| நூறாண்டு கடந்த ஓங்கி உயர்ந்த இரட்டைப்பனை |
பதநீர், நுங்கு, கிழங்கு எனப் பனம்பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தும் நாம் என்றாவது அதை வளர்ப்பதற்காக ஓரிரு பனங்கொட்டைகளையாவது மண்ணில் ஊன்றியிருக்கிறோமா? என எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த எண்ணத்தை உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தில் அதை பற்றிய சிறு விளக்கத்தைப் பார்க்கலாம்...
பனை தமிழ்நாட்டின் அரசுத் தாவரம்.வட தமிழகத்திலே பலரும் அதை மரம் என்று சொன்னாலும் அது மரம் இல்லை. புல்வகையைச் சேர்ந்தது.
தென்தமிழகத்தில் பனையைப் பனை என்றுதான் சொல்கிறார்கள். மரம் என்று சொல்வதில்லை.
தமிழ்ப் பேராசான் திருவள்ளுவரும்
தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் 104) என்றும்,
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் (குறள் 433) என்றும் பெருமைக்கு எடுத்துக்காட்டாகப் பனையை எடுத்தாண்டுள்ளார். அதிலும் மரம் என்று கூறாததை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நீர்பாய்த்தல், உரமிடல், பேணல் ஏதுமின்றிப் பயன்தருவது பனை. புவியீர்ப்பு ஆற்றலுக்கு நேர் எதிராகச் செங்குத்தாக உயரமாக வளர்வது பனை. முடியுடை மூவேந்தர்களுள் சேரமன்னர்களுக்குரிய பூ பனம்பூ.
இந்தப் பனையில் ஆண்பனை, பெண்பனை என இரு பாலினங்கள் உள்ளதை அறிந்தால் உங்களுக்கு வியப்பு மேலிடும். ஆம் மனிதர்களில் ஆண் பெண் என இரு பாலினம் உள்ளதைப் போல் பனையிலும் ஆண்பனை பெண்பனை என இருபாலினம் உள்ளது.
ஆண்பனையில் வெளிவரும் அலகுவிரல் போன்ற பாளையில் மிகச்சிறிய பூக்கள் பூக்கும். இதேபோல் பெண்பனையில் வெளிவரும் பாளையில் குரும்பைகள் தோன்றும். ஆண்பனைப் பாளையில் பூக்கும் பூக்களில் உள்ள மகரந்தம் காற்றில் பரவியோ, தேனீக்கள், பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றால் பரவியோ பெண்பனைகளில் உள்ள குரும்பைகளில் படும்போதுதான் அது கருப்பிடித்து நுங்காகிறது.
மழைக்காலம் முடிந்த பிறகே பனைகளில் பாளைகள் தள்ளுகின்றன. இந்தப் பாளைகளில் பூக்கள் பூத்துக் குரும்பைகள் தோன்றி நுங்குகள் காய்ப்பது கோடைக்காலத்தில்தான். இந்த நுங்குகள் கோடைக்கேற்ற குளிர்ச்சியான சுவையான ஊட்டமுள்ள நீர்ச்சத்துள்ள உணவாகும். சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் நுங்கு தின்னலாம். எந்த வகையிலும் கலப்படம் செய்ய முடியாத, இயற்கையாகக் கிடைக்கும் உணவாக இது அமைந்துள்ளது.
இளநுங்கு நீர்ப்பாங்காக இருக்கும். சற்று விளைந்த நுங்கு துண்டு துண்டாகப் பிள்ளைகள் எடுத்துண்பதற்கு ஏற்றதாக இருக்கும். இந்த நுங்கைப் பதநீரிலும் சர்பத்திலும் போட்டுக் குடிக்கலாம். முற்றிய நுங்கு கடுக்காய் எனப்படுகிறது. இதைத் தோண்டி எடுப்பதற்கும், கடித்துத் தின்பதற்கும் கடினமாக இருக்கும். இதைத் தின்றால் வயிறு வலிக்கும். அதனால் கடுக்காயைத் தின்னக் கூடாது. கடுக்காயாக விளைந்த நுங்கைப் பனையில் இருந்து வெட்டாமல் விட்டுவிடுவது நல்லது.
நல்ல நுங்கை அடையாளம் கண்டு வெட்டுவது எப்படி?
தின்பதற்கேற்ற பருவத்தில் நுங்கு உள்ளதா என்பதை அடையாளம் காண்பது. நுங்குகள் குலையுடன் ஒட்டியுள்ள நெட்டுக்கும் நுங்குக்கும் இடையே வெள்ளையாக ஒரு பகுதி இருக்கும். அதைப் பொய்க்கண் என்பார்கள். அப்படி இருந்தால் நுங்குக் குலையை வெட்டலாம். பொய்க்கண் இல்லாமல் நெட்டு வரைக்கும் கருத்துக் காணப்பட்டால் நுங்கு முற்றிக் கடுக்காய் ஆகிவிட்டது. அதை வெட்டக்கூடாது. வெட்டினால் எதற்கும் உதவாமல் வீணாகப்போகும். இதையறியாமல் இக்காலத்தில் பலரும் குலைகுலையாய் நுங்குகளை வெட்டி வீணாக்கும் போக்கு உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும்.
கடுக்காய் பனங்காய் ஆகும். விளையாத பனங்காயைச் சீவினால் உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது சீழ்க்காய் எனப்படுகிறது. இதைத் தின்றால் காறும், ஓரளவு விளைந்த பனங்காய் பழமாகும் பருவத்தில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதைக் கடித்துத் தின்னமுடியாது, அறுவாளால் சாளையாகச் சீவியோ, வெட்டியோ கொத்தியோ தின்னலாம். நன்கு கனிந்த பழம் குலையில் இருந்து நெட்டுடன் பொத்தென்று கீழே விழும். இந்தப் பழத்தில் தோலை மட்டும் உரித்துவிட்டுக் கொட்டைக்கு மேலுள்ள சதைப்பற்றைச் சவைத்துத் தின்னலாம். இதன் மணத்தாலும் இனிப்பாலும் ஆடுமாடுகள், காட்டுப்பன்றிகள், யானைகள், மான்கள் ஆகிய தாவர உண்ணிகளை இதன் சுவை பெரிதும் கவரும். அதனாலேயே இந்தப் பழத்தைத் தின்னும் விலங்குகள் இந்தப் பனங்கொட்டைகளைப் பல்வேறு இடங்களிலும் போட்டுவிட்டுச் செல்லும். பனம்பழம் சற்றுக் காறும். அதைத் தீயிலிட்டுச் சுட்டுத் தின்றால் அந்தக் காறல் சுவை போய் தேன்போன்ற இனிப்புச் சுவை கிடைக்கும். பனம்பழம் தின்பவர்கள் தும்புடன் சவைத்துச் சாற்றை விழுங்கிவிட்டுத் தும்பைத் துப்பிவிட வேண்டும்.
விலங்குகள் தின்றுவிட்டுப் பனங்கொட்டைகளைப் பல இடங்களிலும் போட்டுவிட்டுச் செல்லும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இந்தக் கொட்டைகளில் முளைகள் தோன்றி மண்ணில் இறங்கிக் கிழங்காகும். மண்ணின் மேல் கிடக்கும் பனங்கொட்டைகளில் இருந்து கீழ்நோக்கிச் செல்லும் முளை ஓரடி முதல் ஒன்றரை அடி ஆழம் வரை செல்லும். மணற்பாங்கான நிலங்களில் ஈரடி ஆழம் வரை செல்லும். பூமியில் உள்ள வேறெந்தக் கொட்டைகளையும் விட மிகக் கடினமானது இந்தப் பனங்கொட்டை. இது முளைப்பதற்கும் ஆழத்துக்குச் சென்று வேரூன்றுவதற்கும் எடுத்துக்கொள்ளும் காலம் 90 நாட்கள். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகத் தொண்ணூறு நாட்கள் மண்ணில் ஈரப்பதம் இருப்பது வடகிழக்குப் பருவமழைக்காலத்தில்தான். புரட்டாசியில் மண்ணில் விழும் பனங்கொட்டைகளில் முளை இறங்கிக் கிழங்காகும். தைமாதம் பொங்கலையொட்டி இந்தக் கிழங்குகள் விளைந்துவிடும்.
பனங்கொட்டைகளில் இருந்து முளைத்துச் செல்லும் முளைகளில் உருவாவது தான் பனங்கிழங்கு. அதிக மாவுச்சத்துள்ளது. இந்தக் கிழங்கையும் பச்சையாக உண்ண முடியாது. காறும். சுட்டுத் தின்னலாம். தண்ணீர் ஊற்றிய பானைக்குள் வைத்து உப்பும் மஞ்சளும் சேர்த்து அவித்தும் தின்னலாம்.
பனையில் விளையும் நுங்கைத் தின்றால் பனம்பழமும் கிழங்கும் இல்லை. பனம்பழமாக விளையவிட்டால் பழத்தையும் தின்னலாம். கொட்டையில் இருந்து முளைத்து விளையும் கிழங்கையும் தின்னலாம். கிழங்கைத் தின்றால் பனை முளைக்காமல் போகும். பனை முளைக்க வேண்டுமென்றால் கிழங்கைப் பிடுங்காமல் விட்டுவிட வேண்டும்.
இன்று நாம் தின்னும் நுங்கும், பனம்பழமும், கிழங்கும் நாமே வளர்த்த பனையில் இருந்து கிடைத்தவை அல்ல. அவை நம் அப்பன், பாட்டன், பூட்டன், ஓட்டன் வைத்து 30 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை ஆனவை. அப்படி நூறாண்டுகளாகப் பயன்தரும் பனைகளைச் செங்கல்சூளை விறகுக்காகவும், மனை வணிகத்துக்காகவும் வீணாக வெட்டிஅழிப்பது நம் அறியாமையும் அகம்பாவமும் ஆகும்.
இந்தப் பனை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்திருந்தால் பொன்போல் போற்றி வளர்த்துக் காத்திருப்பர். இது வெப்பமண்டலத் தாவரம் என்பதால் அந்நாடுகளில் இல்லை. இதன் அருமை பெருமைகளை அறியாமல் நாம் வெட்டியழித்து வருகிறோம்.
பனைகளை வெட்டி அழிப்பதைத் தடுப்பதற்குச் சட்டம் கொண்டு வந்து விட்டதாக அரசு கூறினாலும் ஈவிரக்கமின்றி வேருடன் தோண்டி அழிக்கப்படுகின்றன. காய்வோலைகளுடன் நிற்கும் பனைகளைத் தீவைத்துப் பட்டுப்போகச் செய்கின்றனர்.
ஓலை, மட்டை, நார், வளை, குருத்து, பதநீர், நுங்கு, பனம்பழம், கிழங்கு எனப் பனம்பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தும் மனிதர்களே!
எண்ணிப் பாருங்கள். யாரோ பல பத்தாண்டுகளுக்கு முன் மண்ணில் ஊன்றிய பனங்கொட்டை முளைத்துப் பனையாக வளர்ந்து அதில் விளைந்த பொருட்கள் இன்று நமக்குப் பயனாகிறது. நம் பிள்ளைகள், பெயரன் பெயர்த்திகள், பூட்டன் பூட்டிகள் ஆகியோருக்காக நாம் என்றாவது ஒரு பனங்கொட்டையை மண்ணில் ஊன்றியிருக்கிறோமா? இனியாவது ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஒவ்வொருவரும் 10 பனங்கொட்டைகளையாவது மண்ணில் ஊன்றுவோம் என்று சூளுரைப்போம்!
பனை வளர்ப்போம்! பயன்பெறுவோம்!!
- கோவன்குளம் சே.பச்சைமால்கண்ணன்.