செவ்வாய், 10 நவம்பர், 2026

பருவமழை பொய்த்த தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பருவமழைப் பொழிவு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவரும் சூழலில், அது பற்றி அக்கறையோ கவலையோ பதற்றமோ இல்லாத ஆட்சியாளர்கள் தன்னையும் நாட்டையும் மறந்து விளம்பரத்திலும் விழாக்களிலும் மோகங்கொண்டுள்ளனர். இதுபற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.


விசும்பின் றுளிவீழி னல்லால் மற்றாங்கே

பசும்புற் றலைகாண் பரிது - திருக்குறள் 16


நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு - திருக்குறள்  20


வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ள மேற்கண்ட குறட்பாக்கள், மழை பெய்யாவிட்டால் பசும்புல்கூட முளைக்காது என்பதையும், நீரில்லா விட்டால் உலகமே இல்லை என்பதையும் காட்டுகின்றன. 

இத்தகைய மழைவளமும், அதன் செழிப்பால் வளமும் பயிர்வளமும் இந்தப் புவியின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளதா? என்றால் இல்லை. 

துருவப் பகுதிகள் ஆண்டின் பெரும்பாலான காலங்களில் பனிமூடி மரஞ்செடிகொடிகள் இன்றிப் பனிப்பாலையாக  இருக்கின்றன. 

நிலநடுக்கோட்டுக்குத் தெற்கும் வடக்கும் சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வெம்பரப்பான பாலை நிலங்கள் உள்ளன. இவற்றில் ஒருசில பகுதிகளில் பல பத்தாண்டுகளாகக் கூட ஒரு துளி மழை பெய்ததில்லை. 

நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் அதிலும் கடற்கரையைக் கொண்ட பகுதிகளில் ஆண்டின் ஒன்பது மாதங்கள் வெயில் காய்கிறது. அதேபோலப் பருவக்காற்றின் தாக்கத்தால் பெருமழை பெய்கிறது. 

இப்படி நிலநடுக்கோட்டுப் பகுதியிலும் அதையொட்டிச் சற்றுத் தொலைவில் தெற்கும் வடக்கும் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, அந்தமான் தீவுகள், இலங்கை, இலட்சத்தீவுகள், மாலைத்தீவுகள், மடகாஸ்கர், ஆப்பிரிக்க கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ள நாடுகள், தென்னமெரிக்காவின் வடபகுதியில் அமேசான் காடுகளைக் கொண்ட நாடுகள், மேற்கிந்திய தீவுகள், இந்தியாவின் தமிழ்நாடு, கேரள, கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர மாநிலங்கள்  ஆகியவற்றில் பெருமளவு மழை பொழிவதால் மரஞ்செடி கொடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு அனைத்து வகையான பயிர்களும் விளைகின்றன. ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன ஆகிய உயிரினங்களும் பல்கிப் பெருகியுள்ளன.

இந்தியாவின் தென்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் உள்ள கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை பொழிகிறது. மலையின் கிழக்குச் சரிவில் உள்ள தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பொழிகிறது. 

மனித நாகரிகம் தொடங்கியதில் இருந்தே ஆறுகளில் அணை கட்டிக் கால்வாய் வெட்டிக் குளங்களை வெட்டி அவற்றில் நீரைத் தேக்கிப் பாசனத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழ் மன்னர்கள் கட்டிய கல்லணை, கன்னடியன் அணை, கன்னடியன் கால்வாய், வீரநாராயணன் ஏரி, விஜயநாராயணன் ஏரி, நான்கூன் ஏரி, தென்னவன் ஏரி, மதுராந்தகன் ஏரி, பொன்னேரி ஆகியன தமிழரின் நீர்மேலாண்மைக்குச் சான்றாக இன்றும் அழியாமல் இருப்பதுடன் வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகின்றன.

மன்னராட்சிக் காலத்தில் இருந்த நீர்மேலாண்மைக் கட்டமைப்புகளைச் சிதைக்காமல் ஆங்கிலேயர்கள் பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். பாபநாசம் அணை, திருவைகுண்டம் அணை, முல்லைப் பெரியாறு அணை, மேட்டூர் அணை, கொள்ளிடத்தில் உள்ள கீழணை ஆகியவற்றைக் கட்டிப் பாசனத்தை மேம்படுத்தியுள்ளனர். அவர்கள் காலத்தில் எந்தக் குளமும் அழிக்கப்படவில்லை. 

வேளாண்மையும் ஊரகப் பொருளாதாரமுமே இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். நாடு விடுதலை பெற்ற பிறகு முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அப்போது புதிதாக அணைகள் கட்டிக் கால்வாய்கள் வெட்டிக் குளங்களை வெட்டிப் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்தினர். இதனால் நாட்டின் உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் பசுமைப் புரட்சி நிகழ்த்திக் காட்டப்பட்டது. இந்தக் காலத்தில்தான் கிணற்றில் நீரிறைக்கக் கமலை மாடுகளுக்குப் பதிலாக மின்னிறைப்பான்கள் பொருத்தப்பட்டன.  

விடுதலை பெறுமுன் இருந்த ஆயிரக்கணக்கான குளங்களும் அவற்றுக்கு நீர்கொண்டுவரும் கால்வாய்களும், நீர்மிகுந்து வழிந்தால் செல்லும் மறுகால்களும்,  விடுதலை பெற்றபின் இந்த எண்பதாண்டுகளில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தக் குளங்களால் பாசனம் பெறும் இலட்சக்கணக்கான எக்டேர் விளைநிலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. 

பசுமைப் புரட்சி, செயற்கை உரம், உயர்விளைச்சல் தரும் பயிர்கள், இயந்திரமயம் எனப் பல்வேறு காரணிகளால் தானியங்களும் காய்கறிகளும் பழங்களும் விளைவிக்கப்பட்டு உணவுத்தேவையில் தன்னிறைவு பெற்றாலும், பயிரிடும் பரப்பு ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகிறது. 

நாட்டின் மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் நகர்மயமாக்கல் விரைவாக நடைபெறுகிறது. இதனால் நகரங்களையொட்டிய விளைநிலங்கள் அழிக்கப்பட்டுக் குடியிருப்புகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுகின்றன. தொழிற்பூங்கா என்ற பெயரில் அரசே அந்த வேலையைச் செய்கிறது. 

குறுகிய கால ஆதாயத்தை மட்டுமே கருத்திற்கொண்டு ஆண்டுக்கு மூன்று பூ நெல் விளையும் வயல்களையெல்லாம் தரிசாகப் போட்டு முட்புதர்களை வளர்த்து வகை மாற்றம் செய்து பின்னர் வேளாண்மை அல்லாத மற்ற பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்தப்போக்கு கொஞ்சங்கொஞ்சமாகத் தொடர்கிறது. அதிலும் கடந்த 35 ஆண்டுகளாக இந்தப் போக்கு மிக விரைவாக  நடைபெறுகிறது. 

இந்திய வேளாண்மையைப் பருவக் காற்றின் சூதாட்டம் என்பர். அதிலும் தமிழ்நாட்டின் வேளாண்மை மிகப்பெரிய சூதாட்டம். கேரள கர்நாடக மாநிலங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையை நம்பி ஒரு பருவம் நெல் பயிரிட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டுக்கே உரிய வடகிழக்குப் பருவமழை பல ஆண்டுகளில் பொய்த்துப் போகிறது. அப்படி இருக்கும்போது கொஞ்சமாகப் பெய்யும் மழையின் நீரையும் தேக்கி வைத்துச் சிக்கனமாகப் பயன்படுத்திப் பயிர்களை வளர்த்து உயிர்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதற்கு மாறாக வேளாண்துறை, வருவாய்த்துறை, பத்திரப் பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, தொழில்துறை, கனிமவளத்துறை ஆகியன திட்டமிட்டு நீர்நிலைகளையும், விளைநிலங்களையும் அழித்து வருகின்றன. 

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் 

அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் 

என்றார் ஔவைப் பெருமாட்டி. 

அப்படி மழை பொய்த்துப் போகுங் காலங்களிலும் மணலைத் தோண்டினால் நீர் ஊறும். மணலுக்குள்ளிருந்து நீர் ஊறுவதால் அதற்கு ஊற்று என்று பெயர். தமிழ்நாட்டுத் திருட்டு அரசுகளும் அமைச்சர்களும் இந்த மணலையெல்லாம் அள்ளி விற்று விட்டதால் இப்போது ஆற்றின் ஊற்று எப்படி இருக்கும் என்று பிள்ளைகளுக்குச் செயல்விளக்கமாக எடுத்துக்காட்டக் கூட முடியவில்லை. ஆற்று மணலை விற்றுத் திரட்டிய பணத்தில் நூறு கோடி ரூபாய் செலவில் பெயர்த்திக்குப் பகட்டாகத் திருமணம் செய்கிறான் மணல்முருகன். அதற்குக் கொஞ்சங்கூட அவன் வெட்கப்படவில்லை. 

தமிழ்நாட்டில் நீர்வளத்துறை என்று ஒரு துறைக்குப் பெயருள்ளது. மணலை அள்ளி விற்றானே முருகன். அவனின் முன்னாள் துறை. அது இப்போது ஆனந்திடம் உள்ளது. அந்தத் துறையின் வேலை நீர்வளத்தைப் பெருக்குவது, காப்பது. ஆனால் ஆற்று மணலைத் துடைத்து அள்ளி விற்பது அதன் முழுநேர வேலையாகி விட்டது. அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களைப் போலவே இந்த ஆட்சியிலும் நீர்வளத்துறை மணல் விற்பனையை மட்டுமே செய்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. 

2021 - 2026 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் முதன்மையான ஆறுகளில் 4700 கோடி ரூபாய் மதிப்புக்கு மணற்கொள்ளை நடைபெற்றதாகவும், ஆனால் அரசுக்கு உரிமைத் தொகையாக வெறும் நாற்பது கோடி ரூபாய்க்கும் குறைவாகக் கிடைத்ததாகவும் மத்திய அரசின் அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது. 

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பயிரிடும் பட்டத்துக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ, கன்னிப்பூ என இரு பட்டங்களில் நெல் பயிரிடப்பட்டது. 

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசானம், முன்கார், பின்கார் என மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்பட்டது. 

சோழமண்டலத்தில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்பட்டது. 

பருவமழை பொய்த்ததாலும், நீர்வளங் குன்றியதாலும், பிற மாநிலங்களில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய ஆற்றுநீரைக் கேட்டுப்பெற முடியாததாலும் மூன்று பூ நெல் விளைந்த பகுதிகளில் எல்லாம் இப்போது ஒரு பூ கூட நெல் விளைவிக்க முடியவில்லை. 

தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாற்று அணையில் 2021 - 2026 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் கேரள அமைச்சன் வந்து தண்ணீரைத் திறந்துவிட்டுச் சென்றுவிட்டான். இப்போது பதவியேற்றுள்ள தவெக ஆட்சியில் கருநாடகத்தில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைக் கேட்டுப்பெறத் துப்பில்லை. அதைக் கேட்டுப்பெற வேண்டிய பொறுப்பில் உள்ளவன் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபடுகிறான்.

இயற்கையாகவே இருக்கிற காவிரி ஆற்றுநீர் உரிமையைக் கேட்டுப்பெற முடியாதவன் எங்கோ இருக்கும் கோதாவரி நீரைக் காவிரிக்குக் கொண்டுவரப் போகிறானாம். தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு முட்டாள் என்று நினைத்திருப்பான் அவன்?

தமிழ்நாட்டில் பருவமழை தொடர்ந்து ஒழுங்காகப் பெய்யாமல் அடிக்கடி பொய்த்து வருவதைப் பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டு சனவரி மாதம் பொங்கலையொட்டித் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பிறகு 2023 டிசம்பர் வரை கிட்டத்தட்ட ஈராண்டு கடும் வறட்சி நிலவியது. இக்காலத்தில் இலட்சக்கணக்கான பனைகளும் பட்டுப்போய்க் கொண்டை சாய்ந்தன. 2023ஆம் ஆண்டின் பிசானப் பட்டத்தில் தொடக்கத்தில் மழை பெய்யவில்லை. புரட்டாசி ஐப்பசி கார்த்திகை என மூன்று மாதங்களையும் கடந்து மார்கழியில் பெருமழை பெய்தது. ஆங்கிலத்தில் டிசம்பர் மாதத்தின் கடைசியில் பெய்த பெருமழையால் பேரழிவு ஏற்பட்டது. பட்டம் தவறிவிட்டதால் அதன்பிறகு நெல் பயிரிட முடியாது. 

ஆனால் அதைத் தொடர்ந்து வாழை, பருத்தி, பூம்பயிர்கள் செழிப்பாக வளர்ந்தன. அதன்பிறகு 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் பனங்கொட்டை முளைக்கக் கூடப் போதிய அளவு மழை பெய்யவில்லை. ஆயிரக்கணக்கான குளங்களுக்கு ஒரு சொட்டுக் கூடத் தண்ணீர் வரவில்லை. ஆடுமாடுகள் மேய்வதற்குப் புல் வளரும் அளவுக்குக் கூட மழை பெய்யவில்லை. 

