டர் நீளச் சாலைகளில் கல்லும் மண்ணும் சரளும் தட்டி அவற்றைச் சீரமைப்பதில் இந்த அரசு காட்டவில்லை. இதனால் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை விரைந்து செய்ய முடியாமல் மக்களின் துன்பம் மேலும் அதிகமானது என்றால் அது மிகையாகாது.

மணலைக் கொள்ளையடிப்பதற்கு விரைவாகச் சாலை அமைக்கும் அரசு வீடு ஆடு மாடு ஆகியவற்றை இழந்து வீதியில் நிற்கும் மக்களுக்கு உதவிப்பொருட்களை வண்டியில் கொண்டுசெல்வதற்காகத் துண்டுபட்ட சாலைகளை உடனடியாகச் சீரமைக்க முடியாதா என்ன?

இவர்களின் நோக்கம் மக்கள் நலம் இல்லை. மண்வளம், மலைவளம், கனிமவளம் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது தான் இவர்களின் நோக்கம்.

ஐம்பதாண்டுக்கு மேலாக விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், அதற்காகக் கையூட்டுப் பெற்றுக்கொண்டதும் ஆற்றங்கரை, கால்வாய், ஓடை, குளங்கள், வயல்வெளிகள் ஆகியவற்றைப் பட்டா போட்டு இவர்கள் விற்றதும், நீர்நிலைகளிலும் அவற்றின் ஓரங்களிலும் மக்கள் வீடுகள் கட்டடங்கள் கட்டியதுமே தென்மாவட்ட வெள்ளப் பேரழிவுக்கு முதன்மைக் காரணம்.

போர்க்கால அடிப்படையில் ஆற்று மணலை அள்ளிக் கொள்ளையடித்தவர்கள், மக்களைக் காக்கப் போர்க்கால விரைவில் சாலைகளைச் சீரமைக்கவில்லை, ஊர்ப்புறங்களை உற்றுப் பார்க்கவில்லை என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

பொருநை ( தாமிரபரணி ) ஆற்றின் வெள்ளப்பெருக்கு காட்டுவது என்ன?

ஆற்றுப் புறம்போக்கு நிலங்களைக் கைப்பற்றி மக்கள் வீடுகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளதைக் காட்டுகிறது. இவ்வாறு கட்டப்பட்ட வீடுகள் நீரின் போக்குக்குத் தடையாக மாறி ஆற்றுவெள்ளம் தடம்மாறி ஊருக்குள் புகுவதற்கு ஏதுவாக அணைக்கட்டு போல் செயல்படுகின்றன என்ற உண்மையைக் காட்டுகிறது. இந்த உண்மையை எடுத்துச் சொன்னால் தமிழ்நாட்டு அரசின் வல்லுநர் குழுவுக்கும், மணல்வளத்துறை அமைச்சர் மணல்முருகனுக்கும் அது விளங்காது. நீர்நிலையைக் கைப்பற்றிக் கட்டடங்களைக் கட்டினால் என்றேனும் ஒருநாள் அவர்களை இயற்கை ஒறுக்கும் என்பதை இந்த வெள்ளப் பேரழிவு காட்டுகிறது.

ஒரு நாட்டில் வறட்சி ஏற்படப் பல மாதங்கள் ஆகலாம். வறட்சியைப் போக்கி வளமாக்கவும், வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தவும் இயற்கைக்கு ஒருநாள் போதும் என்பதைப் பெருமழையால் ஏற்பட்ட பெருவெள்ளமும் பேரழிவும் காட்டுகின்றன.

சே.பச்சைமால் கண்ணன்

முள்வேலியாகும் நெல்வேலி

நெல்வயல்கள் வேலிபோன்று அமைந்திருப்பதால் நெல்வேலியென்று சொல்லப்பட்டது திருவென்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுத் திருநெல்வேலியென்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிச் சீமையென்று இலக்கியங்களில் பாடப்பெற்ற ஊர் இது. வெள்ளையர் தமிழகத்துக்கு வணிகம்செய்ய வந்தபோது இந்தச்சீமையின் மணற்பாடு, புன்னைக்காயல், தூத்துக்குடி ஆகிய இடங்களில் வணிகக்கூடங்களையும் குடியிருப்புக்களையும் நிறுவினர். அங்கு வழிபடக் கிறித்தவக் கோவில்களையும் கட்டிவைத்தனர்.


( திருநெல்வேலிப் பெருவெள்ளம் )

மதுரை நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் திருநெல்வேலிச்சீமைப் பாளையக்காரர்கள் ஆற்காட்டு நவாப்பின் மேலாண்மைக்குட்பட்டிருந்தனர். பாளையக்காரர்களிடம் இறையிறுக்கும் உரிமையை நவாப்பு வெள்ளையர்களுக்கு விட்டுவிட்டான். அன்றிலிருந்து வெள்ளையர்கள் திருநெல்வேலிச்சீமையின் அரசுரிமையில் தலையிட்டனர். வெள்ளையர்களுக்குப் பணியவும் இறையிறுக்கவும் மறுத்து நெற்கட்டான்செவ்வல் பாளையக்காரர் புலித்தேவனும் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர்களான கட்டபொம்மனும் ஊமைத்துரையும் கடும்போர் புரிந்தனர். ஆகையால் விடுதலைப்போராட்ட வரலாற்றிலும் மறஞ்செறிந்த மண்ணென்று குறிப்பிடப்படுகிறது இத் திருநெல்வேலிச்சீமை.

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தகர்க்கப்பட்ட பின் வெளியேறிய ஊமைத்துரை சிவகங்கைச்சீமை உடன்பிறப்புக்களான மருதிருவரிடம் அடைக்கலம் புகுந்தார். ஆனைமுகனைப் பற்றிய கலி அரசமரத்தையும் பற்றியதைப்போல ஊமைத்துரையின் பகைவரான வெள்ளையரின் பகைக்கு ஆளாகி நட்புக்காகவும் தன்மானத்துக்காகவும் உயிரையும் நாட்டையும் இழந்தனர் மருதிருவர்.

கட்டபொம்மன் மீது வெள்ளையர் சுமத்திய முதற்குற்றச்சாற்றுத் திருவைகுண்டம் நெற்களஞ்சியத்தைச் சூறையிட்டதும் அதற்குக் காரணமான அமைச்சரைப் பிடித்துக்கொடுக்காததும். ஆக நெல்லிலிருந்தே விடுதலைப்போர் தொடங்குகிறது. வரியாக ஒரு நெல்மணியைக்கூடக் கட்டமாட்டேன் என்று சொன்னதால்தான் புலித்தேவனும் வெள்ளையருக்குப் பகைவரானார். தம்மை எதிர்த்த பாளையக்காரர்களைச் சூழ்ச்சியாலும் படைகொண்டும் அடக்கிய வெள்ளையர்கள், தமக்குப் பணிந்த பாளையக்காரர்களிடம் வரிபெற்றுக்கொண்டு திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு வருவாய் மாவட்டத்தை ஏற்படுத்தினர். அது இன்றைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் செங்கோட்டை வட்டத்தைத் தவிர்த்த பகுதிகளை உள்ளடக்கியது. வெள்ளையர்கள் இங்குப் பாசன வசதிக்காகத் திருவைகுண்டம், பாவநாசம் ஆகிய இடங்களில் அணைகட்டினர். நாட்டு விடுதலைக்குப் பிறகு காமராசர் முதலமைச்சராக இருந்தபோது மணிமுத்தாறு அணை கட்டப்பட்டு மாவட்டத்தின் தென்பகுதியான நான்கூனேரி, சாத்தான்குளம் வட்டங்களுக்குத் தண்ணீர் திருப்பப்பட்டது. இப்போது ஏராளமான சிற்றணைகள் கட்டப்பட்டாலும் அவற்றால் விளையும் பயன் சிறிதளவே ஆகும். ஆனால் இச்சிற்றணைத் திட்டங்களால் ஒப்பந்தக்காரரும் அதிகாரிகளும் அரசியலாரும் பெற்றது பேரூதியம்.

ஐவகை நிலங்களைப் பெற்றிருந்த இம்மாவட்டம் நெல், வாழை ஆகியவை விளையும் செழிப்பான நன்செய் நிலங்களையும் சோளம், கம்பு, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்ற தவசங்களும் சிறுபயறு, பெரும்பயறு, பூனைக்கண் பயறு, காணம் போன்றவை விளையும் புன்செய் நிலங்களையும் எள் பருத்தி ஆகியவை விளையும் கரிசல் நிலங்களையும் கொண்டது.

வெள்ளையர் காலத்தில் தூத்துக்குடியிலும் விக்கிரமசிங்கபுரத்திலும் பருத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டுவந்தன. ஆறுமுகனேரி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் உப்பு விளைவிக்கப்பட்டது. இன்றும் தமிழகத்திலே வாழை பயிரிடுவதில் முன்னணியில் உள்ள பகுதி திருநெல்வேலிச்சீமைதான். ஆண்டுக்கு இருபூ நெல் விளைவதும் இங்குத்தான். இந்தப் பெருமையெல்லாம் பொதிகையில் பிறந்து புன்னைக்காயலில் கடலில்புகும் பொருநையாற்றைத்தான் சேரும். தமிழகத்திலே ஆண்டுமுழுவதும் நீரோடும் ஒரேயாறு இதுதான். இந்த ஆற்றங்கரையோரங்கள்தான் நெல் வாழை ஆகியவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் உள்ளன.  இங்குப் புரட்டாசியில் நாற்றுப்பாவித் தைமாதத்தில் அறுக்கும் பிசானம், ஆனியில் நாற்றுப்பாவிப் புரட்டாசியில் அறுக்கும் கார் என இருபூ நெல் பயிரிடப்படுகிறது. பிசான நெல்லறுத்த பிறகு தொளி உழுந்து விதைக்கப்படுகிறது. பின்பனிக்காலத்து ஈரத்தில் உழுந்து விளைகிறது.

சீமை முழுவதும் வள்ளியூர், நான்கூனேரி, சேரமாதேவி, முக்கூடல், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி, திருவைகுண்டம், ஏரல், ஆழ்வார்த்திருநகரி, குறும்பூர், ஆறுமுகனேரி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் நன்செய் நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்பட்டுக் கல்நடப்பட்டு உடைவளர்ந்துள்ளன. நகராக்குதல் என்ற முறையில் நெல்வயல்களெல்லாம் முள்வயலாகவும் வீடுகளாகவும் முள்வேலி அமைக்கப்பட்டுப் பயிரிடத் தடுக்கப்பட்ட இடமாகவும் உள்ளது திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில்தான்.

பாளையங்கோட்டை, மேலைப்பாளையம், திருநெல்வேலி, தச்சநல்லூர் ஆகிய நான்கு நகராட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்து 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதுதான் திருநெல்வேலி மாநகராட்சி. மாநகராட்சிக்குத் திருநெல்வேலிப் பெயரைச் சூட்டியதும் பாளையங்கோட்டைப் பெயர் கொஞ்சங்கொஞ்சமாக மங்கிவருகிறது. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்பெற்றதும் வானிலை ஆராய்ச்சி நிலையம், வானொலி நிலையம், மாவட்டத் தலைமையிடம், காவல்துறைத் தலைமையிடம், ஆங்கில மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, தலைமை அஞ்சலகம், நடுவண் சிறைச்சாலை, நெடுஞ்சாலைத்துறை அறநிலையத்துறை வணிகவரித்துறை வேளாண்துறை தொலைத்தொடர்புத்துறை அலுவலகங்கள் சீர்திருத்த, கத்தோலிக்கப் பேராயங்கள் ஆகியவற்றைக் கொண்டதுமான பாளையங்கோட்டையின் பெயர் மங்குவது பழைமையின் மீது பற்றுக்கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். மேற்கண்டவை பாளையங்கோட்டையில் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் திருநெல்வேலியென்று எப்படிப் பெயர்சூட்டினார்கள் என்று தெரியவில்லை. மாநகராட்சியில் கிட்டத்தட்ட அரைப்பங்கு மக்கள்தொகை கொண்ட பாளையங்கோட்டையில் தொடர்வண்டி நிலையத்தைக்கூட விரிவாகக் கட்டாததற்கும் வேறேதும் உள்நோக்கம் இருக்குமென்றே தெரிகிறது. ஓராள்கூட ஏறியிறங்காத செங்குளம் நிலையத்தில் உள்ள வசதிகூட இந்நிலையத்தில் செய்யப்படாதது மனத்துக்கு வருத்தமளிக்கிறது.

நன்செய் நிலங்கள் எடுக்கப்படாமல் முதன்முதலில் மேட்டுநிலத்தில் அமைக்கப்பட்ட அரசுஅலுவலர் குடியிருப்புப் பாளையங்கோட்டைச் சிறைச்சாலைக்குத் தெற்கே அமைந்துள்ளதாகத்தான் இருக்கும். அகலமான நேரான தெருக்களோடு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. பிற பகுதிகளிலெல்லாம் குளத்திலும் குளத்துப்பற்றிலும் வயல்வெளிகளிலும்தான் குடியிருப்புக்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பாளையங்கோட்டையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப்பாதைக்கு வடக்கும் கன்னியாகுமரி - காசி நெடுஞ்சாலைக்குக் கிழக்கும் திருச்செந்தூர் தென்காசி நெடுஞ்சாலைக்குத் தெற்கும் ஆயுதப்படை வீட்டுக்கு மேற்கும் உள்ள பகுதியில் ஒரு குளமும் குளத்துப் பற்றும் அரசு அலுவலகங்கள், வழிபாட்டிடங்கள், கல்விக்கூடங்கள், குடியிருப்புக்கள் கட்டப்பட்டுச் சீரழிக்கப்பட்டிருக்கின்றன. இலந்தைக் குளமும் குளத்துப் பற்றும்தான் அவை.

பாளையங்கோட்டைத் தொடர்வண்டி நிலையத்துக்கு வடபுறம் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்திலிருந்தும் தூய சவேரியார் கல்லூரியிலிருந்தும் தொடர்வண்டி நிலையத்துக்கு வரும் வழியான ரயில்வே பீடர் சாலை இலந்தைக் குளத்தங்கரை மேல்தான் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது இச்சாலைக்குக் கீழ்ப்புறம் குளத்தங்கரையில் உள்ள உயரமான பனைகள் வெட்டப்பட்டும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டும் குளத்தின் சங்கு நெரிக்கப்பட்டு வருகிறது. இலந்தைக் குளத்துப் பற்றென்று இப்போது கேட்டால் யாருக்குந் தெரியாது. பாளையங்கோட்டை இராசேந்திர நகர் என்று கேட்டால்தான் தெரியும்.

இப்படி நன்செய் நிலங்கள் நகராக்கப்பட்டதும் மேட்டுநிலத்தில் அழகான அரசு அலுவலர் குடியிருப்பு அமைக்கப்பட்ட அதே பாளையங்கோட்டையில்தான். இலந்தைக் குளத்தின் நீர்தேங்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்கள் ஒன்றிரண்டல்ல, பத்துக்கும் மேற்பட்டவை. அவை திருச்செந்தூர் தென்காசி நெடுஞ்சாலையில் ஐம்பத்தைந்தாவது கிலோமீட்டரில் கிழக்கேயிருந்து மேற்காகக் காவல்துறை ஆயுதப்படை வளாகம், காவலர் பயிற்சிப் பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறைச் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், மாவட்ட மேலாளர் அலுவலகங்கள், வணிகவரித்துறை அலுவலகம், இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறைக் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம், மண்டல ஆய்வகம், ஆராய்ச்சி நிலையம், கோட்டப் பொறியாளர், நபார்டு ஊரகச்சாலைகள் திட்ட அலுவலகம் என அமைந்துள்ளன. அதற்கும் மேற்கே பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இடம் இதில் கட்டட இடிபாடுகளைத் தட்டக்கூடாது என்றெழுதி வைத்திருக்கின்றனர். அவ்விடத்தில் கட்டட இடிபாடுகளும் கழிவுகளும் செடிசெத்தைகளும் தட்டப்பட்டு மலைபோலக் குவிக்கப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அதிகாரிக்குத் தெரியவில்லையோ அது? மேற்கண்ட அரசு அலுவலகங்களுக்கு முன்னும் தூய சவேரியார் கல்லூரிக்குப் பின்னும் சாலையிலுள்ள பாலங்களில் 54/1 மட்டுமே அடைபடாமல் உள்ளது. 54/2, 3 ஆகியவை தண்ணீர் செல்லமுடியாத அளவு அடைபட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிகமழை பெய்யும் பகுதிகளில் ஒன்று பாளையங்கோட்டையாகும். இங்கு ஒரு மாநில நெடுஞ்சாலையிலே நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தருகிலே இப்படிப் பாலங்களையெல்லாம் அடைத்திருப்பது வியப்பளிக்கிறது. இங்கேயே இப்படியென்றால் பிறவிடங்களில் தண்ணீர் செல்லும் பாலங்கள் எப்பாடு பட்டிருக்கும்?

பாளையங்கோட்டை முருகன்குறிச்சிக்கு வடபுறமுள்ள மூளிக்குளத்துப் பற்றிலும் வயல்களில் மருத்துவமனையும் கல்வி நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன. முருகன்குறிச்சிக்கு மேற்புறமுள்ள வயல்களில் பெரும்பாலானவை நெல் நட்டுவிடா வண்ணம் கல் நடப்பட்டுள்ளது. வண்ணார்ப்பேட்டைப் புறவழிச்சாலைக்குக் கிழக்கேயும் திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப்பாதைக்கு வடக்கேயும் உள்ள வயல்கள் இன்னும் ஓரிரண்டாண்டுகளில் நடாமல் விடப்படும் நிலை உள்ளது. வயல்களில் கட்டட இடிபாடுகளைத் தட்டி மேடாக்கும் போக்குத் தொடர்கிறது. வண்ணார்ப்பேட்டையில் வண்டி விற்பனையகங்களும் உணவகங்களும் பெருங்கடைகளும் கட்டப்பட்டுள்ளன. 1999ஆம் ஆண்டில் தச்சநல்லூர் - மேலைப்பாளையம் புறவழிச்சாலை வண்ணார்ப்பேட்டை வழியாக அமைக்கப்பட்ட பிறகு வண்ணார்ப்பேட்டையில் அச்சாலையையொட்டி ஏராளமான நன்செய் வயல்களில் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆக நன்செய் நிலங்கள் கட்டடங்கள் கட்டப்பட்டுச் சீரழிக்கப்படுவதற்கு அரசுதான் முதற் காரணம். நெல்விளைந்த வயல்கள் கல்நடப்பட்டு வளைக்கப்பட்டிருக்கின்றன. உழவர்களிடமிருந்த வயல்கள் பெரும் பணப்பூதங்களிடமும் வம்புக்காரர்களிடமும் கைமாறியிருக்கின்றன.

திருநெல்வேலிச் சந்திப்பையும் மேலைப்பாளையத்தையும் இணைக்கும் கொக்கிரகுளம் - குறிச்சிச் சாலையோரத்திலும் வயல்வெளிகளில் வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் முன்னீர்ப்பள்ளம் மேலைப்பாளையம் குறிச்சி ஆகிய பகுதிகளில் பாளையங்கால்வாய்க்கு மேல்புறமும் வடபுறமும் கட்டடங்கள் கட்டப்படாமல் கட்டுப்பாட்டுடன் உள்ளது. மாநகராட்சியில் உள்ள பிற பகுதிகளை ஒப்பிடும்போது இங்கு வயல்வெளிகளைக் கட்டடமாக்கும்போக்கு அறவே இல்லை எனலாம். எனினும் மேலைப்பாளையம் தொடர்வண்டி நிலையத்தருகே நெல்லை நகருக்குச் செல்லும் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதன் வடபுறம் ஒரு மருத்துவமனை என்று மருந்துக்கு இரண்டு கட்டடங்கள் உள்ளன. மேலைநத்தம் கீழைநத்தம் போன்ற இடங்களிலும் வயல்வெளிகள் கட்டடமாக்கும் போக்குக் குறைவாகவே உள்ளது. வீடுகள் கட்டடங்கள் இல்லாவிடங்களில் பாளையங்கால்வாய் விரிந்தும் ஆழமாகவும் துப்புரவாகத் தூர்வாரப்பட்டும் உள்ளது. வீடுகள் கட்டடங்கள் உள்ள பகுதிகளில் இடிபாடுகள் தட்டப்பட்டும் செடிகள் தட்டப்பட்டும் சங்கு நெரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நடைப்பாலங்கள் உள்ள பகுதிகளில் பாலித்தீன் தாள் தட்டப்பட்டுத் தண்ணீரைச் செறுத்துக்கொண்டுள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீரின் ஓட்டம் தடைபடுகிறது. கால்வாயிலிருந்து வயல்களுக்கு வாய்க்கால்கள் செல்லும் பாதைகளில் கட்டடங்கள் எழுப்பப்பட்டுத் தண்ணீர் பாய்வது தடுக்கப்பட்டுள்ளது. முருகன்குறிச்சியில் நெடுஞ்சாலையைத் தாண்டி வடபுறம் முதல் மதகிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வாய்க்கால் இவ்வாறு நெரிக்கப்பட்டு அடைபடும் நிலையிலுள்ளது. அதுவொரு கிருத்தவக் கல்வி நிறுவனத்துக்குக் கீழே செல்கிறது. அல்லது அதற்குமேல் ஒரு கிருத்தவக் கல்வி நிறுவனம் கட்டப்பட்டுவிட்டது. ஊருக்கே உயிரோட்டம் இந்தக்கால்வாயின் நீரோட்டந்தான் என்பது மக்களுக்கு இன்னுந்தெரியவில்லை. முழுவதும் அடைபடும்நிலை வந்தபிறகும் பொதுப்பணித்துறை பிணியிலுள்ளதோ என்னமோ? கால்வாயில் இடிபாடுகளைத் தட்டக்கூடாது என்று சொல்லவில்லை.

திருநெல்வேலிச் சந்திப்பிலிருந்து தென்காசிக்குச் செல்லும் இருப்புப்பாதையின் இருபுறமும் வயல்வெளிகள் பசுமையாய் இருந்தன. இப்போது வாய்க்கால்கள் அடைபட்டுப்போனதால் பல வயல்கள் நடமுடியாமல் இருக்கின்றன. சந்திப்பிலிருந்து சிக்கநரசையன்கிராமத்துக்குச் செல்லும் சாலையின் வடபுறமுள்ள வயல்கள் தனியார் கட்டுமான நிறுவனத்தால் வீட்டுமனைகளாக்கப்பட்டுள்ளன. இவ்வூரில் நிறைய வயல்கள் பயிரிடப்படாமல் உள்ளன. குறுக்குத்துறையிலிருந்து திருநெல்வேலி நகரத்துக்குச் செல்லும் மேலைப்பாளையம் திருநெல்வேலிச் சாலையின் இருபுறமும் ஓங்கியுயர்ந்த மருதமரங்கள் நிற்கின்றன. இச்சாலையின் இருபுறமும் வயல்வெளிகள் நடப்பட்டுள்ளன. நாகரிகத்தின் உச்சமென்று எண்ணிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கேடு விளைவிக்கும் பொருளான பாலித்தீன் தாள்கள் வயல்களில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. இவை காற்றால் பறந்து வயல்களுக்குப் போகின்றன. சாலையின் மேற்புறம் மாநகராட்சி நீரேற்று நிலையம் உள்ளது. இது நன்செய்நிலத்தில் கட்டப்பட்டதுதான். அதற்குக் கொஞ்சம் மேற்கில் நடுவயலில் ஒரு குடியிருப்புக் கட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி _ தென்காசி இருப்புப்பாதையும் மேலைப்பாளையம் _ திருநெல்வேலிச் சாலையும் சந்திக்குமிடத்தில் பள்ளி, கோவில் என வயல்வெளிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. திருநெல்வேலி நகரத்தின் தென்கிழக்கு முக்கில் ஒரு திரையரங்கம் கட்டப்பட்டுள்ளதும் வயலில்தான். அந்த முக்கிலிருந்து மேற்குநோக்கிச் செல்லும் தெற்கு மலைச்சாலைக்குத் தென்புறமுள்ள கட்டடங்களெல்லாம் வயல்களை மேடாக்கிக் கட்டப்பட்டவைதான். அதில் குறிப்பிடத்தக்கது துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் குடிசைமாற்று வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. அதன் எல்லையை அடியொற்றிப் பிறர் வயல்வெளிகளில் வீடுகட்டவும் கட்டடங்கள் கட்டவும் தொடங்கிவிட்டனர். திருநெல்வேலி நகரத்தின் தேரோடும் வீதியில் தென்கிழக்கு (வாகையடி) முக்கிலிருந்து தொடர்வண்டி நிலையத்துக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வயல்வெளிகளில் கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றனர். மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளிக்குத் தென்புறமும் நிலைமை இப்படித்தானுள்ளது.

திருநெல்வேலி - தென்காசி இருப்புப்பாதைக்குத் தென்புறம் வீடுகள் கட்டப்படாதது வியப்புக்குரியதன்று. இருப்புப்பாதைக்குத் தெற்கே வீடுகட்டினால் போக்குவரத்துக்கு ஏந்தாக இராது என்பதால்தான் வீடுகட்டப்படவில்லை. அப்படியும் எங்கெங்கே சாலைக்கடவு உள்ளதோ ஆங்காங்கே இருப்புப்பாதைக்குத் தென்புறமும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. திருநெல்வேலி நகரத் தொடர்வண்டி நிலையத்துக்கு மேற்புறம் தென்பற்றுக்குச் செல்லும் சாலைக்கடவு உள்ளது. இந்தச்சாலையோரத்தில் வயல்கள் வீடுகளாக்கப்பட்டுள்ளதைத் தெற்கிலும் காணலாம். இருப்புப்பாதைக்கு வடபுறமுள்ள வயல்களெல்லாம் கிட்டத்தட்ட வீடுகளாக்கப்பட்டுவிட்டன. அந்தக்கொடுமையின் உச்சக்கட்டத்தை நகரத்தின் மேற்புறத்தில் சேரமாதேவிச் சாலைக்குத் தென்புறம் கோடீசுவரநகர் என்ற பெயரில் சொல்லப்படும் வயல்வெளிகளில் காணலாம். சாலையோரத்தில் நெருக்கமாக வீடுகள் காணப்படுகின்றன. தெற்கே செல்லச்செல்ல வீடுகள் அமைந்திருக்கும் நெருக்கம் குறைகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இருப்புப்பாதை வரைக்கும் உள்ள இடங்கள் வீடுகளாக்கப்பட்டுவிடும். இப்போது அப்பகுதியில் கால்பகுதி வயல்வெளியாக உள்ளது. சேரமாதேவிச் சாலைக்கும் தென்காசிச் சாலைக்கும் ஊடேயுள்ள வயற்காடும் வீடுகளும் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு மேற்புறமுள்ள குளம் நிரப்பப்படாததற்கு இப்பகுதி வீடுகளுக்குத் தண்ணீர் வந்துவிடக்கூடாது என்பதும் ஒரு காரணமாக இருக்கும் என்று எண்ணவேண்டியுள்ளது.

மாநகராட்சியின் மேலைக்கோடியான புதுப்பேட்டையின் மேற்றிசையில் அமைந்துள்ள பேட்டைக்குளம் மழைக்காலத்தில் மட்டுமே பெருகுமாம். அக்குளத்துப் பற்று எங்குள்ளது என்று தேடும் நிலையிலுள்ளது. பிசானத்தில் மட்டுமே நெல்விளையும் பற்றான அது வீடுகள் கட்டப்பட்டும் முட்கம்பி வேலி போடப்பட்டும் சரல் தட்டப்பட்டும் உடைமுள் பற்றியும் காணப்படுகிறது. ஒரு பள்ளிக்கூடங்கூட அந்தப்பற்றில் கட்டப்பட்டுள்ளது. புதுப்பேட்டையிலிருந்து பழைய பேட்டைக்குச் செல்லும் சாலைக்குக் கிழக்கேயுள்ள பள்ளிவாசல் பற்றும் உடைமுள் பற்றியே காணப்படுகிறது. அதில் நிறைய நிலம் முட்கம்பி வேலிபோட்டு வளைக்கப்பட்டுள்ளது. இந்தச்சாலையில் பழையபேட்டைக்கு அருகே சென்றதும் சாலையின் இருபுறமும் பாலித்தீன் தாள்கள் பறந்துகொண்டும் உடைகளில் தொங்கிக்கொண்டும் உள்ளன. நாம் சாலையில் சென்றால் நம் முகத்தில் வந்துவிழுந்துவிடும் என்ற அச்சம் நிறையவே உள்ளது. மாநகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலுக்கு அதிகம் உள்ளாகியிருக்கும் பகுதி இப்பகுதியாகத்தான் இருக்கும்.

பழையபேட்டைக்குக் கிழக்கேயும் திருநெல்வேலி நகரத்துக்கு வடக்கேயும் திருநெல்வேலி _ இராசபாளையம் சாலைக்கு மேற்கேயும் இராமையன்பட்டிக்குத் தெற்கேயும் பரந்துவிரிந்துள்ள கண்டியப்பேரிப் பற்றில் தெற்கேயும் தென்மேற்கிலும் வயல்கள் மேடாக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இராசபாளையம் சாலையின் மேற்புறத்தில் தனியார் பள்ளி ஒன்று கட்டப்பட்டுள்ளது. கல்விக்கூடமும் அது அமைந்திருக்கும் வயற்காட்டைப் பொறுத்தவரை ஒரு களைதான். இராமையன்பட்டிக்குத் தென்புறமும் தச்சநல்லூருக்கு மேற்புறமும் நயினார்குளத்துக்கு வடபுறமும் அமைந்திருக்கும் தேனீர்க்குளப்பற்றுக் கார்ப்பருவத்துக்குத் தண்ணீரில்லாமல் காய்ந்துகிடக்கிறது. திருநெல்வேலி நகரத்தின் வடபுறம் கண்ணுக்குக் குளிர்ச்சியாயும் நகரிலே பெரிதாயும் அமைந்திருப்பது நயினார்குளம். நயினார்குளத்தின் கரையை ஒட்டிய பகுதிகளில் காய்கறிச்சந்தையும் வண்டிப் பணிமனைகளும் கட்டப்பட்டுள்ளன. பொருட்காட்சித் திடல், வ.உ.சி. மணிமண்டபம், துணை மின் நிலையம் என நயினார்குளத்துப் பற்றில் வயல்களைக் கெடுத்துச் செய்யப்பட்டுள்ள நன்மைகள் ஏராளம். நெல்லையப்பர் நெடுஞ்சாலையிலிருந்து ஊருடையார்புரத்துக்குச் செல்லும் சாலையிலும் ஏராளமான வண்டிப் பணிமனைகளும் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. அந்தச் சாலைக்குக் கிழக்கே தொடர்வண்டிப் பணியாளர் குடியிருப்புவரை வயல்வெளிகள்தான். இப்போது அந்தப்பற்றில் ஒரு வயல்கூட நடப்படவில்லை.

தொடர்வண்டிச் சந்திப்புக்கு வடக்கில் தச்சநல்லூருக்குக் கிழக்கில் உள்ள பற்றுக்காடு பாலபாக்கிய நகர் என்றபெயரில் குடியிருப்புப் பகுதியாகிவிட்டது. இப்பகுதியிலிருந்து புறவழிச்சாலைக்குக் கீழ்ப்புறத்து வயல்களுக்குச் செல்லும் கால்வாய்கள் அடைபட்டுள்ளன. கால்வாய்ப் பாலத்தை அடைத்த நகரென்று பெயர் சூட்டலாம். சந்திப்பிலிருந்து மதுரைக்குச் செல்லும் சாலையின் கீழ்ப்புறமும் சிந்துபூந்துறைக்கு வடக்குமுள்ள குடிதாங்கிக்குளம் சுற்றியும் நெருக்கப்பட்ட நிலையில் மூச்சுவிடத் திணறுகிறது. இன்னுங் கொஞ்சங் காலத்தில் கட்டட இடிபாடுகளால் இதை நிரப்பிவிடுவார்களென்று தெரிகிறது. இக்குளத்துப்பற்றில் இப்போது பயிரிடப்படுவதில்லை.

இராமையன்பட்டிக்குக் கிழக்கிலும் தச்சநல்லூருக்கு வடக்கிலும் மதுரைச்சாலைக்கு மேற்கிலுமுள்ள சத்திரம் புதுக்குளம் பற்றின் தென்பகுதி முழுவதும் மனைவணிகர்களின் பிடியில் சிக்கிச் சீரழிகிறது. இப்பற்றில் பாதியிடங்களில் வீடு கட்டப்பட்டுள்ளது. மீதியிடத்தையும் சரல்தட்டிச் சீரழித்துள்ளனர். ஒரு பூக்கூட விளைவிக்காமல் வயல்கள் உடைபற்றிக் காணப்படுகின்றன. சத்திரம் புதுக்குளம் பற்றின் வடபகுதி ஒரு பூ விளையுந் தகுதி பெற்றிருந்தாலும் அங்கும் மனை வணிகர்கள் கல் நட்டிருப்பது அப்பகுதியைப் பார்க்கும்போது

தெரிகிறது. நடுப்பற்றில் பெருவணிகர் ஒருவருக்கு உரிமையான பத்துக்குறுக்கத்துக்கும் மேற்பட்ட நிலம் பல்லாண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்படாமலும் பயிரிடுவோருக்குக் கொடுக்காமலும் உடைபற்றியுள்ளது. திருநெல்வேலி நகரத்தில் பொன்னகைக்கடை வைத்திருக்கும் தனியாரொருவர் மேலைக்கரை ஊருக்கும் மதுரைச்சாலைக்கும் மேற்கே அருகன்குளம் கால்வாயில் பொதுப்பணித்துறையின் அனுமதி பெறாமலே வயலை மனைகளாக்கப் பாலங்கட்டி வருகிறார். அகலமாக இருக்கும் கால்வாயைச் சுருக்கும் வகையில் குறைவான அகலத்தில் பாலங்கட்டப்படுவது அதைப் பார்ப்பவருக்குத் தெரியும். இந்தப் பற்றுக்கு வடக்கேயும் தாழையூற்றுக்குத் தென்புறமும் ஒரு வயற்காடு உடைபற்றிக் கிடக்கிறது. வயற்காட்டில் பாதியை ஒருவரே வளைத்திருப்பது முட்கம்பி வேலி அமைத்திருப்பதிலிருந்து தெரிகிறது.

உடையார்பட்டிக் குறுக்குச்சாலைக்குக் கிழக்கே கீழைக்கரைப்பற்று உடைபற்றிக் காணப்படுகிறது. இப்பகுதியில் இருப்புப்பாதைக்குக் கிழக்கே மனைவணிக நிறுவனமொன்று கால்வாயில் பாலங்கட்டி மனைகளுக்கிடையேயுள்ள பகுதியில் தார்ச்சாலை அமைத்து வைத்துள்ளது. நகரத்தில் எங்குமில்லாத அளவுக்கு இந்தப் பற்று உடங்காடாகக் காட்சியளிக்கிறது. மணிமூர்த்தீசுவரத்திலிருந்து சேந்திமங்கலத்துக்குச் செல்லும் சாலையில் ஐஸ்கிரீம் நிறுவனம், எரிவளி நிறுவனம் போன்றவை வயல்களை மேடாக்கித் தங்கள் கிட்டங்கிகளைக் கட்டியுள்ளன.

கன்னியாகுமரி - காசி நெடுஞ்சாலை இதுவரை மும்முறை தடம் மாறியுள்ளது. முதலில் பாளையங்கோட்டை திருநெல்வேலிச் சந்திப்பு தச்சநல்லூர் தாழையூற்று வழியாக வடக்குநோக்கிச் சென்ற சாலை பின் பாளையங்கோட்டைக்கும் மேலைப்பாளையத்துக்கும் ஊடே வடக்குநோக்கிச் சென்று வண்ணார்ப்பேட்டை உடையார்ப்பட்டி வழியாகத் தச்சநல்லூருக்கு வடக்கே சென்று தாழையூற்றுக்குச் சென்றது. இப்போது பாளையங்கோட்டைக்குத் தெற்கே சாலைப்போக்குவரத்து நிறுவனப் பல்தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலிருந்து வடகிழக்குத் திசைநோக்கித் திரும்பிப் பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் திருச்செந்தூர்ச் சாலை, தூத்துக்குடிச்சாலை ஆகியவற்றைத் தாண்டி வடக்குநோக்கிச் சென்று சீவலப்பேரிச் சாலையைத் தாண்டி ஆற்றையும் தாண்டி நாரணம்மாள்புரம் குறிச்சிக்குளம் வழியாகத் தாழையூற்று சிமெண்ட் ஆலைக்கு முன்பு பழைய சாலைசென்ற இடத்தில் இணைகிறது. இந்தச் சாலை அமைக்கத் திட்டமிட்டவர்கள் ஏராளமான நன்செய் நிலங்கள் வீணாகப்போவதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் உடையார்ப்பட்டிச் சாலையையே நால்வழிச்சாலையாக மாற்றியிருக்கலாம். பல்தொழில்நுட்பக்கல்லூரியிலிருந்து தாழையூற்று வரை இருபது கிலோமீட்டர் தொலைவுக்குப் புதிய நால்வழிச்சாலை அமைத்ததற்கு உடையார்ப்பட்டிச் சாலையையே மேம்படுத்தியிருந்தால் தொலைவும் ஆறு கிலோமீட்டர் வரை குறைந்திருக்கும். புதிய பாதை அமைத்ததில் சீவலப்பேரிச் சாலைக்குத் தெற்கேயுள்ள பகுதியில் நன்செய்நிலங்கள் கைப்பற்றப்படா விட்டாலும் சீவலப்பேரிச் சாலைக்கும் தாழையூற்றுக்கும் இடையே இரு பூ விளையும் பலநூறு ஏக்கர் நன்செய் நிலங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்குள் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் அடைபட்டு இன்னுஞ் சிலநூறு ஏக்கர் நிலங்கள் பயிரிட முடியாத நிலைமை உருவாகும் எனத் தெரிகிறது. நட்ட பகுதிகளில் தண்ணீர்காணாமல் நாற்றுக் காய்ந்து கிடப்பதைப் பார்க்கும்போது வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார்தான் நினைவுக்கு வருகிறார். இக்காலத்தில் பயிர் மட்டுமல்ல, மாநிலத்து உயிர்களெல்லாம் வாடினாலும் நான் ஆடிக்கொண்டிருப்பேன் என்று சொல்பவர்களே ஆட்சியிலிருப்பதால் பயிரைக் கண்டு நாம்தான் வாட வேண்டும். காக்க வேண்டியவர்கள் இன்னும் எங்கெங்கெல்லாம் சாலையமைத்து வயல்களைச் சீரழிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டே இருப்பார்கள்.

இதுவரை கூறிய பற்றுக்களில் பேட்டைக்குளத்துப் பற்றைத் தவிர மற்றெல்லாப் பற்றுக்களும் பிசானம் கார் என ஆண்டுக்கு இரு பூ விளையும் பகுதிகளாகும். ஒருமுறை உழுந்து பயிரிடப்படும். இவ்வாண்டு சரியாகச் சாரல் பெய்யாததால் ஆற்றிலும் நீர்வரத்துக் குறைவு. கால்வாய்களிலும் நீர்வரத்துக் குறைவு. ஆடிப் பதினெட்டாம் பெருக்குக்கு முன்னாலே வயல்களில் நீர்காய்ந்து சுருக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆற்றுக்கு வடபுறமுள்ள திருநெல்வேலிக் கால்வாயுடன் ஒப்பிடும்போது ஆற்றுக்குத் தெற்கேயுள்ள பாளையங் கால்வாயில் அடைப்புகளும் நெரிப்புகளும் குறைவு என்பதால் அதில் ஓரளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆகையால் தென்பகுதியில் கிட்டத்தட்ட எல்லா வயல்களும் நடப்பட்டுவிட்டன. மனை வணிகர்களால் வளைக்கப்பட்டுள்ள வயல்கள் மட்டும் நடப்படவில்லை.

ஆற்றுக்கு வடபுறமுள்ள பகுதிகளில் திருநெல்வேலி - தென்காசி இருப்புப்பாதைக்குத் தென்புறமுள்ள வயல்களில் கார் பயிரிடப்பட்டுள்ளது. வடபகுதியில் கோடீசுவரநகர் என்று சொல்லப்படும் பகுதியில் மட்டும் கொஞ்சம் நடப்பட்டுள்ளது. கண்டியப்பேரிப்பற்று, நயினார்குளப்பற்று, தேனீர்க்குளப்பற்று, இராமையன்பட்டிப் பற்று, சத்திரம்புதுக்குளம் பற்று, மேலைக்கரை கீழைக்கரைப் பற்றுக்கள், மணிமூர்த்தீசுவரம் பற்று, சேந்திமங்கலம் பற்றுப் போன்றவை கார்நடாமல் காய்ந்துகிடக்கின்றன.

திருநெல்வேலிக் கால்வாய் பெயருக்கேற்றாற்போல் திருநெல்வேலி நகர் வழியாகப் பாய்ந்து வருகின்றது. அதுதான் நகர்ப்பகுதிக்குள் அதன் அகலம் குறைவதற்கான காரணமும் ஆகும். மக்கள் கட்டட இடிபாடுகளைக் கால்வாய்க்குள் தட்டி விடுகின்றனர். கழிவுகள், பாலித்தீன் தாள்கள் போன்றவற்றையும் கால்வாய்க்குள்ளே தட்டி விடுகின்றனர். தச்சநல்லூரைக் கடந்தவுடன் கால்வாய் மீண்டும் அகலமாகிறது. இருந்தாலும் நகரத்தின் கழிவுகள் தண்ணீரில் அரித்துவரப்படுகின்றன. ஒருகாலத்தில் குடிக்கக் குளிக்கப் பயன்படுத்தப்பட்ட கால்வாய்த் தண்ணீர் இன்று துவைக்கக்கூடப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதிலிருந்து இதன் மாசுபாட்டை அறியலாம்.

வயல்வெளிகள் வீடாக்கப்படுவதற்குக் குறிப்பிடத்தக்க காரணம் உழவர்கள் வறுமை, மக்களின் படிப்பு, திருமணம் போன்றவற்றிற்காக வயலை விற்றுவிடுவதும் அவ்வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கத் தேவையான பணம் அரசு ஊழியர்களிடமும் வணிகர்களிடமும் குவிந்துகிடப்பதுமாகும். ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு இரு பூ நெல்விளைந்தால் ஐம்பது மூட்டை நெல் கிடைக்கும். இது அதிக விலைக்கு விற்றால் முப்பத்தையாயிரம் ரூபாய்க்கு விற்கும். இந்த நிலத்தை சென்று (cent) 1 இலக்கம் ரூபாய்க்கு விற்றாலும் ஒருகோடி ரூபாய்க்கு விற்றுவிடலாம். வங்கியில் வைப்புத்தொகையாக இதை வைத்தால் குறைந்த வட்டியென்று பார்த்தாலும் ஆண்டுக்கு எட்டரையிலக்கம் ரூபாய் கிடைக்கும். இதைவைத்துக்கொண்டு வாழ்க்கையை இனிமையாக வாழலாம் என்று உழவர்கள் கணக்கிடுகின்றனர். இவர்களின் கணக்கில் உழைப்புத் தோற்றுவிடுகிறது. பணக்காரர்களின் பணம் வென்றுவிடுகிறது. சுற்றுச்சூழல் சமன்பாடு தோற்றுவிடுகிறது. சீரழிவு வென்றுவிடுகிறது.

இருபதாண்டுகளுக்கு முன் நகரைச் சுற்றி வயல்கள் பச்சைப்பசேலென்று இருந்தன. இன்று கட்டடங்களாகவும் முட்காடுகளாகவும் நடுகல்காடுகளாகவும் இருப்பது நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள்ளாகக் குத்தத்தான் செய்கிறது. வயல்வெளிகளெல்லாம் கட்டடங்களாகும் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் முதற்குற்றவாளி அரசுதான். அரசின் தொலைநோக்கற்ற திட்டங்களால்தான் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் சாலை அமைக்கப்பட்டது. சாலையமைத்தவுடனே சாலையையொட்டிய நிலப்பகுதியில் கட்டடங்கள் கட்டுகின்றனர். போக்குவரத்து வசதியுள்ளதால் அந்நிலம் சந்தைமதிப்பைவிடப் பன்மடங்கு விலைக்கு விற்கிறது. உரிமையாளரே கட்டடங் கட்டுகிறார். அல்லது மனை வணிக நிறுவனங்களிடமோ தொழில் நிறுவனங்களிடமோ விற்றுவிடுகிறார். உரிமையாளர் எளியவர் என்றால் வலியவர் மருட்டிப் பிடுங்குவதும் நடக்கிறது. உடையார்ப்பட்டி வண்ணார்ப்பேட்டை மேலைப்பாளையம் புறவழிச்சாலையை அரசு அமைத்தபோதுதான் அப்பகுதியில் கட்டடங்கள் கட்டப்பட்டன. வண்ணார்ப்பேட்டை வடக்குப் பகுதியில்தான் நிறையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

வயல்வெளிகளில் சாலை அமைப்பதென்றால் அரசுக்கும் சாலையோரங்களில் கட்டடம் கட்டுவதென்றால் மக்களுக்கும் இளக்காரமாய்ப் போய்விட்டது. இந்நிலை என்று மாறுமோ? திருநெல்வேலி முள்வேலியாவது தடுக்கப்படுமோ? பாளையங்கோட்டை மேட்டுத்திடல், பேட்டைக்கு மேற்கேயுள்ள பறம்பு, பொறியியல் கல்லூரிக்குத் தெற்கேயுள்ள செம்மண்பொட்டல் போன்ற இடங்களில் எவ்வளவு கட்டடங்கள் வேண்டுமென்றாலும் கட்டிக்கொள்ளலாம். ஆனால் எத்தனை கோடி ரூபாய் செலவிட்டாலும் அந்நிலங்களை நன்செய்யாக்க முடியாது. அதையுணர்ந்து நன்செய்களில் கட்டடங்கள் கட்டுவதை மக்களும் அரசும் தவிர்க்க வேண்டும்.

( 2011ஆம் ஆண்டு கோடையில் பாளையங்கோட்டை, மேலைப்பாளையம், திருநெல்வேலி, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு செய்த பின் எழுதிய இந்தக் கட்டுரை பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் மாத இதழில் 2011 நவம்பர் மாதத்தில் வெளியானது. கட்டுரை எழுதி வெளியாகி 12ஆண்டுகளுக்குப் பின் 2023 திசம்பரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்ட நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இதை மீண்டும் தமிழ்ச் செய்திக்களத்தில் வெளியிட்டுள்ளேன் )

சே.பச்சைமால் கண்ணன்