ஞாயிறு, 2 அக்டோபர், 2022

தமிழ்த்தாய் வாழ்த்து

எத்திசையும் புகழ்மணக்க இருந்த தமிழ்த்தாயின் இன்றைய நிலை


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகு மின்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்

தொடுகடலை உனக்குவமை சொல்லுவதும் புகழாமே.

ஒருபிழைக்கா யரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்

அரியதுன திலக்கணம் என்றறைவதும் அற்புதமாமே!

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுதும் நினதாயின்

முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே!

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு

காலநதி நினைக்கரவாக் காரணத்தின் அறிகுறியே.

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்

உடையாருன் வாசகத்திலொரு பிரதி கருதினதே.

தக்கவழி விரிந்திலகும் சங்கத்தார் சிறுபலகை

மிக்கநலம் சிறந்த உன்றன் மெய்ச்சரிதம் வியஞ்சனமே.

வடமொழிதென் மொழியெனவே வந்ததிரு விழியவற்றுள்

கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடு மேற்குணராரே.

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்

கூறுவடமொழி வலமாக் கொள்வர் குணதிசை யறியார்.

கலைமகள்தன் பூர்வதிசை காணுங்கால் அவள் விழியுள்

வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி.

மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ?

- பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் நாடகத்தில் இடம்பெற்றது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக