வெள்ளி, 16 அக்டோபர், 2026

ஊரக விளையாட்டுக்கள்

இன்று நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் மாதந்தோறும் உடற்பயிற்சிக்கென்றே ஒரு தொகையைச் செலவழிக்கின்றனர். வீட்டருகில் உள்ள கடையில் பொருள் வாங்கி வர இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். நடைப்பயிற்சி செய்வதற்குக் காரில் சென்று இறங்குகின்றனர். உடல் இயக்கங்களைக் குறைத்துவிட்டு அதனால் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்ய உடற்பயிற்சி, இயன்முறை மருத்துவம், அலோபதி மருத்துவம், அறுவை என இலட்சக்கணக்கில் செலவிடுகின்றனர்.


ஆனால் இன்றைக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஊர்ப்புறங்களுக்குத் தொலைக்காட்சிப் பெட்டி வராத காலத்தில் துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தில் இருந்தவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் காலை ஆறுமணிக்குப் பாயைவிட்டு எழுந்தனர். உமிக்கரியைக் கொண்டு கைவிரலால் பல் விளக்கினர். காலையிலேயே குளித்து விட்டுத்தான் உணவருந்தினர். காலை, நண்பகல் என இருவேளை கஞ்சிதான் குடித்தனர். அதற்குக் கூட்டாகச் சர்க்கரைத் துண்டு, கருப்பட்டி, நாரத்தங்காய் ஊறுகாய், துவையல், சுட்ட கருவாடு, மோர்வற்றல், மிளகாய், வெங்காயம் ஆகியன சுவை சேர்த்தன. இரவுச் சாப்பாடு என்பதெல்லாம் இல்லை. பிற்பகலில் உலைவைத்துப் பொங்கிய சோற்றை மாலை ஆறு மணிக்குள் உண்பர். அது மட்டும்தான் சுடுசோறு. அதைத் தின்றுவிட்டுப் பாரதியார் சொன்னது போன்று மாலை முழுவதும் விளையாட்டு. இந்த விளையாட்டு அதிகம் போனால் இரவு எட்டுமணி வரை நீடிக்கும். அதற்குள் வியர்த்துப் பூத்து உடல் சடைந்து விடும். வீட்டுக்குப் போய்ப் பாயில் படுத்தவுடன் உறக்கம் கௌவிவிடும். 


இன்றைய செல்பேசிகளோ, தொலைக்காட்சிகளோ, சமூக ஊடகம் என்னும் பெயரில் உறக்கம் கெடுக்கும் உள்ளடக்கங்களோ அன்றில்லை. இதனால் இரவு எட்டு மணிக்கு உறங்கினால் காலை ஆறுமணி வரை தடங்கல் இல்லா, தொல்லையில்லா ஆழ்ந்த உறக்கம். இத்தகைய உறக்கம் இன்றும் நமக்குத் தேவைதான். ஆனால் அத்தகைய உறக்கம் கிடைக்கும் சூழல் இன்று ஊர்ப்புறத்திலும் இல்லை. நகர்ப்புறத்தில் இல்லவே இல்லை.


1980, 1990களில் ஊர்ப்புறங்களில் உடற்பயிற்சி என்று தனியே கிடையாது. ஒவ்வொருவரின் வேலையும் வாழ்வியலும் உடற்பயிற்சியாகவும், மனமகிழ்ச்சியாகவும் அமைந்தது. காலையில் எழும் ஒரு பையன் குளிக்கக் கிணற்றுக்கோ, ஓடைக்கோ, குளத்துக்கோ செல்வான். சனி நீராடு என்று ஔவைப் பிராட்டி சொல்வாள். அதற்குச் சனிக்கிழமை மட்டும் குளி என்பது பொருளில்லை. குளிர்ந்த நீரில் குளி என்பதாகும். குவளையில் நீரைக் கோரி உடலில் ஊற்றுவதெல்லாம் குளிப்பாகுமா? 


குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் வெதுவெதுப்பாகவும், கோடைக்காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும் ஆறு, குளம், ஓடை, கிணறு ஆகிய நீர்நிலைகளில் முங்கிக் குளிப்பதே குளிப்பாகும். இதில் உடல் முழுவதும் குளிர்ந்து நரம்புகளும், இரத்த நாளங்களும் புத்துணர்வு பெறும். குளித்துவிட்டுத் தலை துவர்த்திவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் தலைமுடி பஞ்சுபோல் காய்ந்துவிடும். வீட்டுக்கு வந்ததும் கஞ்சியோ காடியோ கூழோ குடித்தால் தேவாமிர்தமாய் இருக்கும். இதைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குத் துள்ளிப் போனவர்கள் உண்மையிலேயே வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். 


உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் வாரத்துக்கு இரண்டு விளையாட்டு வேளைகள் இருக்கும். தொடக்கப்பள்ளிகளில் நாள்தோறும் பிற்பகல் மூன்றரை மணியானால் விளையாட்டு தான். பள்ளி நேரம் முடிந்ததும் பைக்கூட்டைத் தோளில் போட்டுக்கொண்டு புள்ளிமான்கள் போல வீட்டுக்குத் துள்ளியோடுவர் பிள்ளைகள். அது அந்தக் காலம். 


அதேகாலத்தில் பள்ளி விளையாட்டுக்களைத் தவிர ஊர்ப்புறத்தில் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கள் ஏராளமாக இருந்தன. அவை அமர்ந்து விளையாடுவன, ஓடி விளையாடுவன, துள்ளி விளையாடுவன, தாண்டி விளையாடுவன, ஒற்றைக் காலால் கிந்தி விளையாடுவன எனப் பலவகைப்படும். 


அமர்ந்து விளையாடுவதில் பல்லாங்குழி எனப்படும் பாண்டி ஆட்டம், ஆடுபுலி ஆட்டம், தாயம், சதுரங்கம் ஆகியன முதன்மையானவை. ஒரு வரிசையில் ஏழு குழிகள் என இருவரிசைகளில் 14 குழிகள் இருக்கும். ஒருகரைக்கு ஏழு குழிகள். ஒவ்வொன்றிலும் 5 முத்துக்கள் போட்டு விளையாடும் விளையாட்டு உள்ளது. பாண்டி நாட்டின் விளையாட்டு என்பதால் முத்துக்கள் எனப்படுகிறது. இக்காலத்தில் முத்துக்கள் இல்லை. வெண்ணிற நத்தை ஓடுகள், புளியமுத்துக்கள் (புளியங்கொட்டைகள்) பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் நடுக்குழிகளைத் தவிர மற்ற ஆறு குழிகளில் 6 முத்து, 12 முத்துப் போட்டு விளையாடும் விளையாட்டு உள்ளது. 5 முத்துப் பாண்டி என்பது இருவர் விளையாடும் விளையாட்டாகும். 6 முத்து, 12 முத்து விளையாட்டுக்கள் இருவர் அல்லது நால்வர் விளையாடலாம். இந்த விளையாட்டை விளையாடும்போது சிறார்களுக்குக் கணிப்பு, கணக்கு, சிக்கனம், ஆதாயம் ஈட்டுவது உள்ளிட்ட பல்வேறு திறன்கள் உண்டாகிறது. அதே நேரத்தில் விளையாட்டில் யாராவது ஏமாற்றினால் அதைக் கண்டறியும் திறனும் உண்டாகிறது. தருக்கம் ஏற்படும் சூழல், அதைத் தீர்க்கும் முறை ஆகியவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். 


ஓடி விளையாடும் விளையாட்டுகள் நிறைய உள்ளன. குட்டிப்பந்து, எறிபந்து, மட்டைப்பந்து, கால்பந்து ஆகியன ஓடிவிளையாடும் விளையாட்டுகள் ஆகும். இவையனைத்தும் பந்துகளைக் கொண்டு விளையாடும் விளையாட்டுக்கள். 


இவை தவிரக் கிளியந்தட்டு என்ற விளையாட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகும். இது இரண்டு அணிகள் கொண்ட விளையாட்டு. ஒரு சோடிக்கு இரண்டு கட்டங்கள் என்ற கணக்கில் இரண்டு இரண்டாகக் கட்டங்களை நீட்டிக்கொண்டே போகலாம். முதல் கோட்டைத் தவிர மற்ற கட்டங்களின் கோடுகளில் ஒவ்வொருவர் தட்டு மறிப்பர். தட்டு என்பது இங்குக் கட்டங்களைக் குறிக்கும். கடைசிக் கோடு யாருமில்லாமல் இருக்கும். அது கிளியின் தட்டு. கிளி என்பவர் மறிக்கும் அணியின் தலைவர். மேலேயிருந்து வரிசையாக ஒவ்வொருவராகத் தட்டு மறிப்பவரை ஏமாற்றிக் கடைசித் தட்டுக்கு வந்து அதையும் யாராவது ஒருவர் தாண்டிவிட்டால் அதன்பிறகு அனைவருக்கும் காட்டோட்டம் என்னும் பெயரில் தட்டுக்கும் வெளியே சென்று கடைசித் தட்டை நோக்கி ஓடும் உரிமை உண்டு. இவ்வாறு ஓடும்போது மறிப்பவரை ஏமாற்றி ஓடலாம். அவரின் கையை மீறிச் சென்றால் அந்த அணி ஆட்டமிழக்கும். இவ்வாறு ஏமாற்றி அங்குமிங்கும் ஓடும்போது கிளி நடுக்கோட்டில் மேலும் கீழும் நடமாடும். அது மட்டுமல்லாமல் கடைசித் தட்டும் அந்தக் கிளிக்கு உரிமையானதுதான். அப்போது அந்தக் கிளியிடம் அடிபட்டாலும் ஆட்டமிழப்புதான். யாரும் அடிபடாமல் ஒவ்வொருவராகக் கடைசித் தட்டைத் தாண்டிச் சென்ற பிறகு மீண்டும் மேல்நோக்கிச் செல்ல வேண்டும். இப்போது தட்டுமறித்தவர்கள் திசையை மாற்றிக் கொண்டு மறிப்பர். அவர்களை ஏமாற்றி யாரேனும் ஒருவர் கடைசித் தட்டில் இருந்து முதல் தட்டுவரை சென்று அதையும் கடந்து மேலே சென்றுவிட்டால் உப்பு என்பார். இது அந்த அணியின் வெற்றியைக் குறிக்கும். இந்தத் தட்டுமறிக்கும் நேரத்தில் மறிப்பவரிடமோ, கிளியிடமோ கோட்டைத் தாண்டும்போது யாரும் அடிபட்டால் ஆட்டமிழப்பு. ஊரக விளையாட்டுகளில் அணி மனப்பான்மையுடன் உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சி தரும் விளையாட்டு என்றால் அதில் கிளியந்தட்டுக்குத் தான் முதலிடம். 


கிந்தி விளையாட்டு என்பதை நொண்டி விளையாட்டு என்றும் கூறலாம். இஃதும் அணி விளையாட்டு தான். இதில் ஐந்து மீட்டருக்கு மேல் ஆரங்கொண்ட ஒரு வட்டம் போடுவர். முதலில் ஓர் அணியினர் வட்டத்துக்குள் இறங்க வேண்டும். இன்னோர் அணியினர் வட்டத்துக்கு வெளியில் நின்று ஒவ்வொருவராக உள்ளே இறங்குவர். அவர் ஒற்றைக் காலைப் பின்னால் மடித்து அல்லது தூக்கி வைத்துக்கொண்டு மற்றொரு காலால் மட்டுமே ஓடி உள்ளே நிற்கும் எதிரணியினரைத் தொட வேண்டும். இவ்வாறு நொண்டி வருபவரிடம் உள்ளே நிற்பவர்கள் அடிபட்டாலோ, ஓடும்போது கோட்டைவிட்டு வெளியேறினாலோ ஆட்டமிழப்பு ஆகும். நொண்டுபவர் தன்னால் இயலாமல் போகும்போது வெளியேறுவார். அவருக்குப் பின் அந்த அணியில் உள்ள மற்றொருவர் நொண்டி வந்து உள்ளே நிற்பவர்களைத் தொடுவார். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இரண்டு கால்களாலும் ஓடுபவர்களை ஒற்றைக் காலால் ஓடுபவர் தொட்டு ஆட்டமிழக்கச் செய்கிறார். 


இதேபோல் கோலிக்குண்டு எனப்படும் கோலிக்காயைக் கொண்டு பல விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன. கிட்டிப்புள் எனப்படும் குச்சிக் கம்பைக் கொண்டு பல விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன. ஆடுபுலி ஆட்டத்திலும் வட்டமாகக் கைகோத்துக்கொண்டு நின்று விளையாடும் ஒரு விளையாட்டு உள்ளது. அதில் ஆடு எனப்படுபவர் வட்டத்தின் உள்ளேயும் புலி எனப்படுபவர் வட்டத்துக்கு வெளியேயும் இருப்பர். கைகோத்தவர்கள் வட்டமாகச் சுற்றிக்கொண்டே வருவர். அவர்களின் கைகளுக்குக் கீழேயுள்ள இடைவெளி வழியாக புலி உட்புகுந்து ஆட்டைப் பிடிக்க வேண்டும். அவ்வாறு உட்புகுந்தால் ஆட்டை வெளியே விட்டுவிட்டுப் புலியை உள்ளே சிறை செய்வர். புலி வெளியே போனால் ஆட்டை உள்ளே விட்டு அதனைக் காப்பர். இந்த விளையாட்டில் சங்கிலி புங்கிலி கதவைத் திற என்று புலி பாடும். நான் மாட்டேன் வெங்கப் புலி என்று கைகோத்தவர்கள் பதிலுரைப்பர்.  இதுவும் மகிழ்ச்சி தரும் மாலைநேர விளையாட்டுதான். 


இதேபோல் சுரைக்கொடிக்கும் பூஞ்செடிக்கும் தண்ணீர் இறைக்கும் விளையாட்டு, பானை விளையாட்டு, கம்பந்திரி விளையாட்டு ஆகியன உண்டு.


தாழ்வான மரத்தின் அடியில் விளையாடும் மரக்குரங்கு என்னும் விளையாட்டு வகை உண்டு. நெருக்கடி நேரத்தில் மரக்கிளைகளில் துள்ளி ஏறித் தப்புவது, இக்கட்டில் உள்ளவரை மரத்தில் இருந்து துள்ளி மீட்பது ஆகிய திறன்களை இந்த விளையாட்டு வளர்க்கும். 


இரவில் விளையாடும் விளையாட்டு என்றால் கள்ளன்காவலன், ஒளித்து விளையாடுதல் ஆகியன உண்டு. மின்னொளி இல்லாக் காலத்தில், அல்லது குறைவான மின்னொளி இருந்த காலத்தில் துப்பறிதல், கண்டுபிடித்தல், விரைந்து செயலாற்றுதல் ஆகிய திறன்களை வளர்த்த விளையாட்டு இது. நெல் அறுவடைக்காலத்தில் தெருவில் காயப்போட்டுள்ள வைக்கோலுக்குள் படுத்துக்கொண்டு மேலே வைக்கோலைப் பரப்பி ஒளித்துவிளையாடுவது, அவ்வாறு ஒளிந்துகொண்டவரைக் கண்டுபிடிப்பது மனத்துக்கு மிகவும் மகிழ்வயளிக்கும் விளையாட்டு ஆகும். 


மாலை நேர உணவருந்திவிட்டு அது செமிக்கும் வரை விளையாடிவிட்டு உடல் சோர்விலும் உள்ள மகிழ்ச்சியிலும் இரவில் வீட்டுக்குச் சென்றால் பாயில் படுத்தவுடன் உறக்கம் வரும். அது ஓர் அழகிய காலம். 


மழைக்காலத்தில் குளங்கள், கிணறுகளில் நீர் பெருகியிருக்கும். அப்போது நீராடச் செல்பவர்கள் அங்கும் குளிப்பையே விளையாட்டாகவும், விளையாட்டையே குளிப்பாகவும் மாற்றியிருக்கிறார்கள். இந்தப் பெருமை நம் தமிழரைச் சேரும். இப்போது ஆற்றிலும் குளத்திலும் மூழ்கி இறந்தார்கள் என்ற செய்தியைக் கேட்கும்போது இந்த நீச்சல் கூடத் தெரியாமல் நம் தமிழர் உள்ளனரே என்ற ஆற்றாமைதான் வெளிப்படுகிறது. பெரிய கிணற்றில் குளிக்கும்போது அதற்கு நடுக்கோடு வரைந்து ஈரணிகளாகப் பிரிந்து இருகரைகளிலும் இருப்பர். ஆட்டம் தொடங்கியவுடன் முதலில் ஓரணியினர் தொட வேண்டும். அவர்களிடம் அகப்படாமல் எதிரணியினர் நடுக்கோட்டைத் தாண்டிவிட வேண்டும். இதில் உடலில் தொட்டால் போதாது. தலைமுடியில் தொட வேண்டும். முதலில் தொட்டவர்கள் இப்போது தப்பியோட வேண்டும். முதலில் தப்பி ஓடியவர்கள் இப்போது தொட வேண்டும். இவ்வாறு மாறி மாறிக் கண்சிவக்கும் வரை கிணற்றில் குளித்த காலம் பொற்காலம். இந்த விளையாட்டில் மேலே நீந்துபவர்கள் சிலர். அதிகமாக மூச்சடக்கும் சிலர் ஆழத்துக்குச் சென்று அங்கிருந்து எதிர்ப்புறத்துக்கு உள்நீச்சல் நீந்திச் சென்று இறுதியில் மேலே புடைத்து வருவர். 


ஊரக விளையாட்டுக்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஒவ்வொன்றையும் சொல்லால் விவரித்தால் ஓரளவு புரியும். கோடு வரைந்து ஆட்களைப் பிரித்து விதிமுறைகளைப் புரிந்துகொண்டு களத்தில் விளையாடும்போதுதான் அதன் திறனும் விரைவும் நமக்கு விளங்கும். அதனால் உடலும் உள்ளமும் அடையும் நலனைத் துய்க்க முடியும்.


1990களின் இறுதிவரை இருந்த ஊரக விளையாட்டுக்கள் ஒழிந்துபோகக் காரணம் என்ன? ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறார் பொது இடத்தில் ஒன்றுகூடி விளையாட்டுக்கான விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு தொடர்ந்து விளையாடினால்தான் அது நீடித்து நிலைத்திருக்கும். முந்தைய தலைமுறையினர் தமக்குப் பிறகு வருவோருக்கு அதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். விளையாடிக்காட்ட வேண்டும். பிந்தைய தலைமுறையினர் அதைப் புரிந்துகொண்டு விளையாடுவதுடன் தமக்குப் பிறகு வருவோருக்கு அதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். 2000ஆவது ஆண்டு வாக்கில் இந்தச் சங்கிலித் தொடர் அற்றுப்போனதே ஊரக விளையாட்டுக்களின் அழிவுக்குக் காரணம். தொலைக்காட்சி, செல்பேசி, இணையம், சமூக ஊடகம் ஆகியவற்றில் மூழ்கிப் போகும் சிறாரும், அதைப் பற்றிக் கவலை இல்லாமல் இருக்கும் மூத்தோரும் ஊரக விளையாட்டுக்கள் அழிந்துபோகக் காரணமாவர்.


நம் பிள்ளைகளின் உடல்நலம் காத்து, மனமகிழ்ச்சியை மீட்டெடுக்க ஊரக விளையாட்டுக்களை மீண்டும் விளையாடி அவற்றுக்குப் புத்துயிர் ஊட்டுவோம். தமிழரின் பண்பாட்டைக் காப்போம்.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக