சனி, 21 ஜனவரி, 2023

பசுமை மின்னுற்பத்திக்காகப் பச்சைப் படுகொலையா?

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிறைக்குளம் ஊராட்சியில்  அரியானா மாநிலத்தைச் சேர்ந்த  கிரீன் இன்ப்ரா வைண்ட் எனர்ஜி லிமிடெட் (GREEN INFRA WIND ENERGY LTD) என்கிற நிறுவனம் சூரிய ஒளிமின் நிலையத்தை அமைக்க உள்ளது. இதற்காக அப்பகுதியில் விலைக்கு வாங்கியுள்ள நிலங்களில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பனைகளைப் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் வேருடன் பிடுங்கிச் சாய்த்துள்ளனர். இவையனைத்தும் வளர்ந்து 40ஆண்டுகள் ஆகிப் பயனளித்து வந்தவை என்பதும் இந்த ஆண்டு பாளை தள்ளும் பருவத்தில் இருந்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது. நிறுவனம் பனைகளை வெட்ட முற்பட்டபோதே இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடலாடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் மனு அளித்துள்ளனர். பனைகளை வெட்டி அழித்தால் பனையேறித் தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் அழியும் என்றும், சுற்றுச்சூழலுக்குப் பேரழிவு ஏற்படும் என்றும் கூறித் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு முறையீட்டு மடல்கள் எழுதியுள்ளனர்.



சூரிய ஒளிமின் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான பனைகளை வெட்டுவது குறித்து அந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் தெரிவித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். இப்படிச் சட்டப்படி சென்றால் ஒப்புதல் கிடைக்காது என்பதால் ஆட்சியாளர்களுக்குக் கையூட்டுக் கொடுத்துவிட்டுச் சட்டவிரோதமாகப் பனைகளை வேருடன் சாய்த்துள்ளது அந்நிறுவனம். கிழக்குக் கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கத்தையும் மண்ணரிப்பையும் தடுக்கும் அரணாக இருப்பவை பனங்காடுகளே.



மன்னார் வளைகுடா உயிரியல் பூங்காவுக்கு உட்பட்ட இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகள் புயல், கடலரிப்பு, கடற்கோள் ஆகியவற்றுக்கு இலக்காகும் இடத்தில் உள்ளன. இப்பகுதிகள் கடலில் மூழ்கி அழிவதைத் தடுத்துக் காக்கப் பொதுமக்களும் வல்லுநர்களும் பனைகளை வளர்த்து வருவதாக 2021ஆம் ஆண்டு நவம்பரில் மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி மேற்கோள் காட்டிப் பாராட்டினார். இயற்கையன்னையை நாம் காத்தால் அவள் நம்மைக் காப்பாள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  தமிழ்நாட்டின் அரசு மரமான பனைகளை வெட்டியழிப்பதற்கு மாநில அரசும் தடைவிதித்துள்ளது. தவிர்க்க முடியா வகையில் ஒரு சில தேவைகளுக்காக வெட்ட வேண்டியிருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.



இப்படியிருக்கையில் சூரிய மின்னாற்றல் திட்டம் பற்றிப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்காமல், ஊராட்சி மன்றத்திடம் ஒப்புதல் பெறாமல் கிரீன் இன்ப்ரா வைண்ட் எனர்ஜி நிறுவனம் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பனைகளை வேருடன் பிடுங்கி அடியோடு சாய்த்துள்ளது.

தங்கள் எதிர்ப்பையும் மீறி அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பனைகள் வேருடன் சாய்க்கப்படுவதை அறிந்த பொதுமக்கள் களத்தில் இறங்கித் தடுத்துள்ளனர். பனைவெட்டுத் தடைச் சட்டம் இருப்பது குறித்து வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அரசு அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிச் செயல்பாட்டில் இறங்காமல் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என வினவியுள்ளனர். இதையடுத்துத் தான் விலைக்கு வாங்கிய நிலத்தில் உள்ள பனைகளை வெட்டுவதற்குக் காவல்துறைப் பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கிரீன் இன்ப்ரா நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. பனைகளை வெட்டுவது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை அறியாத நீதிபதி, கட்டைப் பஞ்சாயத்தில் தீர்ப்பளிப்பது போல் 2000 பனங்கன்றுகளையும், 1000 பிறவகை மரக்கன்றுகளையும் மாவட்ட வனத்துறையிடம் வழங்கிவிட்டுப் பனைகளை வெட்டிக்கொள்ளலாம் என்றும், அதற்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றிக் காவல் கண்காணிப்பாளர் பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.



உத்தரவு வந்தவுடனேயே அதை எதிர்பார்த்துக் காத்திருந்ததுபோல் பொக்லைன்களின் உதவியுடன் பனைகளை அழிக்க மீண்டும் படையெடுத்துள்ளது கிரீன் இன்ப்ரா நிறுவனம். மக்கள் கொந்தளித்தால் கொடுங்கோல் அரசுகளே ஒழிந்துபோகும். பசுமை மின்னுற்பத்தி என்னும் பெயரில் பச்சைப் படுகொலை செய்யும் நிறுவனம் என்னாகும்? உள்ளூர் மக்களும் தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்களும் களமிறங்கித் தடுத்ததால் பனைகளை வெட்ட முடியாமல் நிறுவனம் பின்வாங்கியுள்ளது.

ஊர் நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் என அடுக்கடுக்காக இருக்கும் அரசு எந்திரங்கள் செய்ய வேண்டிய வேலையைப் பொதுமக்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. மக்கள் தட்டி எழுப்பிய பிறகும் அரசு அதிகாரிகள் விழித்துக்கொள்ளவே இல்லை. நிறுவனத்துடன் தங்களுக்குள்ள கூட்டு வெளிப்பட்டுவிட்டதே எனத் திருதிருவென விழித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பனைகளை வெட்டுவது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும் என உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூற வேண்டிய அரசு வழக்கறிஞர்கள் நிறுவனத்துக்குச் சார்பான உத்தரவு கிடைக்க வழிசொல்லிக் கொடுத்ததில் இருந்தே இது தெரியவருகிறது.

மக்களின் ஊடகம், நடுநிலை ஊடகம், மக்களின் சுவைக்கேற்ற செய்திகளைப் பரிமாறும் ஊடகம் எனக் கூறி நாடகம் நடத்தும் ஊடகங்கள் எவையும் இந்தச் சிக்கலை உலகறியச் செய்ய முயலவில்லை. ஒரேயொரு தொலைக்காட்சி மட்டும் மக்களின் போராட்டத்தை நேரலையில் ஒளிபரப்பியுள்ளனர். தமிழ்நாடு – தமிழகம், பொன்னியின் செல்வன் – சோழர் வரலாறு, வாரிசா? துணிவா? கைக்கடிகாரத்தின் விலையென்ன? என்றெல்லாம் தேவையில்லாக் கதைகளை நாள்முழுவதும் அழுது அரற்றும் தொலைக்காட்சிகள் தங்கள் விவாதமேடைகளில் பனைகளை அழித்தால் கடலோர நிலப்பகுதி அழியும் என்றோ, இது இயற்கைச் சுற்றுச்சூழலை அழிக்கும் குற்றத்தின்பாற்பட்டது என்றோ ஒப்புக்குக்கூடக் கூறவில்லை. மண்ணின் மீதும் மக்கள்மீதும் இவர்களுக்கு உள்ள அக்கறை வியப்படையச் செய்கிறது.



அரியானாவின் கிரீன் இன்ப்ரா நிறுவனம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாக் கடலோரத்தில் மூவாயிரம் பனைகளை வெட்டியது, தந்நலமற்ற போராட்டத்தால் ஆயிரக்கணக்கான பனைகளை அழிவில் இருந்து மக்கள் காத்தது பற்றியும் எந்த நாளிதழும் செய்தி எழுதவில்லை. மும்பை ஆரேயில் மெட்ரோ ரயில் பணிமனைக்காகக் காடுகளை அழிக்க மகாராஷ்டிர அரசு முற்பட்டபோது மக்கள் எதிர்த்தனர். அது குறித்த செய்திகள் நாடு முழுவதும் சென்றடையும் வகையில் அங்குள்ள ஊடகங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. இதேபோல் தில்லியில் காடுகளை அழித்துக் குடியிருப்புக் கட்ட முயன்றபோது அங்குள்ள ஊடகங்கள் அது குறித்துச் செய்தி வெளியிட்டன. தமிழ்நாட்டு ஊடகங்களின் பார்வை பட வேண்டுமென்றால் அரசியல்வாதியாகவோ, நடிகர் நடிகைகளாகவோ இருக்க வேண்டும் போல.

செம்மண் நிலத்தில் கருகருவென உயரமாக வளர்ந்திருந்த பனைகளை வேருடன் சாய்த்தது பச்சைப் படுகொலையே. அங்கு இயல்பாகவே இருக்கும் செம்மண் இந்தப் பனைகள் சிந்திய செங்குருதியோ என எண்ணும் வகையில் உள்ளது. இதைக் கண்டுகொள்ளாத அரசும், இப்படி வெட்டுவதற்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர் நீதிமன்றமும் இதற்குத் துணை செய்ததாகவே கருத வேண்டியுள்ளது. அதையும் மீறி மண்ணின் மீது பற்றுக்கொண்ட மக்கள் ஆர்த்தெழுந்து போராடியதால் எஞ்சியுள்ள ஆயிரக்கணக்கான பனைகள் காக்கப்பட்டுள்ளன. இதையும் சாய்ப்பதற்கு கிரீன் இன்ப்ரா நிறுவனம் நேரம் பார்த்துக் காத்திருக்கும் வேளையில், மக்கள் மீதும் மண்ணின் மீதும் அக்கறை இருந்தால் அதற்கு இடம்கொடா வகையில் தமிழக அரசு அதைத் தடுத்து இந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தொழில் திட்டங்கள் என்னும் பெயரில் காடுகளும் மரங்களும் அழிக்கப்படும் போக்குக்கு ஒரு முடிவுரை எழுத வேண்டும்.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக