செவ்வாய், 27 டிசம்பர், 2022

மக்களாட்சியா? மரபுவழி ஆட்சியா?

தமிழகத்தில் ஆளும் திமுக அமைச்சரவையில் முதலமைச்சரின் மகன் உதயநிதியைச் சேர்த்துள்ளனர். உழைப்பால் உயர்ந்தவர் உதயநிதி என்றும்அவரை அமைச்சர் ஆக்கியதை வாரிசு அரசியல் எனக் கூற முடியாது என்றும்அப்படியே வாரிசு அரசியலாக இருந்தாலும் அதில் தப்பில்லை என்றும் அமைச்சர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். சமூக நீதிஇட ஒதுக்கீடு பற்றிப் பேசும் திமுகவில் ஒரே குடும்பத்தில் பலருக்குப் பதவிகள் என்பது தலைவர் வீட்டில் மட்டும் என்றில்லாமல் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்மாவட்டச் செயலாளர்ஒன்றியச் செயலாளர் குடும்பங்களிலும் உள்ளது. தந்தை மகன்கணவன் மனைவிபாட்டன் அப்பன் பெயரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருந்ததைஇப்போதும் இருப்பதைப் பட்டியலிட்டால் அதைப் பல தொகுப்புகளாகப் புத்தகங்களாகவே அச்சிடலாம். திமுக அமைச்சர்கள் சிலரின் மகன்களும் மாவட்டச்செயலாளர்களின் மகன்களும் நாடாளுமன்றசட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். மக்களாட்சி என்பது நாட்டு மக்களின் ஆட்சி என்கிற இலக்கணத்துக்கு மாறாக நமக்குப் பின் நம் மக்களின் ஆட்சி என்று இலக்கணம் வகுக்கும் வகையில் ஒரு தவறான எடுத்துக்காட்டாகவே உள்ளது திமுகவில் உள்ள இந்தக் குடும்ப ஆட்சி முறை.

இந்திய அளவில் இந்தக் குடும்ப ஆட்சிமுறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது நேரு குடும்பம். மோதிலால் நேருஜவகர்லால் நேருஇந்திரா காந்திராஜீவ்காந்திராகுல்காந்தி என ஐந்து தலைமுறையாகத் தொடர்கிறது. இவர்களில் பாட்டன்மகள்பெயரன் என மூவர் நாட்டின் பிரதமராக இருந்தனர். இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி இவர்களின் குடும்பச் சொத்தாகவே பார்க்கப்படுகிறது. அதன் விளைவு அது பல மாநிலங்களிலும் ஆட்சியை இழந்ததுடன் நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சி என்கிற தகுதியை இழந்துவிட்டது.

திமுகவின் குடும்ப ஆட்சிமுறையைப் பார்த்து வெறுப்புற்ற மக்கள் அதைப் பழிவாங்கத் தவறவில்லை. ஒருமுறை செய்த தவற்றுக்கு மறுமுறை ஆட்சிக்கட்டிலில் ஏறவிடாமல் செய்கின்றனர். ஆனால் அதற்கடுத்தமுறை மறந்து பொய்யான உறுதிமொழிகளை நம்பியும் இரக்கப்பட்டும் முன்னர் செய்த தவறுகள் அட்டூழியங்களை மறந்தும் மீண்டும் அதை ஆட்சியில் அமர்த்துகின்றனர். மக்களின் இந்த ஏற்பளிப்பைத் தாங்கள் செய்யப்போகும் அனைத்துக்குமான ஒப்புதல் என திமுக தவறாகப் புரிந்துகொள்கிறது. ஒருவகையில் அது உண்மைதான்.

மக்களைக் கவரும் உறுதிமொழிகளைத் தரும் அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எவருக்கெல்லாம் எந்தெந்த அமைச்சர் பதவிகளைத் தருவதுஎன்னென்ன செய்வதுஎன மறைமுகத் திட்டங்கள் வைத்திருப்பர். இந்த மறைமுகத் திட்டத்தை அறியாத மக்களிடம் உங்களைக் காக்க எங்களைவிட்டால் வேறு யாருமில்லை என்றுகூறி மக்களாட்சியின் மாண்பைக் காக்க வந்த மீட்பர்போல் தேர்தலில் பரப்புரை செய்து ஆட்சியைப் பிடிக்கின்றனர். பதவி வந்தபிறகுதான் அவர்களின் உண்மை உருவம் தெரியவருகிறது. இருந்தாலும் ஐந்தாண்டுகளுக்கு மக்களால் அவர்களை ஒன்றுஞ் செய்ய முடியாது. அத்தகைய நிலைதான் உதயநிதியை அமைச்சராக்கிய திமுகவின் செயலும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களின் நிலையும்.

குடும்ப ஆட்சிமுறை என்பது காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பெரும்பாலான மாநிலங்களில் இருந்ததுஇன்னும் இருந்து வருகிறது. காஷ்மீரில் சேக் அப்துல்லா - பரூக் அப்துல்லா - உமர் அப்துல்லாமுப்தி முகமது சயீது - மெகபூபா முப்திஉத்தரப் பிரதேசத்தில் சரண்சிங் - அஜித் சிங் - ஜெயந்த் சவுத்ரிமுலாயம் சிங் - அகிலேசுபீகாரில் லாலு - ராப்ரி - தேஜஸ்விவங்கத்தில் மமதா - அபிசேக்ஒடிசாவில் பிஜு பட்நாயக் - நவீன்ஆந்திரத்தில் ராமராவ் - சந்திரபாபு - நாரா லோகேஷ்தெலங்கானத்தில் சந்திரசேகர ராவ் - ராமராவ் - கவிதா என இந்தப் பட்டியல் நீள்கிறது.

குடும்ப அரசியலைக் குற்றஞ்சாற்றும் பாரதிய சனதாக் கட்சியிலும் குடும்ப அரசியல் உள்ளது. விஜயராஜே சிந்தியா - வசுந்தரா - யசோதரா - மாதவராவ்(காங்கிரசு) - ஜோதிர் ஆதித்யா குடும்பம் அதற்கொரு சான்று. கோபிநாத் முண்டே - பங்கஜாபிரீத்தம்பிரமோத் மகாஜன் - பூனம் எனத் தந்தை மகள்கள் அரசியலும் உள்ளது.

குடும்ப அரசியலைக் காங்கிரசும் திமுகவும் செய்தால் மட்டுமல்லபாரதிய சனதாவும் மற்ற கட்சிகளும் செய்தால் கூடத் தவறுதான். சனநாயகம் பணநாயகமாக மாறிவிட்ட நாட்டில் மக்களாட்சி படிப்படியாக வலுவிழந்து குடும்ப ஆட்சியாக மாறிப்போனதில் வியப்பில்லை. இப்போது ஐந்தாண்டுக்கொருமுறை தேர்தல் என்னும் பெயரில் மாற்றம் நிகழ்கிறது. இப்படியே போனால் இனி வருங்காலத்தில் தேர்தல்முறை மறைந்து மரபுவழி ஆட்சி நிலைபெறவும் வாய்ப்புள்ளது.  

விடுதலைக்கு முன்பும் விடுதலைக்குப் பிந்தைய தொடக்கக் காலத்திலும் பதவி என்பது மக்களுக்குத் தொண்டாற்றக் கிடைத்த வாய்ப்பு எனவே கருதப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரிகாமராசர்கக்கன் ஆகியோர் இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர். பதவியால் தங்களுக்குக் கிடைக்கும் பயன்களைத் தங்கள் குடும்பத்தினர் பெற்றாலே அது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது எனக் கருதினர். இந்தப் போக்குக் காலப்போக்கில் கரைந்து பதவி என்பது ஊழலில் பொருளீட்டக் கிடைத்த அரும்பெரும் வாய்ப்பு என்றாகிவிட்டது. அதன்விளைவாகப் பணநாயகம்குடும்ப அரசியல்குறுநில மன்னர்முறை ஆகியன தோன்றிவிட்டன. இதன் அடுத்த வடிவம் மரபுவழி ஆட்சிமுறைதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

சே.பச்சைமால் கண்ணன்.