புதன், 25 ஜனவரி, 2023

மக்களாட்சியா? நிறுவனங்களின் ஆட்சியா?

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிறைக்குளம் ஊராட்சியில் மன்னார் வளைகுடாக் கடலோரப் பகுதியில் அரியானாவைச் சேர்ந்த கிரீன் இன்ப்ரா வைண்ட் எனர்ஜி நிறுவனம் 190 ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கி அங்குச் சூரிய ஒளிமின்னுற்பத்திக்கான தகடுகளை அமைக்க உள்ளது. இதற்காக அப்பகுதியில் இயற்கையாக வளர்ந்துள்ள பனைகளை வேருடன் பிடுங்கிச் சாய்த்து வருகிறது. உள்ளூர் மக்கள் அதைத் தடுத்தபோது பனைகளை வெட்டுவதற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுவிட்டது நிறுவனம். அதன்படி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் காவல்படையினரின் பாதுகாப்புடன் மூன்று பொக்லைன்களைக் கொண்டு மண்ணைத் தோண்டிப் பனைகளை வேருடன் சாய்க்கும் கொடுஞ்செயலில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.



1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் சேர்ந்து வந்தது. அப்போது சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பது திமுகவின் முழக்கமாக இருந்தது. அந்தத் தேர்தலில் வென்ற திமுக அரசு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவர அரசுப் பேருந்தில் இலவசப் பயணம், வேளாண்மைக்கு இலவச மின்சாரம், பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுடன் முட்டை, பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை, ஐந்துக் கிலோ அரிசி இலவசம் எனப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தியது. இதனால் திமுகவின் முழக்கம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. 5 கிலோ அரிசி தரும் பையின் மீது ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்கிற சொல்லும் பொறிக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் பருத்தி நூல் வேட்டிசேலை வழங்கி வந்தனர். கடந்த 15 ஆண்டுகளாகச் செயற்கை இழையாலான வேட்டி சேலை வழங்கப்படுகிறது.

அண்மைக்காலமாகத் தேர்தல் வெற்றிக்காக எல்லாக் கட்சிகளுமே நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளைக் கூறுவது வழக்கமாகி விட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டெர்லைட் செம்பு உருக்காலைக்கு எதிரான போராட்டம், சாத்தான்குளம் வன்கொலைக்கு எதிரான போராட்டம், சென்னைசேலம் எண்வழிச் சாலைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்ட திமுக ஆட்சிக்கு வந்த பின் இவற்றில் பலவற்றில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. 2016ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கும் என உறுதிமொழி அளித்தது. அப்போது ஆட்சிக்கு வரவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் அத்தகைய உறுதிமொழி எதையும் அளிக்கவில்லை. ஆனால் 2016க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரித் திமுக போராட்டம் நடத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்தபின் மதுவிலக்குப் பற்றிப் பேசவே இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனைகளை வெட்டுவதற்குத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தது. மாநில அரசின் மரமான பனைகளை வளர்க்கவும் காக்கவும் அரசு பாடுபடும் எனக் கூறியது. பனைகளைக் காப்போம் எனச் சொன்னதைச் செய்யாத அரசு, இராமநாதபுரம் சிறைக்குளத்தில் பனைகளை வெட்டுவோருக்குக் காவல் காக்கிறது. உள்ளூர் மக்களுக்கு உண்மையாக இருக்காத அரசும் அதன் பொறியமைப்பும் நீதித்துறையும் பசுமை மின்னுற்பத்தி என்னும் பெயரில் மாபெரும் சுற்றுச்சூழல் பேரழிவைச் செய்துவரும் கிரீன் இன்ப்ரா வைண்ட் எனர்ஜி நிறுவனத்துக்குத் துணையாக நிற்கின்றன. மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சிப் பனைகளை வெட்டுவதை முதலில் நிறுத்திய நிறுவனம், உயர் நீதிமன்ற உத்தரவு வந்ததும் ஊக்கம் பெற்று அரசின் காவல்துறையின் பாதுகாப்புடன் பனைகளை வெட்டும் அழிவுப் பணியில் மும்முரமாகக் களமிறங்கி விட்டது.



இதையும் மீறி மக்கள் போராடினாலோ, தடுத்தாலோ தூத்துக்குடியில், இடிந்தகரையில், எண்வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டத்தில் நேர்ந்ததைப் போல அடக்குமுறைக்கும் படுகொலைக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என எச்சரிக்கும் வகையில் காவல்படைகளை நிறுத்தியுள்ளது அரசு. பனைகளை வெட்டக்கூடாது எனக் குடியரசு நாளில் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கருதிய நிறுவனம் அதற்கு முன் அத்தனை பனைகளையும் சாய்த்துவிட வேண்டும் என எண்ணிக் கொடுஞ்செயலில் மும்முரமாக இறங்கிவிட்டது. அவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களுக்கு எதிராகக் காவல்படைகளை நிறுத்தியுள்ளது தமிழக அரசு. 2018இல் தூத்துக்குடியிலும், இப்போது இராமநாதபுரத்திலும் காவல்துறையினர் எடுத்துள்ள நிலைப்பாடு, பணம்படைத்த பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவே அரசும் காவல்துறையும் செயல்படும் எனக் காட்டுவதாகவே உள்ளது. இந்த வழக்கில் சுற்றுச்சூழலையும், ஊரகப் பொருளாதாரத்தையும், நீடித்த பொருளாதார வளர்ச்சியையும் சீர்தூக்கிப் பார்க்காத நீதிமன்றமும் பெருநிறுவனத்தின் சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் செயலுக்குத் துணைபோவதாகவே கருத வேண்டியுள்ளது.



தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களும், அரசு பொறியமைப்பும் நல்லது செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல், எதிரிக்குத் துணைபோகாமல் இருக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர். நூறாண்டுகளுக்கு மேல் பயன்தரக் கூடிய பனைகளை உயிரோடு வேரோடு சாய்த்துப் பச்சைப் படுகொலை செய்வதைக் கண்டு மனம் விம்மியுள்ள மக்கள் இனி இவர்களை நம்பிப் பயனில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். வேற்று மாநிலப் பெரு நிறுவனத்துக்காக உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமாகச் சூழல் காக்கும் இயற்கை அரணாகத் திகழும் பனைகளை வெட்டிச் சாய்க்கும் பச்சைப் படுகொலையை ஊடகங்கள் கூட வெளிப்படுத்த மறுப்பதும் எண்ணிப் பார்க்கத் தக்கது.



புதிதாகப் பனைகளை வளர்க்கப் போவதாகவும், பனைத்தொழில் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்யப் போவதாகவும் கூறும் அரசு இருப்பதையே காக்கவில்லையே. இனி எப்படி அரசை நம்புவது என மக்கள் தெரிவிக்கின்றனர். நிறுவனம் வாங்கிய 190 ஏக்கர் நிலத்திலும் பனைகள் இல்லாத இடங்களில் சூரிய ஒளிமின் தகடுகளை நிறுவலாம். பனைகள் புவியீர்ப்பு ஆற்றலுக்கு எதிராகச் செங்குத்தாக வளர்பவை. கிளைகளும் கிடையாது. அதனால் ஒளிமின்னுற்பத்திக்கு எந்த இடையூறும் இருக்காது. இந்தத் தீர்வை அரசு தெரிவித்து மக்களுக்கும் நிறுவனத்துக்கும் இணக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மாறாக மக்களுக்கு எதிராகவும் நிறுவனத்துக்கு ஆதரவாகவும் அரசு நடந்துகொள்வதைப் பார்த்தால் இந்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? நிறுவனங்களின் ஆட்சியா? என்கிற வினாவே மக்களுக்கு எழுகிறது.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக