வியாழன், 6 அக்டோபர், 2022

பனைகளைக் காப்போம்! வளர்ப்போம்!!

தமிழக அரசின் நிலைத்திணையாக (தாவரமாக) விளங்குவது பனை. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பனைகளைக் கொண்டதும் தமிழகமே. ஆறு, கால்வாய், குளம் ஆகிய நீர்நிலைகளின் கரைகளிலும் நன்செய் நிலத்தின் வரப்புகளிலும் புன்செய் நிலத்திலும் ஏராளமான பனைகள் தானாகவே முளைத்து வளர்ந்து பயன்கொடுத்து வருகின்றன. கீழைக் கடற்கரையின்  பின்னால் உள்ள தேரிநிலங்களில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சங்க இலக்கியங்களில் பெருமைக்குச் சான்றாகக் கூறப்படுவது பனையே.

தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார் (குறள் 104)

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்

பனையிலுள்ள ஓலை, மட்டை, பற்றல், அகணிநார், கருக்கு நார், நுங்கு, பனம்பழம், கொட்டை, பனைவளை(கம்பு) ஆகிய அனைத்துமே இன்றளவும் மனிதனுக்குப் பயன்பட்டு வருகின்றன. ஓலைப்பெட்டி, சுளகு(முறம்), நார்க்கட்டில், கயிறு ஆகியவை பனம்பொருட்களால் செய்யப்பட்டவையாகும். பனங்கிழங்கு, தவண் ஆகியவை பனம்பொருட்களால் விளைந்தனவாகும்.

எதற்குமே ஆகாது என்று கழிக்கும் பொருட்களும் விறகாகப் பயன்படும். ஒருகாலத்தில் ஊரகத்தின் எரிபொருள் தேவையில் கிட்டத்தட்ட முழுவதையுமே காய்வோலை, மட்டை, காய்ந்த குலை, சில்லாடை போன்ற பனைப்பொருட்களே நிறைவேற்றி வந்தன. இப்போது மரம், மட்டை, செடி, செத்தைகள் நிறைந்துள்ள சிற்றூர்களிலும் எரிவளி பயன்படுத்துகின்றனர். அரசும் அதை ஊக்குவிக்கும்பொருட்டு இலவச எரிவளி அடுப்புகளையும் உருளைகளையும் ஊரகப் பகுதிகளிலும் வழங்கி வருகிறது. இது ஊரகப் பொருளியல் கட்டமைப்பைச் சிதைக்கும் திட்டமாகும். ஒருபுறம் காய்ந்த மரம் மட்டைகள் வீணாகும். இன்னொருபுறம் எரிவளி இறக்குமதிக்கு அயல்நாட்டுச் செலாவணி வீணாகும். வேறொருபுறம் ஊரக மக்களின் பணம் எரிவளி உருளைக்கு விலையாகப் பெறப்படும்.

பனைகள் நிறைந்திருந்த ஒருகாலத்தில் பனங்கம்புகளைச் சட்டமாகவும் உத்திரமாகவும் தூணாகவும் வரிச்சாகவும் பயன்படுத்தினர். பயனாகாத சோற்றுப் பனங்கம்புகளைச் செங்கல் சூளைகளுக்கு விறகாகப் பயன்படுத்தினர். மலிவாகவும் பேரளவிலும் கிடைக்கும் எரிபொருள் இது என்பதால் இதுவொரு தொழிலாகவே  வளர்ந்தது. இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் பனைக்குடியில் செங்கல் சூளைகளில் இதைக் காணலாம். இதனால் பனைகள் நிறைந்திருந்ததால் பனைக்குடி என்று பெயர் பெற்றிருந்த இவ்வூர் இன்று பனையே இல்லாமல் இருக்கிறது.

இப்போது சீமைஉடையின் கம்புகளைச் செங்கல் சூளைகளுக்கு விறகாகப் பயன்படுத்துகின்றனர். இனிக்கும் கரும்பைவிட எரிக்கும் கம்புக்கு விலை அதிகம். உயிர் காக்கும் பாலைவிட உயிர் உருக்கும் குளிர்குடிப்புகள் மதுவகைகளின் விலை அதிகம் என்பதைப்போல இவையெல்லாம் புதிய பொருளியல் கட்டமைப்பின் விளைவுகள்.

இப்போது கட்டுமானப் பொருட்களுக்குப் பெரும்பாலும் பனைகள் வெட்டப்படுவதில்லை. பனைவளைகளுக்கு மாற்றாக இரும்புக்குழாய்களும் சட்டங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பின் எப்படிப் பனைகள் அழிகின்றன?

உழவர்கள் பயிரில் நிழல்படுகிறது என்றுசொல்லி வரப்பிலுள்ள பனைகளை வெட்டுகின்றனர். கரையை வலுப்படுத்துகிறோம் என்றுசொல்லி நீர்க்கரைகளிலுள்ள பனைகளை அரசின் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை வெட்டுகிறது. ஆற்றில் மணல் அள்ளுவதால் ஆற்றங்கரைகளிலுள்ள பனைகள் சாய்கின்றன.

உழவர்கள் விற்றுவிட்ட நன்செய், புன்செய்களில் உள்ள பனைகளை மனைவணிகர்கள் வெட்டுகின்றனர். இவையனைத்திற்கும் மேலாக, இனிப் பனையேறத்தான் ஆளில்லையே. பனையெதற்கு? என்றுசொல்லிப் பனையின் உடைமையாளர்களே அதை வெட்டுவதற்கு விற்றுவிடுகின்றனர்.

நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போதும், சாலைஓரங்களில் தொலைத்தொடர்பு வடங்கள், தண்ணீர்க்குழாய்கள் ஆகியவற்றைப் பதிக்கும்போதும் ஏராளமான பனைகளும் மரங்களும் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.

பனைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள்:

1. காற்றின் விசையைத் தடுக்கின்றன. இதனால் சூறாவளிக்காற்றால் ஏற்படும் புழுதிப்புயலும் மண்ணரிப்பும் தடுக்கப்படுகின்றன. கடலோரங்களில் உள்ள மணல் வண்டல் சமவெளிகளுக்கு அடித்துச் செல்லப்படுவதும் தடுக்கப்படுகிறது.

2. பனையின் வேர் மண்ணைச் சிக்கென்று பிடித்துள்ளதால் நீரால் ஏற்படும் மண்ணரிப்புத் தடுக்கப்படுகின்றது. இதனால் நீர்க்கரைகள் அரிக்கப்படாமல் உள்ளன. ஆற்றுச்சமவெளிகளில் ஆறுகளால் படிய வைக்கப்பட்ட வண்டல் மழைநீர் அரிப்பால் மீண்டும் ஆற்றைநோக்கிச் செல்லாமல் ஆற்றங்கரையில் உள்ள பனைகள் தடுக்கின்றன.

3. பனைகள் எப்போதும் புவியீர்ப்பு ஆற்றலுக்கு நேரெதிராக மேல்நோக்கி வளர்வதால் பிற மரஞ்செடிகளுக்குப் பற்றுக்கம்பாக இருக்குமேயொழியத் தன்நிழலால் எப்போதும் பிறவற்றின் வளர்ச்சிக்கு இடைஞ்சலாயிராது; ஏனெனில் அதன் நிழல் ஒவ்வொரு நேரமும் ஒவ்வோரிடத்தில் விழும்.

4. பனையோலைகள் கரும்பச்சை நிறத்துடன் எக்காலத்திலும் குளிர்ச்சியாக இருப்பதால் முகிலை ஈர்த்து மழைபொழிய வைக்குந் திறன் மற்ற மரங்களைவிடப் பனைக்கு அதிகமுண்டு.

5. மிக உயரமாகப் பறக்கும் அரிய பறவையினங்களான பருந்து, கழுகு, அன்றில், வல்லூறு போன்றவற்றின் வாழிடமாகப் பனை உள்ளது. மயில் இரவில் பனையிலேயே உறங்கும். இப்பறவையினங்கள் சுற்றுச்சூழல் சமன்பாட்டிற்கு அளப்பரிய பங்காற்றுகின்றன.

6. தூக்கணங்குருவி கூடுகட்டுவது பனை, தென்னை, ஈந்து போன்றவற்றில்தான். அதுவோர் அரிய பறவையினமாகும். அதைக்காப்பதும் பனைதான்.

7. பனை நிலத்தடிநீரை உறிந்து பதநீர், நுங்கு போன்றவைகளாகத் தருகிறதேயொழியப் பிற மரங்களைப்போல் நீராவியாகப் போக்குவதில்லை.

சுற்றுச்சூழலைக் காக்க மேற்கண்ட நன்மைகளைப் பனைகள் செய்கின்றன.

ஆனால் அப்பனைகளின் அழிவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தும். செழிப்பான நிலங்கள் மணற்பாலைகளாகும். கடற்கரையிலுள்ள தேரிகள் காற்றால் அரிக்கப்பட்டுக் கடல்நீர் நிலத்தினுட்புகும். புயலால் ஏற்படும் அழிவுகள் அதிகமாகும். கோடைக்காற்றின் வெப்பம் அதிகமாகும்.

இந்த அழிவை ஏற்படுத்தும் விளைவுகளைத் தடுக்க வேண்டுமென்றால் அரசும் தொண்டு நிறுவனங்களும் உழவர்களும் கல்வி நிறுவனங்களும் பனைகளைக் காக்க வேண்டும். பனைகளை மக்கள் தன்னார்வத்துடன் காக்க வேண்டுமென்றால் பனைத்தொழிலை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

பனை வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டியவை:

1. பனைகள் வெட்டியழிக்கப்பட்ட இடங்களிலும், புதிதாக வெட்டப்பட்டுள்ள குளம், குட்டை, கால்வாய் ஆகியவற்றின் கரைகளிலும் பனங்கொட்டைகளை ஊன்றவேண்டும்.

2. நிலங்களின் எல்லைகளிலும், சாலையின் இருமருங்கிலும் இருப்புப்பாதையின் இருகரைகளிலும் பனங்கொட்டைகளை ஊன்றவேண்டும்.

3. கல்வி நிலையங்கள், விளையாட்டுத் திடல்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் பனங்கொட்டைகளைப் பத்தடிக்கு ஒன்று என்ற இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

4. பனைப்பொருட்களான நுங்கு, பதநீர், கிழங்கு ஆகியவற்றிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைச் செய்வது குறித்து அரசு ஆராய வேண்டும்.

5. சுற்றுச்சூழலுக்கு உகந்த ஓலைப்பெட்டிகள், நார்ப்பெட்டிகள், நார்க்கயிறு போன்றவற்றைப் பயன்படுத்துமாறு மக்களிடம் சொல்லும்போது அது உயர்ந்த நாகரிகத்தின் கூறு என்று வெளிப்படுத்த வேண்டும்.

6. கரும்புச்சீனி போன்று அதிகம் பேர்பெறாத கருப்பட்டியை அதிக அளவு காய்த்தெடுப்பதற்கு அரசு அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். இவ்வளவு ஆக்கப் பணிகளையும் செய்தால் அரசுமரமான பனை எங்கும் வளர்ந்து செழிப்பது உறுதி.

பனைகளை அழிவிலிருந்து காக்க அரசும் மக்களும் செய்ய வேண்டுவன:

* ஆறுகளில் மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும்.

* குளத்தங்கரைகளிலும் புறம்போக்கு நிலங்களிலும் நிற்கும் பனைகளின் எண்ணிக்கையை ஊர்நிருவாக அலுவலர் ஒவ்வோராண்டும் சரிபார்த்து அவற்றைக் காக்கவேண்டும்.

* தனியார் இடத்தில் வளர்ந்தபோதும் அதை அவர் விருப்பப்படி வெட்ட விடக் கூடாது. அப்படியே வெட்ட வேண்டுமாயின் எழுபதடி, எண்பதடி உயரத்திற்கு வளர்ந்த பனையைத்தான் வெட்டவேண்டும் என்று வரையறுக்கலாம். இதனால் ஒரு பனையின் பயன் குறைந்த அளவு அந்தக்காலம் வரையாவது கிடைக்கும்.

* மனைவணிகம் என்றபெயரில் காட்டிலுள்ள பனைகளை வெட்டியழிப்பதைத் தடுக்க வேண்டும்.

* தன்னையே உலகுக்குத் தந்துதவும் பனையின் பயன்களை மக்கள் முழுவதும் அறிந்துகொள்ள வேண்டும்.

* பதநீர் இறக்கும் தொழில்நுட்பத்தை இளந்தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் அது பெரியவர்களின் காலத்தோடு அழிந்துவிடும்.

* கருப்பட்டியின் பயன்களை அறிந்து அதைக் காய்த்தெடுக்க முயலவேண்டும்.

* நுங்கு, பனம்பழம், கிழங்கு, தவண் போன்ற பனம்பொருட்களை வணிகம் செய்து வருவாய் ஈட்ட வேண்டும். வருவாய்தரும் பனைகளை வெட்டியழிக்க எண்ணமாட்டார்கள் மக்கள்.

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. பனைகளின் வளர்ச்சிக்காகவும் அழிவைத் தடுப்பதற்காகவும் அரசு தினையளவு செய்தால்கூட மக்கள் பனையளவு செய்வார்கள்.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக