சனி, 8 அக்டோபர், 2022

நிலங்கொடுத்த மக்களை வஞ்சித்த அரசு

1894ஆம் ஆண்டைய நிலங் கையகப்படுத்துதல் சட்டத்தின்படித்தான் உழவர்கள், உழைப்பாளர்கள், பழங்குடி மக்கள், காடுவாழ் மக்கள் ஆகியோரின் வயல்களும் வீடுகளும் நடமாடுமிடங்களும் மேய்ச்சல் நிலங்களும் பல்வேறு தேவைகளுக்காக அரசால் கையகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள் தமிழ்நாட்டு அரசிதழில் திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் வட்டத்தின் கோட்டைக்கருங்குளம், கோவன்குளம் ஆகிய ஊராட்சிகளிலும் நான்கூனேரி வட்டத்தின் இலங்குளம், சங்கனாங்குளம் ஆகிய ஊராட்சிகளிலும் பரவியிருந்த சுமார் 3000 ஏக்கர் நிலப்பகுதியைப் படைத்துறைக்காகக் கையகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான்கூனேரித் தனிவட்டாட்சியர்(நிலப்பறிப்பு) இதைச் செயல்படுத்துவார் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசிதழில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பைப் படிக்கக் கூடிய ஆட்கள் அந்த நாளில் அவ்வூர்களில் இல்லையென்று உறுதியாகச் சொல்லலாம். அரசின் வருவாய்த்துறை வழியாகச் செய்தியை யறிந்த மக்கள் தலையில் இடிவிழுந்தது போன்ற அதிர்ச்சிக்கு ஆளாயினர். அரசு எடுப்பதாக இருந்த நிலம் நம்பியாற்றுக்கு வடக்கேயும் கோவன்குளத்தூரின் மேற்குக் கோடிக்குக் கிழக்கேயும் நான்கூனேரி உவரி மாநில நெடுஞ்சாலைக்குத் தெற்கேயும் சிவந்தியாபுரம், மலையன்குடியிருப்பு ஆகிய ஊர்களின் மேற்கேயும் உள்ள பெருநிலப்பகுதி. கோவன்குளத்தூருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டது. ஊரின் தென்மேற்கிலிருந்து கிழக்காகவும் தென்கிழக்கிலிருந்து வடக்காகவும் வடகிழக்கிலிருந்து மேற்காகவும்  ஊரைச்சுற்றிப்வடிவத்தில் கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. மேற்புறம் மட்டுந்தான் இம்மக்கள் செல்ல முடியும்.

இந்நிலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகக் கோவன்குளம் ஓடை பாய்ந்தது. இது பொற்றையடியில் தோன்றி வலியனேரி, தாமரைக்குளம், சாலைப்புதூர், கல்மாணிக்கப்புரம், பாண்டிச்சேரி, கோவன்குளம், வடுகத்தான்மொழி, ஆற்றுக்குடி ஆகிய ஊர்களின் வழியாகப் பாய்ந்து மலையன்குடியிருப்புக்கு அருகில் நம்பியாற்றில் கூடுகிறது. இடைக்காலத்தில் தாமரைக்குளத்துக்கருகே விசயன்கால்வாய் ஓடையின் குறுக்கே வெட்டப்பட்டுவிட்டதால் இன்றைக்கு ஓடையின் தோற்றுவாய் என்று தாமரைக்குளத்து மேலைமறுகாலைக் கூறலாம்.

மேற்கண்ட ஊர்களின் குளத்துமறுகால் தண்ணீரும் கோவன்குளத்தில் நம்பியாற்றில் கட்டப்பட்ட அணையிலிருந்து வரும் தண்ணீரும் பாய்ந்து இவ்வோடையைப் பேரோடையாக்கியது. ஓடைக்குத் தெற்கேயும் நம்பியாற்றுக்கு வடக்கேயும் உள்ள நிலம் வண்டல் படிந்த வளமான நிலமாகும். கோவன்குளத்துப் பற்றில் கீழ்ப்பாதியும் அதற்குக் கிழக்கேயுள்ள பகுதிகளும் இவ்வகையில் நெல் விளையும் வளமான பகுதிகளாகும். இங்குத்தான் பனைகள் கூட்டங்கூட்டமாக நின்றன. நிலத்தைக் கடற்படைக்காகப் பறிக்கின்றனர் எனத்தெரிந்ததும் பனைக்கு இழப்பீடுண்டா எனக் கேட்டுள்ளனர் மக்கள். பனைகளை வெட்டிக் கொள்ளுங்கள் அதற்கு இழப்பீடு கிடையாது என்று அரசின் வருவாய்த்துறை கூறிவிட்டதாம். அதன் விளைவு ஆயிரக்கணக்கான பனைகள் சில மாதங்களில் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

ஓடைக்கு வடக்கேதான் வடுகத்தான்மொழிக் குளம் உட்பட மூன்று குளங்கள் இருந்தன. வடுகத்தான்மொழிப் பற்றில் செழிப்பாக நெல்விளையும். கோவன்குளத்தூருக்கு வடகிழக்கில் ஓடைக்கு வடபுறத்திலுள்ள பாண்டிச்சேரிப் பற்றின் வயல்களும் கையகப்படுத்தப்பட்ட நிலப் பட்டியலுள் அடக்கம். மேலும் தெற்கேயும் வடக்கேயும் உள்ள நிலங்களில் நிறையக் கிணறுகள் வெட்டிக் கமலை இறைத்தும், மின்னிறைப்பான் பொருத்தியும் நீரிறைத்துப் பருத்தி, நிலக்கடலை, மிளகுசெடி போன்றவற்றைப் பயிரிட்டு வந்தனர். நிலமில்லாதோர் வயலில் கூலிவேலை செய்தனர். ஆற்றுக்குடி மக்களும் கோவன்குளத்து மக்களும் தங்கள் நிலங்களில் பயிரிட்டதோடு பனையேறிப் பதநீர் இறக்கிக் காய்த்துக் கருப்பட்டி செய்து வந்தனர்.

எவருக்கும் தலைவணங்காமல் தன் நிலத்தில் தானே உழைத்துப் பயிரிட்டு விளைவித்து உண்டுறங்கி வந்த மக்களுக்குத் தங்கள் நிலத்தைப் பறித்துக்கொண்டால் என்ன செய்வது என்று அதிர்ச்சி ஏற்படுவது இயற்கையே. தெற்கு விசயநாராயணத்தைச் சேர்ந்த பட்டங்கட்டியொருவர் அதிர்ச்சியில் நோயுற்றுப் பின்னர் இறந்துவிட்டதாக என்னப்பர் கூறியிருக்கிறார். கடற்படைவீட்டின் தலைவாயிலுக்குக் கொஞ்சங் கிழக்கே இன்று சரியாகப் பேணப்படாமல் இருக்கும் பெரிய தென்னந்தோப்பு அவருடையதுதான். அவ்வளவு பெரிய தென்னந்தோப்பை இழந்த எவருக்கும் அதிர்ச்சி வரத்தான் செய்யும். ஊர்ப்பணத்தைத் தின்றுகொழுத்து அரசியலில் பிழைத்தோர் வழக்கு, தளை என்றதும் மருத்துவமனையில் படுத்துக்கொள்வதுபோலில்லை இந்த அதிர்ச்சி. உழைத்துக் காத்து வளர்த்த தென்னந்தோப்பை இழந்தவர்க்கு வந்தது பேரதிர்ச்சியே. அரசு பண்ணைகளிலும் தென்னையாராய்ச்சி நிலையத்திலுங்கூட இப்படிச் செழிப்பான ஒரு தோப்பை நான் கண்டதில்லை. தென்னை நிலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தோப்புகளைப் போன்ற செழிப்பு. ஒரு புல்கூட முளைக்காத பாறைக்காட்டில் இவ்வளவு தென்னைகளை வைத்துத் தண்ணீர் பாய்த்துச் செழிப்பாக வளர்த்தவருக்கு அதிர்ச்சி நிலத்தைப் பறித்ததால்தான் என்பதை அரசு ஏற்றுக்கொள்ளாது.

கோட்டைக்கருங்குளம் ஊராட்சியின் ஆற்றுக்குடி, கோவன்குளம் ஊராட்சியின் வடுகத்தான்மொழி, சங்கனாங்குளம் ஊராட்சியின் மார்த்தாண்டபுரம் ஆகியன கடற்படை வீட்டுக்காகக் குடியெழுப்பப்பட்ட ஊர்கள். ஆற்றுக்குடி அம்மன்கோவிலுக்கு இழப்பீடாகப் பதினாலாயிரம் ரூபாய் கிடைத்ததாம். அதைக்கொண்டும் ஊரில் பிரித்த வரியைக்கொண்டும் 1983 அக்டோபர்(தமிழுக்குப் புரட்டாசி) மாதம் கோவிலுக்குக் கொடை கொடுத்திருக்கின்றனர். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் கொடைநிறைவுநாளன்று மக்களெல்லாம் கோவிலுக்குச் சென்றிருந்த சமயத்தில் வீட்டிலிருந்த சட்டி, பானை, பெட்டி, கட்டில், தொட்டில் ஆகியவற்றையெல்லாம் வெளியே அள்ளிப்போட்டுவிட்டு வீட்டைப் பூட்டியிருக்கின்றனர் வருவாய்த்துறையினர். இதைவிட்டால் வேறு சமயம் வாய்க்காது என்று காத்திருந்தார்கள்போல. அச்சமயத்தில் மக்கள் கோவிலில் படைக்கப்பட்ட தேங்காய், பழம், இறைச்சி, சோறு ஆகிய உணவுகளைக் கூடப் பங்கு வைத்துச் சாப்பிடவில்லையாம். தேனெடுத்துக் கலைத்துவிடப்பட்ட ஈக்களைப்போல மக்கள் கிட்டியவற்றை எடுத்துக்கொண்டு சொந்த நாட்டில் கதியற்றவர்களாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்றனர்.  

மார்த்தாண்டபுரத்து மக்கள் நான்கூனேரி உவரி மாநில நெடுஞ்சாலைக்கு வடபுறம் தெற்கு விசயநாராயணத்துக் கீழூரில் குடியேறிவிட்டனர். வடுகத்தான்மொழிக் குடும்பங்கள் தங்கள் கொண்டான் கொடுத்தான் கொப்பூழ்க்கொடி உறவுகள் உள்ள இடங்களிலெல்லாம் குடியேறினர். கன்னியாகுமரி _ காசி நால்வழிச் சாலையில் நான்கூனேரிக்கும் திருநெல்வேலிக்கும் இடையேயுள்ள ஊர் மூன்றடைப்பு. அவ்வூருக்குத் தென்கிழக்கேயும் நால்வழிச்சாலையும் நாகர்கோவில் - திருநெல்வேலி இருப்புப்பாதையும் ஒன்றையொன்று தாண்டிக்கொள்ளும் இடத்திற்கு நேர் கிழக்கேயும் உள்ள ஊர் பத்தினிப்பாறை. அவ்வூரில் நிறையக் குடும்பங்கள் குடியேறியதாக என்னப்பர் கூறியுள்ளார். வடுகத்தான்மொழிக் குடும்பங்களில் கொஞ்சம்பேரும் ஆற்றுக்குடி மக்களில் ஒருசிலரும் தவிர எல்லோரும் அரசு ஒதுக்கிய இடமான, இன்று பாரதிநகர் என்றழைக்கப்படும் கால்வாய்ப் புறம்போக்கில் வந்து வெட்டைவெளியில் தங்கினர். ஆற்றுக்குடியிலும் வடுகத்தான்மொழியிலும் உள்ள வீடுகளிலிருந்த கதவு, சாளரம், தூண், உத்தரம், சட்டம், வளை, வரிச்சு, ஓடு ஆகியவற்றை வீடுகளை இழந்த மக்கள் பிரித்து எடுத்துச் செல்ல அரசு விடவில்லை. அதேநேரத்தில் களவாணிகள் சிலர் அந்தப் பொருட்களை இரவும் பகலுமாகக் களவாடி வெளியூர் மக்களிடமும் வீடுகளை இழந்த ஆற்றுக்குடி மக்களிடமும் விற்றுத் தின்றனர்.

வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் தன் முயற்சியால் பனையோலை, தென்னங்கீற்று, பனைவளை ஆகியவற்றை வாங்கி இலங்குளத்துக்குக் கிழக்கேயும் விசயங்காலுக்குத் தெற்கேயும் நான்கூனேரி உவரி மாநில நெடுஞ்சாலைக்கு வடக்கேயும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட  புறம்போக்கு இடத்தில் மண்சுவர் எழுப்பிக் கொண்டு வாழலாயினர்.

மூன்றூர்களில் இருந்து வெளியேறும் மக்கள் எங்குப் போவார்கள்? அவர்கள் குடியேற வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமேயென்று நான்கூனேரி நிலப்பறிப்புத் தனிவட்டாட்சியருக்குத் தெரியாதோ? அவரும் அரசும் நினைத்திருந்தால் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டதற்கும் (1982 செப்டம்பர் 22) ஆற்றுக்குடியிலும் வடுகத்தான்மொழியிலும் உள்ள மக்களை வீட்டைப் பூட்டி ஊரைவிட்டு வெளியேற்றியதற்கும் (1983 அக்டோபர்) இடையிலான ஓராண்டுக் காலத்தில் இன்றைய பாரதிநகரும் அன்றைய புறம்போக்குமான இடத்தில் சிமிட்டிச் சாந்தாலும் செங்கல்லாலும் சுவரெழுப்பி ஓட்டுக்கூரை வேய்ந்து வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாமே. ஏன் அவ்வாறு செய்யவில்லை? அப்படியொரு நடைமுறை அப்போதில்லையோ? பண்ணையான் மாடு செத்தால் மேய்ப்பவனுக்கென்ன? என்ற கணக்கில் செயல்பட்டுள்ளார் நிலப்பறிப்புத் தனிவட்டாட்சியர்.

அப்படி வெளியேறுபவர்களுக்காக வீடு கட்டிக் கொடுக்கும் வழக்கம் இதற்கு முன்பு இல்லையென்று சொல்பவர்கள் ஈழத்துக்குத் தேயிலைத் தோட்ட வேலைக்காகச் சென்று திரும்பிய தாயகத் தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாரதிநகருக்கருகில் 10 சென்ட் நிலத்தில் வீடு கட்டிக் கொடுத்துள்ளதையும் 3 குறுக்கம் (ஏக்கர்) நிலம் கொடுத்துள்ளதையும் அறிவார்களா? அப்படிக் கொடுக்க வேண்டியது ஓரரசின் கடமை. கிணற்றையும் பத்துக் குறுக்கம் எட்டுக் குறுக்கம் வளமான நிலத்தையும் குடியிருந்த வீட்டையும் நாட்டுக்காகப் பறி(விட்டுக்)கொடுத்துவிட்டு வந்த மக்கள் வெட்டைவெளியில் மேற்கூரையும் நாற்புறச் சுவரும் இல்லாமல் கழித்த நாட்கள் எத்தனையோ? அவர்கள் அவ்வாறு வந்து தங்கியபின் ஏழாண்டுகளுக்குப்பின் தன்முயற்சியால்தான் மின்னிணைப்புப் பெற்றனர்.

அரசு நினைத்திருந்தால் உடனடி மின்னிணைப்புக் கொடுத்திருக்கலாம். குடிதண்ணீருக்கு நாழிக்கிணறு தோண்டிக்கொடுத்திருக்கலாம். இதைக்கூடச் செய்யாதவர்கள் வடுகத்தான்மொழியில் எடுபட்ட தொடக்கப்பள்ளியை மறுகுடியேறிய இடத்தில் தொடங்குவார்கள், கட்டித் தருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்தப் புலப்பெயர்வால் எத்தனை பிள்ளைகளின் கல்வி தடுக்கப்பட்டதோ? நாட்டில் நால்வகைப் பாடத் திட்டத்தையும் கல்விமுறையையும் வைத்துக்கொண்டு, அப்படியொரு நிலை ஏற்படத் தாங்களுமொரு காரணம் என்பதை மக்களுக்குத் தெரிவிக்காமல், அந்நிலைக்கு வெட்காமல் நாக்கூசாமல் சமச்சீர்க்கல்வி, அனைவருக்குங் கல்வி, ஆங்கிலக் கல்வி என்று இன்று அலறுகின்றனர். இவர்கள் 1983-1984 கல்வியாண்டிலிருந்தே ஈரூர் மக்களின் கல்வியைக் கெடுத்தவர்களாயிற்றே. எப்படிச் சமச்சீர்க்கல்வி கொண்டுவர முடியும் இவர்களால்?

1984ஆம் ஆண்டில் அன்றைய படைத்துறை அமைச்சரும் பின்னாளைய குடியரசு தலைவருமான வெங்கடராமன் கடற்படை வீட்டுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் படைத்துறை உலங்கூர்தியில் வந்திறங்கினார். அவரைப் பார்க்கவோ உலங்கூர்தியைப் பார்க்கவோ என்று தெரியவில்லை? ஏராளமான மக்கள் கூட்டங்கூட்டமாக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் குமிந்திருந்தனர். வீடிழந்து விளையிழந்து நின்ற ஆற்றுக்குடி மக்களும் பாரதிநகரிலிருந்து வந்து குமிந்தனர். நம் மறுவாழ்வுக்கு ஏதேனும் வழிகூறுவார் படைத்துறை அமைச்சர் என்று கருதி ஆவலுடன் வந்திருப்பர் போலும். அவர் அன்று என்ன கூறியிருப்பார் என்பதற்கான குரல்பதிவு ஒருவேளை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் இருக்கலாம். நிலமிழந்த குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது இந்தக் கடற்படை வீட்டில் வேலைவாய்ப்புத் தரப்படும் என்று படைத்துறை அமைச்சரான வெங்கடராமன் மேடையில் உறுதிமொழிந்ததாக அக்கூட்டத்திற்குச் சென்றிருந்த மக்கள் கூறுகின்றனர்.

எழுத்துவழி உறுதிமொழியையே செயலாக்காதபோது வாய்பிறப்பு உறுதிமொழியெல்லாம் காற்றில் பறக்கும் என்பதை அப்போது மக்கள் அறிந்திருக்கவில்லை. உறுதிமொழிகளில் ஒன்றுகூடச் செயல்படுத்தப்படவில்லை.

பாரதிநகரில் வீடு கட்டித் தரவில்லை. குடிநீர், வடிகால், மின், கல்வி, பயிரிட நிலம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. நிலமிழந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவருக்கு என்ற கணக்கில் வேலைவாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. கோவன்குளத்தில் எழுவருக்கும் பாரதிநகரில் ஐவருக்கும் தெற்கு விசயநாராயணத்தில் ஒருவருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளன. எல்லோருங் கடைநிலை ஊழியர்களே. இவர்கள் இழந்த நிலங்களைவிடப் பன்மடங்கு நிலமிழந்தோரெல்லாம் எங்களுக்கு வேலைதந்தானாவென்று காலையும் மாலையும் புலம்புகின்றனர்.

மூன்றூர் மக்களை முழுவதுமாக வீட்டையும் விளைநிலத்தையும் பறித்துக்கொண்டு வெளியேற்றிவிட்டு ஓரூரின் நன்செய்யில் பாதியைப் பறித்துக்கொண்டு ஊருக்கு ஐவருக்கும் எழுவருக்கும் வேலைகொடுத்தால் மட்டும் போதுமா?

எல்லோருக்கும் பறிகொடுத்த அளவு பொருநை(தாமிரபரணி)யாற்றுப் பற்றில் நிலங்கொடுத்திருக்க வேண்டும். அப்படிக்கொடுக்காவிட்டால் வாழ்க்கைச் செலவுக்குக் காணுமளவு மாதவூதியம் கிடைக்கும்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேலைவாய்ப்புக் கொடுத்திருக்க வேண்டும். இல்லையேல் மாடு மேய்த்துப் பால் கறந்து வாழ்ந்துகொள்ளுங்கள் என்றுசொல்லிக் குடும்பத்துக்கொரு பசுமாடாவது பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். இவை எவற்றையும் செய்யாத அரசு பிறந்து வளர்ந்து உருண்டு புரண்டு ஊர்ந்து நடந்து ஓடியாடி உழைத்துத் திரிந்த மண்ணைவிட்டு மக்களை வெளியேற்றியது அரச வன்முறையே. மக்களின் வாழ்வுரிமையைப் பறித்த செயலாகும் இது. சொந்த நிலத்தில் உழைத்து வாழ்ந்த மக்கள் இந்தப் புலப்பெயர்வால் கல்வெட்டுங் குழிகளுக்கும் செங்கற் சூளைகளுக்கும் ஐதராபாத்தின்  மாச்சில்(பிஸ்கட்) நிறுவனங்களுக்கும் கீழைக்காட்டார் தமிழகமெங்கும் நடத்திய மளிகைக்கடைகளுக்கும் கொத்தடிமைகளாகச் சென்று வாழ நேர்ந்தது.

சமத்துவப்புரம், இந்திரா நினைவுக் குடியிருப்பு, ஆதிதிராவிடர் குடியிருப்பு, கச்சா வீடு, பக்கா வீடு, முதல்வர் வீடு என்று பல திட்டங்களில் தமிழ்நாடெங்கும் ஏற்கெனவே வீடுள்ளவர்களுக்குக் கட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தபோதும் அத்திட்டங்களால் இந்தப் பாரதிநகரில் ஒரு வீடுகூடக் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இனி அந்த உடைந்துவிழும் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டங்களில் இவர்களுக்கு வீடுகள் கட்டவேண்டிய தேவையுமில்லை. அந்த அளவுக்கு இவர்கள் இரப்பெடுத்து வாழவில்லை. சொந்த நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு வாழ்வில் நொந்தபோது பல்வேறு இடங்களுக்குச்சென்று உடல் வருத்தி உழைத்ததால் எல்லோரும் இப்போது சொந்தச் செலவில் நல்ல வீடுகளைக் கட்டியுள்ளனர்

பறிக்கப்பட்ட நிலங்களுக்கு அரசு கொடுத்த இழப்பீடு அன்றைய சந்தைமதிப்பைவிட மிகக் குறைவானது. ஒரு குறுக்கத்தில்(பன்னிரண்டு மரக்கால் விதைப்பாடு) பருத்தி பயிரிட்டால் குறைந்த அளவு குறுணிக்கு ஒருபொதி(குவிண்டால் 100கிலோ) என்று விளைந்தாலும் மொத்தம் பன்னிரண்டு பொதி விளையும். அந்நாளில் ஒருபொதிப் பருத்தியின் விலை குறைந்தது 300 ரூபாய் எனக்கொண்டாலும் பன்னிரு பொதிப் பருத்திக்கு 3600 ரூபாய் கிடைக்கும். பிசான(புரட்டாசிப்பட்ட)த்தில் நெல்நட்டால் ஒரு குறுக்கத்து(ஏக்கரு)க்குப் பன்னிரண்டு கோட்டை (பதினேழு குவிண்டால்) நெல் கிடைக்கும். எண்மர் கொண்ட ஒரு குடும்பம் ஒருநாளைக்கு முந்நேரம் சோறு பொங்கித் தின்றாலும் ஓராண்டுக்குக் காணும் இந்த நெல்.

அப்படியிருக்கையில் ஒரு குறுக்கத்துக்கு 410 ரூபாய் என்று மதிப்பிட்டு இழப்பீடு வழங்கியுள்ளது அரசு. ஓராண்டுக்குக் கோடையில் பன்னிரு பொதிப் பருத்தியும் பிசானத்தில் பன்னிரு கோட்டை நெல்லும் விளையும் நன்செய் நிலத்தை வெள்ளையர் காலத்தில் புன்செய் என்று வகைப்படுத்தியிருந்தனர். அதையே அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குறுணி(ஏக்கரில் பன்னிரண்டிலொரு பங்கு) விதைப்பாடு நானூறு ரூபாய்க்கு விற்ற காலத்தில் குறுக்கத்து(ஏக்கரு)க்கு 410 ரூபாய் என்று கணக்கிட்டுக் கொடுத்தது இந்த மண்ணின் மக்களுக்கு இழைக்கப்பட்ட இரண்டகமன்றி வேறில்லை.

இழப்பீடு, மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் போன்றவற்றில் கீழ்க்கண்டவாறு அரசு செயல்பட்டிருக்க வேண்டும்.

1. வெளியேற்றப்பட்ட மக்களுக்குப் பறிக்கப்பட்ட நிலத்துக்கொப்பப் பயிரிடுநிலம் கொடுத்துக் குடியேற வீடும் கட்டிக் கொடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓராண்டுக்கான வாழ்க்கைச் செலவைக் கொடுத்திருக்க வேண்டும்.

2. குடியேற வீடு கட்டிக் கொடுக்காத நிலையில் எண்மர் குடியிருக்கும் அளவுள்ள வீடுகட்ட அக்காலக்கட்டத்தில் எவ்வளவு பணம் செலவாகும் என்பதைக் கணக்கிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கியிருக்க வேண்டும். புதிதாகக் குடியேற்றும் இடத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் போர்க்கால விரைவில் செய்து முடித்திருக்க வேண்டும்.

3. வீடு, அடிப்படைக் கட்டமைப்பு, பயிரிடுநிலம் போன்ற எவ்வகை உதவிகளையும் செய்யாத அரசு வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு தலைமுறை(முப்பதாண்டு)க்கான வீட்டு வாடகையைக் கொடுத்திருக்க வேண்டும். பயிரிடும் நிலத்தை முழுவதுமாக எப்போதுமே இழந்துநிற்கும் அவர்களுக்குப் பத்தாண்டு விளைச்சல் மதிப்பை இழப்பீடாகக் கொடுத்திருக்க வேண்டும். ஆண்டு விளைச்சல் மதிப்பை வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்டு கணக்கிடாமல் உழவர்களடங்கிய குழுவை அமைத்துக் கணக்கிட்டிருக்க வேண்டும்.

4. சொந்தமாக விளைநிலமில்லாமல் ஊரில் வீடுகட்டிக் குடியிருந்து காடுகரைகளில் கூலிவேலை செய்தவர்களுக்கும் பனையேறியவர்களுக்கும் அன்றைய நிலையில் நடுவணரசின் கடைநிலை ஊழியர்களுக்குள்ள ஐந்தாண்டுச் சம்பளத்தை இழப்பீடாக வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக நடந்தவையும் உண்மையில் நடந்திருக்க வேண்டியவையும் பின்வருமாறு:

1. பயிரிடுவதற்கு மாற்றுநிலங் கொடுக்கவில்லை. வீடுகட்டிக்கொடுக்கவில்லை. வாழ்க்கைச் செலவுக்குப் பணமுங் கொடுக்கவில்லை.

2. குடியேற நிலம் ஒதுக்கிய அரசு அதை இன்னின்னாருக்கு இன்னின்னதென்று பகிர்ந்துகூடக் கொடுக்கவில்லை. இன்றுள்ள வீடுகள் அவரவர் உழைத்துக் கட்டியனவாகும். வீடுகளைக் கட்ட எவ்வளவு பணம் செலவாகுமோ அத்தொகையைக் கொடுக்கவில்லை. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பல்வேறு துறைகளும் தானாகச் செய்துமுடிக்க இருபத்தைந்தாண்டுகள் ஆகியுள்ளன. ஒருசோற்றுப் பதமாக 1983ஆம் ஆண்டு குடியேறிய மக்களுக்கு 2010ஆம் ஆண்டுதான் வீட்டுமனை உரிமைப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளின் மதிப்பை அரசின் வருவாய்த்துறை அலுவலர்கள் தீர்மானித்தனர். வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு அக்காலத்தில் திருநெல்வேலியில் வாடகைக்குக் குடியேறக் கொடுக்கும் முன்பணத்துக்குக்கூடக் காணாது. மதிப்பைத் தீர்மானித்தவர்களின் வீடுகளுக்கு இப்படி இழப்பீடு கொடுத்துத் தெருவில் விட்டிருந்தால் அவர்களுக்கு இந்தக் கணக்கு ஓராண்டுக் காலத்துக்குள்ளே புரிந்திருக்கும். அறியா ஏழைமக்களுக்கு இருபத்தெட்டாண்டுகளுக்குப் பின் புரிகிறது. இப்போது வாய்பாறுகிறார்கள்.

3. நிலத்தின் அருமை, உழைப்பின் வலிமை, மண்ணின் பெருமை தெரியாதவர்கள் நிலமதிப்பைக் கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் கணக்கிட்ட மதிப்புக் குறிப்பிட்ட அளவுள்ள அந்நிலத்தின் ஆண்டு வரும்படியில் பன்னிரண்டிலொரு பங்கே உள்ளது. இழப்பீடு வழங்கப்பட்டது என்று ஊருலகம் சொல்லும்படியாகச் செய்ய அவர்கள் கணக்கிட்ட மதிப்பைப் போன்று நூற்றிருபது மடங்கு இழப்பீடு கொடுத்திருக்க வேண்டும்.

4. வீடுகளின் மதிப்பைக் கணக்கிடும்போது அதன் பரப்பு, உயரம், சுவரின் தன்மை, கூரையின் தன்மை போன்றவற்றைக் கணக்கில்கொள்ள வேண்டியது கணக்கியல் முறையாகும். ‘மச்சுவீடானாலும் குச்சுவீடானாலும் நாற்சுவரே’, ‘ஆழாக்கு அரிசியானாலும் அண்டைக்கல் மூன்று’, ‘உண்பவை நாழி உடுப்பவை யிரண்டே’, ‘ஓலைவீடானாலும் உறையும் வீடு மாளிகைஎன்பன போன்ற சொலவடைகளைக் கணக்கிற்கொண்டு, காரை வீடுகளும் ஓட்டுக்கூரை வீடுகளும், ஓலைக்கூரை வீடுகளும் ஒன்றெனக் கொண்டு அன்றைய நிலவரப்படி நடுவணரசின் கடைநிலைப் பணியாளருக்கு வழங்கப்பட்ட மாத வீட்டு வாடகைப் படியைப் போன்று நூற்றிருபது மடங்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும்.

5. நிலமில்லாத ஆனால் வீடுகள் மட்டுமுள்ளவர்களுக்கு வீட்டுக்கான (ஓராண்டு வாடகை கொடுக்கக்கூடக் காணாத) இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டது. அவர்கள் அந்தச் சுற்றுப்புறத்திலுள்ள காடுகளில் ஆடுமாடு மேய்த்தும், விறகுவெட்டியும், பனையேறியும் வாழ்ந்துவந்த வாழ்நிலை தகர்ந்தது கணக்கில் கொள்ளப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் வங்கத்தின் சிங்கூரிலும் நந்தியூரிலும் எழுந்தது போன்ற புரட்சிகள் இவர்களிடையே எழாததற்குக் காரணங்களாக நாட்டுப்பற்று, சட்டத்தை மதிக்கும் போக்கு, விதியை நினைத்து நோதல், எல்லாருக்கும் வேலைகிடைக்கும் என்றுகூறிய நயவஞ்சகத்திற்கு இரையானது போன்றவற்றைக் கூறலாம்.

இழப்பீடாகக் கிடைக்கும் பெருந்தொகையை வைத்து நிலம் வாங்கிப் பயிரிட்டும், கால்நடைகள் வாங்கி வளர்த்தும் வாழலாமென்ற தன்னம்பிக்கையும், கடைகண்ணிகள் வைத்தும் வட்டிக்குக் கொடுத்தும் வாழலாம் என்ற தவறான கனவுகளும், அரசுக்கு முன் ஏதுஞ் செய்ய முடியாது என்ற அறியாமையுங்கூடக் கிளர்ந்தெழாததற்குக் காரணங்களாயிருந்தவை என்று மக்களின் பேச்சிலிருந்து தெரிகிறது. ஆனால் அரசோ நல்லார் பொல்லார் என எல்லோரின் வாழ்விலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டது. இப்போது நிகழ்பவற்றைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் ஓர்மையுள்ள சிலர் சிலிர்க்கின்றனர் நாமும் இப்படிப் போராடியிருக்கலாமேயென்று. ஆனால் அவர்கள் தங்களின் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டு மாற்றிடங்களில் குடியேறித் தங்கள் தனித்தன்மையை இழந்து விட்டதால் அவ்வெண்ணம் ஊமையின் கனவையும் குருடனின் ஞாயிறு வணக்கத்தையும் போலாகும் என்பதே நடப்பிலிருந்து நாமறிந்தது.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக