சனி, 26 நவம்பர், 2022

வருவாயைப் பெருக்கிச் செலவைக் குறைக்கும் அரசு

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (திருக்குறள் 43) என இல்லறத்தாரின் கடமையைக் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர். மூதாதையர், தெய்வம், விருந்தினர், உறவினர், குடும்பத்தினர் என்கிற ஐவகைப்பாட்டினரையும் பேணுவது இல்லறத்தாரின் தலையாய கடமை என்பது இதன் பொருள். விளைச்சலில் ஆறிலொரு பங்கை மன்னன் (இறையாக) வரியாகப் பெற்ற காலத்தில் மீதி ஐந்துப்பங்கை எவ்வாறு செலவிட்டு வந்தனர் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. நல்லரசு வல்லரசு மக்கள்நலன் காக்கும் அரசு என நடுவணரசும் மாநில அரசுகளும் கூறிவரும் இக்காலத்தில் பெருஞ்செல்வம் படைத்தோர் அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்பது வருமானவரி வழக்குகளின் எண்ணிக்கையில் இருந்து தெரிய வருகிறது. பொய்க் கணக்கு எழுதியும், தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்கியும் வரி செலுத்தாமல் அரசைச் செல்வர்கள் ஏய்த்து வருவதை அந்த வழக்குகள் காட்டுகின்றன. அதேநேரத்தில் ஊதியம் பெறும் பிரிவினரிடம் மூலத்திலேயே வருமான வரி பிடிக்கப்படுகிறது. சொந்த வீடு, நிலம், ஊர்தி என எந்தவொரு வசதியும் இல்லாமல், வாழ்க்கைத் தேவையை நிறைவுசெய்யப் போதிய பணமில்லாமல், வாயையும் வயிற்றையும் கட்டிச் செலவைச் சுருக்கி வாழ்வோரிடம் மூலத்திலேயே கட்டாயமாக வருமான வரி பிடிக்கப்படுகிறது. செல்வர்களிடம் வரியைப் பெற முடியாமல் வழக்குத் தொடுப்பதும், ஏழைகளிடம் மூலத்திலேயே வரி பிடிப்பதும் நடுவண் நேரடி வரிகள் வாரியத்தின் செயல். உரிய செலவுக்கணக்கைக் காட்டினால் பிடித்த வரித்தொகையில் இருந்து திரும்பப் பெறலாம் என விதி வகுத்துள்ளனர். ஆனைவாயில் சென்ற கரும்பு சாணியாக வெளிவருமா? சாறாக வருமா? என்பதற்கான விடையை அறிந்தோருக்கு அதிகப்படியான வரியைத் திரும்பப் பெறுவதற்கான செயலும் அத்தகையதே என்பது தெரியும். நேரடி வரி பெறுவதில் ஊதியம் பெறும் பிரிவினரே பெரும்பாலும் அடிபடுகின்றனர். செல்வர்கள் பொய்க் கணக்குக் காட்டி ஏய்த்து விடுவதைப் பல்வேறு வழக்குகளில் பார்த்து வருகிறோம்.

சரக்கு சேவை வரி என்னும் மறைமுக வரி விதிப்பிலும் ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். துணிவெளுக்கும் சலவைக்கட்டி முதல் பசியாற்றும் உணவுப்பொருட்கள் வரை அத்தனைக்கும் வரி. உயர் வருமானப் பிரிவினருக்கு அதிக விழுக்காடும், குறைந்த வருமானப் பிரிவினருக்குக் குறைந்த விழுக்காடும் வருமான வரி பெறப்படுகிறது. ஆனால் மறைமுக வரியான சரக்கு சேவை வரி அனைவருக்கும் ஒரே அளவுதான். உலகச் செல்வந்தர் பட்டியலில் உள்ளவரும், நாட்டின் கடைக்கோடி ஏழையும் 100 நூறு ரூபாய்க்குச் சலவைக் கட்டி வாங்கினால் இருவருமே 18 ரூபாய் வரி கட்ட வேண்டும். இதில் நடுவண் மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்துகொண்டு ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றன. அதிக வரி விகிதம் உள்ளதாகக் குறைகூறுவதுடன், வரிவிகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிவரும் மாநில அரசுகளும் இந்த வரிவருவாயில் சமப் பங்கைப் பெறுவது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் உழைத்துப் பிழைப்போருக்குத் தன்னையும் தன் குடும்பத்தினரையும் பேணுவதற்கே போதுமான பொருள் கிட்டுவதில்லை. அவர்கள் ஈட்டும் வருமானத்தில் மறைமுக வரியாக (சரக்கு சேவை வரி) 5 முதல் 18 விழுக்காடு வரை சென்றுவிடுகிறது. வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வருவோருக்கு இரண்டரை இலட்ச ரூபாய் வரை வரி விலக்கு உள்ளது. (அவர்களும் மறைமுக வரிவிதிப்புக்குத் தப்ப முடியாது). அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு இரண்டரை இலட்ச ரூபாய்க்கும் 5 விழுக்காடு என்கிற அளவில் வருமான வரி உயர்ந்துகொண்டே சென்று 15 இலட்ச ரூபாய்க்கு மேல் செல்லும்போது 30 விழுக்காடாக முடிகிறது. ஆலைக் கரும்பில் சாறுபிழிவதைப்போல் ஏழைகளிடம் 18 விழுக்காடு வரி பெற்றால் அவர்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை எவ்வாறு நிறைவுசெய்ய இயலும்? இவற்றுக்கு அரசிடம் கையேந்த வேண்டிய தன்மானமில்லா நிலையிலேயே தொடர்ந்து உள்ளனர். 18 விழுக்காடு சரக்கு சேவை வரி என்பது மன்னராட்சிக் காலத்தில் விதித்த ஆறிலொரு பங்கு என்னும் விகிதத்தைவிட அதிகமாகும். ஆண்டுக்கு 15 இலட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 விழுக்காடு வருமான வரி என்பதும் மிகவும் அதிகப்படியான விகிதமே ஆகும். நாடுகளிடையே தடையற்ற வணிகம், வரியில்லா வணிகம் என்கிற உடன்பாடுகளைச் செய்துகொள்ளும் அரசு உள்நாட்டில் வரிவிகிதத்தைக் கடுமையாக உயர்த்திக் கசக்கிப் பிழிகிறது. இவ்வளவு அதிக வரி விதிக்கப்படும் நாட்டில் வளங்கள் எப்படிப் பெருகும்?

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு,

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு” (திருக்குறள் 739) என இலக்கணம் வகுத்துள்ளார் திருவள்ளுவர். வளங்களை நாடிச் செல்லும் நிலையில் உள்ளது நாடல்ல; தேடிச் செல்லும் நிலை இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கும் வளங்களைக் கொண்டது நாடு என்பது அதன்பொருள். மண், மணல், கல், கனிமம், மரங்கள் என இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் நிலமாக உள்ள நம் நாடு, நாடு என்னும் இலக்கணத்துக்கு உட்படுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு,

“இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு” (திருக்குறள் 385) என இலக்கணம் வகுத்துள்ளார் திருவள்ளுவர்.

வருமான வரி, உற்பத்தி வரி, சரக்கு சேவை வரி என்னும் பெயர்களில் வருவாய் வழிகளை உண்டாக்கிப் பெருந்தொகையை ஈட்டும் அரசுகள், அவற்றை ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் வகுத்துச் செலவிடுகின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். செல்வந்தர்கள் என்னும் மேட்டை வரி விதிப்பால் வெட்டி அதைக் கொண்டு நலவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி ஏழைகளின் வறுமைப் பள்ளத்தை நிரப்பி இரு பிரிவினரையும் ஏற்றத்தாழ்வற்ற சமநிலைக்குக் கொண்டுவருவதே மக்கள்நல அரசின் இறுதிநோக்கமாக இருக்க வேண்டும். இலட்சம் கோடி ரூபாய் வைத்திருப்போனிடமும், நூறு ரூபாய் வைத்திருப்போனிடமும், நூறு ரூபாய்ப் பொருளுக்கு 18 ரூபாய் வரி பெறும் அரசு அதை இருவருக்குமே சமமாகச் செலவிட்டால் எப்படி ஏற்றத்தாழ்வு ஒழியும்? மேடு மேலும் உயரும்; பள்ளம் மேலும் ஆழமாகும். இத்தகைய சுரண்டல் வரி விதிப்பையே இந்தியா கொண்டுள்ளது. செல்வந்தர்கள் ஒருநேரத்தில் செலவழிப்பதைவிடக் குறைவான தொகையே ஏழைகளின் மாத வருமானமாக, ஆண்டு வருமானமாக உள்ளதும் இந்த ஏற்றத்தாழ்வைக் காட்டும் சான்றாகும்.

இந்தியாவில் உழவர்கள் பயிரிடும் நிலத்தையும், குடியிருந்த வீட்டையும் வறுமையால் விற்பதும், கடன்சுழலில் சிக்கித் தற்கொலை செய்வதும், சிறுகுறுந்தொழில், குடிசைத் தொழில் செய்தோர் கடன்சுமையால் தொழில்களை விட்டு வெளியேறுவதும், செல்வந்தர்களின் சொத்துமதிப்பு கொரோனா சூழலுக்குப் பின் பல மடங்கு உயர்ந்துள்ளதும் இதை மெய்ப்பிக்கின்றன. மக்களை அரசுகள் சுரண்டுவதையும், எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யாததையும் காட்டும் அடையாளங்களாகப் பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகிதம் உயர்வு, வரி விகிதம் உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியன உள்ளன.

மக்களிடம் அரசு வரி வாங்குவது எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்பதைப் புறநானூற்றுப் பாடலில் புலவர் பிசிராந்தையார் எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளார். வயல்நெல்லை அறுத்துச் சோறுபொங்கிக் கவளங்களாக உருட்டி யானைக்குக் கொடுத்தால் பலநாட்களுக்கு உணவாகும் என்றும், நெல்வயலில் யானையை மேயவிட்டால் அது தின்பதைவிடக் காலால் மிதித்து வயலை அழித்துவிடும் என்றும் கூறியுள்ளார். யானை வயலில் இறங்கி மேயும் வரிமுறையையே இப்போதைய நடுவண் மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. யானை வாயில் சென்ற பயிராக வரிவிதிப்பில் ஏழைகளின் ஊதியம் கரைகிறது. யானை காலில் மிதிபட்டதுபோல் அவர்களின் வாழ்வு அழிகிறது.

கொடுங்கோல் அரசு மக்களிடம் அளவுக்கதிகமாக இறையிறுப்பது (வரி பெறுவது) இரவு (பிச்சை எடுத்தல்) என்றும், அது கூரிய வேலுடன் காட்டுவழியில் நின்றுகொண்டு வழிப்போக்கர்களிடம் பொருட்களைப் பறிப்பதைப் போன்றது என்றும் கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு (திருக்குறள் 552).

சரக்குப் போக்குவரத்துக்கான மின்னணு வழிச்சீட்டு, ஊர்திகளுக்கான நெடுஞ்சாலைச் சுங்கக் கட்டணம் ஆகியவற்றைத் திருவள்ளுவரின் பார்வையிலேயே பார்க்க வேண்டியுள்ளது. சுங்கக் கட்டணம் பெறுவதிலும், ஆண்டுக்காண்டு கட்டணத்தை உயர்த்துவதிலும் அரசு காட்டும் அதே அளவு அக்கறையைச் சாலையைச் செப்பனிட்டுச் சீரமைப்பதிலும் காட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றங்களாலும் பலமுறை சுட்டிக் காட்டப்பட்ட அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமலேயே உள்ளது.

சரக்கு சேவை வரி வருவாய் மாதத்துக்கு மாதம், ஆண்டுக்காண்டு உயர்ந்து வரும் நேரத்தில், மருத்துவம், கல்வி, அடிப்படை உட்கட்டமைப்புத் திட்டங்கள், சமூகநலம் ஆகியவற்றுக்கான நடுவண் அரசின் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு விகிதம் குறைந்து வருகிறது. அரசுகள் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் மறந்து பல துறைகளைத் தனியார் கைகளில் கொடுத்துவருவது மக்களிடையே ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும். அதிக வரி விதிப்பு, நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைப்பு, அரசு பொறுப்புகளையும் கடமைகளையும் துறந்து பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதல் ஆகிய போக்கால் வலியோர் வாழவும், எளியோர் வீழவுமான சூழல் உருவாகும் என்கிற அச்சம் மக்களிடையே எழுகிறது.

சே.பச்சைமால்கண்ணன்

ஞாயிறு, 13 நவம்பர், 2022

பரந்தூர் மக்களுக்குப் பங்கு கிடைக்குமா?

சென்னையின் இரண்டாவது வானூர்தி நிலையத்தைக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க நடுவணரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகச் செழிப்பான நன்செய் நிலங்கள், ஏரிகள், குடியிருப்புகள் உட்பட 4700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசிடம் கோரியுள்ளது.

பொருளியலில் உற்பத்திக்கான காரணிகளாக நிலம், உழைப்பு, முதல், அமைப்பாற்றல் ஆகியவற்றைக் கூறுவர். முதன்மைக் காரணியான நிலத்தின் மீதுதான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில், வணிகம் ஆகியன செய்யப்படுகின்றன. இவ்வகையில் சென்னையில் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு முதல் தேவை சென்னைக்கு அருகில் ஒரே இடத்தில்4700 ஏக்கர் நிலம். அதில் தொழிலாளர்கள், பொறிகளைப் பயன்படுத்திப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணியை வானூர்தி நிலையங்கள் ஆணையம் மேற்கொண்டாலும் கட்டுமானப் பணி முடிந்தபின் தனியார் நிறுவனத்துக்கே வானூர்தி நிலையம் கொடுக்கப்படும். நாட்டின் பெரும்பான்மையான நிலையங்கள் தனியாரிடம் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் வானூர்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் மக்களை ஊரைவிட்டு வெளியேற்றி அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் தரகுப் பணி மாநில அரசுக்குத் தரப்பட்டுள்ளது.

நிலத்தின் சந்தைமதிப்பைப் போல் மூன்றரை மடங்குத் தொகை இழப்பீடாக வழங்கப்படும். மாற்று இடத்தில் வீடு கட்டித் தரப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்புத் தரப்படும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றெல்லாம் தமிழக அரசு உறுதிமொழி அளித்துள்ளது. இவை ஒன்றும் புதிதானவை அல்ல. இதற்கு முன் அரசு திட்டங்களுக்கு நிலம் எடுத்தபோதும் இதே உறுதிமொழிகளை அரசு வழங்கியுள்ளது. அவற்றைச் சரியாக நிறைவேற்றியதாக எங்காவது மக்கள் மனநிறைவடைந்ததாகச் சொல்ல முடியுமா?

எங்கள் நிலத்தைத் தவிட்டு விலைக்குக் கொடுத்தாற்போல் கொடுத்தோம். அடிமாட்டு விலைக்கு நிலத்தை எடுத்துக் கொண்டனர். கையில் ஒன்றும் வந்து சேரவில்லை. மிகக் குறைந்தவிலையே கொடுத்தனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் பல ஆண்டுகளுக்குப் பின் ஏதோ ஓரளவு இழப்பீட்டைப் பெற முடிந்தது என்பவைதான் அரசு திட்டங்களுக்கு நிலங்கொடுத்து ஏமாந்தோரின் கருத்துக்களாக உள்ளன. நிலம் எடுத்த 20ஆண்டுக்குப் பிறகும் உரிய இழப்பீடு வழங்காதது குறித்த நீதிமன்ற வழக்குச் செய்திகளும், இழப்பீட்டுக்காக அரசு அலுவலக உடைமைகளைப் பறிமுதல் செய்யும் செய்திகளும் அடிக்கடி நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் வருவது அதை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் அரசின் உறுதிமொழிகளை மக்கள் நம்பவில்லை. அரசுக்கு நிலங்கொடுத்த குடும்பங்களில் வீட்டுக்கோர் ஆளுக்கு வேலை என்கிற உறுதிமொழியை நிறைவேற்றி இருந்தால் நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் முன் மக்கள் ஏன் போராட வேண்டும்? அரசின் பல திட்டங்களுக்கு நிலங்கொடுத்த மக்கள் ஏன் வீடின்றி உணவின்றி வறுமையில் வாட வேண்டும்.

மக்களுக்கு உறுதிமொழி அளிக்கும் அரசு பல்வேறு துறைகள், அலுவலர்கள் அடங்கிய சட்டப்படியான அமைப்பு. இன்று வாய்மொழியாக முதலமைச்சர் அமைச்சர் ஆகியோர் கூறும் உறுதிமொழியை நிறைவேற்றவில்லை எனப் பிற்காலத்தில் குறைகூறும்போது அவர்கள் பதவியில் இருக்க மாட்டார்கள். ஆட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் இடமாற்றம், பதவி உயர்வு, பணிஓய்வு ஆகியவற்றால் மாறிவிடுவர். உறுதிமொழிகள் நிறைவேறவில்லை எனச் சுட்டிக்காட்டி முறையிடும் காலத்தில் முதலமைச்சர் அமைச்சர் ஆட்சியர் வட்டாட்சியர் அனைவரும் மாறிவிடுவர். முந்தையோர் அளித்த உறுதிமொழிக்குத் தாங்கள் பொறுப்பில்லை எனப் புதியோர் பொறுப்பில்லாமல் பதில் சொல்வர். இதைக் கேட்கும் மக்களுக்குச் சினமும் வெறுப்பும்தான் வரும்.

தமிழ்நாட்டில் நடுவணரசின் நிறுவனங்களில் வடவரைப் பணியமர்த்துவதும், காலிப் பணியிடங்களுக்கு இங்கே ஆளெடுக்காமல் வடக்கில் இருந்து பணியிட மாற்றம் செய்வதும் நாமறிந்ததே. இந்நிலையில் வீட்டுக்கொருவருக்கு வேலைவாய்ப்பு என்பது நிறைவேற்றக்கூடிய உறுதிமொழியா என்பதை நடுவணரசும் மாநில அரசும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவோருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றொரு புதிய உறுதிமொழி. நிலத்தை வீட்டை சொத்தை காலங்காலமாக வாழ்ந்த ஊரை இழந்து நீதிமன்றங்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் அலையாய் அலைந்து வாழ்வது பற்றிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியா? இதற்கு முன் நிலங்கொடுத்தவர்களின் கதைகளைக் கேட்டால் இதுதான் விடையாகக் கிடைக்கிறது.

நிலத்துக்குச் சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்குத் தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்கிற உறுதிமொழி குறித்துப் பல்வேறு ஐயங்கள் உள்ளன. வானூர்தி நிலையத் திட்டத்தின் அறிவிப்புக்கு முன்னுள்ள சந்தை மதிப்பா? வானூர்தி நிலையம் அமைக்க உள்ள பகுதியில் நிலம் பத்திரப்பதிவுக்குத் தடை விதித்துள்ள நிலையில் அறிவிப்புக்குப் பின்னுள்ள சந்தை மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது? அல்லது சென்னை மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்தின் சுற்றுப் பகுதிகளில் உள்ள நிலங்களின் சந்தை மதிப்பா? எது கணக்கிற் கொள்ளப்படும் என்பதில் நிறையக் குழப்பங்கள் உள்ளன.

பொதுவாக நில விற்பனை என்பது விற்போரின் விருப்பம் இருந்தால் மட்டுமே வாங்குவோர் வாங்க முடியும். அதில் சரியான விலைதர வாங்குவோர் முன்வராவிட்டால் விற்போர் நிலத்தை விற்காமல் இருக்க முடியும். அரசு திட்டங்களுக்கான நில எடுப்பில் இந்த முறை கிடையாது. அரசு குறித்த விலைக்கு மக்கள் தங்கள் நிலத்தைக் கட்டாயமாகக் கொடுத்தே ஆக வேண்டும். பணத்தைப் பெற்றுக்கொள்ளாதோருக்கு நீதிமன்றத்தில் பணம் கட்டப்படும். அதைக் குறித்த காலத்துக்குள் சென்று வாங்கிக் கொள்ளலாம். இதில் விற்போர் வாங்குவோரிடம் சமநிலை இல்லை. வாங்கும் அரசு வலுமிக்க அதிகாரமிக்க சட்டப்படியான அமைப்பாக உள்ளது. விற்போர் நிலத்தின் மதிப்பைத் தாங்களே கூற முடியாமலும், தர மாட்டோம் என மறுக்கும் உரிமை இல்லாமலும், எதிர்த்துப் பேசினால் சொல்லொணா அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் நிலையிலும் உள்ளனர். அவர்களுக்காகப் பரிந்துபேசுவோர் தேச விரோதிகள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்படுவர். அதிக வருமானம் தரும் 4700 ஏக்கர் பரப்பளவுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்தைக் குறைந்த குத்தகைக்கு நெடுங்காலத்துக்குப் பெற்ற நிறுவனம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றுவதாகக் கூறி விருதளித்துச் சிறப்பிக்கப்படும். அந்நாளில் இந்த வானூர்தி நிலையத்துக்கு நிலங்கொடுத்த மக்களின் சமூக பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பதை அரசோ ஊடகங்களோ எடுத்துக்கூறவோ ஆராயவோ முடியாத நிலையிலேயே இருப்பர்.

வானூர்தி நிலையத்தைச் சட்டப்படியான ஒரு நிறுவனமாகக் கொண்டால் அதில் பெரும்பங்கை அதாவது 51 விழுக்காட்டை நிலம் கொடுத்தோருக்குக் கொடுப்பதே முறையாக இருக்கும். 4700 ஏக்கரில் தனியார் நிலம் போக அரசின் புறம்போக்கு நிலங்களும் இருக்கும். பெருமளவு நிலம் உள்ளோருக்கு அவர்களின் பங்கையும், குறைந்த அளவு நிலம் வைத்துள்ளோர் மற்றும் நிலமில்லா ஏழைகளுக்கு அரசின் பங்கையும் வழங்கலாம். இதனால் நிலமிழந்து வீடிழந்து ஊரிழந்து வெளியேறும் மக்களுக்கு மறுவாழ்வுக்கும் நீடித்த வருவாய்க்கும் வழிசெய்ய முடியும். வானூர்தி நிலையக் கட்டுமானம் தொடங்குமுன்னே மக்களுக்குச் சென்னையில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி அங்குக் குடியேற்றலாம். வானூர்தி நிலைய நிறுவனப் பங்குகளைப் பங்குச்சந்தையில் விற்று உடனடித் தேவைகளுக்கான பணத்தை மக்கள் பெறலாம்.

நிலமில்லா ஏழைகளும் அந்த ஊரில் காலங்காலமாக வாழ்வோர் என்பதும், முன்பு அவர்களுக்கு நிலவுடைமை இருந்து பல்வேறு காரணங்களால் அது கைவிட்டுப் போயிருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது. வானூர்தி நிலையத் திட்டத்தால் நிலக்கிழார்கள் நிலமிழப்பதுபோல், நிலமில்லாதோர் கூலிவேலை, கால்நடை வளர்ப்பு, விறகு வெட்டிப் பிழைப்பது உள்ளிட்ட வாய்ப்புக்களை இழப்பதும் இங்குக் கருதத் தக்கது.

மேற்கண்டவற்றை எல்லாம் ஆராய்ந்து அதன் அடிப்படையிலும், நேர்மையான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி மக்களின் கருத்துக்களின்படியும் நிலங்கொடுப்போர் வாழ்விழந்து போகாமல், அவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தைத் தரும் ஒரு விரிவான நேர்மையான இழப்பீட்டுத் திட்டம் வரைந்து அதன்பின் நில எடுப்புப் பற்றிப் பேசுவதே மக்கள்நல அரசுகளின் செயலாக இருக்க முடியும். இதற்கு முன் அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப் பல குடிகளை எழுப்பிய கதைகளைப் பார்த்தால் இப்படி இல்லாமல் தேரை இழுத்துத் தெருவில் விட்ட கதையாகத்தான் உள்ளது. அந்த நிலையை மாற்றி மக்கள்நலன் காக்கும் அரசுகளாக நடுவண் மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும். (திருக்குறள் 388)

சே.பச்சைமால்கண்ணன்

செவ்வாய், 8 நவம்பர், 2022

இட ஒதுக்கீடா? இடப் பதுக்கீடா?

நடுவண் அரசு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பட்டியலினத்தவருக்கு 22.5 விழுக்காடும் ( இதில் பழங்குடியினர் 7.5%;பட்டியல் சாதியினர் 15% ) பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்குகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினர் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என்பதற்காகப் பட்டியலினத்தவருக்குப் பத்தாண்டுகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்தார். அதன்பின் ஒவ்வொரு பத்தாண்டும் அதை நீட்டித்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் அன்றைய சென்னை மாகாணத்தில் ஏற்கெனவே இருந்து வந்த வகுப்புவாரி ஒதுக்கீடு செல்லாமல் போனது. இதனால் பிற்படுத்தப்பட்டோரின் நலன் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் பெருந்தலைவர் காமராசரின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. இத்தகைய இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியது. இதனாலேயே நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் விகிதம் 40 விழுக்காட்டுக்கு மேல் இருந்தாலும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு 27 விழுக்காடாகவே உள்ளது. பட்டியலினத்தவருக்கு 22.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு என மொத்த இட ஒதுக்கீடு 49.5 விழுக்காடாக இருந்தது. பிற்படுத்தப்பட்டோரின் விகிதத்துக்கொப்ப அவர்களுக்கு அதிக ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெருந் தடைக்கல்லாக இருந்தது. இந்நிலையில்தான் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை 2019ஆம் ஆண்டு பாசக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீடு அரசியலமைப்பை மீறியதாகையால் செல்லாது என்றும், 10 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டால் ஒதுக்கீட்டு வரம்பு 59.5 விழுக்காடாகி 50 விழுக்காட்டு வரம்பைத் தாண்டிவிட்டதாகவும் வழக்குத் தொடுத்தோர் வாதிட்டனர். ஏற்கெனவே உள்ள இடங்கள் போகக் கூடுதலாக 10 விழுக்காடு இடங்களை உருவாக்கி விடுவதாகவும் இதனால் 50 விழுக்காடு என்னும் வரம்பு மீறப்படாது என்றும் நடுவணரசு சப்பைக்கட்டு கட்டியது.

இது மிகப்பெரிய ஏமாற்று என்பதை அறியச் சான்றுக்கு ஒரு கணக்கீட்டைப் பார்ப்போம். ஒரு கல்லூரியில் ஒரு படிப்புக்கு 90 இடங்கள் உள்ளன. இதில் ஒதுக்கீட்டுக்கு 45 இடங்களும், பொதுப்பிரிவில் 45 இடங்களும் என வைத்துக்கொள்வோம். இப்போது 50 விழுக்காடு வரம்புக்குள் இட ஒதுக்கீடு உள்ளது. முன்னேறிய வகுப்பில் பின்தங்கியோருக்காகக் கூடுதலாக அங்கு மேலும் 9 இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்போது மொத்த இடங்கள் 99 ஆகும். இதை 100 இடங்கள் என்றே வைத்துக்கொள்வோம். இப்போது ஏற்கெனவே உள்ள 45 இடங்கள், புதிதாக 10 இடங்கள் என மொத்தம் 55 இடங்கள் ஒதுக்கீட்டில் வருகின்றன. இப்போது மொத்த ஒதுக்கீடு 55 விழுக்காடாகி விட்டது. இந்தக் கணக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்குக் கூடத் தெரியும். ஆனால் நாட்டை ஆளும் சட்டம் இயற்றுவோருக்கும், அந்தச் சட்டத்தைக் காக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும், அத்தகைய சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தவருக்கும் தெரியவில்லையா? இல்லை தெரியாதது போல் பாசாங்கு செய்கின்றனரா?

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இரு வேறுபட்ட தீர்ப்புகளை அளித்துள்ளது. 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என மூவரும், செல்லாது எனத் தலைமை நீதிபதி உட்பட இருவரும் தெரிவித்துள்ளனர். ஐந்தில் மூன்று என்கிற பெரும்பான்மை அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பாகியுள்ளது. இது சரியென்றால் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும் எனக் கூறி இதுநாள் வரையும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்தாமல் தடுத்தது மிகப்பெரிய அநீதியாகும். அது சரிதான் என்றால் இப்போது வழங்கிய தீர்ப்பு அநீதியாகும்.

2019ஆம் ஆண்டு தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு மதிப்பீட்டின்படி பழங்குடியினர் 9 விழுக்காடு, பட்டியல் சாதியினர் 20 விழுக்காடு எனப் பட்டியலினத்தவர் மொத்தம் 29 விழுக்காடு உள்ளனர். முன்னேறிய வகுப்பினர் 30 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோர் 41 விழுக்காடும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

29 விழுக்காடுள்ள பட்டியலினத்தவருக்கு 22.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கி அவர்களின் சமூக நீதி ஓரளவு நிலைநாட்டப்பட்டுள்ளது. மீதி 77.5 விழுக்காடு உள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் வழங்கப்பட்டன. பொதுப்பிரிவில் போட்டியிட்டுப் பெற முடியாத 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் இந்த 27 விழுக்காட்டுக்குள் முட்டி மோதிக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் முன்னேறிய வகுப்பினர் பொதுப்பிரிவில் உள்ள 50 இடங்களில் பெருமளவைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். அதில் முட்டி மோத முடியாதவர்களுக்காகக் கூடுதலாக 10 விழுக்காடு இடங்கள் உள்ளன. இதில் மற்ற வகுப்புகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியோர் நுழைய முடியாது. இங்குத்தான் ஏமாற்றுத் தந்திரம் உள்ளது. 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, 30 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 50 விழுக்காடு, அவர்களிலேயே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக 10 விழுக்காடு என மொத்தம் 60 விழுக்காடு வழங்கப்படுகிறது. இதை 110க்கு 60 என்று பார்த்தால்கூட 54.5 விழுக்காட்டுக்குக் குறையாமல் உள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க 50 விழுக்காடு வரம்பைக் கூறி முட்டுக்கட்டை போட்ட உச்சநீதிமன்றம், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 விழுக்காடு வழங்க அதே கட்டையை உடைத்து ஏணி செதுக்கிக் கொடுத்து ஏற்றி விட்டுள்ளது. அவர்களைத் தனிப் பிரிவாக உருவாக்கியது சரியானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மற்ற வகுப்பினரின் மக்கள் தொகையின் விகிதத்துடன் அவர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு யானைக்குச் சோளப்பொரி வழங்குவதுபோலச் சிறு பங்காகும். அதே நேரத்தில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கும் 10 விழுக்காடு ஒதுக்கீடு ஆட்டுக்குட்டிக்கு வாழைப்பழக்குலை வழங்குவதுபோலப் பெரும்பங்காகும். ஆக 10 விழுக்காடு இட ஒதுக்கீடா? இடப் பதுக்கீடா? என்கிற வினா எழுகிறது.

சே.பச்சைமால்கண்ணன்