செவ்வாய், 18 ஜூன், 2024

அதிமுகவில் ஒன்றரைக்கோடித் தொண்டர்கள் உள்ளனரா?

நாட்டின் ஏழு மாநிலங்களில் காலியாய் உள்ள பதின்மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சூலைப் பத்தாம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இவற்றுள் ஒன்று தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டிச் சட்டமன்றத் தொகுதியாகும். இங்குச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இடைத்தேர்தலுக்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் சூன் பத்தாம் நாள் வெளியிட்டது. சூன் 14ஆம் நாள் வேட்பு விண்ணப்பம் தொடங்கியது. சூன் 21 வரை விண்ணப்பிக்கலாம்.  திமுக வேட்பாளராக அன்னியூர் சிவாவும், பாமக வேட்பாளராக சி.அன்புமணியும், நாம் தமிழர் வேட்பாளராக அபிநயாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் வென்ற பெருமிதத்துடன், ஏற்கெனவே தன்னிடம் இருந்த விக்கிரவாண்டிச் சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றுவதற்காகத் திமுக களம் இறங்கியுள்ளது. தொகுதியில் அடங்கும் ஒவ்வொரு ஒன்றியப் பகுதிகளையும் இரண்டு மூன்றாகப் பிரித்து அவற்றுக்குப் பணப்பலம் மிக்க அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது. மூன்றாண்டுகளில் சிறப்பாக ஆட்சி செய்திருந்தால் இடைத்தேர்தலில் வெல்வதற்கு இவ்வளவு முன்னேற்பாடுகள் தேவையில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

விழுப்புரம் மாவட்டத் தொகுதி என்பதால் பாமகவைக் களமிறக்கி முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பாஜக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் தனித்து நின்று 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி இங்கும் தெம்புடன் தனித்துக் களம் காண்கிறது.

ஒன்றரைக் கோடித் தொண்டர்களைக் கொண்டிருப்பதாகவும், தனது பிறவி எதிரி திமுக என்றும் கூறிக்கொள்ளும் அதிமுக இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதில் வியப்பேதும் இல்லை. இடைத்தேர்தலில் ஆள்பலம், பணப்பலம், அதிகாரப்பலம் எல்லாவற்றையும் ஆளுங்கட்சி பயன்படுத்துவதையும், அதைக் கண்டு அஞ்சி எதிர்க்கட்சி ஒதுங்குவதையும் கருணாநிதி, செயலலிதா காலத்தில் இருந்தே நாம் பார்த்து வருகிறோம்.

திமுக, அதிமுக இரு கட்சிகளின் தலைவர்களும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி தங்கள் கட்சி என்று கூட்டங்களில் பெருமை பேசுவர். தங்களையும் தங்கள் சொத்துக்களையும் காத்துக்கொள்ள இவர்கள் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பர் என்பதை மக்கள் அறிவர்.

ஆட்சியைப் பிடிப்பதற்கான மாநிலந்தழுவிய சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் முழுத்தெம்புடன் போட்டியிடுவர். இடைத்தேர்தலில் முட்டி மோதிக்கொள்ள வேண்டாம் என்பதே எப்போதும் இவர்களின் உத்தியாகும்.

திமுக, அதிமுக இவையிரண்டும் தமிழ்நாட்டில் ஆற்றுமணற்கொள்ளை, மலைக்கொள்ளை, கடல்மணற்கொள்ளை ஆகியவற்றை வரம்புமீறிச் செய்துள்ளன. பேருந்தில் சென்ற வேளாண் பல்கலைக்கழக மாணவியரை உயிருடன் தீவைத்துக் கொளுத்துவது, பேருந்தில் வந்த ஊராட்சி மன்றத் தலைவரை வழிமறித்து வெட்டிக்கொல்வது, மணல்கடத்தலைத் தடுக்க வட்டாட்சியர் மட்டுமல்ல, கோட்டாட்சியர், ஆட்சியர் யார் வந்தாலும் லாரியை ஏற்றிக்கொல்வது அந்த அளவுக்கு இவர்களின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். இத்தகைய சூழலில் ஒருவரின் ஊழலை இன்னொருவர் பட்டியலிடுவதோ, அதை எதிர்த்துப் போட்டியிடுவதோ முந்தைய ஆட்சிக்காலத்தில் தாங்கள் செய்த ஊழலை வெளிப்படுத்துவதாகவும், தன் பல்லையே குத்தி நாற்றுவதாகவும் அமையும் என்பதை இவர்கள் அறிந்துள்ளனர். ஆதலால் திமுகவும் அதிமுகவும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ்நாட்டில் மக்கள்நலன் காக்கும் போராட்டம் எதிலும் நாலரை ஆண்டுகளுக்குப் பங்கேற்காது. தேர்தல் வருவதற்கு ஆறுமாதம் இருக்கும்போதுதான் உறக்கம் கலைந்து ஆட்சியைப் பிடிப்பதற்கான உத்தியாகத் தெருவுக்கு வருவர். இந்த இரு கட்சிகளைப் பொறுத்தவரை, ஆட்சியை நம்மிருவரில் ஒருவர்தான் பிடிக்க வேண்டும். புதிதாக வேறுயாரும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளன. இரண்டும் பிறவி எதிரிகள் எனக் கூறிக்கொண்டாலும், ஒரு கட்சியில் வழி அடைபட்டால் மறு கட்சிக்கு மாறிக்கொள்வது, ஒரு கட்சிக்காரர் செய்த தவறுகளுக்குச் சட்டப்படி தண்டிக்காமல் மிரட்டிப் பணம்பறித்துக்கொண்டு அவரைத் தப்பவிடுவது, வழக்கைக் காரணம் காட்டி மிரட்டி அரசியல் நகர்வுகளைச் செய்வது ஆகியவற்றால் இரு கட்சியினரும் நண்பர்களாகவே உள்ளனர். இவையனைத்துக்கும் மேல் இவையிரண்டுக்குமான பொதுவான ஒரு பண்பு இரண்டுமே ஊழலில் செழித்துத் திளைத்துக் கொழுத்திருப்பவை.

இவையிரண்டும் ஒன்றுசேர்ந்துகொண்டு கூட்டணிக்காரர்களையே கழுத்தறுத்து இரண்டகம் செய்யக்கூடியவை. இந்த இரண்டகத்தைப் பல தேர்தல்களில் பல தொகுதிகளில் கண்டிருக்கிறோம். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்கூட திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறுவதற்காகவே அதிமுக தனித்து நின்றதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அந்த நோக்கில்தான் விக்கிரவாண்டிச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பதுங்குவதையும் ஒதுங்குவதையும் பார்க்க வேண்டியுள்ளது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடைநாடு கொலைகொள்ளை வழக்கை விரைந்து விசாரித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்று கூறிய திமுக மூன்றாண்டுகளாகியும் அதைச் செய்யவில்லை. தனது அரசியல் நகர்வுகளுக்கு இந்த வழக்கை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு மிரட்டும் வேலையையே செய்து வருகிறது. திராவிடத்துக்குத் துதிபாடும் ஒருசிலர் பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்சியே அதிமுக ஒதுங்கிக் கொண்டதாகக் கூறுகின்றனர். அதில் உண்மையில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

மக்களவைத் தேர்தலில் 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு உள்ள துணிச்சல், 20 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற அதிமுகவுக்கு இல்லையா? இது ஒன்றரைக்கோடித் தொண்டர்களுக்கே இழுக்கில்லையா? என்று பலரும் வினவுகின்றனர்.

தனித்து நிற்போம், தலைதூக்குவோம் என்று கொக்கரித்த சண்முகம், செயக்குமார் ஆகியோரெல்லாம், அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்று வினவும் செய்தியாளர்களிடம் விடைகூற முடியாமல் தவித்து நிற்கின்றனர். தலையைத் தொங்கப் போட்டு நிற்கின்றனர்.

அதிமுகவுக்கு ஒன்றரைக் கோடித் தொண்டர்கள் இருப்பதாகக் கூறுவது உண்மை என்றால் வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. அதற்குள் ஒருவரை வேட்பாளராக அறிவித்துக் களத்தில் இறக்கி அந்தக் கட்சி தன் வலுவைக் காட்டும்.

இல்லையென்றால் ஒற்றைத் தலைமை, ஒற்றைத் தலைமை என்று இவர்கள் கூப்பாடு போட்டதில் எந்தப் பொருளும் இல்லை. அதிமுக ஒற்றைத் தலைமயிர் ஆகிவிட்டதே என்று கவலைகொள்ளும் நிலைக்குச் சென்றுவிடும்.

சே.பச்சைமால்கண்ணன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக