செவ்வாய், 27 அக்டோபர், 2026

உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தெம்பில்லாத திமுக, தவெக அரசுகள்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் மொத்தம் 39 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சி என்ற நகர்ப்புற உள்ளாட்சி மட்டுமே உள்ளது. மற்ற 38 மாவட்டங்களில் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளும்,  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் உள்ளன. 

இவற்றில் ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் கட்சி சார்பில் போட்டியிட முடியாது. மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் கட்சி சார்பில் போட்டியிடலாம். அரசியல் ஊடுருவி ஊரின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்கிற அக்கறையே இதற்குக் காரணம். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அமைப்பு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம். இது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வடக்குப்புறம் அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒருசேரத் தேர்தல் நடத்தி முடித்தது 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில்தான். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அதிமுக அரசு மும்முரமாகச் செய்தது. தேர்தல் நாள் அறிவித்து வேட்புமனு தாக்கல் நடைபெற்ற நிலையில், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுவரையறை செய்யவில்லை என்பதைக் காரணம் காட்டித் திமுக தொடுத்த வழக்கில் தேர்தலை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தேர்தல் பல ஆண்டுகள் தள்ளிப் போனது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றபோது தேர்தலை நடத்துவதைத் தள்ளிப்போடக் கூடாது என்றும், புதிதாகப் பிரித்த மாவட்டங்களில் மட்டும்தானே இடஒதுக்கீட்டை மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. அதனால் அந்த மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்துச் சென்னை (மாநகராட்சி மட்டும்), திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற 28 மாவட்டங்களில் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தி முடித்தது. அப்போது மேற்கண்டவற்றில் சென்னையைத் தவிர மற்ற 9 மாவட்டங்களில் பிரிப்பு நடந்திருந்தது. அதனால் அந்த 9 மாவட்டங்களிலும் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. அதிமுக ஆட்சிக்காலம் முடியும் வரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த முடியவில்லை.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அது 2021 அக்டோபரில் எஞ்சிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்தது. அதன்பின் 2022 பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடத்தி முடித்தது. அந்தத் திமுக ஆட்சிக்காலத்திலேயே 2024ஆம் ஆண்டு 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். அன்றிலிருந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகள் தன் பதவிக்காலம் முடியும் வரை அந்தத் தேர்தலை நடத்தத் தெம்பும் விருப்பமும் திமுக அரசுக்கு இல்லை. 

அதற்கொரு சிறப்புக் காரணமும் உண்டு. ஊரக வளர்ச்சித் துறையில் திட்டங்களைச் செயல்படுத்தும் போது உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால் அவர்கள் சொல்லும்படி தான் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அதற்கு மாறாக எதையும் செய்ய முடியாது. அதேபோலத் தமிழ்நாடு முழுவதும் கல், மணல், கனிமங்கள் ஆகியவற்றை வெட்டியெடுக்கவும் எந்தவொரு திட்டமானாலும் உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற வேண்டும். அந்த உள்ளாட்சி அமைப்பே காலியாக இருந்தால் எந்த எதிர்ப்பும் இருக்காது என்பதுதான் அந்தக் காரணம். திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கல், மணல், கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்கு உள்ளாட்சி அமைப்புகள் காலியாக இருந்ததும், அப்படியே பதவியில் இருந்தாலும், அந்தப் பதவிகள் அனைத்திலும் கல்குவாரி உரிமையாளர்களாகிய தன் கட்சியினரையே வெற்றிபெற வைத்திருந்ததுமே காரணம். இதற்கு எண்ணற்ற சான்றுகளை என்னால் கூற முடியும். 

தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு முதல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுமே மாறி மாறி ஆண்டு வந்தன. இவற்றின் மீது பல்வேறு காரணங்களால் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்ட நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டுத் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 234 இடங்களில் பாதிக்கும் குறைவாகவே இந்தக் கட்சிக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்றைய சூழலில் 109 உறுப்பினர்களே உள்ளனர். காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடைமைக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சி தொடர்கிறது. 

தங்களை எதிர்க்கவோ, கவிழ்க்கவோ எவரும் இல்லை என்ற மிதப்பில் இந்தத் தவெக அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கிப் பதவி விலகச் செய்து, கட்சியில் சேரச் செய்து, மீண்டும் அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் அதே ஆளையே தனது வேட்பாளராகப் போட்டியிடச் செய்து கருணாநிதிப் பாணியில் சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தாமல் இருந்தது இந்தத் தவெக அரசுக்குத் தெரியுமா? எனத் தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த ஊரக உள்ளாட்சிகள் இரண்டாண்டுகளாகக் காலியாக உள்ளன. 2021 அக்டோபரில் 9 மாவட்டங்களில் தேர்தல் நடந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலமும் அக்டோபரில் முடிந்து விட்டது. ஆகத் தமிழ்நாடு முழுவதும் இப்போது ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் காலியாக உள்ளன. 

இந்த நாட்டின் முதுகெலும்பு ஊர்கள் என்பார் காந்தியடிகள். அப்படிப்பட்ட ஊர்கள் எந்த ஆட்சியும் இன்றிக் காலியாகக் கிடக்கின்றன. இந்த ஊர்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் கமிஷன் அள்ளும் நோக்கத்தோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தனி அலுவலர்களை நியமித்தும் நீட்டித்தும் உள்ளது தவெக அரசு. திமுகவாகட்டும், தவெகவாகட்டும் மத்திய அரசில் அதிகாரங்களைக் குவிக்கக் கூடாது, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவ்வப்போது கூக்குரல் எழுப்புவதுண்டு. அதே நேரத்தில் மாநில அரசிடம் இருக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்க அவர்களுக்கு ஒருபோதும் மனம் வராது. தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாதது, அதை நடத்தத் தவெக அரசுக்குத் தெம்பு இல்லாததையும் மனம் இல்லாததையும் காட்டுகிறது. 

இந்த அமைப்புகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்திக் கூறி அதைச் செய்து முடிப்பது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வடக்குப்புறம் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் வேலை. அந்தக் கட்டடத்தில் மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் மாநிலத் தேர்தல் ஆணையர் உட்பட அலுவலர்கள் அனைவரும் வாங்கும் சம்பளத்துக்கு நன்றிக் கடனுடன் செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் மறுத்தாலும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வர வேண்டும். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலமும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிந்துவிடும். அந்த நிலைக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இப்போதே முன்னேற்பாடுகளைச் செய்தால்தான் அந்தத் தேர்தலை நன்றாக நடத்தி முடிக்க முடியும். இந்த ஊர்ப்புற உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்கத் தங்களுக்குத் தெம்பும், துப்பும், விருப்பமும் இருக்கிறது என்பதை இந்தத் தவெக அரசு இன்னும் நான்கரை ஆண்டுக்குள் செய்து காட்டுமா? 

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக