ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

பரந்தூரில் விமான நிலையம் - விளக்கம் அளித்த அரசு அதிகாரி யார்?

சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்கப் பரந்தூரைத் தேர்வு செய்தது ஏன்? அரசு உயர் அதிகாரி விளக்கம் என்னும் தலைப்பில் தமிழ் முன்னணி நாளிதழில் செப்டம்பர் 23ஆம் நாள் அரைப் பக்கம் செய்தி வெளியாகியிருந்தது. 3 ஊர்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள், கிணறுகள், பள்ளிகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், பசுமையான வயல்வெளிகள் உட்பட 4700 ஏக்கர் நிலங்கள் எடுத்து ஆண்டுக்குப் பத்துக் கோடிப் பயணிகளைக் கையாளும் வகையில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. நடுவணரசின் திட்டமாக இருந்தாலும் அதற்கு நிலம் எடுத்துக் கொடுப்பது மாநில அரசின் கடமையாகும். அதற்காக விமான நிலையம் வந்தால், சென்னையும் சுற்று வட்டாரப் பகுதிகளும் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் மாநில அரசு தெரிவித்து வருகிறது.

இவ்வளவு பெரிய திட்டத்துக்குப் பரந்தூரைத் தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து அரைப்பக்க அளவுக்கு வந்திருந்த செய்திக் கட்டுரையில், அரசு உயர் அதிகாரி என மொட்டையாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர் யார் என இறுதிவரை குறிப்பிடவே இல்லை. இப்போதுள்ள விமான நிலையத்தில் ஆண்டுக்கு மூன்றரைக் கோடிப் பயணிகள் வரைதான் கையாள முடியும் என்றும், அதனால் இரண்டாவது விமான நிலையம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளதாகவும் அந்தச் செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

விமான நிலையம் கட்ட நிலம் எடுத்தாலும் பரந்தூரில் உள்ள நீர்வழித்தடங்களில் நீரோட்டம் எந்தத் தடையும் இன்றி அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றும், பெரிய நெல்வாய் ஏரி திட்டச் செயல்பாட்டுப் பகுதிக்கு உள்ளே இருந்தாலும் அதை ஆழப்படுத்தித் தொடர்ந்து ஏரியாகப் பராமரிக்கப்படும் என்றும், விமான நிலையச் செயல்பாட்டால் சுற்றுப் பகுதி நீர்நிலைகள் எந்தவிதப் பாதிப்பும் இன்றிப் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நடுவணரசுத் திட்டங்களுக்கு இதற்கு முன் எடுத்த நிலங்களில் இவ்வாறு நீர்நிலைகள் பராமரிக்கப்படுகிறதா என்பதை உயர் அதிகாரி விளக்க வேண்டும். நானறிந்த வரையில் திருநெல்வேலி மாவட்டம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படைத் தளத்தில் அது தொடங்குமுன் இருந்த குளங்களின் கரையை வெட்டி நீர்தேங்கா வகையில் வடியச் செய்துவிட்டனர். இதேபோல்தான் பரந்தூரிலும் அரசு அதிகாரியின் உறுதிமொழி காக்கப்படும் என எண்ண வேண்டியுள்ளது. கோவன்குளம் வழியாகக் கடற்படைத் தளத்துக்குள் ஓர் ஓடை பாய்கிறது. இந்தக் கடற்படைத் தளம் கட்டுமுன் இயல்பாக வெள்ளம் பாய்ந்தது. இதைக் கட்டியபின் தண்ணீர் செல்வது தடைபட்டு ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிடுகிறது. இந்த வெள்ளத்தால் ஓடையில் அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகள் பலமுறை அடியோடு சாய்ந்தன. ஓடைக்கரையில் 12 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட மதில்களும் பல இடங்களில் 100 மீட்டர் நீளத்துக்கு மேல் சாய்ந்தன. மழைக்காலம் முடிந்தபின் பூசிமெழுகும் வேலைகளையே பாதுகாப்புத் துறை செய்திருக்கிறது. வெள்ளத்துக்குக் காரணமான நடுவணரசின் பாதுகாப்புத் துறையிடம் மாவட்ட வருவாய்த் துறை எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. 35ஆண்டுகளாகியும் ஓடை வெள்ளம் தடையின்றிச் செல்வதற்கு இன்னும் நிலையான தீர்வு காணப்படவில்லை. இப்போதும் ஓடைவெள்ளம் செல்லும் வழியில் இரும்புக்கம்பிகளால் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னியுள்ளனர். இதனால் வெள்ளத்தில் அரித்து வரப்படும் ஓலை மட்டை செடிசெத்தைகள் இரும்புக் கம்பிகளில் சிக்கி நீரைச் செறுத்து ஊருக்குத் திருப்பி விடுகின்றன.

தெற்கே நம்பியாறு, மேற்கில் குளம், வடக்கில் ஓடையும் மற்றொரு குளமும், கிழக்கே கடற்படைத் தளத்தின் மதில்சுவர் என இயற்கை மற்றும் செயற்கையால் அரண்போலக் காட்சியளிக்கும் கோவன்குளம் ஊர் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் படுந்துயரை இதுவரை எந்த நாளிதழும் செய்தித் தொலைக்காட்சியும் வெளிக்கொண்டுவந்ததில்லை. வெள்ளக்காலத்தில் அரசு அதிகாரிகள் நினைத்தாலும் சென்று பார்க்க முடியாத நிலை அங்கு நிலவுகிறது.

கட்டிக் குத்தகைக்கு விடும் அரசின் கொள்கையால் பரந்தூரில் அமைக்கப்படும் விமான நிலையமே தனியாருக்குக் கொடுக்கப்படும். அப்படியிருக்கப் பரந்தூரில் உள்ள நீர்நிலைகளைப் பராமரிப்பது நடுவணரசா? தமிழ்நாட்டு அரசா? உயர் அதிகாரி விளக்க வேண்டும்.

புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு அதிகமாகத் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும், பரந்தூர் மற்றும் சுற்றுப்புற ஊர்மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமின்றி விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்துப் பொருளாதாரப் பயன்களும் அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பரந்தூர் மக்கள் வெளியேற்றப்பட்டதும் தங்கள் உறவினர் நண்பர்கள் உள்ள பல ஊர்களுக்குப் பரந்து செல்ல நேரிடும். அப்படி இருக்கும்போது பொருளாதாரப் பயன்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் புதிய விமான நிலையத்தில் பங்குகள் கொடுக்கப்படுமா? என்னும் வினாவுக்கு அரசு உயர் அதிகாரி விடையளிக்க வேண்டும். கட்டபொம்மன் கடற்படைத் தளம், மகேந்திரமலை விண்வெளி ஆராய்ச்சித் தளம், கூடன்குளம் அணுவுலை, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம், சேலம் உருக்காலை ஆகியவற்றுக்கு நிலம் கொடுத்த மக்களுக்குப் பொருளாதாரப் பயன்கள் எவ்வகையில் கிடைக்கின்றன? என்பதையும் அரசு உயர் அதிகாரி விளக்க வேண்டும்.

நில உரிமையாளர்களுக்குச் சந்தை மதிப்பில் மூன்றரை மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்குக் குறைந்தபட்ச ஊதிய விகிதத்துக்குக் குறையாமல் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்குக் கல்வித் தகுதி அடிப்படையில் வேலைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன் நடுவணரசு திட்டங்களுக்கு நிலம் எடுத்த பகுதியில் எத்தனை குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன? அவற்றில் எத்தனை குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நானறிந்து வடுகத்தான்மொழி, ஆற்றுக்குடி ஆகிய ஊர்களில் கடற்படைத்தளம் கட்டும்போது முந்நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வீடு நிலம் வயல் ஆகிய அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு வெளியேற்றப்பட்டனர். கோவன்குளம், விஜயநாராயணம், சிவந்தியாபுரம், மலையன்குடியிருப்பு உள்ளிட்ட பல ஊர்களையும் சேர்த்து மொத்தம் மூவாயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோரில் இருபதுக்கும் குறைவானவர்களுக்கே டி பிரிவில் வேலை கிடைத்தது. எஞ்சியோர் இன்றளவும் ஏமாந்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் 5 சென்ட் வீட்டுமனை வழங்கப்படும் என்றும், 5 செண்டுக்கு மேல் வீட்டுமனை உள்ளோருக்கு அதே அளவு பரப்புள்ள வீட்டுமனை வழங்கப்படும் என்றும், வீடு கட்டித் தரப்படும் அல்லது வீடு கட்டுமானச் செலவு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கட்டபொம்மன் கடற்படைத் தளம் கட்டும்போது வெளியேற்றப்பட்டோர் பரப்பாடி அருகே பாரதிநகரில் நான்குநேரி - திசையன்விளைச் சாலையின் வடபுறத்திலும் விஜயன் கால்வாயின் தென்புறத்திலும் உள்ள நிலத்தில் வீடுகட்டிக் குடியிருக்கின்றனர். கால்வாய் ஓரத்தில் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டியவர்களுக்கு இன்றளவும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை.

மறு குடியமர்வுப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புகளான குடிநீர், மின்சாரம், நியாயவிலைக் கடை, அஞ்சலகம், போக்குவரத்து வசதிகள், கழிப்பறைகள், பள்ளிகள், விளையாட்டுத் திடல், மருத்துவமனை ஆகியவை அமைத்துத் தரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. பாரதிநகரில் குடியேறியோருக்கு இவற்றில் பல வசதிகள் இன்றளவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1980களில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படைத் தளத்துக்கு எடுத்த வளமான நிலத்துக்கு வழங்கிய இழப்பீடு ஏக்கருக்கு 300 ரூபாய் எனப் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ஒவ்வொன்றும் 70 கிலோ கொண்ட 24 மூட்டை (12 கோட்டை) நெல்லும், 12 பொதிப் பருத்தியும் (1200 கிலோ) விளையும். இவற்றின் அந்நாளைய மதிப்பே 6000 ரூபாய். ஓராண்டு விளைச்சலைப்போல் 20 மடங்குத் தொகையை இழப்பீடாக வழங்கியிருக்க வேண்டும். அப்படியென்றால் ஏக்கருக்கு 1,20,000 ரூபாய் வழங்கியிருக்க வேண்டும். அதற்கு மாறாக உண்மையான இழப்பீட்டில் 400 இல் ஒரு பங்கு மட்டுமே அதாவது ஏக்கருக்கு 300 ரூபாய் வழங்கி இருக்கிறார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய ஏமாற்று. 

நிலமில்லாமல் அப்பகுதியில் விறகு வெட்டியும், ஆடுமாடு மேய்த்தும், சாணி பொறுக்கியும் பிழைத்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் இந்தச் சிந்தனையே இல்லை. இப்போது பரந்தூரில் நிலமில்லாமல் கூலிவேலை செய்து பிழைக்கும் மக்களுக்கும் குறைந்தது ஐம்பது இலட்ச ரூபாய் என்கிற இழப்பீடு பெற உரிமை உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

சே.பச்சைமால்கண்ணன்

உலகின் பெரிய திறந்தவெளிக் குடிப்பகம் மெரினா

சென்னையில் அடையாறு, கூவம் ஆறு ஆகியன கடலில் கலக்குமிடத்துக்கு இடைப்பட்ட பகுதி மெரினா என்றழைக்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய எழில்மிகு கடற்கரை என இது கூறப்படுகிறது. நாட்டு விடுதலைப் போராட்டக் காலத்தில் கடற்கரையில் கூடிய பொதுமக்களிடையே தேசியத் தலைவர்கள் எழுச்சி உரையாற்றினர். சுப்பிரமணிய பாரதியார் உள்ளிட்ட பாவலர்கள் தங்கள் நண்பர்களுடன் பல்வேறு கதைகள் பேசி மகிழ்ந்த இடமாகவும் மெரினா கடற்கரை விளங்கியது.

கடற்கரையில் இருந்த சீரணி அரங்கில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. ஆட்சியாளரின் பொறாமையால் இந்த அரங்கம் 2003ஆம் ஆண்டு மேமாதத்தில் ஒரு நாள் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. இருந்த இடம் தடம்தெரியக் கூடாது என்கிற கெடுமதியாளரின் எண்ணத்தால் இடிபாட்டின் பொடிகூட இல்லாத அளவுக்கு அள்ளி அகற்றப்பட்டு அடையாளம் அழிக்கப்பட்டது.

இந்தியாவின் நாலாவது பெரிய நகரமான சென்னையில் மக்களுக்குக் கட்டணமில்லாப் பொழுதுபோக்கு இடமாக மெரினா விளங்குகிறது. அவர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் பல்வகைப் பொருட்களை விற்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகளும் உள்ளன. கைகளிலும் தோளிலும் தலையிலும் சுமந்து பொருட்களை விற்கும் வணிகர்கள், தள்ளுவண்டி வணிகர்கள், மிதிவண்டி வணிகர்கள் ஆகியோருக்கு வாழ்வளிக்கும் மிகப்பெரும் வணிக வளாகமாகவும் மெரினா விளங்குகிறது.

ஒரு காலத்தில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தோருக்கு இரவுநேர இலவசத் தங்குமிடமாக மெரினா விளங்கியது. இரவுநேரத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் நிகழ்ந்ததால் இப்போது இரவு 10 மணிக்குப் பிறகு யாரையும் தங்க விடுவதில்லை. அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு மிகப்பெரிய திடலாகவும் மெரினா விளங்குகிறது. 500 மீட்டர் அகலமுள்ள மணற்பரப்பே இதன் பெருமைகளில் குறிப்பிடத் தக்கது. கடற்கரையோரத்தில் அரைக் கிலோமீட்டர் தொலைவுக்கு எந்தக் கட்டுமானமும் இருகக் கூடாது என்கிற கடற்கரை மேலாண்மை விதி பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தகைய விதிகள் எதுவும் இல்லாமலேயே துறைமுகத்தைத் தவிர மற்ற கட்டுமானங்கள் எல்லாம் கடலில் இருந்து அரைக்கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும் வகையிலேயே கட்டப்பட்டன.

இன்றைய துறைமுகம், கடற்கரை ரயில் நிலையத்துக்கு எதிரில் உள்ள வணிகக் கட்டடங்கள், உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, கோட்டை, கொத்தளம், பல்கலைக்கழகம், அரசுத் துறை அலுவலகக் கட்டடங்கள், மாநிலக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, இராணி மேரிக் கல்லூரி, காவல்துறைத் தலைமையகம், வானொலி நிலையம் என அனைத்துமே விதிகளே இல்லாக் காலத்திலும் கட்டுப்பாட்டுடன் கட்டப்பட்டன.

மெரினாவில் மரங்கள் வளர்த்தால் மணற்பரப்பு மறைந்து விடும் எனக் கருதி அதைக்கூடச் செய்யவில்லை ஆங்கில அரசு. நாடு விடுதலையடைந்தபின் இதையெல்லாம் கருத்திற்கொள்ளாமல் முதலமைச்சர் அண்ணாதுரை இறந்தபோது முதல் அத்துமீறலாக அவரது உடல் மெரினாவில் கூவம் ஆற்றுக்குத் தென்கரையில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டப்பட்டது. 1987 டிசம்பர் 24ஆம் நாள் அப்போதைய முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் இறந்தபோது அவரது உடலும் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டப்பட்டது. ஆளும்போதே இறந்து கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்டுவதை அரசியல் தலைவருக்குக் கிடைக்கும் பெரும்பேறாகத் தமிழ்நாட்டின் இருபெரும் திராவிடக் கட்சிகளும் கருதுகின்றன. பின்னாளில் செயலலிதா, கருணாநிதி ஆகியோர் இறந்தபோது அவர்களின் உடல்கள் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது இதைக் காட்டும் வகையில் உள்ளது. நால்வரின் உடல்களை அடக்கம் செய்தது மட்டுமல்லாமல் அவர்களின் நினைவாகக் கடற்கரை மேலாண்மை விதிகளை மீறிப் பல்வேறு கட்டுமானங்களையும் இரு திராவிடக் கட்சிகளும் மக்கள் பணத்தில் எழுப்பி வருகின்றன. இரு தேசியக் கட்சிகளும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக அவ்வப்போது கூக்குரலிடும் இரு திராவிடக் கட்சிகளும் தங்கள் தலைவர்களின் பெயரில் கடற்கரையில் நினைவிடங்கள் எழுப்ப எதையாவது விட்டுக்கொடுத்துத் தேசியக் கட்சியின் நடுவணரசில் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலைப் பெற்று விடுகின்றன.

இது ஒருபுறமிருக்க எஞ்சியுள்ள மணற்பரப்பில் மக்கள் விட்டுச்செல்லும் பல்வேறு கழிவுகளை அகற்றித் தூய்மைப்படுத்தச் சென்னை மாநகராட்சி சார்பில் ஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தாள், நெகிழி, துணிகள், செருப்புகள், சருகுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றிக் கடற்கரை மணற்பரப்பைத் தூய்மையாக வைத்திருக்கின்றன.

கடற்கரையில் கடைகள் வைத்திருப்போர் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்துள்ளனர். எனினும் ஒருசிலர் பொறுப்பில்லாமல் கழிவுகளைத் தொட்டியில் போடாமல் மணற்பரப்பில் வீசிச் செல்கின்றனர்.

பான்மசாலா, குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் தடை விதிக்கப்பட்டபோதும் சட்டத்தை மீறிக் கடைகளில் விற்கப்படுவதாகக் கூறிச் சட்டமன்றத்துக்குள் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களும் போராட்டம் நடத்தினர். அன்றும் இன்றும் சென்னையில் பான்மசாலா, குட்கா விற்பதற்குக் கடற்கரை மணற்பரப்பில் கிடக்கும் காலிப் பொட்டலங்களே சான்று. அரசு நினைத்தால் இவ்வளவு மணற்பரப்பில் இவ்வளவு காலிப்பொட்டலங்கள் கிடந்தன எனக் கணக்கிட்டுவிட முடியும்.

கடற்கரையில் மணல், சிப்பி, சங்கு, சோவி, நத்தை ஓடுகள் கிடப்பது இயல்பு. இத்தகைய மணற்பரப்பையே நாம் கண்டிருக்கிறோம். கற்பனை செய்து பார்த்திருப்போம். மாறாக மணற்பரப்பில் ஆங்காங்கே மதுப் புட்டில்களும் அவற்றின் மூடிகளும் பரவிக் கிடக்கின்றன. குடிகாரர்களில் அறிவில்லாச் சிலர் கற்களில் வீசியெறிந்த மதுப்புட்டில்கள் உடைந்து மணலில் மேற்பரப்பிலும் புதைந்தும் கிடக்கின்றன. கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பொறிகளில் புட்டில்களின் கண்ணாடிகள் சிக்குவதில்லை. மாறாகப் புட்டில்கள் அந்தப் பொறியில் சிக்கும்போது உடைந்து கண்ணாடித் துண்டுகளாகும் வாய்ப்புள்ளது. முன்பெல்லாம் ஓரிரு இடங்களில் காலி மதுப்புட்டில்களையும் உடைந்த கண்ணாடிகளையும் காண முடிந்தது. இப்போது ஓர் சதுர அடி மணற்பரப்பில் குறைந்தது 5 கண்ணாடித் துண்டுகளாவது கிடக்கின்றன. இவற்றில் ஒரு சில மிகக் கூர்மையாக உள்ளன.

கடற்கரைக்கு வருவோர் பெரும்பாலும் காலணி அணிந்திருப்பதாலும், கால்பட்டதும் மணலின் நெகிழ்வுத் தன்மையால் கண்ணாடித் துண்டு மணலில் புதைவதாலும் இவை காலில் குத்திப் புண்படுத்துவதில்லை. இருந்தாலும் கடற்கரையெங்கும் இயற்கை மணற்பரப்பு கண்ணாடித் துண்டுகள் நிரம்பி மாசுபட்டுக் கிடக்கிறது. பள்ளி, கோவில் வளாகங்களுக்கு வெளியிலும், பேருந்து நிலையத்திலும், ரயில்களின் கழிவுத் தொட்டிகள், சாலையோரம், ரயில்பாதையோரம், காடு, வயல் எங்கும் காலி மதுப்புட்டில்கள் கிடக்கின்றன. உடைந்த கண்ணாடித் துண்டுகள் மனிதர்கள் மட்டுமல்லாமல் காட்டு விலங்குகளுக்கும் காலில் குத்திப் புண்படுத்துகின்றன. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. காலி மதுப்புட்டில்களை மதுக் கடைகளிலேயே திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அப்போது புட்டிலை ஒப்படைத்ததற்காகச் சிறு தொகையைத் திரும்பி வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுப்புட்டில்களையே அவற்றின் அதிகப்பட்ச விலைக்கு மேலே 10 ரூபாய், 20 ரூபாய் அதிக விலைக்கு விற்பது; மதுப்புட்டில் விலை 190 ரூபாய், 280 ரூபாய் என்றிருந்தால் மீதி 10 ரூபாய், 20 ரூபாய் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவது என்கிற பாணியில் பணித்திறனைக் கொண்டுள்ள மதுக்கடைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவை உடனே பின்பற்றுவார்களா என்ன?

அதன் விளைவுதான் உலகின் எழில்மிகு மெரினா கடற்கரை பெரிய திறந்தவெளிக் குடிப்பகமாக மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டை அரசு மறுக்கக் கூடும். கடற்கரையில் மது குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பது, குடிகாரர்கள் தங்களுக்குள் சண்டையிடுவது, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, கொலை முயற்சிகள், கொலைகள், தாக்குதல்கள் என அவ்வப்போது வெளியாகும் செய்திகள் அதை மெய்ப்பிக்கின்றன. இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட ஆட்கள் கூட அரசின் மிரட்டலால் பிறழ் சாட்சிகளாக மாறக் கூடும். ஆனால் இயற்கைச் சாட்சியாகக் கடற்கரை மணற்பரப்பில் காலி மதுப் புட்டில்களும் உடைந்த கண்ணாடித் துண்டுகளும் கிடக்கின்றன. படிக்க இலக்கு வைக்காமல் குடிக்க இலக்கு வைக்கும் மாநிலத்தில் இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்?

சே.பச்சைமால்கண்ணன்

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

அனைவருக்கும் இலவச மின்சாரம் – வாக்கு வங்கி அரசியல்

 

தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு முதல் நூறு அலகுகள் வரை கட்டணம் இல்லை என அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஏழை பணக்காரர் பாகுபாடின்றி வீட்டு மின்னிணைப்பு வைத்துள்ள அனைவருக்கும் ஓரிணைப்புக்கு 2 மாதத்துக்கு நூறு அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒரு வீடு வைத்திருப்போருக்கும், ஒரே ஊரில் பல வீடுகள் வைத்திருப்போருக்கும், தமிழகத்தில் பல நகரங்களில் பல மாவட்டங்களில் பல வீடுகள் வைத்திருப்போருக்கும் ஒவ்வொரு வீட்டு மின்னிணைப்புக்கும் நூறு அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழகம் சமூக நீதியின் பிறப்பிடம், சமூக நீதியின் கோட்டை எனப் பறைசாற்றிக் கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளுமே வாக்கு வங்கியைக் கருதியே இலவசங்கள் வழங்குகின்றன என்பதற்கு அனைவருக்கும் நூறு அலகு மின்சாரம் வழங்கும் இந்த முறை ஒரு சான்று.

பெரிய தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருந்தோருக்கும் அரசின் சார்பில் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது மற்றொரு சான்று.

அனைவரும் தங்கள் குடும்ப அட்டையை அரிசி பெறும் குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியது இன்னுமொரு சான்று.

சென்னை மாநகராட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்குப் பேருந்தில் இலவசப் பயணச்சீட்டு வழங்கியது கூடுதலாக ஒரு சான்று.

கட்டுமானத் தொழில், வீட்டு வேலை செய்து பிழைக்கும் பெண்களும் ஆண்களும் கட்டணம் செலுத்திப் பேருந்தில் செல்ல விரும்பும்போது, ஓய்வூதியம் பெறுவோர், உழைத்துப் பொருளீட்டுவோர், தன்மானத்துடன் வாழ விரும்புவோருக்கு இலவசப் பேருந்துப் பயணம் எனப் பொதுப் பணத்தை வீணாக்குவது அவர்களின் தன்மானத்தைக் குறைக்கும் செயலேயன்றி வேறொன்றுமில்லை.

ஊர்ப்புறத்தில் 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தும் மிதிவண்டியில் சென்றும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஒரு மாணவன் தன்வீட்டருகில் பல பள்ளிகள் இருந்தும் பத்துப் பள்ளிகளைத் தாண்டிப் பதினோராவது பள்ளிக்குச் சென்று படிக்கும் நிலை இலவசப் பேருந்துப் பயணச்சீட்டு வழங்குவதால் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இரட்டை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஒன்று மாணவனுக்கு இலவசப் பயணம். மற்றொன்று மாணவர்கள் ஏறியதால் பேருந்தில் இடமில்லாமல் பயணச் சீட்டு எடுத்துச் செல்ல வேண்டிய பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் போகிறது. மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவசப் பயணம் 1990ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. போக்குவரத்துத் துறையில் அரசின் இயலாமை, செயலற்ற தன்மை, ஊழல் ஆகியவற்றை மறைக்கும் நோக்கிலேயே மாணவர்களுக்கான இலவசப் பயணம் 32 ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதுபோக முதியோருக்கு மாநகரப் பேருந்தில் இலவசப் பயணம் அதிமுக அரசு அறிவித்துச் செயல்படுத்தியதும் வாக்கு வங்கி அரசியல் என்கிற வகைக்குள்தான் வரும்.

அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணம் என இப்போது திமுக அரசு அறிவித்தது இவ்வகையில் இப்போது வந்த புது அறிவிப்பு. இவையெல்லாம் சமூக நீதியின்பாற் பட்டதுதான் எனக் கூறும் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் அவர்களுக்குப் பல்லக்குத் தூக்கும் திராவிடப் பரிவாரங்களுக்கும் உண்மையிலேயே சமூக நீதி தெரியவில்லையா? அல்லது தெரிந்துகொண்டு தமிழ்மக்களை ஏமாற்றுகின்றனவா? 

மக்களாட்சி, நல்லாட்சி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி என்பது மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமநிலைக்குக் கொண்டுவருவது ஆகும். உயர்நிலையில் வரி செலுத்தும் தகுதியுடன் உள்ளோரைத் தாழ்த்தாமல் அவர்களிடம் அதிக வரியிறுத்து அதை வரி செலுத்தத் தகுதியில்லா ஏழைகளுக்குச் செலவிட்டு அவர்களை மேனிலைக்குக் கொண்டுவருவது இவ்வகையைச் சேரும். பிறருக்கு வழங்கும் இலவசங்கள் எல்லாம் கைம்மாறு (வாக்கு வங்கி) கருதிச் செய்வதாகும் என இருபெரும் திராவிடக் கட்சியாருக்கும், அவர்களைப் போற்றிப் புகழும் ஊடகவியலாளர்களுக்கும் தெரியவில்லை என்பது வியப்புக்குரியதே. இதுபற்றித் திருக்குறளில் ஈகை என்னும் அதிகாரத்தில் 221ஆவது திருக்குறளில் திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து (திருக்குறள் 221)

வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை. பிறருக்குத் தருவது எல்லாம் கைம்மாறு எதிர்பார்த்துத் தருவதாகும் என்பதே இந்தத் திருக்குறளின் பொருள்.

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் கூறும் உறுதிமொழிகள், பொருளாதாரச் சமநிலையை உருவாக்கச் செலவிட வேண்டிய வரிப்பணத்தைச் செல்வந்தர் உட்பட அனைவருக்கும் வாரிவழங்கி வீணாக்கும் மூடச் செயல், இலவசங்கள் என்ற பெயரில் பொதுப்பணத்தை வீணாக்கும் இந்தப் போக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த வழக்கில் தீர்வுகாண மேற்கண்ட திருக்குறளில் பொதிந்துள்ள பொருள் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

இவ்வகையில் தமிழகத்தின் முந்தைய அதிமுக அரசும், இப்போதைய திமுக அரசும் வீட்டு மின்னிணைப்புள்ள அனைவருக்கும் 2 மாதங்களுக்கு முதல் 100 அலகு மின்சாரம் இலவசம் என்பதை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகின்றன.

இரு மாதங்களுக்கு நூறு அலகுவரை பயன்படுத்துவோருக்கு இலவசம் என்றால் வறியார்க்கு ஈவதாகவும், மின் சிக்கனத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். பொருளாதாரச் சமநிலையை உருவாக்குவதற்கான ஒரு வழியாகவும் அமையும்.

அதற்கு மாறாக அனைவருக்கும் 100 அலகு மின்சாரம் இலவசம் என்பது கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போன்றதாகும். வரி செலுத்த, கட்டணம் செலுத்தத் தகுதிபடைத்தோருக்கு இலவசம் வழங்குவது வறியார்க்கு வழங்கும் இலவசத்தை நீர்த்துப் போகச் செய்யும் செயலாகும். அதுமட்டுமல்லாமல் இது பொருளாதாரச் சமநிலையை எட்டும் இலக்குக்கு எதிரானதும் ஆகும். முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், பலகோடி ரூபாய் வருமான வரி செலுத்துவோர், ஓர் ஊரில் பல வீடுகள் வைத்துள்ளோர், பல மாவட்டங்களில் பல நகரங்களில் பல வீடுகள் வைத்திருப்போருக்கும் 100 அலகு மின்சாரம் இலவசம் என்பது சமூக நீதியின்பாற்பட்டது என இருபெரும் திராவிடக் கட்சிகளும் அவற்றின் அடிவருடிகளும் கூறுவது எத்தனை ஏமாற்று என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும்..

பொருளாதாரச் சமநிலையை எட்டவும், மின்சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் பின்வருமாறு கட்டண வரம்பை வகுக்கலாம். இரு மாதங்களுக்கு 100 அலகுவரை பயன்படுத்துவோருக்கு இலவசம் என்றும், அதன்பின் நூறு நூறு அலகுகளுக்கு ஒவ்வொரு வகைக் கட்டணம் வரையறுக்கலாம். ஒவ்வொரு நூறு அலகு என்னும் வரம்பைத் தாண்டுவோருக்கு முதல் அலகில் இருந்து மொத்த அலகுகளுக்கும் உயர் வரம்பில் உள்ள கட்டணத்தையே பெறலாம்.

100 அலகு வரை பயன்படுத்துவோருக்கு இலவசம்

200 அலகு வரை பயன்படுத்துவோருக்கு அலகுக்கு 2 ரூபாய் எனக் கட்டணம் விதித்து முதல் அலகில் இருந்தே அதைக் கணக்கிட வேண்டும். இவ்வரம்பில் 150 அலகு பயன்படுத்தினால் 300 ரூபாய் கட்டணம்.

300 அலகு வரை பயன்படுத்துவோருக்கு அலகுக்கு 3 ரூபாய் கட்டணம் எனக் கொண்டு ஒருவர் 250 அலகு பயன்படுத்தியிருந்தால் 750 ரூபாய் பெறலாம். இவ்வாறு ஒவ்வொரு நூறு அலகுக்கும் உயர்ந்துசெல்லும் வகையில் கட்டணம் வரையறுத்து அதை முதல் அலகில் இருந்தே கணக்கிடுவது பொருளாதாரச் சமநிலையை எட்டவும், மின்சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் உதவும் என்பதை ஆட்சியாளர்களும் மக்களும் அறிந்துகொள்ள வேண்டும்.

சே.பச்சைமால்கண்ணன்