திங்கள், 8 மே, 2023

மணற்கொள்ளையால் விளையும் கேடுகள்

தமிழகத்தில் உள்ள ஆறுகளில் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகமான மணற்கொள்ளை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதன் பின்விளைவுகளைப் பற்றி, மடுவறுத்துப் பால்குடிக்கும் இத்தமிழ்நாட்டரசு ஒருபோதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மணற்கொள்ளை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், சமூகம், பொருளியல் கூறுகளின்மீது கடுந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவராலும் மறுக்கமுடியாத உண்மை.

1990ஆம் ஆண்டிற்கு முந்திய காலக்கட்டங்களில் இவ்வாறு மணலைக் களவாடவில்லை. அதன்பிறகே கட்டுமானத் தொழில் வளர்ச்சியின் காரணமாக மணல்தேவை அதிகமாகியது. அப்போதும் மாட்டுவண்டிகளிலும் கழுதைப் பொதிகளிலுமே மணல் அள்ளிச் செல்லப்பட்டது. அப்போது அது களவாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தன்வீட்டுத் தேவைகளுக்காகவே மணலை அள்ளினர். இதனால் ஆற்றுமணலின் அளவும் பெருமளவு குறைந்துவிடவில்லை. ஆற்றின் எழிலும் குறைந்துவிடவில்லை.

என்று மணல்தேவை அதிகமாகி அது பிறருக்காகவும் அள்ளிச் செல்லப்பட்டதோ அன்றிலிருந்தே ஆற்றின் எழில் கெட்டுவிட்டது. ஆற்றங்கரையோரங்களில் கண்டகண்ட இடங்களிலெல்லாம் மணல் அள்ளுவதற்காக வண்டிகள் இறங்கித் தடம்போட்டுக் கரைகளைக் கரைத்தன. இதனால் வெள்ளக் காலங்களில் கரைமீறி ஊருக்குள்ளும் வயல்வெளிகளுக்குள்ளும் வெள்ளம் பொங்கிப் பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தியது. 

தொடக்கத்தில் மணல் அள்ளு(களவாடு)வதை ஒழுங்குபடுத்துவது என்று முடிவுசெய்த அரசு அந்தக்(கொள்ளையிடும்) உரிமையைத் தனியாருக்கு ஏலம்விட்டது. ஏலம் எடுத்தவர்கள் ஆற்றையும் அரித்து ஆற்றங்கரைகளில் இருந்த குறுமணலையும் அரித்து அள்ளிச் சென்றார்கள். இதுமட்டுமின்றி நீருக்குள் முங்கிக்கூட மணலை அள்ளிச்சென்றார்கள். இப்படிச் சரக்குந்துகளில் அள்ளிச் செல்லும்போது அவற்றில் இருந்து சாலைகளில் சொழுசொழுவென்று தண்ணீர் வடிந்துகொண்டே செல்லும். இதுதான் ஆறு வடிக்கும் கண்ணீர்.

தனியாருக்குக் குத்தகைக்கு விட்டதால் வரைமுறையின்றி மணல் அள்ளப்படுவதாகக் குற்றச்சாற்றுக்கள் அதிகரித்த நிலையில், 2001ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த செயலலிதா அரசு, பொதுப்பணித்துறை மூலமே மணல் அள்ளி விற்றது. அதிலும் தனியார் பொக்லைன், சரக்கு வாகனங்களே வாடகைக்குப் பயன்படுத்தப்பட்டன. இம்முறையில் ஒரு நாளில் ஓரிடத்தில் பொதுப்பணித்துறைக் கணக்குப்படி 500 லாரிகள் மணல் அள்ளியதாகக் கொண்டால், கணக்கின்றிக் கள்ளத்தனமாக ஒரே நாளில் ஆயிரம் லாரிகள் அள்ளிக் கொள்ளையடித்து அரசியலார், அரசு அதிகாரிகள், உள்ளூர் ஆளுங்கட்சிக்காரர்கள் பையை நிரப்பிக்கொண்டனர். அப்போதுதான் முதன்முதலாக ஆற்றில் இருந்து மணலை அள்ளிச் சென்று வேறோரிடத்தில் மலைபோல் குவித்து வைத்துப் பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. அப்போது தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் பல மணல்மலைகள் தோன்றின. ஒரிசாவின் சுதர்சன் பட்நாயக் மணலில் உருவங்களை உருவாக்குவதில் வல்லவர். தமிழ்நாட்டுத் தீராவிட அரசுகளோ மணலில் மலைகளை உருவாக்குவதிலும், அதை இரவோடு இரவாக அள்ளி அப்புறப்படுத்துவதிலும் வல்லவர்கள் என்பதை அப்போது ஊடகங்கள் அறிந்திருந்தன. இந்தக் கொடுமைக்கு எதிராக மக்கள் ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். இதனால் மணற்கொள்ளையர்களால் பல ஊர்களிலும் மணல் காவலர்கள் கொல்லப்பட்டனர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னே ஆற்றின் முக்கால்வாசிப் பகுதிகளில் மணல் துடைத்து அள்ளப்பட்டு விட்டது. நம்பியாற்றில் முழுவதுமாக அள்ளப்பட்டு விட்டது.

ஆட்களைவைத்து மணலை அள்ளினால் என்றைக்குக் கோடிகோடியாய் வருவாய் ஈட்டுவது என்றெண்ணிய மணற்கொள்ளையர்கள் பொன்முட்டையிடும் கோழியின் வயிற்றைக் கிழிப்பதுபோல ஆற்றின் வயிற்றைக் கிழித்து மணல் அள்ளச் சூழ்ச்சியப் பொறிகளையும் சரக்குந்துகளையும் ஆற்றுக்குள்ளே கொண்டுநிறுத்திச் சுற்றுச்சூழல் மீது போர்தொடுத்தனர். தண்ணீரின் போக்கைத் திருப்பிவிட்டு மணல் அள்ளினர். மணல் அள்ளுவதற்காகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நாளைத் தள்ளிவைத்தனர். மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடுவதற்கும் காவிரியில் மணல் அள்ளுவதற்கும் நேரடித்தொடர்பு உள்ளது. ஆற்றுப்பரப்பு நிறையத் தண்ணீர் வந்தால் மணல் அள்ள முடியாது.

கணவன் இறந்தால் தனக்குக் கோடி(த்துணி) கிடைக்குமே என்றெண்ணும் அறிவற்ற பேதையைப்போலக் காவிரியில் கருநாடகம் தண்ணீர் திறந்துவிடக் கூடாது; இவ்வாண்டு மழைபெய்யக் கூடாது; என்றெல்லாம் கெட்டதை எண்ணும் தீயவர்களே இத்தொழிலில் (களவில்) ஈடுபடுகிறார்கள். தங்கள் செயல் ஒரு இழிசெயல் என்பதை அவர்கள் ஒருபோதும் எண்ணவில்லை. அப்படி எண்ணுபவர்களானாலும் அவர்களைத் தொடர்ந்து அத்தொழிலைச் செய்யச்சொல்லும் அரசும் அதிகாரிகளும் வாய்த்திருக்கும்போது அவர்கள் என்ன செய்யமுடியும்?

மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் கேடுகள்:

இயற்கையில் அமைந்துள்ள நீரூற்றுக் களமான மணலைக் கொள்ளையிடுவதால் மழைக்காலங்களில் வெள்ளநீர் மண்ணில் எங்கும் நிற்காமல் கடலுக்குச் சென்றுவிடுகிறது. அணைகளில் தேங்கிநிற்கும் நீரும் மேற்பரப்பில் இருப்பதால் வெப்பத்தால் ஆவியாகிச் சென்றுவிடும். அப்படிக் கிடங்குகளில் இருக்கும் நீர் மணல் அள்ளுவதற்கு முன் இருந்த மட்டத்திலேயே இருக்கும் கால்வாய்களுக்கு ஏறிச்செல்வதில்லை. ஆற்றுச் சமவெளிகளில் இயற்கையாகவே படிந்திருக்கும் வண்டல்மண் தாழ்வாக இருக்கும் ஆற்றுக்கு அரித்துச் செல்லப்படுகிறது. இதனால் பயிரிட முடியாத அளவுக்கு அவை உரமிழப்புக்கும் மண்ணரிப்புக்கும் இலக்காகின்றன. மணல் எடுத்த ஆற்றோரங்கள் வறண்டு அங்கு நிற்கும் மரங்களெல்லாம் சரிந்தும் பட்டும் போகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாறு சரிந்தும் பட்டும்போன மரங்களும் ஏராளம். பனைகளும் ஏராளம். இவையெல்லாம் பொதுச்சொத்துக்கள்தான். இவற்றைக் காக்கவேண்டிய அரசு அதிகாரிகள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்களாகவும், இதைத் தட்டிக்கேட்க வேண்டிய பொதுமக்கள் வாயிருந்தும் ஊமைகளாகவும் உள்ளனர்.

மணல் அள்ளுவதால் சமூகக் கேடுகள்:

முன்பெல்லாம் புழுக்கமான இரவு நேரங்களில் மக்கள் ஆற்று மணற்பரப்பில் சென்றமர்ந்து பேசிக்கொண்டிருப்பதும் அங்கேயே தூங்கிவிட்டு வருவதும் ஒரு மனமகிழ் செயல்களாகவே இருந்தன. இப்போது இரவில் அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மணல் அள்ளுவதும் கடத்துவதுமாகிய களவுத்தொழிலே நடைபெறுகிறது. இதைத் தட்டிக்கேட்போர் கொல்லப்படுகின்றனர். இப்படி உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களே எண்ணற்றவர்களாவர். அவர்களுக்குச் சேதிசொன்னவர்கள் நிலையோ மிகக் கொடுமையானது. வெட்டிக் கொல்லப்படுவதும் சரக்குந்தை ஏற்றிக் கொல்லப்படுவதும்தான் ஆற்றுமணலைக் காக்கநினைக்கும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் பரிசுகளாகும். சேதிசொல்பவர்கள் பற்றிய விவரங்கள் கமுக்கமாக வைக்கப்படும் என்று சொல்லும் காவல்துறையிலும் வருவாய்த்துறையிலும் இருக்கும் கருங்காலிகளால் அவர்கள் இனங்காணப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறார்கள். இதுமட்டுமின்றி, மணல் அள்ளிய குழிகளிலே நீர்நிரம்பிய பின் அதில் ஆழந்தெரியாமல் முங்கிச்செத்தவர்கள் ஏராளம். அந்தச் சாவுகள் வெளியுலகுக்குத் தெரியாமல் ஊமைகண்ட கனவாய்ப் போயிருக்கும்.

ஆட்கள் மணல்அள்ளி வண்டியில் நிரப்பும்போது அடித்து விரட்டிய பொதுமக்கள்  சூழ்ச்சியப் பொறிகள் வந்தவுடன் தட்டிக் கேட்க அஞ்சுகின்றனர். அத்தோடு, அரசு மணற்குழி என்னும் ஏற்பளிப்பு வேறு. தட்டிக்கேட்பவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இனித் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்படலாம். அரசியல் நிலவரம் அப்படித்தான் உள்ளது.

இப்படி மணல் அள்ளுவது, அதைத் தடுப்பது என்று வரும் தொடர்நிகழ்வில் அள்ளுபவர் ஒருசாதியையும் தடுப்பவர் வேறொரு சாதியையும் சேர்ந்தவர்களாக இருப்பார்களேயானால் அது சாதிச்சண்டையாவதுடன் நெடுங்காலப் பகைக்கு வித்தாகிவிடும். வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இதே தீராப் பகைக்கே வழிகோலும்.

மணல் அள்ளிச்செல்லும் சரக்குந்துகள் மோதியும் நைத்தும்போட்ட பள்ளிக்குழந்தைகள் ஏராளமானோர்; உழவர்கள் ஏராளமானோர். இதில் மணல்வண்டிகளின் அதிக விரைவால் நிகழ்ந்தவை, களவுமணலைப் பிடிக்க வரும்போது தப்பிச் செல்லும்போது நிகழ்ந்தவை, வேண்டுமென்றே ஏற்றிக்கொன்றவை என்று பட்டியலே போடலாம்.

ஆனால் வெறும் கவனக்குறைவால் நிகழ்ந்தவையாகவே பெரும்பாலான அல்லது எல்லா வழக்குகளுமே முடிக்கப்பட்டிருக்கும். தோண்டித் துருவிப் பார்த்தால் பல உண்மைகள் வெளிவரலாம். இவ்வாறு கொல்லப்பட்டவர்களைச் சமூகச் சொத்து இழப்பாகக் கொள்ளலாம். கொன்றவர்களைச் சமூகக் கேடர்களாகக் கருதலாம். நாம்தான் அவ்வாறு கருதிக்கொள்ள வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டவர்களைப் பைங்கூழில் உள்ள களை என்றும் கொன்றவர்களைப் பெரியமனிதர்கள் என்றுமல்லவா கருதுகிறார்கள். அறம் பற்றிய அளவீடுகள் தரங்குறைந்து போயின இச்சமூகத்தில். 

மணல் அள்ளுவதால் பொருளியல் கேடுகள்:

ஆற்றுமணல் என்பது ஆலைகளில் உருவாக்கப்படும் பண்டமன்று, அழியஅழியச் செய்துகொள்ளலாம் என்பதற்கு. அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்க் காற்றாலும் மழையாலும் வெயிலாலும் குளிராலும் அரித்து, நனைந்து, ஒட்டி, உருண்டு, உதிர்ந்து, வெடித்து, பொடிந்து உருவானதேயாகும். இப்போதுள்ள மணல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தோன்றியிருக்கும். அவற்றைப் பத்துப் பதினைந்து ஆண்டுகளிலே துடைத்து அள்ளிவிட்டால் இனிவரும் தலைமுறையினருக்குக் கோடையிலே இளைப்பாற்றிக்கொள்ள நிழல்தரும் மரமிருக்காது. ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரும் இருக்காது. அவர்கள் சடுகுடு விளையாடத் தக்கவொரு மணல்வெளி இருக்காது. 

திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்தும் ஒப்பந்தங்களில் பங்குபேசி ஊழல்புரிந்தது ஒருகாலம். அரசு புறம்போக்கு நிலங்களுக்குத் தன்பெயரில் உரிமைச்சான்று எழுதி ஊழல்புரிந்தது ஒருகாலம். கள்ளச்சாறாயம் வடித்துக் கோடிகோடியாய்ச் சொத்துச் சேர்த்தது ஒருகாலம். வழிப்பறிக் கொள்ளையடித்தது மிகப் பழங்காலம். அவற்றிலெல்லாம் சிக்கிக்கொண்டால் சீரழிவுதான்.

இப்போது நடந்துகொண்டிருப்பது இயற்கைவளச் சுரண்டல்காலம் போலும். இதில் அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல் ஒருவரிலும் இன்னொருவர் ஐம்மடங்கு மிஞ்சியவரே. அவர் ஆட்சிக்காலத்தில் அவர் அள்ளினார்; இவர் எதிர்த்தார். இவர் ஆட்சிக்காலத்தில் இவர் அள்ளுகிறார்; அவர் எதிர்க்கிறார். ஆனால் ஒவ்வொருவர் ஆட்சிக்காலத்திலும் அவரவர் ஆற்றுமணலைக் காப்பது எளிது. ஆட்சி இருக்கும்பொழுது  களவும், ஆட்சியிழந்தபொழுது காப்பும் பேசும் இரட்டை நாக்கினர் இவர்கள்.

இந்துமாக்கடல் ஆழத்திற்கு ஆற்றைத் தோண்டிவிட்டு இமயமலை உயரத்தில் இருக்கும் இன்னொரு ஆற்றுடன் இணைப்போம் என்றுகூறுவது நகைப்பிற்கிடமான செயல். ஒப்பந்தப் பங்கு வாங்க மட்டுமே அது உதவும். ஒருசொட்டுத் தண்ணீர்கூட ஏறிச்செல்லாது, ஆற்றுமணலைக் காக்கும்வரையில்.

திருநெல்வேலி மாவட்டம் நம்பியாற்றில் மணற்கொள்ளையால் பழைமையான ஓரணை உடைந்து துலுக்கர்பட்டி, ஆனைக்குளம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட குளங்கள் பத்தாண்டுகளாகத் தண்ணீரின்றி வறண்டது வரலாற்றில் அரசால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சமாகும்.

இதேபோல் 2018ஆம் ஆண்டு காவிரியில் முக்கொம்பு அணையில் இரண்டு கண்வாய்கள் உடைந்து விழுந்தன. அதே காலத்தில் கொள்ளிடம் ஆற்றுப் பாலமும் இடிந்து விழுந்தது. இவையிரண்டும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் கட்டுமானத்தில் குறையில்லை, ஆற்றுமணற்கொள்ளையால் உறுதியிழந்து உடைந்து விழுந்தன என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மணற்கொள்ளையால் இவை இடிந்து விழவில்லை எனப் புளுகினார். அதை அப்படியே ஊடகங்களும் செய்தியாக ஒளிபரப்பின. அணை உடைந்த இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் மணல் அள்ளப்பட்டதாக ஒப்புக்கொண்ட அவருக்கு, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த அவருக்கு ஆற்றின் கீழ்ப்பகுதியில் மணல் அள்ளுவது மேல்பகுதியில் அரிப்பை ஏற்படுத்தும் என்கிற உண்மை தெரியவில்லை. இத்தகைய ஆட்களையே முதலமைச்சர்களாகப் பெற்றுவருவது தமிழ்நாட்டின் தவப்பயனோ, சாபக்கேடோ தெரியவில்லை.

கண்டரக்கோட்டைத் தென்பெண்ணை ஆற்றுப்பாலம்


அண்மையில் கடலூர் விழுப்புரம் மாவட்டங்களுக்கிடையே கண்டரக்கோட்டை என்னுமிடத்தில் தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது, அங்குக் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் மேற்குப் பாலத்தில் தெற்கிலிருந்து வடக்காக இருபதாவது தூணில், அடிப்பகுதியில் தாங்கு தூண்கள் உடைந்தும் வன்காறை அரிக்கப்பட்டு வெறும் இரும்புக் கம்பிகளுடனும் இருப்பதைக் காண நேர்ந்தது. இது தரமற்ற கட்டுமானத்தால் நேர்ந்தது எனக் கொண்டாலும், அளவில்லா மணற்கொள்ளையே இதற்குப் பெருங்காரணமாகும். பொதுவாகப் பாலத்தின் தூண்கள் மணலுக்கு வெளியே தெரியும். அதன் அடிப்பகுதியில் உள்ள படுக்கையும் தாங்கு தூண்களும் மணலுக்கு அடியில் இருக்கும். இவை வெளியே தெரியும் அளவுக்குத் தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைப் பாலமே படிப்படியாக இடிந்து விழும் நிலை உள்ளது. மணற்கொள்ளையால் தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் உள்ள நெடுஞ்சாலைப் பாலங்கள், இருப்புப் பாதைப் பாலங்கள், அணைகள் வலுவிழந்துள்ளன. எதிர்காலத்தில் பெருவெள்ளம் பாயும்போது படிப்படியாக இடிந்து விழும். அப்போதும் மணற்கொள்ளையால் பாலம் உடையவில்லை என்றே அரசு விடை கூறும். 

இத்தகைய நிலையில்தான் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் 25 இடங்களில் மணல் அள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது. பருவக்கால மாற்றத்தால் பல ஆண்டுகள் கடும் வறட்சி, சில ஆண்டுகளில் அடைமழை எனத் தமிழ்நாடு அழிவின் விளிம்பில் உள்ளதை அறிந்தும் அறியாதது போலிருக்கும் அரசு இனியாவது மணற்கொள்ளையை நிறுத்த வேண்டும். ஏற்கெனவே களவாடியது போக ஆறுகளில் எஞ்சியுள்ள மணலையும் அள்ளுவதற்காகத் திட்டமிட்டுள்ளது மனித குலத்துக்கும் உலக உயிர்களுக்கும் எதிரானது என்பதை அரசு அறிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு ஊடகங்களும் அரசு சொன்னதற்கெல்லாம் தலையாட்டாமல், மணற்கொள்ளை தீங்கானது என்பதை அரசுக்கு எடு(இடி)த்துரைக்க வேண்டும். 

சே.பச்சைமால்கண்ணன்