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டுப் பிசானப்பட்டத் தொடக்கத்தில் ஓரளவு மழை பெய்துள்ளது. இருப்பினும் சிறுதுளி பெருவெள்ளமாகி ஆற்றிலும், கால்வாய்களிலும், ஓடைகளிலும் நீர் திரண்டு குளத்துக்கு வரவில்லை. ஈராண்டுகள் தாண்டி மூன்றாம் ஆண்டிலும் நிலவும் கடும் வறட்சி, கடந்த பல பத்தாண்டுகளாக நிகழ்ந்த கற்கொள்ளை, மண்கொள்ளை, நீர்வரும் வழிகள் அடைப்பு, மரங்கள், பனைகள் வெட்டியழிப்பு ஆகியன அதற்குக் காரணங்களாகும். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு முன் நெல்நாற்று நட்டுப் பசுமையாக வளரத் தொடங்கியிருக்கும். இந்த ஆண்டில் தீபாவளி கடந்தும் ஐப்பசி மாதம் முடியவுள்ள நிலையிலும் எந்தப் பகுதியிலும் நாற்றுப் பாவுவதற்கோ, தொளி கலக்குவதற்கோ, நடுவதற்கோ எந்தக் குளத்திலும் தண்ணீர் இல்லை. 

பெரும்பாலும் வறட்சியை நோக்கித்தான் இந்தப் பிசானப் பட்டம் சென்றுகொண்டிருக்கிறது. நல்ல காலக்கட்டத்தில் இருமுறை புயல் தோன்றியும் அவை இரண்டுமே தமிழ்நாட்டுக்கு வராமல் ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டன. இதனால் தமிழ்நாட்டில் இயல்பாகப் பொழியும் மழையும் பெய்யாமல் ஒவ்வொரு புயலுக்குப் பிறகும் ஒருவாரக் காலம் வறண்ட வானிலை நிலவுகிறது. இந்தப் பருவமழைக் காலத்தில் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்றன. இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த மாதத்தில் மழை பெய்து குளங்கள் பெருகினாலும் நெல் பயிரிடும் காலம் பிந்திவிடும். பட்டம் தவறினால் நட்டம். நெல் நாற்றுப் பாவிப் பிடுங்கி நட்டு வளர்ந்தாலும் கதிரும் பொதியுமாய் இருக்கும் காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுச் சாவி அறுக்கும் நிலை ஏற்படும். 

தமிழ்நாட்டின் எந்த அணையிலும் பாசனத்துக்குத் திறந்துவிடும் அளவுக்கு நீர்  இல்லை. பெய்யும் மழையும் தண்ணீர் திரண்டு ஓடி வெள்ளமாகப் பாயும் அளவுக்கு இல்லை. அக்டோபர் 1 முதல் நவம்பர் 11 வரையிலான காலத்தில் பெய்த மழை அளவை மாவட்ட வாரியாக இந்திய வானிலை ஆய்வுத்துறை கணக்கிட்டுப் பற்றாக்குறை, இயல்பு, அதிகம் என மூன்று பிரிவுகளாகப் பகுத்துள்ளது. 

புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றுடன் சேர்த்து 40 மாவட்டங்களாகக் கணக்கிற்கொண்டுள்ளது. 

இவற்றில் தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இயல்பான சராசரியைவிட மழைப்பொழிவு குறைவு. 

தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திருச்சி, கரூர்,  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நாகப்பட்டினம், காரைக்கால், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. இந்த அதிகம் என்பதற்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவுகோல் இல்லை. ஒரு குறிப்பிட்ட  மாவட்டத்தில் முந்தைய ஐந்தாண்டுகளின் கூட்டுச் சராசரி மழையளவை விட அதிகம் பொழிந்திருந்தால் அது மிகையளவாகக் கருதப்படுகிறது. வறண்ட ஆண்டுகளின் கூட்டுச் சராசரி மழையளவு குறைவாகத்தான் இருக்கும். இப்போது அதிகமாக மழை பெய்ததாகக் குறிப்பிட்ட மாவட்டங்களிலும் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு இல்லை. குளங்கள் பெருகவில்லை. நெல் பயிரிடும் நடவடிக்கைகள் தொடங்கவில்லை.

ஏற்கெனவே ஈராண்டு வறட்சியின் காரணமாகக் கருநாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அரிசி விலை 30 விழுக்காடு ஏறிவிட்டது.  

இத்தகைய சூழலில் இந்த ஆண்டும் கிட்டத்தட்டத் தமிழ்நாடே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் உணவுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை இன்னும் 30 விழுக்காடு ஏறும் வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலிலும் வேளாண்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை ஆகியன தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பேராபத்தை உணரவில்லை. புதிதாக வந்துள்ள ஆட்சியாளர்களும் பெரும்பான்மைக்குக் கொஞ்சம் குறைவாக உள்ள தங்கள் பலத்தை எப்படிக் கூட்டுவது? இடைத்தேர்தலில் வெற்றிபெற எத்தகைய உத்திகளைப் பின்பற்றுவது? எதிர்க்கட்சியினரை எப்படிச் சிதறடிப்பது? என்கிற எண்ணத்தில் தான் உள்ளனர். மாநிலத்தைச் சூழ்ந்துள்ள வறட்சி, பஞ்சம் ஆகியவற்றை உணரும் நிலையில் இல்லை. 

பருவமழை பொய்த்தது வறட்சிக்கான முதன்மைக் காரணம் ஆகும். ஆனால் அதுமட்டுமே காரணம் இல்லை. போதிய அளவு மழை பெய்த மாவட்டங்களிலும் மழைநீர் திரண்டு வெள்ளமாகப் பாயாததற்குக் காரணம் வரம்பற்ற மண், மணல், மலைக்கொள்ளையே ஆகும். இதை உணர்ந்து கனிமவளக் கொள்ளையை உடனடியாக நிறுத்தினால் நீர்வளத்தைக் காக்கலாம், அணைகளில் தேக்கலாம், வயல்களில் பயிர் வளர்க்கலாம், மக்களின் பசி போக்கலாம். 

இருக்கும் குறைவான நீர்வளத்தைப் பயன்படுத்தி எத்தகைய பயிர்களைப் பயிரிட்டால் மக்களின் பசியைப் போக்கலாம். ஆடுமாடுகளைக் காக்கலாம் என்பதைத் துறைசார்ந்த அலுவலர்கள், ஆர்வலர்கள், உழவர்கள் ஆகியோரை அழைத்துக் கலந்துரையாட வேண்டும். அதைச் செய்வார்களா? 

இல்லாவிட்டால் எந்தச் செயலையும் படம்பிடித்து விளம்பரப்படுத்துவது, திருமண வீட்டுக்குச் சோடியாகச் சென்று வாழ்த்துவது, பள்ளி கல்லூரி விழாக்களில் கலந்துகொள்வது, தனியார் தொலைக்காட்சிக்காகத் தீபாவளி கொண்டாடுவது, லண்டனுக்குச் சென்று கார் பந்தயத்தைத் தொடக்கி வைப்பது, வறண்ட அரேபிய பாலைக்குச் சென்று முதலீடு திரட்டுவது, கடற்கோளுக்குள்ளாகும் பட்டினப்பாக்கத்தில் அரசின் கோட்டையைக் கட்டுவது என்று பொழுதைப் போக்குவார்களா? எனத் தெரியவில்லை. 

பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை எதிர்கொள்ள உலகின் பல நாடுகள் தயாராகி வருகின்றன. நம் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கூட வறட்சியின் விளைவுகள், அவற்றைப்போக்கும் வழிகள் பற்றி முதலமைச்சர் சிவக்குமாரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் உழவர்களும் ஆராய்ந்து வருகின்றனர். 

இந்தியாவில் தொழில், வேளாண்மை, வரி வருவாய், தனியாள் வருமானம் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்திலும் கூட வறட்சியில் இருந்து வேளாண்மையைக் காக்கும் வழிகள் பற்றி ஊர்ப்புறத்துக்குச் சென்று உழவர்களைக் கூட்டி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துரையாடுகிறார். 

வறட்சியின் பிடியில் தொடர்ந்து மூன்றாண்டுகளாகச் சிக்கியுள்ள தமிழ்நாட்டில் அது பற்றிய விழிப்புணர்வோ, கவலையோ ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கொஞ்சங்கூட இல்லை. எதிர்பாரா வகையில் அதிகாரத்தைப் பெற்ற இன்ப அதிர்ச்சியில் இருந்து ஆட்சியாளர்கள் மீண்டு வர வேண்டும். தமிழ்நாட்டைக் கவ்வும் வறட்சியைப் போக்கும் வழிகளை ஆராய வேண்டும் என்று தவெக அரசுக்கு இடித்துரைக்கிறோம்.

சே.பச்சைமால்கண்ணன்