புதன், 10 ஏப்ரல், 2024

சாலைப் பாதுகாப்பு

புவியில் உயிர்கள் தோன்றியது முதல் இன்றுவரை கால்நடைப் பயணம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஊர்வன, தவழ்வன, நடப்பன ஆகியவற்றுடன் மனிதர்களும் நடந்து வருகிறார்கள். என்னதான் பெரும் செல்வந்தராக இருந்தாலும் சொகுசு மகிழுந்து முதல் வானூர்தி வரை வைத்திருந்தாலும் சில இடங்களுக்கு நடந்துதான் சென்றாக வேண்டும்.

நீர்வாழ் உயிரினங்கள் நீரில் நீந்துகின்றன. நிலத்தில் வாழும் பறவைகள் சில அடிகள் மட்டும் நடந்து செல்லும் இயல்புடையன. அவை பெரும்பாலும் பறந்தே செல்கின்றன. நிலவாழ் உயிரினங்கள் அனைத்துமே அவற்றின் தோற்றக் காலத்தில் இருந்து இன்றுவரை ஊர்ந்தும், நடந்தும் செல்கின்றன.

இயற்கை மீது மனிதன் ஆதிக்கம் செலுத்தாக் காலத்தில் புவியெங்கும் அடர்ந்த காடுகளாக இருந்தன. அக்காலத்தில் ஓடைகளும் ஆறுகளுமே அக்காட்டின் நடுவே வழியாக அமைந்தன. அதனால்தான் ஆறு என்கிற சொல்லுக்கு வழி என்ற பொருளும் உண்டு. அது மட்டுமல்லாமல் இன்றும் நாட்டில் உள்ள பெருவழிகள் எல்லாம் ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ளதைக் காணலாம்.

கால்நடையாகப் பாதம் பதித்து மனிதனும் ஆடுமாடுகளும் நடந்துசென்ற வழியே பாதையாகும். அது பெரும்பாலும் ஒற்றையடிப் பாதையாக இருக்கும். சக்கரமும் வண்டியும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இரட்டை மாடுகளை வண்டிகளில் பூட்டிப் பயணம் மேற்கொண்டபோது, வண்டியின் இருசக்கரங்களும் மண்ணில் உருண்டு அந்த வழி இரட்டைத் தடங்கொண்ட பாதையானது.

நிலவாழ் உயிரினங்களில் மனிதன் மட்டுமே தனது அறிவால் சக்கரத்தையும் வண்டிகளையும் கண்டுபிடித்து முதலில் கால்நடைகளின் உதவியுடன் பயணம் மேற்கொண்டான். விளைபொருட்கள், கட்டுமானப் பொருட்கள், செய்பொருட்கள் ஆகியவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டுசென்றான். இப்போது எந்திர ஊர்திகள் மூலம் பயணம் நடைபெற்று வருகிறது.

எறும்புகள், கறையான்கள் சாரை சாரையாக ஊர்ந்து சென்றாலும் அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளவில்லை. ஆடுமாடுகள், காட்டுவிலங்குகள் கூட்டம் கூட்டமாகச் சென்றாலும் அவை சண்டையிடும்போது ஒன்றையொன்று முட்டிக்கொள்ளுமே தவிர இயல்பாக நடந்துசெல்லும்போதும் ஓடும்போதும் ஒன்றையொன்று இடிப்பதில்லை.

மனிதனும் நடந்துசெல்லும் காலம் வரை, உடன்செல்வோரையும் எதிரில் வருவோரையும் இடிக்கவில்லை. மிதமான வேகமும் பொறுமையும் இருந்தது அதற்குக் காரணங்கள்.

நேரத்தையும் தூரத்தையும் விரைவாகக் கடக்க முயல்வதே விபத்துக்கான முதற்காரணமாகும். மிதிவண்டிகள் பயன்படுத்திய காலத்தில்கூட அனைவரும் விரைந்து சென்றாலும் மோதல் இல்லை. மிதமான வேகத்தில் செல்வதும், கால் மிதியை விட்டதும் வேகம் குறைந்துவிடுவதும் அதற்குக் காரணம்.

மோட்டார் ஊர்திகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகே விபத்துக்கள் பெருகிவிட்டன. ஒரே தடத்தில் போக்கும் வரத்தும் இருந்த காலத்தில் கூட விபத்துக்கள் அரிதாகவே நிகழ்ந்தன. இப்போது போகவும் வரவும் தனித்தனித் தடங்கள், நால்வழிச்சாலை, ஆறுவழிச்சாலை, எட்டுவழிச்சாலை எனச் சாலையின் அகலமும் அதிகரித்துள்ளது.

பொறுமையாகச் சென்றாலே விரைந்து சென்றுவிட முடியும் என்ற சூழலிலும் சாலைச் சந்திப்புகள், பிரிவுகள், கூடல்கள், நடப்போர் சாலையைக் கடக்குமிடங்கள், தொடர்வண்டிக் கடவுகள் ஆகியவற்றில் பொறுமை காக்காமல் விரைந்து செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் நேர்ந்து விலைமதிப்பில்லா உயிர்கள் இறப்பதையும், உடல்கள் புண்ணாகி உறுப்புகளை இழந்து காலமெல்லாம் துன்பத்தில் அழுந்துவதையும் பார்க்கிறோம்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ரஷ்யா, அரபுநாடுகள், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடப்போருக்கும் மிதிவண்டிகளில் செல்வோருக்குத் தனித்தடமும் விபத்தில்லாப் பாதுகாப்பும் செய்துகொடுத்துள்ளனர். இந்தியாவில் மிதிவண்டிக்குத் தனித்தடமும் இல்லை, நடைபாதையும் இல்லை. அப்படியே நடைபாதை இருந்தாலும் அதில் கடைகள் வைத்தும் வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமித்திருப்பதால், மக்கள் சாலையில் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சாலையில் போவதற்கு ஒருவழி, வருவதற்கு ஒரு வழி என்று விதி இருக்கிறது. ஒவ்வொரு வழியில் இருந்தும் செல்லும் வாகனங்களும் சந்திப்புகளில் மோதாமல் கடப்பதற்குச் சைகைகள் உள்ளன. இருப்பினும் எதிர்த்திசையில் செல்லும் வாகனங்களாலும், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களாலும், சைகைகளை மதிக்காமல் மீறிச் செல்லும் வாகனங்களாலும், மற்ற வாகனங்களில் செல்வோரும், நடந்துசெல்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.

வாகனத்தில் செல்லும் ஓட்டுநர்கள்,

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து என்பதை நினைவிற்கொண்டால் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

விதிகளை மீறுவோரிடமும் விபத்துக்குக் காரணமானவர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு விட்டுவிடும் போக்கே விபத்துக்கள் தொடர்ந்து அதிகரிக்க முதன்மைக் காரணம். அதிகாரம் மிக்கோர், பணம் படைத்தோர் தவறாக வண்டி ஓட்டி எளியவர் மீது ஏற்றிவிட்டால், எளியவர் மீதே தவறுள்ளதாகக் காட்டி வழக்குப் பதியும் போக்கும் இங்கு உள்ளது. இரவில் உறங்காமல் தொடர்ந்து வண்டி ஓட்டுவது, குண்டும் குழியுமான சாலைகள், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது, சாலையில் சாகசங்கள் செய்வது, சரக்கு வாகனங்களில் கொண்டுசெல்லும் பொருட்கள் சாலையில் விழுந்துவிடுவது, செல்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டுதல் ஆகியனவும் விபத்துக்கான காரணங்களாகும்.

இவற்றுக்கெல்லாம் மேலே பொறுமையில்லாததும் ஒரு காரணமாகும். ஒவ்வோரிடத்திலும் வைத்துள்ள கைகாட்டிகள், சைகைகள் ஆகியவற்றைப் பார்த்து அதற்கேற்ப வேகத்தைக் குறைத்துப் பொறுமையாகச் சென்றால் சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக விளங்கும்.

இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பொறுத்தவரை சாலைகள் வாகனத்துக்கானவை மட்டுமே, நடப்போர் அதில் குறுக்கே வரக்கூடாது என்ற தவறான எண்ணம் வண்டி ஓட்டிகளிடம் உள்ளது. இந்த எண்ணம் மாற வேண்டும். வெளிநாடுகளில் சாலையைக் கடப்பதற்கான இடம் மட்டுமன்றி எந்தவோரிடத்திலும் நடப்போர் கடந்தால் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் தொலைவிலேயே வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் முழுவதுமாகச் சாலையைக் கடந்துசென்ற பிறகே வண்டியை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்.

இந்தியாவில் அப்படி இல்லை. நடப்போருக்காக வெள்ளைக்கோடுகள் போட்ட இடத்திலும் கூட உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. ஒருசிலர் சைகையை மீறி வாகனங்களில் விரைவாகச் செல்வதே அதற்குக் காரணமாகும். வெள்ளைக்கோடுகளும் சைகையும் இல்லாத மற்ற இடங்களில் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சைகையை மீறிச் செல்வோரும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரும், சாலைச் சந்திப்புகள், நடைபாதைக் கடவுகள் ஆகியவற்றில் வேகத்தைக் குறைக்காமல் செல்வோரும் சாலையில் நகரும் தற்கொலைப் படையாகவே உலவுகின்றனர். இவர்களால் நடப்போருக்கும் மற்ற வாகனங்களுக்கும் ஆபத்து நேர்கின்றது.

விருதுநகரில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார், காலை ஆறரை மணிக்குச் சிவரக்கோட்டையில் கடவு உள்ள இடத்தில் வந்தபோது, வேகத்தைச் சற்றும் குறைக்காததுடன், அதனுடைய தடத்திலிருந்து விலகி, ஓரத்தில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதன் பிறகு வலப்புறமாக விலகிச் சென்று சாலை நடுத்தடுப்பில் பின் சக்கரம் ஏறியதால் தறிகெட்டுப் புரண்டு, அதற்கு வலப்புறமும் உள்ள தடுப்பில் மோதி, அதன் அப்பால் உள்ள அணுகுசாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் கொய்யாப்பழம் ஏற்றிச் சென்ற சிறுவணிகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குள்ளான காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நிகழ்விடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். வாகனத்தின் ஓட்டுநர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். பொறுமையின்மையும், அதிவிரைவுமே இந்த விபத்துக்குக் காரணம்.

சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும். இருந்தாலும் மனிதநேயமும், உயிர்களிடத்தில் அன்புகாட்டுவதும், பொறுமையுமே விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கும். நாட்டில் அத்தகைய ஒரு சூழலை உருவாக்க லஞ்சமும் ஊழலும் இல்லாத நல்லாட்சி அமைவதே தீர்வாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக