சனி, 1 ஜூன், 2024

தமிழறிவோம் - 2

தமிழ்மொழி காலப்போக்கில் திரிந்துவிடாதபடி அதன் எழுத்துக்கும் சொல்லுக்கும் வரம்பிட்டு இலக்கணம் வகுத்துள்ளனர் நம் முன்னோர். இன்றைக்கு உள்ள தமிழிலக்கணங்களில் தொன்மையானது தொல்காப்பியம். அந்தத் தொல்காப்பியமே முந்துநூல்கண்டு முறைபடத் தொகுக்கப்பட்டது என்கிறார் அதன் ஆசிரியர் தொல்காப்பியர். இதனால் எத்தனையாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழிலக்கணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ் இலக்கண வரம்பை மீறியும் திரிந்தும் போகும்போது அது வேற்றுமொழியாக உருவாகிறது. அப்படித் தோன்றியவை தான் கருநாடகத்தில் கன்னடமாகவும், ஆந்திர தெலங்கானத்தில் தெலுங்காகவும், துளுவத்தில் துளுவாகவும், மலையாளத்தில் மலையாளமாகவும் இன்று வழங்கி வருகின்றன.

பெருநிலப் பரப்பில் வழங்கும் தமிழ் செம்மையான நடையில் இருக்க வேண்டும், வரம்பை மீறக்கூடாது என்பதற்காகத் தான் அதற்கு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. நூலில் எழுதப்பட்ட இலக்கணம் பாக்களிலும் காவியங்களிலும் பயின்று வரும்போதுதான் அதைத் தக்க சான்றுகளுடன் நம்மால் புரிந்துகொள்ள முடியும். தமிழில் இலக்கண வரம்பை மீறாமல் எழுதப்பட்ட நூல்கள் ஏராளம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், கம்ப இராமாயணம், வில்லிபாரதம், பெருந்தேவனாரின் பாரதம் என்று அவை நீள்கின்றன.

இலக்கணம், இலக்கியம் இவையிரண்டிலும் பொதுவாக இலக்கு என்ற சொல் வருகிறது. இலக்கு என்ற சொல்லுக்குக் குறிக்கோள், எட்ட வேண்டிய இலக்கு ஆகிய பொருட்களையே இன்று பலரும் அறிவர். அவை தவிர இன்னும் ஒரு சிறப்பான பொருள் உள்ளது. அந்தப் பொருள்தான் தமிழில் உள்ள இலக்கணங்களையும் இலக்கியங்களையும் தன்னில் எழுத இடந்தந்து இன்றைய உலகத்துக்குக் கொண்டு சேர்த்துள்ளது என்றால் வியப்பாக இருக்கும்.

இலக்கு என்றால் பனை ஓலை இலக்கு. வளைந்து நெகிழும் தன்மையுடன் இலகுவாக இருப்பது இலக்கு. பனையின் மட்டையில் ஓலை விரிந்திருக்கும். அவ்வோலையில் வரிசையாக ஈர்க்குகள் இருக்கும். ஒவ்வொரு ஈர்க்கிலும் இரண்டு இலக்குகள் ஒட்டியிருக்கும். ஈர்க்குகளை வகுந்த பின் எடுத்த இலக்குகளைப் பதப்படுத்தியே ஏடுகளாகவும் சுவடிகளாகவும் தொகுத்தனர். இந்த இலக்குகளில் எழுதப்பட்டவையே இலக்கணமும், இலக்கியமும். புலவர்கள், மக்கள் ஆகியோரின் நாவிலும் மனத்திலும் இருந்து இலக்கணமும் இலக்கியமும் பயின்று வரும் என்றாலும், ஓலைச்சுவடிகளிலேயே அவை கண்ணுக்குப் புலனாகும் எழுத்துக்களாக விளங்கின. ஆகையால் இலக்குகளில் எழுதப்பட்டவை என்பதால் இலக்கணம் இலக்கியம் என அவை பெயர்பெற்றன எனலாம்.

(பனைவடலி)ஓலை 

ஓலை இலக்குகள்

ஈர்க்குடன் ஓலை இலக்கு

ஈர்க்குப் பிரித்த ஓலை இலக்குகள்

எழுதும் தாளை உருவாக்குமுன் ஓலைச்சுவடிகளிலேயே இலக்கணமும் இலக்கியமும் எழுதப்பட்டன. நில உரிமைகள் செப்புப் பட்டயம், கல்வெட்டு ஆகியவற்றில் பொறிக்கப்பட்டன. பெரும்பாலும் பிழைகள் இல்லாமலேயே எழுதப்பட்டன; பொறிக்கப்பட்டன. தாளிலேயே ஒரு பக்கத்தில் பல முறை அடித்தல் திருத்தலுடன் எழுதும்போக்கு இன்றும் உள்ளது. ஆனால் பல நூற்றாண்டுகட்கு முன்பு ஓலை இலக்கில் எழுதியவர்கள் ஓரெழுத்துக்கூட அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதியுள்ளனர். பின்வரும் தலைமுறையினர் செம்மையாக எழுதுவதற்கும் பேசுவதற்கும் அவற்றையே கண்கண்ட சான்றாகக் கொண்டனர்.

நம் காலத்திலும் பாடநூல்கள், படிக்கும் நூல்கள், நாளேடுகள், இதழ்கள் ஆகியவற்றில் உள்ளதே இலக்கணத் தூய்மையுடன் உள்ள சரியான சொல் வடிவம் என்று கருதியிருந்தோம். அந்தக் கருத்தும் சரியானதாக இருந்தது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பேசப்படும், படிக்கப்படும், பாடப்படும் வடிவமே சரியான ஒலி வடிவம் என்றும் கருதினோம். ஓரெழுத்துக் கூட, ஒலிப்புக் கூடப் பிழையாக இருக்கக் கூடாது என்று அக்கறையுடன் எழுதி வெளியிட்ட, படித்த ஆசிரியர்கள் இருந்த அந்தக் காலம் பொற்காலம்.

இப்போது அந்தச் சூழல் இல்லை. மலையாள, கன்னட, தெலுங்கர்கள், இந்தியர்கள் தமிழ் ஊடகங்களில் ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களுக்குத் தமிழிலக்கணம் தெரியவில்லை என்றால் பொறுத்துக்கொள்ளலாம். ஆங்கில வழியில் படித்துவிட்டு வரும் தமிழ்நாட்டுத் தமிழரும், தமிழ் வழியில் படித்து இலக்கண அறிவில்லாமல் வரும் தமிழரும் ஊடகங்களிலும் பதிப்பகங்களிலும் ஆசிரியர்களாக உள்ளனர்.

ஒரு செய்தியைத் தெளிவாக எளிமையாக விளக்குவதற்குத் தமிழில் வேற்றுமை உருபுகள் உள்ளன. தமிழ் ஊடகத்தில் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்கிற வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்தும் அறிவு பெற்றவர்கள் சில நூறு பேர் என்றால், இந்த இலக்கண அறிவு இல்லாதோர் பல்லாயிரம் பேர். இந்த இலக்கண அறிவு இல்லாதோரே ஊடகங்களில் தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ளனர். மொழியுணர்வோ, பற்றோ, புலமையோ இல்லாமல் ஆதாயத்தை மட்டுமே முதன்மையாகக் கருதும் ஊடக முதலாளிகள் செய்தி ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டுப் பின்பற்றும் இயல்புடையோராக உள்ளனர். அவர்களையும் படிக்கும், கேட்கும், காணும் மக்களையும் தவறான பாதையில் வழிநடத்துவோராகவே ஊடக ஆசிரியர்கள் உள்ளனர். அப்படியென்றால் அச்சு, எழுத்து, காட்சி, மின்னணு, ஒலி, ஒளி ஊடகங்களில் தமிழ் எப்பாடு படும் என்பதை எண்ணிப் பார்க்கவே அஞ்சுகிறோம். இந்தப் போக்கில் போனால் தமிழை சமஸ்கிருதம் ஆங்கிலம் ஆகியவற்றின் கிளைமொழியாகவே ஆக்கிவிடுவர் ஊடக ஆசிரியர்கள்.

ஒருசில சான்றுகளைப் பார்க்கலாம். "இந்திய வெளியுறவு அமைச்சர், இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் செல்கிறார்" என்னும் செய்தியை இவர்கள் எவ்வாறு எழுது(படிக்)கின்றனர்? "கொழும்புவை அடைவார். கொழும்புவுக்குச் செல்கிறார். கொழும்புவில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். கொழும்புவின் பகுதிகளைப் பார்க்கிறார்" என்றே எழுது(படிக்)கின்றனர்.

இதேபோல், "தமிழ்நாடு முதலமைச்சர் கருநாடகத் தலைநகர் பெங்களூருக்குச் செல்கிறார்" என்னும் செய்தியையும் பின்வருவதுபோல் பிழைபடவே எழுது(படிக்)கின்றனர். "பெங்களூரு செல்கிறார். பெங்களூருவை அடைகிறார். பெங்களூருவுக்குச் செல்கிறார். பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பெங்களூருவின் பூங்காவைப் பார்வையிடுகிறார்" என்பதே இன்றைய ஊடகங்களின் மொழிநடையாக உள்ளது.

கொழும்பு, கொழும்பை, கொழும்புக்கு, கொழும்பில், கொழும்பின் என்றும், பெங்களூர், பெங்களூரை, பெங்களூருக்கு, பெங்களூரில், பெங்களூரின் என்றும் எழுதுவதுதான் சரி என்று இவர்களுக்குத் தெரியவில்லை. மக்களுக்கும் தெரியாது என்றே இவர்கள் எண்ணுகின்றனர். இவர்களின் மடமையால் இலக்கணம் அறியாப் பிறரையும் மடையர்களாக்குகின்றனர். ஊடகங்களில் தவறான எடுத்துக்காட்டை உருவாக்கிவிட்டனர். இந்தத் தவறான போக்கைத் திருத்த வேண்டும் என்றெண்ணுவோர் பெரும்பாடு படவேண்டியுள்ளது.

இதேபோல் குற்றச்செய்தி என்கிற பெயரில் கற்பனைக் கதை எழுதும் சிலர் கழற்றி என்பதைக் கழட்டி என்றும், சுழற்றி என்பதைச் சுழட்டி என்றும் எழுதுவதையும், பேசுவதையும் பார்க்கிறோம், படிக்கிறோம், கேட்கிறோம். ஒரு சொல்லின் வேர் எது என்பதை அறிந்தோர் இப்படிப் பிழைபட எழுத, பேச மாட்டார். கழல், கழறு, கழன்று, கழற்று; சுழல், சுழன்று, சுழற்று என்பனவே செம்மையான வடிவங்கள் என்பதை அவர்கள் அறிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.

இதேபோல் விண்ணப்பக்காரர், ஒப்பந்தக்காரர், வரிக்காரர் என்கிற தொழிற்பெயர்களை விண்ணப்பதாரர், ஒப்பந்ததாரர், வரிதாரர் என்று சமஸ்கிருத, இந்தி வழியில் எழுதும் போக்கும் உள்ளது. இந்தத் தவறான போக்கை மாற்றுவதுடன், நன்னடை எது என்பதைக் காட்டி மக்களின் மனத்தில் அதைப் பதிக்க வேண்டும் என்றால் மக்களின் பங்களிப்புடன் சொந்தமாக ஓர் ஊடகத்தை நடத்த வேண்டும் என்கிற பேராவல் எம்முள் எழுகிறது.

சே.பச்சைமால்கண்ணன்

2 கருத்துகள்:

  1. 💕கண்ணா... இதை மற்ற தளங்களிலும் நீங்கள் எழுத வேண்டும்.🙏🏻

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வேண்டுகோளின்படி முகநூல், டுவிட்டர், இணையத்தளம் உள்ளிட்ட அனைத்துச் சமூகவலைத்தளங்களிலும் இந்தப் பதிவை வெளியிட வேண்டும், எழுத வேண்டும் என விரும்புகிறேன் அண்ணே. விரைவில் கனவு நனவாகும்.

      நீக்கு