சென்னையில் அடையாறு, கூவம் ஆறு ஆகியன கடலில் கலக்குமிடத்துக்கு இடைப்பட்ட பகுதி மெரினா என்றழைக்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய எழில்மிகு கடற்கரை என இது கூறப்படுகிறது. நாட்டு விடுதலைப் போராட்டக் காலத்தில் கடற்கரையில் கூடிய பொதுமக்களிடையே தேசியத் தலைவர்கள் எழுச்சி உரையாற்றினர். சுப்பிரமணிய பாரதியார் உள்ளிட்ட பாவலர்கள் தங்கள் நண்பர்களுடன் பல்வேறு கதைகள் பேசி மகிழ்ந்த இடமாகவும் மெரினா கடற்கரை விளங்கியது.
கடற்கரையில் இருந்த சீரணி அரங்கில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன.
ஆட்சியாளரின் பொறாமையால் இந்த அரங்கம் 2003ஆம் ஆண்டு மேமாதத்தில் ஒரு நாள் இரவோடு இரவாக
இடிக்கப்பட்டது. இருந்த இடம் தடம்தெரியக் கூடாது என்கிற கெடுமதியாளரின் எண்ணத்தால்
இடிபாட்டின் பொடிகூட இல்லாத அளவுக்கு அள்ளி அகற்றப்பட்டு அடையாளம் அழிக்கப்பட்டது.
இந்தியாவின் நாலாவது பெரிய நகரமான சென்னையில் மக்களுக்குக்
கட்டணமில்லாப் பொழுதுபோக்கு இடமாக மெரினா விளங்குகிறது. அவர்களின் தேவையை நிறைவேற்றும்
வகையில் பல்வகைப் பொருட்களை விற்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகளும் உள்ளன. கைகளிலும்
தோளிலும் தலையிலும் சுமந்து பொருட்களை விற்கும் வணிகர்கள், தள்ளுவண்டி வணிகர்கள், மிதிவண்டி
வணிகர்கள் ஆகியோருக்கு வாழ்வளிக்கும் மிகப்பெரும் வணிக வளாகமாகவும் மெரினா விளங்குகிறது.
ஒரு காலத்தில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தோருக்கு இரவுநேர
இலவசத் தங்குமிடமாக மெரினா விளங்கியது. இரவுநேரத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் நிகழ்ந்ததால்
இப்போது இரவு 10 மணிக்குப் பிறகு யாரையும் தங்க விடுவதில்லை. அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு
மிகப்பெரிய திடலாகவும் மெரினா விளங்குகிறது. 500 மீட்டர் அகலமுள்ள மணற்பரப்பே இதன்
பெருமைகளில் குறிப்பிடத் தக்கது. கடற்கரையோரத்தில் அரைக் கிலோமீட்டர் தொலைவுக்கு எந்தக்
கட்டுமானமும் இருகக் கூடாது என்கிற கடற்கரை மேலாண்மை விதி பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தகைய விதிகள் எதுவும் இல்லாமலேயே துறைமுகத்தைத் தவிர
மற்ற கட்டுமானங்கள் எல்லாம் கடலில் இருந்து அரைக்கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும்
வகையிலேயே கட்டப்பட்டன.
இன்றைய துறைமுகம், கடற்கரை ரயில் நிலையத்துக்கு எதிரில் உள்ள
வணிகக் கட்டடங்கள், உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, கோட்டை, கொத்தளம், பல்கலைக்கழகம்,
அரசுத் துறை அலுவலகக் கட்டடங்கள், மாநிலக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, இராணி மேரிக்
கல்லூரி, காவல்துறைத் தலைமையகம், வானொலி நிலையம் என அனைத்துமே விதிகளே இல்லாக் காலத்திலும்
கட்டுப்பாட்டுடன் கட்டப்பட்டன.
மெரினாவில் மரங்கள் வளர்த்தால் மணற்பரப்பு மறைந்து விடும்
எனக் கருதி அதைக்கூடச் செய்யவில்லை ஆங்கில அரசு. நாடு விடுதலையடைந்தபின் இதையெல்லாம்
கருத்திற்கொள்ளாமல் முதலமைச்சர் அண்ணாதுரை இறந்தபோது முதல் அத்துமீறலாக அவரது உடல்
மெரினாவில் கூவம் ஆற்றுக்குத் தென்கரையில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டப்பட்டது.
1987 டிசம்பர் 24ஆம் நாள் அப்போதைய முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் இறந்தபோது அவரது
உடலும் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டப்பட்டது. ஆளும்போதே இறந்து
கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்டுவதை அரசியல் தலைவருக்குக் கிடைக்கும் பெரும்பேறாகத்
தமிழ்நாட்டின் இருபெரும் திராவிடக் கட்சிகளும் கருதுகின்றன. பின்னாளில் செயலலிதா, கருணாநிதி
ஆகியோர் இறந்தபோது அவர்களின் உடல்கள் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது இதைக் காட்டும்
வகையில் உள்ளது. நால்வரின் உடல்களை அடக்கம் செய்தது மட்டுமல்லாமல் அவர்களின் நினைவாகக்
கடற்கரை மேலாண்மை விதிகளை மீறிப் பல்வேறு கட்டுமானங்களையும் இரு திராவிடக் கட்சிகளும்
மக்கள் பணத்தில் எழுப்பி வருகின்றன. இரு தேசியக் கட்சிகளும் மாநிலங்களின் உரிமைகளைப்
பறிப்பதாக அவ்வப்போது கூக்குரலிடும் இரு திராவிடக் கட்சிகளும் தங்கள் தலைவர்களின் பெயரில்
கடற்கரையில் நினைவிடங்கள் எழுப்ப எதையாவது விட்டுக்கொடுத்துத் தேசியக் கட்சியின் நடுவணரசில்
சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலைப் பெற்று விடுகின்றன.
இது ஒருபுறமிருக்க எஞ்சியுள்ள மணற்பரப்பில் மக்கள் விட்டுச்செல்லும்
பல்வேறு கழிவுகளை அகற்றித் தூய்மைப்படுத்தச் சென்னை மாநகராட்சி சார்பில் ஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை தாள், நெகிழி, துணிகள், செருப்புகள், சருகுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றிக்
கடற்கரை மணற்பரப்பைத் தூய்மையாக வைத்திருக்கின்றன.
கடற்கரையில் கடைகள் வைத்திருப்போர் தங்கள் பொறுப்பை உணர்ந்து
ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்துள்ளனர். எனினும் ஒருசிலர் பொறுப்பில்லாமல் கழிவுகளைத்
தொட்டியில் போடாமல் மணற்பரப்பில் வீசிச் செல்கின்றனர்.
பான்மசாலா, குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு
அதிமுக ஆட்சிக்காலத்தில் தடை விதிக்கப்பட்டபோதும் சட்டத்தை மீறிக் கடைகளில் விற்கப்படுவதாகக்
கூறிச் சட்டமன்றத்துக்குள் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களும் போராட்டம்
நடத்தினர். அன்றும் இன்றும் சென்னையில் பான்மசாலா, குட்கா விற்பதற்குக் கடற்கரை மணற்பரப்பில்
கிடக்கும் காலிப் பொட்டலங்களே சான்று. அரசு நினைத்தால் இவ்வளவு மணற்பரப்பில் இவ்வளவு
காலிப்பொட்டலங்கள் கிடந்தன எனக் கணக்கிட்டுவிட முடியும்.
கடற்கரையில் மணல், சிப்பி, சங்கு, சோவி, நத்தை ஓடுகள் கிடப்பது
இயல்பு. இத்தகைய மணற்பரப்பையே நாம் கண்டிருக்கிறோம். கற்பனை செய்து பார்த்திருப்போம்.
மாறாக மணற்பரப்பில் ஆங்காங்கே மதுப் புட்டில்களும் அவற்றின் மூடிகளும் பரவிக் கிடக்கின்றன.
குடிகாரர்களில் அறிவில்லாச் சிலர் கற்களில் வீசியெறிந்த மதுப்புட்டில்கள் உடைந்து மணலில்
மேற்பரப்பிலும் புதைந்தும் கிடக்கின்றன. கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பொறிகளில் புட்டில்களின்
கண்ணாடிகள் சிக்குவதில்லை. மாறாகப் புட்டில்கள் அந்தப் பொறியில் சிக்கும்போது உடைந்து
கண்ணாடித் துண்டுகளாகும் வாய்ப்புள்ளது. முன்பெல்லாம் ஓரிரு இடங்களில் காலி மதுப்புட்டில்களையும்
உடைந்த கண்ணாடிகளையும் காண முடிந்தது. இப்போது ஓர் சதுர அடி மணற்பரப்பில் குறைந்தது
5 கண்ணாடித் துண்டுகளாவது கிடக்கின்றன. இவற்றில் ஒரு சில மிகக் கூர்மையாக உள்ளன.
கடற்கரைக்கு வருவோர் பெரும்பாலும் காலணி அணிந்திருப்பதாலும்,
கால்பட்டதும் மணலின் நெகிழ்வுத் தன்மையால் கண்ணாடித் துண்டு மணலில் புதைவதாலும் இவை
காலில் குத்திப் புண்படுத்துவதில்லை. இருந்தாலும் கடற்கரையெங்கும் இயற்கை மணற்பரப்பு
கண்ணாடித் துண்டுகள் நிரம்பி மாசுபட்டுக் கிடக்கிறது. பள்ளி, கோவில் வளாகங்களுக்கு
வெளியிலும், பேருந்து நிலையத்திலும், ரயில்களின் கழிவுத் தொட்டிகள், சாலையோரம், ரயில்பாதையோரம்,
காடு, வயல் எங்கும் காலி மதுப்புட்டில்கள் கிடக்கின்றன. உடைந்த கண்ணாடித் துண்டுகள்
மனிதர்கள் மட்டுமல்லாமல் காட்டு விலங்குகளுக்கும் காலில் குத்திப் புண்படுத்துகின்றன.
இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. காலி மதுப்புட்டில்களை
மதுக் கடைகளிலேயே திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அப்போது புட்டிலை ஒப்படைத்ததற்காகச்
சிறு தொகையைத் திரும்பி வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுப்புட்டில்களையே அவற்றின் அதிகப்பட்ச விலைக்கு மேலே
10 ரூபாய், 20 ரூபாய் அதிக விலைக்கு விற்பது; மதுப்புட்டில் விலை 190 ரூபாய், 280 ரூபாய்
என்றிருந்தால் மீதி 10 ரூபாய், 20 ரூபாய் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவது என்கிற
பாணியில் பணித்திறனைக் கொண்டுள்ள மதுக்கடைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவை உடனே பின்பற்றுவார்களா
என்ன?
அதன் விளைவுதான் உலகின் எழில்மிகு மெரினா கடற்கரை பெரிய திறந்தவெளிக்
குடிப்பகமாக மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டை அரசு மறுக்கக் கூடும். கடற்கரையில்
மது குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பது, குடிகாரர்கள் தங்களுக்குள் சண்டையிடுவது, பெண்களிடம்
பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, கொலை முயற்சிகள், கொலைகள், தாக்குதல்கள் என அவ்வப்போது
வெளியாகும் செய்திகள் அதை மெய்ப்பிக்கின்றன. இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட ஆட்கள் கூட
அரசின் மிரட்டலால் பிறழ் சாட்சிகளாக மாறக் கூடும். ஆனால் இயற்கைச் சாட்சியாகக் கடற்கரை
மணற்பரப்பில் காலி மதுப் புட்டில்களும் உடைந்த கண்ணாடித் துண்டுகளும் கிடக்கின்றன.
படிக்க இலக்கு வைக்காமல் குடிக்க இலக்கு வைக்கும் மாநிலத்தில் இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்க
முடியும்?
சே.பச்சைமால்கண்ணன்
தமிழகத்தின் இன்றைய நிலைமையை மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளாய் நண்பா......
பதிலளிநீக்குகட்டுரையைப் படித்துக் கருத்துச் சொன்ன நண்பன் கழுவூர் மு.ஜெயராமகிருஷ்ணனுக்கு நன்றி
பதிலளிநீக்கு