தமிழே பயிற்றுமொழி என்று உறுதியளித்த மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்
தனியார் பள்ளிகளையும் ஆங்கிலவழிக் கல்வியையும் காக்கத் துடிக்கும் மாநில திமுக அரசு
இருவருக்கும் நடுவே தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள தமிழ்வழிக் கல்வி
பிஎம்ஸ்ரீ திட்டத்துக்குத் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு கோரியுள்ளது.
பிஎம்ஸ்ரீ திட்டம் என்றால் என்ன?
பிஎம் ஸ்கூல்ஸ் `பார் ரைசிங் இந்தியா.
மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் ஏற்கெனவே செயல்படும் பள்ளிகளில் தேசியக் கல்விக்கொள்கையைப் புகுத்திச் சிறந்த பள்ளிகளாக மாற்றுவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு 14 ஆயிரத்து 500 பள்ளிகளை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 27 ஆயிரத்து 360 கோடி ரூபாயாகும். இதில் மத்திய அரசின் பங்கு 18 ஆயிரத்து 128 கோடி ரூபாயாகும்.
இந்தத் திட்டத்தின்படி குழந்தைகளுக்கு ஏற்ற அறைகலன்கள், கற்றல் கருவிகள் வழங்குவதுடன், ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், விளையாட்டுத் திடல் ஆகிய வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்துவதாகக் கூறி மத்தியக் கல்வி அமைச்சகத்துடன் 33 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகள், கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளின் நிர்வாகம், நவோதயா பள்ளிகளின் நிர்வாகம் ஆகியன புரிந்துணர்வு உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளன. இதுவரை 32 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் 12 ஆயிரம் பள்ளிகள் இந்தத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றினால்தான் இந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்க முடியும் என்று நிபந்தனை உள்ளது. அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழ்நாட்டுக்கு மேற்கொண்டு நிதி வழங்க மத்தியக் கல்வி அமைச்சகம் மறுத்து வருகிறது.
தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அதில் தாய்மொழி, ஆங்கிலம், இவை தவிர இன்னொரு மொழி என மூன்றையும் கற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை, குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த மூன்றாம் மொழி இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளை மட்டுமே கற்பித்து வரும் தமிழ்நாடு அரசு மூன்றாவது மொழியாக மத்திய அரசு இந்தி மொழியைப் புகுத்தி விடும் என்று அஞ்சுகிறது. இந்த அச்சம் நியாயமானது இல்லை என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் இப்போது திமுகவினரால் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியும் ஒரு பாடமாக உள்ளது. இந்தப் பள்ளிகளில் பணக்காரர்களின் பிள்ளைகள் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்ச் எனப் பலமொழிகளைப் படிக்கும் வசதி உள்ளது என்றும், இத்தகைய வசதியைத் தேசியக் கல்விக்கொள்கை, பிஎம்ஸ்ரீ திட்டம் ஆகியவற்றின் மூலம் அரசு பள்ளிகளில் கொண்டுவந்தால் அதை திமுகவினர் ஏன் எதிர்க்க வேண்டும்? என்கின்றனர் பாஜகவினர்.
மும்மொழி வேண்டாம் என்கிற திமுகவினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் அதை முதலில் செயல்படுத்துவார்களா? என்றும் பாஜகவினர் வினவியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இருமொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ், ஆங்கிலம் ஆகியன தமிழ்நாட்டில் கற்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், பல தனியார் பள்ளிகளில் தமிழ் ஒரு மொழியாகக் கூட இல்லை. ஆங்கிலமே பயிற்று மொழியாக உள்ளது. இரண்டாம் மொழியாக பிரெஞ்ச், சமஸ்கிருதம், இந்தி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் போக்கு உள்ளது.
அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டுவருகிறோம் என்ற பெயரில் இரு திராவிடக் கட்சிகளும் ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக 4 பாடங்களுக்கு வைத்துவிட்டுத் தமிழை ஒருமொழிப்பாடமாக மட்டுமே ஆக்கிவிட்டனர். இப்படி ஆங்கிலத்தைப் பயிற்றுமொழி ஆக்கிய பின்னரே தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தமிழில் இலட்சத்துக்கு மேற்பட்டோர் தோல்வியடையும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லை என்று எதிர்காலத்தில் விதிமுறைகள் கொண்டுவந்து விடுவார்களோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இது போக உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத புதுமையாகத் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழை ஒரு பாடமாகக் கற்காமலேயே ஒருவர் மழலைக் கல்வி முதல் உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்பு வரை படித்து முடிக்கும் இழிநிலை உள்ளது. தமிழை ஒரு கட்டாயப் பாடமாக வைத்து மாநில அரசு கொண்டுவந்த கட்டுப்பாடு, சிறுபான்மை மொழியினரால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தகர்த்தெறியப்பட்டது.
இந்நிலையில்தான் மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கான நிதியைத் தர வேண்டுமென்றால் தேசியக் கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறி மத்தியக் கல்வி அமைச்சகம் கெடுபிடி செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பதிலளித்துள்ளார். அதில் தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளதுடன், இதற்கு மேலும் தமிழ்நாடு அரசு அதை எதிர்க்க வேண்டிய காரணம் என்ன? என்று வினவியுள்ளார். பஞ்சாப், கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் பிஎம்ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும், அங்கு எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்றும், திமுக அரசு மொழியை வைத்து அரசியல் செய்வதாகவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேரும் புரிந்துணர்வு உடன்பாட்டில் தமிழ்நாடு முதலில் கையொப்பமிட்டுள்ளதாகவும், இப்போது அதை ஏற்க மறுத்துப் பின்வாங்குவது நேர்மையற்ற, நாகரிகமற்ற செயல் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்விக்கு நிதியைத் தராமல் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துவதைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கிறாரா? என்று வினவியுள்ளார். தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக நிராகரித்து விட்டது எனத் தர்மேந்திர பிரதான் தனக்கு எழுதிய கடிதத்தையும் ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, மக்களிடம் இருந்து வாங்கிய வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்குப் பதில் கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினர் நேர்மையும், நாகரிகமும் அற்றவர்கள் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மையைத் தான் சொல்லியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுவதாக முதலமைச்சர் கூறியுள்ள நிலையில், யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா? என்று வினவியுள்ளார்.
தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மூன்றாவது மொழியாக இந்தி, சமஸ்கிருத மொழிகளைப் புகுத்த மத்திய அரசு ஒருபுறம் வழி பார்க்கிறது.
தேசியக் கல்விக் கொள்கைப்படி தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை அல்லது குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தமிழே பயிற்றுமொழியாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் ஓர் உண்மையை இன்று கூறியுள்ளார்.
தமிழைக் காப்போம் என்று சொல்லிச் சில பத்தாண்டுகளாகப் படிப்படியாக ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக ஆக்கி வைத்துள்ள இரு திராவிடக் கட்சிகளுக்கும் இது பேரதிர்ச்சியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தனியார் சிபிஎஸ்இ, மெட்ரிக்குலேசன் பள்ளிகளைப் பெரும்பாலும் நடத்துவது முதலமைச்சர், திமுக அமைச்சர்கள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், இருகட்சிகளின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் குடும்பத்தினரும் உறவினர்களும்தான் என்று பாஜகவினர் அடிக்கடி கூறி வருகின்றனர்.
அந்த உண்மையை ஒப்புக்கொள்வது போல் நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்றும், எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும், மாணவர்கள் விருப்பப்பட்டால் எந்த மொழியையும் படித்துக்கொள்ளலாம் என்றும், அதேநேரத்தில் எந்தவொரு மொழியையும் வலிந்து திணிப்பதையே எதிர்க்கிறோம் என்றும் திமுகவினர் இப்போது கூறி வருகின்றனர்.
மாநிலக் கல்வியமைச்சர் அன்பில் மகேசின் மகன் சிபிஎஸ்இ பள்ளியில் படிப்பதும், ஆங்கிலவழியில் படிக்கும் அவன் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூடப் படிக்கவில்லை என்பதும், தமிழைக் காப்பதில் இவர்கள் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதை விளக்க ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் உள்ளது.
இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஆதரவாக மத்திய பாஜக அரசும், ஆங்கிலத்துக்கும், அதையே பயிற்றுமொழியாகக் கொண்டுள்ள தனியார் சிபிஎஸ்இ, மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு ஆதரவாக மாநில திமுக அரசும் களமிறங்கியுள்ளன. இரண்டுமே மொழியை அரசியலாக்கி ஆதாயம் அடையப் பார்க்கின்றன.
பத்துக்கோடி மக்கள் வாழும் இந்தத் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலுமே தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று மாநிலத்தை ஆளும் திமுக அரசும் சொல்லவில்லை. மத்திய பாஜக அரசும் சொல்லவில்லை. தாய்மொழி வழியே கல்வி கற்காத இந்த மண்ணில் கல்வியில் ஒரு வறட்சியும் வெற்றிடமும் நிலவுகின்றன. அன்பு, ஆற்றல், இரக்கம், ஈவு, உண்மை, நேர்மை, துணிவு, பணிவு ஆகியன இல்லாத இப்போதைய ஆங்கிலவழிக் கல்வி ஒரு வறட்டுக் கல்வியே ஆகும்.
உலகின் முதன்மொழியாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் கொண்டாடப்படும் தமிழை வளர்க்க மாநில அரசும், மத்திய அரசும் எந்த முயற்சியையும் எடுக்காததில் வியப்பில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மொழியை அழிக்கவென்றே தொடங்கப்பட்டுள்ள ஆங்கிலவழிப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் பணங்கொடுத்துப் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் தமிழர்களைப் பார்த்துத்தான் வியப்பு மேலிடுகிறது.
-சே.பச்சைமால்கண்ணன்