செவ்வாய், 24 செப்டம்பர், 2024

மரபுவழி வேளாண்மைக்குத் திரும்புவோம்

 

வெண்பூப் பருத்தி
செம்பூப் பருத்தி


சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை (திருக்குறள் 1031).

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர் (திருக்குறள் 1033) என்றெல்லாம் உழவின் மேன்மையையும் முதன்மையையும் எழுதியுள்ளார் திருவள்ளுவர்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் தொழில் வேளாண்மை. முக்கால்வாசிப் பேருக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வந்தது. மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் உள்நாட்டு உற்பத்தி மதிப்பிலும் முதலிடத்தில் இருந்து வந்தது வேளாண்மை. இரண்டாமிடத்தில் தொழில்துறையும் மூன்றாமிடத்தில் சேவைத்துறையும் இருந்து வந்தன. சேவைத் துறை முதலிடத்தையும் தொழில்துறை இரண்டாமிடத்தையும் வேளாண்துறை மூன்றாமிடத்தையும் பிடிப்பதே வளர்ச்சி என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து இந்தியாவுக்குத் திரும்பிவந்த பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். அதன்படி கொள்கைகளை வகுத்து முப்பதாண்டுகளுக்கு மேலாகச் செயல்படுத்தி வருவதால் வேலைவாய்ப்பு வழங்குவதிலும், உள்நாட்டு உற்பத்தி மதிப்பிலும் வேளாண்மையின் பங்கு குறைந்துகொண்டே செல்கிறது.

நெல்விளையும் செழிப்பான நிலங்கள் நகரமயமாக்கலின் விளைவாகக் குடியிருப்புகளாக்கப்படுகின்றன. பிள்ளைகளின் படிப்பு, திருமணம், கடனைத் திருப்பிச் செலுத்தல் ஆகியவற்றுக்காகப் பெருமதிப்புள்ள நிலங்களை உழவர்கள் அடிமாட்டு விலைக்கு விற்கின்றனர். அவற்றை வளைத்துப் போடும் நிறுவனங்கள் துண்டு துண்டாக வீட்டு மனைகளாக்கிப் பெருந்தொகைக்கு விற்கின்றனர். இதனால் வயல்கள் அழிகின்றன. வயல்கள் அழிந்தபின் குளத்துப் பாசனம் தேவையற்றதாகி விடுகிறது. திராவிட அரசியலாரின் உதவியுடன் மடையின் நேரே குளத்தின் கரையை வெட்டி நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். குளத்தில் நீர் தேங்கும் பகுதி வரை உட்புறம் வீடு கட்ட முடியாத நிலை முன்பு இருந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெருந்தொகை கையூட்டுப் பெற்றுக்கொண்டு குளத்துக்கு உட்பகுதியிலும் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மழைக்காலத்தில் குளம்பெருகியதும் வீட்டைச்சுற்றித் தண்ணீர் நிற்கிறது. இதனால் குடியிருப்போரின் நலன்கருதிக் குளத்தின் கரையை வெட்டி நீரை வடியச் செய்கின்றனர். இப்படியே தமிழ்நாடு முழுவதும் நன்செய் நிலங்கள் உள்ள பகுதிகளில் வயல்வெளிகளும் குளங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி ஆகிய தானியங்களும், நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துக்களும் விளையும் புன்செய் நிலங்களும் வளமிக்கவைதான். நீர்ப்பாசன வசதியில்லாததால் அவை புன்செய் நிலங்களாக உள்ளன. உரிய பருவத்தில் போதிய மழை பெய்தால் அவை பொன்விளையும் பூமியாக விளங்கும்.

புன்செய்யுடன் ஒப்பிடும்போது நன்செய் நிலமே அதிகம்பேருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. அதனால்தான் மலிவு விலையில் மனித ஆற்றலைப் பெறுவதற்காக நன்செய் நிலங்களைக் குறிவைத்து அழிக்கும் வேலையைத் தொழில்துறையினரும் அரசும் இணைந்து திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். நிலங்களை விற்கும் உழவர்களும், வேலையிழக்கும் கூலித் தொழிலாளர்களும் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குறைந்த கூலிக்கு வேலைக்குச் செல்லும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தொழில்துறையைப் பொறுத்த அளவில் தொழில்நுட்பத் திறனற்றவர்களாகக் கருதப்படும் இந்தத் தொழிலாளர்கள் உதவியாளர், தோட்டக்காரர், காவல்காரர், ஏவலாள், கட்டுமானத் தொழிலாளர் ஆகிய வேலைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் அவர்கள் மேலும் மேலும் வறுமைக்குள்ளாகின்றனர்.

தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றுக்குப் பெருமளவிலான நிலம் தேவைப்படும்போது அவர்களின் முதன்மை இலக்கு நகருக்கு வெளியே சற்றுத் தொலைவில் உள்ள புன்செய் நிலங்களாகும். குறைந்த விலைக்குக் கிடைப்பதாலும், இயல்பிலேயே நீர் தேங்காத மேட்டுநிலங்களாக இருப்பதாலும் புன்செய் நிலங்கள் நிலக்கொள்ளையர்களின் முதன்மை இலக்காகின்றன. மக்களை வேலையிழக்கச் செய்யவும், தொழிற்சாலைகளுக்குக் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதற்கும் இந்த நிலப்பறிப்பு, நிலங்கையகப்படுத்தல் ஆகியன திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன.

வேளாண்மையில் பசுமைப்புரட்சிக் காலத்தில் இருந்து உயர்விளைச்சல் தரும் விதைகள், வித்துக்கள், ஒட்டுவகைச் செடிகள் பயிரிடப்படுகின்றன. விதை நேர்த்தி, அடியுரம், வளர்ச்சிக்கான யூரியா, மணிச்சத்துக்கான உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என முழுவதும் வேதிப் பொருட்களை இடுபொருட்களாக இடுவதே வேளாண்மை என்றாகி விட்டது. இவ்வளவு இடுபொருட்களையும் போட்டு விளைவிக்கும் உணவுப்பொருள் நஞ்சாக இருக்குமா? நன்றாக இருக்குமா?

உணவு நஞ்சாவது ஒருபுறம் இருக்கட்டும். தேவையற்ற, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மைகொண்ட இந்த இடுபொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்தவை. இதற்காகக் கடன்வாங்கியே உழவர்கள் கடன்காரர்களாகின்றனர். விளைச்சல் கிடைக்காதபோது இடுபொருளுக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முடிவுக்குச் செல்கின்றனர். வேளாண்மைக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்தில் பெரும்பகுதி உர நிறுவனங்களுக்கே செல்கின்றது.

இந்தச் செயற்கை உரங்களை வயலில் இடுவதைத் தவிர்த்தால் உழவரும் கடன்காரராக மாட்டார். அவர் விளைவிக்கும் உணவும் நஞ்சில்லாமல் நல்ல உணவாக இருக்கும். அத்தகைய சூழலில் நல்ல விளைச்சல் கிடைக்க என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிற வினா எழுகிறது. இத்தகைய வினாவை இன்றைய தலைமுறை உழவர்கள் எழுப்பினால் அவர்களுக்கு வழிமுறைகளைச் சொல்லிக்கொடுக்கலாம்.

நன்செய்க்கு நாலுழவு, புழுதிக்கு இரண்டு உழவு என்ற கணக்கில் உழுது மாட்டுச்சாணி, ஆட்டம் பிழுக்கை, கோழிக்கழிவுகள் இலை தழை மட்குகள், பசுந்தழை உரம், பிண்ணாக்கு, அடுப்புச் சாம்பல் ஆகியவற்றைப் பயன்படுத்திச் செலவில்லா உரமிட்டு ஒரு மேனி, ஒன்றரை மேனி விளைவித்த மூத்த உழவர்களும் உள்ளனர். பசுமைப்புரட்சி என்னும் மாயையில் சிக்கி அவர்களும் வேதியுரங்களுக்கு அடிமையாகிவிட்டனர். செலவில்லா மரபுவழி வேளாண்மை செய்வது எப்படி என முழுவதும் தெரிந்திருந்தும் அவர்கள் அதைப் பின்பற்றாமல் இருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். வேளாண்மை பணமீட்டும் தொழிலன்று, உலக உயிர்களுக்கு நஞ்சில்லா நல்லுணவை வழங்கும் உயரிய உயிர்காக்கும் தொழில் என்று உழவர்கள் உணர வேண்டும்.

நன்செய்த் தொளியில் மிதிப்பதற்குக் கொழிஞ்சி, ஆதலை, ஆவரைக் குழைகள் சாலையோரங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. தோட்டங்களிலும் வீட்டருகிலும் நிற்கும் வேம்பு, வாதமடக்கி ஆகிய மரங்களிலும் நுனிக்கொப்புகளை அரக்கித் தழையுரமாகப் பயன்படுத்தலாம். கடலைப் பிண்ணாக்கை உரமாகவும், வேப்பம் பிண்ணாக்கைப் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம்.

ஒற்றைப் பயிர், ஒற்றைத் தொழில் ஆகியன இலாபமில்லாமல் போயுள்ள இன்றைய சூழலில் கூட்டுப்பண்ணை முறையில் வேளாண்மை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஊடுபயிர், கலப்புப் பயிர் வகைகளைப் பயிரிடுவது, வேளாண்மையுடன் ஆடுமாடு கோழி ஆகியவற்றை வளர்ப்பது கூடுதல் இலாபம் கிடைக்க வழிசெய்யும். ஒரு தொழிலில் நட்டம் வந்தாலும் அதை மற்றொரு தொழில் சரிக்கட்டி இலாபமாக மாற்றும்.

வீட்டில் உள்ள உணவுக் கழிவுகளையும், வயலில் கிடைக்கும் இலை தழை வைக்கோல் காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றையும் ஆடு மாடு கோழி ஆகியன உண்டு கொழுக்கும். வயலில் கிடைக்கும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றையும், ஆட்டிறைச்சியையும் மனிதன் உண்ணலாம். கோழிகளில் இருந்து இறைச்சியும் முட்டையும் கிடைக்கிறது. உழவு, நீரிறைப்பு, வண்டி இழுப்பு ஆகியன இக்காலத்தில் இல்லாவிட்டாலும் மாடுகளைப் பாலுக்காகவும் சாணி உரத்துக்காகவும் மட்டுமே வளர்க்கலாம். வேளாண்மையில் மிகப்பெரும் செல்வமாக இன்றளவும் மாடுகள் விளங்குகின்றன. ஆதலால்தான் திருவள்ளுவரும் செல்வத்தை மாடென்றார் (கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை - திருக்குறள் 400).

சுற்றுச்சூழலுக்குக் கேடுசெய்யும் நெகிழிப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இக்காலத்தில் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனையோலை, மட்டை, நார், கயிறு ஆகியவற்றாலான பொருட்களைச் செய்து சந்தையில் விற்கலாம். நம் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். இரும்பு, அலுமினியம், நெகிழி ஆகியவற்றாலான அறைகலன்களைத் தவிர்த்து மரம், பனை, மூங்கில், பிரம்பு ஆகியவற்றாலான அறைகலன்களைச் செய்து பயன்படுத்தலாம். சந்தையில் விற்கலாம். இதனாலும் உழவுத் தொழிலின் இலாபம் அதிகரிக்கும்.

கடன்வாங்கி உழவுத்தொழிலைச் செய்வது, விளைச்சலுக்குப் பின் விளைபொருளை விற்றுக் கடனை அடைப்பது, விளையாத காலத்தில் கடன்சுமை அதிகரிப்பது, அப்போது கடனை அடைக்க நிலத்தை விற்பது என்கிற போக்கு இப்போதுள்ளது. உழவருக்குப் பாதகமான இந்தப் போக்கை மாற்றுவதற்கு விளைந்த உணவுப்பொருட்களில் நம் தேவைக்குப் போக எஞ்சியதையே விற்க வேண்டும். அதையும் உடனடியாக விற்காமல் நல்ல விலை கிடைக்கும்வரை இருப்பு வைக்க வேண்டும். நெல்லாக இருந்தால் அவித்துக் குற்றி அரிசியாக விற்கலாம். நிலக்கடலை, எள், தேங்காயாக இருந்தால் எண்ணெய் ஆட்டி விற்கலாம். சீனியவரை, கத்தரி, ஆகியன விளையும் காலத்தில் நல்ல விலை கிடைக்காவிட்டால் அவற்றை அவித்துக் காயப்போட்டு வற்றலாக்கி மதிப்புக் கூட்டி விற்கலாம்.

வயல்கள் தோட்டங்களைச் சுற்றிப் பழந்தரும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். பனங்கொட்டைகளை ஊன்றிப் பனைகளை வளர்க்க வேண்டும். நெடுங்காலப் பயன்தரும் இவை நிலங்களின் வேலியாகவும் எல்லைக்கல்லாகவும், காற்றுத் தடுப்பானாகவும், மண்ணரிப்புத் தடுப்பானாகவும் விளங்கும். ஆண்டு செல்லச் செல்ல மரங்களின் பனைகளின் மதிப்பும் உயர்ந்துகொண்டே போகும். அவற்றால் கிடைக்கும் பயன்களும் அதிகரித்துக்கொண்டே வரும். இப்படி நட்டத்தையும் இலாபமாக்கும் உத்தியை உழவர்கள் பின்பற்ற வேண்டும். இயற்கை வேளாண்மை எனப்படும் மரபுவழி வேளாண்மை, கூட்டுப்பண்ணை முறை ஆகியவற்றால்தான் இத்தகைய மாற்றத்தை நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை உழவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சே.பச்சைமால்கண்ணன்

2 கருத்துகள்: