ஞாயிறு, 7 ஜனவரி, 2024

மன்னுயிர் காக்கத் தேனீக்களைக் காப்போம்

தேனீ என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும் ஏவல்வினையாகவும் விளங்குகிறது. தேன் இனிமைக்கோர் எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. தேனினுமினியது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் தேனினுமினியது ஒன்றுண்டா என்றால் இல்லையென்றே கூறவேண்டும். ஆகையால் தேனினுமினிய என்னுஞ்சொல்லை உயர்வு நவிற்சியாகவே கருதவேண்டும்.  

பூவில் தேனுறியும் தேனீக்கள்


தேனீ அதன் அளவையும் கூடுகட்டும் இடத்தையும் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. சிறுபுதர்களிலும் வேலிகளிலும் கூடுகட்டும் தேனீ சிறிதாக இருக்கும். பாறைகளிலும் பொந்துகளிலும் கூடுகட்டும் தேனீ சற்றுப் பெரிதாக இருக்கும். பாறைகளில் கட்டப்படும் கூடுகள் அடுக்கடுக்காக இருக்கும். ஒவ்வொரு அடுக்கிலும் நிறைய தேன் இருக்கும். மலைப்பகுதிகளிலும் உயரமான கட்டடங்களிலும் கூடுகட்டும் தேனீ மிகப்பெரிதாக இருக்கும். இவற்றின் கூடும் பெரிதாகவும் அகலமாகவும் இருக்கும். சமவெளிகளில் சிறுதேனீயும் பாறைத்தேனீயும் பரவிக் காணப்படுகின்றன. மலைப்பகுதிகளில் மலையந்தேனீ காணப்படுகின்றது.
தேனீக்கள் தேடும் முதல் தேனும் மகரந்தப்பொடியுமாகும். தேன் மருத்துவக் குணம் மிக்கது. ஈக்களின் துணையின்றி மனிதனால் தேனைச் சேகரிக்க முடியாது. தேனில் சருக்கரைச் சத்து அதிகமுள்ளது. சித்த மருத்துவத்தில் பற்பங்களையும் சூரணங்களையும் குழப்பித் தின்ன உதவும் கூட்டுப்பொருளாகத் தேன், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் தேனுக்கே முதலிடம். அது கிட்டாதபோதே கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தச் சொல்கின்றனர். இஞ்சியைத் தோல்நீக்கிக் குறுக நறுக்கித் தேனில் ஊறவைத்துத் தின்றால் உடல் வலுப்பெறும். பேரீத்தம்பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தின்றால் உடலுக்கு இரும்புச்சத்துக் கிடைக்கும்.
சந்தையில் புட்டில்களில் அடைத்துத் தேன் என்று கூறி விற்கப்படுவதில் சருக்கரைப் பாகு கலந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆதலால் தூய தேன் வேண்டுமென்றால் நாமே காட்டுக்குச் சென்று தேடிப்பார்த்து எடுக்க வேண்டும்.
பொதுவாக இனிப்புச் சுவை மனத்தை மகிழ்விக்கும். உடலில் சூட்டை உண்டாக்கும். இதனால் உடல் சுறுசுறுப்பாகும். வேலைசெய்யும் திறன் கூடும். தேனையுண்ட வண்டும் ஈயும் எறும்பும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக் காரணம் இதுதான்போலும். தேனுண்டால் சளி, வாய்க்கசப்பு, சோர்வு, களைப்பு ஆகியன நீங்கும். தூய தேன் துளியைத் தண்ணீரில் விட்டால் அத்துளி கரையாமல் நீரின் டிப்பரப்புக்குச் செல்லும்.

விளம்பரம்


தேனீக்கள் சுறுசுறுப்புக்கும் உழைப்புக்கும் பகிர்ந்துண்ணும் கூட்டுவாழ்க்கைக்கும் பெயர்பெற்றவை, எடுத்துக்காட்டாகத் திகழ்பவை. உழைத்துத் தேடிய பொருளை ஓரிடத்தில் சேர்த்துவைத்துப் பகிர்ந்துண்பவை. எளியவன் உயர்ந்தவனிடத்தில் பொருளை இரக்கும்போது ஈயென்பான். தம்மையொத்தவர்களிடம் இரக்கும்போது தாவென்பான். தம்மினும் எளியவர்களிடம் இரக்கும்போது கொடுவென்பான். தேனீயிடம் நாம் தேனீ என்று கூறுவது எளியவன் உயர்ந்தவனிடத்தில் இரப்பதையொக்கும். தேனீக்களிடம் ஈயும் ஈயும் என்றால் அவை எளிதில் ஈயா. கம்பெடுத்துத் தட்டிக் கலைத்துவிட்டுவிட்டே தேனை எடுக்க முடியும். அது பிறருழைப்பைக் கவருஞ் செயலாகும். இருப்பினும் தேனைத் தேனீயிடமிருந்து நாம் இரந்ததாகக் கருதலாம்.
தேனீக்கள் தம் முதலை அடுத்தவர் களவாடவிடாமல் கடுமையாகக் கொட்டும். தம் பொருளை அடுத்தவர் கவர்ந்தால் யாருக்கும் சினமெழுவது இயல்பே. அப்படிக் கொட்டிவிட்டது என்றதும் சினங்கொண்டு நாயும்பேயும் போன்ற சில தீயவர்கள் தீயும் கையுமாய் வந்து தீக்கொளுத்திவிட்டால் ஈயும் தீயும். காடுகளும் எரியும். தீக்குள் சிக்குண்ட விலங்குகளும் கரியும். இப்படித்தான் தேனீக்கள் பேரழிவின் விளிம்பில் உள்ளன.
முப்பதாண்டுகளுக்கு முன்பு பனைகளிலும் உடைகளிலும் வேலிகளிலும் முட்கூட்டங்களிலும் மட்டைக்கூட்டங்களிலும் தேன்கூடுகள் நிறைந்திருந்தன. இப்போது அவைகளும் இல்லை. தேன்கூடுகளும் இல்லை. ஏனென்று வினவினால் பல விடைகள் கிட்டுகின்றன.

காடுகளை ஆட்கள் தீவைத்துக் கொளுத்துவது, மரங்களை வெட்டியழிப்பது, பயிர்களுக்குப் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது, தொலைத்தொடர்புக் கோபுரங்கள் நிறுவுவது போன்றவை தேனீக்களின் அழிவுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. வயல்களில் பயிர்களுக்குப் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கும்போது அந்த வாடையைக் கொஞ்சநேரம் மோந்தாலே நமக்குத் தலைச்சுற்றும் மயக்கமும் வருகிறது. ஐம்பது கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட மனிதருக்கே தலைச்சுற்றும் மயக்கமும் வந்தால் சிறு ஈயினமான தேனீ எப்படித் தாங்கும் பூச்சிகொல்லி மருந்து வாடையை? மருந்து தெளிக்கிறார்கள் என்றறியுமா வண்டினம்? தேனுறிய வந்து உயிர்விடுகின்றது. மருந்திலுள்ள நச்சு உடனடியாகப் பூச்சியினங்களை அழிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாகப் பயிர்களில் தங்கி அதில் வந்தமரும் பூச்சியினங்களையும் கொல்லும். பயிர்களுக்குத் தீங்குசெய்யும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கத் தெளிக்கும் மருந்து நன்மைசெய்யும் பூச்சிகளான சிலந்தி, பொறிவண்டு, எறும்பு, கடலை வண்டு, வண்ணத்துப்பூச்சி, பக்கி போன்றவற்றைக் கொல்கிறது. தேன்சிட்டு முதலிய பறவைகளும் இதனால் மாய்கின்றன.
பூச்சிக்கொல்லி மருந்தைப் பயிர்களுக்குத் தெளிக்கும்போது அது காற்றில் பரவி அதை மோக்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பலவகை நோய்களையும் மரபணுக் குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. மனிதர்களில் சிறார்ப்பருவத்திலேயே பருவமெய்துவதும் இளமையிலேயே மலடாவதும் போன்றவை நிகழ்கின்றன. மனிதர்களையே மலடாக்கும் மருந்து பூச்சியினங்களைப் பூண்டோடு அழித்துவிடாதா?
எண்டோசல்பான் மருந்து மனித உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கிறது என்று பட்டறிந்ததால் அதற்குத் தடைவிதிக்கும்படி அறமன்றத்தில் வழக்காடுகிறோம். நம்மைப்போல் பிறவுயிர்களையும் கருத வேண்டும். தேனீயைக் கொல்லக்கூடிய மருந்துகளை நாம் பயிருக்குத் தெளிக்காமல் இருக்க வேண்டும்.

பூச்சியினங்களின் அழிவு பல்லுயிர்களின் அழிவுக்கும் தொடக்கம். எப்படியெனில் உலகின் முதனிலை உணவு விளைவிப்பனவான புல், பூண்டு, செடி, கொடி, மர வகைகள் முளைத்துத் தளிர்த்துத் தழைத்துச் செழித்து வளர்ந்து பூத்துக் காய்த்து விளைந்தால்தான் விலங்குகளின் உணவான கிழங்கு, கரும்பு, கீரை, பூ, நெல், புல், காய், கனி, வித்துப் போன்றவை கிடைக்கும். இந்த உணவுகள் கிடைக்காதபோது விலங்குகள் பஞ்சத்தாலும் பட்டினியாலும் இறக்க நேரிடும்.  அந்த விலங்குகளை உண்டு வாழும் விலங்குக்கும் இரை கிடைக்காது. இந்த விலங்குகளின் கழிவுகள் இல்லாவிட்டால் மரஞ்செடிகொடிகளுக்கு உரம் கிடைக்காது. பூவிலுள்ள தேனையுறிந்து வாழும் வண்டினங்களும் ஈயினங்களும் மரம், செடி, கொடி போன்றவை இல்லாவிட்டால் மாளும். அவை தேனுறியாவிட்டால் மரம், செடி, கொடி போன்றவற்றில் அயல்மகரந்தச் சேர்க்கை நிகழவியலாமல் காய்ப்புக் குறையும். இப்படி உலகின் பல்லுயிர்களும் அழியும் நிலை உருவாகும்.

நிலைத்திணை(தாவரங்)கள் உயிரினப் பெருக்கத்திற்கு இடம்விட்டு இடம் நகர முடியாது. அதனால்தான் ஈ, எறும்பு, வண்டு, பூச்சி, பறவை ஆகிய இனங்கள் ஒவ்வொரு நிலைத்திணை(தாவரங்)களுக்கும் ஊர்ந்தும், தாவியும், ஆய்ந்தும், பறந்தும் சென்று அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.
மா, கொய்யா, பலா, வாழை, பருத்தி, கத்தரி, தக்காளி, வெண்டை, சீனியவரை  போன்ற பயிர்கள் தன் மகரந்தச் சேர்க்கையால்  காய்ப்பன. ஆனால் பனை, பப்பாளி போன்றவை அயல்மகரந்தச் சேர்க்கையால் காய்ப்பன. தென்னையும் படர்கொடிப் பயிர்களும் ஆண்பூக்களையும் பெண்பூக்களையும் பெற்றிருந்தபோதிலும் அயல்மகரந்தச் சேர்க்கையால்தான் பூக்களில் கருப்பிடிக்கிறது. இவற்றின் அயல்மகரந்தச் சேர்க்கைக்கு ஈ, எறும்பு, வண்டு, பூச்சி, பறவை ஆகிய இனங்கள் உதவுகின்றன. ஏற்கெனவே அலகு(ஆண்)பனைகள் பெருமளவில் வெட்டப்பட்டுவிட்டதால் பருவப்(பெண்)பனைகள் ஊமங்காழிகளாகக் காய்க்கின்றன. ஊமங்காழிகள் என்பவை கொட்டையில்லாத மலட்டுக் காய்கள்.
நெல்லைத் தின்னும் மயில், சோளக்கதிரைத் தின்னும் கிளி, காக்கை, புறா போன்றவற்றைத் தவிர வேறெந்தப் பறவையும் பயிரினங்களை அழிப்பதில்லை. பயிர்களுக்குத் தீங்குசெய்யும் புழு, பூச்சி, பூஞ்சை முதலியவற்றை உண்ணவே எறும்பு, சிலந்தி, பறவை போன்றவை வருகின்றன. பூக்களிலுள்ள தேனையுண்ணவே வண்டும் ஈயும் வண்ணத்துப்பூச்சியும் வருகின்றன. நன்மை செய்பவையான இவற்றால் பூக்கள் கருப்பிடிக்கின்றன.
தீங்குசெய்யும் புழுக்கள் பயறுகளின் பரல்களைத் தின்றுவிடுகின்றன. புழுக்கள் காய்களினுள்ளே சென்று அவற்றைத் தின்று சூத்தையாக்குகின்றன. அவற்றைக் கொல்ல மருந்து தெளிக்கும்போது காய்களினுள்ளே ஒளிந்திருக்கும் இவை உடனடியாகச் சாவதில்லை. தப்பி விடுகின்றன. ஆனால் குற்றமற்ற, பயிருக்கு நன்மை செய்யும் இனங்கள் சாகின்றன. அதிலும் கொடிய சாவு தேனீக்களுக்குத்தான்.
தொலைத்தொடர்புக் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களாலும் தேனீ, வண்டு, பறவை ஆகிய இனங்கள் அழிவதாகக் கூறுகின்றனர்.

முந்தியெல்லாம் காடுகளில் பெரியபெரிய தேன்கூடுகள் இருந்தன. ஒவ்வொன்றும் சுளகு அகலம் இருக்கும். தேன்கூடுகள் கட்டுவதற்கு ஏற்றவிடங்களாகப் பனை, உடை, வேம்பு, மட்டைக்கூட்டம், பருத்திமாற்றுக்கட்டு, வாழ்முள்வேலி, இடுமுள்வேலி போன்றவை இருந்தன. இப்போதெல்லாம் வாழ்முள்வேலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இடுமுள்வேலியும் அமைக்கப்படுவதில்லை. முட்கம்பி வேலிகளே அமைக்கப்படுகின்றன. மட்டைகளையும் யாரும்  கூட்டமாக அடைவது கிடையாது. மட்டைகளைத் தீவைத்துக் கொளுத்திவிடுகின்றனர். பருத்தி, மிளகுசெடி போன்றவற்றின் மாறுகளை வயலில் உழவுக்காலுக்குள் மடக்கி உழுதுவிடுகின்றனர். இதனால் இப்போது தேன்கூடு கட்டுமிடங்களும் குறைந்துவிட்டன.
தேனீக்கள் பதநீர், பனம்பூ, மாம்பூ, வேப்பம்பூ, வாழைப்பூ, உடம்பூ, பருத்திப்பூ, கத்தரிப்பூ, தக்காளிப்பூ போன்றவற்றிலிருந்து தேனுறியும். இப்போது மரங்களையும் பனைகளையும் வெட்டியழித்துக் கொண்டிருப்பதால் தேனீக்களுக்குத் தேனுங்கிடைப்பதில்லை, கூடுகட்ட இடங்களுங் கிடைப்பதில்லை. தேனுறிய வயற்காட்டைத் தேடியலைய வேண்டியதாகிவிட்டது. வயற்காட்டுக்குப் புகலிடந் தேடிவந்த ஈக்களைச் சுடுகாட்டுக்கு அனுப்புவதற் கென்றே பூச்சிகொல்லி மருந்து தெளிக்கின்றனர் உழவர்கள்.
உலக வெப்பநிலை உயர்வு, மரஞ்செடிகொடிகள் குறைவு, காடுகள் தீவைத்துத் தீய்ப்பு, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பு, தொலைத்தொடர்புக் கோபுரங்களின் கதிர்வீச்சு ஆகியவற்றால் தேனீயினம் விரைவாக அழிந்துவருகிறது. அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்படுகின்றன. இதன் விளைவு உலக உயிரினச்சூழலில் சிக்கலை உண்டாக்கும். மரங்களுஞ் செடிகளும் பூக்கும். காயா. காய்த்தாலும் உதிரும். விளைச்சல் குறையும். இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும். மருந்துக்குக்கூடத் தேன் கிடைக்காது.
தேன்கூட்டைக் கட்டுவதற்குத் தேவையான மெழுகைச் சகதியிலிருந்து தேனீ எடுக்கும். முன்னர்க் குளங்கள், வாய்க்கால்கள், தோட்டங்கள் ஆகியவற்றிலிருந்து கூடுகட்டுவதற்குத் தேவையான மெழுகைத் தேனீக்கள் எடுத்தன. இப்போது வாய்க்கால் முதலியவை கற்களாலும் சாந்தாலும் கட்டப்படுகின்றன. கழிவுநீருக்குக்கூடக் கால்வாய்கள் கட்டப்படுகின்றன. இதனால் அவற்றில் மண்ணாலான சகதி இராது. இதனால் இப்போது மெழுகு எடுக்குமிடங்களும் குறைந்துவிட்டன.

உலகில் வாழும் பல்லுயிர்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. தேனீக்கள், பூக்கும் மரம், செடி, கொடிகளைச் சார்ந்திருக்கின்றன. மரம், செடி, கொடி ஆகியவை மண்ணையும் நீரையும் உரத்தையும் சார்ந்திருக்கின்றன. மனிதர்களும் விலங்குகளும் தங்கள் உணவுக்கு மரம், செடி, கொடிகள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றனர். இந்த உயிர்த்தொடர்ச் சங்கிலியில் ஒரு கண்ணி அற்றுப்போனால் பிற கண்ணிகளும் அற்றுப்போகுஞ் சூழல் உண்டாகும். ஆகையால் பூச்சி, ஈச்சி என்று எளினமாய் எண்ணாமல் அவை உலகத்தின் உயிர்மூச்சு என்று எண்ண வேண்டும்.

தேனீக்களைக் காக்க வேண்டுமெனில் மரங்களை வளர்க்க வேண்டும். இப்போது இருக்கும் மரங்களையும் வெட்டாமல் காக்க வேண்டும். மரம், செடி, கொடி ஆகியவற்றின் கழிவுகளைத் தீக்கொளுத்தாமல் மட்கிப் போகச் செய்ய வேண்டும். பயிர்களைக் காக்கப் பூச்சிகொல்லி மருந்தைத் தெளிக்காமல் இருக்க வேண்டும். மருந்து தெளிக்காவிட்டாலும் பயிர் நன்றாக விளையும் என்னும் உண்மையை உழவர்கள் உணர வேண்டும். ஈக்களுக்கு நிகழும் இறப்பு அடுத்து நமக்கு என்பதை மனிதர்கள் உணர்ந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும். சூழல்காப்பில் ஈடுபட்டிருக்கும் தொண்டு நிறுவனங்களும் இந்த உண்மையை உழவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

உலகில் மனிதன் துய்க்க எத்தனையோ கோடி இன்பங்கள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து துய்க்க வேண்டுமானால் மரங்களை வளர்ப்போம்தேனீக்களைக் காப்போம்; பயிர்களை வளர்ப்போம்; உயிர்களைக் காப்போம்.

சே.பச்சைமால்கண்ணன் 


4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கட்டுரையைப் படித்துக் கருத்துச் சொன்னதற்கு நன்றி ஐயா...

      நீக்கு
  2. மிக அருமையான கட்டுரை. இயற்க்கைக்கு எதிராக மனிதன் வாழ தொடங்கி விட்டதன் விளைவு என்ன என்பதை தான் இப்போது நாம் பார்த்து வருகின்றோம்.வாழ்த்துக்கள் ✨🌟👌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுச்சூழல் அக்கறையுடைய இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்துக் கருத்துச் சொன்னதற்கு நன்றி ஐயா..

      நீக்கு