புதன், 24 ஏப்ரல், 2024

மக்களவைத் தேர்தலில் மாற்றத்தின் அறிகுறி

தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் ஏப்ரல் 19ஆம் நாள் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்மக்கள் சட்டத்தை மதித்து மக்களாட்சியில் தங்கள் கடமையை அமைதியாகச் செய்துள்ளனர். இதனால் மட்டுமே இங்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.



தொழில், பணி, கல்வி ஆகியவற்றின்பொருட்டு வெளியூரில் தங்கியுள்ள மக்கள் அங்கிருந்து சொந்த ஊருக்குச் சென்று வாக்களித்து வரப் போதுமான போக்குவரத்து வசதிகளைத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமும், இந்திய தொடர்வண்டித்துறையும் செய்யவில்லை. தேர்தலுக்கு முந்திய நாளில் பிற்பகலில் ஒரு சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே. விருதுநகர், தென்காசி, வழியாக அந்த வண்டி திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடங்கள் நிரம்பிக் காத்திருப்போர் பட்டியலில் வரிசை நீண்டது.

வழக்கமான விரைவு ரயில்களில் முன்பதிவு இடங்கள் நிரம்பி, முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நிற்கக் கூட இடமில்லாமல் மூச்சு முட்டி மக்கள் துன்புற்றனர். சென்னை பூங்காநகரில் தலைமையிடத்தைக் கொண்டிருப்பது பெயருக்குத் தான் தெற்கு ரயில்வே. வட மாநிலத்தவரின் தேவைக்காகச் சிறப்பு ரயில்களை இயக்கும் இந்தத் தெற்கு ரயில்வே, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் அதற்காகச் சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலும், சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்காசி, தூத்துக்குடி, மதுரை, இராமேசுவரம், திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கும் பத்துச் சிறப்பு ரயில்களையாவது இயக்கியிருக்க வேண்டும்.

நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரத்தில் மட்டும் சொன்னால் போதாது. அதற்கான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். தமிழ்மக்கள் ஒன்றும் பணங்கொடுத்துப் பயணச்சீட்டு வாங்காமல் இலவசமாகப் பயணிப்பவர்கள் இல்லை. உழைத்து ஈட்டிய பணத்தைச் செலவிட்டுச் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கும் மானமும் கடமையும் உள்ளவர்கள். 

வழக்கமான வண்டிகளில் ஏராளமானோர் நின்றுகொண்டு சென்ற பிறகும், சென்னை எழும்பூரில் கூட்டம் அலைமோதியது. இதனால் இரவு பத்துமணிக்கு மேல் மயிலாடுதுறை வழியாகத் திருச்சிக்கு முன்பதிவில்லாச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அது எழும்பூரிலேயே நிரம்பியது. தாம்பரத்தில் ஏறியவர்கள் நின்றுகொண்டு சென்றனர். இந்த ரயில் சென்னையில் இருந்து புறநகர்ப் பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்ளூர் ரயிலாகும். இதில் கழிப்பறைகள் இல்லை. வாயிலுக்குக் கதவுகள் இல்லை. வாயிலோரம் அமர்ந்திருந்தவர்கள் பாதுகாப்பின்றிப் பயணித்தனர்.

சிறப்பு ரயிலில் திருச்சிக்குச் சென்ற ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் ரயில்களில் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்றாலும் அங்கிருந்து ஊருக்குச் செல்வதற்கு வாக்குப்பதிவு நாளில் போதிய பேருந்துகள் இல்லை. திருநெல்வேலிப் புதிய பேருந்து நிலையத்தில் வெளியூரில் இருந்து வந்த மக்கள் கூட்டம் அலைமோதியது. திசையன்விளை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்துசேரக் கொடுத்த அதே அளவுக் கட்டணத்தை ஆட்டோவுக்குக் கொடுத்துச் சொந்த ஊருக்குச் சென்றனர்.

சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்லும் மக்களின் இன்னலைப் போக்கும் வழிகளில் ஒன்று. தமிழ்நாட்டில் இரு கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது. அடுத்த முறை சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும்போது இதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தது. பாஜக வேட்பாளர் நாகேந்திரனுக்காகச் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்தனர். இதையே சாக்காக வைத்துத் தமிழ்நாடு முழுவதும் இந்த முறை வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது குறைந்துவிட்டது. ஒன்று வேட்பாளர்களே பணம் வழங்கவில்லை. அவர்கள் கொடுத்தாலும் முகவர்கள் வாக்காளர்களுக்குக் கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மொத்தத்தையும் பதுக்கிக் கொண்டனர். எப்படியோ வாக்காளர்களுக்குச் சரியாகப் பணம் போய்ச் சேரவில்லை. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியைக் காரணங்காட்டி அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் செலவைக் குறைத்துக் கொண்டனர்.

பெரிய அரசியல் கட்சிகள் பணம் வழங்காததால் அதிர்ச்சியடைந்த மக்கள், அந்தக் கட்சிகளைப் புறக்கணித்துத் தாங்கள் விரும்பிய சிறு கட்சிகளுக்கு வாக்களித்திருப்பது அரசியலில் ஒரு மாற்றம் வந்துள்ளதற்கான அறிகுறியாகும். வருங்காலத்திலும் இதேநிலை தொடர்ந்தால் ஊழல் கட்சிகள் ஒழியும். மக்கள் நலம் நாடும் கட்சிகள் அரசியல் அதிகாரத்துக்கு வரும்.

தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாகத் தருமபுரித் தொகுதியில் 81 விழுக்காடும், குறைந்த அளவாக மத்தியச் சென்னைத் தொகுதியில் 54 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 69 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் மூன்று, அண்டை மாவட்டங்களில் மூன்று என 6 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்ததற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

தொலைவான வெளியூரில் உள்ள வாக்காளர்கள் ஊருக்குச் சென்றுவரப் போதிய போக்குவரத்து வசதிகள் செய்யாமை, அரசியல் கட்சி வேட்பாளர்கள் பணம் கொடுக்காததால் அதிர்ச்சியடைந்த மக்கள் வாக்களிக்கச் செல்லாமை, மத்திய மாநில அரசுகளின் ஊழல், பெருநிறுவனங்களுக்குச் சார்பான அரசின் செயல்பாடு, ஊரக மக்களின் நலன்களைக் கண்டுகொள்ளாமை ஆகியன வாக்குப்பதிவு குறைந்ததற்குக் காரணங்களாகும். இவையனைத்துக்கு மேல் கோடைவெயில் சுட்டெரித்தது முதன்மைக் காரணம். ஊர்ப்புறங்களில் மாலை 4 மணிக்கு வெக்கை தணிந்த பிறகு 6 மணிவரை ஏராளமானோர் வாக்களித்தனர். அந்தக் கடைசி நேரத்திலும் தேர்தல் ஆணையம் வழங்கிய சீட்டைக் கொண்டு வாக்களிக்க வந்தவரிடம் அடையாள அட்டையைக் கொண்டு வாருங்கள் எனக் கூறி வாக்குப்பதிவு அலுவலர்களும், அங்குக் காவலுக்கு நின்றவரும் திருப்பி அனுப்பியது தவறான போக்கு.

சென்னையில் இருந்து மூவாயிரம் ரூபாய் செலவழித்துக் கடும் இன்னலுக்கிடையே 700 கிலோமீட்டர் பயணித்துச் சொந்த ஊருக்குச் சென்றவரை அந்தப் பெயருக்குரியவர் அவர்தானா? எனச் சரிபார்த்து வாக்களிக்க விடுவதுதானே நன்முறை. அடையாள அட்டையை எடுத்துவிட்டு வா? என்று திருப்பி அனுப்புவது வன்முறை. அம்முறையை அடுத்த முறை கைவிட வேண்டும் என்று முறையிடுகிறோம்.

சென்னையின் மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விழுக்காடு குறைந்துள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் பணம் வழங்கவில்லை என்பதற்காகத் தேர்தலைப் புறக்கணித்துள்ளது வருந்தற்குரியது. அதே நேரத்தில் கழுத்திலும் கையிலும் சாரைப்பாம்பு போன்ற தங்கச் சங்கிலிகளை அணிந்துகொண்டு விலையுயர்ந்த கார்களில் வந்து இறங்கி வரிசையில் நின்று வெள்ள நிவாரணத் தொகை பெற்றவர்கள், அதே ஆர்வத்தில் வாக்களிக்க வரிசைக்கு வராதது பணத்தின் மீது மட்டும் பற்றுடையவர்கள் அவர்கள் என்பதைக் காட்டிவிட்டது.

பரந்தூர் வானூர்தி நிலையம் அமைக்க நிலம் எடுப்பதைக் கண்டித்துத் தேர்தலைப் புறக்கணித்தவர்கள் மீது வழக்குப்பதிந்துள்ளது கொடுஞ்செயலாகும். அப்படியென்றால் சென்னையில் வாக்களிக்காமல் புறக்கணித்தோர் மீதும் அதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? காலங்காலமாகப் பல தலைமுறையாகத் தொடர்ந்து குடியிருந்து வரும் ஊரைவிட்டு மொத்தமாக எழுப்பி விடுவதை யார்தான் மனமார விரும்புவர்? நாடு விடுதலை பெற்று 75ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட அந்த மக்கள், தங்கள் வாழ்வையே அழிக்கத் துடிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், தேர்தலைப் புறக்கணித்துத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் மீது வழக்குப் பதிந்தது, இந்த நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நிலவுவதையே காட்டுகிறது. 

ச.பாலசெல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக