“சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்கப் பரந்தூரைத் தேர்வு செய்தது ஏன்? அரசு உயர் அதிகாரி விளக்கம்” என்னும் தலைப்பில் தமிழ் முன்னணி நாளிதழில் செப்டம்பர் 23ஆம் நாள் அரைப் பக்கம் செய்தி வெளியாகியிருந்தது. 3 ஊர்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள், கிணறுகள், பள்ளிகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், பசுமையான வயல்வெளிகள் உட்பட 4700 ஏக்கர் நிலங்கள் எடுத்து ஆண்டுக்குப் பத்துக் கோடிப் பயணிகளைக் கையாளும் வகையில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. நடுவணரசின் திட்டமாக இருந்தாலும் அதற்கு நிலம் எடுத்துக் கொடுப்பது மாநில அரசின் கடமையாகும். அதற்காக விமான நிலையம் வந்தால், சென்னையும் சுற்று வட்டாரப் பகுதிகளும் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் மாநில அரசு தெரிவித்து வருகிறது.
இவ்வளவு பெரிய திட்டத்துக்குப் பரந்தூரைத் தேர்வு செய்தது
ஏன் என்பது குறித்து அரைப்பக்க அளவுக்கு வந்திருந்த செய்திக் கட்டுரையில், அரசு உயர்
அதிகாரி என மொட்டையாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர் யார் என இறுதிவரை குறிப்பிடவே இல்லை.
இப்போதுள்ள விமான நிலையத்தில் ஆண்டுக்கு மூன்றரைக் கோடிப் பயணிகள் வரைதான் கையாள முடியும்
என்றும், அதனால் இரண்டாவது விமான நிலையம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளதாகவும்
அந்தச் செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
விமான நிலையம் கட்ட நிலம் எடுத்தாலும் பரந்தூரில் உள்ள நீர்வழித்தடங்களில்
நீரோட்டம் எந்தத் தடையும் இன்றி அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றும், பெரிய
நெல்வாய் ஏரி திட்டச் செயல்பாட்டுப் பகுதிக்கு உள்ளே இருந்தாலும் அதை ஆழப்படுத்தித்
தொடர்ந்து ஏரியாகப் பராமரிக்கப்படும் என்றும், விமான நிலையச் செயல்பாட்டால் சுற்றுப்
பகுதி நீர்நிலைகள் எந்தவிதப் பாதிப்பும் இன்றிப் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நடுவணரசுத் திட்டங்களுக்கு இதற்கு முன் எடுத்த நிலங்களில் இவ்வாறு நீர்நிலைகள் பராமரிக்கப்படுகிறதா
என்பதை உயர் அதிகாரி விளக்க வேண்டும். நானறிந்த வரையில் திருநெல்வேலி மாவட்டம் ஐஎன்எஸ்
கட்டபொம்மன் கடற்படைத் தளத்தில் அது தொடங்குமுன் இருந்த குளங்களின் கரையை வெட்டி நீர்தேங்கா
வகையில் வடியச் செய்துவிட்டனர். இதேபோல்தான் பரந்தூரிலும் அரசு அதிகாரியின் உறுதிமொழி
காக்கப்படும் என எண்ண வேண்டியுள்ளது. கோவன்குளம் வழியாகக் கடற்படைத் தளத்துக்குள் ஓர்
ஓடை பாய்கிறது. இந்தக் கடற்படைத் தளம் கட்டுமுன் இயல்பாக வெள்ளம் பாய்ந்தது. இதைக்
கட்டியபின் தண்ணீர் செல்வது தடைபட்டு ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ஊருக்குள் வெள்ளம்
புகுந்துவிடுகிறது. இந்த வெள்ளத்தால் ஓடையில் அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகள் பலமுறை
அடியோடு சாய்ந்தன. ஓடைக்கரையில் 12 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட மதில்களும் பல இடங்களில்
100 மீட்டர் நீளத்துக்கு மேல் சாய்ந்தன. மழைக்காலம் முடிந்தபின் பூசிமெழுகும் வேலைகளையே
பாதுகாப்புத் துறை செய்திருக்கிறது. வெள்ளத்துக்குக் காரணமான நடுவணரசின் பாதுகாப்புத்
துறையிடம் மாவட்ட வருவாய்த் துறை எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. 35ஆண்டுகளாகியும்
ஓடை வெள்ளம் தடையின்றிச் செல்வதற்கு இன்னும் நிலையான தீர்வு காணப்படவில்லை. இப்போதும்
ஓடைவெள்ளம் செல்லும் வழியில் இரும்புக்கம்பிகளால் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னியுள்ளனர்.
இதனால் வெள்ளத்தில் அரித்து வரப்படும் ஓலை மட்டை செடிசெத்தைகள் இரும்புக் கம்பிகளில்
சிக்கி நீரைச் செறுத்து ஊருக்குத் திருப்பி விடுகின்றன.
தெற்கே நம்பியாறு, மேற்கில் குளம், வடக்கில் ஓடையும் மற்றொரு
குளமும், கிழக்கே கடற்படைத் தளத்தின் மதில்சுவர் என இயற்கை மற்றும் செயற்கையால் அரண்போலக்
காட்சியளிக்கும் கோவன்குளம் ஊர் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் படுந்துயரை இதுவரை
எந்த நாளிதழும் செய்தித் தொலைக்காட்சியும் வெளிக்கொண்டுவந்ததில்லை. வெள்ளக்காலத்தில்
அரசு அதிகாரிகள் நினைத்தாலும் சென்று பார்க்க முடியாத நிலை அங்கு நிலவுகிறது.
கட்டிக் குத்தகைக்கு விடும் அரசின் கொள்கையால் பரந்தூரில்
அமைக்கப்படும் விமான நிலையமே தனியாருக்குக் கொடுக்கப்படும். அப்படியிருக்கப் பரந்தூரில் உள்ள நீர்நிலைகளைப்
பராமரிப்பது நடுவணரசா? தமிழ்நாட்டு அரசா? உயர் அதிகாரி விளக்க வேண்டும்.
புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு
அதிகமாகத் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும், பரந்தூர் மற்றும் சுற்றுப்புற
ஊர்மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமின்றி விமான நிலையம் மூலம் உருவாகும்
அனைத்துப் பொருளாதாரப் பயன்களும் அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் செய்திக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளது. பரந்தூர் மக்கள் வெளியேற்றப்பட்டதும் தங்கள் உறவினர் நண்பர்கள்
உள்ள பல ஊர்களுக்குப் பரந்து செல்ல நேரிடும். அப்படி இருக்கும்போது பொருளாதாரப் பயன்கள்
அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் புதிய
விமான நிலையத்தில் பங்குகள் கொடுக்கப்படுமா? என்னும் வினாவுக்கு அரசு உயர் அதிகாரி
விடையளிக்க வேண்டும். கட்டபொம்மன் கடற்படைத் தளம், மகேந்திரமலை விண்வெளி ஆராய்ச்சித்
தளம், கூடன்குளம் அணுவுலை, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம், சேலம்
உருக்காலை ஆகியவற்றுக்கு நிலம் கொடுத்த மக்களுக்குப் பொருளாதாரப் பயன்கள் எவ்வகையில்
கிடைக்கின்றன? என்பதையும் அரசு உயர் அதிகாரி விளக்க வேண்டும்.
நில உரிமையாளர்களுக்குச் சந்தை மதிப்பில் மூன்றரை மடங்கு
இழப்பீடு வழங்கப்படும் என்றும், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்
என்றும், குடும்பத்தில் ஒருவருக்குக் குறைந்தபட்ச ஊதிய விகிதத்துக்குக் குறையாமல் தகுதியின்
அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்குக் கல்வித்
தகுதி அடிப்படையில் வேலைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன் நடுவணரசு திட்டங்களுக்கு நிலம் எடுத்த பகுதியில் எத்தனை குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன?
அவற்றில் எத்தனை குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்க
வேண்டும். நானறிந்து வடுகத்தான்மொழி, ஆற்றுக்குடி ஆகிய ஊர்களில் கடற்படைத்தளம் கட்டும்போது
முந்நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வீடு நிலம் வயல் ஆகிய அனைத்தையும் பிடுங்கிக்
கொண்டு வெளியேற்றப்பட்டனர். கோவன்குளம், விஜயநாராயணம், சிவந்தியாபுரம், மலையன்குடியிருப்பு
உள்ளிட்ட பல ஊர்களையும் சேர்த்து மொத்தம் மூவாயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோரில் இருபதுக்கும் குறைவானவர்களுக்கே டி பிரிவில் வேலை கிடைத்தது. எஞ்சியோர்
இன்றளவும் ஏமாந்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் 5 சென்ட்
வீட்டுமனை வழங்கப்படும் என்றும், 5 செண்டுக்கு மேல் வீட்டுமனை உள்ளோருக்கு அதே அளவு
பரப்புள்ள வீட்டுமனை வழங்கப்படும் என்றும், வீடு கட்டித் தரப்படும் அல்லது வீடு கட்டுமானச்
செலவு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கட்டபொம்மன் கடற்படைத் தளம் கட்டும்போது
வெளியேற்றப்பட்டோர் பரப்பாடி அருகே பாரதிநகரில் நான்குநேரி - திசையன்விளைச் சாலையின்
வடபுறத்திலும் விஜயன் கால்வாயின் தென்புறத்திலும் உள்ள நிலத்தில் வீடுகட்டிக் குடியிருக்கின்றனர்.
கால்வாய் ஓரத்தில் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டியவர்களுக்கு இன்றளவும் வீட்டுமனைப்
பட்டா வழங்கப்படவில்லை.
மறு குடியமர்வுப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புகளான குடிநீர்,
மின்சாரம், நியாயவிலைக் கடை, அஞ்சலகம், போக்குவரத்து வசதிகள், கழிப்பறைகள், பள்ளிகள்,
விளையாட்டுத் திடல், மருத்துவமனை ஆகியவை அமைத்துத் தரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
பாரதிநகரில் குடியேறியோருக்கு இவற்றில் பல வசதிகள் இன்றளவும் இல்லை என்பது குறிப்பிடத்
தக்கது. 1980களில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படைத் தளத்துக்கு எடுத்த வளமான நிலத்துக்கு வழங்கிய இழப்பீடு ஏக்கருக்கு 300 ரூபாய் எனப் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ஒவ்வொன்றும் 70 கிலோ கொண்ட 24 மூட்டை (12 கோட்டை) நெல்லும், 12 பொதிப் பருத்தியும் (1200 கிலோ) விளையும். இவற்றின் அந்நாளைய மதிப்பே 6000 ரூபாய். ஓராண்டு விளைச்சலைப்போல் 20 மடங்குத் தொகையை இழப்பீடாக வழங்கியிருக்க வேண்டும். அப்படியென்றால் ஏக்கருக்கு 1,20,000 ரூபாய் வழங்கியிருக்க வேண்டும். அதற்கு மாறாக உண்மையான இழப்பீட்டில் 400 இல் ஒரு பங்கு மட்டுமே அதாவது ஏக்கருக்கு 300 ரூபாய் வழங்கி இருக்கிறார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய ஏமாற்று.
நிலமில்லாமல் அப்பகுதியில் விறகு வெட்டியும், ஆடுமாடு மேய்த்தும், சாணி பொறுக்கியும் பிழைத்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் இந்தச் சிந்தனையே இல்லை. இப்போது பரந்தூரில் நிலமில்லாமல் கூலிவேலை செய்து பிழைக்கும் மக்களுக்கும் குறைந்தது ஐம்பது இலட்ச ரூபாய் என்கிற இழப்பீடு பெற உரிமை உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
சே.பச்சைமால்கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக