வெள்ளி, 31 மார்ச், 2023

புட்டில் உடைப்பும் நில மாசுபாடும்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு (திருக்குறள் 20)

நீர் இல்லாமல் அமையாது உலகம். அதுபோல வான்மழையில்லாமல் அமையாது ஒழுக்கம்.  உலகிலுள்ள உயிர்களெல்லாம் உயிர்வாழ்வதற்குத் தேவையானவை காற்றும் நீரும் உணவும். உணவெனப்படுவது மண்ணொடு நீர் சேர்வதால் விளைவது. உயிர்களின் உடல் எடையில் அரைப்பங்குக்கு மேல் நீர்தான் உள்ளது. உடல் சூட்டைத் தணிக்கக் குடிப்பதும் நீர்தான். வெயிலின் வெக்கையிலிருந்து உடலைக் காக்க நீராடுவதும், உடலைத் தூய்மையாக்கக் குளிப்பதும் நீரில்தான். உணவைச் சமைக்கவும் வேவிக்கவும் பயன்படுவது நீர்தான். சமைத்த ஏனங்களைக் கழுவப் பயன்படுவதும் நீர்தான். கடலிலுள்ள உவர்நீர் குடிக்கப் பயன்படாது. ஆனாலும் உலகைச் சூழ்ந்துள்ள கடல்நீரால்தான் புவிவெப்பம் தணிக்கப்பட்டுப் பல்லுயிர் வாழும் சூழல் நிலவுகிறது. உழவு, தொழில் ஆகிய இரண்டுக்கும் பயன்படுவது நீர்தான். ஆகையால் நீரின்றமையாது உலகு.

அத்தகைய நீர் நமக்குக் கிடைப்பது மழையால். மழைநீரே மிகவும் தூய்மையானது.  அருவிநீரும் ஆற்றுநீரும் ஊற்றுநீரும் நிலத்துநீரும் குளத்துநீரும் தூய்மையில் முறையே மழைநீரை அடுத்து வருவன. இவ்வகையாகக் கிடைக்கும் நீரைக் கலங்களில் கோரியெடுத்து மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தொடக்கக்காலத்தில் ஓலைப்பட்டையில் தண்ணீரைக் கோரித் தேங்காய்ச் சிரட்டை, சுரைக்குடுக்கை, ஆமை ஓடு ஆகியவைகளில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தினர். ஓலையால் நீரொழுகாக் குடுவை செய்து பதநீர் இறக்கவும் தண்ணீர் சுமக்கவும் பயன்படுத்தியுள்ளனர். கற்களைப் பயன்படுத்தக் கற்றபோது கற்றொட்டி செய்து அதில் தண்ணீரை ஊற்றிவைத்துப் பயன்படுத்தினர். கற்றொட்டிகளை இன்றும் பலவூர்களில் காணலாம். மரத்தொட்டிகளிலும் தண்ணீரை ஊற்றியிருக்கின்றனர். உருளி (சக்கரம்) கண்டுபிடிக்கப்பட்டு மண்ணால் பானைகள் கலயங்கள் வனைந்தபோது தண்ணீர் கோருவதும் எடுத்துச் செல்வதும் சேமித்து வைப்பதும் இன்னும் எளிமையாயிற்று. பதநீர் சேகரிப்பதற்கும் குடிநீர் ஊற்றிவைப்பதற்கும் இன்றும் மட்பாண்டங்களே சிறந்ததாக உள்ளன. மட்பாண்டங்களே ஆதித்தநல்லூரிலுள்ள பொருநையாற்றங்கரை நாகரிகத்தை உலகுக்கு உணர்த்துகின்றன.

மாழை(உலோகங்)கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உடையாத கலங்கள் செய்யத்தொடங்கி விட்டனர். தண்ணீர் ஊற்றிவைக்கவும் கோரிக் குடிக்கவும் இன்றுவரையும் பயன்படுத்தப்பட்டு வருபவை செப்பேனங்களும் வெண்கல ஏனங்களுமே. ஈயம், அலுமினியம் போன்றவற்றால் செய்யப்படும் கலங்களில் உள்ள தண்ணீரைக் குடிக்கும்போது அவை குடலுக்குள் சென்று கோளாறு உண்டாக்கும். இருப்பினும் ஏழைமக்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கவும் உணவு சமைக்கவும் ஈய அலுமினியப் பானைகளையே பயன்படுத்துகின்றனர். வெள்ளிரும்பு(துருப்பிடிக்காத இரும்பு) ஏனங்களும் பார்ப்பதற்குப் பளிச்சென்று இருப்பதால் ஒருகாலத்தில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன.

இப்போது வெள்ளிரும்பின் விலைமதிப்புக் குறைவு என்பதால் அதற்குச் செப்பு, வெண்கல ஏனங்கள் போன்று மக்களிடையே மதிப்பும் இல்லை. நெகிழி(பிளாஸ்டிக், நைலான்)யாலான குடங்களும் குடுவைகளும் பயன்பாட்டுக்கு வந்தபின்னர் மட்பாண்டங்கள் மறக்கப்பட்டன. செப்புக்குடங்கள் பரண்மேல் போடப்பட்டன. வெள்ளிரும்பு ஏனங்கள் வந்தவிலைக்கு விற்கப்படுகின்றன. நெகிழியாலான குடங்களையும் குடுவைகளையும் பயன்படுத்தும்போது அவற்றிலுள்ள நெகிழித்துகள்கள் குடலுக்குள் சென்று வயிற்றுவலியை ஏற்படுத்தும் என்று தெரிந்தபிறகும் மக்கள் அதன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவில்லை.

வணிக நிறுவனங்களும் அரிசி, பருப்பு, உழுந்து, மாப்பண்டங்கள், ஊறுகாய், பேரீத்தம்பழம், எண்ணெய், வித்துக்களில் வடித்த நெய்(வனஸ்பதி), தண்குடிப்புக்கள், தண்ணீர் போன்றவற்றை நெகிழிப் பைகளிலும் நெகிழிப்புட்டில்களிலுமே அடைத்து விற்கின்றன. அவற்றை நிலத்தில் வீசாமல் காக்கவும் மறுபயன்பாட்டுக்கும் உரிய ஒரு சட்டமோ திட்டமோ நாட்டில் இல்லை.

நீர்மங்களையும் மருந்துகளையும் சாராயத்தையும் சேமித்து வைக்கவும் எடுத்துச் செல்லவும் நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே பீங்கான், கண்ணாடி ஆகியவற்றாலான குடுவைகளும் ஏனங்களும் புட்டில்களும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேன், ஊறுகாய், மதுவகைகள் ஆகியவற்றைக் கெடாமல் காப்பதற்கு இவை மிகவும் ஏற்றவை. புளிப்பு, உவர்ப்பு ஆகியவை மட்பாண்டங்களையும் வெண்கல ஏனங்களையும் அரித்துவிடும் தன்மை கொண்டவை. அச்சுவைகள் பீங்கான், கண்ணாடி ஆகியவற்றாலான புட்டில்களை ஒன்றுஞ் செய்வதில்லை. உள்ளே எவ்வளவு நீர்மம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் ஒளியூடுருவுந் தன்மை கண்ணாடிக் கலங்களின் தனிச்சிறப்பு. இத்தகைய சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருப்பதாலேயே மது வகைகளும் மருந்து வகைகளும் தண்குடிப்புக்களும் புட்டில்களில் அடைத்து விற்கப்படுகின்றன.

பொருள் எத்தகைய பயனுடையதாயினும் அதைப் பயன்படுத்துவோனைப் பொறுத்தே அதன் நன்மையும் தீமையும் அளவிடப்படும். புட்டில்களில் அடைத்து விற்கப்படும் பொருள்களைப் பயன்படுத்தியவர்கள் அதே புட்டில்களில் தேன், ஊறுகாய், எண்ணெய், நெய் ஆகியவற்றைச் சேமித்துவைத்துப் பயன்படுத்துவதைக் காண்கிறோம். அடியகன்ற வாய்குறுகிய புட்டில்களில் மண்ணெண்ணெய் ஊற்றி, மூடிகளில் துளையிட்டுத் திரி செருகி விளக்காகப் பயன்படுத்துவதையும் காண்கிறோம். இப்படி நன்னோக்கத்திற்காகப் பயன்பட்டு வந்ததையே நாட்டுக்காகாத நயவஞ்சகர் சிலர் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அவர்கள் மண்ணெண்ணெய்க்கு மாற்றாகக் கன்னெய்(பெட்ரோல்) ஊற்றித் திரியைக் கொளுத்திப் பேருந்துகளின் மேலும் வணிக நிறுவனங்கள் மேலும் வீசிக் கன்னெய்க்(பெட்ரோல்) குண்டுப் பண்பாட்டையே உருவாக்கி விட்டனர்.

தொண்ணூறுகளில் நிகழ்த்தப்பெற்ற சாதி வன்முறைகளில் அறுவாளுக்கு அடுத்தபடியாகப் பயன்படுத்தப்பட்ட கருவி இந்தப் புட்டில் குண்டுகளே. இவற்றால் எரிந்துபோன பேருந்துகளின் எண்ணம் சிலநூறுகளாகும். ஒரு போக்குவரத்துக் கழகமே இந்தப் புட்டில்குண்டுகளால் இழப்புக்குள்ளானது வேறெங்குமில்லை, புகழெனின் உயிரையுங் கொடுக்கும் அதேநேரத்தில் பழியெனின் உலகுடன் பெறினும் வேண்டாத பண்பாட்டுக்குரிய தமிழ்நாட்டில் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிச்சீமையில்தான். பேருந்துகள் எரிந்துபோய் இழப்புக்குள்ளானது கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம்தான்.

திரைப்படங்களில்கூடச் சோடாப்புட்டில்களையும் மதுப்புட்டில்களையும் மதுக்கிண்ணங்களையும் உடைத்து எதிரியைக் குத்துவதுபோன்ற காட்சிகள் எடுக்கப்பட்டன. நாட்டிலும் பலவிடங்களில் புட்டில் உடைத்துக் குத்திக்கொல்லும் துன்பியல் நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஒரு படத்தில் நாயகன் தன்பெயரைச் சொன்னால் சோடாப்புட்டில் பறக்கும் என்று பாட்டுப் பாடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. வன்முறைக் காட்சிகளில் சோடாப்புட்டில்களையும் மதுப்புட்டில்களையும் அடித்து நொறுக்கும் காட்சிகள் தவறாமல் இடம்பெற்றன. இப்போது அதுபோன்று எடுக்கப்படாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதும் வெடிவைத்துக் கொல்வதும் போன்று எடுக்கப்படுகின்றன.

மக்கள் செய்வதைப் பார்த்துத் திரைப்படத்தில் காட்சியமைத்தாலும், திரைப்படங்களைப் பார்த்து மக்கள் செய்தாலும் இருவர் செய்வதுமே தவறுதான். திரைப்படத்தில் குத்தாமல் குத்துவதுபோன்று நடிக்கவும், சாவாமல் செத்ததுபோன்று நடிக்கவும் இயலும். ஆனால் புட்டில்களையும் மகிழுந்துக் கண்ணாடிகளையும் கண்ணாடிச் சாளரங்களையும் உடைப்பதுபோன்றுள்ள காட்சிகளை உண்மையிலன்றிப் பொய்யாய் வரைகலைநுட்பத்தால் எடுக்க முடியாது. இனிமேலாவது இதுபோன்ற சுற்றுச்சூழல் மீதான வன்முறைக் காட்சிகளைத் தவிர்த்து இயற்கையைப் பேணுவது போன்ற காட்சிகளைத் தங்கள் திரைப்படங்களில் இயக்குநர்கள் புகுத்த வேண்டும்.

கண்ணாடிப் பொருட்களைக் கவனத்துடன் கையாள வேண்டும் என்ற எச்சரிக்கை மதுப்புட்டில்களையும் கண்ணாடிப்பொருட்களையும் அடைத்திருக்கும் எல்லா அட்டைப்பெட்டிகளிலும் இடம்பெற்றுள்ளது. அந்த அட்டைப்பெட்டியிலிருந்து அதை எடுப்பவர்களின் கண்களுக்கு அந்தச் சொற்கள் படலாம். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் எல்லாருக்கும் தெரியும்படிச் சுற்றுச்சூழல் பாடத்தில் குறிப்பிட வேண்டும். கண்ணாடிப்பொருட்களைக் கவனமாகக் கையாள்வது, தவறி உடைந்துவிட்டால் அவற்றை அப்புறப்படுத்துவது பற்றியும் பாடத்தில் குறிப்பிட வேண்டும். உடைந்த கண்ணாடியும் பீங்கானும் நிலத்தை எவ்வாறெல்லாம் மாசுபடுத்துகின்றன என்பதையும், அவற்றை மிதிக்கும் உயிரினங்கள் எப்படியெல்லாம் புண்படுகின்றன என்பதையும் விளக்கும்படிப் பாடங்கள் அமைந்தால்தான் பசுமரத்தாணிபோலப் பிஞ்சுள்ளங்களில் பதியும்.

சோடாப்புட்டில்களும் மதுப்புட்டில்களும் மருந்துப்புட்டில்களும் கவனஞ்சிதறிக் கைதவறி உடைவது அரிதாகவே நிகழ்கிறது. அழுத்த மிகுதியாலும் வெப்பத்தாலும் வெடிப்பதும் உடைவதும் நொறுங்குவதும் எப்போதாவதுதான் நிகழ்கிறது. வேண்டுமென்றே நொறுக்கப்படுவதுதான் பெரும்பாலும் நிலத்தை மாசுபடுத்தும் காரணியாக உள்ளது. மது விடுதிகளில் அறிவு மயக்கத்தாலும் கடுமையான தெம்பாலும் பலசமயம் குடிவெறியர்கள் புட்டிலை உடைத்துச் சண்டையிடுகின்றனர். பெரும்பாலோர் கடைகளிலிருந்து மதுப்புட்டில்களை வாங்கிவந்து சாலையோரங்களிலோ பாலக்கரைகளிலோ ஆற்றங்கரைகளிலோ கட்டடங்களின் அருகிலோ இருந்து மதுவைக் குடித்துவிட்டுப் புட்டில்களை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். சாலை, பாலம், நீர்த்துறை, கோவில், குளம், பலர் நடமாடும் கட்டடம் என்றும் பாராமல் சிலர் மதுமயக்கத்தால் புட்டில்களைக் கற்களில் எறிந்து உடைத்து நொறுக்கிவிட்டுஞ் செல்கின்றனர்.

இவர்களால் நொறுக்காமல் விடப்படும் புட்டில்கள், அதை உடைத்தால் தீங்கு என்பதை அறியாச் சிறுவர்களின் கண்களில் படும்போதும், அதன் தீங்கு தெரிந்தும் விளையாட்டுக்கும் உடைக்கும் இளைஞர்களின் கண்களில் படும்போதும் கற்களால் எறிபடுகின்றன; கற்களில் எறிபடுகின்றன. மின்கம்பங்களில் எறியப்படுகின்றன. இருப்புப்பாதைகளில் எறியப்படுகின்றன. எப்படியாயினும் உடைபடுவது கற்களல்ல. புட்டில்களே. உடைத்து நொறுக்கினவன் காலிலும் நொறுங்குகள் குத்தும். உடைந்து கிடக்கிறது என்பதைப் பாராதவரின் கால்களிலும் விலங்குகளின் கால்களிலுங்கூடக் குத்தும். பெரும்பாலும் உடைத்தவன் அதிலே சென்று மிதிப்பதில்லை. கள்ளமறியா உள்ளங்கள்தான் அதில் மிதித்துக் குத்துப்பட்டு மருத்துவம் பார்த்து வருகின்றன.

பொதுவிடங்களான கோவில் குளம் ஆறு சாலை ஆகிய இடங்களில் என்று மட்டுமில்லை. சுற்றுலாப் போகும் இடங்களிலுந்தான் மதுப்புட்டில்கள் அதிகம் நொறுக்கப்பட்டிருக்கின்றன. நான் பார்த்த இடங்களிலே கன்னியாகுமரியில் புட்டில்கள் அதிகம் நொறுக்கப்பட்டுக் கடலில் கிடக்கின்றன. முட்டத்துக் கடற்கரையில் உயர்ந்த பாறைகளின்மேல் நின்றுகொண்டு தென்கடல் அழகைப் பார்க்கும் பெருமிதம் எங்குங் கிட்டாது. அங்கே அந்தப் பாறைகளில் நிறைய மதுப்புட்டில்கள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. செருப்பில்லாமல் நடமாடினால் செத்தோம்.

மேற்கு மலைத்தொடர் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஏற்றவிடமாக ஒன்றிய மாநில அரசுகளால் அறியப்பட்டு அங்கே காட்டுயிர்ப் புகலிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அருவிகள், கோவில்கள் போன்ற இடங்கள் தவிர்த்து அங்குள்ள காடுகளில் பொதுமக்கள் நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைச்சாரலில் உள்ள காவல்சாவடிகளில் நெகிழிப்பொருட்கள், மதுப்புட்டில்கள் கொண்டுசெல்லக் கூடாதென்று எழுதிப்போட்டிருக்கின்றனர். கொண்டுசெல்கின்றனரா என்று ஆய்ந்தும் வருகின்றனர். அதையும் மீறிப் பலர் மதுப்புட்டில்களையும் நெகிழிப்பொருட்களையும் கொண்டுசென்றிருப்பது கன்னியாகுமரி மாவட்டத்துத் திருப்பரப்பிலும் திருநெல்வேலி மாவட்டத்துத் திருக்குறுங்குடியிலும் மாஞ்சோலையிலும் பாவநாசத்திலும் திருக்குற்றாலத்திலும் பாறைகளில் எறிந்து நொறுக்கப்பட்டிருக்கும் மதுப்புட்டில்களால் தெரிய வருகிறது.

ஒருநாளைக்குப் பல்லாயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இதுபோன்ற இடங்களில் நொறுக்கப்பட்டிருக்கும் புட்டில்களால் ஒவ்வொருநாளும் புண்படுவோர் எண்ணிக்கையும் ஏராளம். விலங்குகள் புண்பட்டது ஊருலகத்திற்கே தெரியாமல் போயிருக்கும். எண்ணற்ற உயிரினங்கள் புண்பட்டு இறந்திருக்கலாம். புட்டில் உடைக்கும் இச்செயலால் காடுகள் காப்பு, உயிரினக் காப்பு, சுற்றுலா வளர்ச்சி, நலவாழ்வு, சுற்றுச்சூழல் தூய்மை ஆகிய அனைத்தும் உடைத்து நொறுக்கப்படுகின்றன என்பதை அரசும் கானகத்துறையும் சுற்றுலாத்துறையும் உணர வேண்டும்.

சென்னை மெரினாக் கடற்கரையில் ஒரு சதுர அடி பரப்பில் ஏழெட்டுக் கண்ணாடித் துண்டுகள் கிடக்கின்றன. அந்த அளவுக்கு அது திறந்தவெளிக் குடிப்பகமாக மாறியிருப்பதில் வியப்பேதும் இல்லை. ஏனெனில் தமிழ்நாடே உலகின் இந்தியாவின் திறந்தவெளிக் குடிப்பகமாகத்தான் உள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலா இடங்களில் மட்டும் மது குடிக்கவில்லை. ஆறு, குளம், கோவில் நுழைவாயில், பள்ளிக் கூடத்தின் நுழைவாயில், வயல்வெளிகள், பூங்காக்கள் ஆகியனவும் மது குடிக்கும் இடங்களாகவே உள்ளன. ஆங்காங்கே கிடக்கும் மதுப்புட்டில்களே இதற்குத் தக்க சான்றாகும். இது மட்டுமல்லாமல் இன்னொன்றைச் சொன்னால் வியப்பாக இருக்கும். அரசுப் பேருந்துகளின் இருக்கைகளுக்கு அடியிலும், தொடர்வண்டிகளின் கழிவறைகளிலும் மதுப்புட்டில்கள் கிடைக்கின்றன. இதைவிட மானக்கேடு வேறென்ன இருக்க முடியும்? இந்தியாவிலே எல்லாவற்றிலும் முதலிடம் எனப் புள்ளிவிவரங்களைக் காட்டிப் பெருமைப்படும் தீராவிட ஆட்சியாளர்கள் சாராயக் குடியிலும் தமிழ்நாடு முதலிடம் எனக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதானே. இந்த ஆண்டின் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் நாற்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. எதற்கு? தமிழ்ப் பிள்ளைகளின் கல்விக்கா? இல்லை. தமிழ்நாட்டு மக்களின் மருத்துவத்துக்கா? இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கா? இல்லை. வீடில்லா மக்களுக்கு வீடுகட்டிக் கொடுப்பதற்கா அதுவும் இல்லை. பிறகு எதற்காக இந்தத் தொகை இலக்கு? சாராய விற்பனைக்குத் தான் இந்த இலக்குக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுப் புட்டில்களும் மறுசுழற்சிக்கு வந்துவிடுமா என்ன? அவ்வளவு அறிவாளிகளையா உருவாக்கியுள்ளது அரசு? 1969ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை ஆண்டுவரும் இரு தீராவிடக் கட்சியினரும் இப்போதே மூன்று தலைமுறையினரை நல்ல குடிமக்களாக்கி விட்டனர். பாட்டன், அப்பன், மகன், மருமகன் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து குடிக்குமளவுக்குத் தமிழ்நாட்டில் குடிமைநாகரிகம் (Civilization) வளர்ந்து விட்டது.

வயல்கள், நீர்நிலைகளில் மதுப்புட்டில்களை உடைத்து நொறுக்கிப் போட்டிருப்பது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீரழிவாகும். இதைத் தடுத்து நிறுத்தும் எண்ணம் தமிழ்நாட்டு அரசுக்குக் கொஞ்சங்கூட இல்லை. மதுப்புட்டில்களையும் கொடுத்து, மதிமயக்கும் மதுவால் புட்டிலை உடைக்கும் தெம்பையும் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசின் செயலே இத்தனைக்கும் முதற்காரணம் என்று ஒரேயடியாகக் கூறிவிடலாம்

நீலமலைப் பகுதியில் மது வாங்குவோர் அந்தப் புட்டில்களைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்கள்நலன் காக்கும், சுற்றுச்சூழல் காக்கும் நல்லரசாக இருந்தால் அதை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தியிருக்கும். மதுப் புட்டிலின் விலை ஐந்துபங்கெனக் கொண்டால் புட்டிலைத் திருப்பிக் கொடுத்தால் ஒருபங்குப் பணம் திருப்பித் தரப்படும் என அறிவித்துப் பாருங்கள். மதுப் புட்டில் உடைப்பைத் தடுத்து நிறுத்தலாம். 

முழுவதும் மது விலக்கப்படும் நாளன்று புட்டில் உடைப்புத் தானாகவே நின்றுவிடும். அந்நாளே தமிழகத்தின் பொன்னாள். அந்நாள் வரவேண்டும் என்றே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

அதற்குமுன் மலைக்கு மதுப்புட்டில்கள் கொண்டு செல்லக்கூடாதென்று தடைவிதிக்க வேண்டும். சுற்றுலாவிடங்களில் மதுப்புட்டில்கள் வாங்குவோர் யார்யார் என்றும் எத்தனை புட்டில்கள் வாங்கினர் என்றும் கணக்கெடுத்துப் பயன்படுத்திய காலிப்புட்டில்களைத் திருப்பித் தரச்சொல்ல வேண்டும். திருப்பித் தராத புட்டில்களின் அளவைப்பொறுத்துச் சுற்றுச்சூழல் காப்பு வரி விதிக்க (தண்டம் இறுக்க) வேண்டும்.

புட்டில் உடையாத காட்டில் வாழ்வது விலங்குகளுக்கும், புட்டில் உடையாத நாட்டில் வாழ்வது மக்களுக்கும் உரித்தான உரிமைகளாகும்.

சே.பச்சைமால்கண்ணன்