திங்கள், 26 பிப்ரவரி, 2024

கொடுமைக்கார பண்ணையாரும் பழிவாங்கிய பையனும் - சிறுகதை

தென்பாண்டி நாட்டின் திருநெல்வேலிச் சீமையில் கோவன்குளம் என்னும் ஊர் மிகவும் செழிப்பான ஊர். அவ்வூரின் தென்புறம் நம்பியாறும் வடபுறம் ஓடையும் உள்ளன. இரண்டிலும் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் பாயும் என்றாலும் அந்த நீரைத் தேக்கி வைத்து வயல்களுக்குப் பாய்க்க ஊரின் மேற்புறம் ஒரு குளமும், ஓடைக்கு வடக்கே ஒரு குளமும் உள்ளன. இதனால் மழைக்காலத்தில் பிசானப்பட்டத்தில் நெல் பயிரிடுவர். அந்த நெற்பயிரைத் தைமாதம் அறுத்த பிறகு, அறுதாளுடன் வயல்களை உழுது பருத்தி பயிரிடுவர். இதனால் அவ்வூர் எப்போதும் பச்சைப் பசேலென்று செழிப்பாக இருக்கும். இதுபோக அவ்வூரில் ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஓடைக்கரை, வயலின் வரப்புகள், வாய்க்காலின் இரு கரைகள், புன்செய் நிலங்கள் எங்கும் பனைகள் ஓங்கி வளர்ந்திருக்கும். இத்தகைய செழிப்பு மிக்க ஊரில் கடுவாயன் என்கிற பண்ணையார் இருந்தார். அவருக்கு அந்த ஊரில் கண்ணுக்கெட்டும் தொலைவு வரை நிலம் இருந்தது. பணமும் திமிரும் அதிகம் இருந்ததால் அவர் தன் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களை மதிப்பது கிடையாது. நாமில்லாவிட்டால் இவர்களுக்கெல்லாம் கஞ்சியும் காடியும் கிடைக்காது என்ற தலைக்கனம் அவருக்கு உண்டு. அவருடைய பண்ணையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் மாடுபோல் வேலை வாங்கிவிட்டு நாய்க்குக் கஞ்சி ஊற்றுவதுபோல் அரைவயிற்றுக்கு உணவுகொடுப்பார். உணவுதான் அரை வயிற்றுக்கு, வேலை ஓராளுக்குச் செய்ய வேண்டும். ஐயா நீங்கள் கொடுக்கும் வேலையை என்னால் செய்ய இயலவில்லை. என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லும் தொழிலாளியை ஒற்றைக் காதை அறுத்துவிட்டுவிடுவார். அவருடைய இந்த அதிகாரப் போக்கும் திமிரும், தொழிலாளர் பலரின் காதறுத்த கதையும் தெரிந்ததும் புதிதாக யாரும் அந்தப் பண்ணைக்கு வேலைக்குச் செல்லவில்லை. ஏற்கெனவே இருந்தவர்களும் அவரின் தொல்லையும் கொடுமையும் தாங்காமல் காதறுபட்டு வெளியேறினர். இதனால் புதிதாக வேலைக்கு ஆட்கள் சேர்ப்பதற்காக அவர் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி தான் சொல்கிற வேலையையெல்லாம் செய்ய நல்ல திறமையான ஆட்கள் வேண்டுமென்றும், மற்ற இடங்களில் உள்ளதைவிட அதிகக் கூலி கொடுப்போம் என்றும், வேலையைச் செய்ய இயலாமல் வெளியேறினால் ஒற்றைக் காதை அறுத்துவிடுவோம் என்றும், நாங்களாகவே தொழிலாளியை வெளியேற்றினால் எனது சொத்தில் பாதியை எழுதிக் கொடுப்போம் என்றும் பண்ணையார் அறிக்கை வெளியிட்டார். அவரின் அறிக்கையைக் கேட்ட தொழிலாளர்கள் பலரும் அஞ்சி வெருண்டோடினர். ஆனால் அதே கோவன்குளத்தைச் சேர்ந்த அன்பரசன் என்கிற இளைஞன் குடும்பச் சூழல் காரணமாக அந்தப் பண்ணையாரிடம் வேலைக்குச் சென்றான். அண்ணன் முகிலரசனும் குடும்பத்தினரும் தடுத்தும் அதை மீறிப் பண்ணையாரிடம் வேலைக்குப் போனான் அன்பரசன். உடனேயே தான் விதித்துள்ள விதிமுறைகள் பற்றி அவனிடம் பேசினார் பண்ணையார் கடுவாயன். எல்லாம் தெரியுமையா, அதை ஏற்கெனவே தெரிந்துகொண்டுதான் நான் வந்துள்ளேன் ஐயா. நீங்கள் சொல்லும் எல்லா வேலையையும் திறமையாகச் செய்வேன் ஐயா என்றான் அந்த இளைஞன் அன்பரசன். பொதுவாகவே பண்ணைகளிலும் தொழிற்சாலைகளிலும் ஒரு சொலவடை உண்டு. நன்றாக வேலை செய்பவனுக்கு நிறைய வேலையைக் கொடு, வேலையே செய்யாமல் ஏய்க்கிறவனுக்கு நிறையக் கூலியைக் கொடு என்பதுதான் அது. அதன்படி திறமையாகவும் அறிவுடனும் கடமையே கண் என்று கருதி நல்லபடி வேலையைச் செய்த அன்பரசனுக்குக் கடுவாயன் பண்ணையார் ஏராளமான வேலைகளைக் கொடுத்தார். காலையில் உறங்கி விழித்ததும் கன்றுக்குட்டிகளை அவிழ்த்துவிட்டு மாடுகளில் பால்கறந்து குடங்குடமாய் ஊற்றி வைத்துவிட வேண்டும். அதன்பின் கன்றுக்குட்டிகளை ஓடியாடி விளையாடவிட்டுப் பசுக்களைக் குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டிய பசுக்களின் உடல் காயுமுன் அவற்றுக்குப் பசும்புல்லறுத்து இரையாகப் போட வேண்டும். ஓடி விளையாடிய கன்றுக்குட்டிகளைக் கட்டுத்தறியில் கட்டிப் போட்டுவிட்டுப் பசுக்களை மேய்க்கப் பற்றிச் செல்ல வேண்டும். அவற்றைப் புல்வெளியில் மேயவிட்டுவிட்டு வயலில் உழவு, வரப்பு வெட்டு, வாய்க்கால் வெட்டு, களைவெட்டு, காய்கறி பறித்தல், வயலுக்குத் தண்ணீர் பாய்த்தல் எனக் கடினமான வேலை. கஞ்சி குடிக்கும் நேரந்தான் சற்று ஓய்வு. அதற்குப் பிறகு கொஞ்சம் குறுக்கைச் சாய்ப்போம் என்றுகூறி ஓய்வெடுத்தால், அதற்குள் பண்ணையார் கடுவாயன் வந்து இன்னும் சில வேலைகளை ஏவிவிட்டுப் போவார். மேய்ந்துவிட்டு அந்தி நேரத்தில் வீட்டுக்கு வரும் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டி அவற்றைக் கட்டுத்தறியில் கட்டிப் பால்கறந்து அவற்றுக்கு இரைபோட்டு முடிப்பதற்குள் பொழுது சாய்ந்து விடும். அதன்பிறகு சோறுதின்றுவிட்டு உறங்கினால் காலையில் கண்விழித்து எழுந்து வேலை செய்யச் சரியாக இருக்கும். இப்படி ஓய்வில்லா வேலை, உறக்கம்தான் ஓய்வு என்றிருந்ததால் இளைஞனான அன்பரசனால் பண்ணையாரின் கொடுமைகளைத் தாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவன் அவரிடம் போய், ஐயா என்னதான் நான் கடுமையாக வேலை செய்தாலும் அதற்கு இரக்கப்படாமல் நீங்கள் மேலும் மேலும் கடுமையாக வேலைகளை ஏவுகிறீர்கள். இதனால் எனக்குச் சரியான ஓய்வும் உறக்கமும் இல்லாததால் என் உடல்நலன் குன்றுகிறது. இதை எண்ணி எண்ணி என் உளநலமும் பாதிக்கப்படுகிறது. அதனால் நான் வேலையில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னான். என்ன இருந்தாலும் நமக்கு இத்தனை நாள் நல்லபடியாய் வேலை செய்திருக்கிறானே என்று கொஞ்சங்கூட அந்தப் பண்ணையாருக்கு இரக்கம் இல்லை. முன்பு கூறிய விதிமுறைப்படியே ஒற்றைக் காதை அறுத்துவிட்டுப் பண்ணையை விட்டு வெளியேற்றினார் அந்த இளைஞனை. காதறுபட்டு வந்த தம்பியைக் கண்டு அண்ணன் முகிலரசனின் நெஞ்சங் கொதித்தது. இந்தப் பண்ணையானுக்குத் தக்க பாடம் கற்பித்துவிட வேண்டும். இல்லையேல் இந்த மண்ணில் பிறந்ததற்கும், இனிய தமிழைக் கற்றதற்கும் பயனில்லாமல் போய்விடும் என்று எண்ணினான் முகிலரசன். அவன் நேரே பண்ணையாரிடம் சென்று நான் உங்கள் தோட்டத்துக்கு வேலைக்கு வருகிறேன் என்று சொன்னான். இந்த வேண்டுகோளைக் கேட்டதும் பண்ணையாருக்கு வியப்பாக இருந்தது. நாம் ஏற்கெனவே இவன் தம்பியின் காதை அறுத்துவிட்டுள்ளோம். அது தெரிந்தபிறகும் இவன் நம்மிடம் வேலைக்கு வருகிறேன் என்று சொல்கிறானே என்று மனத்துக்குள் எண்ணிக்கொண்டார். தம்பி, உன் தம்பி அன்பரசன் என்னிடம் வேலை செய்ய முடியவில்லை என்று கூறிக் காதறுபட்டு வெளியேறிய கதை உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். இருந்தும் என்னிடம் வேலைக்கு வருகிறேன் என்று சொல்கிறாயே. நன்றாக இன்னொரு முறை எண்ணிப் பார்த்துவிட்டுச் சொல் என்றார் பண்ணையார் கடுவாயன். ஒருமுறைக்கு நூறுமுறை எண்ணிப் பார்த்துவிட்டுத் தான் உங்களிடம் வேலைக்குச் சேர முடிவெடுத்து வந்துள்ளேன் என்று பண்ணையாரிடம் தீர்க்கமாகச் சொன்னான் அன்பரசனின் தமையன் முகிலரசன். சரி அப்படியானால் என்றைக்கு வேலைக்குச் சேர்கிறாய்? என்றார் பண்ணையார் அவனிடம். அவனோ இன்றே சேர்கிறேன் என்றான். நமக்கு மீண்டும் பண்ணையடிமை ஒருவன் கிடைத்து விட்டான் என்று அகமகிழ்ந்தார் பண்ணையார் கடுவாயன். முகிலரசனோ நம் தம்பியின் காதை அறுத்தவனைப் பழிதீர்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்று மனத்துக்குள் எண்ணிக்கொண்டான். இன்று இவனுக்கு என்ன வேலை கொடுக்கலாம் என்று பண்ணையார் மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருந்தபோதே, ஐயா நான் என்ன வேலை செய்ய வேண்டும் எனக் கேட்டான் முகிலரசன். அதற்குத் தானே காத்திருந்தேன் என்று மனத்தில் எண்ணிய பண்ணையார், தம்பி முகிலரசா, ஏர்மாடு கலப்பை பூட்டி வயலை உழத்தெரியுமா உனக்கு என்றார். தெரியுமையா, எந்த வயலை உழ வேண்டும் என்று சொன்னால் உழுதுவிடுவேன் என்றான் முகிலரசன். அந்தக் கொக்கு நிற்கிற வயலை உழ வேண்டும் என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் பண்ணையார். முகிலரசனோ நுகத்தில் ஏர்மாட்டையும் கலப்பையையும் பூட்டிவிட்டு உழுவதற்காகக் கொக்கு நிற்கும் வயலுக்குச் சென்றான். இவன் சென்றவுடனே கொக்கு எழுந்து பறந்து அங்கிருந்து வேறொரு வயலுக்குச் சென்று அமர்ந்தது. கொக்கு நிற்கும் வயலைத்தானே உழச்சொன்னார் பண்ணையார் என்று எண்ணிய இவன் ஏர்மாடுகளுடன் அந்த வயலுக்கும் சென்றான். என்ன இவன் ஏர்மாட்டையும் கலப்பையையும் பூட்டிக்கொண்டு நாம் செல்லுமிடமெல்லாம் வருகிறானே. இன்று நம்மை இரைகொத்த விடமாட்டான்போல என்றெண்ணிய கொக்கு இன்னும் அதிகத் தொலைவுக்குப் பறந்துபோய் அங்கொரு வயலில் அமர்ந்தது. அங்கும் ஏர்மாடுகளுடன் சென்றான் முகிலசன். ஓயாமல் அங்குமிங்கும் பறந்து அலைந்த கொக்கு அந்திநேரம் வந்ததும் இறுதியாய்ச் சிறகடித்துப் பறந்து மரத்தில் உள்ள தன் கூட்டுக்குச் சென்று அமர்ந்தது. களைத்துப் போன முகிலரசனும் காளை மாடுகளை நுகத்தில் இருந்து அவிழ்த்துவிட்டான். அவை இப்போதுதான் வாய்ப்புக் கிடைத்தது என்றெண்ணி வயலின் வரப்போரத்தில் உள்ள புல்லை மேயத் தொடங்கின. பகலெல்லாம் வெயிலின் கொடுமைக்கு வீட்டில் தங்கிய பண்ணையார் அந்தி நேரத் தென்றல் காற்றின் குளுமையைப் பெறுவதற்காகத் தன் வயற்காட்டுக்கு வந்தார். அங்கே தான் சொன்ன வயல் உட்பட எந்த வயலையும் உழாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதேநேரத்தில் நுகத்தில் இருந்து அவிழ்த்துவிட்ட காளைகள், அந்தி சாய்ந்து கருக்கல் வருவதற்குள் அரைவயிற்றுக்காவது புல்லை மேய்ந்துவிட வேண்டும் என்று எண்ணி அவுக்கு அவுக்கு என்று வாய்க்கால் வரப்போர அறுகம்புல்லை மேய்ந்துகொண்டிருந்தன. கடுஞ்சினத்துடன் அங்கு வந்த பண்ணையார், என்ன நான் சொன்ன வயலை நீ உழவே இல்லையே என்றார் முகிலரசனைப் பார்த்து. நீங்கள் எந்த வயலை உழச் சொன்னீர்கள் என்றான் அவன். அந்தக் கொக்கு நிற்கிற வயலை உழு என்று சொன்னேன் அல்லவா என்றார் அவர். இதைக் கேட்ட முகிலரசன் விழுந்து விழுந்து சிரித்தான். என்ன இவனுக்குக் கிறுக்கு ஏதும் பிடித்து விட்டதா என்று மனத்துக்குள் எண்ணினார் பண்ணையார். இருந்தாலும் அதிர்ச்சியையும் எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல், நான் உன்னை உழச்சொன்னேன். நீ என்னவென்றால் சிரிக்கிறாய். முதலில் சிரிப்பதை நிறுத்து, ஏன் உழவில்லை என்பதற்கு உரிய விளக்கத்தைச் சொல் என்றார் பண்ணையார். அப்படியா கேளுங்கள் கோவன்குளத்துப் பண்ணையாரே, நீங்களோ கொக்கு நிற்கிற வயலை உழச்சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள். நானோ ஏர்மாடுகளையும் கலப்பையையும் நுகத்தில் பூட்டி அந்த வயலுக்குச் சென்றேன். நான் கிட்டே போகவும் கொக்கு அங்கிருந்து பறந்து மற்றொரு வயலுக்குச் சென்றது. நான் விடுவேனா? நீங்கள்தான் சொல்லி விட்டீர்களே. கொக்கு நிற்கிற வயலை உழவேண்டும் என்று. அதற்காக நான் ஏர்மாடுகளுடன் அந்த வயலுக்குச் சென்றேன். அந்தக் கொக்கு அங்கிருந்து பறந்து வேறொரு வயலுக்குச் சென்று அமர்ந்தது. இப்படிப் பகலெல்லாம் அது என்னைப் பாடாய்ப் படுத்தி விட்டது. நம் காளைகளும் களைத்துவிட்டன. நல்ல வேளை இறுதியாகப் பொழுதுசாயும் நேரத்தில் கொக்கு பறந்து கூட்டுக்குள் அடையச் சென்றுவிட்டது. அதனால் காளைக்கும் எனக்கும் சற்று ஓய்வு கிடைத்தது என்றான் முகிலரசன். உனக்கு ஓய்வு கிடைத்து விட்டது. உன்னை வைத்து எப்படி வேலை வாங்குவது என்றெண்ணி என் மனம் ஓய்வில்லாமல் தவிக்கிறது என்று மனத்தில் எண்ணினார் பண்ணையார். சரி. இன்றிரவு நீ ஓய்வெடு நாளைக் காலையில் மீண்டும் வேலையைத் தொடங்கலாம் என்றார். முகிலரசனும் இரவில் நன்றாக உறங்கினான். காலையில் எழுந்து பல் விளக்கிக்கொண்டு வரப்பு வழியே நடந்து வயலுக்குச் சென்றான் முகிலரசன். எப்போம் வருவான் என்று காத்திருந்ததுபோல் அங்கு நின்றுகொண்டிருந்த பண்ணையார், உனக்கு உழுவதற்குத் தான் தெரியவில்லை. வயலில் களைபறிக்கத் தெரியுமா? என்றார். ஐயா பயிர் எது? களை எது? என்று நீங்கள் சொல்லித் தந்தால் நான் பறித்துவிடுவேன் என்றான் முகிலரசன். நட்டுப் பதினைந்து நாள் ஆன நெல் வயலுக்கு அவனைக் கூட்டிச் சென்ற பண்ணையார், நன்கு பச்சைப்பசேல் என்று வளர்ந்திருந்த ஐந்தாறு நெற்பயிர்களைத் தொட்டுக் காட்டி இவையெல்லாம் பயிர்கள் மற்றவை களைகள் என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். தம்பியின் காதையறுத்த பண்ணையாரைப் பழிவாங்க வந்துள்ள முகிலரசனும், பண்ணையார் தொட்டுக்கூறிய ஐந்தாறு நெற்பயிர்களை மட்டும் விட்டுவிட்டு அந்த வயலில் அவர் தொட்டுக்காட்டாத நெற்பயிர்களையெல்லாம் களையென்றெண்ணிப் பிடுங்கி எறிந்துவிட்டான். வீட்டுக்குப் போய்ச் சோறு தின்றுவிட்டுக் கையில் கஞ்சிக் கலயத்தோடு முகிலரசனைப் பார்க்க வந்தார் பண்ணையார். வயல் முழுவதும் பச்சைப் பசேலென்று வளர்ந்திருந்த பயிர்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னப்பா முகிலரசா, உன்னைக் களை பிடுங்கச் சொன்னால் நீ பயிர்களைப் பிடுங்கி இருக்கிறாய். உனக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாதா? என்று சினந்து பேசினார் பண்ணையார். எனக்கு வேலை செய்யத் தெரியும். உங்களுக்குத் தான் வேலை ஏவத் தெரியவில்லை என்று துணிச்சலுடன் கூறினான் முகிலரசன். ஏலே என்ன சொன்னாய்? எனக்கு வேலை ஏவத் தெரியவில்லையா? எப்படி? என்றார். நீங்கள் காலையிலேயே வீட்டுக்குப் போகாமல் என்னுடனே வயலில் நின்றுகொண்டு எது எது பயிர் என்று தொட்டுத்தொட்டுச் சொல்லித் தந்தால் நான் அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் களையை மட்டும் பிடுங்கியிருப்பேன் அல்லவா? என்றான் முகிலரசன். நீ களையைப் பிடுங்க வந்தவனில்லை. என் உயிரைப் பிடுங்க வந்தவன் என்று மனத்துக்குள் எண்ணினார் பண்ணையார். இவன் நம் உயிரை வாங்குமுன் நாம் இவனைப் பண்ணையை விட்டு வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் நாம் பாதிச் சொத்தையாவது காப்பாற்ற முடியும் என்று நினைத்தார் பண்ணையார். அதனால், உன்னைப் பண்ணையில் வைத்து வேலை ஏவ என்னால் முடியாதப்பா. நீ எனக்கு வேலைக்கு வேண்டாம். வெளியே போய்விடு, உன்னை நானே வெளியேற்றுவதால் நான் முதலில் கூறியதுபோல் என் சொத்தில் பாதியை உனக்கு எழுதித் தருகிறேன் என்றார் பண்ணையார். அதெல்லாம் எனக்கு வேண்டாமையா, தொழிலாளர்கள் மீது உங்களுக்கு இரக்கமும் அன்பும் வரவேண்டும். அவர்களை நீங்கள் மதிக்க வேண்டும். காதறுக்கும் கொடுமையைக் கைவிட வேண்டும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் நான் துணிந்து உங்களிடத்தில் வேலைக்கு வந்தேன். என் தம்பியைக் காதறுத்ததற்கு உங்களைப் பழிவாங்கவும் வந்தேன். இவ்வளவிலே உங்களைப் பழிவாங்கியது போதும் என்பதால் அந்த எண்ணம் இப்போது என்னிடம் இருந்து மறைந்து விட்டது. அதேநேரத்தில் நீங்கள் உங்கள் சொத்தில் பாதியைத் தருவதாகச் சொன்னீர்கள். அதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் தவற்றை உணர்ந்தால் போதும். இனித் தொழிலாளர்கள் எவருக்கும் கொடுமை செய்யாதீர்கள் அதுபோதும் என்றான் முகிலரசன். முன்பு சொன்னது சொன்னதுதான். ஒப்புக்கொண்டபடி உனக்கு என் சொத்தில் பாதியை எழுதித் தருகிறேன். அப்போதுதான் உன் தம்பியின் காதறுத்த குற்றத்துக்கு நீ என்னை ஒறுத்ததாக (தண்டித்ததாக) இருக்கும் என்றார் பண்ணையார் கடுவாயன். அவரிடம் பாதிச் சொத்தைப் பெற்ற முகிலரசன் அதில் பாதியைத் தன் தம்பிக்கு எழுதிக்கொடுத்தான். இருவரும் வயலில் உழுது பயிரிட்டுத் தண்ணீர் பாய்த்துக் களைபறித்துப் பயிர்வளர்த்துக் கதிரறுத்து, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருவள்ளுவர் கூற்றின்படி வாழ்ந்தனர். ஆடு மாடு கோழி உள்ளிட்ட உயிர்களிடமும், நெல், புல், செடி, கொடி, மரம், தென்னை, பனை, ஈந்து, கமுகு உள்ளிட்ட பயிர்களிடமும் அன்புகாட்டினர். பயிர்கள் செழித்து விளைந்ததால் காக்கை, குருவி, மயில் உள்ளிட்ட பறவைகளும் அவற்றைத் தின்று மகிழ்ந்து வாழ்ந்தன. -ப.முகிலரசன்