வியாழன், 6 ஆகஸ்ட், 2020

எல்லாம் செய்த பின் இன்னும் ஏன் ஊரடங்கு?

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் தொடர்ந்து ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத நச்சு நுண்ணுயிரி தமிழகத்தின் இயல்பு வெப்பநிலையிலேயே செத்துப் போகும். அப்படியிருக்க அது மனிதனின் கைபடும் இடங்கள் எல்லாம் ஒட்டியிருக்கும் என்றும், காற்றிலே பரவி எவருள் புக என எண்ணிக்கொண்டு சாலையில் திரியும் என்றும் வகைவகையாகப் புழுகுகிறார்கள். பேருந்தில் தொடர்வண்டியில் மக்கள் கூட்டமாகச் சென்றால் ஒருவருக்கு இருந்தால் அனைவருக்கும் பரவும் என்றனர். 5 மாதங்களாகப் பொதுப் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர். இறப்பு வீட்டுக்கு 10 பேர்; திருமண வீட்டுக்கு 50 பேர் எனப் பங்கேற்பாளருக்கு எண்ணிக்கையைக் குறித்தன மத்திய மாநில அரசுகள். இதை மீறி எத்தனையோ அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்ள் தங்கள் பிள்ளைகளின் திருமண விழாக்களைத் தடபுடலாய் நடத்தியுள்ளனர். தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். பணம் படைத்தவன் அதிகாரம் படைத்தவன் என்றால் கொரோனா அஞ்சி ஓடிவிடுமா என்ன?

சென்னைக் கோயம்பேடு சந்தையில் இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரவிவிட்டதாகக் கூறி அதை மூடிப் பல்லாயிரக்கணக்கானோரை வாழ்விழக்கச் செய்துவிட்டனர். இதைவிடக் கூட்டம் அதிகமாகக் கூடும் சாராயக் கடையைத் திறக்க உச்சநீதிமன்றம் வரை சென்று குடிமக்களின் உரிமையைக் காத்தது தமிழக அரசு. சாராயக் கடையில் பரவாத கொரோனா கோயம்பேடு சந்தையில் மட்டும் பரவுமா?

5 மாதம் ஊரடங்கு காலத்துக்குச் செலவுக்கு ஏழை எளியோருக்கு ஆயிரம் ரூபாய் போதும் என நினைத்துவிட்டது அரசுக்கு. மக்களே முதலமைச்சர்களும் அமைச்சர்களும் 5 மாதத்துக்கு ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு தான் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். நம்புங்கள். கடன்காரர்கள் கடனைத் திருப்பி வாங்கக் கூடாது. வீட்டு உரிமையாளர் குடியிருப்பவரிடம் வாடகையை வாங்கக் கூடாது. அரசு மட்டும் சுங்கச் சாவடியில் கட்டணத்தை உயர்த்தி வாங்கிக் கொள்ளும். வரிகளைத் தவறாமல் வாங்கிக் கொள்ளும். உயர்த்தியும் கொள்ளும்.

மக்களே வீட்டிலேயே இருங்கள், விழிப்புடன் இருங்கள் எனக் கூறிவிட்டு முதலமைச்சர் பிரதமர் அமைச்சர் எல்லாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்குச் சென்று வருவர். நடிகன் கூட இ பாஸ் இல்லாமல் சென்று வருவான். எளிய மனிதர்கள் மிதிவண்டியில் தெருவில் சென்றால் கூட அதைப் பறித்துவைத்துக் கொண்டு காவலர்கள் செய்த அட்டூழியம் கொஞ்சநஞ்சமன்று.

சாதி, மதம், இனம், கட்சி, அரசியல், பண்பாடு தொடர்பான விழாக்கள் எதையும் நடத்தக் கூடாது எனக் கூறிவிட்டு விருப்பம்போல் நடத்திக் கொள்கிறீர்கள்.. நடத்த வேண்டாம் எனக் கூறவில்லை. கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்திவிட்டுச் செய்திருக்கலாமே...

மகிழுந்து இருப்பவனெல்லாம் கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரிகிறான். மிதிவண்டி கூட இல்லாமல் பேருந்தையும் தொடர்வண்டியையும் நம்பியவர்கள் தான் இரக்கத்துக்குரியவர்களாக உள்ளனர்.

சே.பச்சைமால் கண்ணன்