புவியின் மேற்பரப்பில் நூற்றுக்கு 71 விழுக்காடு நீர்ப்பரப்பும் 29 விழுக்காடு நிலப்பரப்பும் உள்ளன. மொத்த நீர்ப்பரப்பிலும் 97 விழுக்காடு உவர்நீரும் 3 விழுக்காடு நன்னீரும் உள்ளன. இந்த நீர்ப்பரப்பு புவியின் பகல்நேர வெப்பநிலையைத் தணிக்கவும் இரவுநேர வெப்பநிலையைக் கூட்டவும் நீராவியாகி மழை பொழியவும் பல்லுயிர் பெருகவும் உதவுகிறது. இதனால்தான்,
“நீரின் றமையாது
உலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையாது
ஒழுக்கு” (திருக்குறள் 20) எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
உவர்நீர், நன்னீர்
இரண்டிலும் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. இவற்றில் பல மனிதர்களுக்கு உணவாகின்றன. மனிதனும்
விலங்குகளும் பறவைகளும் உயிர்வாழ்தற்கு இன்றியமையாதது நீர். இயற்கையிலேயே மழைப்பொழிவால்
கிடைக்கும் நீர் மிகவும் தூய்மையானது. அதன்பிறகு அருவிநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் என
மனிதருக்கும் விலங்குகளுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் பயன்படுகிறது. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்கிறது
புறநானூற்றுப் பாடல். நிலைத்திணை(தாவரங்)கள் செழித்து வளர்ந்து விளைவதற்கு இயற்கை அளித்த
கொடைதான் மழைப்பொழிவு. மண்ணிலும் மலையிலும் பெய்யும் மழைநீர் ஓடை, ஆறு, சுனை, அருவி, தடாகம் ஆகியவற்றில் செல்வதால் அவற்றின் கரைகளில் உள்ள மரம் செடி கொடிகள் செழித்து
வளர்கின்றன. செடிகொடிகளைத் தின்னப் பல விலங்குகளும், அந்த விலங்குகளின் ஊனை உண்ணச்
சில விலங்குகளும் வருகின்றன. எல்லா விலங்குகளும் தங்கள் நீர்வேட்கையைத் தணிக்க இயற்கை
நீர்நிலைகளையே சார்ந்துள்ளன. வறண்ட காலத்திலும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படாமல் தடுக்கவும்
பயிரிடும் பரப்பைப் பெருக்கவும் அணை, கால்வாய், குளம், குட்டை, ஏரி ஆகியவற்றைக் கட்டியதும்
வெட்டியதும் மனிதகுல வரலாற்றில் அருஞ்செயல்களாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்த ஏதுவாகச்
சாலையோரங்களில் கிணறு வெட்டி நீரை எளிதாக வெளியே கொண்டுவரத் துலாக்கல்லை நட்டதும்,
கமலை, ஏற்றம் ஆகிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்ததும் தமிழரின் அறிவியல் மேன்மைக்குச்
சான்று. மின்சார மோட்டார் பயன்பாட்டுக்குப் பின் துலாக்கல், கமலைக்கல் ஆகியவற்றின்
பயன்பாடு அருகியும் வழக்கொழிந்தும் போய்விட்டது.
நாழி(ஆழ்துளை)க்
கிணற்றுத் தொழில்நுட்பம் வந்தபின் புதிதாகக் கிணறுகள் வெட்டுவதும் குறைந்துவிட்டது.
ஏற்கெனவே இருந்த பாசனக் கிணறுகளையும் பேணிக் காக்காமல் பாழ்ங்கிணறுகள் ஆக்கிவிட்டனர்.
தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் குடிநீர் எடுக்க ஊர்க்கிணறுகள் என்கிற பொதுக்கிணறுகள்
இருந்தன. மக்கள் இவற்றை மிகத் தூய்மையாகப் பேணியதுடன் புனிதமாகக் கருதினர். அரசின்
முயற்சியால் அடிகுழாய்கள், தண்ணீர்த் தாங்கிகள் வந்தபின் ஊர்க்கிணறுகளின் பயன்பாடு
குறைந்து அவை காட்சிப் பொருளாகவும், கழிவுகளைப் போடும் குப்பைத் தொட்டிகளாகவும் ஆயின. ஓடை, ஆறு ஆகியவற்றில் மேற்பரப்பில் நீரில்லாமல் போன
காலத்தில் மணலைத் தோண்டி ஊற்றுநீர் எடுத்துப் பயன்படுத்தும் வழக்கம் 21ஆம் நூற்றாண்டின்
தொடக்கம் வரை இருந்தது. இருபெரும் திராவிடக் கட்சி அரசுகளும் கட்சிக்காரர்களும் ஆற்றுமணலை
அள்ளிவிற்ற பின் ஊற்று என்றால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடையில்
தென்மேற்கில் இருந்து வீசும் காற்றாலும், கார்காலத்தில் வடகிழக்கில் இருந்து வீசும்
காற்றாலும் மழை பெய்வது வழக்கம். அணைகள் இல்லாக் காலத்தில் ஆடிமாதத்தில் ஆறுகளில் வெள்ளம்
பொங்கிப் பாய்ந்ததைக் காட்டும் வரலாற்றுச் சான்றாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. மழைக்காலத்தில்
வைகை ஆற்றின் கரை உடைந்து மதுரைக்குள் வெள்ளம் புகுந்ததையும், உடைந்த கரையை அடைக்க
வீட்டுக்கொரு ஆள் சென்றதையும் திருவிளையாடற் புராணம் காட்டுகிறது.
வேளாண்மை செழித்திருந்த
தமிழகத்தில் நீர்விளையாட்டுக்கள் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. வேளாண்குடிகளிலும் மற்ற குடிகளிலும் இருந்த மக்களில் பெரும்பாலோர் நீர்நிலைகளில்
நீந்திக் குளித்தனர். அவர்கள் வளர்த்த கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்கிக் குளிப்பாட்டினர்.
இதனால் எத்தகைய வெள்ளச் சூழலையும் எதிர்கொண்டு கரையேறும் உடல் வலிமையும் மனத் திண்மையும்
பெற்றிருந்தனர். வேளாண்குடிகளைச் சேர்ந்த பெரியோர் தங்கள் பிள்ளைகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுத்தனர்.
பிள்ளைகளும் நீச்சல் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். உயரத்தில் இருந்து நீரில் துள்ளுதல்,
முன்கறணம் பின்கறணம் அடித்தல், தொட்டுப் பிடித்தல், நீச்சல், மூழ்கிச் செல்லுதல் எனப்
பல்வகையான விளையாட்டுக்களை விளையாடினர். நெய்தல்நில மாந்தர்பற்றிச் சொல்லவே வேண்டாம்.
கொந்தளிக்கும் கடலிலும் நீந்திக் கரையேறும், துடுப்பசைத்துப் படகுகளைக் கரையேற்றும்
வலிமையுடன் அவர்கள் விளங்கினர்.
இத்தகைய தமிழ்நிலத்தில்
அண்மைக்காலமாகப் பலர் ஆறு, கடல் ஆகியவற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாகச்
செய்தி வருவது வருத்தமளிக்கிறது. 1000 கிலோமீட்டர் நீளக் கடற்கரையையும், பாலாறு தென்பெண்ணை,
காவிரி, வைகை, பொருநை, பழையாறு எனப் பெருவெள்ளம் பாயும் ஆறுகளையும் கொண்டுள்ள தமிழகத்தில்
நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி மக்கள் உயிரிழப்பது வருத்தமும் வெட்கமும் அளிக்கும்
செய்தி. 2011 டிசம்பரில் கிறித்துமசு நாளையொட்டிச் சென்னைக்கருகே பழவேற்காட்டுக் காயலில் படகில்
சுற்றுலா சென்றோரில் 22 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தது. 2017 பிப்ரவரியில் தூத்துக்குடி
மாவட்டம் மணற்பாட்டில் படகில் சுற்றுலா சென்றோரில் 10 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தது. 2022 அக்டோபரில் தஞ்சாவூர்
மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்துக்கு வந்தோர் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி
6 பேர் உயிரிழந்தது என வருத்தமளிக்கும் செய்திகள். இந்த மூன்று நேர்வுகளிலுமே தூத்துக்குடி
மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். மூச்சடக்கிக் கடலடியில் சிப்பிகளை அள்ளி
முத்தெடுத்தலுக்குப் பெயர் பெற்றது தூத்துக்குடி கொற்கை. தமிழகத்தில் நீண்ட நெடிய கடற்கரையைக்
கொண்டதும், தமிழகத்தில் வற்றாத ஒரே ஆறான பொருநை பாயும் பெருமை கொண்டதுமான தூத்துக்குடி
மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே நீச்சல் தெரியாமல் இந்த மூன்று நேர்வுகளிலும் சிக்கினர்.
பால்குடி மறக்குமுன்
அதிகப் பணம் கட்டிப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துவிடும் பெற்றோர் அவர்களுக்கு நீந்தக்
கற்றுக் கொடுப்பதில்லை. ஏனெனில் இக்காலத்தில் பெற்றோரில் பலருக்கே நீந்தத் தெரிவதில்லை.
64 கலைகளுள் தன்னுயிரையும் தண்ணீரில் தத்தளிக்கும் பிற உயிர்களையும் காக்கும் கலை நீச்சல்.
ஐந்தாம் வகுப்புப் படித்து முடிக்குமுன் அனைவரும் நீச்சல் படித்து முடிப்பதை அரசு கட்டாயம்
ஆக்க வேண்டும்.
விலை உயர்ந்த செல்பேசிகளைக்
கையாளப் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரும் பலர் உயிர்காக்கும் நீச்சலைக் கற்றுத் தருவதில்லை
என்பது வெட்கமானது. செல்பேசி கணினி கையாள்வது, மிதிவண்டி ஓட்டுவது இவைபோன்றே
நீந்தக் கற்றுக் கொள்வதற்கும் பிள்ளைகள் ஆர்வங் காட்ட வேண்டும். நீச்சல் கற்றுக்கொடுப்பது
பிள்ளைகளின் வாழ்நாளுக்கு மட்டுமல்ல பல தலைமுறைகளுக்கும் உயிர்காக்க உதவும் என்பதைக்
கருத்திற்கொண்டு பெற்றோர் அதை வரலாற்றுக் கடமையாகக் கருத வேண்டும்.
இப்போது அதிகப்
பணம்கொடுத்துப் படிக்கும் பல பள்ளிகளில் நீந்தக் கற்றுத் தருகிறார்கள். தனியார் நீச்சல்
குளங்களிலும் கட்டணம் பெற்றுக்கொண்டு நீந்தக் கற்றுத் தருகிறார்கள். ஒரு பிள்ளையின்
உயிர்மீது உலகில் உள்ள எவரையும் விடப் பெற்றோருக்கே அதிக அக்கறை இருக்கும். உலகில்
வேறெவரையும் விடப் பெற்றோர் மீதே பிள்ளைகளுக்கு அதிக நம்பிக்கை இருக்கும். அதனால் பிள்ளைகளுக்குப்
பெற்றோரே நீச்சல் கற்றுத் தருவது சிறந்ததாக இருக்கும். தொடக்கப் பள்ளியில் இருந்து
நடுநிலைப் பள்ளிக்குப் பிள்ளைகள் செல்வதற்கு நீச்சல் கற்றிருப்பதைக் கட்டாயமாக்கலாம்.
இது அனைவரும் தன்னுயிரையும் பிற உயிர்களையும் காக்கும் திறன்பெற உதவும்.
நீயாத மாட்டை வெள்ளம்
கொண்டுபோம், மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா? நீந்தத் தெரிந்தவனுக்குக் ஆழ்கடலும் முழங்காலளவு என்றெல்லாம் நீச்சல் பற்றித்
தமிழில் உள்ள பழமொழிகள் நீச்சல் கலையின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றன.
சில சமயங்களில்
நீந்தத் தெரிந்தவர்கள் கூடச் நீர்ச்சுழல்களிலும் ஆற்றில் மண்டியுள்ள புதர்களிலும் சிக்கியும், பாறைகளில் அடிபட்டும்
மூச்சுமுட்டி உயிரிழக்கும் நேர்வுகளும் உள்ளன. இத்தகைய நேர்வுகள் அரிதானவை. ஆற்றின்
ஆழமான பகுதிகளில் குளிப்பவர்கள் மூழ்கி உயிரிழப்பது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட உயிரிழப்பாகவே
கருதலாம். ஆற்றில் இயற்கையாய் படிந்த மணலை வரம்புக்கு மீறி அள்ளியதால் இயல்பான பரப்பைவிட
அதிக ஆழங்கொண்ட குழிகள் ஆற்றில் ஆங்காங்கே உள்ளன. ஆற்றில் வெள்ளம்பாயும்போது அனைத்துப்
பரப்பும் ஒரே ஆழத்தில் இருப்பதாகக் கருதி அதிக ஆழமுள்ள பகுதியில் சிக்குபவர்கள் மூழ்கி
உயிரிழக்கின்றனர். வெள்ளக் காலத்தில் அரித்துவரப்படும் மணல் ஆழமான பள்ளத்தில் படிந்தாலும்
இவை உறுதியான தரைபோன்று இல்லாமல் புதைமணல் போன்றே இருக்கின்றன. அதனால் அதில் காலூன்ற
முடியாமல் மண்ணில் கால்புதையும் நிலை ஏற்படுகிறது. ஏற்கெனவே நீச்சல் தெரியாமல் தத்தளிப்போருக்குத்
தரையில் காலூன்ற முடியாத நிலையில் உயிரச்சம் அதிகமாகிறது. அந்தப் பதற்றத்தில் வாயிலும்
மூக்கிலும் தண்ணீர் சென்று மூச்சு முட்டி உயிரிழக்கின்றனர்.
பொதுவாகவே நீரைவிட
நமது உடலின் அடர்த்தி குறைவு. அதுமட்டுமல்லாமல் நமது வயிறு குடல் எனப் பல இடங்களில்
வெற்றிடம் அல்லது காற்று உள்ளது. இவற்றின் காரணமாகத் தண்ணீரில் மிதக்கும்
தன்மை நம் உடலுக்கு உள்ளது. பதற்றமில்லாமல் பல நிமிடங்கள் தண்ணீரில் மிதக்கலாம். அச்சம்
பதற்றம் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழப்புகள் நேர்கின்றன. நன்னீரைவிடக் கடல்நீரின்
அடர்த்தி மேலும் அதிகம். அதில் மனிதனின் மிதக்கும் தன்மை அதிகம் என்றாலும் கடலின் வாரிச்
சுருட்டும் திறனால் அதில் மனிதர்கள் உயிரிழப்பது அதிகம்.
தேங்கியுள்ள நீரில்
தவறி விழுந்தால் கைகால்களை விரைந்து அசைப்பது, கரையை நோக்கி முன்னேறுவது என்கிற செயல்களைப்
பின்பற்ற வேண்டும், அரிப்பான இழுப்பான வெள்ளத்தில் சிக்கினால் நீரின் போக்கிலேயே சென்று
கரையொதுங்க வேண்டும், ஆழங்குறைந்த குளங்களில் மாரளவு, இடுப்பளவு நீர்மட்டம் வரை சென்று நின்றுகொண்டு அங்கிருந்து கரையை நோக்கி நீந்த வேண்டும் என்கிற உத்திகளை எல்லாம் சிறார்க்குப் பாடமாக வைக்க வேண்டும்.
ஆழமான நீர்நிலைகளில் படகில் செல்வோர் உயிர்காக்கும் காற்றுப் பைகள் வைத்திருப்பதைக்
கட்டாயம் ஆக்க வேண்டும். எழுத்தறிவு இயக்கம் இருப்பதைப்போல் அனைவருக்கும் நீச்சல் கற்றுக்கொடுப்பதை
ஓர் இயக்கமாக்க வேண்டும்.
சே.பச்சைமால்கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக