ஞாயிறு, 9 அக்டோபர், 2022

வாழ்முள் வேலியும் சுற்றுச்சூழலும்

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் 

நீரினும் நன்றதன் காப்பு (குறள் 1038)

உழுவதைவிட உரமிடுதல் நல்லதாம், பயிருக்குக் களையெடுத்த பின் நீர் பாய்ப்பதைவிட அதைக் காப்பது நல்லதாம் என்று பொருள்படும் மேற்கண்ட குறள் பயிர்க்காப்பின் தேவையை வலியுறுத்துகின்றது.

தொடக்கத்தில் ஆட்களே விளைநிலங்களில் நின்று பயிரைக் காத்துள்ளனர். அப்படிக் காத்ததன் எச்சந்தான் இன்றும் பயிரிட்டுள்ள நிலங்களில் ஆளுருவம் (கோமாளி) செய்து நிறுத்திவைக்கும் செயலாகும். சோளம், கம்பு, குதிரைவாலி போன்ற புன்செய்ப் பயிர்களைக் காக்கை கிளி ஆகிய பறவைகளிடமிருந்து காக்கப் பரணமைத்துத் தகரப்பெட்டிகளைத் தட்டி ஒலியெழுப்பும் ஆட்களை இன்றுங் காணலாம்.

விளைந்த பயிர்களை அழிக்கும் காட்டு விலங்குகளை அம்பெய்தும் கல்லெறிந்தும் கம்பால் அடித்தும் வேட்டையாடியுள்ளனர் நம் முன்னோர். அதன் தொடர்ச்சியே இன்றும் பொங்கல் திருநாளையடுத்த நாட்களில் உழவர்கள் வேட்டைக்குச் செல்லும் நிகழ்வாகும்.

காலத்தின் அருமை கருதியும் இரவில் பயிரைமேயும் விலங்குகளைத் தடுக்க வேண்டியும் விலங்குகள் உட்புகாவண்ணம் வேலியமைத்துப் பயிரைக் காத்துள்ளனர். திருநெல்வேலி, நெய்வேலி ஆகிய ஊர்ப்பெயர்கள் இதற்குச் சான்றுகளாக உள்ளன.

கடவுளுக்குச் சோறு சமைப்பதற்காகக் காயப்போட்ட நெல்லை மழைநீர் நனைப்பதனின்று காக்க இறைவன் நெல்லைச் சுற்றி வேலியமைத்தார் என்பது கட்டுக்கதையே ஆகும். ஏனெனில் நெல்லைச்சுற்றி வேலியமைத்தால் நனையாமற் காக்க முடியாது. அப்படிக் காக்க நினைத்தால் நெல்லுக்கு நேர் மேலே பந்தலோ கூரையோ வேய்ந்திருக்க வேண்டும். ஆகையால் நெல்வயல்களுக்கு வேலி அமையப்பெற்ற ஊர் என்பதாலோ, ஊரைச்சுற்றி வேலிபோன்று நெல்வயல்கள் இருப்பதாலோதான் திருநெல்வேலி என்று பெயர்பெற்றிருக்க முடியும்.

வேலியே பயிரை மேய்ந்தாற்போல என்னும் உவமைத் தொடரும், ஓந்தான் எதுவரை ஓடும்? வேலிவரை ஓடும் என்னும் பழமொழியும் முறையே காப்பாரே களவாடுவதையும ஊர்வனவற்றின் இருப்பிடமாக வேலி இருப்பதையும் குறிப்பனவாகும்.

வேலியிற் படர்ந்து வாழ்வது வேலிப்பருத்திக் கொடி. வேலிக்காக வளர்க்கப்படுவது வேலிக் கற்றாழை.

வேலிவகை

இடுமுள்வேலி இடப்பட்ட காய்ந்த முள்வேலி; வாழ்முள்வேலி வளரும் முட்செடியும் முள்மரமும் உள்ள வேலி என்று வேலியின் வகைகளை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் முன்னதில் எல்லா முட்செடிகளையும் வெட்டி விளைநிலங்களின் விளிம்பில் அகலமாகவும் உயரமாகவும் போடுவதால் முதலில் அது வலுவாக இருக்கும். நாளடைவில் வெயிலிலும் மழையிலும் காய்ந்தும் நனைந்தும் போவதால் இற்றுப்போய்விடும். இம்முட்களைக் கறையான் அரித்துத் தின்று வலுக்குன்றச் செய்துவிடும்.

வாழ்முள்வேலி என்பது முட்செடிகளையும் முள்மரங்களையும் பயிர்செய்யும் நிலங்களின் பொழிகளில் வளர்ப்பதாகும். காரை, சூரை ஆகிய கூட்டு முட்புதர்களும், மட்டைக்கள்ளி சதுரக்கள்ளி சப்பாத்துக் கள்ளி கொடிக்கள்ளி ஆகிய கள்ளிவகைகளும், வேலிக்கற்றாழை சடம்புக்கற்றாழை சோற்றுக்கற்றாழை ஆகிய தாழை வகைகளும், பனை, ஈந்து, மருதோன்றி முதலியனவும் இவ்வாறு வேலிகளில் வளர்க்கப்படுவனவாகும். இவ்வேலி முதலில் கல(நெருக்கம் குறை)ந்திருந்தாலும் வளர்ந்தபின் ஆடுமாடுகளும் ஆட்களும் உள்நுழைய முடியாவண்ணம் அடர்ந்துவிடும்.

வாழ்முள்வேலியும் பயிர்தானே, அதை விளைநிலங்களின் ஓரத்தில் வளர்த்தால் பயிருக்கிடும் உரத்தையெல்லாம் எடுத்துக்கொள்ளுமே என்று அஞ்சவேண்டாம். மாறாக இவ்வேலியால் தழையுரமும் எருவும் பயிருக்குக் கிடைக்கும். ஆதலால் பயிர்கள் செழித்து வளரும்.

இந்த வாழ்முள்வேலி பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாக உள்ளது. நச்செலி, பாம்பு, அரணை, நத்தை, உடும்பு, கீரி, முள்ளெலி, ஓந்தான் ஆகிய ஊர்வனவும், குளவி, வண்டு, தேனீ, வண்ணத்துப்பூச்சி ஆகிய பூச்சியினங்களும், கதுவாலி, மைனா, புறா, தேன்சிட்டு ஆகிய பறவையினங்களும் வாழ்முள்வேலியைத் தங்கள் வாழிடங்களாகக் கொண்டுள்ளன. இதனால் பயிர்களுக்கு இவற்றின் கழிவுகளிலிருந்து உயிர்உரம் கிடைப்பதுடன் அயல்மகரந்தச் சேர்க்கையும் நடக்கிறது. இதனால் விளைச்சல் பெருகும்.

இவைதவிரக் கருக்குமட்டை, மூங்கில், பிரம்பு ஆகியவற்றால் செய்த படல்களையும் வேலியாகப் பயன்படுத்துகின்றனர். முட்கம்பி வேலியும் அமைக்கின்றனர். இவையனைத்தும் இடுமுள் வேலி என்னும் வகையுள் அடங்கும். எனினும் முட்கம்பி வேலி சுற்றுச்சூழலுக்குப் பெருந்தீங்கு விளைவிக்கக் கூடியது. மின்வேலி என்று புதுவேலிமுறை ஒன்றும் வந்துள்ளது. வாழ்முள்வேலி மட்டுமே பயிருக்குக் குளிர்ச்சி தரும். காற்றால் பயிருக்கேற்படும் இழப்புகளையும் தடுக்கும்.

சில குறிப்பிட்ட வகைகள் வேலியாக அமைந்ததாலும் வளர்ந்ததாலும் அவை ஊர்ப்பெயர் தோன்றக் காரணமாகவும் அமைந்துள்ளன. சூரங்குடி, காரங்காடு, காரைக்குடி, களாக்காடு, கள்ளிக்குடி, பனங்குடி, உடங்குடி ஆகிய ஊர்ப்பெயர்களை நோக்கினால் இவ்வுண்மை புலப்படும்.

வாழ்முள் வேலியின் பயன்கள்

வாழ்முள்வேலி விளைநிலங்களின் ஓரங்களிலும் ஒருவருக்கு உரிமையுடைய நிலங்களைச் சுற்றியும் அமைக்கப்படுகின்றது. விளைநிலத்தைவிடவும் வாழ்முள்வேலி அமைக்கப்படும் இடம் சற்று உயரமாக இருக்குமாறு மண்பொழி அமைத்து உயர்த்தப்படுகிறது. இதனால் பெய்யும் மழைநீர் இந்தப் பொழிக்கு வெளியே செல்லாமல் நிலத்திலே இறங்குகிறது. பயிருக்குக் கேடுசெய்யும் என்று நினைத்தால் தேங்கும் நீர் வெளியேறத் தொண்டும் அமைத்துக்கொள்ளலாம்.

விளைநிலத்தைவிட வாழ்முள்வேலி அமைத்திருக்கும் பொழி உயரமாக உள்ளதால் எப்போதும் மண்ணரிப்பு ஏற்படாது. இதனால் பயிரிடும் விளைநிலத்தின் வளம் காக்கப்படுகின்றது.

இந்த வேலியில் கோவை, குன்றி, வேலிப்பருத்தி, காட்டுவெண்டை, நாயுருவி, செந்தட்டி, முசுமுசுக்கை, சீந்தில் போன்றவை படர்ந்து வளர்கின்றன. இவை கால்நடைகளுக்கு மிகச்சிறந்த தீவனங்களாகும். பயிருள்ள காலங்களில் வெளிப்புறத்திலிருந்து இவற்றை ஆடுமாடுகள் மேய்ந்துவிடும். பயிர்களை அறுத்தெடுத்த பின்னும் பயிர்செய்யாக் காலங்களிலும்கூட இந்தச் செடிகொடிகள் வேலிகளில் அடர்ந்து படர்ந்திருக்கும். ஆதலால் பஞ்சக் காலங்களில்கூட வேலிக் கரைகளை நம்பி ஆடுமாடுகளை வளர்க்கலாம். அதனால்தான் வெள்ளாடு நஞ்சிலும் நால்வாய் தின்னும் என்று பழமொழி உள்ளது. அது காய்ந்த கருவேல நெற்றுக்களைக்கூடத் தின்று கொழுத்து வளரும். அதுபோல் மட்டைக்கள்ளியை வெட்டி அதிலுள்ள முட்களைப் பனைமட்டையைக் கொண்டு அடித்து மழுக்கிவிட்டால் வெள்ளாட்டுக்கு அது உணவாகும்.

காட்டில்மேயும் கால்நடைகள் ஓய்ந்திருக்கவும் இளைப்பாறவும் வேலிகள் நிழல்தாங்கல்களாக உள்ளன.

கைம்மருந்தாகப் பயன்படும் செடிகொடிகள் பலவற்றின் இருப்பிடமாக வேலிகளே உள்ளன. எந்தவொரு மருந்தைத் தேடினாலும் அந்த வேலிக்கரையில் பார், அந்தக் கள்ளியடைப்பில் பார் என்றே பெரியவர்கள் சொல்லுவார்கள். அங்குச் சென்று பார்த்தால் அது அங்குக் கிடைக்கும். ஆதலால் வேலிகளை மருந்துச் செடிகளின் வாழ்விடம் என்றும் கூறலாம்.

பொருளியல் பயன்கள்

வேலிகளில் வேம்பு, புன்கு, புன்னை போன்ற மரங்களை வளர்க்கலாம். இவற்றின் தழைகள் கால்நடைகளுக்கு ஊட்டமிக்க இரையாகின்றன. இவற்றின் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். பிண்ணாக்கை உரமாகப் பயன்படுத்தலாம்.

வேலிகள் தேனடைகளின் இருப்பிடமாக உள்ளன. இவற்றிலிருந்து எடுக்கப்படும் தேன் தூயதாக உள்ளதுடன் ஏராளமான மருந்துகளைக் குழப்பிக் கொடுக்கத் துணைப் பொருளாக உதவுகிறது. தேனுக்கு எப்போதுமே நல்ல விலையுண்டு.

வேலிகளில் உள்ள பிரம்பு, ஈந்து, பனை, மூங்கில், கற்றாழை போன்றவற்றில் இருந்து பிரம்பு, கழை, ஈர்க்கு, ஓலை, நார், மட்டை, சடம்பு போன்ற பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில் இருந்து கலைநுணுக்கம் மிக்க, விலையுயர்ந்த பொருட்கள் செய்யப்படுகின்றன. கைவினைஞர்களுக்கு முதற்பொருள் கிடைக்குமிடமாக வேலிகள் இருக்கின்றன.

எல்லைக்கோடாக விளங்கும் வேலிகள்

அண்மைக்காலச் சொத்துச் சிக்கல்களில் பெரும்பாலானவை எல்லைச் சிக்கல்களே. எல்லைக் கல்லைப் பிடுங்கி நாட்டிவிட்டான், வரப்பை வெட்டிவிட்டான் என்று சொல்லித்தான் நிறையச் சிக்கல்கள். இவை எல்லாவற்றிற்கும் இடங்கொடாது நம்முன்னோர் கண்ட வழிதான் வாழ்முள்வேலி.

எல்லைக்கல்லுக்கு மாற்றாகப் பனங்கொட்டைகளை ஊன்றுவர், கள்ளி, கற்றாழை ஆகியவற்றை நடுவர். ஏனெனில் இவற்றை நினைத்தவுடன் பிடுங்கி நட முடியாது. அப்படிப் பிடுங்கி நட்டாலுந் தெரிந்துவிடும். எல்லைக்கோடு பொதுவாக இருக்கும்போது அதில் அமைக்கும் வேலியால் இருவருக்கும் காப்பு. அதுவொரு மாறா எல்லைக்கோடாகவும் விளங்கும். அதில் வளரும் பனை, வேம்பு, புளி போன்ற மரங்களின் பயன்களைச் சரிசமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். வெட்டும்போதும் ஆளுக்குப் பாதியாய் எடுத்துக்கொண்டனர். அடைப்புவிளை, கள்ளியடைப்புப் போன்ற சொற்கள் வேலியமைந்த விளைநிலத்தைக் குறிப்பனவாகும்.

சூழல்காப்பில் வேலியின் பங்கு

பயிர்களைக் காக்கும் வேலி புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றின் இருப்பிடமாகத் திகழ்கிறது. அவற்றை உண்டும் அண்டியும் வாழும் பூச்சிகள், ஊர்வன, பறப்பன, விலங்குகள் ஆகியவற்றின் வாழிடமாகவும் இருக்கிறது. ஆடிகம், ஞெகிழி போன்றவற்றாலான பொருட்களைப் பயன்படுத்தும் மக்கள் அவற்றை வெளியில் வீசிவிடுகின்றனர். அவை காற்றின்மூலம் விளைநிலங்களுக்குள் புகுந்துவிடா வண்ணம் வாழ்முள்வேலிகள் அரணாய் நின்று தடுக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக