செவ்வாய், 10 நவம்பர், 2026

பருவமழை பொய்த்த தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பருவமழைப் பொழிவு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவரும் சூழலில், அது பற்றி அக்கறையோ கவலையோ பதற்றமோ இல்லாத ஆட்சியாளர்கள் தன்னையும் நாட்டையும் மறந்து விளம்பரத்திலும் விழாக்களிலும் மோகங்கொண்டுள்ளனர். இதுபற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.


விசும்பின் றுளிவீழி னல்லால் மற்றாங்கே

பசும்புற் றலைகாண் பரிது - திருக்குறள் 16


நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு - திருக்குறள்  20


வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ள மேற்கண்ட குறட்பாக்கள், மழை பெய்யாவிட்டால் பசும்புல்கூட முளைக்காது என்பதையும், நீரில்லா விட்டால் உலகமே இல்லை என்பதையும் காட்டுகின்றன. 

இத்தகைய மழைவளமும், அதன் செழிப்பால் வளமும் பயிர்வளமும் இந்தப் புவியின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளதா? என்றால் இல்லை. 

துருவப் பகுதிகள் ஆண்டின் பெரும்பாலான காலங்களில் பனிமூடி மரஞ்செடிகொடிகள் இன்றிப் பனிப்பாலையாக  இருக்கின்றன. 

நிலநடுக்கோட்டுக்குத் தெற்கும் வடக்கும் சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வெம்பரப்பான பாலை நிலங்கள் உள்ளன. இவற்றில் ஒருசில பகுதிகளில் பல பத்தாண்டுகளாகக் கூட ஒரு துளி மழை பெய்ததில்லை. 

நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் அதிலும் கடற்கரையைக் கொண்ட பகுதிகளில் ஆண்டின் ஒன்பது மாதங்கள் வெயில் காய்கிறது. அதேபோலப் பருவக்காற்றின் தாக்கத்தால் பெருமழை பெய்கிறது. 

இப்படி நிலநடுக்கோட்டுப் பகுதியிலும் அதையொட்டிச் சற்றுத் தொலைவில் தெற்கும் வடக்கும் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, அந்தமான் தீவுகள், இலங்கை, இலட்சத்தீவுகள், மாலைத்தீவுகள், மடகாஸ்கர், ஆப்பிரிக்க கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ள நாடுகள், தென்னமெரிக்காவின் வடபகுதியில் அமேசான் காடுகளைக் கொண்ட நாடுகள், மேற்கிந்திய தீவுகள், இந்தியாவின் தமிழ்நாடு, கேரள, கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர மாநிலங்கள்  ஆகியவற்றில் பெருமளவு மழை பொழிவதால் மரஞ்செடி கொடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு அனைத்து வகையான பயிர்களும் விளைகின்றன. ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன ஆகிய உயிரினங்களும் பல்கிப் பெருகியுள்ளன.

இந்தியாவின் தென்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் உள்ள கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை பொழிகிறது. மலையின் கிழக்குச் சரிவில் உள்ள தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பொழிகிறது. 

மனித நாகரிகம் தொடங்கியதில் இருந்தே ஆறுகளில் அணை கட்டிக் கால்வாய் வெட்டிக் குளங்களை வெட்டி அவற்றில் நீரைத் தேக்கிப் பாசனத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழ் மன்னர்கள் கட்டிய கல்லணை, கன்னடியன் அணை, கன்னடியன் கால்வாய், வீரநாராயணன் ஏரி, விஜயநாராயணன் ஏரி, நான்கூன் ஏரி, தென்னவன் ஏரி, மதுராந்தகன் ஏரி, பொன்னேரி ஆகியன தமிழரின் நீர்மேலாண்மைக்குச் சான்றாக இன்றும் அழியாமல் இருப்பதுடன் வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகின்றன.

மன்னராட்சிக் காலத்தில் இருந்த நீர்மேலாண்மைக் கட்டமைப்புகளைச் சிதைக்காமல் ஆங்கிலேயர்கள் பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். பாபநாசம் அணை, திருவைகுண்டம் அணை, முல்லைப் பெரியாறு அணை, மேட்டூர் அணை, கொள்ளிடத்தில் உள்ள கீழணை ஆகியவற்றைக் கட்டிப் பாசனத்தை மேம்படுத்தியுள்ளனர். அவர்கள் காலத்தில் எந்தக் குளமும் அழிக்கப்படவில்லை. 

வேளாண்மையும் ஊரகப் பொருளாதாரமுமே இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். நாடு விடுதலை பெற்ற பிறகு முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அப்போது புதிதாக அணைகள் கட்டிக் கால்வாய்கள் வெட்டிக் குளங்களை வெட்டிப் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்தினர். இதனால் நாட்டின் உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் பசுமைப் புரட்சி நிகழ்த்திக் காட்டப்பட்டது. இந்தக் காலத்தில்தான் கிணற்றில் நீரிறைக்கக் கமலை மாடுகளுக்குப் பதிலாக மின்னிறைப்பான்கள் பொருத்தப்பட்டன.  

விடுதலை பெறுமுன் இருந்த ஆயிரக்கணக்கான குளங்களும் அவற்றுக்கு நீர்கொண்டுவரும் கால்வாய்களும், நீர்மிகுந்து வழிந்தால் செல்லும் மறுகால்களும்,  விடுதலை பெற்றபின் இந்த எண்பதாண்டுகளில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தக் குளங்களால் பாசனம் பெறும் இலட்சக்கணக்கான எக்டேர் விளைநிலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. 

பசுமைப் புரட்சி, செயற்கை உரம், உயர்விளைச்சல் தரும் பயிர்கள், இயந்திரமயம் எனப் பல்வேறு காரணிகளால் தானியங்களும் காய்கறிகளும் பழங்களும் விளைவிக்கப்பட்டு உணவுத்தேவையில் தன்னிறைவு பெற்றாலும், பயிரிடும் பரப்பு ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகிறது. 

நாட்டின் மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் நகர்மயமாக்கல் விரைவாக நடைபெறுகிறது. இதனால் நகரங்களையொட்டிய விளைநிலங்கள் அழிக்கப்பட்டுக் குடியிருப்புகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுகின்றன. தொழிற்பூங்கா என்ற பெயரில் அரசே அந்த வேலையைச் செய்கிறது. 

குறுகிய கால ஆதாயத்தை மட்டுமே கருத்திற்கொண்டு ஆண்டுக்கு மூன்று பூ நெல் விளையும் வயல்களையெல்லாம் தரிசாகப் போட்டு முட்புதர்களை வளர்த்து வகை மாற்றம் செய்து பின்னர் வேளாண்மை அல்லாத மற்ற பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்தப்போக்கு கொஞ்சங்கொஞ்சமாகத் தொடர்கிறது. அதிலும் கடந்த 35 ஆண்டுகளாக இந்தப் போக்கு மிக விரைவாக  நடைபெறுகிறது. 

இந்திய வேளாண்மையைப் பருவக் காற்றின் சூதாட்டம் என்பர். அதிலும் தமிழ்நாட்டின் வேளாண்மை மிகப்பெரிய சூதாட்டம். கேரள கர்நாடக மாநிலங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையை நம்பி ஒரு பருவம் நெல் பயிரிட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டுக்கே உரிய வடகிழக்குப் பருவமழை பல ஆண்டுகளில் பொய்த்துப் போகிறது. அப்படி இருக்கும்போது கொஞ்சமாகப் பெய்யும் மழையின் நீரையும் தேக்கி வைத்துச் சிக்கனமாகப் பயன்படுத்திப் பயிர்களை வளர்த்து உயிர்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதற்கு மாறாக வேளாண்துறை, வருவாய்த்துறை, பத்திரப் பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, தொழில்துறை, கனிமவளத்துறை ஆகியன திட்டமிட்டு நீர்நிலைகளையும், விளைநிலங்களையும் அழித்து வருகின்றன. 

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் 

அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் 

என்றார் ஔவைப் பெருமாட்டி. 

அப்படி மழை பொய்த்துப் போகுங் காலங்களிலும் மணலைத் தோண்டினால் நீர் ஊறும். மணலுக்குள்ளிருந்து நீர் ஊறுவதால் அதற்கு ஊற்று என்று பெயர். தமிழ்நாட்டுத் திருட்டு அரசுகளும் அமைச்சர்களும் இந்த மணலையெல்லாம் அள்ளி விற்று விட்டதால் இப்போது ஆற்றின் ஊற்று எப்படி இருக்கும் என்று பிள்ளைகளுக்குச் செயல்விளக்கமாக எடுத்துக்காட்டக் கூட முடியவில்லை. ஆற்று மணலை விற்றுத் திரட்டிய பணத்தில் நூறு கோடி ரூபாய் செலவில் பெயர்த்திக்குப் பகட்டாகத் திருமணம் செய்கிறான் மணல்முருகன். அதற்குக் கொஞ்சங்கூட அவன் வெட்கப்படவில்லை. 

தமிழ்நாட்டில் நீர்வளத்துறை என்று ஒரு துறைக்குப் பெயருள்ளது. மணலை அள்ளி விற்றானே முருகன். அவனின் முன்னாள் துறை. அது இப்போது ஆனந்திடம் உள்ளது. அந்தத் துறையின் வேலை நீர்வளத்தைப் பெருக்குவது, காப்பது. ஆனால் ஆற்று மணலைத் துடைத்து அள்ளி விற்பது அதன் முழுநேர வேலையாகி விட்டது. அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களைப் போலவே இந்த ஆட்சியிலும் நீர்வளத்துறை மணல் விற்பனையை மட்டுமே செய்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. 

2021 - 2026 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் முதன்மையான ஆறுகளில் 4700 கோடி ரூபாய் மதிப்புக்கு மணற்கொள்ளை நடைபெற்றதாகவும், ஆனால் அரசுக்கு உரிமைத் தொகையாக வெறும் நாற்பது கோடி ரூபாய்க்கும் குறைவாகக் கிடைத்ததாகவும் மத்திய அரசின் அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது. 

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பயிரிடும் பட்டத்துக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ, கன்னிப்பூ என இரு பட்டங்களில் நெல் பயிரிடப்பட்டது. 

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசானம், முன்கார், பின்கார் என மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்பட்டது. 

சோழமண்டலத்தில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்பட்டது. 

பருவமழை பொய்த்ததாலும், நீர்வளங் குன்றியதாலும், பிற மாநிலங்களில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய ஆற்றுநீரைக் கேட்டுப்பெற முடியாததாலும் மூன்று பூ நெல் விளைந்த பகுதிகளில் எல்லாம் இப்போது ஒரு பூ கூட நெல் விளைவிக்க முடியவில்லை. 

தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாற்று அணையில் 2021 - 2026 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் கேரள அமைச்சன் வந்து தண்ணீரைத் திறந்துவிட்டுச் சென்றுவிட்டான். இப்போது பதவியேற்றுள்ள தவெக ஆட்சியில் கருநாடகத்தில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைக் கேட்டுப்பெறத் துப்பில்லை. அதைக் கேட்டுப்பெற வேண்டிய பொறுப்பில் உள்ளவன் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபடுகிறான்.

இயற்கையாகவே இருக்கிற காவிரி ஆற்றுநீர் உரிமையைக் கேட்டுப்பெற முடியாதவன் எங்கோ இருக்கும் கோதாவரி நீரைக் காவிரிக்குக் கொண்டுவரப் போகிறானாம். தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு முட்டாள் என்று நினைத்திருப்பான் அவன்?

தமிழ்நாட்டில் பருவமழை தொடர்ந்து ஒழுங்காகப் பெய்யாமல் அடிக்கடி பொய்த்து வருவதைப் பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டு சனவரி மாதம் பொங்கலையொட்டித் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பிறகு 2023 டிசம்பர் வரை கிட்டத்தட்ட ஈராண்டு கடும் வறட்சி நிலவியது. இக்காலத்தில் இலட்சக்கணக்கான பனைகளும் பட்டுப்போய்க் கொண்டை சாய்ந்தன. 2023ஆம் ஆண்டின் பிசானப் பட்டத்தில் தொடக்கத்தில் மழை பெய்யவில்லை. புரட்டாசி ஐப்பசி கார்த்திகை என மூன்று மாதங்களையும் கடந்து மார்கழியில் பெருமழை பெய்தது. ஆங்கிலத்தில் டிசம்பர் மாதத்தின் கடைசியில் பெய்த பெருமழையால் பேரழிவு ஏற்பட்டது. பட்டம் தவறிவிட்டதால் அதன்பிறகு நெல் பயிரிட முடியாது. 

ஆனால் அதைத் தொடர்ந்து வாழை, பருத்தி, பூம்பயிர்கள் செழிப்பாக வளர்ந்தன. அதன்பிறகு 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் பனங்கொட்டை முளைக்கக் கூடப் போதிய அளவு மழை பெய்யவில்லை. ஆயிரக்கணக்கான குளங்களுக்கு ஒரு சொட்டுக் கூடத் தண்ணீர் வரவில்லை. ஆடுமாடுகள் மேய்வதற்குப் புல் வளரும் அளவுக்குக் கூட மழை பெய்யவில்லை. 

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டுப் பிசானப்பட்டத் தொடக்கத்தில் ஓரளவு மழை பெய்துள்ளது. இருப்பினும் சிறுதுளி பெருவெள்ளமாகி ஆற்றிலும், கால்வாய்களிலும், ஓடைகளிலும் நீர் திரண்டு குளத்துக்கு வரவில்லை. ஈராண்டுகள் தாண்டி மூன்றாம் ஆண்டிலும் நிலவும் கடும் வறட்சி, கடந்த பல பத்தாண்டுகளாக நிகழ்ந்த கற்கொள்ளை, மண்கொள்ளை, நீர்வரும் வழிகள் அடைப்பு, மரங்கள், பனைகள் வெட்டியழிப்பு ஆகியன அதற்குக் காரணங்களாகும். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு முன் நெல்நாற்று நட்டுப் பசுமையாக வளரத் தொடங்கியிருக்கும். இந்த ஆண்டில் தீபாவளி கடந்தும் ஐப்பசி மாதம் முடியவுள்ள நிலையிலும் எந்தப் பகுதியிலும் நாற்றுப் பாவுவதற்கோ, தொளி கலக்குவதற்கோ, நடுவதற்கோ எந்தக் குளத்திலும் தண்ணீர் இல்லை. 

பெரும்பாலும் வறட்சியை நோக்கித்தான் இந்தப் பிசானப் பட்டம் சென்றுகொண்டிருக்கிறது. நல்ல காலக்கட்டத்தில் இருமுறை புயல் தோன்றியும் அவை இரண்டுமே தமிழ்நாட்டுக்கு வராமல் ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டன. இதனால் தமிழ்நாட்டில் இயல்பாகப் பொழியும் மழையும் பெய்யாமல் ஒவ்வொரு புயலுக்குப் பிறகும் ஒருவாரக் காலம் வறண்ட வானிலை நிலவுகிறது. இந்தப் பருவமழைக் காலத்தில் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்றன. இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த மாதத்தில் மழை பெய்து குளங்கள் பெருகினாலும் நெல் பயிரிடும் காலம் பிந்திவிடும். பட்டம் தவறினால் நட்டம். நெல் நாற்றுப் பாவிப் பிடுங்கி நட்டு வளர்ந்தாலும் கதிரும் பொதியுமாய் இருக்கும் காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுச் சாவி அறுக்கும் நிலை ஏற்படும். 

தமிழ்நாட்டின் எந்த அணையிலும் பாசனத்துக்குத் திறந்துவிடும் அளவுக்கு நீர்  இல்லை. பெய்யும் மழையும் தண்ணீர் திரண்டு ஓடி வெள்ளமாகப் பாயும் அளவுக்கு இல்லை. அக்டோபர் 1 முதல் நவம்பர் 11 வரையிலான காலத்தில் பெய்த மழை அளவை மாவட்ட வாரியாக இந்திய வானிலை ஆய்வுத்துறை கணக்கிட்டுப் பற்றாக்குறை, இயல்பு, அதிகம் என மூன்று பிரிவுகளாகப் பகுத்துள்ளது. 

புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றுடன் சேர்த்து 40 மாவட்டங்களாகக் கணக்கிற்கொண்டுள்ளது. 

இவற்றில் தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இயல்பான சராசரியைவிட மழைப்பொழிவு குறைவு. 

தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திருச்சி, கரூர்,  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நாகப்பட்டினம், காரைக்கால், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. இந்த அதிகம் என்பதற்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவுகோல் இல்லை. ஒரு குறிப்பிட்ட  மாவட்டத்தில் முந்தைய ஐந்தாண்டுகளின் கூட்டுச் சராசரி மழையளவை விட அதிகம் பொழிந்திருந்தால் அது மிகையளவாகக் கருதப்படுகிறது. வறண்ட ஆண்டுகளின் கூட்டுச் சராசரி மழையளவு குறைவாகத்தான் இருக்கும். இப்போது அதிகமாக மழை பெய்ததாகக் குறிப்பிட்ட மாவட்டங்களிலும் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு இல்லை. குளங்கள் பெருகவில்லை. நெல் பயிரிடும் நடவடிக்கைகள் தொடங்கவில்லை.

ஏற்கெனவே ஈராண்டு வறட்சியின் காரணமாகக் கருநாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அரிசி விலை 30 விழுக்காடு ஏறிவிட்டது.  

இத்தகைய சூழலில் இந்த ஆண்டும் கிட்டத்தட்டத் தமிழ்நாடே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் உணவுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை இன்னும் 30 விழுக்காடு ஏறும் வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலிலும் வேளாண்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை ஆகியன தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பேராபத்தை உணரவில்லை. புதிதாக வந்துள்ள ஆட்சியாளர்களும் பெரும்பான்மைக்குக் கொஞ்சம் குறைவாக உள்ள தங்கள் பலத்தை எப்படிக் கூட்டுவது? இடைத்தேர்தலில் வெற்றிபெற எத்தகைய உத்திகளைப் பின்பற்றுவது? எதிர்க்கட்சியினரை எப்படிச் சிதறடிப்பது? என்கிற எண்ணத்தில் தான் உள்ளனர். மாநிலத்தைச் சூழ்ந்துள்ள வறட்சி, பஞ்சம் ஆகியவற்றை உணரும் நிலையில் இல்லை. 

பருவமழை பொய்த்தது வறட்சிக்கான முதன்மைக் காரணம் ஆகும். ஆனால் அதுமட்டுமே காரணம் இல்லை. போதிய அளவு மழை பெய்த மாவட்டங்களிலும் மழைநீர் திரண்டு வெள்ளமாகப் பாயாததற்குக் காரணம் வரம்பற்ற மண், மணல், மலைக்கொள்ளையே ஆகும். இதை உணர்ந்து கனிமவளக் கொள்ளையை உடனடியாக நிறுத்தினால் நீர்வளத்தைக் காக்கலாம், அணைகளில் தேக்கலாம், வயல்களில் பயிர் வளர்க்கலாம், மக்களின் பசி போக்கலாம். 

இருக்கும் குறைவான நீர்வளத்தைப் பயன்படுத்தி எத்தகைய பயிர்களைப் பயிரிட்டால் மக்களின் பசியைப் போக்கலாம். ஆடுமாடுகளைக் காக்கலாம் என்பதைத் துறைசார்ந்த அலுவலர்கள், ஆர்வலர்கள், உழவர்கள் ஆகியோரை அழைத்துக் கலந்துரையாட வேண்டும். அதைச் செய்வார்களா? 

இல்லாவிட்டால் எந்தச் செயலையும் படம்பிடித்து விளம்பரப்படுத்துவது, திருமண வீட்டுக்குச் சோடியாகச் சென்று வாழ்த்துவது, பள்ளி கல்லூரி விழாக்களில் கலந்துகொள்வது, தனியார் தொலைக்காட்சிக்காகத் தீபாவளி கொண்டாடுவது, லண்டனுக்குச் சென்று கார் பந்தயத்தைத் தொடக்கி வைப்பது, வறண்ட அரேபிய பாலைக்குச் சென்று முதலீடு திரட்டுவது, கடற்கோளுக்குள்ளாகும் பட்டினப்பாக்கத்தில் அரசின் கோட்டையைக் கட்டுவது என்று பொழுதைப் போக்குவார்களா? எனத் தெரியவில்லை. 

பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை எதிர்கொள்ள உலகின் பல நாடுகள் தயாராகி வருகின்றன. நம் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கூட வறட்சியின் விளைவுகள், அவற்றைப்போக்கும் வழிகள் பற்றி முதலமைச்சர் சிவக்குமாரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் உழவர்களும் ஆராய்ந்து வருகின்றனர். 

இந்தியாவில் தொழில், வேளாண்மை, வரி வருவாய், தனியாள் வருமானம் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்திலும் கூட வறட்சியில் இருந்து வேளாண்மையைக் காக்கும் வழிகள் பற்றி ஊர்ப்புறத்துக்குச் சென்று உழவர்களைக் கூட்டி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துரையாடுகிறார். 

வறட்சியின் பிடியில் தொடர்ந்து மூன்றாண்டுகளாகச் சிக்கியுள்ள தமிழ்நாட்டில் அது பற்றிய விழிப்புணர்வோ, கவலையோ ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கொஞ்சங்கூட இல்லை. எதிர்பாரா வகையில் அதிகாரத்தைப் பெற்ற இன்ப அதிர்ச்சியில் இருந்து ஆட்சியாளர்கள் மீண்டு வர வேண்டும். தமிழ்நாட்டைக் கவ்வும் வறட்சியைப் போக்கும் வழிகளை ஆராய வேண்டும் என்று தவெக அரசுக்கு இடித்துரைக்கிறோம்.

சே.பச்சைமால்கண்ணன்

செவ்வாய், 27 அக்டோபர், 2026

உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தெம்பில்லாத திமுக, தவெக அரசுகள்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் மொத்தம் 39 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சி என்ற நகர்ப்புற உள்ளாட்சி மட்டுமே உள்ளது. மற்ற 38 மாவட்டங்களில் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளும்,  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் உள்ளன. 

இவற்றில் ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் கட்சி சார்பில் போட்டியிட முடியாது. மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் கட்சி சார்பில் போட்டியிடலாம். அரசியல் ஊடுருவி ஊரின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்கிற அக்கறையே இதற்குக் காரணம். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அமைப்பு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம். இது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வடக்குப்புறம் அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒருசேரத் தேர்தல் நடத்தி முடித்தது 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில்தான். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அதிமுக அரசு மும்முரமாகச் செய்தது. தேர்தல் நாள் அறிவித்து வேட்புமனு தாக்கல் நடைபெற்ற நிலையில், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுவரையறை செய்யவில்லை என்பதைக் காரணம் காட்டித் திமுக தொடுத்த வழக்கில் தேர்தலை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தேர்தல் பல ஆண்டுகள் தள்ளிப் போனது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றபோது தேர்தலை நடத்துவதைத் தள்ளிப்போடக் கூடாது என்றும், புதிதாகப் பிரித்த மாவட்டங்களில் மட்டும்தானே இடஒதுக்கீட்டை மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. அதனால் அந்த மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்துச் சென்னை (மாநகராட்சி மட்டும்), திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற 28 மாவட்டங்களில் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தி முடித்தது. அப்போது மேற்கண்டவற்றில் சென்னையைத் தவிர மற்ற 9 மாவட்டங்களில் பிரிப்பு நடந்திருந்தது. அதனால் அந்த 9 மாவட்டங்களிலும் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. அதிமுக ஆட்சிக்காலம் முடியும் வரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த முடியவில்லை.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அது 2021 அக்டோபரில் எஞ்சிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்தது. அதன்பின் 2022 பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடத்தி முடித்தது. அந்தத் திமுக ஆட்சிக்காலத்திலேயே 2024ஆம் ஆண்டு 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். அன்றிலிருந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகள் தன் பதவிக்காலம் முடியும் வரை அந்தத் தேர்தலை நடத்தத் தெம்பும் விருப்பமும் திமுக அரசுக்கு இல்லை. 

அதற்கொரு சிறப்புக் காரணமும் உண்டு. ஊரக வளர்ச்சித் துறையில் திட்டங்களைச் செயல்படுத்தும் போது உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால் அவர்கள் சொல்லும்படி தான் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அதற்கு மாறாக எதையும் செய்ய முடியாது. அதேபோலத் தமிழ்நாடு முழுவதும் கல், மணல், கனிமங்கள் ஆகியவற்றை வெட்டியெடுக்கவும் எந்தவொரு திட்டமானாலும் உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற வேண்டும். அந்த உள்ளாட்சி அமைப்பே காலியாக இருந்தால் எந்த எதிர்ப்பும் இருக்காது என்பதுதான் அந்தக் காரணம். திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கல், மணல், கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்கு உள்ளாட்சி அமைப்புகள் காலியாக இருந்ததும், அப்படியே பதவியில் இருந்தாலும், அந்தப் பதவிகள் அனைத்திலும் கல்குவாரி உரிமையாளர்களாகிய தன் கட்சியினரையே வெற்றிபெற வைத்திருந்ததுமே காரணம். இதற்கு எண்ணற்ற சான்றுகளை என்னால் கூற முடியும். 

தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு முதல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுமே மாறி மாறி ஆண்டு வந்தன. இவற்றின் மீது பல்வேறு காரணங்களால் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்ட நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டுத் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 234 இடங்களில் பாதிக்கும் குறைவாகவே இந்தக் கட்சிக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்றைய சூழலில் 109 உறுப்பினர்களே உள்ளனர். காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடைமைக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சி தொடர்கிறது. 

தங்களை எதிர்க்கவோ, கவிழ்க்கவோ எவரும் இல்லை என்ற மிதப்பில் இந்தத் தவெக அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கிப் பதவி விலகச் செய்து, கட்சியில் சேரச் செய்து, மீண்டும் அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் அதே ஆளையே தனது வேட்பாளராகப் போட்டியிடச் செய்து கருணாநிதிப் பாணியில் சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தாமல் இருந்தது இந்தத் தவெக அரசுக்குத் தெரியுமா? எனத் தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த ஊரக உள்ளாட்சிகள் இரண்டாண்டுகளாகக் காலியாக உள்ளன. 2021 அக்டோபரில் 9 மாவட்டங்களில் தேர்தல் நடந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலமும் அக்டோபரில் முடிந்து விட்டது. ஆகத் தமிழ்நாடு முழுவதும் இப்போது ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் காலியாக உள்ளன. 

இந்த நாட்டின் முதுகெலும்பு ஊர்கள் என்பார் காந்தியடிகள். அப்படிப்பட்ட ஊர்கள் எந்த ஆட்சியும் இன்றிக் காலியாகக் கிடக்கின்றன. இந்த ஊர்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் கமிஷன் அள்ளும் நோக்கத்தோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தனி அலுவலர்களை நியமித்தும் நீட்டித்தும் உள்ளது தவெக அரசு. திமுகவாகட்டும், தவெகவாகட்டும் மத்திய அரசில் அதிகாரங்களைக் குவிக்கக் கூடாது, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவ்வப்போது கூக்குரல் எழுப்புவதுண்டு. அதே நேரத்தில் மாநில அரசிடம் இருக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்க அவர்களுக்கு ஒருபோதும் மனம் வராது. தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாதது, அதை நடத்தத் தவெக அரசுக்குத் தெம்பு இல்லாததையும் மனம் இல்லாததையும் காட்டுகிறது. 

இந்த அமைப்புகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்திக் கூறி அதைச் செய்து முடிப்பது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வடக்குப்புறம் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் வேலை. அந்தக் கட்டடத்தில் மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் மாநிலத் தேர்தல் ஆணையர் உட்பட அலுவலர்கள் அனைவரும் வாங்கும் சம்பளத்துக்கு நன்றிக் கடனுடன் செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் மறுத்தாலும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வர வேண்டும். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலமும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிந்துவிடும். அந்த நிலைக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இப்போதே முன்னேற்பாடுகளைச் செய்தால்தான் அந்தத் தேர்தலை நன்றாக நடத்தி முடிக்க முடியும். இந்த ஊர்ப்புற உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்கத் தங்களுக்குத் தெம்பும், துப்பும், விருப்பமும் இருக்கிறது என்பதை இந்தத் தவெக அரசு இன்னும் நான்கரை ஆண்டுக்குள் செய்து காட்டுமா? 

சே.பச்சைமால்கண்ணன்

வெள்ளி, 16 அக்டோபர், 2026

ஊரக விளையாட்டுக்கள்

இன்று நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் மாதந்தோறும் உடற்பயிற்சிக்கென்றே ஒரு தொகையைச் செலவழிக்கின்றனர். வீட்டருகில் உள்ள கடையில் பொருள் வாங்கி வர இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். நடைப்பயிற்சி செய்வதற்குக் காரில் சென்று இறங்குகின்றனர். உடல் இயக்கங்களைக் குறைத்துவிட்டு அதனால் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்ய உடற்பயிற்சி, இயன்முறை மருத்துவம், அலோபதி மருத்துவம், அறுவை என இலட்சக்கணக்கில் செலவிடுகின்றனர்.


ஆனால் இன்றைக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஊர்ப்புறங்களுக்குத் தொலைக்காட்சிப் பெட்டி வராத காலத்தில் துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தில் இருந்தவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் காலை ஆறுமணிக்குப் பாயைவிட்டு எழுந்தனர். உமிக்கரியைக் கொண்டு கைவிரலால் பல் விளக்கினர். காலையிலேயே குளித்து விட்டுத்தான் உணவருந்தினர். காலை, நண்பகல் என இருவேளை கஞ்சிதான் குடித்தனர். அதற்குக் கூட்டாகச் சர்க்கரைத் துண்டு, கருப்பட்டி, நாரத்தங்காய் ஊறுகாய், துவையல், சுட்ட கருவாடு, மோர்வற்றல், மிளகாய், வெங்காயம் ஆகியன சுவை சேர்த்தன. இரவுச் சாப்பாடு என்பதெல்லாம் இல்லை. பிற்பகலில் உலைவைத்துப் பொங்கிய சோற்றை மாலை ஆறு மணிக்குள் உண்பர். அது மட்டும்தான் சுடுசோறு. அதைத் தின்றுவிட்டுப் பாரதியார் சொன்னது போன்று மாலை முழுவதும் விளையாட்டு. இந்த விளையாட்டு அதிகம் போனால் இரவு எட்டுமணி வரை நீடிக்கும். அதற்குள் வியர்த்துப் பூத்து உடல் சடைந்து விடும். வீட்டுக்குப் போய்ப் பாயில் படுத்தவுடன் உறக்கம் கௌவிவிடும். 


இன்றைய செல்பேசிகளோ, தொலைக்காட்சிகளோ, சமூக ஊடகம் என்னும் பெயரில் உறக்கம் கெடுக்கும் உள்ளடக்கங்களோ அன்றில்லை. இதனால் இரவு எட்டு மணிக்கு உறங்கினால் காலை ஆறுமணி வரை தடங்கல் இல்லா, தொல்லையில்லா ஆழ்ந்த உறக்கம். இத்தகைய உறக்கம் இன்றும் நமக்குத் தேவைதான். ஆனால் அத்தகைய உறக்கம் கிடைக்கும் சூழல் இன்று ஊர்ப்புறத்திலும் இல்லை. நகர்ப்புறத்தில் இல்லவே இல்லை.


1980, 1990களில் ஊர்ப்புறங்களில் உடற்பயிற்சி என்று தனியே கிடையாது. ஒவ்வொருவரின் வேலையும் வாழ்வியலும் உடற்பயிற்சியாகவும், மனமகிழ்ச்சியாகவும் அமைந்தது. காலையில் எழும் ஒரு பையன் குளிக்கக் கிணற்றுக்கோ, ஓடைக்கோ, குளத்துக்கோ செல்வான். சனி நீராடு என்று ஔவைப் பிராட்டி சொல்வாள். அதற்குச் சனிக்கிழமை மட்டும் குளி என்பது பொருளில்லை. குளிர்ந்த நீரில் குளி என்பதாகும். குவளையில் நீரைக் கோரி உடலில் ஊற்றுவதெல்லாம் குளிப்பாகுமா? 


குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் வெதுவெதுப்பாகவும், கோடைக்காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும் ஆறு, குளம், ஓடை, கிணறு ஆகிய நீர்நிலைகளில் முங்கிக் குளிப்பதே குளிப்பாகும். இதில் உடல் முழுவதும் குளிர்ந்து நரம்புகளும், இரத்த நாளங்களும் புத்துணர்வு பெறும். குளித்துவிட்டுத் தலை துவர்த்திவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் தலைமுடி பஞ்சுபோல் காய்ந்துவிடும். வீட்டுக்கு வந்ததும் கஞ்சியோ காடியோ கூழோ குடித்தால் தேவாமிர்தமாய் இருக்கும். இதைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குத் துள்ளிப் போனவர்கள் உண்மையிலேயே வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். 


உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் வாரத்துக்கு இரண்டு விளையாட்டு வேளைகள் இருக்கும். தொடக்கப்பள்ளிகளில் நாள்தோறும் பிற்பகல் மூன்றரை மணியானால் விளையாட்டு தான். பள்ளி நேரம் முடிந்ததும் பைக்கூட்டைத் தோளில் போட்டுக்கொண்டு புள்ளிமான்கள் போல வீட்டுக்குத் துள்ளியோடுவர் பிள்ளைகள். அது அந்தக் காலம். 


அதேகாலத்தில் பள்ளி விளையாட்டுக்களைத் தவிர ஊர்ப்புறத்தில் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கள் ஏராளமாக இருந்தன. அவை அமர்ந்து விளையாடுவன, ஓடி விளையாடுவன, துள்ளி விளையாடுவன, தாண்டி விளையாடுவன, ஒற்றைக் காலால் கிந்தி விளையாடுவன எனப் பலவகைப்படும். 


அமர்ந்து விளையாடுவதில் பல்லாங்குழி எனப்படும் பாண்டி ஆட்டம், ஆடுபுலி ஆட்டம், தாயம், சதுரங்கம் ஆகியன முதன்மையானவை. ஒரு வரிசையில் ஏழு குழிகள் என இருவரிசைகளில் 14 குழிகள் இருக்கும். ஒருகரைக்கு ஏழு குழிகள். ஒவ்வொன்றிலும் 5 முத்துக்கள் போட்டு விளையாடும் விளையாட்டு உள்ளது. பாண்டி நாட்டின் விளையாட்டு என்பதால் முத்துக்கள் எனப்படுகிறது. இக்காலத்தில் முத்துக்கள் இல்லை. வெண்ணிற நத்தை ஓடுகள், புளியமுத்துக்கள் (புளியங்கொட்டைகள்) பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் நடுக்குழிகளைத் தவிர மற்ற ஆறு குழிகளில் 6 முத்து, 12 முத்துப் போட்டு விளையாடும் விளையாட்டு உள்ளது. 5 முத்துப் பாண்டி என்பது இருவர் விளையாடும் விளையாட்டாகும். 6 முத்து, 12 முத்து விளையாட்டுக்கள் இருவர் அல்லது நால்வர் விளையாடலாம். இந்த விளையாட்டை விளையாடும்போது சிறார்களுக்குக் கணிப்பு, கணக்கு, சிக்கனம், ஆதாயம் ஈட்டுவது உள்ளிட்ட பல்வேறு திறன்கள் உண்டாகிறது. அதே நேரத்தில் விளையாட்டில் யாராவது ஏமாற்றினால் அதைக் கண்டறியும் திறனும் உண்டாகிறது. தருக்கம் ஏற்படும் சூழல், அதைத் தீர்க்கும் முறை ஆகியவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். 


ஓடி விளையாடும் விளையாட்டுகள் நிறைய உள்ளன. குட்டிப்பந்து, எறிபந்து, மட்டைப்பந்து, கால்பந்து ஆகியன ஓடிவிளையாடும் விளையாட்டுகள் ஆகும். இவையனைத்தும் பந்துகளைக் கொண்டு விளையாடும் விளையாட்டுக்கள். 


இவை தவிரக் கிளியந்தட்டு என்ற விளையாட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகும். இது இரண்டு அணிகள் கொண்ட விளையாட்டு. ஒரு சோடிக்கு இரண்டு கட்டங்கள் என்ற கணக்கில் இரண்டு இரண்டாகக் கட்டங்களை நீட்டிக்கொண்டே போகலாம். முதல் கோட்டைத் தவிர மற்ற கட்டங்களின் கோடுகளில் ஒவ்வொருவர் தட்டு மறிப்பர். தட்டு என்பது இங்குக் கட்டங்களைக் குறிக்கும். கடைசிக் கோடு யாருமில்லாமல் இருக்கும். அது கிளியின் தட்டு. கிளி என்பவர் மறிக்கும் அணியின் தலைவர். மேலேயிருந்து வரிசையாக ஒவ்வொருவராகத் தட்டு மறிப்பவரை ஏமாற்றிக் கடைசித் தட்டுக்கு வந்து அதையும் யாராவது ஒருவர் தாண்டிவிட்டால் அதன்பிறகு அனைவருக்கும் காட்டோட்டம் என்னும் பெயரில் தட்டுக்கும் வெளியே சென்று கடைசித் தட்டை நோக்கி ஓடும் உரிமை உண்டு. இவ்வாறு ஓடும்போது மறிப்பவரை ஏமாற்றி ஓடலாம். அவரின் கையை மீறிச் சென்றால் அந்த அணி ஆட்டமிழக்கும். இவ்வாறு ஏமாற்றி அங்குமிங்கும் ஓடும்போது கிளி நடுக்கோட்டில் மேலும் கீழும் நடமாடும். அது மட்டுமல்லாமல் கடைசித் தட்டும் அந்தக் கிளிக்கு உரிமையானதுதான். அப்போது அந்தக் கிளியிடம் அடிபட்டாலும் ஆட்டமிழப்புதான். யாரும் அடிபடாமல் ஒவ்வொருவராகக் கடைசித் தட்டைத் தாண்டிச் சென்ற பிறகு மீண்டும் மேல்நோக்கிச் செல்ல வேண்டும். இப்போது தட்டுமறித்தவர்கள் திசையை மாற்றிக் கொண்டு மறிப்பர். அவர்களை ஏமாற்றி யாரேனும் ஒருவர் கடைசித் தட்டில் இருந்து முதல் தட்டுவரை சென்று அதையும் கடந்து மேலே சென்றுவிட்டால் உப்பு என்பார். இது அந்த அணியின் வெற்றியைக் குறிக்கும். இந்தத் தட்டுமறிக்கும் நேரத்தில் மறிப்பவரிடமோ, கிளியிடமோ கோட்டைத் தாண்டும்போது யாரும் அடிபட்டால் ஆட்டமிழப்பு. ஊரக விளையாட்டுகளில் அணி மனப்பான்மையுடன் உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சி தரும் விளையாட்டு என்றால் அதில் கிளியந்தட்டுக்குத் தான் முதலிடம். 


கிந்தி விளையாட்டு என்பதை நொண்டி விளையாட்டு என்றும் கூறலாம். இஃதும் அணி விளையாட்டு தான். இதில் ஐந்து மீட்டருக்கு மேல் ஆரங்கொண்ட ஒரு வட்டம் போடுவர். முதலில் ஓர் அணியினர் வட்டத்துக்குள் இறங்க வேண்டும். இன்னோர் அணியினர் வட்டத்துக்கு வெளியில் நின்று ஒவ்வொருவராக உள்ளே இறங்குவர். அவர் ஒற்றைக் காலைப் பின்னால் மடித்து அல்லது தூக்கி வைத்துக்கொண்டு மற்றொரு காலால் மட்டுமே ஓடி உள்ளே நிற்கும் எதிரணியினரைத் தொட வேண்டும். இவ்வாறு நொண்டி வருபவரிடம் உள்ளே நிற்பவர்கள் அடிபட்டாலோ, ஓடும்போது கோட்டைவிட்டு வெளியேறினாலோ ஆட்டமிழப்பு ஆகும். நொண்டுபவர் தன்னால் இயலாமல் போகும்போது வெளியேறுவார். அவருக்குப் பின் அந்த அணியில் உள்ள மற்றொருவர் நொண்டி வந்து உள்ளே நிற்பவர்களைத் தொடுவார். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இரண்டு கால்களாலும் ஓடுபவர்களை ஒற்றைக் காலால் ஓடுபவர் தொட்டு ஆட்டமிழக்கச் செய்கிறார். 


இதேபோல் கோலிக்குண்டு எனப்படும் கோலிக்காயைக் கொண்டு பல விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன. கிட்டிப்புள் எனப்படும் குச்சிக் கம்பைக் கொண்டு பல விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன. ஆடுபுலி ஆட்டத்திலும் வட்டமாகக் கைகோத்துக்கொண்டு நின்று விளையாடும் ஒரு விளையாட்டு உள்ளது. அதில் ஆடு எனப்படுபவர் வட்டத்தின் உள்ளேயும் புலி எனப்படுபவர் வட்டத்துக்கு வெளியேயும் இருப்பர். கைகோத்தவர்கள் வட்டமாகச் சுற்றிக்கொண்டே வருவர். அவர்களின் கைகளுக்குக் கீழேயுள்ள இடைவெளி வழியாக புலி உட்புகுந்து ஆட்டைப் பிடிக்க வேண்டும். அவ்வாறு உட்புகுந்தால் ஆட்டை வெளியே விட்டுவிட்டுப் புலியை உள்ளே சிறை செய்வர். புலி வெளியே போனால் ஆட்டை உள்ளே விட்டு அதனைக் காப்பர். இந்த விளையாட்டில் சங்கிலி புங்கிலி கதவைத் திற என்று புலி பாடும். நான் மாட்டேன் வெங்கப் புலி என்று கைகோத்தவர்கள் பதிலுரைப்பர்.  இதுவும் மகிழ்ச்சி தரும் மாலைநேர விளையாட்டுதான். 


இதேபோல் சுரைக்கொடிக்கும் பூஞ்செடிக்கும் தண்ணீர் இறைக்கும் விளையாட்டு, பானை விளையாட்டு, கம்பந்திரி விளையாட்டு ஆகியன உண்டு.


தாழ்வான மரத்தின் அடியில் விளையாடும் மரக்குரங்கு என்னும் விளையாட்டு வகை உண்டு. நெருக்கடி நேரத்தில் மரக்கிளைகளில் துள்ளி ஏறித் தப்புவது, இக்கட்டில் உள்ளவரை மரத்தில் இருந்து துள்ளி மீட்பது ஆகிய திறன்களை இந்த விளையாட்டு வளர்க்கும். 


இரவில் விளையாடும் விளையாட்டு என்றால் கள்ளன்காவலன், ஒளித்து விளையாடுதல் ஆகியன உண்டு. மின்னொளி இல்லாக் காலத்தில், அல்லது குறைவான மின்னொளி இருந்த காலத்தில் துப்பறிதல், கண்டுபிடித்தல், விரைந்து செயலாற்றுதல் ஆகிய திறன்களை வளர்த்த விளையாட்டு இது. நெல் அறுவடைக்காலத்தில் தெருவில் காயப்போட்டுள்ள வைக்கோலுக்குள் படுத்துக்கொண்டு மேலே வைக்கோலைப் பரப்பி ஒளித்துவிளையாடுவது, அவ்வாறு ஒளிந்துகொண்டவரைக் கண்டுபிடிப்பது மனத்துக்கு மிகவும் மகிழ்வயளிக்கும் விளையாட்டு ஆகும். 


மாலை நேர உணவருந்திவிட்டு அது செமிக்கும் வரை விளையாடிவிட்டு உடல் சோர்விலும் உள்ள மகிழ்ச்சியிலும் இரவில் வீட்டுக்குச் சென்றால் பாயில் படுத்தவுடன் உறக்கம் வரும். அது ஓர் அழகிய காலம். 


மழைக்காலத்தில் குளங்கள், கிணறுகளில் நீர் பெருகியிருக்கும். அப்போது நீராடச் செல்பவர்கள் அங்கும் குளிப்பையே விளையாட்டாகவும், விளையாட்டையே குளிப்பாகவும் மாற்றியிருக்கிறார்கள். இந்தப் பெருமை நம் தமிழரைச் சேரும். இப்போது ஆற்றிலும் குளத்திலும் மூழ்கி இறந்தார்கள் என்ற செய்தியைக் கேட்கும்போது இந்த நீச்சல் கூடத் தெரியாமல் நம் தமிழர் உள்ளனரே என்ற ஆற்றாமைதான் வெளிப்படுகிறது. பெரிய கிணற்றில் குளிக்கும்போது அதற்கு நடுக்கோடு வரைந்து ஈரணிகளாகப் பிரிந்து இருகரைகளிலும் இருப்பர். ஆட்டம் தொடங்கியவுடன் முதலில் ஓரணியினர் தொட வேண்டும். அவர்களிடம் அகப்படாமல் எதிரணியினர் நடுக்கோட்டைத் தாண்டிவிட வேண்டும். இதில் உடலில் தொட்டால் போதாது. தலைமுடியில் தொட வேண்டும். முதலில் தொட்டவர்கள் இப்போது தப்பியோட வேண்டும். முதலில் தப்பி ஓடியவர்கள் இப்போது தொட வேண்டும். இவ்வாறு மாறி மாறிக் கண்சிவக்கும் வரை கிணற்றில் குளித்த காலம் பொற்காலம். இந்த விளையாட்டில் மேலே நீந்துபவர்கள் சிலர். அதிகமாக மூச்சடக்கும் சிலர் ஆழத்துக்குச் சென்று அங்கிருந்து எதிர்ப்புறத்துக்கு உள்நீச்சல் நீந்திச் சென்று இறுதியில் மேலே புடைத்து வருவர். 


ஊரக விளையாட்டுக்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஒவ்வொன்றையும் சொல்லால் விவரித்தால் ஓரளவு புரியும். கோடு வரைந்து ஆட்களைப் பிரித்து விதிமுறைகளைப் புரிந்துகொண்டு களத்தில் விளையாடும்போதுதான் அதன் திறனும் விரைவும் நமக்கு விளங்கும். அதனால் உடலும் உள்ளமும் அடையும் நலனைத் துய்க்க முடியும்.


1990களின் இறுதிவரை இருந்த ஊரக விளையாட்டுக்கள் ஒழிந்துபோகக் காரணம் என்ன? ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறார் பொது இடத்தில் ஒன்றுகூடி விளையாட்டுக்கான விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு தொடர்ந்து விளையாடினால்தான் அது நீடித்து நிலைத்திருக்கும். முந்தைய தலைமுறையினர் தமக்குப் பிறகு வருவோருக்கு அதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். விளையாடிக்காட்ட வேண்டும். பிந்தைய தலைமுறையினர் அதைப் புரிந்துகொண்டு விளையாடுவதுடன் தமக்குப் பிறகு வருவோருக்கு அதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். 2000ஆவது ஆண்டு வாக்கில் இந்தச் சங்கிலித் தொடர் அற்றுப்போனதே ஊரக விளையாட்டுக்களின் அழிவுக்குக் காரணம். தொலைக்காட்சி, செல்பேசி, இணையம், சமூக ஊடகம் ஆகியவற்றில் மூழ்கிப் போகும் சிறாரும், அதைப் பற்றிக் கவலை இல்லாமல் இருக்கும் மூத்தோரும் ஊரக விளையாட்டுக்கள் அழிந்துபோகக் காரணமாவர்.


நம் பிள்ளைகளின் உடல்நலம் காத்து, மனமகிழ்ச்சியை மீட்டெடுக்க ஊரக விளையாட்டுக்களை மீண்டும் விளையாடி அவற்றுக்குப் புத்துயிர் ஊட்டுவோம். தமிழரின் பண்பாட்டைக் காப்போம்.

சே.பச்சைமால்கண்ணன்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

ஆடிப்பெருக்கைக் கொண்டாட விடாமல் அழித்தவர்கள்




தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு எவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது? இப்போது நிலவும் கடும் வறட்சிக்குக் காரணம் என்ன? அந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர்கள் யார்? தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு சொன்னபோது, மதியாதார் தலைவாசலை மிதித்தவர் யார்? மழை பெய்ததால் தண்ணீர் வந்ததா? கர்நாடகம் திறந்ததால் வந்ததா? தவெக அரசின் முயற்சியால் வந்ததா? என்பதையெல்லாம் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து " - நல்வழி பாடல் : 9 ஔவையார்

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் நல்ல சாரல் மழை பெய்யும். அதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும். தடுப்பணைகள் அன்றித் தேக்க அணைகள் இல்லாத அக்காலத்தில் இதனால் தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலுமே வெள்ளப்பெருக்கு ஏற்படும். தென்மேற்குப் பருவமழையின் இயல்பு அது மேற்கு மலைத்தொடருக்கு மேற்கே உள்ள மலையாளத்தில் கனமழையாகப் பெய்யும். மலைத்தொடர்கள் காற்றைத் தடுத்து அங்கேயும் கனமழை பெய்யும். அதன்பின் காற்றின் எஞ்சிய ஈரப்பதம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் பெய்யும். வீசும் காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது மலையில் இருந்து கிழக்கே அதிகத் தொலைவுக்குப் பெய்வதுண்டு.
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். இதனால் ஆடியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும். அதிக மழைப்பொழிவால் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
அதிலும் ஆடிப் பதினெட்டாம் நாளில் தமிழ்நாட்டின் எல்லா ஆறுகளிலுமே புதுப்புனல் பாயும். அதில் நீராடி மகிழ்வதும், நீர் விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் ஆற்றங்கரையோர ஊர்களில் வாழும் மக்களின் இயல்பு. மாதந்தோறும் அமாவாசை நாட்களிலும், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளிலும் தொலைவில் உள்ள மக்களும் ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு வந்து ஆற்றில் நீராடி முன்னோரை வழிபட்டுச் செல்வதுண்டு.
இத்தகைய நீராடல் சிலப்பதிகாரக் காலத்திலேயே இருந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஓய்ந்த பின் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வடகிழக்குப் பருவமழை பெய்யும். இதனாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போதும் ஆறுகளில் நீராடும் வழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக ஐப்பசி மாதத்தைத் தமிழில் துலா மாதம் என்கிறார்கள். இந்தத் துலா மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள காவிரியாற்றின் துலாக்கட்டத்தில் மக்கள் நீராடுவது இன்றும் நடைபெற்று வரும் தொன்றுதொட்ட வழக்கமாகும்.
தாமிரபரணி, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு எனத் தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் இவ்வாறான நீராடல் வழக்கம் இருந்துள்ளது. இருந்து வருகிறது.
பருவமழைக் காலங்களில் பெருமழையால் வெள்ளப்பெருக்கால் பயிர்களும் உயிர்களும் சேதமடைந்த நிலையில், பொங்கிப் பாயும் காவிரிக்குக் குறுக்கே அணை கட்டினால் வெள்ளத்தால் ஏற்படும்ம் அழிவைத் தடுக்கலாம். கால்வாய் வெட்டித் தண்ணீரைக் கொண்டு சென்று கூடுதல் பரப்பில் பயிர்செய்யலாம் என்று எண்ணிக் கட்டப்பட்டது தான் கல்லணை. இதேபோலத் தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும் சிறு சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றால் வெள்ளக்காலத்தில் நீரைத் தேக்க முடியாது. அதேநேரத்தில் வரும் தண்ணீரை ஆற்றின் இருகரைக் கால்வாய்கள் வழியாகப் பாசனத்துக்குத் திருப்பிவிட முடியும்.
ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டின் பாசனத்துக்குக் கட்டப்பட்ட அணைகளில் குறிப்பிடத் தக்கவை, தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் அணை, காவிரியின் முக்கொம்பு அணை, கொள்ளிடத்தின் கீழணை, மேற்குத் தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாபநாசம் அணை ஆகியன.
இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்காகக் கேரளத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே ஓர் அணை கட்டித் தண்ணீரைத் தேக்கி நீர்த்தேக்கத்துக்குப் பின்புறம் மலையில் சுரங்கக் கால்வாய் அமைத்து அந்த நீரை வைகையில் கலந்து விட்டால் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் செழிக்கும் என்ற எண்ணத்தில், இராமநாதபுரம் மன்னரின் முயற்சியால் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குவிக்கால் கட்டப்பட்டது பெரியாறு அணை.
சேலம் மாவட்டம் மேட்டூரில் கட்டப்பட்டுள்ள அணைதான் தமிழ்நாட்டில் உள்ளதிலேயே கொள்ளளவில் பெரிய அணையாகும். இதில் 93 டிஎம்சி நீரைத் தேக்க முடியும். டிஎம்சி என்பது தௌசண்ட் மில்லியன் கியூபிக் பீட், அதாவது ஆயிரம் மில்லியன் கன அடி. அதாவது நூறு கோடி கன அடி.
நாடு விடுதலையடைந்தபின் முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சாத்தனூர், பவானி, அமராவதி, வைகை, மணிமுத்தாறு ஆகிய அணைகளைக் கட்டிப் பாசனத்துக்கும் பசுமைப் புரட்சிக்கும் வழி செய்தார்.
இந்த அணைகள் எல்லாம் செழிப்பான காலத்திலும் வெள்ளக்காலத்திலும் மொத்த நீரும் வடிந்து விடாமல் ஓரளவு நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு பின்வரும் காலங்களில் அவற்றைப் பயன்படுத்த உதவுகின்றன. இந்த அணைகளில் தேக்கப்படும் நீரின் அளவு குறைந்துவிட்டால் குடிநீருக்கு என்று கூறித் தண்ணீரைக் கீழே பாசனத்துக்குத் திறப்பதில்லை. அதே நேரத்தில் ஆலைகளின் பயன்பாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கப்படுகிறது என்பது உழவர்களின் குற்றச்சாட்டு.
மேட்டூர் அணையில் 90 அடிக்கு நீர்மட்டம் இருந்து, நீர்வரத்தும் இருந்தால் ஜூன் 12ஆம் நாளில் குறுவைப் பட்ட நெல் பயிரிடுவதற்குத் தண்ணீர் திறந்துவிடலாம். இந்த ஆண்டில் 90 அடிக்குக் கீழே நீர்மட்டம் இருந்ததாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததாலும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
திறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே கருநாடக அரசுக்கு வலியுறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் மறுத்தால் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டும். ஆனால் அதே காலத்தில் தில்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்தார். காவிரி பற்றிப் பேசினாரா? என்று தெரியவில்லை.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெற்பயிருக்குத் தண்ணீர் திறக்க வேண்டிய நாளில் திறக்க முடியவில்லை. ஆனால் அதே நாளில் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த அவமானம் என்னவென்றால், எந்தக் கருநாடகம் தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரைத் திறந்துவிட மறுத்ததோ, அதே கருநாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் தில்லியில் இருந்து மங்களூருக்குச் சென்று அங்கிருந்து சென்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய். அன்று அவர் சென்றிருக்க வேண்டியது மங்களூருக்கு இல்லை. மைசூருக்குச் சென்று கிருஷ்ணராஜ சாகர் அணைக்குச் சென்று பார்வையிட்டுவிட்டுப் பெங்களூருக்குச் சென்று அந்த மாநில முதலமைச்சரிடம் பேச்சு நடத்தி இருக்க வேண்டும்.
அவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஆண்டு முழுவதும் கும்பிடப் போகலாம். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டிய நாளில், திறக்க முடியாத நிலை இருந்த நாளில் போனது பேரவமானம் ஆகும்.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று ஔவையார் சொன்ன சொல்லை அவர் நினைவிற்கொள்ள வேண்டும். நம்மை மதித்துத் தண்ணீர் திறந்துவிடாதவரின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் தான் செல்ல வேண்டுமா? தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களே இல்லையா?
காவிரியில் தமிழ்நாட்டுக்கு நொடிக்கு 3500 கனஅடி என்னும் அளவில் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும், அதுவும் தமிழ்நாட்டு எல்லையில் புலிக்குன்று என்னுமிடத்தில் இந்த அளவில் தண்ணீர் வந்துசேர்வதே கணக்கு என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, இங்கே குடிநீருக்கே தண்ணீர் இல்லை, இந்நிலையில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று முதலமைச்சர் சிவக்குமார் ஆணவத்துடன் கூறுகிறார். துணைக்கு அங்குள்ள எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவையும் சேர்த்துக்கொள்கிறார். எங்கே தண்ணீர் திறந்துவிட்டு விடுவார்களோ என்று கருதிக் கர்நாடக பாஜகவினர் கிருஷ்ணராஜசாகர் அணை முன் போராட்டம் நடத்துகின்றனர். அணையில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் பாதியைத் திறந்துவிடலாமே. அதற்கு அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. ஒவ்வொரு முறையும் அணை நிரம்பிய பிறகே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதேபோல்தான் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. அங்கிருந்து முதலில் நொடிக்குப் பத்தாயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் பாதுகாப்புக் கருதி நொடிக்கு 25 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. இது நீர்வரத்தைப் பொறுத்துக் கூடலாம் குறையலாம். மழை நின்றுவிட்டால் நீர் திறப்பும் நிறுத்தப்படலாம்.
கபினி அணையைப் பொறுத்தவரை இதிலிருந்து ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கிழக்கே உள்ள பகுதியில் காவிரியாற்றில் கலக்கிறது. அதனால் இந்த நீர் சிறு சிறு தடுப்பணைகளில் பிரிவது போகப் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும். ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் காவிரியில் கலந்து கிருஷ்ணராஜ சாகர் அணைக்கே வரும். அந்த அணை நிரம்பினால்தான் கீழே திறக்கப்படும்.
மேற்கு மலைத்தொடரில் கனமழை பெய்ததாலும் பத்தொன்பதரை டிஎம்சி கொள்ளளவுள்ள கபினி அணை நிரம்பியதாலும், அதற்குக் கீழே தேக்க அணை ஏதும் இல்லாததாலும் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும்.
இதே நேரத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் நமக்கு உரிய பங்குத் தண்ணீரைத் திறந்து விடச் சொல்லி அதைப் பெறுவதே அரச தந்திரமாகும். அதைக் கேட்டுப் பெறும் தகுதி தமிழ்நாட்டுத் தவெக அரசுக்கு உள்ளதா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேற்குப் பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டு விட்டதால், மழை பெய்யும் காலத்திலும் அங்கே தண்ணீர் தேக்கப்படுவதால், அங்கே திறந்துவிட்டால் தான், அதாவது கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும், தமிழ்நாட்டில் மேட்டூர், பவானி, அமராவதி அணைகளில் இருந்தும் தண்ணீரைத் திறந்துவிட்டால்தான் காவிரியில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாட முடியும் என்னும் நிலைதான் இப்போது உள்ளது.
பொதுவாக ஆண்டுதோறும் ஒரே அளவில் செழிப்பாக மழை பெய்வதில்லை. ஓரிரு ஆண்டுகள் மழையளவு குறையலாம். சில ஆண்டுகளில் மழை பெய்யாமலேயே போகலாம். ஆனால் செழிப்பாகப் பெய்யும் காலத்தில் வரும் வெள்ளம் ஆற்றுமணலுக்கிடையே ஈர்க்கப்பட்டு நிலத்தடி நீராகப் பஞ்சக் காலத்துக்குப் பயன்படும். கண்ணுக்குத் தெரியாமல் தண்ணீரைத் தேக்கி வைக்கும், தோண்டினால் நீர் ஊறும், தொட்டனைத்தூறும் மணற்கேணியாக விளங்கிய ஆறுகளைப் பாழ்படுத்திய பழி திமுக அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையே சேரும். எந்தக் கேரள அரசு நெய்யாறு அணைத் தண்ணீரைக் கன்னியாகுமரி மாவட்டத்துக்குத் தர மறுக்கிறதோ, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைத் தமிழ்நாட்டுக்குப் பயன்படும் வகையில் 152 அடி உயரத்துக்குத் தேக்கவிடாமல் தடுக்கிறதோ, அந்த மாநிலத்துக்குத் தான் இங்கிருந்து ஆற்று மணலை அள்ளியும், கருங்கற்களை உடைத்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் கடத்தி விற்றனர்.
எந்தக் கர்நாடக அரசு அங்குள்ள அணைகள் நிரம்பினாலன்றித் தமிழ்நாட்டுக்குச் சொட்டுத் தண்ணீரையும் விடமாட்டோம் என்று இறுமாப்புடனும் ஆணவத்துடனும் சொல்கிறதோ, அந்தக் கர்நாடகத்துக்குத் தான் இங்கிருந்து காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆற்று மணலைப் பல்லாயிரக் கணக்கான லாரிகளில் அள்ளிக் கடத்தி விற்றனர். தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்கும், குன்றுகளில் இருந்தும் உடைக்கப்பட்ட கற்களைக் கொண்டுபோய் விற்றனர்.
கேட்டால் கட்டுமானத் தொழிலுக்கு ஆற்றுமணலும், கருங்கற்களும் வேண்டுமே, அவை இல்லாவிட்டால் நீங்கள் எப்படி வீடு கட்டுவீர்கள், இங்கே எப்படி நால்வழிச்சாலை அமைக்க முடியும்? என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் போல இரு திராவிடத் திருடர்களும் பேசுவர். ஆனால் உண்மை அப்படி இல்லை. இங்கிருந்து ஆற்றுமணல் இலங்கைக்கு, மாலத்தீவுக்கு, மொரிசியசுக்குக் கடத்தப்பட்டது. கேரளத்துக்குக் கர்நாடகத்துக்குக் கடத்தப்பட்டது. இங்கிருந்து கற்களை வெட்டியெடுத்துப் பல நாடுகளுக்குக் கடத்தினர். கேரளத்துக்கு, கர்நாடகத்துக்குக் கடத்தினர். கேரளத்தின் விழிஞத்தில் அதானி கட்டிய துறைமுகத்துக்காக மொத்தக் கற்களும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தே வெட்டிக்கொண்டுசெல்லப்பட்டன. தமிழ்நாட்டின் நலனில் கொஞ்சமும் அக்கறை இருந்தால் இப்படிச் செய்திருப்பார்களா?
இந்த மலைகள் வெட்டப்படா விட்டால், இந்த ஆறுகளில் மணல் அள்ளப்படாமல் இருந்திருந்தால் எத்தகைய வறட்சிக்காலத்திலும் நமக்குத் தேவையான நீரை அவை ஊற்றுகளாக இருந்து  தந்துகொண்டே இருக்கும். தமிழ்நாட்டுக்கு ஆற்று நீரை அற்றுப் போகச் செய்தது கேரள கர்நாடக ஆந்திர மாநில அரசுகள் என்றால், ஆற்றின் மணலை அள்ளி ஊற்றுநீரை அற்றுப் போகச் செய்தது திமுக, அதிமுக என்னும் தமிழ்நாட்டின் இருபெரும் திருட்டுத் திராவிடக் கட்சிகள் தான் என்பதே உண்மை.
காவிரி கொண்டான் என்று பட்டம் சூட்டிக்கொண்ட திமுக தலைவர் கருணாநிதியின் காலத்தில்தான் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கபினி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டிக்கொண்டது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த பெருமை மட்டுமில்லை அவருக்கு. தமிழ்நாட்டின் ஆறுகளில் பெருமளவு மணற்கொள்ளையைத் தொடக்கி வைத்துப் பாலாறுகொன்றான், காவிரிகொன்றான், தென்பெண்ணைகொன்றான், வைகைகொன்றான், தாமிரபரணி கொன்றான், நம்பியாறுகொன்றான் என்ற பட்டப்பெயர்களும் அவருக்கே உரியது.
இன்றும் கூடக் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். எங்களின் முயற்சியால் தான் திறந்தனர் என்று ஒருபுறம் தவெக அரசு மார்தட்டலாம். உங்கள் முயற்சியால் என்றால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நொடிக்குப் பத்தாயிரம் கனஅடி நீரைத் திறந்துவிடச் சொல்லுங்கள் பார்க்கலாம். கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்புக் கருதித் திறந்துவிடப்பட்டதே இப்போது வந்துகொண்டிருக்கும் நீர். அவர்களிடம் தண்ணீர் கேட்டு நீங்கள் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. அதற்காக எந்தப் பேச்சும் நடத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்த அவர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில் இயற்கையில் கனமழை பெய்ததால் அதைத் தேக்க வழியின்றிக் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
அதே நேரத்தில் கபினி அணை மட்டுமல்ல, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் தண்ணீரைத் திறந்துவிட்டாலும் அந்த நீர் நம் தமிழ்நாட்டுக்குப் பயன்படும் படி செய்யும் இயற்கையின் வைப்பகங்களான மணலை அள்ளி விற்றுக் கோடி கோடியாய் ஈட்டிய பணமும் சொத்துக்களும் அந்த ஊழல் அரசியலார்க்கு ஒருபோதும் வாய்க்காமல் போகட்டும்.
ஆற்று மணலை அள்ளி விற்றது மட்டுமல்லாமல், பெருவெள்ளம் வரும்போது பாலங்களும் அணைகளும் இடிந்து உடைந்து விழும்போதும், உயரழுத்த மின்கோபுரங்கள் சாய்ந்து விழும்போதும் அதற்கு மணற்கொள்ளை காரணம் இல்லை என்று கூறித் தங்கள் தவறை மறைக்கும் போக்கு இருபெரும் திருட்டுத் திராவிடக் கட்சித் தலைவர்களிடமும் இருந்தது. அந்த அரசியல் பிழைக்குத் தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க தண்டனை அளித்துள்ளனர்.
இதை இப்போதுள்ள தவெக அரசும் உணர வேண்டும். உங்களுக்குக் கிடைத்துள்ள ஐந்தாண்டுக் காலத்தில் முந்தைய திருட்டுத் திராவிட அரசுகளைப் போலவே மண், மணல், கல் ஆகிய இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தால் அடுத்த தேர்தலில் மக்கள் உங்களையும் தூக்கி எறிவர் என்பதை மனத்திற்கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்.
ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளில் ஆற்றில் தண்ணீர் வராதது மட்டுமல்லாமல், மணலும் இல்லை என்னும் அளவில் அரசியலில் பிழை செய்தவர்களை அறம் தண்டித்து விட்டது. இன்னும் தண்டிக்கும். 

சனி, 25 ஜூலை, 2026

கொல்வது காவல்துறையின் அதிகாரமா?



தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை மாதத்தில் நாகர்கோவில் சிறைச்சாலையில், தூத்துக்குடிக் காவல்நிலையத்தில் என இரண்டு இடங்களில் காவல் சிறைக் கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன. சிறிய குற்றத்துக்காகக் கைது செய்யும் ஒருவரைச் சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் கடமை. அதைச் செய்யாமல் கையூட்டு, இலஞ்சம் என்னும் எலும்புத் துண்டுக்காக வெறிநாய்களைப் போன்று நடந்துகொள்ளும் காவல்துறையின் நடவடிக்கை குறித்து விளக்குகிறது இந்த ஆய்வுத் தொகுப்பு....

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்" என்பது 550ஆவது திருக்குறள்.
இது செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் வருகிறது.
கொலை முதலிய கொடுஞ்செயல்களைச் செய்வோரை அரசன் தண்டித்தல், நெற்பயிரில் வளரும் களையைப் பிடுங்குதலுக்குச் சமம் என்பது இந்தக் குறளின் பொருளாகும். இது மன்னராட்சிக்கால இலக்கணம் ஆகும். ஆனால் இக்காலத்துக்கும் பொருந்தும்.
குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுப்பதிலும் மனித உரிமைகளைப் பார்க்கும் இக்காலத்திலும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னும் வகையிலான தண்டனை முறைகள் ஒருசில நாடுகளில் உள்ளன.
ஒருவரை அநியாயமாகக் கொன்றவனை, அதற்கான தண்டனையாக அரசு கொன்றுவிட்டால், அநியாயமாகக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் ஆறுதலடைவர். கண்ணாற்கண்ட சாட்சிகள் இல்லாதது, அச்சத்தால் யாரும் சாட்சி சொல்ல வராதது, சாட்சிகளையும் சான்றுகளையும் காவல்துறை கண்டுகொள்ளாதது ஆகியவற்றாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியாகவும் கொலையாளி தண்டனையில் இருந்து தப்புவது பாதிக்கப்பட்டவருக்கு ஏமாற்றத்தையும் மனவலியையும் ஏற்படுத்தும். இத்தகைய சூழலில்தான் பழிக்குப் பழி என்னும் பழிவாங்கல் உணர்வு ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் எவையெல்லாம் போதைப்பொருள் என்பதை வரையறுப்பதில் அரசுக்கே இன்னும் போதை தெளியவில்லை.
கஞ்சா, ஹெராயின், பிரவுன்சுகர், மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றைப் போதைப்பொருள் என்கின்றனர்.
அதேபோல் பனங்கள், தென்னங்கள் ஆகியவற்றையும் போதைப்பொருள் என்கின்றனர்.
கழிவுச் சர்க்கரைப் பாகை ஊறவைத்து, நொதிக்க வைத்து, அந்த நொதியைக் கொதிக்க வைத்து வரும் நீராவியைக் குளிர வைத்துப் பெறும் நல்ல சாராயத்தையும் கள்ளச்சாராயம் என்று பெயரிட்டுப் போதைப் பொருள் என்கின்றனர்.
ஆனால் வேதிப்பொருட்களையும் சாயங்களையும் கலந்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டுச் சாராய வகைகள் என்னும் பெயரில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அரசியல்வாதிகளின் ஆலைகளில் தயாரித்த மது வகைகளையே TASMAC எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மொத்தமாகக் கொள்முதல் செய்து, மாநிலம் முழுவதும் உள்ள ஐயாயிரத்துக்கு மேற்பட்ட சில்லறைக் கடைகள் மூலம் விற்கிறது.
இந்த TASMAC கடைகளில் விற்கும் மது வகைகள் மட்டும் தமிழ்நாடு அரசுக்குப் போதைப்பொருளாகத் தெரியவில்லை. இவற்றைவிடச் சிறந்ததாக வெளியே வேறு யாரும் சாராயம் வடித்து விற்றாலும் குடித்தாலும் அது போதைப்பொருளாகும்.
அதேபோல் நாட்டின் பிற மாநிலங்களில் விற்கப்படும் குட்கா, கைனி, பான் மசாலா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தடை செய்யப்பட்டன. ஜெயலலிதா மறைந்தபின் அதே பொருட்களையே தடையை மீறி ஒளிவுமறைவாக விற்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, அப்போதைய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மாதம் 15 இலட்ச ரூபாய் என்கிற கணக்கில் பல கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றதாக அந்தப் பொருட்களின் மொத்த விற்பனையாளர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்பேட்டை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.  
இன்னும் மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கான தடை நீடிக்கிறது. அதேபோல் தடையை மீறித் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் தொடர்ந்து விற்கப்படுகிறது.
மது வகைகள், மெல்லும் புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான தடையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் பொறிகளாகக் காவல்துறை, வருவாய்த்துறை ஆகியன உள்ளன.
"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு" என்று மதுப் பாட்டில்களில் எழுதப்பட்டுள்ளது. மதுக்கடையின் பெயர்ப்பலகையிலும் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கேடு விளைவிக்கும் மது வகைகளை ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் வழியாக மக்களுக்கு விற்பது தான் தமிழ்நாட்டு அரசின் முதற்கடமையாக இருக்கிறது.

குட்கா, கைனி, பான் மசாலா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்கள் அண்டை மாநிலங்களில் தடை செய்யப்படாததால் அதில் குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளதால் பல மடங்கு விலைகொடுத்தாவது வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனர். இதனால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதால் கடத்தல்காரர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் அதிக இலாபம் கிடைக்கிறது. இடையில் பிடிபட்டாலும் கையூட்டுக் கொடுத்துத் தப்புகின்றனர். இவர்கள் பெருந்தொகையைக் கையூட்டாகக் கொடுத்தாலும் அது பலமுறை ஈட்டிய பெரும் இலாபத்தில் இருந்து ஒதுக்கும் சிறு தொகையாகவே அவர்களுக்கு உள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பதால் கிடைக்கும் தண்டனையைவிட, அவர்களுக்கு இலாபம் பெரிதாகத் தெரிவதால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்கள் புழக்கம் இல்லை என்று ஆட்சியாளர்கள் கூறினாலும், கடைகள், பொது இடங்கள், கழிவறைகள், ஆற்றோரங்கள், கடற்கரை என எங்கெங்குப் பார்த்தாலும் புகையிலைப் பொருட்களின் காலிப் பொட்டலங்கள் கிடப்பதே அது தங்கு தடையின்றி விற்கப்படுவதற்குச் சான்றாகும்.
தடையை மீறிப் புகையிலைப் பொருட்களை விற்பது குற்றம்தான். எனினும் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டில் பெட்டிக்கடையில் இந்தப் பொட்டலங்களை விற்றதாகக் கூறிச் சபரிவர்மன் என்னும் இளைஞரைக் காவல்துறையினர் பிடித்துச் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அவர் உயிரிழந்த நிலையில் அவரைக் காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உடற்கூறாய்வில் அவர் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
புகையிலைப் பொருட்கள் விற்றால் சிறைத்தண்டனையோ, அபராதமோ விதிக்கச் சட்டத்தில் இடமுள்ளது. கொலைத்தண்டனை இல்லை. அவரைக் கையும் களவுமாகப் பிடித்தால் நீதிமன்றத்தில் நிறுத்தி, அவர் குற்றத்தை மெய்ப்பிப்பதே காவல்துறையின் கடமையாகும். அவர் குற்றவாளியா? என்பதைத் தீர்மானித்துத் தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் கடமையாகும். வழக்கு விசாரணைக்கு முன்பே சிறையில் அடித்துக் கொல்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். புகையிலைப் பொருள் விற்றவரிடம் வழக்குப் பதியாமல் இருக்கப் பெருந்தொகையைக் கையூட்டாகக் காவல்துறையினர் கேட்டதாகவும், அதற்கு உடன்படாததால் அடித்துக் கொன்றுவிட்டதாகவும் உறவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால், காவல்துறையினரின் நோக்கம் புகையிலைப் பொருட்களை ஒழிப்பதோ, தடையை மீறி விற்பவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதோ இல்லை. சட்டத்துக்குப் புறம்பான குற்றத்தைச் செய்தவர்களிடம் பெருந்தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு அவர்களைத் தண்டனையில் இருந்து தப்ப வைக்கும் முயற்சியாகும். இதில் விடுவிக்கப்படுபவர் சட்டத்துக்கு அஞ்சாமல் மீண்டும் புகையிலைப் பொருட்களை விற்கத் தொடங்குவார். அவர்களை விடுவிக்கக் காவல்துறையினர் பெறும் கையூட்டு, புகையிலை விற்பனை செய்யச் சட்டவிரோதமாகப் பெறும் உரிமத்துக்கான தொகை போலாகிறது. இதனால் ஒருபுறம் புகையிலைப் பொருள் விற்பனையும், மறுபுறம் ஊழலும் பெருகுகிறது.
எப்படி இருப்பினும் சபரிவர்மன் புகையிலை விற்றதாகவே கொண்டாலும், அது நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கப்படவில்லை, நீதிமன்றம் தண்டனை விதிக்கவில்லை, அதிலும் அத்தகைய குற்றத்துக்கு மரணத் தண்டனை கிடையாது என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.
தாய், தந்தை, மனைவி, மகன் என ஒரு குடும்பத்தையே காக்க வேண்டிய இளைஞனைக் கொடூரமாக அடித்துக் கொன்றதே தமிழ்நாட்டில் ஊழல் எவ்வளவு பெருகி ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது என்பதற்கும், காவல்துறையில் ஈவிரக்கமற்ற அரக்கர்கள் காக்கிச் சட்டை போட்டுக்கொண்டு உலவுகின்றனர் என்பதற்கும் சான்றாகும்.
சட்டவிரோதச் செயல்கள் செய்வதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர், அதைக் கண்டறிந்து அவர்களிடம் கையூட்டுப் பெற்று அந்தச் செயல்களைப் பெருகச் செய்வது கன்னியாகுமரிக் காவல் படுகொலையில் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தப் போக்கு திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் உருவாகிச் செழித்து வளர்ந்துள்ளது. இதை மாற்றிக் காட்டுவோம், மாற்றத்தை உருவாக்குவோம் என்று களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் இன்றைய முதலமைச்சருமான ஜோசப் விஜய், இந்தக் காவல் கொட்டடிக் கொலைக்கு ஓர் இரங்கலோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. இது அவருடைய கல்நெஞ்சத்தைக் காட்டுகிறது.
ஒரு பெட்டிக்கடையில் 100 பொட்டலம் குட்கா விற்றவனுக்குக் கொலைத்தண்டனை என்றால், பல கோடி ரூபாய் கையூட்டுப்பெற்றுக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் சட்டத்தை மீறி விற்றுக்கொள்ளத் தைரியம் கொடுத்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? அவனைத் தன் கட்சியில் சேர்த்துக்கொண்ட ஆளுங் கட்சித் தலைவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடலாம்...
-----------
இதேபோல் தூத்துக்குடியில் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து பெட்டி பெட்டியாக மதுப் பாட்டில்களை வாங்கி வெளியே கொண்டுசென்று வீட்டில் வைத்து விற்ற அருணாசலம் என்கிற இளைஞரைக் காவல்துறையினர் தலையிலேயே இரத்தம் சிந்தும்படி அடித்துள்ளனர். தலையில் காயமடைந்து குற்றுயிரான அந்த இளைஞன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான்.
அருணாசலத்தை இளம் வயதில் காவல்துறை அரக்கர்களிடம் பறிகொடுத்த அவரின் தாயும், உடன்பிறந்தானும் சோகத்தில் கதறி அழுதபோது, இதற்கு வெட்கப்பட வேண்டிய, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய, காவல்துறையினரின் அரக்கத்தனமான இத்தகைய போக்குக்குக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டிய முதலமைச்சரும் அமைச்சர்களும் அன்று ஜனநாயகன் திரைப்படத்தைக் கண்டு போலிக்கண்ணீர், நீலிக்கண்ணீர் வடித்ததில் வியப்பொன்றும் இல்லை.
இத்தனைக்கும் கடந்த திமுக ஆட்சியில் காவல் கொட்டடியில் கொல்லப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோரின் குடும்பத்தினரைச் சென்னைக்கு வரவழைத்துத் தவெக சார்பில் விஜய் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத் தக்கது. அப்போது நீதிகேட்ட விஜய், இப்போது இந்தப் படுகொலைக்குத் தொடர்புடைய காவல்துறையின் பொறுப்பையும் ஏற்ற முதலமைச்சராக உள்ளார்.
டாஸ்மாக்கில் விற்ற மதுப்பெட்டிகளை வெளியே கொண்டுவந்து அருணாசலம் விற்றது மெய்ப்பிக்கப்பட்டால் சிறைத் தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படும். ஆனால் குற்றத்தை மெய்ப்பிக்கு முன்னே அடித்துக் கொல்லப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை விசாரணை ஆணையம் வைத்துக் கண்டுபிடிக்க வேண்டும்.
நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடான மதுவை TASMAC கடையில் வைத்து விற்கும்போது மட்டும் அது போதைப்பொருள் இல்லையா? நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை அந்தக் கடையில் விற்கும்போது வாங்கிக் குடித்தால் மட்டும் அதில் போதை வராதா? அந்த நேரம் தவிர மற்ற நேரத்தில் வெளியே விற்பது சட்டவிரோதமா? அருணாசலம் மது விற்றது குற்றமா? பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்றது குற்றமா? அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளிலேயே அதிகப்பட்சச் சில்லறை விலையைவிட அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் விற்பனையாளர்கள் மீது இதுவரை எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
மொத்தமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது குற்றம் என்றால் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு TASMAC மதுக்கடைக்குப் பின்னாலும் குறைந்தது பத்துச் சந்துக்கடைகளாவது உள்ளன. TASMAC கடைகள் இல்லாத ஊரிலும், அது திறந்திருக்காத நேரத்திலும் எங்கும் எப்போதும் மது விற்பனை நடந்தே வருகிறது. அப்படி விற்கும் சட்டவிரோதச் சில்லறை விற்பனை நிலையங்கள் தண்டனைக்கு அஞ்சாததும் தொடர்ந்து பெருகுவதும் எதனால்?
சட்டவிரோத விற்பனையாளரைப் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்குப் பதில், அதையே ஒரு சாக்காக வைத்துச் சட்ட நடவடிக்கையில் இருந்து, வழக்கில் இருந்து தப்புவதற்கு ஒரு பெருந்தொகையைக் காவல்துறையினர் பெற்று விடுகின்றனர். இதைச் சட்டவிரோதமாக மது விற்பதற்கான சட்டவிரோதமான உரிமம் என்றே இந்தச் சில்லறை விற்பனையாளர்கள் கருதுகின்றனர். இந்தப் போக்கு இருக்கும் வரை சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவே முடியாது. வேலைவாய்ப்பில்லாத இந்த நாட்டில் சட்டவிரோத மது விற்பனை இன்னும் பெருகிக் கொண்டே போகும்.
இதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது. மதுவிற்பனையை அரசின் வருமானமாகக் கருதாமல் அவமானமாகக் கருத வேண்டும். மதுவால் வரும் வருமானத்தை விட, அதைக் குடிப்போரின் உடல்நலக் குறைவு, மது மயக்கத்தால் கடமை மறந்து போதையில் உழலும் தலைவனால் அந்தக் குடும்பம் வறுமையடைவது, மதுகுடித்த உடல்நலம் கெட்டு உயிரிழப்பதால் குடும்பம் தலைவனை இழந்து தவிப்பது, குடிவெறியில் செய்யும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவது, குடிவெறியில் வண்டி ஓட்டுவோர் மதிமயங்கித் தானே விபத்தில் சிக்கி உயிரிழப்பது, சாலைகளில் வரும் ஆட்கள், வாகனங்கள் மீது மோதிப் பிறரைக் கொல்வது இவற்றால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மிக மிக அதிகம். மது வருமானம், மதுவால் ஏற்படும் தீமைகள் இவை இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் முழு மதுவிலக்குக் கொண்டு வருவதன் தேவை நன்றாக விளங்கும்.
தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக தலைவர் இலவசங்கள், உதவித்தொகைகள் என முந்தைய திமுக, அதிமுகவினர் கூறிய உறுதிமொழிகளையே அள்ளி வீசினார். அவற்றைச் செயல்படுத்த முடியாமல் இப்போது திணறுகிறார்.
திமுக, அதிமுக என இரு கட்சிகளும் செய்யாத ஒன்று என்றால் அது மதுவிலக்குத் தான். அதை நடைமுறைப்படுத்தவே முதல் கையொப்பம் இடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது பொய்த்துப் போனது. 717 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்து மூடப்பட்டதாகக் கூறினாலும், அது பொய்யா, மெய்யா? என்கிற ஐயம் எழுந்துள்ளது. அது மெய்யாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் மது விற்பனை குறையுமா? ஒரு கடையில் வாங்கியவன் அந்தக் கடை மூடப்பட்டால் திறந்திருக்கும் மற்றொரு கடையில் வாங்குவானேயொழியக் குடிப்பதை நிறுத்த மாட்டான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மந்தப்புத்தி உடையவர்கள் தான் மக்களை ஏமாற்ற இப்படியொரு திசை திருப்பும் உத்தியைக் கடைப்பிடிப்பர். அதைத் தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்.
அதனால் முழு மதுவிலக்கு கொண்டுவருவதாலும், புகையிலைப் பொருட்கள் தடையை முற்றாக நடைமுறைப்படுத்தினாலும் மட்டுமே, காவல்துறையினர் கையூட்டு, இலஞ்சம் வாங்கிக் கொழிப்பதையும், அதைக் கொடுக்காதவரைக் கொடூரமாகத் தாக்கிக் கொல்வதையும் தடுக்க முடியும். தமிழ்நாட்டுப் பெண்கள் மீது, குழந்தைகள் மீது, மாணவர்கள் மீது, தன் இரசிகர்கள் மீது, அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் மீது கொஞ்சமேனும் அக்கறை இருந்தால் முதலமைச்சர் ஜோசப் விஜய் இனியாவது இவையிரண்டையும் உடனே செய்து காட்டுவார். முழு மதுவிலக்கு, புகையிலைப்பொருட்கள் தடை இரண்டையும் நடைமுறைப்படுத்தா விட்டாலும், காவல்துறை இலஞ்சம், கையூட்டு வாங்குவதையும், மிரட்டிப் பணம் பறிப்பதையும் தடுக்காவிட்டாலும் அவருக்குத் தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சங்கூட அக்கறை இல்லை என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்..
- சே.பச்சைமால்கண்ணன்

திங்கள், 29 ஜூன், 2026

கட்சியும் ஆட்களுமே மாற்றம்; ஆட்சியும் காட்சியும் மாறவில்லை

சென்னை விருகம்பாக்கம் கால்வாய்

கோடையில் ஓர் இரவில் (சூன் 27, 28 சேரும் இரவில்) சென்னையில் முக்கால் மணி நேரம் மழை பெய்தது..சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழைமானியில் வளசரவாக்கம், நெற்குன்றம் ஆகிய இடங்களில் வெறும் 6 செண்டிமீட்டர் மழையே பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழை பொய்த்துக் கோடையிலும் சரியாக மழை பெய்யாமல் காய்ந்திருக்கும் கோடைக்காலத்தில் ஒருநாளில் பெய்த இந்த மழை தமிழ்நாட்டில் வேறெங்கும் பெய்திருந்தால் முழுவதும் மண்ணால் ஈர்க்கப்படக் கூடியது. முழுவதும் கான்கிரீட் தரையாக உள்ள சென்னையில் அந்த மழை வெள்ளம் அப்படியே வழிந்தோடி விருகம்பாக்கம் கால்வாயில் பாய்ந்தது.

இதனால் விருகம்பாக்கத்துக்கும் கோயம்பேட்டுக்கும் இடையில் உள்ள சின்மயா நகரில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இந்த நிலை எதனால் வந்தது?

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் செய்த பணியையே மீண்டும் மீண்டும் செய்து பணத்தைக் கொள்ளையடிப்பர். அதே பாணியில் விருகம்பாக்கம் கால்வாயில் ஏற்கெனவே வலிமையாக உள்ள தடுப்புச் சுவரை இடிக்க முடியாமல் இடித்து வீட்டு மீண்டும் புதுச்சுவர் கட்டும் மோசடி நடைபெற்று வருகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் மழைநீர் செல்ல முடியாதவாறு மண்ணைக்குவித்து அணைபோட்டுள்ளனர். அதுதான் வெள்ளம் ஊருக்குள்ளும் வீட்டுக்குள்ளும் புகுவதற்கு முதன்மைக் காரணமாகும்.
சுருக்கமாகச் சொன்னால் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்களின் இலாப வெறிக்கு மக்கள் தங்கள் நல்வாழ்வைப் பறிகொடுக்க வேண்டியுள்ளது.

திமுக பாணியைத் தொடரும் தவெக அதிலிருந்து மீளுமா? என்பதைப் போகப் போகப் பார்க்கலாம்.
திட்டம் மக்களுக்கா? கமிஷனுக்கா? என்பதைத் தவெக அரசு முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை இந்தச் செய்திக் கட்டுரை வலியுறுத்துகிறது.இனிச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்...

சென்னை கோயம்பேட்டுக்கும் விருகம்பாக்கத்துக்கும் இடையில் உள்ளது சின்மயா நகர். மேற்கே போரூரில் இருந்து கிழக்கே அமைந்தகரை சூளைமேடு வரை செல்லும் விருகம்பாக்கம் கால்வாய் இந்தச் சின்மயா நகரின் வழியாகச் செல்கிறது. முற்காலத்தில் வேளாண்மைக்கான கால்வாயாக இருந்த இது இப்போது மழைநீர் வடிகாலாகவும், கழிவுநீர்க் கால்வாயாகவும் உள்ளது. போரூர், மதுரவாயில், நெற்குன்றம், சின்மயா நகர்ப் பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் மூடப்பட்டு விளைநிலங்களில் எல்லாம் வீடுகள் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் பெய்யும் மொத்த மழைநீரும் இந்தக் கால்வாய் வழியே வழிந்தோடி அமைந்தகரை சூளைமேட்டுக்கு அருகில் கூவம் ஆற்றில் கலக்கிறது.

சென்னை மாநகரம் முழுவதுமே ஏற்ற இறக்கம் பார்த்து மழைநீர் வடிகால்களை அமைப்பதில்லை. இதுதான் பல இடங்களில் மழைநேரத்தில் வெள்ளம் புகுவதற்கும் மழைநீர் வடியாததற்கும் காரணமாகிறது. வடிகால் தொடங்குமிடமும், அது கால்வாயில் சேருமிடமும் உயரமாக இருக்கும்போது, இடைப்பட்ட பகுதி தாழ்வாக இருப்பதால் அங்குள்ள தெருக்களில் வெள்ளம் புகுந்து விடுகிறது.

கால்வாயில் தேங்கி அடைத்துள்ள கழிவுகள்


இதேநிலைதான் கோயம்பேடு சந்தைக்குத் தெற்கே உள்ள சின்மயா நகரில் உள்ளது. எந்தவொரு மழைக்காலம் என்றாலும் இங்குத் தண்ணீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. சின்மயா நகரில் கால்வாய்க்கு இருபுறமும் உள்ள தெருக்களிலும் வீடுகளிலும் ஆண்டுதோறும் இது பெருஞ்சிக்கலாக உள்ளது. 2005, 2015, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் எல்லாம் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் திட்டமிடப்படாத குடியிருப்புகளும் அரசின் தவறான கொள்கைகளுமே. வழக்கமாக வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். மேற்கூறிய ஆண்டுகளில் எல்லாமே வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தான் வெள்ளப்பேரழிவு ஏற்பட்டுள்ளது.

2023 திசம்பர் மாத வெள்ளத்தில் ஒரு காட்சி

ஆனால் கடந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழை சரியாகப் பெய்யாதபோதும், இப்போது கோடையிலும் சரியாக மழை பெய்யாதபோதும் நேற்றிரவு முக்கால்மணி நேரம் பெய்த மழையில் இப்பகுதியில் தெருக்களில் தண்ணீர் பெருகி வீட்டுக்குள் வந்துவிட்டது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள மழைப்பொழிவு பற்றிய அறிக்கையில் சென்னை வளசரவாக்கம், நெற்குன்றம் பகுதிகளில் 6 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது மிகக் குறைந்த மழை வெறுந்தரையாக இருந்தால் மண்ணால் ஈர்க்கப்படக் கூடிய அளவுதான் இது. சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் கான்கிரீட்டால் தரைப்பரப்பு மூடப்பட்டுள்ளது. மூடப்படாத இடத்தில் தார்ச்சாலை உள்ளது. இவ்வளவு குறைந்த மழை பெய்தும் கால்வாயில் வெள்ளம் பெருகக் காரணம். உயர்வான இடத்தில் பெய்த மழைநீர் எல்லாம் பள்ளமான இடம் நோக்கிப் பாய்வதே ஆகும்.

அது மட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கோயம்பேடு - விருகம்பாக்கம் இடையே உள்ள காளியம்மன் கோவில் தெரு நெடுஞ்சாலையில் விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பாலத்தில் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டுப் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளைச் செய்வதுதான். பணிகளை எப்படியானாலும் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் ஒருபக்கம் தூண் கட்டுவதற்கான வேலை நடைபெற்று வரும்போது கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு மறுபக்கம் வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கோடைதானே என்று அலட்சியமாக இருந்த சென்னை மாநகராட்சி, பாலம் கட்டுவதற்கு முன்னால் மார்ச் மாதத்தில் இருந்தே பல இடங்களில் மண்ணால் அணை கட்டித் தண்ணீரை வடிந்து செல்ல விடாமல் தேக்கி வைத்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் கொசுக்கள் பெருகிவிட்டன. இரவில் உறக்கம் வராமல் தவிக்க வேண்டியுள்ளது. இதனால் ஆட்கள் குடியிருக்க முடியாத பகுதியாகி விட்டது சின்மயா நகர்.


பாலம் கட்டும் பணி ஒருபுறம் என்றால் விருகம்பாக்கம் கால்வாயில் சுவர் கட்டுவதற்காக அதன் நடுவே மண்ணைக் குவித்துத் தண்ணீர் செல்ல வழியில்லாமல் செய்துள்ளனர். ஏற்கெனவே தென்கரையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. வடகரையில் அப்பகுதியில் குடியிருப்போர் சுவர் கட்டியுள்ளனர். வீடுகள் இல்லாப் பகுதிகளில் ஏற்கெனவே சுவர் உள்ளது. தென்கரையில் விருகம்பாக்கம் பாலத்தில் இருந்து மேற்கு நோக்கி முழுவதும் தடுப்புச் சுவர் ஏற்கெனவே இருந்தது. இருந்தாலும் திமுக ஆட்சிக்காலத்தில் ஆட்சியாளர்கள், ஒப்பந்தக்காரர்களின் இலாப வெறிக்கு இந்தப் பகுதி இடங்கொடுத்தது. ஏற்கெனவே தடுப்புச் சுவர் வலிமையாக உள்ள பகுதியில் அதை இடிக்க முடியாமல் இடித்துவிட்டு, அதே இடத்தில் மீண்டும் தடுப்புச் சுவர் கட்ட வைத்துள்ளது அந்தக் கொள்ளை இலாப வெறி. இந்த இலாப வெறியால் ஏற்பட்ட மனிதத் தவறுகளே இன்றைய வெள்ளப் பெருக்குக்குக் காரணம். ஒரு கால்வாயிலோ, ஆற்றிலோ, வடிகாலிலோ பணியைச் செய்வதென்றால் வரும் நீரை ஒரு ஓரமாக வடியச் செய்திருக்க வேண்டும். கால்வாயில் முழுவதுமே குறுக்காகவும் நெடுக்காகவும் மண்ணைக் குவித்து அடைத்து விட்டனர். இதனால் இரவில் முக்கால் மணி நேரத்தில் 6 செண்டிமீட்டர் மழை பொழிந்து வெள்ளம் பெருகிவிட்டது. பெருகிய வெள்ளத்துக்குப் போக்கிடம் இல்லாததால் ஏற்கெனவே தடுப்புச் சுவர் உடைக்கப்பட்ட வழியாகவும், தடுப்பணைக்கு மேற்கே உள்ள தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துவிட்டது.
வலிமையாக இருக்கும் சுவரை இடித்துப் போட்ட நிலை



விருகம்பாக்கம் பாலத்துக்கு மேற்கே சின்மயாநகர் சித்திரைத் தெரு, வேதநகர், குமரன்நகர் ஆகிய பகுதிகளில் இரவே வீடுகளில் வெள்ளம் புகுந்துவிட்டது. குமரன் நகர் இரண்டாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் உள்ள குளிர்ப்பதனப் பெட்டி ஓரடிக்குத் தண்ணீரில் மூழ்கியதால் அதில் மின்கசிவு ஏற்பட்டதில் சென்னையில் புகழ்பெற்ற கண் மருத்துவர் கீதா அவர்களின் கர்ப்பிணி மகளுக்குச் சற்று மின்னதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்து வெளியேறியதால் அவர் உயிர்பிழைத்தார்.




அதேபோல் வெள்ளத்தின்போது மாநகராட்சிக் குப்பைத் தொட்டிகள் எல்லாம் நீரில் மிதந்து கவிழ்ந்து அதில் உள்ள கழிவுகள் எல்லாம் கால்வாயிலும் வீடுகளிலும், அருகில் உள்ள சின்மயா மிஷன் ஐயப்பன் கோவிலுக்குள்ளும் சென்று விட்டன. அவை நீரின் போக்கைச் செறுத்ததால் வெள்ளப்பெருக்கு இன்னும் அதிகமானது.

இதில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டுப் புதிய பாலம் கட்டுவதால் அதில் இருவழிகளில் ஒருவழியில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது. அதாவது கோயம்பேட்டில் இருந்து விருகம்பாக்கத்துக்குத் தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் அந்தப் பாலத்தில் மேற்குப் பகுதியில் இடிக்காத பகுதி வழியே சென்று விடலாம்.
விருகம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்களைப் பாலத்துக்குத் தென்பக்கத்தில் இருந்து மேற்கு நோக்கித் திருப்பி விட்டுக் குமரன் நகர் வழியாக மீண்டும் வடக்கேயும் கிழக்கேயும் திரும்பிக் கோயம்பேட்டுக்குச் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாற்று வழி செய்யுமுன் அதைச் சீரமைத்திருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் இந்த ஏற்பாட்டைச் செய்ததால் சாலையைச் சீரமைக்கவில்லை. குண்டுங்குழியுமாக உள்ளது.


 விருகம்பாக்கம் TAISHA எனப்படும் தமிழ்நாடு அனைத்திந்திய குடிமைப் பணி அலுவலர்கள் குடியிருப்பு இப்பகுதியில் தான் உள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தலைமைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் இப்பகுதியில் தான் குடியிருக்கின்றனர். அவர்கள் நாள்தோறும் இவ்வழியில்தான் சென்று வருகின்றனர். தங்கள் கண்கண்ட பகுதியிலேயே சாலையைச் சீரமைக்காமல், கால்வாயில் தண்ணீரை வடிய வைக்காமல் உள்ளார்களே. அப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் என்ன பாடுபடும்? என எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

கோடைக்காலத்தில் ஒருநாள் இரவில் முக்கால்மணி நேரம் 6 செண்டிமீட்டர் மழை பெய்ததற்கே இப்படி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதே இதைத் தடுக்க, தவிர்க்க ஒரே வழிதான் உள்ளது. பாலம் கட்டுவதற்காக விருகம்பாக்கம் கால்வாயில் மண்ணை வைத்துக் கட்டியுள்ள தடுப்பணைகளை உடைக்க வேண்டும். தடுப்புச் சுவர் கட்டுவதற்காக விருகம்பாக்கம் கால்வாய் நடுவே குவித்து வைத்துள்ள மண்ணை உடனே அள்ள வேண்டும். தடுப்பணையில் ஒரு பகுதியைப் பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு வெட்டிவிட்டதாலும், மழை நின்றுவிட்டதாலும் காலையில் வெள்ளம் வடிந்து நிலைமை சீராகியுள்ளது.
மண்ணணையைத் தோண்டி விட்டதால் வெள்ளம் வடிந்தது


இருந்தாலும் ஏற்கெனவே வலிமையாக உள்ள தடுப்புச் சுவரை இடிக்க முடியாமல் இடித்துப் புதிதாக, அதை விட வலிமை குறைந்த தடுப்புச் சுவர் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். உயரமாகச் சுவர் கட்டி எந்தப் பயனும் இல்லை. கால்வாயில் தடங்கல் இல்லாமல் நீர் வடிந்தால்தான் ஊருக்குள் வெள்ளம் புகாது. பத்தடி உயரத்துக்குத் தடுப்புச் சுவர் கட்டினாலும், வடிகால்கள், மழைநீர் வடியும் பொந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவற்றுக்கான தொண்டுகள் மூலம் வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடும் என்பதைச் சென்னை மாநகராட்சியின் நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் வாரியம்,  மழைநீர் வடிகால் கட்டும் பொறியாளர்கள் அறிந்திருக்காதது, அவர்களின் மடமையையும், ஆட்சியாளர்கள், ஒப்பந்தக்காரர்களின் இலாப வெறியையும் காட்டுகிறது.
விருகம்பாக்கம் கால்வாயில் பாலம் கட்டுமிடத்துக்குத் தெற்கே சாலையில் கீழ்ப்புறம் மழைநீர் வடிகாலுக்காக ஆழமாகப் பள்ளம் தோண்டியுள்ளனர். இந்தப் புறம் செல்லும் பேருந்துகள் கனரக லாரிகள் இந்தப் பள்ளத்தின் ஓரம் இடிந்து உள்ளே விழ வாய்ப்புள்ளதையும் சுட்டிக் காட்டியாக வேண்டும்.
விருகம்பாக்கம் கால்வாய்ப் பாலம் அருகே தோண்டியுள்ள படுகுழி


இதில் ஆறுதலளிக்கும் ஒரு செயல்பாடும் நடந்துள்ளது. அது என்னவென்றால் இப்பகுதியில் வெள்ளம் பெருகிவிட்டது என்று தெரிந்ததும் திடக்கழிவு மேலாண்மை செய்யும் Urbaser Sumeet பணியாளர்கள் அதிகாலை நான்குமணிக்கே களத்துக்கு வந்துவிட்டதுதான்.அவர்களின் பணிகளைப் பாராட்டியே ஆக வேண்டும்.



ஏற்கெனவே வலிமையாக உள்ள தடுப்புச் சுவரை உடைக்க முடியாமல் உடைத்துவிட்டுப் புதிய தடுப்புச் சுவர் கட்டும் திட்டம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பாணியை இன்றைய தவெக அரசும் பின்பற்றி வருவதையே காட்டுகிறது. விருகம்பாக்கம் கால்வாய்க்குள் குவித்து வைத்துள்ள மண்ணை முழுவதுமாக அள்ளி அகற்றிவிட்டு, இப்போது இடிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும் வெள்ளம் வெளியே வராமல் தடுப்புச் சுவரைக் கட்டி முடித்துவிட்டு இந்தத் திட்டத்தை முடித்துக் கொள்வது மக்களுக்கும் நல்லதாக இருக்கும். ஆட்சியாளர்களுக்கும் நல்லதாக இருக்கும். அதே நேரத்தில் கொள்ளை இலாப வெறி கொண்ட ஒப்பந்தக்காரர்களுக்கும், அவர்களிடம் கமிஷன் வாங்கும் அரசியலாளர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக இருக்கும்.
சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் இதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று சின்மயா நகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு இது ஒரு வெள்ளோட்டம் எனக் கருதி அரசு உடனே இதைச் செய்யுமா?
இருக்கும் சுவரை இடித்துக் கட்டும் திராவிடப் பாணிக்குச் சான்று


ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகும் தவெக அரசு, மக்களின் நலனுக்காகப் பணியாற்றப் போகிறதா? இல்லை ஒப்பந்தக்காரர்களுக்கும் அவர்களிடம் கமிஷன் பெறும் அதிகாரிகளுக்கும் கொள்ளை இலாபம் தரும் முடிவை எடுக்கப் போகிறதா? என்பதை விருகம்பாக்கம் கால்வாய்த் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்தில் அது எடுக்கப்போகும் முடிவில், ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல மக்கள் அறிந்துகொள்ளலாம்.

கோவன்குளம் சே.பச்சைமால்கண்ணன்