ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பழைமையின் பெருமை

பருத்திநூலாடை அணிதல், உமிக்கரியால் பல்விளக்குதல், தலைமயிருக்கு எண்ணெய் தேய்த்தல், துணிப்பை கொண்டுசெல்லுதல், ஓலைப்பெட்டி பயன்படுத்துதல், மட்பாண்டங்களைப் பயன்படுத்துதல், சோறுசமைக்க விறகு பயன்படுத்துதல் ஆகியனவெல்லாம் எள்ளி நகையாடுவதற்குரிய செயல்களாக இப்போது ஆகிவிட்டன.

அதுபோன்றே துணிகளைத் தேய்த்து அணியாமை, கைப்பை கொண்டுசெல்லாமை, பற்பசை கொண்டு பல்விளக்காமை, முகத்திற்கு மாப்பூசாமை போன்றவையும் நாகரிகமற்றவர்களின் செயல்களாகப் பெரும்பாலோரால் எண்ணப்படுகின்றன.

செல்வரொருவர் பழைமையைப் பின்பற்றினால் அச்செயலை எளிமை என்றுகூறும் இவ்வுலகம், ஏழையருவன் பழைமையைக் கைக்கொண்டால் அதை வறுமையின் கூறென்றும் நாகரிகமற்ற செயலென்றும் பழிக்கிறது.

ஒவ்வொரு பொருளும் விளைச்சல், செய்தல், விலை, பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை, எடுத்துச்செல்வதில் எளிமை போன்றவற்றால் மக்களால் எளிமையாகவோ பெருமையாகவோ மதிக்கப்படுகின்றன.

அதுபோன்றே மக்களின் ஒவ்வொரு செயலும் அச்செயலால் உலகிற்கு விளையும் நன்மை தீமைகள், சுற்றுச்சூழலுக்கு விளையும் நன்மை தீமைகள், அச்செயலுக்காகும் செலவு, செயலின் விளைவு போன்றவற்றால் நாகரிகமானதென்றோ நாகரிகமற்றதென்றோ கருதப்படுகின்றது.

சான்றாகப் பனையேறியருவர் பனையிலிருந்து பதனீர் இறக்கித் தாழியிலூற்றிக் காய்த்துக் கருப்பட்டி செய்தால் அது அவருக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும். மாறாகக் கள்ளிறக்கி விற்றாலோ அதிக வருமானம் கிடைக்கும். வேலையும் குறைவு. ஆனால் அது நல்ல தொழிலாக உலகால் ஏற்றுக்கொள்ளப்படாது.

முதற்செயலில் வேலை அதிகம். வருமானம் குறைவு. பயன் அதிகம். நாகரிகமான தொழில்.

இரண்டாவதில் வேலை குறைவு. வருமானம் அதிகம். பயன் குறைவு. நாகரிகமற்றதாக உலகம் கருதும்.

முன்பு மண்ணாலும் சுண்ணாம்புச் சாந்தாலும் வீடுகள் கட்டச் சுவர் எழுப்பினர். கிணறு தோண்டும்போது உடைத்த கற்களை வீடுகட்டப் பயன்படுத்தினர். மரங்களாலும் பனைவளைகளாலும் கற்களாலும் தூண், உத்தரம் போன்றவற்றைச் செய்தனர். சட்டம், மல், வரிச்சுப் போன்றவற்றிற்கு மரங்களையே பயன்படுத்தினர். தென்னங்கீற்றுகளாலும் பனையோலைகளாலும் கூரைவேய்ந்தனர். நாற்புறத்திலும் கூரைவேய்ந்து நடுவில் வானவெளி விட்டனர். இப்போது சுட்ட செங்கற்களைக்கொண்டு சுவர் எழுப்புகின்றனர். சுவரைப் பூசச் சிமிட்டிச் சாந்து பயன்படுத்துகின்றனர். தூண், உத்தரம் போன்றவற்றைச் சாந்து, சல்லி, இரும்புக் கம்பி ஆகியவற்றால் அமைக்கின்றனர். கூரைக்கும் இவற்றையே பயன்படுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் சுவருக்கு வெள்ளையடிக்காமல் இருப்பதற்குக் கண்ணாடி பதித்துவிடுகின்றனர்.

முன்பு வீடுகட்ட ஊர்ப்புறத்தில் கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்தினர். அதனால் மண், கல், மரம், ஓலை போன்றவற்றுடன் தொடர்புடையோருக்கு வேலை கிடைத்தது. இத்தொழிலாளரும் ஊர்ப்புறத்தினரே. அந்த வீடுகளில் கோடைக் காலத்தில் குளுமையும் வாடைக் காலத்தில் கதகதப்பும் நிலவின. சுவருக்கும் கூரைக்கும் இடையே வெளி இருந்ததால் வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் இருந்தது. வானவெளி விட்டிருந்ததால் வீட்டுக்குள் வெளிச்சமும் காற்றும் வந்தன. அந்தக் கூரைகளை மாற்றும்போது அவை சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காமல் எரிபொருளாகவோ உரமாகவோ பயன்பட்டன.

இப்போது வீடுகட்டப் பயன்படும் பொருட்கள் அனைத்தும் ஊர்ப்புறத்திற்குத் தொடர்பில்லாத நகர்ப்புறத் தொழிற்சாலைகளில் செய்யப்படுகின்றன. இதனால் ஊர்ப்புறத் தொழிலாளருக்குக் கட்டுமான வேலையைத் தவிர வேறு வேலைவாய்ப்பில்லை. வீடுகள் சாளரமில்லாமலும் காலதரில்லாமலும் வெற்றிடமில்லாமலும் கட்டப்படுகின்றன. இதனால் மின்விசிறி, குளிர்வசதிப்பெட்டி போன்றவற்றைக் குளிர்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். பகலிலுங்கூட மின்விளக்கை எரியவிடுகின்றனர். இந்த வீடுகளை மாற்றியமைத்தாலோ இடித்தாலோ சுற்றுச்சூழலுக்குக் கேடுசெய்யும். நகரங்களில் நீர்நிலைகளில் இவ்வாறான இடிபாடுகளைத் தட்டி அவற்றைத் தூர்த்துவிடுகின்றனர்.

முன்பு மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர், கிணற்றுநீர், குழாய்க்கிணற்றுநீர் ஆகியன குடிநீராகப் பயன்பட்டன. மக்கள் குளிக்கவும் துணிகளைத் துவைக்கவும் நீர்நிலைகளுக்கே சென்றனர். இதனால் வீட்டில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு மிகக்குறைவே. குடிக்கவும் சமைக்கவும் ஏனங்களைக் கழுவவும் மட்டுமே நீர் தேவைப்பட்டது. அதில் வெளியேறும் நீரும் மரத்திற்குப் பாய்க்கப்பட்டது. அந்த நீர் மண்ணால் ஈர்த்துக்கொள்ளப்பட்டதால் நீர் வீணாக எங்கும் தேங்கவில்லை. நீரால் பரவும் நோய்களும் மழைக்காலத்தைத் தவிரப் பிற காலங்களில் பரவியதில்லை.

இப்போது கட்டமைப்பு வசதி என்ற பெயரில் ஊர்ப்புறங்களில் சிமிட்டிச் சாலையும் வடிகால் வசதியும் குடிநீர்க் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. தடையின்றித் தண்ணீரைப் பிடித்துக் குளிக்கவும் துவைக்கவும் கால்நடைகளைக் குளிப்பாட்டவும் செய்வதால் அந்தக் கழிவுநீர் வடிகாலில் விடப்படுகிறது. ஆடிகக் (பாலித்தீன்) கழிவுகள் வடிகால்களில் போடப்படும்போது கழிவுநீர் தேங்குகிறது. கொசுக்கள் பெருகி நோய்கள் பரவுகின்றன.

முன்புத் தேவையான அளவு நீரையே மக்கள் இறைக்கவும் கோரவும் பயன்படுத்தவும் செய்தனர். இதனால் கழிவுநீரில்லை. நோயில்லை. இப்போது தடையின்றி வரும் நீரால் ஏராளமான நீர் வீணாகி ஆங்காங்கே தேங்குகிறது. இதனால் நோயும் பரவுகிறது. கடுங்கோடையிலுங்கூடக் கொசு கடிக்கிறது.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சரியான முறையில் பேணப்படாததால் குடிநீரில் புழுக்கள் பெருகுகின்றன. குடிநீர்க்குழாய் உடைப்பாலும் கசிவாலும் ஆங்காங்கே தண்ணீர் வீணாகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் சிறுநீர், மலம் போன்றவற்றைக் கழிவுநீர் வடிகாலிலேயே கழித்துவிடுகின்றனர். இதனால் தொற்றுநோய்கள் பரவுகின்றன.

மக்கள் மேன்மேலும் அதிக நீரைச் செலவழிக்க எண்ணிக் குடிநீர்க்குழாயில் மின்னிறைப்பானைப் பொருத்துகின்றனர். இதனால் பிறருக்குத் தேவையான அளவு குடிநீர் கிடைக்காமலும் போகிறது.

முன்பு துணிகளைத் துவைக்க உவர்மண்ணைப் பயன்படுத்தினர். இதில் எந்தக் கேடும் இல்லை. இப்போது பயன்படுத்தும் வழலை(சோப்பு)களாலும் அழுக்ககற்றிகளாலும் நீரும் நிலமும் மாசுபடுகின்றன. நீர்வாழ் உயிரினங்களும் செத்து மடிகின்றன.

முன்பு அரைப்புத்தூள், கடலைமா, பயற்றமா போன்றவற்றை உடலில் பூசி மக்கள் குளித்தனர். இவை நீரில் கரைந்ததும் நீர்வாழ் உயிரினங்கள் அவற்றை உண்டு மாசுகளைக் குறைத்தன. ஆனால் இப்போதோ வழலை(சோப்பு)கள், நுரைமம் (சாம்பு) போன்றவற்றைப் பயன்படுத்தி நீர்நிலைகளை மாசுபடுத்துவது மட்டுமன்றி, நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கும் காரணமாக இருக்கின்றனர். நெகிழி, ஆடிகம் ஆகியன நிலத்தை மாசுபடுத்துகின்றன.

தலைமயிருக்குத் தேய்க்கும் எண்ணெயை முன்பு கிண்ணங்களிலும் கண்ணாடிப் புட்டில்களிலும் வாங்கிவைத்துப் பயன்படுத்தினர். இப்போது அவற்றை ஞெகிழி (பிளாஸ்டிக்) புட்டில்களிலும் உறைகளிலும் மட்டுமே விற்கின்றனர்.

முன்பு சணல் சாக்கில் கட்டிய பொருட்களெல்லாம் இப்போது ஞெகிழிச் சாக்கில் கட்டப்படுகின்றன. தகரப்பெட்டியில் வந்த பொருட்கள் இப்போது ஞெகிழி உறைகளில் வருகின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பாலித்தீன் உறை என்றாகிவிட்டது. இதனால் விளையப்போகும் கேடுகளைத் தடுக்கவேண்டுமானால் நாம் மீண்டும் பழைமையைப் போற்ற வேண்டும். அதுவே நாகரிகம் என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

பழங்கால மக்கள் மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். செப்பு, வெண்கலம் போன்றவற்றாலான ஏனங்களையும் பயன்படுத்தினர். அதன்பின் கண்ணாடி, பீங்கான் ஆகியவற்றாலான பொருட்களைப் புழங்கினர். இப்போது ஞெகிழி, ஆடிகம் போன்றவற்றாலான பொருட்களே பெரிதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றிலுள்ள நீரையோ உணவுப்பண்டங்களையோ மனிதர்களும் விலங்கினங்களும் உண்ணும்போது ஞெகிழி, ஆடிகம் ஆகியவற்றின் துகள்கள் உடலுக்குள் சென்று பல நோய்களையும் தோற்றுவிக்கின்றன.

முன்புத் துணிமணிகளை எடுத்துச்செல்லத் தகரப்பெட்டிகளையும் மரப்பெட்டிகளையும் துணிப்பைகளையும் மக்கள் பயன்படுத்தினர். அவற்றைக் கட்டவும் சணல் நார் ஓலை முதலியவற்றையே பயன்படுத்தினர்.

இப்போது ஞெகிழி, ரெக்சின், ஆடிகம் ஆகியவற்றாலான பெட்டிகளையும் பைகளையும் பயன்படுத்துவதையே மக்கள் நாகரிகமாகக் கருதுகின்றனர். துணிப்பை கொண்டுசெல்பவனைக் கோட்டிக்காரன் என்று நினைக்கின்றனர். உணவை வாளியிலும் ஏனங்களிலும் எடுத்துக்கொண்டு அதை மறைக்க இன்னொரு ஞெகிழிப் பையை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். அதைத் தவிர்த்துத் தூக்குவாளியிலே எடுத்துச் செல்லலாம்.

முன்பெல்லாம் மண்பானையிலோ வெண்கலப்பானையிலோ உணவை எடுத்துச்சென்றனர். அடுக்குக் கலத்தையும் பயன்படுத்தினர். வெளியூர்ப் பயணம்போகிறவர்கள் புளிச்சோற்றைப் பருத்தித் துணியில் கட்டிக்கொண்டு சென்றனர். இப்போதோ பயணம்போகிறவர்கள் சோறு கொண்டுசெல்வதில்லை. வழியில் உணவகத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர்.

உணவகங்களில் வாழையிலையில் சோறுகட்டிய நிலைமை மாறி இன்று ஆடிகத் தாளில் சோற்றையும் ஆடிகப் பைகளில் கறி, கூட்டு ஆகியவற்றையும் கட்டி இவையனைத்தையும் மொத்தமாகப் பெரிய ஆடிகப் பையில் போட்டுக் கொடுக்கின்றனர்.

தெரு, கோவில், பள்ளி, விளையாட்டுத் திடல், மருத்துவமனை போன்ற இடங்களில் மண்தரையையே பார்க்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் காறைச்சாந்து பூசி மண்ணில் மழைநீர் இறங்காமல் செய்கின்றனர். மரங்களைக்கூடக் வன்காறைச் (கான்கிரீட்) சுவர்களுக்குள் சிறைவைக்கின்றனர். இதனால் அவற்றின் வேருக்கு நீர்கிடைக்காமல் அவை விரைவில் பட்டுப்போகின்றன.

2005 - 06ஆம் ஆண்டு சேலம் நகரத்துத் தொடர்வண்டி நிலையம் வேம்பு, புங்கன், ஆல் போன்ற மரங்கள் சூழ்ந்து பச்சைப்பசேல் என்றிருந்தது. சேலம் நடுவண் நூலகத்திற்குப் படிக்க வருபவர்களும் சேலம் அரசு கலைக்கல்லூரியில் படிப்பவர்களும் உச்சிப்பொழுதில் இளைப்பாறித் தங்கிச்செல்லும் இடமாக அந்தத் தொடர்வண்டி நிலையம் இருந்தது. இப்போது அதே நிலையம் அகலப்பாதையாக்கப்பட்டுப் புதுக்கட்டடம் கட்டியபின் பாலைபோலக் காணப்படுகின்றது. மரங்களனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. ஒரேயொரு ஆலமரத்தையும் கிளைகளை வெட்டிவிட்டுக் வன்காறைச் சுவருக்குள் சிறைவைத்துவிட்டனர். இனிப் பழைய எழில் என்று திரும்புமோ? எத்தகைய மாசுகளையும் தன்னுள் ஈர்த்துக்கொண்டு தூய்மைப்படுத்தும் திறன் மண்ணுக்கு உண்டு. மண் ஈர்த்தும் வெயிலில் காய்ந்தும் விடுவதால் நுண்ணுயிர்கள் செத்துவிடுகின்றன.

இப்போது பைங்காறை(சிமிட்டி)த் தரையில் கழிவுநீரும் குடிநீரும் சிந்திக் கிடக்கும் நிலையில் அதனுடன் மாசுகளும் சேரும்போது கொசுக்கள் வளர்ந்து நோய் பரவும் தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. ஊரக நகர்ப்புற நோய்ப் பரவலுக்குச் பைங்காறையாலான கட்டமைப்புகளும் தண்ணீர்க் கசிவுமே தலையாய காரணங்களாகும்.

களிமண்ணாலும், சுண்ணாம்பாலும் வீடுகட்டி, ஓலையால் கூரைவேய்ந்து சாணத்தால் மெழுகி, மண்முற்றத்தில் சாணத்தைக் கரைத்துத் தெளித்த வீட்டில் குடியிருந்த நம் முன்னோர் நூறாண்டுகள் நோய்நொடியின்றி வாழ்ந்தனர். ஆட்டுரலையும் இடியுரலையும் தனியாளாகத் தூக்கிச் சுமக்கும் வலிமை பெற்றிருந்தனர். அவர்கள் ஆற்றிலும் குளத்திலும் கிணற்றிலும் குளித்து ஆற்றலுடன் திகழ்ந்தனர்.

இன்றைய மக்கள் ஒரு வாளித் தண்ணீரில் (தலையை நனைக்காமல்) குளித்துவிட்டு உடல் வலுவில்லாமல் வாழ்கின்றனர். இதனால்தான் ஒரு தோள்பையை இருவர் தூக்கிச்செல்லும் நாகரிக (இழி)நிலை ஏற்பட்டுள்ளது.

உடுக்கப் பருத்திவேட்டி, குடிக்கச் சோளக்காடி, உண்ணச் செந்நெற்சோறு, படுக்கக் கோரம்பாய் என்றிருந்த பழைமையையும்

உடுக்கச் செயற்கை இழைத் துணி, குடிக்கப் பெப்சிகோலா, உண்ண விரைவுணவு, படுக்க இரும்புக் கட்டில் என்றிருக்கும் புதுமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

எது வாழ்க்கைச் செலவு அதிகமுடையது என்றும், எது எளிமையானது என்றும், எது நாகரிகமென்றும் எண்ணிப் பாருங்கள். எளியதைத் தேர்ந்தெடுங்கள்.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக