வியாழன், 19 ஜனவரி, 2023

பனைகளும் பனங்கொட்டைகளும் சமமா?

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிறைக்குளம் ஊராட்சியில் சூரிய ஒளிமின் நிலையம் அமைக்கும் தனியார் நிறுவனம் பொக்லைன்களைக் கொண்டு அங்குள்ள பனைகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்டவற்றை வேருடன் சாய்த்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் பூங்காவுக்கு அருகில் இருக்கும் இந்த இடத்தில் நெருக்கமாக வளர்ந்துள்ள பனைகள் மண்ணரிப்பையும், கடற்கோளையும் தடுக்கும் நிலப் போர்வையாகச் செயல்படுவது குறிப்பிடத் தக்கது. அதனால் இங்குள்ள பனைகளை வெட்டுவதற்கு உள்ளூர் மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் எதிர்ப்புத் தெரிவித்துத் தடுத்துள்ளனர். இது குறித்துக் கடலாடி வட்டாட்சியர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு மரம் என அறிவிக்கப்பட்டுள்ள பனைகளை வெட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்நிலையில் சூரிய ஒளிமின் நிலையத்துக்காகப் பனைகளை வேருடன் பிடுங்கி அகற்றுவதற்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சூரிய ஒளிமின் நிறுவனம் முறையிட்டது. முந்நூற்றுக்கு மேற்பட்ட பனைகளை வெட்டியுள்ளதாகவும், இன்னும் ஆயிரம் பனைகளை வெட்ட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பனைகளை வெட்டியுள்ளதாகவும், ஐயாயிரம் பனைகளை வெட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். உண்மையை மறைத்துச் சூரிய ஒளிமின் நிறுவனம் கூறிய தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தனியார் நிலத்தில் நிற்கும் பனைகளை வெட்டக் கூடாது என்றோ, வெட்ட அனுமதி பெற வேண்டும் என்றோ மத்திய மாநில அரசுகள் சட்டம் ஏதும் இயற்றவில்லை எனக் கூறியுள்ளார். பனைகளை வெட்டப் பாதுகாப்புக் கோரும் நிறுவனத்தின் மனுவை ஒரு வாரத்தில் பரிசீலிக்கும்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும், 2000 பனங்கன்றுகளையும், 1000 பிற வகைகளைச் சேர்ந்த மரக்கன்றுகளையும் மாவட்ட வனத்துறையிடம் வழங்கும்படி நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள தமிழின் முன்னணி நாளிதழ் அந்த நிறுவனத்தின் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே அந்த நிறுவனத்தின் செல்வாக்கை நாம் உய்த்தறிந்துகொள்ளலாம்.



உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வந்தவுடனேயே காவல்துறையினரின் துணையுடன் பொக்லைன்களைக் கொண்டு பனைகளை வேருடன் பிடுங்கிச் சாய்க்கும் வேலையை நிறுவனம் தொடங்கிவிட்டது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் பனைகளையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் உள்ளூர் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தக் கொடுஞ்செயல் இப்படியே தொடர்ந்தால் இதேபோல் தமிழ்நாடு முழுவதும் தானாக வளர்ந்து நிற்கும் பனைகளை அரசின் உதவியுடனும், நீதிமன்றத்தின் அனுமதியுடனும் ஈவிரக்கமில்லாமல் வேருடன் பிடுங்கிச் சாய்க்கும் நிலையும், அதைச் சூழலியல் ஆர்வலர்களும் பொதுமக்களும் தடுக்க முடியாத நிலையும் வரும்.

தனியார் நிலத்தில் வளர்த்த சந்தன மரத்தை வெட்ட அரசிடம் அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது. இதேபோல் பனைகளை அழிவில் இருந்து காக்க வகை செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டிய நீதிமன்றம், கட்டைப்பஞ்சாயத்தில் தீர்ப்புச் சொல்வதுபோல் இரண்டாயிரம் பனங்கன்றுகளை அரசுக்கு வழங்கிவிட்டு ஆயிரக்கணக்கான பனைகளை வெட்டிக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த உத்தரவு வந்தவுடனேயே பொக்லைன்களைக் கொண்டு பனைகளைப் பிடுங்கும் கொடுஞ்செயலில் சூரியஒளிமின் நிறுவனம் இறங்கியுள்ளது.

10 சென்ட், 20 சென்ட் நிலத்தில் வீடுகட்டும் ஒருவர் அதிலுள்ள சில பனைகளை வெட்டுவதற்கும், பெருமளவு நிலத்தில் ஆயிரக்கணக்கான பனைகளை வெட்டுவதற்கும் உள்ள வேறுபாடு நீதிபதிக்குத் தெரியாதது வியப்பளிக்கிறது. தமிழ்நாட்டைப் பலமுறை கடல்கொண்டதையும், எஞ்சியுள்ள நிலத்தைக் கடல்கோளில் இருந்து காக்க இயற்கையாகவே கடற்கரையில் உள்ள தேரி எனப்படும் செம்மணற் குன்றுகளும், அதிலுள்ள இயற்கைத் தாவரமான பனைகளும் அரணாக உள்ளனதையும் நீதிமன்றம் கவனத்திற் கொண்டிருக்க வேண்டும்.

தனியார் நிலத்தில் உள்ள பனைகளை வெட்டுவதற்கு அரசின் அனுமதி தேவையில்லை எனக் கூறுவது,  பிள்ளைகளைப் பெற்றோர் கொன்றால் அரசு தலையிட வேண்டாம் எனக் கூறுவதுபோல் உள்ளது. ஒவ்வொரு தொழில் திட்டத்துக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். மன்னார் வளைகுடா உயிரியல் பூங்கா அருகில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான பனைகளை வேருடன் பிடுங்கிச் சாய்த்துவிட்டுச் சூரிய ஒளிமின் நிலையம் அமைக்க வேண்டுமா? என்கிற வினாவைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் எழுப்பியிருக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் ஆயிரக்கணக்கான பனைகளை அழிப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளதா? என்பதை நீதிமன்றம் ஆய்ந்திருக்க வேண்டும். பனைகளை அழிப்பதால் அப்பகுதி காற்றாலும் மழையாலும் மண்ணரிப்புக்கு இலக்காகிக் கொஞ்சங்கொஞ்சமாகக் கடலால் கொள்ளப்படும் வாய்ப்புள்ளது என்பதையும் கருதிப் பார்த்திருக்க வேண்டும்.  

அதுபோகப் பனை வளர்க்கக் கன்றுகள் நட மாட்டார்கள். மண்ணில் பனங்கொட்டைகளை ஊன்றுவர். அது முளைத்துப் பீலிவிட்டு ஒவ்வொரு ஓலையாக வெளிவந்து வடலியாகிப் பாளை தள்ளிப் பயன்தரும் பருவத்துக்கு வரக் குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும். ஊன்றிய கொட்டைகள் அனைத்தும் முளைக்குமா? முளைத்த பனைகள் அனைத்தும் வளருமா? நாற்பதாண்டுகள் வளர்ந்து ஆண்டுதோறும் பயன்தரும் ஆயிரக்கணக்கான பனைகளும், 2000 பனங்கன்றுகளும் சமமா? இவையனைத்தும் உடனடியாக வளர்ந்து பயன்தரும் நிலைக்கு வருமா? வரும் என அரசும் நீதிமன்றமும் உறுதியளிக்குமா? அவ்வாறு உறுதியளித்திட்டாலும் அது நிறைவேற்றக் கூடியதா? என அடுக்கடுக்கான வினாக்கள் எழுகின்றன. இயற்கையிலேயே தானாகவே வளர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேல் காலச்சூழலையும் பல்வேறு இடர்களையும் தாங்கி வளர்ந்து நிற்கும் பனைகளைக் காக்க முடியாதது அரசுக்கும் நீதித்துறைக்கும் ஒரு தோல்வி எனவே கொள்ளலாம்.

பனங்காடுகள் இல்லாத சீமைஉடைகள் (சீமைக்கருவேல மரங்கள்) வளர்ந்துள்ள பகுதிகளில் அவற்றை அகற்றிவிட்டு அங்குச் சூரியஒளிமின் நிலையத்தை அமைப்பது பற்றி நிறுவனமும் அரசும் பரிசீலிக்க வேண்டும். வெப்பநிலை உயர்வால் உலகில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுப் பல நாடுகளில் வெள்ளமும் வறட்சியும் மாறிமாறி வந்துகொண்டிருப்பதுடன், கடல்மட்டம் உயர்ந்து தீவுகளையும் கடலோரப் பகுதிகளையும் விழுங்கி வருகிறது. இதனால் மிக அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மழை வெள்ளம் புயல் வறட்சி கடலரிப்பு புழுதிப்புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் தமிழ்நாடு அடிக்கடி பாதிக்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். அதனால் சுற்றுச்சூழல் காரணங்களைக் கணக்கிற்கொண்டு பனைகளை வெட்டுவதை அரசு தடுக்க வேண்டும். கடற்கரை, ஆற்றங்கரை, குளத்தங்கரை, கால்வாய்க் கரை ஆகியவற்றில் உள்ள பனைகளை மட்டுமல்லாமல் தனியார் நிலங்களிலும் உள்ளவற்றையும் காக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும். இயற்கைப் பேரழிவுக்கு இலக்காகும் பகுதிகளில் பனங்கொட்டைகளை ஊன்றிப் பனை வளர்க்கவும், தாழை கற்றாழை ஆகிய தாவரங்களை வளர்க்கவும் வனத்துறை திட்டமிட வேண்டும்.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக