ஞாயிறு, 2 ஜூன், 2024

தமிழறிவோம் - 3

தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!! என்கிற முழக்கத்தைத் தலைப்பகுதியில் பொறித்துக்கொண்டு தமிழைச் சாய்க்கின்ற, மாய்க்கின்ற வேலையைச் செய்து வருகிறது ஒரு முன்னணி நாளிதழ். அந்த நாளிதழ் தமிழ் வளர்க்கும் இலக்கணத்தைப் பார்ப்போம். 
ஜனாதிபதி, ராஷ்டிரபதி, சுப்ரீம் கோர்ட், மத்திய மந்திரி, கவர்னர், முதல் மந்திரி, ஐகோர்ட், கலெக்டர், மாஜிஸ்திரேட், சூப்பிரண்டு என்று நீள்கிறது அந்த நாளிதழின் தமிழ் வளர்க்கும் தொண்டு. அந்த நாளிதழ் வெளியிடும் செய்தியில் ஒற்றுப்பிழைகளைக் கணக்கிட்டால் குறைந்தது வரிக்கு ஒன்று இருக்கும். ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? இதுதான் நீங்கள் தமிழ் வளர்க்கும் இலக்கணமா? என்று வினவுவார் யாருமில்லை. யாரேனும் வினவினால், மக்களின் பேச்சு மொழியில் எழுதுவதாக அவர்கள் விளக்கம் கொடுப்பதாக அறிகிறோம். 
மேற்கண்டவாறு தான் மக்கள் பேசுகிறார்களா? குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம், ஒன்றிய அமைச்சர், ஆளுநர், முதலமைச்சர், உயர் நீதிமன்றம், ஆட்சியர், நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் என்று யாரும் சொல்லவில்லையா? என்று அவர்களிடம் நாம் வினாவுவோம். 
தமிழின் முன்னணிக் காட்சி ஊடகங்கள் என்று சொல்லிப் பெருமைகொள்ளும் எந்த ஊடகத்திலும் 'ல-ள' 'ன-ண' 'ர-ற' 'ற-ட' வேறுபாட்டைச் சரியாகக் கையாள்வதில்லை. தோள்கொடுத்து என்பதைத் தோல்கொடுத்து என்றும், பனம்பழம், தினை என்பவற்றைப் பணம்பழம், திணை என்றும், பொரியைப் பொறி என்றும், பொறுத்து என்பதைப் பொருத்து என்றும், பதற்றத்தைப் பதட்டம் என்றும், கழற்றி சுழற்றி என்பனவற்றைக் கழட்டி சுழட்டி என்றும் இவர்கள் எழுதுவதைப் பார்க்கும்போது தமிழைக் கொல்வதில் இவர்கள் முன்னணி ஊடகங்கள் என்பது மட்டும் நமக்குப் புலப்படும். 
எழுத்தின் வேறுபாட்டால் பொருள் மாறுபடும் என்பதைத் தெரிந்தவர்களை, தமிழில் புலமையுள்ளவர்களைப் பணியில் அமர்த்துவதில்லை. ஏன்? என்று வினவினால், நாங்கள் ஒன்றும் தமிழ் வளர்க்க ஊடகம் நடத்தவில்லை என்று ஓரடியில் விடையிறுக்கின்றனர். தமிழை வளர்க்காவிட்டால் அந்தத் தமிழில் ஏன் ஊடகம் நடத்த வேண்டும்? ஆங்கிலத்திலோ வேற்று மொழிகளிலோ செய்திகளை எழுதி ஒளிபரப்பலாமே? என்று அவர்களுக்கு எதிர்வினா தொடுப்போம் நாம். 
கோடை வெயிலின் கடுமையை எடுத்துக்காட்ட இராசத்தானத்தின் பாலைமணலில் எல்லைக் காவல்படைவீரர் அப்பளம் சுட்டதாகப் படக்காட்சியுடன் பல்வேறு நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. பாலைவனத்துக்குப் பாளைவனம் என்றும், பொரித்த என்பதற்குப் பொறித்த என்றும், எண்ணெய் என்பதற்கு என்னை என்றும் இவர்கள் எழுதும் போக்கைப் பார்த்தால் தமிழைக் கொல்ல எதிரிகள் வேண்டாம், இவர்களே போதும் என்று நமக்கு விளங்கும். இந்தப் போக்கில் போனால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் அழிந்துவிடும் என்றே நமக்குத் தோன்றும்.


திருத்தம் - பொரிக்கலாம்
திருத்தம் - எண்ணெய்யே



திருத்தம் - எண்ணெய்





திருத்தம் - பாலைவனம், பொரித்த




பொரி, பொறி ஆகிய வேர்ச்சொற்களின் பொருளைப் புரிந்துகொண்டவர்கள் தான் இந்தச் செய்தியைப் பிழையில்லாமல் எழுத முடியும். வெப்பத்தால் சூட்டால் விரிதல் பருத்தல் வெடித்தல் உடைதல் பொரிதல் எனப்படுகிறது. அடைகாத்த முட்டையில் இருந்து குஞ்சு பொரிந்தது, முட்டையைப் பொரித்துத் தின்றோம், எண்ணெய்யில் அப்பளம் பொரித்தோம், நெற்பொரி, அரிசிப்பொரி, சோளப்பொரி வறுத்தோம், காய்கறிகளை எண்ணெய்யில் வதக்கிப் பொரியல் செய்தோம் எனப் பொரி என்பதை வேராகக் கொண்டு வரும் தொடர்களில் ஒற்றுமையைப் பாருங்கள். சூழ்ச்சியப் பொறி, பொறியாளர், தீப்பொறி, எழுத்துக்களைப் பொறித்தல், ஐம்பொறி ஆகியவற்றில் பொறி என்பது வேர்ச்சொல்லாக இருப்பதையும் பாருங்கள். பொருத்தல், பொறுத்தல் என்னும் சொற்களின் வேர்களையும் ஆராய்ந்தால் தவறாக எழுதுவதைத் தவிர்க்கலாம். பொருதல் ஒன்றோடு ஒன்று மோதுதல். படை மறவர் பகை நாட்டு மறவரோடு மோதுவதால் பொருநர் எனப்பட்டனர். ஒரு கருவியின், பொருளின் பாகங்களை ஒன்றுசேர்த்தல், அதை ஓரிடத்தில் மாட்டுதல் பொருத்தல் எனப்படுகிறது. இருவரிடையே உள்ள ஒற்றுமை பொருத்தம் எனப்படுகிறது. பொறுத்தல் என்பதன் வேர் பொறு, இதன் பண்புப்பெயர் பொறுமை, ஒரு செயலுக்குக் கடமைப்பட்டிருத்தல் பொறுப்பு எனப்படுகிறது. பொறுப்புடையவர் பொறுப்பாளர். இந்த வேறுபாடுகள் தெரிந்திருந்தால் பொருப்பாளர் என்றும், என்னைப் பொருத்தவரை என்றும் தவறாக எழுத மாட்டார்கள். பொறுப்பாளர், பொறுத்தவரை என்று சரியாக எழுதுவர். நெரி, நெறி என்கிற வேர்களைப் புரிந்துகொண்டால் இந்த வேர்களின் வழித்தோன்றும் சொற்களைப் பிழையற எழுதலாம். நெறி என்பது வழி, பாதை, கொள்கை, கோட்பாடு ஆகியவற்றைக் குறிக்கும். நன்னெறி, அறநெறி, தீநெறி ஆகியவற்றில் இப்பொருளைக் காணலாம். நெரி என்பது நெருங்கு, நெருக்கு என்பதைக் குறிக்கிறது. நெரிசல், நெருக்கடி, கழுத்தை நெரித்தான் ஆகிய சொற்களை நோக்கினால் இந்தப் பொருள் நமக்குப் புலப்படும்.
சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக