ஞாயிறு, 8 டிசம்பர், 2024

சொல்லறி திறன் கட்டம் 37


தி

1

ரு

ச்

 

செ

2

ந்

தூ

3

ர்

 

ளை

வே

4

ரு

 

 

ங்

 

 

சி

5

 

லூ

வே

6

ய்

ங்

கு

ல்

 

 

ர்

ங்

 

 

 

 

டை

ட்

மு

7

 

8

ண்

ம்

பா

9

டி

 

டை

ற்

கூ

10

 

 

 

ண்

 

11

 

ரை

ம்

யா

12

 

13

டி

த்

ம்

 

 

ளி

தொ

14

 

ச்

 

வு

 

 

15

டு

 

ண்

 

சே

16

று

 

சூ

17

 

வி

பூ

18

ண்

டி

ரி

 

கா

19

றை

வீ

டு

 

விடைகள்

இடமிருந்து வலம்: 1. கடலோரத்தில் முருகன் கோவில் உள்ள ஊர் (திருச்செந்தூர்), 6. புல்லாங்குழலுக்கு இந்தப் பெயருமுண்டு (வேய்ங்குழல்), 8. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ள இடம் (கண்ணம்பாடி), 13. நல்ல கட்டுமானத்துக்கு வலுவான (அடித்தளம்) இருக்க வேண்டும், 16. சகதியைக் குறிக்கும் இன்னொரு சொல் (சேறு), 18. கிருஷ்ணா ஆற்றின் நீர் தமிழ்நாட்டுக்கு முதலில் வந்துசேரும் ஏரி (பூண்டிஏரி), 19. சுண்ணாம்பால் கட்டப்பட்ட வீடு (காறைவீடு).

வலமிருந்து இடம்: 4. நேரம் என்பதைக் குறிக்கும் வேறு சொல் (வேளை), 7. சுண்ணாம்புச் சாந்தின் வலிமைக்குக் கடுக்காய், பதநீர் ஆகியவற்றுடன் இதையும் சேர்த்தனர் (முட்டை), 12. நாம் என்பதைக் குறிக்கும் இன்னொரு சொல் (யாம்), 14. சேறு என்பதற்குத் திருநெல்வேலி வழக்கில் (தொளி) என்று பெயர்.

மேலிருந்து கீழ்: 1. சங்க இலக்கியத்தில் தமிழ்நாட்டின் வடக்கெல்லையாகக் குறிப்பிட்டுள்ள மலை (திருவேங்கடம்), 2. சேர்த்து எழுதுக. செம்மை+குளம் = (செங்குளம்). 3. சிறுமழை (தூறல்), 4. அகழியின் நடுவில் கோட்டை அமைந்துள்ள ஊர் (வேலூர்), 5. தேங்காயின் ஓடு (சிரட்டை), 7. தலைவாயிலுக்கு முன் (முற்றம்) அமைத்தது தமிழர் கட்டுமானக் கலையின் தனிச்சிறப்பு, 9. 2011 திசம்பர் 31ஆம் நாள் தானே புயலால் இந்த ஊரில் உள்ள தாவரவியல் பூங்கா உருக்குலைந்தது (பாண்டிச்சேரி), 10. வீடு, கட்டடம் ஆகியவற்றின் மேற்பரப்பு (கூரை) எனப்படும், 11. வீட்டு நிலையில் பொருத்தப்படுவது (கதவு) ஆகும், 12. பண்டைக்காலத்தில் இருந்த இவ்விலங்கின் உருவம் கோவில் கற்றூண்களில் செதுக்கப்பட்டுள்ளது (யாளி), 14. பண்டைத் தமிழ்நாட்டின் துறைமுகங்களில் ஒன்று (தொண்டி), 15. நெல்லில் கால்நடைகளுக்கு உணவாகும் பகுதி (தவிடு), 17. ஊரில் புகுந்து கொள்ளையிடலுக்குப் பெயர் (சூறை).

கீழிருந்து மேல்: 18. பூண்டு என்பதன் சுருக்கம் (பூடு).

வியாழன், 5 டிசம்பர், 2024

தென்பெண்ணை மக்களுக்கு வஞ்சனை; இஃதே திராவிட நீதி

2023 திசம்பர் வெள்ளத்தில் திருநெல்வேலி

1992ஆம் ஆண்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைக் கடும் புயல் தாக்கியது. பெருமழை வெள்ளத்தால் இரு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான குளங்களின் கரைகள் உடைந்தன. குளத்துத் தண்ணீரும் ஊருக்குள் வந்ததால் மண்சுவர்கொண்ட வீடுகள் இடிந்தன. பயிர்ச்சேதம், வீடுகள் இடிந்து சேதம் என அந்நாளில் கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் வாழை பயிரிடும் பரப்பில் பெருமளவைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல இலட்சம் வாழைகள் சாய்ந்தன. அப்போதெல்லாம் குளங்கள் வயல்வெளிகள் அழிக்கப்படவில்லை. கால்வாய்கள் மூடப்படவில்லை. இதனால் புயலும் மழையும் வெள்ளமும் பெருமளவில் இருந்தபோதும் அந்த அளவுக்குப் பாதிப்பும் இழப்பும் ஏற்படவில்லை என்றே சொல்லலாம். 

2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 15 நாட்களில் தொடர்ந்து மழை பெய்தது. அந்த 15 நாளில் சூரியனை ஒருமுறைகூடக் காணமுடியவில்லை என்பது வரலாற்றில் குறிப்பிடத் தக்கது. தெற்கில் வறண்ட பகுதிகளாகக் கூறப்படும் நான்கூனேரி, சாத்தான்குளம், இராதாபுரம் வட்டங்களில்தான் அதிக மழை பெய்தது. இந்தப் பகுதிகளின் ஆண்டுச் சராசரி மழையளவைவிட அதிகமாக இந்த 15 நாளில் மட்டும் பெய்தது என்பதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்க மழையாகும். அதன்பிறகு தென்மாவட்டங்களில் ஆண்டுதோறும் பருவமழை பெய்கிறதோ இல்லையோ, வறட்சி அடிக்கடி நிலவுகிறது. 

2022 சனவரியில் பொங்கலையொட்டித் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போதும் தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைகளும் நெற்பயிரும் தண்ணீரில் மூழ்கின. அதன்பின் 22 மாதங்கள் கொடிய வறட்சி நிலவியது. 2023 மே மாதத்தில் தாமிரபரணிக் கால்வாயில் தண்ணீர் வரவில்லை. ஆண்டுக்கு மூன்று பூ நெல் விளையும் பகுதிகளில் நெல்லும் வாழையும் பயிரிடவில்லை. வயற்காடெங்கும் காய்ந்து கிடந்தது. ஆற்றுக்குள்  கொஞ்சமாய்க் கிடந்த தண்ணீர் வெந்நீர்போல் கொதித்தது. இந்தச் சூழலிலும் தாமிரபரணியிலும் அதன் துணையாறுகளிலும் மணல் அள்ளுவதைத் திருட்டு மாடல் அரசு நிறுத்தவில்லை. வெள்ளத்தின்போது படிந்த மணலைத் துடைத்துத் துடைத்தும், கரையோரங்களில் படிந்த குறுமணலைத் துளைத்துத் துளைத்தும் அள்ளினர். 

அதே காலத்தில் மலைகள், குன்றுகள், பொற்றைகள், பாறைகள் ஆகியவற்றைத் தகர்த்தும் உடைத்தும் கற்களைத் திருவனந்தபுரம் அருகே கவுதம் அதானிக்காகக் கட்டப்பட்டுவரும் துறைமுகத்துக்கு அனுப்பினர். கல்குவாரிகளை நடத்துவோர் எல்லாம் திமுகவினர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.  பத்தாண்டு வறட்சியைக் கூடத் தாங்கி நின்று பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனையோலைகள் ஆகியவற்றைத் தரும் பனைகள் கூட இந்த 22 மாத வறட்சியில் பட்டுப்போய்க் கொண்டைசாய்ந்தன. வாழ்நாளில் ஒருமுறை கூடத் தண்ணீர் பாய்க்கத் தேவையில்லாப் பனைகளே பட்டுப்போகும்போது, கிழமைக்கொருமுறை தண்ணீர் பாய்க்க வேண்டிய தென்னையின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ? பல பத்தாண்டுகளாகப் பேணி வளர்த்த இலட்சக்கணக்கிலான தென்னைகளும் பட்டுப்போயின. 

திருநெல்வேலியும் தூத்துக்குடியும் தென்காசியும் எதிர்காலத்தில் பாலையாய்ப் போகும் என்று மக்கள் எண்ணிக் கலங்கும் நேரத்திலும் திராவிடத் திருடர்கள் கற்களை உடைப்பதை நிறுத்தவில்லை. தரைக்குக் கீழ் விட்டால் அமெரிக்கா வரை உடைத்துத் தோண்டி விடுவர் என்பதைப் போல மக்களின் வாழ்க்கைக்குக் குழிதோண்டினர். இந்நிலையில் நம்மை வாழ்விக்க ஒரு மழை பெய்யாதா என்று மக்கள் ஏங்கினர். 

2023ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் புரட்டாசி ஐப்பசி மாதங்கள் கடந்தன. கடும் மழை பெய்யும் கார்த்திகை மாதத்திலும் மழை பெய்யவில்லை. கார்த்திகை நடுவில் சென்னையில் பெருமழை பெய்து வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்ட போது, இந்த மழை நம்மூரில் பெய்யக்கூடாதா? என்று ஏங்கினர். கார்த்திகை இறுதிநாளில் பெய்த பெருமழை அந்த ஏக்கத்தைத் தீர்த்துப் பெருந் தாக்கத்தை ஏற்படுத்திற்று. கடலோரக் காயல்பட்டினத்தில் 95 செ.மீ., நடுநிலப்பகுதியில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் 67 செ.மீ., மேற்கு மலைத்தொடரில் 45 செ.மீ., என ஒரேநாளில் பெருமழை பெய்தது. இதன் விளைவாக அனைத்து ஆறுகளிலும் கரைபுரண்டு வெள்ளம் பாய்ந்தது. மிகப்பெரும் ஊர்திகள் இறங்கி மண்ணையும் மணலையும் அள்ளியதால் தேய்ந்துபோயும், வெட்டப்பட்டும் இருந்த கால்வாய்கள், குளங்களின் கரைகள் ஆங்காங்கே உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளப் பேரழிவு ஏற்பட்டது. இதற்கு முன்னும் இதைவிடப் பெருமழை பெய்து, இதைவிடப் பெரிய வெள்ளம் பாய்ந்தபோதும் இந்த வெள்ளத்தில் பாதிப்பு அதிகமாகியதற்குப் பல காரணங்கள் உள்ளன. 

முதற்காரணம் நகர்மயமாக்கலால் வயல்களெல்லாம் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக்கப்பட்டது. இதனால் இரண்டு தீமைகள் ஏற்பட்டுள்ளன. ஒன்று இந்த வயல்களில் ஆண்டுதோறும் விளையும் அளவுக்கு நெல் விளைச்சல் குறைந்துவிடும். இன்னொன்று இந்த வயல்களில் மூன்று மாதக்காலத்துக்குத் தேங்கி நின்று பயிர்கள் குடிக்கும் நீராகவும், நிலத்தடியில் இறங்கும் நீராகவும் இருக்க வேண்டிய நீர் இப்போது அப்பகுதியில் வெள்ளமாகத் தேங்கி நிற்கும். இல்லாவிட்டால் பள்ளமான பகுதியிலோ ஆற்றிலோ வெள்ளமாகப் பாயும். 

வயல்கள் அழிக்கப்பட்டபோதே அந்த வயல்களுக்குத் தண்ணீர் பாய்க்கும் கால்வாய்களும் அழிக்கப்பட்டன. இந்தச் சூழலில் மடைவழியே வெளியேறும் தண்ணீர் எங்காவது பாய்ந்தாக வேண்டும். பாய்ந்த நீர் எங்காவது வடிந்தாக வேண்டும். முன்பு வயலில் தேங்கி நெல்லாக விளைந்த நீர், இப்போது வெள்ளமாக ஆற்றில் பாய்ந்து பேரழிவை உண்டுபண்ணுகிறது. 

இரண்டாவது காரணம் வயற்காடே அழிந்துபோய் விட்டது. இந்தக் குளம் நிரம்பி என்ன பயன் என்று கருதி அதன் கரையை வெட்டிவிடும் போக்குச் சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நிலவுகிறது. இதனால் வயலில் பாய்ந்தது போகக் குளத்திலும் பெருமளவு தேங்கி நிற்க வேண்டிய தண்ணீருக்கும் இங்கே நிற்க நிலையமில்லை, நிலமில்லை. அந்தத் தண்ணீரும் எங்காவது ஓடிப்போய் ஆற்றையே புகலிடமாகக் கொள்கிறது. 

மூன்றாவது காரணம் மழை பெய்யும்போது பாயும் நீரைத் தடுத்தும் ஈர்த்தும் மண்ணுக்குள் செலுத்த வேண்டிய மரங்களை வெட்டியழித்தது. வாழ்நாளில் ஒருமுறைகூடத் தண்ணீர் ஊற்ற, பாய்க்கத் தேவையில்லாப் பனைகளைக் கூடத் திராவிடத் திருடர்கள் விட்டுவைக்கவில்லை. செங்கற்சூளைகளில் எரிவிறகாக வைக்கப் பனைகளை 200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் வெட்டி விற்கும் இழிநிலை பனையை அரசின் தாவரமாகக் கொண்ட இந்தத் தமிழ்நாட்டில் மட்டுமே நிலவுகிறது. வரப்புகளில் எல்லையாகவும் வேலியாகவும் இயற்கையில் புயற் காற்றுத் தடுப்பானாகவும், மண்ணரிப்புத் தடுப்பானாகவும் விளங்கிய கோடிக்கணக்கான பனைகள் ஈவிரக்கமின்றி வெட்டிச்சாய்க்கப்பட்டுச் செங்கற்சூளைகளில் விறகாக எரிக்கப்பட்டன. இதேபோல் வெள்ளத்தடுப்பு, மண்ணரிப்புத் தடுப்பு, காற்றுத்தடுப்பு, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உணவு எனப் பன்னோக்கில் ஆற்றங்கரை, கால்வாய்க்கரை, குளத்தங்கரை, ஊருணிக்கரை ஆகியவற்றில் வளர்க்கப்பட்ட ஆல் அத்தி அரசு நாவல் புளி வேம்பு மருது ஆகிய மரங்களை வெட்டியழித்துவிட்டனர். கோவில்களைச் சுற்றிக் காவு என்ற பெயரில் வளர்ந்திருந்த மரங்களையே காவுகொண்டுவிட்டனர். அடவிகளை அடக்கமாக அழித்துவிட்டனர். பனை, கள்ளி கற்றாழை, காரை, சூரை, ஆல், அத்தி, அரசு ஆகியன மழைக்காலத்தில் பெருமளவு நீரை நிலத்தில் இருந்து உறிந்துகொண்டு கோடைக்காலத்தில் அவற்றைக்கொண்டே உயிர்வாழும். மனிதன், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு இரையாகி வாழ வைக்கும் என்பது அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டிய உண்மை. இவற்றை வளர்த்தால் பெருமளவு நன்மை கிடைக்கும் என்பதும் நம் வாழ்வில் கண்ட உண்மை. 

நான்காவது காரணம் தேவையற்ற நுகர்வுச் சீரழிவின் விளைவாக நாள்தோறும் ஏராளமான நெகிழிக்கழிவுகள், சாராயப் புட்டில்கள், தெர்மகோல் அட்டைகள், நெகிழிச்சாக்குகள் குவிகின்றன. இவற்றை மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி எனப்படும் உள்ளாட்சி அமைப்புகள் முறையாகச் சேகரிப்பதில்லை. அவர்கள் சேகரிப்பதற்குத் தொட்டிகளை வைத்திருந்தாலும் அந்தத் தொட்டிக்குள் போடாமல் ஆற்றில் குளத்தில் கால்வாயில் வாய்க்காலில் போடும் முழுமூடர்கள் இங்குக் கோடிக்கணக்கானோர் உள்ளனர். இப்போது மட்கும் குப்பை, மட்காக் குப்பை என இருவகைகளாய்த் தொட்டி வைத்துச் சேகரிக்கும் முறை இருந்தாலும் அதன்படி பிரித்து யாரும் போடுவதில்லை. மட்கும் குப்பைகளை மட்கச் செய்து உரமாகப் பயன்படுத்துவதும் இல்லை. மட்காக் குப்பைகளைப் பிரித்தெடுத்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதும் இல்லை. தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் போடப்பட்ட கழிவுகள் கோடைக்காலத்தில் காற்றில் பறந்து நீர்நிலைகளுக்கும் நீரோடும் பாதைகளுக்கும் சென்று ஒதுங்குகின்றன. இவை மழைக்காலத்தில் நிலத்துக்குள் தண்ணீர் செல்வதைத் தடுப்பதுடன், ஆறு கால்வாய் ஓடை ஆகியவற்றில் நீர் பாய்வதையும் தடுக்கின்றன. முடைப்புல்லும் முக்குறுணித் தண்ணீரைச் செறுக்கும் என்பது பழமொழி. முடைப்புல்லே முக்குறுணித் தண்ணீரைச் செறுக்கும்போது மூட்டைமூட்டையாகக் குவித்துள்ள கழிவுகள் சிதறிச்சென்று அடைக்கும்போது எவ்வளவு தண்ணீர் செறுக்கப்படும் என்பதை எண்ணிப் பார்க்க மலைப்பாக இருக்கும். அதன் விளைவுகளைக் கண்முன் காட்டுவதே இந்த வெள்ளப்பெருக்கும், அதனாலுண்டாகும் பேரழிவும். 

ஐந்தாவது காரணம் தரையெங்கும் சிமென்டால் ஆன வன்காறையால் மூடித் தண்ணீரை நிலத்துக்குள் புகாமல் செய்திருப்பதாகும். இன்று சட்டப்பேரவைத் தலைவராக உள்ள அப்பாவு 1996 முதல் 2001 வரை தமிழ்மாநிலக் காங்கிரஸ் சார்பிலும், 2001 முதல் ஐந்தாண்டுகள் கட்சியில் இல்லாமல் தன்விருப்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் சொன்ன உண்மைகள் இன்றும் பொருந்துவனவாகவே உள்ளன. 1996ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சரான பின் அவர் எந்தத் திட்டங்களைச் செயல்படுத்தினாலும் பெருமளவு சிமென்ட் பயன்படுத்தும் திட்டமாகவே இருக்கிறது என்றார். அதற்கும் ஒரு பெருங்காரணம் உள்ளதாகக் கூறும் அவர், இந்தியா சிமென்ட் உட்பட எல்லாச் சிமென்ட் நிறுவனங்களிலும் கருணாநிதிக் குடும்பத்தினருக்குப் பெரும்பங்கு உள்ளதாகத் தெரிவித்தார். சிற்றூர்களில் கூட சிமென்ட் வன்காறைச் சாலைகள் அமைப்பது, நகர்ப்புறங்களில் நடைபாதைகளில் பாவிய கற்களை அகற்றிவிட்டுச் சிமென்ட் பாளங்களைப் பதிப்பது, சாலை நடுத்தடுப்பைப் பெரிய அரண்போல அகலமாகவும் உயரமாகவும் சிமென்ட் வன்காறையால் அமைப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். தேவையில்லாத அளவுக்கு இந்த சிமென்ட் பயன்பாடு போவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகச் சாலை மைல்கற்களைச் சொல்லலாம். ஒரு காலத்தில் மைல் கல் என்பது வெட்டப்பட்ட கற்களை நாட்டி வைத்து அந்தக் கற்களிலேயே எண்களையும் ஊர்ப்பெயரையும் வெட்டிப் பொறித்து வைப்பதாக இருந்தது. பிற்காலத்தில் கல்லில் வெள்ளையடித்துக் கருப்பு வண்ணத்தால் எழுதி வைத்தனர். கருணாநிதியின் சிமென்ட் காலத்தில் நல்ல நிலையில் இருந்த மைல்கற்களைக் கூடப் பிடுங்கியும் உடைத்தும் எறிந்துவிட்டு சிமென்ட் பாளங்களை நாட்டி அவற்றில் எழுதிவைக்கும் போக்குத் தொடங்கியது. அது இன்றளவிலும் நீடிக்கிறது. இப்போது ஊர்ப்புறம் நகர்ப்புறம் என்றில்லாமல் எப்புறமும் சிமென்ட் வன்காறையால் மூடப்பட்ட புறமாகவே காட்சியளிக்கின்றன. நடை மேம்பாலம், சுரங்கப்பாதை, சுரங்கப்பாலம், சாலை மேம்பாலம், ரயில் மேம்பாலம், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை, மேம்பால மெட்ரோ ரயில், சிமென்ட் கால்வாய் என சிமென்ட் பயன்பாடு எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. ஏற்கெனவே தன்தரையில் இருந்து சல்லிக்கற்களைப் போட்டு சிமென்ட் வன்காறைச் சாலை அமைத்தனர். அப்போதே ஊருக்குள் தண்ணீர் தேங்கியது. இப்போது சிமென்ட் கல்லால் ஆன பாதை அமைக்கின்றனர். அது சாலையை இன்னும் 4 விரற்கிடை அளவுக்கு உயர்த்துகிறது. மழைக்காலத்தில் ஊருக்குள் தண்ணீரும் கழிவுநீரும் தேங்கி வீட்டுக்குள் புகுந்து ஒருவருக்கொருவர் சண்டைபோட வகை செய்வதே இதன் நோக்கமோ என்று ஐயுறத் தோன்றுகிறது அரசின் செயல். 

ஆறாவது காரணம் கால்வாய்களின் கரைகளை சிமென்ட் வன்காரையால் கட்டியது மட்டுமல்லாமல் அடிப்பரப்பையும் சிமென்ட் வன்காறையால் மூடி நிலத்துக்குள் நீர்செல்லவிடாமல் தடுத்ததாகும். மண் கரையால் ஆன கால்வாய் இருந்தபோது அதில் பாயும் தண்ணீரின் ஒரு பகுதி அடிப்பரப்பு, கரைகள் வழியே நிலத்துக்குள் ஊடுருவும். இதனால் வழியோரமெல்லாம் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். சிமென்ட் கால்வாய் வந்தபின் தண்ணீர் விரைந்தோடுகிறது. நிலத்தில் நீர் இறங்கும் செறிவூட்டல் நிகழவில்லை. இந்தக் காரணங்களையெல்லாம் நம் சிற்றறிவால் உய்த்துணர்ந்து அறிவித்தாலும், ஆற்றுமணலை அள்ளி விற்கலாம், புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா கொடுத்துக் கோடி கோடியாகப் பணம் சுருட்டலாம் என்றெல்லாம் ஆட்சியாளர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் பேரறிவு (பேரழிவு எண்ணம்) கொண்ட அதிகாரிகள், பொறியாளர்களுக்குத் தெரியாது. இதை எண்ணிப் பார்க்கும் திறம் அவர்களிடம் இல்லை. அதனால்தான் வெள்ளப் பேரழிவைத் தடுக்க சிமென்ட் கால்வாய்கள் கட்டுவது என்று கூறிப் பல்லாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கி ஏப்பமிடும் திட்டங்களாகவே அவர்கள் வரைந்தளிக்கின்றனர். மடையர்களான ஆட்சியாளர்களும் பணம் வந்தால் போதும் என்று அவற்றை மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர். 

ஏழாவது காரணம் ஆற்றில் ஏற்கெனவே இருந்த மணலைத் தோண்டி அதை ஆழப்படுத்தி விடுவதால் கால்வாய்க்குத் தண்ணீர் ஏறிப் பாயாததாகும். அப்படியே ஏறிப் பாய்ந்தாலும், தேய்ந்தும் வெட்டப்பட்டும் இருக்கும் கரைகள், கழிவுகளால் அடைப்பு ஆகிய காரணங்களால் கால்வாய் உடைத்து வெள்ளம் மீண்டும் ஆற்றுக்கே போய்விடுகிறது. மட்பாண்டத் தொழிலாளர்கள் என்றுகூறித் திமுக ஒன்றியச் செயலாளர்கள் தங்கள் செங்கற்சூளைகளுக்கு அளவின்றிக் குளத்துமண்ணை வெட்டியெடுத்துவிட்டனர். இதனால் ஒவ்வொரு குளமும் படுபாதாளமாக உள்ளது. இயல்பான மழைப்பொழிவுக் காலத்தில் இந்தக் குழிகள் நிரம்பாமல் இருப்பதால் தண்ணீர் மடையேறிப் பாய்வது கிடையாது. நாலாண்டுகள் மடையேறிப் பாயாமல் நிலத்தைப் பயிர்வைக்காமல் விட்டுவிட்டால் முட்புதர்கள் முளைத்து அடர்ந்து வளர்ந்து இனிப் பயிர்வைக்க முடியாது என்கிற நிலைக்கு நிலம் தரிசாகி விடுகிறது. ஏதாவதோர் ஆண்டில் அதிக மழை பெய்து குளம் நிரம்பினாலும் முட்புதர்கள் அடர்ந்த நிலத்தை உடனடியாகத் திருத்திப் பயிரிட முடியாத நிலை உள்ளது. ஆகத் தண்ணீர் இல்லாவிட்டாலும் பயிரிட முடியாது. குளமே நிரம்பி வடிந்தாலும் பயிரிட முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்கள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த ஆட்சியாளர்கள். இதையும் இவர்களின் சாதனைப் பட்டியலில் சேர்த்தே ஆக வேண்டும். 

எட்டாவது காரணம் பாசனப் பயன்பாட்டுக்கு மட்டுமே என்றிருந்த ஆற்றுநீரைப் பெருநிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம், குறிப்பிட்ட விழுக்காடு பங்கு என்று வாங்கிக்கொண்டு அவற்றின் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு வழங்கிச் சொந்த மக்களுக்கு இரண்டகம் செய்யும் இரு திராவிட அரசுகளின் போக்காகும். சான்றாக ஒரு தொழிற்சாலை குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாகக் கொண்டாலும் ஆண்டுக்கு 3 கோடியே 65 இலட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்கும். அப்படியென்றால் ஏற்கெனவே பாசனக் கட்டமைப்பில் உள்ள நிலங்களுக்கு இதே அளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். அந்த நிலங்கள் தண்ணீரின்றித் தொடர்ந்து தரிசாகும். இப்படிச் செய்து செய்தே தமிழ்நாட்டில் மூன்று பூ விளையும் ஆற்றுப் பாசனப் பகுதிகளில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தரிசாக்கி விட்டனர். இதனால் அவர்களின் பல்நோக்குத் திட்டம் நிறைவேறுகிறது. ஒன்று நிலம் தரிசாகிறது. அதை அடிமாட்டு விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாக்குகின்றனர். அந்த வழியே செல்லும் கால்வாயும் வாய்க்காலும் மூடப்படுகிறது. இதனால் வீட்டுமனை ஆகாமல் இதே வடிநிலத்தில் உள்ள நிலங்களும் தரிசாகும். இதன் ஒட்டுமொத்த விளைவாக அப்பகுதி நிலங்களைக் குறைந்தது நூறு ஏக்கர், அதிக அளவில் பல்லாயிரம் ஏக்கர் வளைத்துத் தொழிற்சாலை முதல் தொழிற்பூங்கா வரை அமைக்கின்றனர். இந்தத் தொழிற்சாலைகளில் ஆளுங்கட்சியினருக்குப் பங்குண்டு என்பது குறிப்பிடத் தக்கது. இப்படித் தாங்களே பங்காளியாய் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தான் ஒரு நாளைக்குப் பல இலட்சம் லிட்டர் ஆற்றுத் தண்ணீரை லிட்டர் ஒரு காசு முதல் பத்துக் காசு வரை என்கிற குறைந்த விலைக்குக் கொடுப்பதாகப் புரிந்துணர்வு உடன்பாடு செய்துகொள்கின்றனர். எல்லாவற்றுக்கு மேலாக வறட்சி, நகர்மயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றால் நிலத்தை விற்ற உழவர்களும், நிலத்தில் வேலை செய்யும் வாய்ப்பை இழந்த தொழிலாளர்களும் மேற்கண்ட தொழிற்சாலைகளில் எந்தப் பணிப்பாதுகாப்புமின்றி அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர். 

எட்டாவது காரணம் கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் என்ற பெயரில் ஆற்றுநீரை அதன் பாசனப் பகுதிகளுக்கு வழங்காமல் தேவையற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதாகும். தாமிரபரணி ஆற்றின் நீர் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் குழாய்களில் கொண்டுசெல்லப்படுவதையும், காவிரி நீர் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்குக் குழாய்களில் கொண்டுசெல்லப்படுவதையும் இவ்வகையில் சேர்க்கலாம். சான்றாகச் சேரன்மாதேவியிலும், பத்தமடையிலும் இருந்து குழாய்கள் மூலம் நான்கூனேரி, இராதாபுரம், திசையன்விளை வட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இவர்கள் கூட்டுக்குடிநீர்த் திட்டம் தீட்டிக் கொண்டுசெல்லுங் காலத்துக்கு முன் இவ்வட்டப் பகுதிகளில் தண்ணீர் குடிக்காமலா இருந்தனர். அந்தப் பகுதிகளிலும் பச்சையாறு, கருமேனியாறு, நம்பியாறு, அனுமனாறு என ஆறுகள் உள்ளன. தென்காசி மாவட்டத்தில் சிற்றாறு, குண்டாறு ஆகியன உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாறு, குண்டாறு, வேம்பாறு ஆகியன உள்ளன. அவற்றின் நீர்வளத்தைக் காத்துப் பயன்படுத்தும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டுமேயொழியப் பொன்முட்டையிடும் கோழியை வயிற்றைக் கிழித்துக் கொல்வதுபோலத் தாமிரபரணியைக் கொல்லக் கூடாது. கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதிலும், அவற்றைப் பேணித் தொடர்ந்து செயல்படுத்துவதிலும் ஊழல்கள் நடப்பது ஒருபுறம். தொழிற்சாலைக்குத் தண்ணீர் கொண்டுபோவதை அறிந்து உழவர்கள் வெகுண்டு எழாமல் தடுக்கவே ஒரு கண்துடைப்பாகக் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்குத் தண்ணீரைக் கொண்டுசெல்லப்படுகிறது என்பது உறுதி. 

தாழையூற்று வட்டாரத்தில் தாமிரபரணித் தண்ணீர் விடாமல் குளங்களையும் கால்வாய்களையும் காயச் செய்து வயல்களையெல்லாம் தரிசாக்கி விட்டனர். இந்தியா சிமென்ட் சுண்ணாம்புச் சுரங்கப் பணிகளுக்காகவே இப்பகுதிகளுக்குத் தண்ணீர் விடாமல் காயச் செய்வதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மேற்கண்ட எட்டுக் காரணங்களும் என் சிற்றறிவுக்கெட்டியவரை நான் ஆராய்ந்தும் உய்த்தும் உணர்ந்ததாகும். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைப் பார்த்து இங்குக் கூறப்பட்ட காரணங்களே வைகைப் பாசனப் பகுதிகள், காவிரிப் பாசனம், பவானி, நொய்யல், அமராவதி ஆகிய அதன் துணையாறுகளின் பாசனம் உள்ள பகுதிகளுக்கும் பொருந்தும். தென்பெண்ணை, பாலாறு பாசனப் பகுதிகளுக்கும் பொருந்தும்.

2015இல் அடையாற்றில் கரைமீறிய வெள்ளம் பாய்ந்தது. மழையாலும் வெள்ளத்தாலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னையைச் சுற்றியுள்ள சாலைகள், தொடர்வண்டித் தடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. வேலூர், பெங்களூருக்குச் செல்லும் மும்பை நால்வழிச்சாலை மட்டும் மூழ்காமல் இருந்தது. அடையாற்றின் புறம்போக்கு நிலங்களை மட்டுமல்லாமல் ஆற்றுக்குள் வரை வீடுகள் கட்டடங்கள் கட்டி ஆவித்துக்கொண்டதே இதற்குக் காரணமாகும். இத்தகைய பேரிடருக்குப் பின் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் அருகில் இருந்த குடிசைப்பகுதிகள் அழிந்தன. எஞ்சியவற்றையும் அழித்துவிட்டு அங்கிருந்தோரை வேறு பகுதிகளில் குடியேற்றினர். ஆனால் இதில் இருந்து படிப்பினை கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டும் வகையில் ஆற்றின் தென்கரையில் பாலத்துக்கு மேற்புறம் காசாகிராண்ட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆற்றுக்குள்ளேயே மதில்கட்டிக் கரையை நிரப்பி அதில் கட்டப்பட்ட கட்டடம்தான் இது. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகுதான் கட்டப்பட்டுள்ளது. 

அடையாற்றில் பெருவெள்ளம் வந்ததுபோல் கூவம் ஆற்றிலும் வெள்ளம்பெருகி ஊருக்குள் பாயுங்காலம் நெடுந்தொலைவில் இல்லை. பூவிருந்தவல்லிக்கு வடக்கேயிருந்தே திருவேற்காடு, நுளம்பூர், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர் என வழியெங்கும் நெகிழிக் கழிவுகளும் கட்டட இடிபாட்டுக் கழிவுகளும் ஆற்றில் தட்டப்பட்டுள்ளன. கழிவுநீரும் ஆற்றில் கலக்கிறது. கரையாஞ்சாவடியில் திருவேற்காடு செல்லும் பாலத்துக்குக் கிழக்கே, மும்பை நால்வழிச்சாலையின் வடக்கே ஆற்றுக்குள் சுவர்கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் இடத்தை ஆவித்துள்ளது. பணம் வாங்கிக் கொண்டு ஆளுங்கட்சிக்குப் பக்கவாத்தியம் இசைக்கும் ஊடகங்கள் இதையெல்லாம் அறிந்திருக்க மாட்டார். அமைந்தகரையில் கூவம் ஆற்றங்கரையில் இருந்த எளிய மக்களையெல்லாம் வீடுகளை இடித்து வெளியேற்றி விட்டனர். பூவிருந்தவல்லிச் சாலைப் பாலத்தின் வடக்கே ஆற்றுக்குக் கிழக்கே ஒரு கிறித்தவ விசநரி கட்டியுள்ள கட்டடமே ஆற்றுக்குக் கரையாக உள்ளது. பாலத்துக்குத் தெற்கே ஆற்றுக்கு மேற்கே பெரிய வணிக நிறுவனம் கட்டியுள்ள சுவரே ஆற்றுக்குக் கரையாக உள்ளது. இங்கெல்லாம் ஆற்றுப்புறம்போக்கு இல்லையா? என்கிற வினா அனைவருக்கும் எழும். ஆறே இல்லை. பின்னே ஆற்றுப் புறம்போக்கு எங்கிருக்கும்? என்கிற எதிர்வினாவே இதற்கு விடையாக அமைகிறது. 

2015ஆம் ஆண்டுச் சென்னைப் பெருவெள்ளத்துக்குப் பிறகு கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயலாலும் மழை வெள்ளத்தாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பத்தாண்டுக்கு முன் எச்சரித்தும் அதிலிருந்து அரசும் மக்களும் படிப்பினை பெறவில்லை. 2023 திசம்பரில் சென்னையில் கோயம்பேடு அருகில் உள்ள சின்மயா நகரில் உள்ள வீடுகளில் மாரளவுக்கு வெள்ளம் பாய்ந்தது. ஐந்து நாள் கழித்தே வெள்ளம் வடிந்தது. சேறும் சகதியும் கழிவுநீரும் சாராயப் புட்டில்களும் நெகிழித்தாள்களும் இன்னும் என்னென்னவோ வீட்டுக்குள் வந்தன. வெள்ளம் வடிந்தபின் கால்வாயில் சென்று பார்த்தால் ஐந்துக்கு ஆறடி அகலநீளமுள்ள மெத்தை, பாய், பழைய கேதோடு கதிர்க்குழாய்த் தொலைக்காட்சிப் பெட்டி, கந்தல்துணி மூட்டைகள் என என்னென்னவோ கிடந்தன. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. மக்கள் இப்படி இருக்கும் வரை அவர்களுக்கு நல்லாட்சி அமையாது.

இந்த வெள்ளப் பாதிப்புக்கு அரசு இழப்பீடு கொடுத்ததும் எண்ணிப் பார்க்கத் தக்கது. எங்கெல்லாம் வெள்ளம் புகுந்தது என்பதை ஆளனுப்பிக் கணக்கெடுத்து இழப்பீட்டை வழங்கியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. குடும்ப அட்டைக்கு ஆறாயிரம் ரூபாய் என்று அறிவித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் நட்டம். இவர்கள் கொடுக்கும் ஆறாயிரம் ரூபாய் இதை ஒன்றும் ஈடுசெய்யாது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் கொடுத்தால்தான் அது இழப்பீடு. அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் ஆறாயிரம் ரூபாய் என்று அறிவித்தது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க முன்கூட்டிக் கொடுக்கும் கையூட்டு என்பது திருவள்ளுவரின்,

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்

குறியெதிர்ப்பை நீர துடைத்து (திருக்குறள் 221) 

என்கிற குறள் கூறும் இலக்கணமாகும். 

சென்னையில் வெள்ளப் பாதிப்புள்ள பகுதிகளில் வீட்டின் உரிமையாளர்கள் எல்லோரும் முதல்தளத்தில் இருந்துகொண்டு வெளியூரில் இருந்து குடும்ப அட்டையில்லாமல் குறுகிய காலத்துக்குக் குடிவருவோரைத் தரைத்தளத்தில் குடியிருக்கச் செய்கின்றனர். அவர்களின் குடும்ப அட்டை திருநெல்வேலியிலோ, தூத்துக்குடியிலோ, தென்காசியிலோ, மதுரையிலோ, கடலூரிலோ இருக்கும். திமுக அரசு அறிவிப்பின்படி முதற்கட்டத்தில் முதல் தளம், இரண்டாம் தளத்தில் குடும்ப அட்டை வைத்திருந்தோர் எல்லோரும் ஆறாயிரம் ரூபாய் வாங்கிவிட்டனர். வெள்ளத்தின் வாடையே இல்லாத மாதவரத்தில் உள்ளோரும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மணற்பாங்கான நிலத்தில் உள்ளோரும் கூட ஆறாயிரம் ரூபாய் வாங்கி விட்டனர். உண்மையிலேயே பாதிக்கப்பட்டோர் வாடகை உடன்பாட்டுப் பத்திரத்துடன் விண்ணப்பித்தும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதேகாலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் ஏரல், திருச்செந்தூர் வட்டங்களில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டதால் அங்கும் குடும்ப அட்டைக்கு ஆறாயிரம் வழங்கப்பட்டது. வியப்புக்குரியது என்னவென்றால் திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டங்களில் தேரிப்பகுதியில் உள்ள ஊர்களிலும் ஆறாயிரம் ரூபாய் வழங்கியதுதான். நூறு செண்டிமீட்டர் இல்லை, ஐந்நூறு செண்டிமீட்டர் மழை பெய்தாலும் தேரிநிலத்தில் நீர் நிற்காது என்பதுகூடத் தெரியாமல் தமிழ்நாட்டின் வருவாய்த் துறை உள்ளதென்றால் இவர்களின் செயல்பாடு எப்படியிருக்கும்? வெள்ளத்துக்கான இழப்பீடு எனக் கூறி அரசு பணத்தில் ஆறாயிரம் ரூபாய் கொடுத்ததாலேயே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்த இடங்களிலும் வெற்றிபெற்றது. இல்லையேல் குறைந்தது வெள்ளப்பாதிப்புப் பகுதிகளில் மட்டுமாவது தோற்றிருக்கும். 

2023 திசம்பர் வெள்ளத்துக்காகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கியதைத் திமுகவுக்கு வாக்களிக்க அரசு பணத்தில் கொடுத்த கையூட்டு எனக் கூறுவதற்கு இப்போது முதன்மையான காரணம் கிடைத்துள்ளது. தென்பெண்ணை பாயும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இப்போது பெங்கல் புயலின் தாக்கத்தால் பெய்த பெருமழையாலும், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி இரவோடு இரவாக நொடிக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்து விட்டதாலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஐந்து மாவட்ட மக்களுக்கு இழப்பீடு 2000 ரூபாய் தானாம். 2023 திசம்பர் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்படாதோருக்கும் இழப்பீடு 6000 ரூபாய். இப்போது தென்பெண்ணை பாயும் மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு 2000 ரூபாய். இப்போது பாதிக்கப்பட்டவர்கள் நல்வாய்ப்பில்லாதவர்கள். முன்பு நாடாளுமன்றத் தேர்தல் அண்மையில் இருந்தது. இப்போது சட்டமன்றத் தேர்தல் அண்மையில் இல்லை, 2026 ஏப்ரல் மே மாதங்களில்தான் இருக்கிறது. அதற்கு முன் எப்படியும் அடுத்த ஆண்டு மழைக்காலத்தில் ஒரு புயல் மழை பெருவெள்ளம் வரும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்பதே குறைந்த தொகையை இழப்பீடாக அறிவித்ததற்குக் காரணம். 

தமிழ்நாட்டு அரசின் பாகுபாடான இத்தகைய செயலை, தேர்தலுக்குக் கையூட்டு வழங்குவது போல் இழப்பீடு அறிவித்துப் பாதிக்கப்படாதோருக்கும் வழங்கும் தவறான போக்கை, உண்மையிலேயே கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்குக் குறைந்த தொகையை வழங்கி ஏமாற்றும் போக்கை எந்தத் தொலைக்காட்சி நெறியாளரும், நாளேட்டின் ஆசிரியரும் எடுத்துக்கூறி இடித்துரைக்காதது நான்காம் தூண் கையூட்டுத் தொகையில் கொழுத்துப்போய், மக்கள் நலனுக்கான கருத்தைச் சொல்வதில் இற்று உளுத்துப்போய் உள்ளதையே காட்டுகிறது.  

உரிய காலத்தில் நீரைப் பாசனத்துக்குக் கால்வாயிலும் ஆற்றிலும் திறக்காமல், அணையில் தேக்கி வைத்துக்கொண்டு இருந்துவிட்டு இரவுநேரத்தில் மிக அதிக அளவில் திறந்துவிட்டதே சாத்தனூர் அணைக்குக் கீழே தென்பெண்ணைப் பாசனப் பகுதிகளில் வெள்ளப்பேரழிவுக்குக் காரணம் என்று உறுதியாகக் கூறலாம். பெங்கல் புயல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்று கூறியபோதே சாத்தனூர் அணையின் நீரைக் கால்வாயிலும் ஆற்றிலும் திறந்துவிட்டிருக்கலாம். ஐந்து மாவட்டங்களின் பெரிய பெரிய ஏரிகளில் நீரை நிரப்பியிருந்தால், புயல் தாக்கியபின் இந்த அளவுக்குப் பெருவெள்ளத்தை அணையில் இருந்து ஆற்றில் இரவு நேரத்தில் திறந்துவிட வேண்டிய தேவை இருந்திருக்காது.

காவிரி வெள்ளத்தில் முக்கொம்பு அணையின் கண்மதகுகள் உடைந்ததற்கும், பழைமையான கொள்ளிடம் பாலம் இடிந்ததற்கும் மணற்கொள்ளை ஒரு காரணம் இல்லை என்றே இடைப்பாடி பழனிச்சாமி அன்று இளித்துக்கொண்டே கூறினார். அதை மடக்கி எந்தச் செய்தியாளரும் வினவவில்லை. இந்த ஆண்டில் காவிரி வெள்ளத்தின்போது மின்கோபுரங்கள் சாய்ந்தபோதும் மணற்கொள்ளையே அதற்குக் காரணம் என்று யாரும் சொல்லவில்லை. கண்ணுக்குத் தெரிந்த இந்த உண்மையையே ஊடகங்களும் சொல்லவில்லை. அரசும் ஒப்புக்கொள்ளவில்லை.

அப்படியிருக்கும்போது முதலில் இருந்தே நாம் கூறிய உண்மைகளையும், அதற்குக் கூறியுள்ள அடுக்கடுக்கான காரணங்களையும் அரசு ஒப்புக்கொள்ளவா போகிறது?

"சென்னையில் வந்தால் வெள்ளம். தென்பெண்ணையில் வந்தால் வெல்லம். சென்னைக்காரர்களுக்கு 6000 ரூபாய். தென்பெண்ணை மாவட்டத்துக்காரர்களுக்கு 2000 ரூபாய். சென்னைக்காரர்களின் கண்ணுக்கு வெண்ணெய், தென்பெண்ணை பாயும் ஐந்து மாவட்டக்காரர்களின் கண்களுக்குச் சுண்ணாம்பு" என்றெல்லாம் இந்தப் பாகுபாட்டைப் பலவாறாக எழுதலாம், சுட்டிக்காட்டலாம், எடுத்துரைக்கலாம், இடித்துரைக்கலாம். அதை யார் செய்யாவிட்டாலும் மக்கள் மீது அக்கறையுள்ள நாம் செய்யலாம் என்கிற எண்ணத்திலேயே இந்த நெடுங்கட்டுரையை எழுதியுள்ளோம்.

சே.பச்சைமால் கண்ணன்.