திராவிடர் கழகத்
தலைவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் இந்திய நடுவணரசை மத்திய அரசு, மைய அரசு என்றே
கூறி வந்தனர். கருணாநிதி கூட மத்திய அரசு, மைய அரசு என்றே கூறிவந்தார். இந்தியா என்பது பல
நாடுகளின் ஒன்றியம் என்ற கருத்தில் தமிழ்த் தேசியர்கள் நடுவணரசு என்று கூடக்
குறிக்காமல் ஒன்றிய அரசு என்றே கூறி வந்தனர். தமிழ் இலக்கியக் களஞ்சியத்தைத்
திராவிடக் களஞ்சியம் என்றுகூறிச் சிறுமைப்படுத்த முயன்ற இன்றைய திமுக அரசோ, அண்மைக்காலமாக
நடுவணரசை ஒன்றிய அரசு எனக் கூறி வருகிறது. அதேநேரத்தில் காமராசருக்கே உரித்தான பெருந்தலைவர்
என்ற பட்டத்தை ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்குக் கொடுத்துச் சிறுமைப்படுத்தியவர்
கருணாநிதி. இன்றைய திமுக அரசும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறது. எவரையும்
சிறுமைப்படுத்த வேண்டுமென்றால் அதைத் திமுகவினரைப் போல் செய்ய முடியாது.
தூய தமிழை
வழக்கத்தில் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இருந்திருந்தால் திமுக
தலைவர்களின் பெயரையும், அவர்கள் குடும்பத்தினரின் பெயர்களையும் தூய தமிழில்
மாற்றியிருக்கலாம். வட சென்னை, தென்சென்னை இரண்டுக்கும் நடுவில் உள்ளதை மத்தியச் சென்னை என்றே
குறிப்பிட்டு வருகின்றனர். இதை நடுச்சென்னை என்று கூறலாம். மத்திய என்கிற
சமஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழில் நடு என்பதே பொருளாகும். மத்திய என்று
வருமிடங்களில் நடு என்றும், மையம் என்று வருமிடங்களில் நிலையம், நடுவம் என்றும் மாற்றுவதே தமிழுக்குப் பெருமை
சேர்க்கும். ஊராட்சி என்ற சொல் மக்களிடையே பரவலாக வழங்கி வரும்நிலையிலும், பஞ்சாயத்து, கிராமசபை ஆகிய
சொற்களை திமுக அரசு வலிந்து வழங்கி வருகிறது. நடுவணரசைச் சிறுமைப்படுத்துவதற்காக
ஒன்றியம் என்பதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது.
இதேபோல் மாநகரம்
என்றாலே பெருநகரம் என்று பொருள்படும். மாநகரை ஆளும் அமைப்பு மாநகராட்சி
எனப்படுகிறது. சென்னை மாநகராட்சியைப் பெருநகரச் சென்னை மாநகராட்சி என்று
குறிப்பிடுகின்றனர். பெருநகரமும் மாநகரமும் ஒன்றுதான் என்பதை அறிந்தவர்கள்
இப்படிச் செய்வார்களா?
தமிழ்நாடு
முழுவதும் முதல் வகுப்புக்குக் கீழ் உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை ஊர்களில்
சின்னபள்ளிக்கூடம் என்றே கூறுகிறார்கள். மழலையர் பள்ளி என்ற சொல்லும் வழக்கில்
உள்ளது. இப்போது அவற்றை சமஸ்கிருதம், இந்தி வழியில் மத்திய அரசு குறிப்பிடுவதுபோல்
அங்கன்வாடி, பாலர்வாடி என்றே தமிழ்நாடு அரசும் குறிப்பிட்டு வருகிறது. இதுதான்
திராவிட அரசின் தமிழ்ப்பற்றா?
வருவாய்த்
துறையில் ஊராளும் அலுவலர் என்று குறிப்பிடாமல் கிராம நிர்வாக அலுவலர் என்றே
இன்றளவும் குறிப்பிடுவது திராவிட அரசுக்குத் தமிழ்ப் பற்றெல்லாம் இல்லை என்பதைக்
காட்ட ஒரு சான்றாகும்.
திரைப்படங்களுக்குத்
தமிழ்ப்பெயர் சூட்டினால் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு உண்டு என்று அறிவித்தார்
கருணாநிதி. முன்னெப்போதும் இல்லா வகையில் அவர் குடும்பத் திரைப்பட நிறுவனங்கள்
ஆங்கிலப் பெயரிலும் சமஸ்கிருதப் பெயரிலும் படங்களுக்குப் பெயர்சூட்டி அந்தப்
பெயரின் எழுத்துக்கள் தமிழில் இருப்பதாகக் கூறிக் கேளிக்கை வரி விலக்குப் பெற்ற
வேடிக்கையும் இங்கு நடந்தது.
திருமண
விழாக்களில் கருணாநிதி கலந்துகொண்டபோது பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டுங்கள்
என்று கூறி வந்தார். இன்றும் ஸ்டாலின் கூறி வருகிறார். கருணாநிதி ஊருக்கு
உரைத்ததைத் தன் குடும்பத்தில் கடைப்பிடித்திருந்தால் இன்று அவர் குடும்பத்தில்
பெயரன், பூட்டன், பெயர்த்தி, பூட்டி
பெயர்களெல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்திருக்குமா?
ஒரு காலத்தில்
ஒருவர் தமிழரா என்பதை அவர் பெயரைக்கொண்டே அறியலாம். இப்போது தமிழ்நாட்டில்
குடியேறியுள்ள வடநாட்டவரின் பெயர்களைப் போன்றே, தமிழ்ப் பிள்ளைகளின் பெயர்களும் சமஸ்கிருதமாகவே
உள்ளன. இனிப் பெயரைக் கொண்டு பிரித்தறிவது கடினம்.
இயல்பாகவே
தமிழ்நாட்டில் தமிழருக்குரிய வேலைவாய்ப்புக்களை நமக்குத் தராமல் வடவருக்கே
கொடுக்கிறது நடுவணரசு. மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் ஒவ்வொரு பணியிடத்துக்கும்
இத்தனை இலக்கம், இத்தனை கோடி என்று பணத்தைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு பிற
மாநிலத்தவருக்குக் கொடுக்கும் இரண்டகம் நடந்து வருகிறது. இந்த இலக்கணத்தில்
பிள்ளைகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டுவதால், நம் தமிழ்நாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பும்
வேலைவாய்ப்பும் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை வேறுபடுத்தியோ, ஒப்பிட்டு
ஆய்வுசெய்தோ பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் தமிழ்ப்
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம், தமிழில் பெயர் இல்லாத படங்களைப் பாராமல்
புறக்கணிப்போம், தமிழில் பெயர்ப்பலகையும், விலைப்பட்டியலும் வைக்காத கடைகளில் பொருட்களை
வாங்காமல் புறக்கணிப்போம். அப்போதாவது ஆட்சியாளர்களும் வணிகர்களும்
திருந்துவார்களா என்று பார்ப்போம்.
இங்குள்ள
உணவகங்களில் உணவு வகைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை யாராவது எழுதியிருக்கிறார்களா? இல்லை. சோறு, குழம்பு, கூட்டு என்று
எங்காவது எழுதியிருக்கிறதா? இல்லை. ரைஸ், பிரைடு ரைஸ், எக் ரைஸ், சிக்கன் ரைஸ், லெமன் ரைஸ், வெரைட்டி ரைஸ், ஆம்லெட், சிக்கன், மட்டன், சாதம், சாம்பார் என்றே எழுதி வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில்
தமிழ் மொழியைக் காக்கவும் வளர்க்கவும் ஒரு புரட்சி, மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி தேவை. அதை இன்றுள்ள திராவிட அரசு
எப்போதும் செய்யாது. வணிக நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரையே தமிழ் எழுத்தில்
எழுதினால் போதும் என்று கூறி அத்தகைய முயற்சிகளுக்குத் தடைகளையும் இடையூறுகளையுமே
அது ஏற்படுத்தும், நீர்த்துப் போகச் செய்யும். மக்கள் தாங்களாகவே அந்த மொழிப்புரட்சி, பண்பாட்டுப்
புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் பேராவலாக
உள்ளது.
சே.பச்சைமால்கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக