வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

மிகப்பெரிய ஏமாற்று


தமிழ் வழியில் படித்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது மிகப்பெரிய ஏமாற்று ஆகும். 
இந்திய ஒன்றியத்திலும் தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தவறாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்த பிராமணர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அதிக இடங்களைப் பிடித்திருந்ததால் பிராமணர் அல்லாதோருக்குக் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றப்பட்டது. விடுதலைக்குப் பின் அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலினப் பிரிவினருக்குக் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக வகை செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடும் முதல் பத்தாண்டுகளுக்குத் தான் என்றும், தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்கலாம் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பிராமணர் அல்லாதோருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்குக் கேடு வந்தது. இதையுணர்ந்த பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். பெருந்தலைவர் காமராசரும் வலியுறுத்தியதை அடுத்துப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்பின் ஏராளமான திருத்தங்கள் வந்துவிட்டன.
இந்த இடஒதுக்கீட்டு முறையே தவறானதாகும். சிறுபான்மையரிடம் இருந்து பெரும்பான்மையரைக் காப்பதாகக் கூறிக்கொண்டு பெரும்பான்மையருக்குக் குறைந்த அளவு இடங்களை ஒதுக்கிவிட்டு மற்றவற்றைப் பொது இடங்களாக அறிவித்து விடுகின்றனர். இதனால் ஒதுக்கீட்டு இடங்களை மட்டுமே பிற்படுத்தப்பட்டோரும், பட்டியலினத்தாரும் பெறும் நிலை உள்ளது. அவற்றுக்கும் தகுதியுள்ள ஆட்கள் வரவில்லை எனக் கூறிப் பின்னடைவு இடங்களாக அறிவித்துக் காலியாக வைப்பதும், பின்னர் அதிலும் பிராமணர்களை நிரப்புவதும் பெரும்பாலான அரசு துறைகளில் வழக்கமாகவே உள்ளது. இதனால் மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டுக்குக் கீழ் உள்ள ஒரு வகுப்பினர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஐம்பது விழுக்காடு வரை பெற்று வருகின்றனர்.
இயற்கையாக இட ஒதுக்கீடு யாருக்குக் கொடுத்திருக்க வேண்டும். பெரும்பான்மையரிடம் இருந்து சிறுபான்மையரைக் காப்பதற்காகச் சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். மீதமுள்ள இடங்களைப் பெரும்பான்மையருக்குக் கொடுத்திருக்க வேண்டும். இந்திய ஒன்றியமும் தமிழ்நாடும் பின்பற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கை இதற்கு நேர்மாறாக உள்ளது.
இந்த நேர்மாறான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டு அரசின் வேலைவாய்ப்பில் தமிழ்வழியில் படித்தோருக்கு இருபது விழுக்காடு வழங்கப்படும் எனக் கருணாநிதியும் செயலலிதாவும், செயலலிதாவை அடியொற்றி வந்த பழனிசாமியும் அறிவித்துள்ளனர். இது தமிழுக்கும் தமிழருக்கும் செய்யப்படும் மிகப்பெரிய இரண்டகமாகும். ஆங்கிலம் இந்தி வழிகளில் பயின்றோருக்கு ஐந்து ஐந்து விழுக்காடு என மொத்தம் பத்து விழுக்காடு இடஒதுக்கீடு என வழங்கிவிட்டு மீதித் தொண்ணூறு விழுக்காடு இடங்கள் தமிழ்வழியில் படித்தோருக்கு மட்டுமே எனச் சொல்லியிருக்க வேண்டும். இப்படி இருந்தால் தமிழ் மக்களின் வேலைவாய்ப்பைப் பிற மாநிலத்தவர் தட்டிப் பறிப்பதைத் தடுக்கலாம். அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தமிழ்வழியில் பாடம் பயிற்றுவிக்கும் நிலை உருவாகும். பெரும்பான்மையராக உள்ள தமிழருக்கு (தமிழ்வழியில் படித்தவருக்கு) அரசு வேலைவாய்ப்பில் இருபது விழுக்காடு இட ஒதுக்கீடு என அறிவித்து இரண்டகம் செய்த தீராவிடக் கட்சித் தலைவர்கள், ஏதோ தமிழ் மக்களின் நலனுக்குச் செயற்கரிய செயலைச் செய்துவிட்டதைப் போலக் கொக்கரித்து வருகின்றனர்.
தமிழ்வழியில் படித்தோருக்கு இருபது விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது சரியெனப் பிற்காலத்தில் மெய்ப்பிப்பதற்காக இக்காலத்திலேயே அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தித் தமிழ் வழியில் படிப்போர் எண்ணிக்கையைத் திட்டமிட்டுக் குறைத்து வருகின்றனர்.
இந்து தீராவிட மாயைகளாலும், திரைப்படக் கவர்ச்சியாலும், சாராயக் குடிவெறியாலும், மட்டைப் பந்தாட்டத்தின் மீதான ஈர்ப்பாலும், சாதிவெறி என்னும் உட்பகையாலும் சிக்கிச் சீரழியும் தமிழ் இளைஞர்கள் இதை இதுகாறும் எண்ணிப் பார்க்கவில்லை.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்                                                                                    எண்ணுவம் என்பது இழுக்கு என்னும் வள்ளுவரின் குறளுக்கொப்பத் தமிழர்கள் எண்ணிப் பார்த்துச் செயலாற்ற வேண்டும். நம்மை ஏய்க்கும் தீராவிட ஆட்சியாளர்களைச் சாய்க்கச் சூளுரைப்போம்…
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக