தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு முதல் நூறு அலகுகள் வரை கட்டணம் இல்லை என அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஏழை பணக்காரர் பாகுபாடின்றி வீட்டு மின்னிணைப்பு வைத்துள்ள அனைவருக்கும் ஓரிணைப்புக்கு 2 மாதத்துக்கு நூறு அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒரு வீடு வைத்திருப்போருக்கும், ஒரே ஊரில் பல வீடுகள் வைத்திருப்போருக்கும்,
தமிழகத்தில் பல நகரங்களில் பல மாவட்டங்களில் பல வீடுகள் வைத்திருப்போருக்கும் ஒவ்வொரு
வீட்டு மின்னிணைப்புக்கும் நூறு அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழகம் சமூக நீதியின் பிறப்பிடம், சமூக நீதியின் கோட்டை
எனப் பறைசாற்றிக் கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளுமே வாக்கு வங்கியைக் கருதியே இலவசங்கள்
வழங்குகின்றன என்பதற்கு அனைவருக்கும் நூறு அலகு மின்சாரம் வழங்கும் இந்த முறை ஒரு சான்று.
பெரிய தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருந்தோருக்கும்
அரசின் சார்பில் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது மற்றொரு சான்று.
அனைவரும் தங்கள் குடும்ப அட்டையை அரிசி பெறும் குடும்ப அட்டையாக
மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியது இன்னுமொரு சான்று.
சென்னை மாநகராட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்குப்
பேருந்தில் இலவசப் பயணச்சீட்டு வழங்கியது கூடுதலாக ஒரு சான்று.
கட்டுமானத் தொழில், வீட்டு வேலை செய்து பிழைக்கும் பெண்களும்
ஆண்களும் கட்டணம் செலுத்திப் பேருந்தில் செல்ல விரும்பும்போது, ஓய்வூதியம் பெறுவோர்,
உழைத்துப் பொருளீட்டுவோர், தன்மானத்துடன் வாழ விரும்புவோருக்கு இலவசப் பேருந்துப் பயணம்
எனப் பொதுப் பணத்தை வீணாக்குவது அவர்களின் தன்மானத்தைக் குறைக்கும் செயலேயன்றி வேறொன்றுமில்லை.
ஊர்ப்புறத்தில் 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் தொலைவுக்கு
நடந்தும் மிதிவண்டியில் சென்றும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில்
ஒரு மாணவன் தன்வீட்டருகில் பல பள்ளிகள் இருந்தும் பத்துப் பள்ளிகளைத் தாண்டிப் பதினோராவது
பள்ளிக்குச் சென்று படிக்கும் நிலை இலவசப் பேருந்துப் பயணச்சீட்டு வழங்குவதால் மட்டுமே
ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இரட்டை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஒன்று மாணவனுக்கு
இலவசப் பயணம். மற்றொன்று மாணவர்கள் ஏறியதால் பேருந்தில் இடமில்லாமல் பயணச் சீட்டு எடுத்துச்
செல்ல வேண்டிய பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் போகிறது. மாணவர்களுக்கு அரசு பேருந்தில்
இலவசப் பயணம் 1990ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. போக்குவரத்துத் துறையில்
அரசின் இயலாமை, செயலற்ற தன்மை, ஊழல் ஆகியவற்றை மறைக்கும் நோக்கிலேயே மாணவர்களுக்கான
இலவசப் பயணம் 32 ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதுபோக முதியோருக்கு மாநகரப் பேருந்தில் இலவசப்
பயணம் அதிமுக அரசு அறிவித்துச் செயல்படுத்தியதும் வாக்கு வங்கி அரசியல் என்கிற வகைக்குள்தான்
வரும்.
அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணம் என இப்போது திமுக
அரசு அறிவித்தது இவ்வகையில் இப்போது வந்த புது அறிவிப்பு. இவையெல்லாம் சமூக நீதியின்பாற்
பட்டதுதான் எனக் கூறும் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் அவர்களுக்குப் பல்லக்குத்
தூக்கும் திராவிடப் பரிவாரங்களுக்கும் உண்மையிலேயே சமூக நீதி தெரியவில்லையா? அல்லது
தெரிந்துகொண்டு தமிழ்மக்களை ஏமாற்றுகின்றனவா?
மக்களாட்சி, நல்லாட்சி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி
என்பது மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமநிலைக்குக் கொண்டுவருவது ஆகும்.
உயர்நிலையில் வரி செலுத்தும் தகுதியுடன் உள்ளோரைத் தாழ்த்தாமல் அவர்களிடம் அதிக வரியிறுத்து
அதை வரி செலுத்தத் தகுதியில்லா ஏழைகளுக்குச் செலவிட்டு அவர்களை மேனிலைக்குக் கொண்டுவருவது
இவ்வகையைச் சேரும். பிறருக்கு வழங்கும் இலவசங்கள் எல்லாம் கைம்மாறு (வாக்கு வங்கி)
கருதிச் செய்வதாகும் என இருபெரும் திராவிடக் கட்சியாருக்கும், அவர்களைப் போற்றிப் புகழும்
ஊடகவியலாளர்களுக்கும் தெரியவில்லை என்பது வியப்புக்குரியதே. இதுபற்றித் திருக்குறளில்
ஈகை என்னும் அதிகாரத்தில் 221ஆவது திருக்குறளில் திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து (திருக்குறள் 221)
வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை. பிறருக்குத்
தருவது எல்லாம் கைம்மாறு எதிர்பார்த்துத் தருவதாகும் என்பதே இந்தத் திருக்குறளின் பொருள்.
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் கூறும் உறுதிமொழிகள், பொருளாதாரச்
சமநிலையை உருவாக்கச் செலவிட வேண்டிய வரிப்பணத்தைச் செல்வந்தர் உட்பட அனைவருக்கும் வாரிவழங்கி
வீணாக்கும் மூடச் செயல், இலவசங்கள் என்ற பெயரில் பொதுப்பணத்தை வீணாக்கும் இந்தப் போக்குக்கு
எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த வழக்கில் தீர்வுகாண மேற்கண்ட திருக்குறளில்
பொதிந்துள்ள பொருள் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
இவ்வகையில் தமிழகத்தின் முந்தைய அதிமுக அரசும், இப்போதைய
திமுக அரசும் வீட்டு மின்னிணைப்புள்ள அனைவருக்கும் 2 மாதங்களுக்கு முதல் 100 அலகு மின்சாரம்
இலவசம் என்பதை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகின்றன.
இரு மாதங்களுக்கு நூறு அலகுவரை பயன்படுத்துவோருக்கு இலவசம்
என்றால் வறியார்க்கு ஈவதாகவும், மின் சிக்கனத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். பொருளாதாரச்
சமநிலையை உருவாக்குவதற்கான ஒரு வழியாகவும் அமையும்.
அதற்கு மாறாக அனைவருக்கும் 100 அலகு மின்சாரம் இலவசம் என்பது
கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போன்றதாகும். வரி செலுத்த, கட்டணம்
செலுத்தத் தகுதிபடைத்தோருக்கு இலவசம் வழங்குவது வறியார்க்கு வழங்கும் இலவசத்தை நீர்த்துப்
போகச் செய்யும் செயலாகும். அதுமட்டுமல்லாமல் இது பொருளாதாரச் சமநிலையை எட்டும் இலக்குக்கு
எதிரானதும் ஆகும். முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள்,
பலகோடி ரூபாய் வருமான வரி செலுத்துவோர், ஓர் ஊரில் பல வீடுகள் வைத்துள்ளோர், பல மாவட்டங்களில்
பல நகரங்களில் பல வீடுகள் வைத்திருப்போருக்கும் 100 அலகு மின்சாரம் இலவசம் என்பது சமூக
நீதியின்பாற்பட்டது என இருபெரும் திராவிடக் கட்சிகளும் அவற்றின் அடிவருடிகளும் கூறுவது
எத்தனை ஏமாற்று என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும்..
பொருளாதாரச் சமநிலையை எட்டவும், மின்சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும்
பின்வருமாறு கட்டண வரம்பை வகுக்கலாம். இரு மாதங்களுக்கு 100 அலகுவரை பயன்படுத்துவோருக்கு
இலவசம் என்றும், அதன்பின் நூறு நூறு அலகுகளுக்கு ஒவ்வொரு வகைக் கட்டணம் வரையறுக்கலாம்.
ஒவ்வொரு நூறு அலகு என்னும் வரம்பைத் தாண்டுவோருக்கு முதல் அலகில் இருந்து மொத்த அலகுகளுக்கும்
உயர் வரம்பில் உள்ள கட்டணத்தையே பெறலாம்.
100 அலகு வரை பயன்படுத்துவோருக்கு இலவசம்
200 அலகு வரை பயன்படுத்துவோருக்கு அலகுக்கு 2 ரூபாய் எனக்
கட்டணம் விதித்து முதல் அலகில் இருந்தே அதைக் கணக்கிட வேண்டும். இவ்வரம்பில் 150 அலகு
பயன்படுத்தினால் 300 ரூபாய் கட்டணம்.
300 அலகு வரை பயன்படுத்துவோருக்கு அலகுக்கு 3 ரூபாய் கட்டணம்
எனக் கொண்டு ஒருவர் 250 அலகு பயன்படுத்தியிருந்தால் 750 ரூபாய் பெறலாம். இவ்வாறு ஒவ்வொரு
நூறு அலகுக்கும் உயர்ந்துசெல்லும் வகையில் கட்டணம் வரையறுத்து அதை முதல் அலகில் இருந்தே
கணக்கிடுவது பொருளாதாரச் சமநிலையை எட்டவும், மின்சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் உதவும்
என்பதை ஆட்சியாளர்களும் மக்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
சே.பச்சைமால்கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக