வியாழன், 30 மே, 2024

சினமும் பொறுமையும் - சிறுகதை

திருநெல்வேலிக்குத் தெற்கே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் எங்கள் கோவன்குளம். இங்கு 1990ஆம் ஆண்டு 100 குடும்பத்தினர் வாழ்ந்தனர். 34ஆண்டுகள் கழித்து இப்போது 60 குடும்பத்தினர் வாழ்கின்றனர். இங்கிருந்து வெளியேறியோர், இங்குள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் என 40 குடும்பங்கள் மும்பை, சென்னை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் வாழ்கின்றனர்.

ஒரு காலத்தில் பனையேற்று, ஆடுமாடு வளர்ப்பு, வேளாண்மை ஆகியவற்றையே முதன்மையான தொழிலாகக் கொண்டிருந்த இந்த ஊர்மக்கள், இப்போது வேளாண்மையை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவ்வூரின் தெற்கில் நம்பியாறு பாய்கிறது. திராவிடக் கொள்ளையர்கள் ஆற்றுமணலை அள்ளுமுன் இந்த ஆற்றில் ஓராண்டில் வெள்ளம் வந்தால் நான்காண்டுக்கு நிலத்தடி நீர்வளம் வற்றாமல் இருந்தது. இரு திராவிடக் கொள்ளை அரசுகளும் மணலைத் துடைத்து அள்ளியபின் ஆற்றில் நீரோட்டமும் குறைந்தது. இதன் விளைவாக நிலத்தடி நீர்வளமும் குறைந்தது.

வரம்பின்றி இயற்கை வளங்களைக் கொள்ளையடித்ததன் விளைவாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பருவக் காலச் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களிலும் காணப்படுகிறது. 2022 சனவரிக்குப் பிறகு 22 மாதங்கள் மழையே பெய்யாமல் கடும் பஞ்சம் நிலவியது. இக்காலத்தில் ஆயிரக்கணக்கான பனைகளும் தென்னைகளும் கொண்டை சாய்ந்து பட்டுப்போயின. இனிச் செழிப்பாக மழை பெய்யாவிட்டால் புல் பூண்டு செடி கொடி மரங்களும் பட்டுப்போகும், அதனால் இந்த மண்டலத்தில் மனிதர்களும் கால்நடைகளும் வாழ முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பருவமழை பொய்த்து மக்கள் நம்பிக்கையை இழந்திருந்த நிலையில் திசம்பர் மாத நடுவில் ஒரேநாளில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இரு மாவட்டங்களிலும் அனைத்துக் குளங்களும் பெருகி மறுகால் வழியாகத் தண்ணீர் பாய்ந்தது. அப்போதும் பட்டம் தவறினால் நட்டம் என்பதை உணர்ந்த உழவர்கள் பெரும்பாலோர் நெல் பயிரிடவில்லை. சொந்தக் கிணறு வைத்துள்ள உழவர்கள் மட்டும் துணிந்து நெல் பயிரிட்டு இரண்டு மேனி விளைச்சல் கண்டனர். பிற உழவர்கள் உரிய பட்டத்துக்கு முன்பே மார்கழியிலே பருத்தி பயிரிட்டனர். ஈராண்டு வறட்சிக்குப் பின் பருத்தியும் ஆளுயரத்துக்கு மேல் வளர்ந்தது.


மே மாதத்தில் தொடர்ந்து 18 நாட்கள் பெய்த கோடைமழை பட்டம் தவறினால் நட்டம் என்பதை மீண்டும் மெய்ப்பித்தது. பருத்திக் காய்கள் செடியிலேயே சூத்தையாகிக் கொட்டை முளைத்துப் பாழாயின.

கீழைக் கடலில் உருவாகி வங்கத்தை நோக்கிச் சென்ற ஒரு புயலின் விளைவாகத் தமிழ்நாட்டின் காற்றுமண்டலத்தில் இருந்த ஈரப்பதம் எல்லாம் ஈர்க்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து செழிப்பையும் அழிவையும் உண்டாக்கிய மழை 19ஆவது நாளில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு நானும் எங்கள் அப்பரும் வயலுக்குப் பருத்தி அற்க(பறிக்க)ச் சென்றோம். கோவன்குளத்தின் தெற்குப் பற்றிலும் வடக்குப் பற்றிலும் தலைமுறை தலைமுறையாகப் பங்கு வைத்ததால் வயல்கள் எல்லாம் துண்டு துண்டாகக் கிடக்கின்றன. அத்தகைய ஒரு வயலுக்கு நான் முதலில் சென்று பருத்தி அற்றுக்கொண்டிருந்தேன். முதலில் அற்ற இரண்டு கைப்பருத்திகளை ஒரு சணல் சாக்கினுள் போட்டு வாய்க்காலில் சாக்கை வைத்தேன். அதன் பிறகு எங்கள் அப்பர் பருத்தி அற்க வந்தார். நாங்கள் ஒரு ஏனம் நிறைய பருத்தி அற்றபின் அதைச் சாக்கில் தட்டுவதற்காக நான் சென்றேன். வாய்க்காலில் கிடந்த சாக்கைக் காணவில்லை. அதேநேரத்தில் அதற்குள் நான் போட்டிருந்த வெடித்த பருத்திகள் வயலுக்குள் கிடந்தன. நான் அதிர்ச்சியும் சினமும் கொண்டேன். நம் தன்மானத்தையும் வாழ்வுரிமையையும் சீண்டிப் பார்க்கும் செயல் இது எனச் சினங்கொண்டேன். சற்றுமுன் மேலை வயலில் இருந்து இந்த வாய்க்கால் வழியாகச் சென்ற பாண்டியன் பாட்டன் தான் திமிரில் பருத்தியைத் தட்டிவிட்டுச் சணல்சாக்கை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று கணித்தேன்.

அந்த வாய்க்காலில் அவர் நடந்த வழியில் துப்பறிவாளனைப்போல் பின்தொடர்ந்தேன். அவர்களின் கிணற்றை ஒட்டியுள்ள நீரிறைக்கும் பொறி வைத்திருக்கும் புரையை அடைந்தேன். கதவில்லா அந்த அறையை நோட்டமிட்டதில் அங்கு எங்கள் சாக்கில்லை என்று தெரிந்தது. அதையடுத்த தென்னந்தோப்புக்குள் உலவிக்கொண்டிருந்த அவரிடம் நேரிலேயே பேசிவிட்டேன். பாட்டா உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வாய்க்காலுக்குள் கிடந்த சாக்கை வயலுக்குள் எடுத்துப் போட்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டுப் பருத்தியைக் கீழே தட்டிவிட்டுச் சாக்கை எடுத்து வந்திருக்கிறீர்களே? என்று சினமாய்ப் பேசினேன்.

இயல்பாகவே கடுஞ்சினம் கொள்பவராய் இருந்த பாட்டன் அப்போது அமைதியின் உருவமாய் நின்றார். ஏலே உன்னுடைய சாக்கை எடுத்துவர நான் அறிவில்லாதவனா என்ன? நானே நேற்று ஆறு சாக்கு வந்தேன். உன் சாக்கு எனக்கு எதற்கு? நான் உன் சாக்கை எடுக்கவில்லை. எங்கேயாவது உன் சாக்கு இருந்தால் எடுத்துக்கொள் என்று அமைதியாய்ப் பேசினார்.

அப்போதும் கூட அவர் சாக்கை எடுக்கவில்லை என்பதை நான் நம்பவில்லை. 30 ரூபாய் விலையுள்ள ஒரு சாக்குக்காக ஏன் சண்டையிட வேண்டும் என்று எண்ணிப் பொறுமையாக நாம்தான் செல்கிறோம் என்று பெருமைகொண்டு மீண்டும் வயலுக்குச் சென்றேன். எங்கள் வயலின் கீழை வயலுக்குள் சென்று தேடிப் பார்த்தேன். நான் தேடிய சாக்கு அங்குக் கிடந்தது. நான் வயலில் பருத்தி அற்றுக்கொண்டிருந்தபோது, அந்தச் சாக்கை என்னப்பர் எடுத்துக்கொண்டு சென்று கீழை வயலில் போட்டதை நான் அப்போதுதான் உய்த்துணர்ந்தேன்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் என்பதும், சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று என்கிற திருக்குறள்களெல்லாம் எனக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தன. பொறுமையாக வந்ததாகக் கருதிய நாம் பொறுமையாளர் இல்லை. தவறே செய்யாதபோதும், நாம் வினவியதற்குப் பொறுமையாகப் பேசினாரே அவர்தான் பொறுமையாளர். தவறேதும் செய்யாதபோதும் நம் குற்றச்சாட்டைப் பொறுத்துக் கொண்டு சினங்கொள்ளாமல் பொறுமையாகப் பேசினாரே அவரே பெரியவர் என்பதை உணர்ந்தேன்.

களவாடியதாகத் தவறாகக் கருதி மீண்டும் கிடைத்த அந்தச் சாக்கை எடுத்துக்கொண்டு, வாய்க்காலில் கிழக்கு நோக்கி நடந்தேன். மேற்கு நோக்கி வந்த அந்தப் பொறுமையாளரும் பெருமையாளருமான பாட்டனிடம் என்னப்பர்தான் சாக்கை எடுத்துக் கீழை வயலின் தெற்கு முக்கில் போட்டுள்ளார். நான் தவறாக எண்ணி உங்களிடம் பேசிவிட்டேன். என் பிழை பொறுத்தருளுங்கள் என்று அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். சரி அதனாலொன்றுமில்லை. போய்வா என்று பெருந்தன்மையுடன் கூறினார் அவர். நான் கூனிக்குறுகி நாணியபடி மீண்டும் வயலுக்குள் சென்று பருத்தி அற்றேன். நான் வாய்க்காலில் போட்டிருந்த சாக்கை எடுத்து ஏன் வேறிடத்தில் போட்டீர்கள் என்று கூறித் தந்தையிடம் கடிந்துகொண்டேன். அப்போதும் குற்றமில்லாத ஒரு பெரியவர் மீது ஆராய்ந்து அறியாமல் வீணே குற்றம் சுமத்தி விட்டோமே என்ற குற்றவுணர்வில் குறுகியிருந்தேன்.

அதேநேரத்தில் எங்கள் வயலுக்கு மேற்கேயுள்ள தங்கள் வயலுக்குச் சென்ற பாட்டனிடம் அவர் மனைவியான பாட்டி அங்கே என்ன நடந்தது? என்று வினவினார். ஒன்றுமில்லை என்றார் பாட்டன். இதுதான் பெருந்தன்மை.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்ற திருக்குறளின் பொருள் எனக்கு அப்போது புரிந்தது. ஆராய்ந்து செய்யாமல் செய்யும் செயலால் பெரும் சீரழிவு ஏற்படும் என்பதும், எத்தகைய சூழலிலும் சினத்தை அடக்கி ஆள்பவர்களால் தான் இவ்வுலகம் அழியாமல் தொடர்ந்து அமைதியாய்ச் செல்கிறது என்பதும் எனக்கு அப்போது புரிந்தது.

வீண் குற்றம் சுமத்திய நமக்குக் குற்றவுணர்வு உறுத்துகிறபோது, தவறே செய்யாத ஒருவர் மீது நாம்  வீணாகக் குற்றஞ்சுமத்தி விட்டோமே அவர் மனம் எப்பாடுபடும் என்று எண்ணிப் பார்த்தேன். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் என்பது எனக்கு இப்போது புரிந்து விட்டது.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆராய்வதே மெய். ஆராயாமல் ஒருவர் மீது குற்றஞ்சுமத்துவது எத்தகைய கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்கவே அஞ்சுகிறேன். நாணுகிறேன்.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக