திங்கள், 10 அக்டோபர், 2022

சாலையோரத்தைச் சோலையாக்குவோம்

சாலைகள் அமைத்தல், அதன் இருமருங்கிலும் நிழல்தரும் மரங்களையும் கனிதரும் மரங்களையும் நட்டு வளர்த்தல், கிணறுவெட்டுதல், அதில் நீரிறைக்க நாலுந்துலா அமைத்தல், குளம் வெட்டுதல், அணைகட்டி நீர் பாயச்செய்தல் இவைகளே முற்காலத்தில் ஒருநாட்டை ஆளும் நல்லரசின் பணிகளாகக் கருதப்பட்டன.

இப்போது கட்டி இயக்கிச் சுங்கம்பெற்று மாற்றிக்கொடுக்கும் முறையில் சாலைகள் அமைத்துச் சுங்கம்பெறும் பணி தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. கல்விநிறுவனங்களைத் தனியார் நடத்துகின்றனர். அதற்கு ஏற்பளிப்பை அரசு வழங்குகிறது. சாராயத்தைத் தனியார் ஆலைகள் வடிக்கின்றன. அரசு அதை விற்றுக்கொடுக்கிறது. மருத்துவத்தைத் தனியார் மருத்துவமனைகள் செய்கின்றன.

இன்று நூற்றுக்கணக்கான துறைகளையும் செயலாளர்களையும் பணியாளர்களையும் வைத்துக்கொண்டு ஒரு மக்களாட்சி செய்ய முடியாத பணிகளை அன்று மன்னராட்சி மக்களின் துணையுடன் செய்து முடித்தது. முற்காலத்துப் பணிவிரைவுக்கும் இக்காலத்துப் பணித்தாயமாட்டத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. அக்காலத்தில் வைகையாற்றங்கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வந்தபோது கரையையடைக்க வீட்டுக்கொருவர் வரவேண்டும் என்றுசொன்னதும் எல்லா மக்களும் வந்து கரையை யடைக்க மண்சுமந்தார்கள். சிவபெருமானும் மண்சுமந்ததாகவும், பாண்டிய மன்னனே வந்து கரையடைக்கும் வேலையை ஒழுங்குபடுத்தியதாகவும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

ஆனால் இக்காலத்தில் ஆள் நாயை ஏவினானாம், நாய் அதன் வாலை ஏவியதாம் என்ற கணக்கில் அரசுக்கும் பணிநடைபெறும் இடத்திற்கும் இடையில் நிறைய இடைஞ்சல்கள் உள்ளன. துறைத்தலைமையகம், கோட்டம், துணைக்கோட்டம், வட்டம், பிரிவு என்ற அளவில் அலுவலகங்கள் பல இருந்தாலும் பணிகள் ஒப்பந்த முறையில் விடப்படுகின்றன. இதனாலேயே இப்போது பணிகள் செய்துமுடிக்கத் தாயமாட்டம் ஏற்படுகிறது. சில சமயங்களில் பணிகள் முடிக்கப்படாமலேயே விட்டுவிடவும்படுகின்றன.

அக்காலத்தில் சாலை, குடிநீர், நீர்ப்பாசனம் முதலிய துறைகளால் செய்யப்பட்ட பணிகளிலேயே இப்போதைய சுற்றுச்சூழல், காடுகள், மாசுகட்டுப்பாடு, நலவாழ்வு, தொலைத்தொடர்பு போன்ற துறைகளின் பணிகளும் உள்ளடங்கியிருந்தன.

சாலையோரங்களில் அத்தி, அரசு, ஆல், மருது, புளி, உசிலை, மா, தேக்கு, இலுப்பை, நாவல் போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டன. ஏராளமான பனைகளும் வளர்க்கப்பட்டன. கால்வாய்களிலும் நீர்க்கரைகளிலும் மருது, தேக்கு, புன்கு, பின்னை, மா போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டன. சாலையோரங்களில் ஊரிருக்கும் இடங்களிலெல்லாம் கிணறுகள் தோண்டி அதில் நாலுந்துலாக்கள் அமைக்கப்பட்டுக் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. நெடுந்தொலைவுக்கு இடையே ஊரில்லாத இடங்களிலும் இதேபோன்று குடிநீர்வசதி செய்யப்பட்டிருந்தது.

மன்னராட்சிக் காலத்தில் வளர்க்கப்பட்ட மரங்களை நான்கூனேரி, களாக்காடு ஆகிய பகுதிகளில் இன்றும் காணலாம். திருச்செந்தூர் - ஆழ்வார்திருநகரி - பாளையங்கோட்டை - சேரமாதேவி - கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் - குற்றாலம் சாலையில் பெரியபெரிய மருதமரங்களைக் காணலாம். அதேபோன்று நாகர்கோவில் வடசேரியிலிருந்து பூதப்பாண்டிக்குச் செல்லும் சாலையிலும் பெரிய மரங்கள் உள்ளன. பாவநாசம், திருக்குறுங்குடி போன்ற இடங்களிலும் மருதமரங்கள் உள்ளன. நாகரிகம் வளர்ந்து சிறந்ததும் ஒரு நிலையான வாழ்விடம் அமைந்ததும் மருதநிலத்தில்தான் என்பது வரலாற்றாராய்ச்சியாளர்களின் கூற்று.

ஆங்கிலேயர் காலத்தில் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டபோது நிலையங்களில் வேம்பு, ஆல், அத்தி, அரசு போன்ற மரங்களை வளர்த்தனர். இன்று அவையெல்லாம் நாலாள் சேர்ந்து கட்டிப் பிடிக்க முடியாத அளவுக்குப் பருத்துவிட்டன. இருந்தாலும் நிலைய விரிவாக்கம், புதுப்பிப்பு, மின்மயமாக்கல், மீட்டர்பாதையை அகலமாக்கல், கூரைஅமைத்தல் போன்றவற்றைக் காரணங்காட்டி வெட்டியழிக்கப்படுகின்றன.

நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மன்னராட்சிக் காலத்திலும் வெள்ளையர் காலத்திலும் வளர்க்கப்பட்ட மரங்கள் இன்று சாலைவிரிவாக்கம் என்ற சாக்கில் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.  தண்ணீர்க்குழாய், தொலைத்தொடர்பு வடம் போன்றவற்றைத் தரையில் புதைப்பதற்காகப் பள்ளம் தோண்டும்போது பனைகள் இரக்கமில்லாமல் தோண்டிச் சாய்க்கப்படுகின்றன. இப்போது நால்வழிச்சாலை அமைத்து முடிக்கப்பட்ட இடங்களில் ஓரிடத்தில்கூட மரங்கள் இல்லை. சிலவிடங்களில் சாலையின் நடுவிலுள்ள வெற்றிடங்களிலும் ஓரத்திலும் எளிதில் முறியக் கூடிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை போக்குவரத்துக்கு மிக இடைஞ்சலாகவே இருக்கும். இவற்றைத் தவிர்த்துப் பெருமரங்களை வளர்க்கலாம்.

நால்வழிச் சாலையிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் வண்டியிரைச்சலையும் புகையையும் குறைக்கவோ ஈர்க்கவோ எண்ணி இதுவரை மரம் வளர்க்கப்படவில்லை. சாலைகளில் கடுமையான வெக்கை எழும்புகிறது. வெக்கையைத் தணிக்கும் வேட்கை நெடுஞ்சாலைத்துறைக்கோ உள்ளாட்சித் துறைக்கோ அரசுக்கோ இல்லை. முந்தியெல்லாம் நெடுஞ்சாலை வழியில் உள்ள ஊர்களில் மரங்கள் நிற்குமிடங்களில் பேருந்து நிற்கும். பேருந்து நிற்குமிடங்களில் மரங்களை வளர்த்ததாகவும் சொல்லலாம். அப்போது மரங்கள் மக்களுக்கு நிழல்தாங்கலாக விளங்கின. இப்போது ஊர்ப்புறங்களில் நிழற்குடை என்றபெயரில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் வெக்கைதான் கொதிக்கிறது. கொஞ்சநேரம் அதனுள் நிற்க முடியவில்லை. ஆனால் மழைக்காலங்களில் மழையிலிருந்து காக்கின்றன.

மாநகரங்களில் பேருந்து நிறுத்தங்களில் கட்டப்பட்டுள்ள நிழற்குடை விளம்பரக்குடை என்று அழைக்கத் தகுதியுள்ளது. அவற்றில் விளம்பரங்கள்தான் ஒளிர்கின்றன. மழைபெய்தால் ஒழுகுகிறது. பேருந்துக்குக் காத்திருக்கும் மக்கள் இருக்க இருக்கையில்லை. அங்கு மரம் வளர்க்கலாமென்று எண்ணினால் ஓரிடத்தில்கூட மண்ணே கிடையாது. எல்லாவிடங்களிலும் தாரோ வன்காறையோ(கான்கிரீட்) தரையை மூடியிருக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புக்கள் தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் வடிகால், வன்காறைச்சாலை போன்றவற்றில் காட்டும் ஈடுபாட்டை மரம் வளர்ப்பில் காட்டவில்லை. பேரூராட்சிகளிலும் நகராட்சிகளிலும் சில தொண்டுநிறுவனங்களுடன் இணைந்து மரம் வளர்க்கப்படுகிறது. ஆனால் அவை சரிவரப் பேணப்படுவதில்லை. கூண்டுகளில் தொண்டுநிறுவனத்தின் பெயர் பொறிக்கப்படுகிறது. சரியாகத் தண்ணீர் ஊற்றுவது கிடையாது. மழையால் அவை வளர்ந்தாலும் சாலையோரங்களில் வண்டிகள் நிறுத்தப்படும்போது நெருக்கி நைக்கப்படுகின்றன. நெகிழி, சாராயப்புட்டில் போன்ற கழிவுகள் இந்த மரக்காப்புக் கூண்டைக் கழிவுத்தொட்டியாகக் கருதிப் போடப்படுகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி அம்மரம் செழிப்பாக வளர்ந்தாலும் கூண்டின் அகலத்தைவிடப் பருக்கும்போதும் கூண்டு அகற்றப்படாமல் சிறைக்கம்பி ஆகிவிடுகிறது.

இன்னுஞ் சிலவிடங்களில் சாலையோரங்களில் மழையால் தானே வளர்ந்த மரங்களில் இலக்கமிடப் பட்டையை உரித்துவிடுகின்றனர். ஓராள் கட்டிப்பிடிக்கும் அளவு பருத்திருக்கும் மரத்தில் ஓரு சாணளவு பட்டையை உரித்தால் அது மரத்தின் வளர்ச்சியைத் தடுக்காது மொத்தம் இரண்டு சாண் பருத்திருக்கும் மரத்தில் ஒரு சாணளவு பட்டையை உரித்துவிட்டால் மரம் எப்படி வளரும்? மரம் வளர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கில் இலக்கம் குறிப்பதாக எண்ணவேண்டியுள்ளது.

மரங்கள் அகக்காழன. அதாவது உள்வயிரமுடையன. மூட்டுக்குக் கீழுள்ள வேர்களால் உறியப்படும் தண்ணீர் தண்டின் வெளியிலுள்ள பட்டைவழியேதான் கிளைகளுக்குச் செல்கிறது. அப்படியிருக்கையில் பட்டையை உரிப்பது மரம் வளர்வதைத் தடுப்பதுடன் மரம் பட்டுப்போவதற்கும் காரணமாகிவிடும். இனியாவது இலக்கமிடுவதற்காக மரத்தின் பட்டையை இரக்கமில்லாமல் உரிப்பதை நெடுஞ்சாலைத்துறை கைவிட வேண்டும்.

வளர்ந்துள்ள மரங்கள் பட்டுப்போவதற்கு ஏதுவான நிகழ்வுகள் என்று பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. மரங்களின் மூட்டைச்சுற்றியுள்ள தரையைத் தாராலோ வன்காறையாலோ மூடிவிடுவது. இதனால் வேர்களுக்குத் தண்ணீர் கிட்டாமல் போய்விடுகிறது. வன்காறைத்தரையிலுள்ள வெக்கை மரத்துக்குத் தாவுகிறது. இது மரத்தின் இலை உதிர்வதற்கும் பட்டுப்போவதற்கும் ஒருகாரணம்.

2. நெகிழிக் கழிவுகள், எரியெண்ணெய்க் கழிவுகள், செய்தித்தாள் போன்றவற்றை மரத்து மூட்டிலோ சற்றுத்தள்ளியோ வைத்து எரிப்பதால் மரம் பட்டுப்போகிறது. சற்றுத்தொலைவில் வைத்து எரித்தாலும் காற்றுவாக்கு மரத்துநேர் இருந்தால் வெக்கையில் மரம் பட்டுப்போகிறது.

3. விளம்பரத் தகடுகள், நெகிழ்பதாகைகள் போன்றவற்றை ஆணியால் மரத்தில் அறைந்துவிடுகின்றனர். ஆணியறைந்த இடத்தில் சூன்விழுந்து இற்றுப்போய்க் கிளைமுரிவதற்கும் பட்டுப்போவதற்கும் ஏதுவாகிறது. சூன்விழுந்த மரங்கள் இலேசான காற்றடித்தால்கூட முரிந்து விழுந்துவிடும். நகரங்களில் மக்கள்மீது மரங்கள் முரிந்துவிழக் காரணமே விளம்பரத்தகடு அறையப்படுவதுதான்.

வரவேற்பு வளைவுகள் அமைக்கவும், விளம்பரத் தட்டிகள் உயரமாகத் தெரியவும், மின்விளக்குக் கோபுரங்கள் அமைக்கவும் மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன. கம்பங்கள் நட்டு மின்பாதைகள் அமைக்கும்போது வணிக வளாகம், வீடுகள் போன்றவை இருந்தாலும் காலியிடம் இருந்தாலும் அதன்வழியே அமைப்பதில்லை. சாலையோரங்களில் அமைக்கிறார்கள். அதனால் ஏற்கெனவே பல்லாண்டுகளாக அங்கு நிற்கும் மரங்கள் அரக்கப்படுகின்றன. சமயங்களில் முழுவதுமாக வெட்டப்படுகின்றன. மின்பாதையின்கீழ் புதிதாக மரம்வளர்ந்தால் வெட்டலாம். ஆனால் ஏற்கெனவே மரம் வளர்ந்த இடத்தில் மின்பாதை அமைப்பதைத் தவிர்க்கலாம்.

மரம் வளர்ப்பில் அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் ஆர்வம் காட்டாதபோதும் தனியார் நிறுவனங்களும் பொதுமக்களும் தணியாத ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு மரக்கன்றுகள் குறைந்தவிலைக்குக் கிடைப்பதில்லை. மக்கள் தங்கள் வீடுகளில் வேம்பு வளர்ப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். தனியார் நடத்தும் பள்ளி கல்லூரி வளாகங்களில் நல்லமுறையில் மரம் வளர்க்கப்படுகின்றது. ஊர்மக்கள் ஒன்றாகக்கூடும் இடங்களான கோவில்களிலும் விளையாட்டுத்திடல்களிலும் குளத்தங்கரைகளிலும் ஒருவரோ பலரோ முயன்று மரங்கள் நட்டுக் காத்து வளர்த்து வருகின்றனர். மழையில்லாக் காலங்களில் தண்ணீரை இறைத்துக் குடங்களில் சுமந்துசென்று ஊற்றுகின்றனர். இப்படி நல்லார் சிலர் ஒவ்வொரு ஊரிலும் உள்ளதால்தான் எல்லார்க்கும் மழைபெய்கிறது போலும்.

ஊர்ப்புறத்தில் குடிநீர் நல்லிகளில் நிறையத் தண்ணீர் சிந்தி வீணாகிறது. நன்னீரும் மழைநீரும் கழிவுநீர் வடிகாலில் கலந்து வீணாகின்றன. நல்லிக்கருகில் ஊராட்சியிலிருந்து மரம் நட்டால் சிந்தும் தண்ணீரை மரம் உறிந்துகொள்ளும். ஊர் பைம்பொழிலாக மாறும்.

இக்காலத்தில் மரங்களின் இருப்புக்கு எதிராகச் செயல்படுபவை மனைவணிக நிறுவனங்கள். நெல்விளையும் இடங்களில் கல்நட்டுவிடுவதாக இவைகள்மீது ஏற்கெனவே கடுமையான குற்றச்சாற்று உள்ளது.

புன்செய்களிலும் மனைப்பிரிவுகளுக்காக நிலத்தை ஒப்புரவாக்கும்போது அங்கிருக்கும் மரங்களையும் பனைகளையும் பிடுங்கிப்போடுவதே அவர்களின் முதற்பணியாக உள்ளது. இன்று வீடுகட்டுகின்றனரோ இருபதாண்டு கழித்துக் கட்டுகின்றனரோ நூறாண்டாக நிற்கும் மரங்களை வெட்டி நிலத்தை வெட்டையாக்கி விடுகின்றனர். வீடுகட்டுவதற்கன்றி வேறெந்த வணிகநோக்கிலும் மரம் வெட்டுவதைத் தடுக்க வேண்டும். அப்படி வெட்டுவது சுற்றுச்சூழலுக்கெதிரான வன்முறையாகக் கருதப்பட வேண்டும்.

சாலையோரங்கள் சோலையானால் வண்டிகளின் இரைச்சல், புகை, வெப்பம் இவை ஈர்க்கப்படும். சாலையில் செல்வோர் நிழலில் தங்கி ஓய்வெடுக்கலாம். கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பதால் பயணம் இனிமையாகும். சாலையோரங்களில் மண் அரிப்புத் தடுக்கப்படும். சாலைகளில் புழுதிக்காற்றும் வெப்பக்காற்றும் வீசுவது குறையும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மண்வெட்டி அள்ளிப்போடும் வேலையை மட்டுமே செய்கின்றனர். அஃதும் வெட்டிப்போட்ட இடங்களிலேயே மீண்டும் மீண்டும் வெட்டுகின்றனர். நீர்நிலைகளின் கரை, நெடுஞ்சாலையோரங்கள், பொதுவிடங்கள் போன்றவற்றில் மரம் நட்டு வளர்க்கவும் அத்திட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊராட்சிகளில் இத்திட்டத்தில் மரம் நட்டு வளர்க்கப்படவில்லை என்பது வருந்தத் தக்கது. இனியாவது இத்திட்டத்தில் மரம் நட்டு வளர்த்தால் சாலையோரம் சோலையாகும்.

சே.பச்சைமால் கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக