வியாழன், 12 ஜனவரி, 2023

மதுவிலக்கு = மது + இலக்கு

1930ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரிக் காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில்  ஏலம் எடுக்க ஆளின்றிச் சாராயக் கடைகள் அடைக்கப்பட்டன. இதன் விளைவாக மது குடிப்பவர்களைப் புறக்கணிப்பதும் நடந்தேறியது. சென்னை மாகாணத்தில் 1937ஆம் ஆண்டு  காங்கிரசு ஆட்சியில் ராஜாஜியால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அது நாடு விடுதலை பெற்ற பிறகும் 23 ஆண்டுகள் நீடித்தது. 1971ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் மது விற்பனை தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் கள்ளுக் கடை, சாராயக் கடை, உள்நாட்டில் வடிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளுக்கான கடை என இவை மூன்றும் இருந்தன. 1987ஆம் ஆண்டில்  அதிமுக ஆட்சியில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தபோது சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் சாராயம், கள் விற்கத் தடை நீடிக்கிறது. அதே நேரத்தில் உள்நாட்டில் வடிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகைகள், வெளிநாட்டு மதுவகைகள் விற்கப்படுகின்றன.

1980,90களில் தனியார் சிலர் கள்ளத்தனமாகச் சாராயம் வடித்து விற்று அதிக இலாபம் ஈட்டினர். இதில் காவல்துறைக்கும் கப்பம் கட்டியதால் கண்டுகொள்ளாத போக்கு இருந்துவந்தது. தொழில் போட்டி பொறாமையால் சாராயத்தில் சிலர் நஞ்சைக் கலந்து விட அதை அருந்தியோர் உயிரிழக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துவந்தன. இதையே காரணம் காட்டிக் கள்ளச்சாராயத்தால் நிகழும் சாவுகளைத் தடுக்க எனக் கூறி உள்நாட்டில் வடிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை அதிகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் ஒரு வட்டத்தில் 3 அல்லது 5 கடைகள் தான் இருந்தன. இந்தக் கடை உரிம ஏலத்தில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் கூட்டுச் சேர்ந்து விட்டுக்கொடுத்துக் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்த நேர்வுகள் பரவலாக இருந்தது. அதன்பின் சிற்றூராட்சிகளிலும் மதுக்கடை திறக்க உரிமங்கள் வழங்கப்பட்டன. ஒருசில ஊர்களில் ஏலம் எடுக்க ஆளில்லையென்று கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்பட்டன.

மதுக்கடை ஏலத்தில் உள்ள கூட்டுச் சதியை ஒழித்தல், சிற்றூர்களிலும் கடை திறத்தல் ஆகிய உயரிய நோக்கத்தில் அதுவரை தனியாரால் நடத்தப்பட்டு வந்த மதுக்கடைகளை 2003 நவம்பர் 29 முதல் தமிழ்நாடு மாநிலச் சந்தையியல் கழகம் (TASMAC) என்னும் பெயரில் மாநில அரசே நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் செயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எடுத்த இந்த முடிவை அதன்பின் திமுக இருமுறை ஆட்சிக்கு வந்தபின்னும் மாற்றவில்லை.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சாலைவிபத்து, அடிதடி, வன்முறை ஆகியவற்றுக்கு முழுமுதற் காரணமாக இருப்பது மதுவே எனக் குற்றப் பதிவேடுகளில் இருந்து தெரியவருகிறது. நாட்டிலேயே சாலை விபத்து, அதில் புண்படுதல், உயிரிழப்பு ஆகியன தமிழ்நாட்டில் தான் அதிகம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சியும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்குக் கொண்டுவர முதல் கையொப்பம் இடப்படும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெளிவாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். மற்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு அடிக்கடி மாறிவருகிறது.

அதிக அளவில் சாலை விபத்து நடப்பதற்குக் காரணமாக அரசின் மதுக் கடைகள் இருப்பதால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை நீக்கச் சொல்லி நடுவண் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லிவந்தும் தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சி அரசுகளும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தன. பல இடங்களில் மதுக்கடைகளை அடித்து நொறுக்கிப் போராட்டங்கள் நடைபெற்ற பிறகும் தமிழ்நாடு அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு தொடுத்த வழக்கில் 2013 மார்ச்சு 31 ஆம் நாளுக்குள் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குடிமக்கள் நலன் காக்கும் அதிமுக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 2017ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையே உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பைச் செயல்படுத்துவது தவிர வேறு ஒரு வழியும் இல்லாததால் தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த 3321 அரசு மதுக்கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச் சாலைகளாக வகை மாற்றம் செய்து மீண்டும் மதுக்கடைகளைத் திறந்தது குடிமக்களுக்கான அதிமுக அரசு.

சென்னை சாபர்கான்பேட்டையில் அப்படி வகைமாற்றப்பட்ட சாலையோரத்தில் மழைநீர் வடிகால் கட்டுவதற்குத் தோண்டப்பட்ட பள்ளத்தில் செய்தியாளர் விழுந்து கம்பி குத்தி இறந்தபோது, அது மாநகராட்சி சாலை அல்ல, நெடுஞ்சாலைத் துறையுடையது என விளக்கமளித்தார் ஆணையர். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையுடையதுதானே என எந்தச் செய்தியாளரும் எதிர்வினா வினவவில்லை. தமிழ்நாட்டில் எத்தகைய செய்தியாளர்கள் உள்ளனர்? ஊடகச் சுதந்திரம் எந்த அளவு சிறப்பாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரிக் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் நடைபெற்ற போராட்டத்தில் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீதேறிய காந்தியவாதியான சசிபெருமாள்   2015 சூலை 31ஆம் நாள் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக மதுக் கடைகளை அடைக்கக்கோரித் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் மதுக்கடைகளை மூடக் கோரிப் போராட்டங்கள் வலுப்பெற்றன.

1937 முதல் 1971 வரை சட்டப்படி தடை செய்யப்பட்ட மதுவகைகள் வடிப்பு, இருப்பு, விற்பனை ஆகியவற்றைத் தடுக்கவும் மதுவை ஒழிக்கவும் மதுவிலக்குத் துறை செயல்பட்டது. காவல்துறையில் மதுவிலக்கு நடைமுறைப் பிரிவு இருந்தது. சாராயம் வடிக்க வைத்த சர்க்கரை ஊறல்களை அழிப்பது, சாராயத்தைப் பறிமுதல் செய்து மண்ணில் ஊற்றுவது, பனைகளில் கள் இறக்குவதைத் தடுப்பது ஆகியன இத்துறையின் வேலைகளாக இருந்தன. 1971இல் மதுவிற்பனை தொடங்கப்பட்ட பின்னும், 2003 முதல் அரசே மதுக்கடைகளை நடத்தி வரும் நிலையிலும் இன்னும் மதுவிலக்குத் துறை என ஒன்றிருப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது. இப்போது மதுவிற்பனையை நடத்துவதே மதுவிலக்குத் துறையின் வேலையாக உள்ளது. அதனால் மது இலக்குத் துறை அல்லது மது விற்பனைத் துறை என அதன் பெயரை மாற்றிவிடுவதே நல்லது. கள் சாராயக் கடைகளை ஒழித்தபின், கள்ளத்தனமாக ஆங்காங்கே காட்டுப்பகுதியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாகச் சாராய விற்பனை நடைபெற்று வந்தது. இதில் நல்ல வருமானம் கண்டவர்கள் காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்குக் கையூட்டுக் கொடுத்துவந்தனர். கையூட்டுக் கொடுக்காதவர்கள் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவந்தனர். உடல்உழைப்பை மட்டுமே நம்பி ஒரு நாளைக்குப் பனையில் மும்முறை ஏறி இறங்கும் பனையேறிகள் கள் விற்கக் கையூட்டுக் கொடுப்பதில்லை. இதனால் அவர்கள் கள் இறக்குவதாகக் கூறிக் கலயங்களை உடைப்பது, கள் கலயம், முறுக்குத் தடி, அறுவாட் பெட்டி, கடுப்பு, குடுவை ஆகியவற்றுடன் அவர்களை அரையாடையுடன் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

உலகப் பொதுமறையை எழுதிய திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்கிற ஓர் அதிகாரத்தையே வைத்துள்ளார். அத்தகைய கள் எத்தகையது எனப் பார்ப்போம். பனம் பாளைகளை அறுவாளால் அறுத்துச் சீவிக் கடுப்பால் புண்படுத்தினால் அதிலிருந்து இயற்கையாக வடியும் நீரே கள். சொட்டுச் சொட்டாக விழும் கள் ஒருநாள் முழுவதும் சேர்ந்தால் ஒரு கலயம் நிறையும். பொதுவாகக் காலையிலும் மாலையிலும் கள்ளை இறக்கிக் குடிப்பர். கள்ளைக் குடிக்கும் உழைப்பாளர்களுக்கு உடல் வலி போகும். உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும். நல்ல உறக்கம் வரும். அளவாய்க் குடித்தால் எந்தத் தீங்குமில்லை. அளவின்றிக் குடித்தால் கள்வெறி ஏற்பட்டு நினைவிழப்பு, தடுமாற்றம் ஏற்படும்.

பனையில் கட்டியிருக்கும் கலயத்தின் உட்புறத்தில் கலக்குமட்டையால் ஓரளவு சுண்ணாம்புப் பொடியைப் பூசினால் பாளையில் இருந்து வடியும் கள் சுண்ணாம்புடன் வினைபுரிந்து பதனீராகிவிடும். இது தேன்போல் இனிப்புச் சுவையுடையது. காலை முதல் முற்பகல் 10 மணி வரை பதனீரை அருந்தலாம். இதை அருந்துவோருக்கு உடல் எலும்புகள் வலுவாகும். ஊட்டச் சத்துக் குறைவு நீங்கும். முற்பகல் பத்து மணிக்குள் பதனீரைப் பெருந்தாழிகளில் ஊற்றி கூட்டடுப்புகளில் வைத்துக் காய்த்துக் கூழ்ப்பதனீராக்கிக் கண்ணுள்ள சிரட்டைகளில் ஊற்றிக் கருப்பட்டி ஆக்குவர்.

காலை முதல் முற்பகல் 10 மணி வரை குடிப்பதற்குத் தேன்போல் இருக்கும் பதனீர் அதன்பின் நேரம் செல்லச் செல்ல இனிப்புச் சுவை குறைந்து சளிக்கும். அதன்பின் புளித்துத் தானாகவே கள்ளாகும். இந்த நேரக் கணக்கீடு கலயத்தில் சேர்க்கப்பட்ட சுண்ணாம்பின் அளவைப் பொறுத்துக் கூடவோ குறையவோ செய்யும். துல்லியமாகக் கணக்கிட முடியாது. ஆகப் பனம்பாளையில் இருந்து இயற்கையாக வடியும் நீர் கள். அதனுடன் சுண்ணாம்பைக் கலந்தால் பதனீராகிறது. சுண்ணாம்பு கலந்த பதனீருக்குத் தடையில்லை. இயற்கையாக வடியும் கள்ளுக்குத் தடை. வணிகத்தில் கலப்படம் குற்றம். பனையேற்றில் சுண்ணாம்பைக் கலக்காதது குற்றம். இப்போது பதனீர் என்னும் பெயரில் இரண்டு மூன்று நாட்களானாலும் சளிக்காமல் புளிக்காமல் இருக்கும் வகையில் அதிக அளவுச் சுண்ணாம்பைக் கலந்து தண்ணீர் ஊற்றி சாக்கரின் கலந்து விற்றுப் பனையேற்றுத் தொழிலையே இழிவாக்கி வருகின்றனர் சிலர்.

கள்ளுக்குத் தடை உள்ளதைக் காரணம் காட்டிப் பொறாமையாலோ, உழைப்பாளரை இழிவுபடுத்தவோ அவரைப் பிடித்துக் காவல்துறை வண்டியில் ஏற்றி, அவர் இறக்கிய பதனீரையே கலயத்துடன் கொண்டுசென்று நண்பகலில் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினால் அந்தக் கலயத்தில் இருந்த பதனீர் கள்ளாகியிருக்கும். அவரைக் குற்றவாளியாக்க அது ஒரு சான்றாகி இருக்கும். சாராய ஆலைகளின் வளர்ச்சிக்காய்ச் சட்டத்தின்பெயரால் இப்படிப் பனையேறிகள் ஏராளமானோர் பழிவாங்கப்பட்டனர். இதனால் பனையேற்றுத் தொழிலையே விட்டுவிட்டுக் கூலிவேலைக்குச் சென்றுவிட்டனர். இப்படிக் காவல்துறையின் கடமையுணர்ச்சியால் இன்று பனைத்தொழில் அழிந்துவிட்டது. மது அழிந்ததா என்றால் இல்லை.

காட்டிலும், மேட்டிலும் ஊருக்கு ஒதுக்குப் புறங்களிலும் அஞ்சி அஞ்சி விற்கப்பட்டது கள்ளச்சாராயம். அதை முற்றிலும் ஒழித்துவிட்டதாக மார்தட்டும் தமிழ்நாடு அரசு வட்டத் தலைநகர் மட்டுமல்லாமல் சிற்றூர்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்தது. கள்ளச்சாராயம் அருந்திக் குடிமக்கள் உயிரிழப்பதைத் தடுக்கவே டாஸ்மாக் மதுக்கடையில் நல்ல சாராயம் விற்பதாகக் கூறி இதை நியாயப்படுத்தும் வகையில் மண்டையில் மயிரும் அறிவும் இல்லாத அமைச்சர்கள் சிலர் கொடுக்கும் விளக்கம் மிகுந்த கண்டனத்துக்குரியது. அமைச்சரின் செய்தியைக் கவர் செய்யச் செய்தியாளர்களுக்குக் கவர் கொடுக்கப்படுவதால் இதை எதிர்த்து எந்த வினாவும் தொடுப்பதில்லை. தம்பி தம்பி எனச் செய்தியாளரை அந்நாளைய அமைச்சர் உறவுமுறை கொண்டாடியதில் இருந்து இதை நாமறியலாம்.

கள்ளச் சாராயம் என்பது காட்டில் கிடக்கும் பாழ்ங்கிணறு போல, யாராவது தேடிச் சென்று அதில் விழுந்தால்தான் உண்டு. குடிப்பதற்கு வெட்கப்படாத வழக்கமான குடிகாரர்களே அங்குச் சென்றனர். மானத்துக்கு அஞ்சியவர்கள், இளைஞர்கள், சிறார்கள், பெண்களுக்கு எங்குச் சாராயம் விற்கிறார்கள் என்றே தெரியாது. அதனால் அவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

டாஸ்மாக் என்னும் பெயரில் தமிழ்நாடு அரசு எங்கெல்லாம் கடைகளைத் திறந்துள்ளது பாருங்கள். பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், கோவில்கள், சந்தைகள், திரையரங்கங்கள் ஆகியவற்றின் சுற்றுப்புறப்பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தான் பெரும்பாலான மதுக்கடைகள் உள்ளன. சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தின் அருகே விக்டோரியா நினைவரங்கத்தின் அருகே வரிசையாக மதுக்கடைகள் இருந்ததைப் பலர் அறிந்திருக்கக் கூடும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்துசெல்லும் கிண்டி தொழிற்பேட்டையிலும், கிண்டித் தொடர்வண்டி நிலையத்தின் இரு புறங்களிலும் மதுக்கடைகள் இன்றும் உள்ளன. சென்னைக் கோயம்பேடு பேருந்துநிலையம், சந்தை, காளியம்மன் கோவில் தெருவில் வடக்கே கோயம்பேடு முதல் தெற்கே விருகம்பாக்கம் வரை உள்ள பகுதிகளில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு மதுக்கடைகளைத் திறந்துள்ளதாக விளக்கம் அளித்த அறிவிலி அமைச்சர் அறிவாரா? கள்ளச்சாராயம் காட்டில் கிடக்கும் பாழ்ங்கிணறு; அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் வீட்டு முன்வாசலிலும் புறவாசலிலும் தோண்டப்பட்ட படுகுழிகள் என்று. இரவில் உறங்கிக் காலையில் கண்விழித்து வாசலுக்கு வரும் பிள்ளைகள் படுகுழியில் விழுவதுபோல் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர் இளைஞர்களும் சிறார்களும். கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் மதுவுக்கு அடிமையாகிவிட்டதை ஊடகச் செய்திகளில் பார்க்கலாம். கள்ளச்சாராயம் இருந்தபோது வெட்கப்பட்டு அச்சப்பட்டுக் குடித்த குடிகாரர்கள் ஒருசிலர் இருந்தனர். இப்போது திருநாள், திருவிழா, திருமணம், பிறந்தநாள், இறந்தநாள் எல்லாவற்றிலும் வெளிப்படையாக மதுவிருந்து நடக்கிறது. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினரால் பெட்டிபெட்டியாக வாங்கப்படும் சாராயம் மாளிகைப்புறம் முதல் குடிசைப்பகுதிகள் வரை வெள்ளமாகப் பாய்கிறது. தேர்தல் நாள், வாக்குகளை எண்ணும் நாளில் பெயருக்குத் தான் சாராயக் கடைகள் மூடல். அதற்கு முந்திய நாளே பெட்டி பெட்டியாய் வாங்கிப் பதுக்கி வைத்திருக்கும் பலர் தங்கள் கட்சியின் வெற்றியைக் குடித்தே கொண்டாடிச் சாலையில் படுத்தே கிடக்கின்றனர். குடிவெறியில் நிகழ்ந்த விபத்துக்கள், குற்றங்கள் குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவருக்குத் தண்டம் விதிப்பது, குடிவெறியில் வெட்கமின்றிச் சாலையில் நின்றும் கிடந்தும் பிதற்றுவோரின் அட்டூழியங்கள் ஆகியவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு, தீபாவளிக்குத் தமிழ்நாட்டில் இத்தனை நூறு கோடி ரூபாய்களுக்குச் சாராய விற்பனை என்றும், மதுரை மண்டலம் மதுவிற்பனையில் முதலிடம் பிடித்தது என்றும் அரசு தரும் செய்திகளையும் வெட்கமின்றி ஊடகங்கள் வெளியிடுகின்றன. சாராயக் குடியால் விளையும் தீங்குகள், குடிப்பவரின் குடும்பத்துக்கு ஏற்படும் பொருளாதார அழிவு, சமுதாயச் சிக்கல்கள் ஆகியன குறித்து ஒரேஒரு ஐந்துநிமிடக் கதையாவது எழுதிப் படத்துடன் விளக்கக் குறிப்புடன் ஒளிபரப்பி இருக்குமா எந்தச் செய்தித் தொலைக்காட்சியும்?

தேர்தல் காலத்தில் பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மதுவிலக்கு, மதுஒழிப்பு எனப் பொய்யான உறுதிமொழிகளைக் கூறும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் அதை மறந்துவிடும். மதுவிலக்கு வேண்டும் என்போரை அச்சுறுத்தும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவே முதல் கையொப்பம் இடுவோம் என 2016ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலின்போது திமுக உறுதியளித்தது. ஆனால் ஆட்சிக்கு வரவில்லை. 2021ஆம் ஆண்டுத் தேர்தல் சூழலில் அதிமுகவுக்கு மக்களிடம் கடும் எதிர்ப்புள்ளதை அறிந்த திமுக அடுத்த ஆட்சி எப்படியும் நம் கைகளில்தான் என்பதை அறிந்ததால் 2016இல் கூறியதுபோல் மதுவிலக்குப் பற்றி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. அவர்கள் நினைத்ததுபோல் ஆட்சி அவர்களிடமே வந்துள்ளது. மதுவிலக்குப் பற்றிப் பேச்சு மூச்சில்லை.

இதற்கு இன்னொரு காரணம் உண்டு. தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுவகைகள் அனைத்தும் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் நடத்தும் மதுஆலைகளில் இருந்தே வாங்கப்படுகின்றன. இதனால் மதுவிலக்குப் பற்றி இந்த இரு கட்சிகளும் கூறும் உறுதிமொழிகள் நீர்மேல் எழுத்துப் போன்றவையே. தமிழகத்தில் மது விற்பனை தொடங்கி 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. தனியார் விற்ற சாராயத்தை அரசே விற்பதே இரு கட்சிகளும் செய்துள்ள புரட்சி அல்லது திராவிடச் சாதனை எனக் கூறலாம். கொரோனா ஊரடங்கின்போது கடைகள், கல்வி நிலையங்களை மூடிய அரசு தேநீர்க் கடையைத் திறக்குமுன்னே மதுக்கடைகளைத் திறந்து வைத்திருந்தது குடிமக்களின் நலனில் அவர்களுக்கு உள்ள அக்கறையைக் காட்டும்.

கள் சாராய ஒழிப்பை ஒரு கொள்கையாக வைத்திருந்தவர் காந்தியடிகள். அவர் புகழைப் பாடுவதாகக் கூறும் காங்கிரசுக் கட்சி இன்று சாராயக் கடைகளை நடத்தும் திமுக அரசின் கூட்டணியில் உள்ளது. முழு மதுவிலக்கை வலியுறுத்தித் திருநெல்வேலி மாவட்டம் உவரி முதல் சென்னை வரை நடைப் பயணத்தை நடத்திய வைகோ இன்று திமுக உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினர். குசராத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் பாரதிய சனதாக் கட்சி அது ஆளும் பிற மாநிலங்களில் அதை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் மதுவிலக்கைப் பற்றிப் பேசவே இல்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என உறுதியாகக் கூறும் பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியன ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. தங்கள் ஆட்சியில் மது விற்பனையைத் திறம்பட நடத்தும், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது குடிசைகள் வரை மதுவை வெள்ளமாகப் பாயவிடும் இரு திராவிடக் கட்சிகளும் தங்கள் ஊடக வலிமையால், பாமக, நாம் தமிழர் கட்சி மாநாடுகளின்போது தொண்டர்கள் ஓரிருவர் மதுகுடிப்பதைப் பெரிதுபடுத்தி அவர்களின் மதுவிலக்குக் கொள்கையைச் செய்ய முடியாத ஒன்று எனக் கூறி நீர்த்துப் போகச் செய்கின்றன.

காலம் என்பது கறங்குபோற் சுழன்று கீழது மேலாம் மேலது கீழாம் என மனோன்மணியம் நாடகத்தில் சுந்தரம்பிள்ளை கூறியிருப்பார். அதேபோல் சாராய ஆலைக்காரர்கள் எல்லாரும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் தொடங்கி நடத்துகின்றனர். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளைத் திறம்பட நடத்தி, மக்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய அரசு சாராயக் கடை நடத்துகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மது குடித்தால் மக்களின் மதி மயங்கும். தன் சீரழிவுக்கு என்ன காரணம் என எண்ணிப் பார்க்காமல் அடிமையாகக் கிடப்பர். அதனாலேயே மக்களைக் குடிவெறியில் வைத்துள்ளது அரசு என்கின்றனர். எது எப்படி இருப்பினும் முழு மதுவிலக்குக் கொண்டுவரும் வரை மதுவிலக்குத் துறை என்பதை மது விற்பனைத் துறை என்றாவது மாற்றி வைக்கலாம். அப்படி வைக்கத் தயக்கமாக இருந்தால் மது இலக்குத் துறை என்றாவது வைத்துக்கொள்ளலாம்.

சே.பச்சைமால் கண்ணன்

2 கருத்துகள்:

  1. மதுவிலக்குக் கொள்கைக்கு எங்கும் வெற்றியடைந்த வரலாறு இல்லை. கற்பனையான விலக்கு நடைமுறைக்கு ஏற்புடையது அன்று. அரசுகளுக்கு அறிவுரை கூறும் வேளையில் சமுதாய மாற்றத்திற்கு வித்திட ஏதேனும் செய்யனும். குடும்பம், அக்கம் பக்கம், சுற்றமும் நட்பும் என எந்த ஒன்றும் ஒரு குடி-மகனை மதுப்பழக்கத்தைக் கைவிடச்செய்யவில்லை. மனிதனை குடி-மகனாக மாற்றிய பெருமை இந்த சமுதாயத்தையே சாரும். அரசின் மீது மட்டும் குற்றம் சுமத்திக் கடந்துசெல்வது சிக்கலைத்தீர்க்க உதவாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக் கூறியதற்கு நன்றி.
      அரசே மதுக்கடை நடத்தி அனைவரையும் குடிக்கச் செய்வதற்கும், சட்டத்துக்குப் புறம்பாக ஒருசிலர் ஒதுக்குப்புறத்தில் மதுவிற்றுக் கொஞ்சம்பேரைக் குடிக்க வைப்பதற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியவில்லையா நண்பரே...

      நீக்கு