சனி, 28 ஜனவரி, 2023

பனையும் தமிழர் வாழ்வியலும்

பனையின் இயல்புகள்

புவியின் நடுக்கோட்டுப் பகுதிகளில் இயற்கையாய் வளரும் தாவர வகைகளில் ஒன்று பனை. கிழக்காசிய நாடுகள், இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் பனைகள் செழித்து வளர்கின்றன. புவியீர்ப்பாற்றலுக்கு எதிராகச் செங்குத்தாக நேராக வளரும் தன்மையுடையவை. இவற்றின் வளர்ச்சிக்கு மனிதர்கள் பெரிதாக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அவற்றை வெட்டிவிடாமல் அழிக்காமல் இருந்தால் போதும். இந்தியாவில் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு மிக அண்மையில் உள்ள தமிழ்நாட்டில்தான் அதிகப் பனைகள் வளர்ந்துள்ளன. இறுகிய களி, கட்டியான செம்மண், மணற்பாங்கான நிலம், ஆற்றோரத்து வண்டல் மண் என எதிலும் செழித்து வளர்கிறது பனை. பனையில் கொண்டை எனப்படும் தலைப்பகுதியே பசுமை மாறாததாகவும் நீடித்த பயன்தருவதாகவும் உள்ளது.



பனையின் பெருமை

தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார் (குறள் 104)

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார் (குறள் 433) எனத் திருவள்ளுவர் கூறியதில் இருந்தும், உரமிடல், நீர்பாய்த்தல், பேணல் ஏதுமின்றிப் பயன்தரல், புவியீர்ப்பு ஆற்றலுக்கு நேர் எதிராகச் செங்குத்தாக உயரமாக வளர்தல் ஆகிய அதன் பண்புகளாலும் பனைகளின் பெருமையை நாமறிந்துகொள்ளலாம். முடியுடை மூவேந்தர்களுள் சேரமன்னர்களுக்குரிய பூ பனம்பூவாகும்.

முளைத்து வளர ஆகும் காலம்

பனையில் இருந்து பழுத்து விழும் கொட்டை பருவமழைக் காலத்தில் ஈரப்பதத்தால் முளைவிட்டு மண்ணில் இறங்கிக் கிழங்காகி முற்றியபின் பீலிவிட்டு வளர்ந்து வடலியாகிப் பாளைவரும் பருவப் பனையாகிறது. ஒரு சொற்றொடரில் சொல்லிவிட்ட இந்தச் செயல்கள் தொடங்கி நிறைவடையக் குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் இப்போது பொதுவாக நெல்வகைகள் விதைத்து 90 நாட்களில் விளையும் இயல்புடையவை. பனங்கொட்டைகள் மண்ணில் முளையிறக்கிக் கிழங்காக விளைவதற்கே 90 நாள்  ஆகிறது என்பது பலருக்கு வியப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆவணி புரட்டாசி மாதங்களில் மண்ணில் விழும் பனங்கொட்டை இயற்கையிலேயே வடகிழக்குப் பருவமழைக்கால ஈரப்பதத்தால் முளைத்துக் கிழங்காகும். அடுத்து இளவேனிற்காலமான சித்திரை வைகாசி மாதங்களில்தான் இதன் பீலி மண்ணுக்கு வெளியே தலைநீட்டும். இதன் ஓலை மாடுகள் யானைகள் தின்னும் அளவுக்கு இலகாக இருந்தாலும் மட்டையில் அறுவாள் போன்ற கருக்குகள் உண்டு. இதனால் மாடுகளும் யானைகளும் இதை மொட்டையாக மேய்ந்துவிட முடியாது. இது பனையின் நீடித்த வளர்ச்சிக்கும் நிலைத்திருத்தலுக்கும் இயற்கையாகவே கிடைத்த தகவமைப்பாகும்.

மரம், புல் இலக்கணப் பகுப்பு

அகக்காழனவே மரமென மொழிப

புறக்காழனவே புல்லென மொழிப (தொல்காப்பியம் பொருளதிகாரம் 641ஆவது நூற்பா) எனத் தொல்காப்பியம் கூறும் இலக்கணப்படி தண்டில் உள்வயிரம் கொண்டவை மரமென்னும் வகையிலும் வெளிவயிரம் கொண்டவை புல்லென்னும் வகையிலும் அடங்கும். இதனால் பனையை மரம் எனச் சொல்வது இலக்கணப் பிழையாகும். மிகப்பெரிய புல்வகைகளில் பனையும் ஒன்று எனக் கொள்ள வேண்டும்.

மர வகைகள்

வேம்பு, ஆல், அத்தி, அரசு, நாவல், புளி, மா, பலா, முருங்கை ஆகியன மர வகைகளில் சிலவாகும். மர வகைகளில் தண்டுப்பகுதிகள் கடினமாகவும் வெளிப்புறத்தில் சொரசொரப்பான பட்டையும் உள்ளன. அவற்றுக்குக் கிளைகள் உண்டு. இம்மரங்களின் கிளைகளை மூடு (அடிமரம் ) வரை வெட்டினால்கூட மீண்டும் தளிர்த்து வளரும் தன்மையுடையவை. ஆல், அத்தி, முருங்கை, வாதமடக்கி, உசிலை, பூவரசு போன்ற மரங்களின் பச்சைக் கொப்புகளை வெட்டி மண்ணில் ஊன்றி நீர் ஊற்றினாலே அவை வேர்விட்டு இலைகள் தளிர்த்து வளரும் தன்மையன.

புல் வகைகள்

நெல்,சோளம், நாணல், கரும்பு, பனை, தென்னை (தெங்கு), ஈந்து, கமுகு (பாக்கு) ஆகியன புல் வகைகளில் சில. புல்வகைகளில் தண்டின் வெளிப்புறப் பகுதி வயிரமுள்ளதாகவும், உட்பகுதி துளையுள்ளதாகவோ சோறுள்ளதாகவோ இருக்கும். இவற்றுக்குக் கிளைகள் கிடையா. புல் வகைகளில் நெல், சோளம் உள்ளிட்ட தானியப் பயிர்கள் பொதி தள்ளிக் கதிராக வந்து காய்த்து விளையும். பனை, தென்னை, ஈந்து, கமுகு ஆகியன பாளைதள்ளிக் காய்க்கும் இயல்புடையவை. கிளையில்லாப் புல்வகைகளில் அதன் கொண்டைப் (தலைப்) பகுதியில் உள்ள குருத்து சேதமடைந்தால் அவை பட்டுப்போகும். தண்டை வெட்டிவிட்டால் செத்துப்போகும் என்பதைச் சொல்லவும் வேண்டுவதில்லை.

ஓரறிவுயிர்கள்

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே (தொல்காப்பியம் 1526)

புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’ (தொல்-1527)

புல், மரம், தாழை, வாழை, செடி, கொடி  உள்ளிட்ட தாவரங்கள் ஓரறிவுடையவை என்றும், அவற்றுக்குத் தொடு உணர்வுண்டு என்றும் (செகதீசு சந்திர போசு கண்டறிவதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே)தொல்காப்பியம் கூறியுள்ளது. இதையறிந்தே நுண்மாண்நுழைபுலன் கொண்ட தமிழர் தொட்டாற்சுருங்கி எனப் பெயரிட்டுள்ளதையும், மோப்பக் குழையும் அனிச்சம் என உவமை காட்டியுள்ளதையும் எண்ணியெண்ணி நாம் இறுமாப்படையலாம்.

ஏழ்பனைநாடு

தமிழ்நாட்டுக்குப் பனைநாடு என்னும் பெயர் சூட்டுமளவுக்கு ஒரு காலத்தில் பனைகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. கடல்கொண்ட பழந்தமிழ்நாடான குமரிக்கண்டத்தில் ஏழ்பனைநாடு இருந்ததாகச் சங்க இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பனை என்னும் பெயரை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்ட ஊர்கள் நிறைய உள்ளன. குறும்பனை, கூட்டப்பனை, பனைவிளை, பனைக்குடி, பனங்குடி, பனைக்குளம், பனையூர், பனைவடலிச்சத்திரம், வடலிவிளை, திருப்பனந்தாள் ஆகியன அவற்றுள் சில. கேரளத்திலும் கூடப் பனையை ஒட்டுப் பெயராகக் கொண்ட ஊர்கள் பல உள்ளன.

ஆண்பெண் பாலின வேற்றுமை

உலகில் உள்ள நிலைத்திணைகளிலேயே ஆண் பெண் பாலின வேற்றுமை வெளிப்படையாகத் தெரியும்படி உள்ளது பனைகளில் தான். பறவைகளில் குஞ்சுப் பருவத்திலும், விலங்குகளில் பிறந்த உடனேயும் பாலின வேற்றுமை தெரியும். தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண் பிள்ளைகளைத் தாழ்வாகவும் சுமையாகவும் கருதும் போக்கு உள்ளதால் பிறந்த உடனேயே பச்சிளம் பெண்குழந்தைகளைப் பெற்றோரே கொல்லும் கொடிய வழக்கம் இருந்தது. ஊடுகதிர் முறையில் பாலினத்தைக் கண்டறியும் முறை வந்தபின் கருவிலேயே அழிக்கும் வழக்கமும் தலைதூக்கியது. மனித குலத்தை வேரறுக்கும் இத் தீய வழக்கங்களை ஒழித்துப் பெண்குழந்தைகளைக் காக்கக் கருவில் இருக்கும் பிள்ளையின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிப்பது குற்றம் என இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதேபோல் உழவில் எருதுகளுக்கு மாற்றாக உழுவை (Tractor) பயன்பாட்டுக்கு வந்தபின் பசுவின் காளையங்கன்றுகளை இறைச்சிக்கு வெட்டும் கொடுமை நேர்ந்து வருகிறது. இதையும் தடுக்க ஒரு சட்டமியற்ற வேண்டும்.

பனை முதன்முதலில் பாளை தள்ளும்போதுதான் அது ஆணா பெண்ணா எனத் தெரியவரும். விரல்போல அலகுகள் வந்திருந்தால் அது ஆண்பனையாகும். பாளைகளில் குரும்பை இருந்தால் அது பெண்பனை. பனையில் ஆண்டுக்கொரு முறை பாளை வரும். முதன்முறை பாளை வருவதற்குக் குறைந்தது 20 ஆண்டுகள் வரை ஆகும். அப்போதுதான் பனையின் பாலினத்தைக் கண்டறிய முடியும். அப்போது நுங்கு பனங்காய் காய்க்கும் பெண் பனைக்கு நன்மதிப்புக் கிடைக்கிறது. அலகுவிரல் காய்த்துப் போகும் ஆண்பனைக்கு அவ்வளவாக மதிப்பில்லை. இதனால் காய்க்காத ஆண்பனைகளை வெட்டி அழிக்கும்போக்கு 1980களிலேயே தொடங்கிவிட்டது. இன்று பாலினம் அறியா வடலிகளும் ஆண்பனைகளும் பெண்பனைகளும் ஈவிரக்கமின்றி வெட்டியழிக்கப்படுகின்றன.

பனைகளில் அயல்மகரந்தச் சேர்க்கை

தென்னம்பாளையில் ஒரே பாளையிலேயே ஆண்பூவும் பெண்பூவும் இருக்கும் ஆண்பூவின் மகரந்தம் பெண்பூவாகிய குரும்பையில் சேரும்போது அது கருப்பிடித்துக் காய்க்கிறது. பனைகளில் பாலின வேற்றுமை உள்ளதால் ஆண்பனையின் பாளையில் இருக்கும் மகரந்தம், பெண்பனையின் குரும்பைகளில் சென்று சேரும்போதுதான் கருப் பிடித்துக் காய்க்கிறது. இந்த மகரந்தச் சேர்க்கை இல்லாவிட்டால் பெண்பனையின் குரும்பைகள் பிஞ்சிலேயே உதிர்ந்துவிடும். அல்லது கொட்டையில்லா ஊமங்காழிகளாகிவிடும். இந்த அயல்மகரந்தச் சேர்க்கைக்குப் பெரிதும் துணை செய்வன தேனீ, வண்ணத்துப்பூச்சி, வண்டு, தும்பி, கடந்தை, குளவி, அணில், பறவைகள் ஆகியனவாகும். இயற்கையிலும் விசையாகக் காற்று வீசும்போது ஆண்பனையின் மகரந்தத் தூள் காற்றில் பரவிப் பெண்பனையின் பாளையை அடையும்போது அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. வேளாண்மையில் பூச்சிக்கொல்லிப் பயன்பாடு வந்தபிறகு தேனீ உட்பட அயல்மகரந்தச் சேர்க்கைக்குத் துணைபோன பெரும்பாலான உயிரினங்கள் கொல்லப்பட்டன. இவை பனை மட்டுமல்லாமல் பிற பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் துணை செய்வன என்பதால் இவற்றின் அழிவால் பயிர்விளைச்சல் குறைந்து உணவுப்பஞ்சம் ஏற்பட்டுச் சங்கிலித் தொடராக உலக உயிர்களின் அழிவுக்கு வழிவகுத்துவிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். உலகம் அனைத்து உயிர்களுக்குமானது என உணர்ந்து பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். ஆண்பனைகளால் தான் பெண்பனைகள் காய்க்கின்றன என்பதையும், மனிதரில் ஆணும்பெண்ணும் எப்படிச் சமமோ அப்படியே பனைகளிலும் சமம் என்பதையும் உணர வேண்டும்.

பனையின் பயன்கள்

அடிவேர் முதல் நுனி ஓலை வரை அத்தனையையும் மனிதர்களுக்கு ஈந்து தன்னலமற்ற கொடைக்கு வாழும் எடுத்துக்காட்டாகத் திகழ்வது பனைகளே. அதனால்தான் கற்பகத்தரு என அழைக்கப்படுகிறது. இவை மனிதர்களுக்கு மட்டுமல்ல மண்ணில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் பல்வகையிலும் உணவும் இருப்பிடமும் அளித்து உதவுகின்றன. தேவருலகத்தில் இந்திரன்  கோட்டைக்குப் பனங்காடுகளே அரணாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

பல்லுயிர்ப் பெருக்கம்

அதிக வெயிலைத் தாங்காத சிறு செடி கொடிகள் பனைகள் அடர்ந்த பகுதிகளில் அவற்றின் நிழலில் செழித்து வளர்கின்றன. பிரண்டை, முசுமுசுக்கை, கோவை, நன்னாரி உள்ளிட்ட கொடி வகைகள் பனைகளில் படர்ந்து செழித்து வளர்கின்றன. பனை ஓலைகள் எப்போதும் பசுமையாகவும் குளுமையாகவும் இருப்பதால் பறவைகளும், அணில்களும் அவற்றில் கூடுகட்டி வாழ்வதுடன் இளைப்பாறும் இடமாகப் பயன்படுத்துகின்றன. இந்திய நாட்டுப் பறவையாக ஏற்கப்பட்டுள்ள மயில்கள் இரவில் பனை உச்சியில் மட்டைகளில் அமர்ந்துதான் உறங்குகின்றன. பனம்பூக்களில் தேனிருப்பதால் ஈயினங்கள், வண்டினங்கள் எப்போதும் பாளைகளைச் சுற்றி ஆர்த்து ஆய்ந்துகொண்டிருக்கும். காட்டில் தண்ணீரில்லாக் கடுங்கோடையிலும் பனைகளில் சுரக்கும் பதனீரை அருந்தப் பறவைகளும், ஓணான், பல்லி உள்ளிட்ட ஊரும் இனங்களும் பனைகளின் உச்சிக்குச் செல்வதுண்டு. அப்படி வரும் பறவைகளும் சிறு உயிரினங்களும் இடும் எச்சங்களில் உள்ள விதைகளும், பனைநிழலில் இளைப்பாறும் விலங்குகளின் சாணத்தில் உள்ள விதைகளும் மழைக்காலத்தில் முளைத்துச் செழித்து வளர்கின்றன. இதனால் பனைகள் அடர்ந்துள்ள வேலிக்கரைகளில் மூலிகைச் செடிகளும் பல்வேறு மரங்களும் வளர்கின்றன. இந்த வேலிகள் பூச்சிகள், வண்டுகள், ஊர்வன, பறப்பன ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்குவதால் பனைகள் பல்லுயிர்ப் பெருக்கத்தின் முதன்மைக் காரணியாய் உள்ளன.

கட்டுமானப் பயன்கள்

வீடு கட்டத் தேவையான தூண், உத்தரம், சட்டம், மல், வரிச்சு, நிலை, கதவு, சாளரம், கட்டில் சட்டம் ஆகியவற்றைச் செய்வதற்கு வயிரம் பாய்ந்த பனையின் தண்டு பயன்படுகிறது. தண்ணீர் படாமல், கறையான் அரிக்காமல் பனங்கம்புகளைப் பேணினால் நூறாண்டுகளுக்கு மேல் உழைக்கும். பனை மட்டைகள் வரிச்சாகவும், படல் கதவாகவும், தடுப்பு வேலியாகவும் பயன்படுகின்றன. மட்டையில் உள்ள கருக்குநார் கயிறு திரிக்கவும், அகணிநார் கட்டில் நாற்காலி ஆகியவற்றைக் கட்டுவதற்கும் பயன்படுகின்றன. பற்றல்களை இடித்துப் பிரித்தெடுக்கும் தும்பு வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுவதுடன், வேளாண்மையில் மண்ணின் ஈரத்தைத் தக்க வைக்கும் ஊடுபொருளாகத் தும்பின் கழிவு பயன்படுகிறது.

ஓலையின் பயன்கள்

ஓலையைப் பட்டையாகப் பிடித்தால் தண்ணீர் குடிக்கவும், கஞ்சி குடிக்கவும், சோறு தின்னவும் ஏனமாகப் பயன்படும். ஒரு ஓலையைத் தடுக்காக முனைந்தால் வெயிலிலும் மழையிலும் இருந்து நம்மைக் காக்கும் குடையாகப் பயன்படும். குருத்தோலையில் கிண்ணிப்பெட்டி, குட்டான் பெட்டி, ஈர்க்காம்பெட்டி, பிழாப்பெட்டி, கடகப்பெட்டி எனப் பல்வேறு பெட்டிகளை முனையலாம். நீரிறைக்கும் வட்டி செய்யலாம். கயிறுகட்டிக் கிணற்றில் நீரிறைக்கும் தோண்டிப் பட்டைகள் செய்யலாம். ஓலையுடன் சேர்ந்த ஈர்க்கில் சுளகு செய்யலாம். கிலுக்கு, பொம்மை உள்ளிட்ட கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் செய்யலாம். பனைநாரைக் கொண்டு நார்ப்பெட்டி முனையலாம். முற்றிய பனை ஓலைகள் வீட்டுக்குக் கூரைவேயப் பயன்படுகின்றன. இந்த ஓலைக் கூரையைக் கொண்ட வீடுகள் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய வீடுகளில் காற்றாடி, வெப்பநிலை சீராக்கும் கருவிகள் தேவையிராது. நாகரிகம் எனக் கருதி வன்காறைக் (கான்கிரீட் ) கூரைகளை அமைத்ததால் கோடையில் கடும் வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. இதனால் காற்றாடி , வெப்பநிலை சீராக்கும் கருவி என மின்சாரத்தால் இயங்கும் கருவிகளைப் பொருத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. முற்றிய ஓலை காய்ந்து போனாலும் அவற்றை வேளாண்மையில் மூடாக்காகவும், சமையலுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தலாம்.

உணவுப் பயன்பாடு

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான உணவுப் பண்டங்களைத் தரும் தாவரம் எதுவென்று பார்த்தால் அது பனைதான் என்று உடனே சொல்லிவிடலாம். பனையில் கிடைக்கும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறோம்.

கள் / பதனீர்

பதனீருக்காக இளம்பாளைகளை அறுத்துச் சீவிப் பதப்படுத்தும்போது தேவையற்ற பாளைகளைக் கழிப்பர். அதில் உள்ள பாளைக் குருத்துத் தின்னச் சுவையாக இருக்கும். பாளைகளை இடுக்கி நைத்துச் சீவினால் அதில் இருந்து கள் வடியும். கலயம் கட்டிக் கள்ளைச் சேர்க்கலாம். கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பனங்கள் உடலுக்கு ஊக்கமும் குளிர்ச்சியும் தரும் உணவு. கலயத்தில் சுண்ணாம்புப் பொடியைத் தடவினால் பாளையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடியும் கள் சுண்ணாம்புடன் வினைபுரிந்து இனிமையான பதனீராகும். பதனீரை அப்படியே அருந்தலாம்.

கருப்பட்டி

பதனீரைக் காய்த்துக் கருப்பட்டி செய்யலாம். தின்பண்டங்களுக்கும் நாட்டு மருந்துகளுக்கும் இனிப்பூட்டுவதில் மண்டைவெல்லம், சர்க்கரை, சீனி எல்லாம் கருப்பட்டிக்குப் பிறகுதான் வரும். ஈரப்பதம் அண்டாமல் காக்க முடிந்தால் கருப்பட்டியைப் பல ஆண்டுகளுக்கு இருப்பு வைத்துப் பயன்படுத்தலாம். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பதனீர் இறக்கிக் கருப்பட்டி காய்ப்பதால் ஓராண்டுக்கு மேல் கருப்பட்டியை வைத்துப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. 1980களில் கரும்புச் சீனி விலையைவிடக் குறைவாக இருந்த கருப்பட்டியின் விலை இன்று சீனியைவிட 8 மடங்குக்கும் அதிகமாக உள்ளது. இதனால் கருப்பட்டிக்கும், அதைக் காய்ப்பதற்கான பனையேறுந் தொழிலுக்கும் உள்ள தேவையை நாம் உணரலாம்.

கால்நடைத் தீவனம்

ஆண்பனைப் பாளையின் பூவான அலகுவிரல்களைச் சிறுசிறு சீவல்களாகச் சீவி ஆடுமாடுகளுக்குத் தீனியாகப் போடலாம். பெண்பனையின் பாளையில் இருந்து உதிரும் குரும்பைகளை மாடுகள் தேடித்தேடிச் சென்று தின்னும். அவ்வளவு ஊட்டமிக்கது.

நுங்கு

பெண்பனைப் பாளையில் கருப்பிடித்துக் காய்க்கும் நுங்குகள் ஒருகண், இருகண், முக்கண் என இருக்கும். ஒரு காயைப் பார்த்தே அதில் எத்தனை கண் உள்ளது எனக் கூறிவிடலாம். அரிதாக ஒருசில காய்களில் 4 கண் இருப்பதுண்டு. இளநுங்கு கோடைக்கேற்ற குளிர்ச்சியான ஊட்டமுள்ள உணவாகும். நுங்கைத் தின்ற பின் கூந்தையைச் சீவி ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் போடலாம்.

பனங்காய் / பழம்

பனங்காய்கள் முற்றி வெளிப்புறம் கருப்பாகவும் உட்புறம் சிவப்பாகவும் மாறும் பருவத்தில் அவற்றை வெட்டலாம். வெட்டாவிட்டாலும் பழுத்த பின் ஒவ்வொன்றாகக் கீழே விழும். கனியாத பழங்களைத் தோலுடன் சுட்டுப் பின் தோலை உரித்துவிட்டுச் சாளை சாளையாய் அறுத்துத் தின்னலாம். சுடாமல் பச்சையாய் இருப்பதைச் ஆடுமாடுகளுக்குத் தீனியாகப் போடலாம். முற்றிய பனங்காயையும், கனிந்த பனம்பழத்தையும் பச்சையாய்த் தின்றால் காறும். அதனால் அவற்றைத் தோலுடன் தீயிலிட்டுச் சுட்டுப் பின் தோலையுரித்து அரிவாளால் சீவியும் கொத்தியும் தின்ன வேண்டும். முற்றிய பனங்காயைச் சாளை சாளையாக அறுத்துப் பானையில் இட்டுத் தண்ணீர் ஊற்றிக் கருப்பட்டி போட்டு அவித்தும் தின்பர். இது மிகவும் சுவையான உணவு. இலங்கையில் கனிந்த பழங்களில் உள்ள சாற்றைப் பிழிந்து பனாட்டு என்னும் இனிப்புப் பண்டத்தைச் செய்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் அதுபற்றி அறியவில்லை.  தீயிலிட்டுப் பனம்பழத்தைச் சுட்டாலும் அதிலுள்ள பனங்கொட்டை முளைக்கும் தன்மையுடையதாகும். பழுத்துக் கீழே விழும் பனம்பழங்களை மாடுகளும் யானைகளும் சுவைத்துத் தின்னும். அவை கடித்துக் கொண்டு சென்று போடுமிடங்களில் எல்லாம் பனங்கொட்டைகள் பரவி முளைக்கும்.

பனங்கிழங்கு

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மூன்று மாதங்களுக்குமேல் மண்ணில் ஈரப்பதம் இருக்கும். பனைகளில் இருந்து தானாக விழுந்தவை, பழுத்ததும் குலைகளாக வெட்டி எடுத்தவை என எல்லாப் பனங்கொட்டைகளையும் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் தரையில் உயர்மட்டத்துக்கு மண் குவித்து ஈரடுக்காக அடுக்கி மேல்மண்போட்டு மூடிவிடுவர். இதற்குக் கிழங்குக் குழி என்று பெயர். அக்காலத்தில் அதில் உள்ள பனங்கொட்டைகள் மட்டுமல்லாமல், பனைமூட்டில் தானாக விழுந்தும், கால்நடைகளால் தூக்கிச் செல்லப்பட்டும் ஆங்காங்கே மண்ணின் மேற்பரப்பில் கிடக்கும் பனங்கொட்டைகளும் கூட முளைவிட்டு மண்ணில் நேர்க்கீழாக இறக்கும். இந்த முளை மூன்று மாதங்களில் விளைந்து பனங்கிழங்காகும். மண்ணை ஆழமாகத் தோண்டி வெட்டுப்படாமல் கிழங்கைப் பிடுங்கி எடுப்பர். முழுவதும் தோல் மூடியிருந்தால் இளங்கிழங்கு. ஒருசில இடங்களில் தோல் வெடித்திருந்தால் நன்கு விளைந்த கிழங்கு. கிழங்கைத் தோலுடன் சுட்டுப் பின் தோலுரித்துத் தும்புநீக்கித் தின்ன வேண்டும். அவிக்க வேண்டுமென்றால் தோலுரித்து உப்பு மஞ்சள் சேர்த்து அவிக்கலாம். சுட்டாலும் அவித்தாலும் கிழங்கில் உள்ள காறல் போய்ச் சுவையாகும். சுட்ட கிழங்கும், அவித்த கிழங்கும் மாவாகத்தான் இருக்குமென்றாலும் இரண்டும் தனிச்சுவையுடையன. அவித்த கிழங்கைச் சிறுசிறு துண்டுகளாக ஒடித்து வைத்துக் காயவைத்துத் தின்பர். காயக் காய அதன் சுவை அதிகரிக்கும். மிக அதிகமாகக் காய்ந்துவிட்டால் கடிக்க முடியாத அளவு கடினமாகிவிடும். அவித்த கிழங்கை ஒடித்து அந்தத் துண்டுகளுடன் தேங்காய், மிளகாய், வெள்ளைப்பூண்டு, உப்புச் சேர்த்து இடித்து உருண்டைகளாகப் பிடித்துத் தின்பர். அது ஒரு தனிச்சுவையாக இருக்கும். ஐந்தாறு கிழங்குகள் தின்றாலே ஒருநேரத்துப் பசியை ஆற்றும்.

விதை, வித்து, பயறு, கடலை, முத்து, கொட்டை (Seed)

ஆங்கிலத்தில் விதை (Seed)என ஒரு சொல்லில் கூறப்படுவது தமிழில் மென்மை வன்மையைப் பொறுத்துப் பல்வேறு பெயர்களில் கூறப்படுகிறது. மிளகாய், கத்தரி, தக்காளி ஆகியவற்றில் உள்ளது விதை எனப்படுகிறது. கீரை, சுரை, பாகல், பீர்க்கு, பூசணி, நெல், சோளம் ஆகியவற்றில் உள்ளது வித்து எனப்படுகிறது. உளுந்து, சிறுபயறு, பெரும்பயறு, பூனைக்கண்பயறு, மொச்சை, அவரை, துவரை ஆகியன பயறு வகைகளாகும். கொண்டைக் கடலை, நிலக்கடலை, பட்டாணி ஆகியன கடலை வகையாகும். வேம்பு, புளி, குன்றி, ஆமணக்கு ஆகியவற்றில் உள்ளது முத்து எனப்படுகிறது. புளி, கழற்சி, தெள், புன்னை, பருத்தி, கொல்லமா (முந்திரி), மா, உருத்திராக்கம், பலா ஆகியவற்றில் உள்ளது கொட்டை எனப்படும். இவற்றின் மேல் தோட்டை உடைப்பது கொஞ்சம் கடினம். ஓரளவு முயன்றால் கழற்சி, புன்னை, பருத்தி, கொல்லமா, மா ஆகியவற்றின் கொட்டைகளின் மேல் தோட்டை உடைத்துப் பருப்பு எடுத்துவிடலாம். புளியங்கொட்டையை வறுத்து உடைத்தால் மேல்தோடு கழன்றுவிடும்.

பனங்கொட்டை

உலகில் உள்ள வித்துக்களிலேயே மிகக் கடினமானது பனங்கொட்டை. நுங்குப் பருவத்தில் இருந்து கடுக்காயாகி விட்டாலே அதைக் கூர்மையான அறுவாளால்கூட வெட்டுவது கடினம். பனங்காயானது முதல் முளைத்துத் தவணாகும் வரை அந்தக் கொட்டையை வெட்டினால் அறுவாள் பல் தெறித்து உடைந்து வளைந்து போகக் கூடும். இத்தகைய கடினமான பனங்கொட்டை ஈரத்தில் குளிர்ந்து ஊறிப்போனதும் அதன் உள்ளிருந்து முளைவிட்டு மண்ணில் இறங்கிக் கிழங்கு விளையும். இந்தக் கிழங்கைப் பிடுங்கும்போது அதனுடன் கொட்டையையும் சேர்த்துத் தான் வெளியே எடுக்க வேண்டும்.

தவண்

கிழங்காக விளைந்த பின் இப்போது தவண்கொட்டை எனப்படுகிறது. இந்தக் கொட்டையை அறுவாளால் மேலிருந்து கீழாக இரு கூறுகளாக வெட்டிப் பிளந்தால் உள்ளிருப்பது தவண். இளங்கிழங்காக இருந்தால் தவண் கட்டியாக இருக்கும். தவணைச் சுற்றிலும் மெழுகுப் பசைபோன்று இருக்கும். கிழங்கு முற்றிவிட்டால் தவண் இளக்கமாகவும் கஞ்சி அதிகமாகவும் இருக்கும். ஒருசில கொட்டைகளின் முளைகள் மண்ணுக்குள் ஆழமாக இறங்காமல் சுருண்டிருக்கும். இவை மொட்டைக் கொட்டைகள் எனப்படுகின்றன. இவற்றில் கட்டித் தவண் இருக்கும் என்பது உறுதி. இப்படி ஏழெட்டுக் கொட்டைகளில் உள்ள தவணைத் தின்றாலே ஒரு நேரத்துப் பசியை ஆற்றும். இந்தத் தவண் இனிப்பாக இருக்கும் என்பது இன்னும் சுவையான செய்தி. தவணை எடுத்துத் தின்றபின் காய்ந்த கொட்டையின் தோடு மிகச் சிறந்த விறகாகப் பயன்படுகிறது. அதிக வெப்பமும் நின்று எரியும் ஆற்றலும் கொண்டது.

பனங்குருத்து

பனையை வெட்டாமலேயே அதிலுள்ள இளம்பாளைகளில் குருத்தெடுத்துத் தின்னலாம். இதில் சிறிதளவே குருத்து இருக்கும். பாளை வராத இளம் வடலிகளைக் கொண்டைப் பகுதியை வெட்டிக் குருத்தெடுக்கலாம். இதில் நிறையக் குருத்துக் கிடைக்கும். இதில் ஓலைக் குருத்து மட்டைக் குருத்து ஆகியன இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக இருக்கும். வடலியை வெட்டிக் குருத்தெடுப்பது இளங்கன்றை வெட்டி இறைச்சி எடுப்பதற்குச் சமம். ஐம்பதடி, அறுபதடி உயரத்துக்கு வளர்ந்த. தண்டில் வயிரம் பாய்ந்த பனைகளைக் கட்டுமானத் தேவைக்காக மூட்டில் இருந்து வெட்டிச் சாய்ப்பர். இவற்றின் கொண்டைகளில் அதிக அளவு குருத்துக் கிடைக்கும். நல்ல பனைகளைக் கொன்று குருத்தெடுப்பதைவிடக் காற்றில் சாய்ந்த, தண்டில் சூன்விழுந்து முறிந்த பனைகளில் மட்டுமே குருத்தெடுப்பது ஏற்புடையது.

பனஞ்சோறு

முன்புகூறியதுபோல் புல்வகையான பனையில் தண்டின் உட்புறத்தில் சோறுபோன்று இளக்கமாக இருக்கும். இதுதான் வேர்கள் உறியும் நீரைப் பனையின் உச்சிக்குக் கடத்திச் செல்ல உதவுகிறது. கட்டுமானத் தேவைக்காக வெட்டப்படும் பனைகளை முதலில் கோடரியால் குறுக்காகத் துண்டுகளாக வெட்டிப் பின் நீளவாக்கில் ஆப்பறைந்து சம்மட்டியால் அடித்துப் பிளந்துவிடுவர். பிளந்தபின் உள்ளிருப்பது பனஞ்சோறு. பெயர்தான் சோறு, இதிலுள்ள சாறு இனிக்கும். சவைத்துச் சாறெடுத்தபின் எஞ்சுவது சக்கையே. ஒருசில பனைகளில் பனஞ்சோறு இனிக்கும். ஒருசிலவற்றில் உப்புக் கைக்கும். மனிதர்கள் பனஞ்சோற்றை வெட்டி எடுத்துச் சவைத்துச் சாறெடுத்தபின் சக்கையைத் துப்பிவிடுவர். மாடுகள் பனஞ்சோற்றை விரும்பித் தின்னும்.

இலக்கணம் இலக்கியம்

பனை மட்டையைக் கையெனக்கொண்டால் விரல்கள் போல ஓலை இருக்கும். ஓலையை நடுவில் இருந்து இரண்டாகப் பிளந்தால் ஒவ்வொன்றும் ஒரு சிறகு எனப்படும். பறவையின் சிறகுபோல இரண்டாக உள்ளதால் இப்படிக் காரணப் பெயரானது. மட்டையின் நுனி முதல் ஓலையின் நுனிவரை நரம்புகள் போல் ஈர்க்குகள் இருக்கும். ஒவ்வொரு ஈர்க்கிலும் இலக்குகள் இருக்கும். ஈரிலக்குகள் ஒட்டியிருப்பதால் அதற்கு ஈர்க்கு எனக் காரணப் பெயர் வைத்துள்ளனர். ஓர் ஈர்க்கும் ஈரிலக்கும் சேர்ந்ததற்குப் பெயர் இணுக்கு. வைக்கோல், புல், சோளத்தட்டு, நாற்றுக் கட்டு, நெற்கதிர்  ஆகியவற்றைக் கட்ட ஓலையை ஒவ்வொரு இணுக்காகக் கிழித்துக் கொடியாக்கிக் கட்டுவர். நாற்று முடியை ஓலை இலக்கைக் கொண்டு கட்டுவர். தென்மாவட்டங்களில் கோவில் கொடைவிழாவில் ஓலைக்கொடியில்தான் தோரணம் கட்டப்படும். பொதுவாக நன்கு விரிந்த முற்றிய ஓலைகள் கூரைவேயவும், முற்றிய ஓலையின் இலக்குகள் குட்டான்பெட்டி முனையவும் பயன்படும். விரியாத குருத்தோலைகள் பிற பெட்டிகள் முனையவும், ஏடுகள் செய்யவும் பயன்படும். குருத்தோலைக்கும் முற்றிய ஓலைக்கும் இடைப்பட்ட விரியோலையில் பட்டை பிடித்து உணவு உண்ணும் கலமாகப் பயன்படுத்தலாம். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோவில் கொடைவிழாக்களில் இறைவனுக்குச் சோறும் இறைச்சிக் கறியும் பனையோலைப் பட்டையில்தான் படைக்கின்றனர். முற்காலத்தில் கிடா வெட்டி இறைச்சியை ஓலைப் பட்டையில் பொதிந்தே எடுத்துச் சென்றனர்.

பெரிய பனையின் விரியாத குருத்தோலைகளை மட்டையுடன் வெட்டி எடுத்துக் காய வைப்பர். ஓலையின் ஒவ்வோர் ஈர்க்கிலும் இலக்குகள் ஒட்டியிருக்கும். இலக்குகளின் அடிப்பகுதியும் நுனிப்பகுதியும் சிறிதாக இருக்கும். இலக்கின் நடுப்பகுதி அகலமாக இருப்பதால் ஈர்க்குகளை நீக்கிவிட்டு அவற்றை எழுதும் ஏடுகளாகப் பயன்படுத்தினர். இந்த இலக்குகளின் நடுவில் ஒரு துளையிட்டு நூல்கயிற்றால் கோத்துக் கட்டினர். இலக்கின் இருபுறங்களிலும் இடம் வலம் என இரு பத்திகளாகக் கூர்நுனியுடைய எழுத்தாணியால் எழுதினர். இது நூல், ஏடு, சுவடி, ஓலை எனப்படுகிறது. இலக்கில் எழுதப்பட்டதே இலக்கணம், இலக்கியம். மனிதகுல வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் பட்டறிவாலும், உய்த்துணர்வாலும், எண்ணத்தாலும் கண்டறிந்த அறிவுசார் கருவூலங்கள் இந்த ஓலைகளில் எழுதப்பட்டே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. தமிழில் கிடைத்த அத்தனை இலக்கிய, இலக்கண நூல்களும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவையே. பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்ட சுவடிகள் இற்று முறியும் நிலை வரும்போது அவற்றில் உள்ளதைப் புதுச் சுவடியில் பெயர்த்தெழுதுவதும் வழக்கம். இன்றும் உலகில் உள்ள ஓலைச் சுவடிகளில் பெரும்பாலானவை தமிழில் உள்ளதே தமிழின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக் கூறும் சான்றாகும். பழங்காலத்தில் மக்களிடையே செய்தித் தொடர்பும், அரசுக்கும் மக்களுக்குமான செய்தித் தொடர்பும், அரசுகளிடையான செய்தித் தொடர்பும் ஓலையில் எழுதப்பட்ட மடல்களாகவே ஆட்களால் கொண்டுசெல்லப்பட்டன.

நீர்ப்பாசனத்தில் பனையின் பயன்கள்

பனையின் தண்டு வாய்க்கால் பாலமாகவும், குறுக்கும் நெடுக்கும் செல்லுகின்ற இரண்டு வாய்க்கால்களில் மேலே உள்ளதற்கு நீர்க்கடத்துப் பாலமாகவும் பயன்படுகிறது. கிணறுகளில் கமலை கட்டி நீர் இறைப்பதற்கான தூண்களாகவும் அச்சுப் பொருத்தும் தண்டாகவும், ஏற்றம் இறைக்கவும், துலாக்கிணறுகளில் நீரிறைக்க உதவும் தண்டாகவும் பனங்கம்புகள் பயன்படுகின்றன. பழங்கால அணைகளில் நீர் திறந்துவிடும் மணல்வாரிகளில் பனங்கம்புகளை வரிசையாக அடுக்கியே நீரைத் தேக்கிக் கால்வாய்களுக்குத் திருப்பினர். கால்வாய் வழியில் உள்ள குளங்கள் அனைத்தும் நிறைந்தபின் இந்தக் கம்புகளை எடுத்துவிட்டால் அணையில் தேங்கியுள்ள நீருடன் அடியில் சேர்ந்துள்ள மணலும் வாரிச் செல்லப்படும். அதனாலேயே அதற்கு மணல்வாரி எனப் பெயர். குளங்களில் நீர் நிறைந்தபின் மறுகால் வழியே வெளியேறும். மழைப்பொழிவும் வருகாலில் நீர்வரத்தும் நின்றுவிட்டால் மறுகாலில் பாயும் தண்ணீரைப் பனத்தண்டுகளைக் கொண்டே செறுத்து அடைத்தனர். அணை, ஏரி, கால்வாய், குளம் ஆகியன உடைந்தபோது உடனடியாக உடைப்பை அடைக்கப் பனந்தண்டுகளையே பயன்படுத்தினர். ஏரி, கால்வாய், குளம் ஆகியவற்றின் கரைகளில் மண்ணரிப்பு ஏற்படாமலும், உடையாமலும் காக்க வரிசையாகவும் அடுக்கடுக்காகவும் பனைகளை வளர்த்தனர். மேல்மண்ணை வெள்ளம் அரித்தாலும் அடிமண்ணைப் பனைகளின் வேர்கள் இறுக்கிப் பிடித்திருப்பதால் கரைகள் உடையாமல் காக்கப்பட்டன.

வேலியாகவும் எல்லையாகவும் பனைகள்

நன்செய், புன்செய் நிலங்களில் இருவரின் நிலங்களுக்கு நடுவே எல்லைக்கு அடையாளமாகப் பனைகளை வளர்த்தனர் நம் முன்னோர். இதனால் வலிமையானவன் வரப்பை வெட்டி எல்லையை நகர்த்தும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில் நிலத்தை அளந்து எல்லைக் கல் நடுமுன் எல்லைகளில் பனைகள், மரங்கள், கள்ளி, கற்றாழை, காரை, சூரை ஆகியவற்றையே வளர்த்தனர். இவை நிலத்துக்கு எல்லையாகவும் வேலியாகவும் காற்றின் விசையைத் தடுக்கும் அரணாகவும், மண்ணரிப்புத் தடுப்பானாகவும், மழைநீரை வடியாமல் தடுத்து மண்ணுக்குள் செலுத்தும் செறிவூட்டிகளாகவும் விளங்கின. வாழ்முள் வேலி எனப்படும் இந்த உயிர்வேலி பல்லுயிர்ப் பெருக்கத்துக்குக் களமாக இருந்தது. நாளுக்கு நாள் வளர்ந்து அடர்த்தியாகும் இந்த உயிர்வேலியை அழித்துவிட்டு உலக உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதும், அதிகச் செலவு கொண்டதுமான முட்கம்பி வேலி, கல்வேலி, மின்வேலி ஆகியவற்றை அமைப்பது உயர்ந்த நாகரிகமா என்ன?

நீர்வளம் காக்கும் பனைகள்

பனைகள் உறுதியான நீளமான சல்லி வேர்களைக் கொண்டுள்ளன. இந்த வேர்கள் கிளைகளைக் கொண்டிருக்கா. ஒவ்வொரு வேரும் பனை மூட்டில் இருந்து மண்ணில் இறங்கிப் பாறைமட்டம் வரை செல்கிறது. வேரின் வெளிப்புறம் பூச்சியால் அரிக்க முடியாத வகையில் உறுதியாகவும், உட்புறம் நுண்துளைகள் கொண்டதாகவும் உள்ளது. மழைக்காலத்தில் மண் இளக்கமாகும்போது வேர் கீழ்நோக்கி வளர்ந்துகொண்டே போகும். மண்ணில் உள்ள நீர் வேர்த்தூவிகளால் உறியப்பட்டு இந்த நுண்துளைகள் வழியே பனைமூட்டுக்கு வந்து அங்கிருந்து தண்டின் உட்பகுதி வழியாக மேலே கடத்தப்படுகிறது. இறுக்கமான மண்ணும் ஈரத்தால் இளக்கமாகும்போது வேர் வளர்ந்தும் விரிந்தும் விடுகிறது. கோடைக்காலத்தில் மண்ணின் அடியாழத்தில் உள்ள ஈரத்தை எடுத்துக் கொண்டு தானும் உயிர்வாழ்ந்து, பதனீர், நுங்கு, பனம்பழம் உள்ளிட்ட உணவுகளைத் தந்து உலக உயிர்களை வாழ்விக்கிறது பனை. அதிகமாக மழை பெய்யும் காலத்தில் பனையின் வேர்களை ஒட்டியுள்ள இடைவெளி வழியே மழைநீர் அடியாழத்துக்குச் சென்று நிலத்தடி நீர்வளத்தைச் செறிவூட்டுகிறது.

பனைகள் களையல்ல காவலரண்

நன்செய், புன்செய் நிலங்களில் வரப்புகளில் ஒழுகா(வரிசையா)கவும், வயல்களின் நடுவில் ஆங்காங்கேயும் பனைகள் நிற்கின்றன. இவற்றின் நிழல் பயிர்வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், வேர்கள் பயிர்களுக்கான உரத்தை எடுத்துக் கொள்வதாகவும் பலர் தவறாக நினைக்கின்றனர். பனை புவியீர்ப்பு ஆற்றலுக்கு நேர் எதிராகச் செங்குத்தாக வளர்வதாலும் அதன் கொண்டைப் பகுதிதான் ஓரளவு நிழல் தரும் என்பதாலும் அதன் நிழல் ஓரிடத்தில் நிலையாக விழுவதில்லை. இதனால் அதன் நிழல் பயிர்வளர்ச்சிக்குத் தடையில்லை. இதேபோலப் பனையின் சல்லி வேர்கள் பெரிதாகப் பக்கவாட்டில் பரவுவதில்லை. நேராக மண்ணில் அடியாழத்துக்குச் செல்கின்றன. அவை கீழிருக்கும் நீரை உறிகின்றனவே தவிரப் பயிர்களுக்கு மேல்மட்டத்தில் பாய்க்கும் தண்ணீரை உறிவதில்லை. இதனால் பனைகள் பயிர்களுக்குக் களையில்லை.

சோளம், கம்பு, குதிரைவாலி ஆகிய புன்செய்த் தானியங்கள் விளைந்துள்ள காலத்தில் கிளி, புறா, மயில், குருவி உள்ளிட்ட பறவைகள் கதிர்களைக் கொத்தி அழித்துவிடாமல் காக்கக் கொல்லைகளின் நடுவே உயரமாக வளர்ந்துள்ள இரண்டு மூன்று பனைகளில் சட்டங்களை வைத்துக் கட்டிப் பரண்கள் அமைப்பர். அதில் ஏறுவதற்கு ஏணியையும் வைத்துவிடுவர். இந்தப் பரண்களில் நின்றுகொண்டு சிறார்கள் பறை, தகரப் பெட்டி ஆகியவற்றைத் தட்டி இசைத்துப் பாட்டுப்பாடிப் பறவைகளை விரட்டுவர். பரண்களில் இருந்து பார்க்கும்போது பயிர்களை விலங்குகள் மேய்கின்றனவா என்றும் பார்த்துக்கொள்ளலாம். இதனால் பனைகள் பயிர்களுக்குக் காவல் பரணாகத் திகழ்ந்துள்ளதை அறிகிறோம்.

பனையின் நன்றி மறந்த மனிதர்கள்

அன்றும் இன்றும் என்றும் வேர் முதல் நுனிவரை அனைத்துப் பொருட்களையும் தந்து உயிர்களைக் காத்து மனித நாகரிகத்தை வளப்படுத்துபவை பனைகள். நாகரிகம் என்னும் பெயரில் உணவு, உடை, பழக்கவழக்கங்களில் மேல்நாட்டுப் பாணியைப் பின்பற்றும் மக்கள், இயற்கை அன்னை கொடையாகத் தந்த பனையின் பயன்களைக் கருதாமல் அதைக் களையெனக் கருதும் நிலைக்கு வந்துவிட்டனர். இதனால் நாடு விடுதலையடைந்தபின் 75 ஆண்டுகளில் கோடிக்கணக்கான பனைகள் வெட்டியழிக்கப்பட்டு விட்டன. முன்பெல்லாம் தனியார் நிலங்களில் நின்றதைவிட அரசின் புறம்போக்கு நிலங்களில் உயரமாக வளர்ந்த பனைகள் நின்றன. அவற்றின் பயன்களை எடுத்துக்கொண்டு வெட்டாமல் விட்டதால் இப்படி உயரமாக இருந்தன. அவற்றை வெட்டினால் தண்டமிறுக்க நேரிடும் என அச்சமும் இருந்தது. கடந்த முப்பதாண்டுகளாக ஆற்றுமணற்கொள்ளை, மண்கொள்ளை என இயற்கை வளச் சுரண்டல் அதிகரித்தபின் புறம்போக்கு நிலங்களில் இருந்த பனைகள் மண்ணில் பிடிப்பின்றிச் சாய்ந்தும், நீரின்றிக் காய்ந்தும் பட்டுப்போயின.

சூழல்காக்கும் பனை

தமிழ்நாட்டில் ஆண்டின் 9 மாதங்கள் கடுங்கோடையும் 3 மாதங்கள் மழைப்பொழிவும் உள்ளது. கோடைக்காலத்தில் மேல்காற்றின் வேகத்தைத் தடுத்தும், புழுதிப்புயலின் தாக்கத்தைக் குறைத்தும், பசுமைமாறா ஓலைகளில் உள்ள குளிர்ச்சியால் மேகங்களை ஈர்த்து மழை பொழியத் துணை செய்தும் சுற்றுச்சூழலுக்கு அரணாகவும், செழிப்புக்கு அடிப்படையாகவும் பனைகள் உள்ளன. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலத்தில் மேல்காற்று விசையாக வீசினாலும் மேற்கு மலைத்தொடரில் இருந்து கிழக்கே செல்லச் செல்ல மழைப்பொழிவு குறைவதால் மண்ணில் ஈரமிருக்காது. இதனால் மேற்காற்றால் மரங்கள் சாய்வதும் முறிவதும் அரிது. அதேநேரத்தில் வடகிழக்குப் பருவக் காற்றுக் காலத்தில் மழையால் மண் நனைந்து குளிர்ந்து இளக்கமாக இருப்பதால் புயலின்போது மரங்கள் சாய்கின்றன. அந்தப் புயலின் வேகத்தைத் தடுத்துத் தானும் சாயாமல் பிற மரங்களையும் சாயவிடாமல் காக்கும் அரணாகத் திகழ்வது பனைகளாகும். தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைப் புயல் தாக்கிய ஒவ்வொரு முறையும் தென்னையும் பிற மரங்களும் சாய்ந்தபோது, பனைகள் நிமிர்ந்து நின்றதை நாம் கண்டோம்.

விறகு / எரிபொருள்

பனையில் உள்ள அனைத்துப் பொருட்களும் பல்வேறு பயன்பாடுகள் கொண்டவை. எதற்கும் பயன்படாத பொருட்கள் கூட விறகாகவும் உரமாகவும் பயன்படும். குறிப்பாகக் காய்ந்த ஓலை, மட்டை, குலைக்காய்ஞ்சி, சில்லாடை, தவண் வெட்டியபின் எஞ்சிய கொட்டை என அனைத்துமே நல்ல எரிபொருளாகும். இவை மண்ணில் விழுந்தால் மழையில் நனைந்து ஈரமாகியும், கறையான் அரித்தும் மட்கி மண்ணுக்கு உரமாகும் என்பதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதவை.

தமிழ்நிலம் காக்கும் பனைகள்

ஒரு காலத்தில் குமரிக்கண்டம் என்னும் பெயரில் பரந்து விரிந்திருந்த தமிழ்நிலம் இன்றைக்குத் தென்னெல்லை கன்னியாகுமரியாகவும், வடவெல்லை திருத்தணியாகவும் சுருங்கிவிட்டது. வடவெல்லைச் சுருக்கத்துக்கு அரசியல் காரணமிருந்தாலும் தென்னெல்லை, கிழக்கெல்லை சுருங்கியதற்குக் கடற்கோள்கள் காரணமாகும். புவிவெப்பம் அதிகரிப்பால் வட தென் துருவங்களின் பனிப்பாளங்கள் உருகிக் கடல்மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகளை மூழ்கடிக்கும் எனச் சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர். தனுசுக்கோடி புயலில் கடலில் மூழ்கியதையும், மன்னார் வளைகுடாப் பகுதியில் பல தீவுகள் அழிந்துபோனதையும் கருத்திற்கொண்டால் சூழலியலாளர்களின் எச்சரிக்கையும், சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட கடற்கோள்களும் உண்மைதான் என்கிற முடிவுக்கு நாம் வரலாம். இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் எஞ்சியுள்ள நிலத்தைக் கடல்விழுங்கிவிடாமல் காக்கும் அரண்களாகத் திகழ்பவை தேரி எனப்படும் உயரமான மணற்குன்றுகளும், அவற்றில் இயற்கையாக செழித்து வளர்ந்துள்ள பனங்காடுகளுமே. இந்தத் தேரிகளில் இயற்கைத் தாவரங்களான கருவேல், வெள்வேல், கள்ளி, கற்றாழை, காரை, சூரை, பனை ஆகியன பசுமைப் போர்வையாக இல்லாவிட்டால் வடகிழக்குப் பருவக் காற்றுக் காலத்தில் மழையாலும், தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் காற்றாலும் மண்ணரிப்புக்குள்ளாகிக் காணாமல் போகும். அதன்பின் புயல், நிலநடுக்கம், கடல் கொந்தளிப்புக் காலங்களில் நிலப்பகுதிக்குள் கடல்நீர் உட்புக வாய்ப்புள்ளது. இதனால் தேரி நிலங்களைக் காக்க அப்பகுதிகளை அரிதான புவியியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அப்பகுதிகளில் கனிமச் சுரங்கச் செயல்பாட்டுக்குத் தடை விதித்து இப்போதுள்ள பனைகளைக் காத்துப் புதிதாகக் கோடிக் கணக்கில் பனைகளை வளர்க்க வேண்டும். வேம்பு, புளி, கொல்லமா (முந்திரி), மா, சப்போட்டா, நாவல், ஆல், அத்தி, அரசு, புன்னை ஆகிய மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

நிலங்காக்கும் பனை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

2021ஆம் ஆண்டு நவம்பரில் மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புவி வெப்பநிலை உயர்வு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் கடலோரப் பகுதிகள் அழிவுக்கு இலக்காகி நிற்பதையும், அதைத் தடுத்து நிலத்தைக் காக்கத் தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் தீவுகளிலும் வல்லுநர்களும் உள்ளூர் மக்களும் பனைகளை வளர்த்து வருவதையும் மேற்கோள் காட்டினார். இதை மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இயற்கை அன்னையை நாம் காத்தால் அவள் நம்மைக் காப்பாள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மதிப்புமிக்க பல்நோக்குப் பணப்பயிர் பனை

தேக்கு வீடுகட்டவும் அறைகலன்களுக்கும் பலகை தரும். தேயிலையில் இருந்து தேநீரும், காப்பியில் இருந்து காப்பியும் கிடைக்கின்றன. கரும்பின் சாற்றில் இருந்து இனிப்பான வெல்லம் கிடைக்கிறது. பருத்தியில் இருந்து ஆடைகளுக்கான நூல் கிடைக்கிறது. சணலில் இருந்து சாக்கு, பைகள் செய்வதற்கான நார் கிடைக்கிறது. தென்னையில் இருந்து சுவையான குளிர்ச்சியான இளநீரும், மதிப்புமிக்க கயிறும் கிடைக்கிறது. மரவள்ளியில் இருந்து கிழங்கு கிடைக்கிறது. மா, வாழை, பலா ஆகியவற்றில் இருந்து பழங்கள் விளைகின்றன. கொடிமுந்திரிச் (திராட்சை) சாற்றில் இருந்து மது கிடைக்கிறது. மேற்கண்ட எல்லா வகைகளில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பயன்களையும் பனை ஒன்றே தருகிறது என்பதை அறிந்தால் அதன் மேன்மை, நன்மை, பெருமை, உயர்வு நமக்கு விளங்கும். அத்தகைய பனையை நம்மால் இயன்ற வகையில் எல்லாம் காத்துப் பனைத் தொழிலை வளர்த்து மேம்படுத்தினால் தமிழ்நாடு உலகப் பொருளாதாரத்தில் முதலிடம் பெறும் என்பதில் ஐயமில்லை. காப்பி, தேயிலை, சணல், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றின் வேளாண்மை, வணிக, பொருளாதார மேம்பாட்டுக்கு இந்திய அளவில் வாரியங்கள் உள்ளன. தென்னைக்குத் தென்னை வாரியம், கயிறு வாரியம் என இரு வாரியங்கள் உள்ளன. வேளாண்மை, வணிகம், பொருளாதாரச் சந்தைகளிலும், சுற்றுச்சூழல் காப்பதிலும் மேற்கண்ட பணப்பயிர்கள் அனைத்தையும் விட உயர்ந்ததான பனைக்கு இந்திய அளவில் வாரியம் இல்லை.

பனைகளின் அழிவுக்குக் காரணம்

. கள்ளுக்குத் தடை

தமிழ்நாட்டில் 1987ஆம் ஆண்டு முதல் இன்று வரை கள்ளிறக்க, விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பனைகளின் அழிவுக்கு முதன்மைக் காரணமாக இது அமைந்துள்ளது. கள்ளிறக்கினால் பனைத் தொழிலாளரின் வேலை எளிதாகிவிடும். கள்ளை இறக்கிப் பனை மூட்டிலேயே உடனே விற்றுவிடலாம். பதனீர் இறக்கினால் அதைச் சுமந்து சென்று உலையிலிட்டுக் காய்த்துக் கருப்பட்டியாக்க வேண்டும். இதில் பனையேறி மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவருமே பகல் முழுவதும் வேலை செய்ய வேண்டும். இதனால் வேலைப்பளு அதிகமாவதுடன் வருமானம் குறைந்ததால் ஏராளமானோர் தொழிலைவிட்டு வெளியேறி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம் உள்ளிட்ட மாற்றுத் தொழில்களைக் கைக்கொண்டனர்.

. பொய்வழக்கால் சமூகத் தகுதிக்கு இழுக்கு

கள்ளுக்குத் தடை விதித்தபின் கள் விற்றோரை மதுவிலக்குச் சட்டத்தில் பிடித்து வழக்குத் தொடுத்துச் சிறையில் அடைத்தனர். பதனீர் இறக்கியோரையும் கூடக் கள்ளிறக்கியதாகக் கூறிப் பொய்வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்தி மானங்கெடுத்தனர். இதனால் தனது சமூகத் தகுதி குறைவதாகக் கருதிய பனையேறிகள் அந்தத் தொழிலைக் கைவிட்டு வேளாண்மை, வணிகம் எனப் பிற தொழில்களுக்கு மாறினர். பனையேறிகள் இல்லா ஊரில் பனைகள் பயனற்றவையாகக் கருதப்பட்டன. இன்றும் பல ஊர்களில் ஒரே நாடார் இனத்தவரே பனையேறிகளுக்குப் பெண் கொடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முப்பதாண்டுகளுக்கு முன் பனையேறிய குடும்பத்தினரின் மரபினர் கூடச் சென்னையில் வணிகம் செய்துகொண்டு தாங்கள் மரபுவழியாக வணிகம் செய்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் போக்கு உள்ளது. பனையேறினால் இழிவென்றும், வணிகம் செய்தால் உயர்வென்றும் கருதுவதே இதற்குக் காரணம். பனையேறிப் பதனீர் இறக்கிக் கருப்பட்டி காய்ப்போர் ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வருமானம் ஈட்டுவதும், சென்னையில் மளிகைக் கடை வைத்திருப்போர் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் இலாபம் ஈட்டுவதும் என்கிற நிலை வந்தபின்னரும் பனையேறிக்கான சமூகத் தகுதி உயர்ந்துவிட்டதாக நாடார்கள் கருதவில்லை. இஃது பனைத்தொழிலின் பனைகளின் அழிவுக்கான இரண்டாவது காரணமாக உள்ளது.

. மலிவான எரிபொருளாகப் பனை

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை அரசுகள் ஊக்குவித்ததால், கட்டுமானத் துறையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சியால் செங்கற்களின் தேவை அதிகரித்தது. பனைகளை வெட்டிச் செங்கற்சூளைகளுக்கு மலிவான எரிபொருளாகப் பயன்படுத்தினர். 2011ஆம் ஆண்டில் ஒரு பனை 200 உரூபாய்க்கு விற்றது என்றால் பனைகள் எப்படி வெட்டியழிக்கப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம்.

. மணற்கொள்ளை, மண்கொள்ளை, கனிமவளக்கொள்ளை

ஆறுகள், ஓடைகள், கால்வாய்களில் படிந்திருந்த மணலை அள்ளியதும் அவற்றின் கரையில் இருந்த மண் அரிக்கப்பட்டுப் பனைகள் சாய்ந்தும் பட்டும் அழிந்து வருகின்றன. உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் வேளாண்மை வீழ்ச்சியடைந்தபோது நன்செய் புன்செய் நிலங்கள் மனைவணிக நிறுவனங்களுக்கு மலிவுவிலையில் விற்கப்பட்டன. இந்நிலங்களில் நின்ற பனைகள் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் கார்னட், இல்மனைட் உள்ளிட்ட கனிமங்களைப் பிரித்தெடுக்கச் சுரங்க நிறுவனங்களுக்குக் குத்தகை விட்டபோது அப்பகுதிகளில் நின்ற பனைகள் ஈவிரக்கமின்றி வேரோடு சாய்க்கப்பட்டன. இப்போதும் உடன்குடி அனல்மின் நிலையம், அதற்கான நிலக்கரி இறங்குதளம், குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவூர்தி நிலையம், இராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஒளிமின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க ஆயிரக்கணக்கான பனைகள் வெட்டியழிக்கப்படுகின்றன.

பனைகளைக் காக்கச் செய்ய வேண்டியவை

. கள்ளுக்குத் தடை நீக்கம்

உலகின் அனைத்து நாடுகளிலும், இந்தியாவில் தமிழ்நாடு தவிரப் புதுச்சேரி, கேரளம், கருநாடகம், கோவா, ஆந்திரம், தெலங்கானம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கள்ளுக்குத் தடையில்லை என்பதை அரசு உணர வேண்டும். கள் உணவு, மருந்து என்கிற உண்மையை உணர வேண்டும். தமிழ்நாட்டில் பனைகளின் அழிவைத் தடுக்கவும், புதிதாகப் பனைகள் வளர்ப்பதை ஊக்குவிக்கவும் கள்ளுக்கு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். இந்தக் கோரிக்கையைக் கள் இயக்கத் தலைவர் நல்லசாமி அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து விடாப்பிடியாக வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. 1987ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கள்ளுக்குத் தடை விதித்தது உலக நடைமுறைக்கு எதிரான, மாநிலத்தின் தற்சார்புப் பொருளாதாரத்துக்கு எதிரான மடைமையான செயல் என்பதை அரசு உணர வேண்டும். 36 ஆண்டுகளாகத் தடை விதித்ததற்கும், அதன் பின்விளைவுகளுக்கும் இக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட இருபெரும் திராவிடக் கட்சிகளும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு தவற்றுக்கு வருந்த வேண்டும்.

. அரிதான நிலம் தேரி என அறிவிப்பு

தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளிலும், தேரிப் பகுதிகளிலும் கனிமச் சுரங்கத் தொழில், மின்னுற்பத்தி, நிலம் எடுக்கும் அரசு திட்டங்கள் உட்பட இயற்கைச் சூழலை மாசுபடுத்தும் அழிக்கும் எந்தவொரு திட்டத்தையும் செயற்படுத்தக் கூடாது. தேரிப் பகுதியை அரிதான நிலப்பகுதியாக அறிவித்துக் காக்க வேண்டும். அப்பகுதிகளில் இப்போதுள்ள பனைகளைக் காப்பதுடன், இன்னும் கோடிக்கணக்கான பனைகளை வளர்க்க வேண்டும். மேலும் வேம்பு, புளி, கொல்லமா (முந்திரி), மா, சப்போட்டா, நாவல், ஆல், அத்தி, அரசு, புன்னை ஆகிய மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

. பனை வாரியம் வேண்டும்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த பனைவாரியம், பனைத்தொழிலாளர் நலவாரியம் என்னும் பெயரில் சுருக்கப்பட்டுவிட்டது. பனை இருந்தால்தானே பனைத்தொழிலாளர் வாழ முடியும். அதனால் பனைவாரியம் என மீண்டும் பெயரைச் சூட்டித் தன்னாட்சி அமைப்பாக வலுப்படுத்திப் பனை வளர்ப்பு, பனம்பொருட்கள் வணிகம், பனைத்தொழிலாளர் வாழ்வுரிமைக் காப்பு, பனை ஆராய்ச்சி ஆகியவற்றுக்காகத் தனித்தனி அமைப்புகளை உருவாக்க வேண்டும். பனைத் தொழில் தெரிந்தவரை, பனைகளைக் காப்பதில் வளர்ப்பதில் அக்கறையுள்ளோரைப் பனை வாரியத்துக்கும், பனைத் தொடர்பான பிற அமைப்புகளுக்கும் தலைவராக்க வேண்டும்.

. பனைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள்

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள், பாலுற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்று தமிழ்நாடு முழுவதும் பனைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க வேண்டும்.

. பனை வெட்டத் தடைச் சட்டம்

பனைகளை வெட்டுவது சுற்றுச்சூழல் பேரழிவு என்பதால் அதற்குத் தடை விதித்துச் சட்டம் இயற்ற வேண்டும். நாட்டுப் பறவை மயில், நாட்டு விலங்கு புலி ஆகியவற்றைக் கொன்றால் கடும் நடவடிக்கை எடுப்பதைப் போலப் பனைகளை வெட்டுவோருக்குப் பெருந்தொகை தண்டமிறுப்பதுடன், சிறைத்தண்டனையும் விதிக்க வேண்டும். பனைவெட்டத் தடைச் சட்டம் கொண்டுவருவதாகப் பெயரளவுக்குக் கூறிவிட்டு இராமநாதபுரம் மாவட்டம் சிறைக்குளத்தில் ஆயிரக்கணக்கான பனைகளை வெட்டி அழிப்பதைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி  காவல் படைகளை நிறுத்திப் பனைவெட்டுவோருக்குக் காவல் காக்கிறது. இது சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்கிற திமுக அரசின் முழக்கத்துக்கு மாறாக இருக்கிறது. ஒருபுறம் பனைகளைக் காப்பதாகக் கூறியதைச் செய்யாமல் மறுபுறம் பனைகளை அழிப்பதற்குத் துணைபோகிறது.

. பனம்பொருள் விற்பனையகங்கள்

தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும், தொடர்வண்டி பேருந்து நிலையங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பனம்பொருள் விற்பனையகங்களைத் தொடங்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பனம்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் பெருமளவு அந்நியச் செலாவணி ஈட்ட முடியும்.

. பனை பற்றிய பாடம்

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்குப் பனை பற்றிய பாடங்களை வைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் பனை வளர்ப்பு, பனை ஆராய்ச்சி, பனம்பொருள் உற்பத்தி, பனம்பொருள் பதப்படுத்தல், பனம்பொருள் வணிகம் ஆகிய பல்வேறு பாடப் பிரிவுகளை வைக்க வேண்டும். பனையால் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறெல்லாம் மேம்படுத்தலாம் என அறிவியல், சமூகவியல், வணிகவியல் மாணவர்களைக் கொண்டு ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

. பனைத் தொழிலுக்குக் கடனுதவி

வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை, பட்டுப்பூச்சி வளர்ப்பு, மீன் பண்ணை, இறால் பண்ணை ஆகிய தொழில்களுக்குக் கடன் வழங்குவதுபோல் பனை சார்ந்த தொழில்களுக்கும் பொதுத்துறை வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இதனால் பனைத்தொழில்செய்ய வேண்டும் என்கிற எண்ணம், விருப்பம், ஆர்வம் இருப்போருக்கு அதைச் செயல்படுத்த ஊக்கமும் தெம்பும் திறனும் கிடைக்கும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும் (திருக்குறள் 466)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு (திருக்குறள் 467) என்னும் திருவள்ளுவரின் அறிவுறுத்தலையும் தங்கள் கடமையையும் உணர்ந்து பனைகளைக் காக்கவும் வளர்க்கவும் அதன்வழியே நீடித்த வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவி வலுப்படுத்தவும் இந்திய நடுவணரசும் தமிழ்நாட்டு மாநில அரசும் உடனடியாகச் செயலாற்ற வேண்டும்.

சே.பச்சைமால் கண்ணன்