![]() |
| சென்னை விருகம்பாக்கம் கால்வாய் |
கோடையில் ஓர் இரவில் (சூன் 27, 28 சேரும் இரவில்) சென்னையில் முக்கால் மணி நேரம் மழை பெய்தது..சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழைமானியில் வளசரவாக்கம், நெற்குன்றம் ஆகிய இடங்களில் வெறும் 6 செண்டிமீட்டர் மழையே பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழை பொய்த்துக் கோடையிலும் சரியாக மழை பெய்யாமல் காய்ந்திருக்கும் கோடைக்காலத்தில் ஒருநாளில் பெய்த இந்த மழை தமிழ்நாட்டில் வேறெங்கும் பெய்திருந்தால் முழுவதும் மண்ணால் ஈர்க்கப்படக் கூடியது. முழுவதும் கான்கிரீட் தரையாக உள்ள சென்னையில் அந்த மழை வெள்ளம் அப்படியே வழிந்தோடி விருகம்பாக்கம் கால்வாயில் பாய்ந்தது.
இதனால் விருகம்பாக்கத்துக்கும் கோயம்பேட்டுக்கும் இடையில் உள்ள சின்மயா நகரில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.இந்த நிலை எதனால் வந்தது?
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் செய்த பணியையே மீண்டும் மீண்டும் செய்து பணத்தைக் கொள்ளையடிப்பர். அதே பாணியில் விருகம்பாக்கம் கால்வாயில் ஏற்கெனவே வலிமையாக உள்ள தடுப்புச் சுவரை இடிக்க முடியாமல் இடித்து வீட்டு மீண்டும் புதுச்சுவர் கட்டும் மோசடி நடைபெற்று வருகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் மழைநீர் செல்ல முடியாதவாறு மண்ணைக்குவித்து அணைபோட்டுள்ளனர். அதுதான் வெள்ளம் ஊருக்குள்ளும் வீட்டுக்குள்ளும் புகுவதற்கு முதன்மைக் காரணமாகும்.
சுருக்கமாகச் சொன்னால் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்களின் இலாப வெறிக்கு மக்கள் தங்கள் நல்வாழ்வைப் பறிகொடுக்க வேண்டியுள்ளது.
திமுக பாணியைத் தொடரும் தவெக அதிலிருந்து மீளுமா? என்பதைப் போகப் போகப் பார்க்கலாம்.
திட்டம் மக்களுக்கா? கமிஷனுக்கா? என்பதைத் தவெக அரசு முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை இந்தச் செய்திக் கட்டுரை வலியுறுத்துகிறது.இனிச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்...
சென்னை கோயம்பேட்டுக்கும் விருகம்பாக்கத்துக்கும் இடையில் உள்ளது சின்மயா நகர். மேற்கே போரூரில் இருந்து கிழக்கே அமைந்தகரை சூளைமேடு வரை செல்லும் விருகம்பாக்கம் கால்வாய் இந்தச் சின்மயா நகரின் வழியாகச் செல்கிறது. முற்காலத்தில் வேளாண்மைக்கான கால்வாயாக இருந்த இது இப்போது மழைநீர் வடிகாலாகவும், கழிவுநீர்க் கால்வாயாகவும் உள்ளது. போரூர், மதுரவாயில், நெற்குன்றம், சின்மயா நகர்ப் பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் மூடப்பட்டு விளைநிலங்களில் எல்லாம் வீடுகள் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் பெய்யும் மொத்த மழைநீரும் இந்தக் கால்வாய் வழியே வழிந்தோடி அமைந்தகரை சூளைமேட்டுக்கு அருகில் கூவம் ஆற்றில் கலக்கிறது.
சென்னை மாநகரம் முழுவதுமே ஏற்ற இறக்கம் பார்த்து மழைநீர் வடிகால்களை அமைப்பதில்லை. இதுதான் பல இடங்களில் மழைநேரத்தில் வெள்ளம் புகுவதற்கும் மழைநீர் வடியாததற்கும் காரணமாகிறது. வடிகால் தொடங்குமிடமும், அது கால்வாயில் சேருமிடமும் உயரமாக இருக்கும்போது, இடைப்பட்ட பகுதி தாழ்வாக இருப்பதால் அங்குள்ள தெருக்களில் வெள்ளம் புகுந்து விடுகிறது.
![]() |
| கால்வாயில் தேங்கி அடைத்துள்ள கழிவுகள் |
இதேநிலைதான் கோயம்பேடு சந்தைக்குத் தெற்கே உள்ள சின்மயா நகரில் உள்ளது. எந்தவொரு மழைக்காலம் என்றாலும் இங்குத் தண்ணீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. சின்மயா நகரில் கால்வாய்க்கு இருபுறமும் உள்ள தெருக்களிலும் வீடுகளிலும் ஆண்டுதோறும் இது பெருஞ்சிக்கலாக உள்ளது. 2005, 2015, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் எல்லாம் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் திட்டமிடப்படாத குடியிருப்புகளும் அரசின் தவறான கொள்கைகளுமே. வழக்கமாக வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். மேற்கூறிய ஆண்டுகளில் எல்லாமே வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தான் வெள்ளப்பேரழிவு ஏற்பட்டுள்ளது.
![]() |
| 2023 திசம்பர் மாத வெள்ளத்தில் ஒரு காட்சி |
ஆனால் கடந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழை சரியாகப் பெய்யாதபோதும், இப்போது கோடையிலும் சரியாக மழை பெய்யாதபோதும் நேற்றிரவு முக்கால்மணி நேரம் பெய்த மழையில் இப்பகுதியில் தெருக்களில் தண்ணீர் பெருகி வீட்டுக்குள் வந்துவிட்டது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள மழைப்பொழிவு பற்றிய அறிக்கையில் சென்னை வளசரவாக்கம், நெற்குன்றம் பகுதிகளில் 6 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது மிகக் குறைந்த மழை வெறுந்தரையாக இருந்தால் மண்ணால் ஈர்க்கப்படக் கூடிய அளவுதான் இது. சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் கான்கிரீட்டால் தரைப்பரப்பு மூடப்பட்டுள்ளது. மூடப்படாத இடத்தில் தார்ச்சாலை உள்ளது. இவ்வளவு குறைந்த மழை பெய்தும் கால்வாயில் வெள்ளம் பெருகக் காரணம். உயர்வான இடத்தில் பெய்த மழைநீர் எல்லாம் பள்ளமான இடம் நோக்கிப் பாய்வதே ஆகும்.
அது மட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கோயம்பேடு - விருகம்பாக்கம் இடையே உள்ள காளியம்மன் கோவில் தெரு நெடுஞ்சாலையில் விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பாலத்தில் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டுப் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளைச் செய்வதுதான். பணிகளை எப்படியானாலும் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் ஒருபக்கம் தூண் கட்டுவதற்கான வேலை நடைபெற்று வரும்போது கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு மறுபக்கம் வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கோடைதானே என்று அலட்சியமாக இருந்த சென்னை மாநகராட்சி, பாலம் கட்டுவதற்கு முன்னால் மார்ச் மாதத்தில் இருந்தே பல இடங்களில் மண்ணால் அணை கட்டித் தண்ணீரை வடிந்து செல்ல விடாமல் தேக்கி வைத்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் கொசுக்கள் பெருகிவிட்டன. இரவில் உறக்கம் வராமல் தவிக்க வேண்டியுள்ளது. இதனால் ஆட்கள் குடியிருக்க முடியாத பகுதியாகி விட்டது சின்மயா நகர்.
அது மட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கோயம்பேடு - விருகம்பாக்கம் இடையே உள்ள காளியம்மன் கோவில் தெரு நெடுஞ்சாலையில் விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பாலத்தில் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டுப் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளைச் செய்வதுதான். பணிகளை எப்படியானாலும் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் ஒருபக்கம் தூண் கட்டுவதற்கான வேலை நடைபெற்று வரும்போது கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு மறுபக்கம் வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கோடைதானே என்று அலட்சியமாக இருந்த சென்னை மாநகராட்சி, பாலம் கட்டுவதற்கு முன்னால் மார்ச் மாதத்தில் இருந்தே பல இடங்களில் மண்ணால் அணை கட்டித் தண்ணீரை வடிந்து செல்ல விடாமல் தேக்கி வைத்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் கொசுக்கள் பெருகிவிட்டன. இரவில் உறக்கம் வராமல் தவிக்க வேண்டியுள்ளது. இதனால் ஆட்கள் குடியிருக்க முடியாத பகுதியாகி விட்டது சின்மயா நகர்.
பாலம் கட்டும் பணி ஒருபுறம் என்றால் விருகம்பாக்கம் கால்வாயில் சுவர் கட்டுவதற்காக அதன் நடுவே மண்ணைக் குவித்துத் தண்ணீர் செல்ல வழியில்லாமல் செய்துள்ளனர். ஏற்கெனவே தென்கரையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. வடகரையில் அப்பகுதியில் குடியிருப்போர் சுவர் கட்டியுள்ளனர். வீடுகள் இல்லாப் பகுதிகளில் ஏற்கெனவே சுவர் உள்ளது. தென்கரையில் விருகம்பாக்கம் பாலத்தில் இருந்து மேற்கு நோக்கி முழுவதும் தடுப்புச் சுவர் ஏற்கெனவே இருந்தது. இருந்தாலும் திமுக ஆட்சிக்காலத்தில் ஆட்சியாளர்கள், ஒப்பந்தக்காரர்களின் இலாப வெறிக்கு இந்தப் பகுதி இடங்கொடுத்தது. ஏற்கெனவே தடுப்புச் சுவர் வலிமையாக உள்ள பகுதியில் அதை இடிக்க முடியாமல் இடித்துவிட்டு, அதே இடத்தில் மீண்டும் தடுப்புச் சுவர் கட்ட வைத்துள்ளது அந்தக் கொள்ளை இலாப வெறி. இந்த இலாப வெறியால் ஏற்பட்ட மனிதத் தவறுகளே இன்றைய வெள்ளப் பெருக்குக்குக் காரணம். ஒரு கால்வாயிலோ, ஆற்றிலோ, வடிகாலிலோ பணியைச் செய்வதென்றால் வரும் நீரை ஒரு ஓரமாக வடியச் செய்திருக்க வேண்டும். கால்வாயில் முழுவதுமே குறுக்காகவும் நெடுக்காகவும் மண்ணைக் குவித்து அடைத்து விட்டனர். இதனால் இரவில் முக்கால் மணி நேரத்தில் 6 செண்டிமீட்டர் மழை பொழிந்து வெள்ளம் பெருகிவிட்டது. பெருகிய வெள்ளத்துக்குப் போக்கிடம் இல்லாததால் ஏற்கெனவே தடுப்புச் சுவர் உடைக்கப்பட்ட வழியாகவும், தடுப்பணைக்கு மேற்கே உள்ள தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துவிட்டது.
![]() |
| வலிமையாக இருக்கும் சுவரை இடித்துப் போட்ட நிலை |
விருகம்பாக்கம் பாலத்துக்கு மேற்கே சின்மயாநகர் சித்திரைத் தெரு, வேதநகர், குமரன்நகர் ஆகிய பகுதிகளில் இரவே வீடுகளில் வெள்ளம் புகுந்துவிட்டது. குமரன் நகர் இரண்டாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் உள்ள குளிர்ப்பதனப் பெட்டி ஓரடிக்குத் தண்ணீரில் மூழ்கியதால் அதில் மின்கசிவு ஏற்பட்டதில் சென்னையில் புகழ்பெற்ற கண் மருத்துவர் கீதா அவர்களின் கர்ப்பிணி மகளுக்குச் சற்று மின்னதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்து வெளியேறியதால் அவர் உயிர்பிழைத்தார்.
அதேபோல் வெள்ளத்தின்போது மாநகராட்சிக் குப்பைத் தொட்டிகள் எல்லாம் நீரில் மிதந்து கவிழ்ந்து அதில் உள்ள கழிவுகள் எல்லாம் கால்வாயிலும் வீடுகளிலும், அருகில் உள்ள சின்மயா மிஷன் ஐயப்பன் கோவிலுக்குள்ளும் சென்று விட்டன. அவை நீரின் போக்கைச் செறுத்ததால் வெள்ளப்பெருக்கு இன்னும் அதிகமானது.
இதில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டுப் புதிய பாலம் கட்டுவதால் அதில் இருவழிகளில் ஒருவழியில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது. அதாவது கோயம்பேட்டில் இருந்து விருகம்பாக்கத்துக்குத் தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் அந்தப் பாலத்தில் மேற்குப் பகுதியில் இடிக்காத பகுதி வழியே சென்று விடலாம்.
விருகம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்களைப் பாலத்துக்குத் தென்பக்கத்தில் இருந்து மேற்கு நோக்கித் திருப்பி விட்டுக் குமரன் நகர் வழியாக மீண்டும் வடக்கேயும் கிழக்கேயும் திரும்பிக் கோயம்பேட்டுக்குச் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாற்று வழி செய்யுமுன் அதைச் சீரமைத்திருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் இந்த ஏற்பாட்டைச் செய்ததால் சாலையைச் சீரமைக்கவில்லை. குண்டுங்குழியுமாக உள்ளது.
விருகம்பாக்கம் TAISHA எனப்படும் தமிழ்நாடு அனைத்திந்திய குடிமைப் பணி அலுவலர்கள் குடியிருப்பு இப்பகுதியில் தான் உள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தலைமைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் இப்பகுதியில் தான் குடியிருக்கின்றனர். அவர்கள் நாள்தோறும் இவ்வழியில்தான் சென்று வருகின்றனர். தங்கள் கண்கண்ட பகுதியிலேயே சாலையைச் சீரமைக்காமல், கால்வாயில் தண்ணீரை வடிய வைக்காமல் உள்ளார்களே. அப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் என்ன பாடுபடும்? என எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
கோடைக்காலத்தில் ஒருநாள் இரவில் முக்கால்மணி நேரம் 6 செண்டிமீட்டர் மழை பெய்ததற்கே இப்படி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதே இதைத் தடுக்க, தவிர்க்க ஒரே வழிதான் உள்ளது. பாலம் கட்டுவதற்காக விருகம்பாக்கம் கால்வாயில் மண்ணை வைத்துக் கட்டியுள்ள தடுப்பணைகளை உடைக்க வேண்டும். தடுப்புச் சுவர் கட்டுவதற்காக விருகம்பாக்கம் கால்வாய் நடுவே குவித்து வைத்துள்ள மண்ணை உடனே அள்ள வேண்டும். தடுப்பணையில் ஒரு பகுதியைப் பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு வெட்டிவிட்டதாலும், மழை நின்றுவிட்டதாலும் காலையில் வெள்ளம் வடிந்து நிலைமை சீராகியுள்ளது.
கோடைக்காலத்தில் ஒருநாள் இரவில் முக்கால்மணி நேரம் 6 செண்டிமீட்டர் மழை பெய்ததற்கே இப்படி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதே இதைத் தடுக்க, தவிர்க்க ஒரே வழிதான் உள்ளது. பாலம் கட்டுவதற்காக விருகம்பாக்கம் கால்வாயில் மண்ணை வைத்துக் கட்டியுள்ள தடுப்பணைகளை உடைக்க வேண்டும். தடுப்புச் சுவர் கட்டுவதற்காக விருகம்பாக்கம் கால்வாய் நடுவே குவித்து வைத்துள்ள மண்ணை உடனே அள்ள வேண்டும். தடுப்பணையில் ஒரு பகுதியைப் பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு வெட்டிவிட்டதாலும், மழை நின்றுவிட்டதாலும் காலையில் வெள்ளம் வடிந்து நிலைமை சீராகியுள்ளது.
![]() |
| மண்ணணையைத் தோண்டி விட்டதால் வெள்ளம் வடிந்தது |
இருந்தாலும் ஏற்கெனவே வலிமையாக உள்ள தடுப்புச் சுவரை இடிக்க முடியாமல் இடித்துப் புதிதாக, அதை விட வலிமை குறைந்த தடுப்புச் சுவர் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். உயரமாகச் சுவர் கட்டி எந்தப் பயனும் இல்லை. கால்வாயில் தடங்கல் இல்லாமல் நீர் வடிந்தால்தான் ஊருக்குள் வெள்ளம் புகாது. பத்தடி உயரத்துக்குத் தடுப்புச் சுவர் கட்டினாலும், வடிகால்கள், மழைநீர் வடியும் பொந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவற்றுக்கான தொண்டுகள் மூலம் வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடும் என்பதைச் சென்னை மாநகராட்சியின் நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் வாரியம், மழைநீர் வடிகால் கட்டும் பொறியாளர்கள் அறிந்திருக்காதது, அவர்களின் மடமையையும், ஆட்சியாளர்கள், ஒப்பந்தக்காரர்களின் இலாப வெறியையும் காட்டுகிறது.
விருகம்பாக்கம் கால்வாயில் பாலம் கட்டுமிடத்துக்குத் தெற்கே சாலையில் கீழ்ப்புறம் மழைநீர் வடிகாலுக்காக ஆழமாகப் பள்ளம் தோண்டியுள்ளனர். இந்தப் புறம் செல்லும் பேருந்துகள் கனரக லாரிகள் இந்தப் பள்ளத்தின் ஓரம் இடிந்து உள்ளே விழ வாய்ப்புள்ளதையும் சுட்டிக் காட்டியாக வேண்டும்.
![]() |
| விருகம்பாக்கம் கால்வாய்ப் பாலம் அருகே தோண்டியுள்ள படுகுழி |
இதில் ஆறுதலளிக்கும் ஒரு செயல்பாடும் நடந்துள்ளது. அது என்னவென்றால் இப்பகுதியில் வெள்ளம் பெருகிவிட்டது என்று தெரிந்ததும் திடக்கழிவு மேலாண்மை செய்யும் Urbaser Sumeet பணியாளர்கள் அதிகாலை நான்குமணிக்கே களத்துக்கு வந்துவிட்டதுதான்.அவர்களின் பணிகளைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஏற்கெனவே வலிமையாக உள்ள தடுப்புச் சுவரை உடைக்க முடியாமல் உடைத்துவிட்டுப் புதிய தடுப்புச் சுவர் கட்டும் திட்டம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பாணியை இன்றைய தவெக அரசும் பின்பற்றி வருவதையே காட்டுகிறது. விருகம்பாக்கம் கால்வாய்க்குள் குவித்து வைத்துள்ள மண்ணை முழுவதுமாக அள்ளி அகற்றிவிட்டு, இப்போது இடிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும் வெள்ளம் வெளியே வராமல் தடுப்புச் சுவரைக் கட்டி முடித்துவிட்டு இந்தத் திட்டத்தை முடித்துக் கொள்வது மக்களுக்கும் நல்லதாக இருக்கும். ஆட்சியாளர்களுக்கும் நல்லதாக இருக்கும். அதே நேரத்தில் கொள்ளை இலாப வெறி கொண்ட ஒப்பந்தக்காரர்களுக்கும், அவர்களிடம் கமிஷன் வாங்கும் அரசியலாளர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக இருக்கும்.
சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் இதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று சின்மயா நகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு இது ஒரு வெள்ளோட்டம் எனக் கருதி அரசு உடனே இதைச் செய்யுமா?
![]() |
| இருக்கும் சுவரை இடித்துக் கட்டும் திராவிடப் பாணிக்குச் சான்று |
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகும் தவெக அரசு, மக்களின் நலனுக்காகப் பணியாற்றப் போகிறதா? இல்லை ஒப்பந்தக்காரர்களுக்கும் அவர்களிடம் கமிஷன் பெறும் அதிகாரிகளுக்கும் கொள்ளை இலாபம் தரும் முடிவை எடுக்கப் போகிறதா? என்பதை விருகம்பாக்கம் கால்வாய்த் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்தில் அது எடுக்கப்போகும் முடிவில், ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல மக்கள் அறிந்துகொள்ளலாம்.
கோவன்குளம் சே.பச்சைமால்கண்ணன்




.jpeg)
.jpeg)
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக