ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

அனைவருக்கும் வீட்டு வசதி


கோயம்புத்தூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டத்துக்காக நிலம் எடுத்ததை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர். நிலம் எடுத்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அப்போது நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்து புதிய சிந்தனையை எழுப்பியுள்ளது. இலக்கக் கணக்கானோர் வீடற்றவர்களாக மரத்தடி, சாலையோர நடைபாதை, குழாய்கள் ஆகியவற்றில் இருப்பதையும், இலக்கக் கணக்கானோர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பதையும் கூறி நாட்டில் மலைக்கும் மடுவுக்குமான பொருளியல் ஏற்றத்தாழ்வு நிலவுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார் நீதிபதி.
இந்நிலையை மாற்ற ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருப்போருக்குச் சொத்து வரி, தண்ணீர் வரி, மின்கட்டணம் ஆகியவற்றை இருமடங்காகக் கூட்டினால் என்ன எனவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்நாட்டில் வீடு நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கத் தடை விதித்தால் என்ன எனவும் வினவியுள்ளார். இவற்றில் முதல் கருத்து எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். இந்தக் கட்டண உயர்வை, அந்த வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்களின் தலையிலேயே உரிமையாளர்கள் ஏற்றுவர். இதனால் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருப்பவர்கள் மேலும் சுரண்டலுக்கு உள்ளாவார்கள். இப்போதே நூறு அலகுகள் வரை கட்டணமின்றி வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கே அலகுக்கு ஐந்து முதல் எட்டு ரூபாய் வரை கட்டணம் வாங்கி வீட்டுரிமையாளர்கள் பலர் கொள்ளையடிக்கின்றனர். இரண்டாவது வீட்டுக்கு இருமடங்கு கட்டணம் என்றால் குடியிருப்போரின் தலையில்தான் அது விழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வீட்டை வாடகைக்கு விட்டுப் பணம் ஈட்டுவோரில் பெரும்பாலோர் அதை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கவில்லை என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளதாக ஆறாயிரத்துச் சொச்சம்பேர் மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் தெரிகிறது. இரண்டாவது வீட்டுக்கு அதிக வரி விதிப்பது, இரண்டாவது வீடு வாங்கத் தடை விதிப்பது எனச் சுற்றி வளைத்து வருவதற்குப் பதில் நேராகவே முதல் நடவடிக்கைக்கு வந்துவிடலாம். வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு அந்த வீட்டைச் சொந்த வீடாக்கி விடலாம். நிலம், வீடு ஆகியவற்றுக்குச் சந்தை மதிப்பில் இல்லாமல், அரசு வழிகாட்டு மதிப்பீட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த மதிப்பை அரசே உரிமையாளருக்குக் கொடுத்துவிட வேண்டும். அந்த வீட்டுக்கு முன்பு எவ்வளவு வாடகை கொடுத்தாரோ அதே தொகையை மாதத் தவணையாக அரசின் வீட்டு வசதி வாரியத்துக்குப் புதிய உரிமையாளர் தவறாமல் செலுத்தி அதைத் தனக்கு உரிமையாக மாற்றிக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையால் அரசும் சொந்த வீடு இல்லாதவர்களும் நன்மை பெறுவர். வீட்டு வாடகை வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பது முடிவுக்கு வரும்.
அடுத்த நடவடிக்கையாக ஆளில்லாத வீடுகளைக் கண்டறிந்து, வீடற்றுச் சாலையோரத்திலும் மரத்தடிகளிலும் வாழ்பவர்களுக்கு உரிமையாகவும், உடைமையாகவும் ஆக்கி விடலாம். இதனால் வீடற்றவர்களே இல்லை என்கிற நிலை உருவாகும். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் வாழும் அளவுக்கு வீடுகளின் எண்ணிக்கை உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போர் வாடகைக்கு விட்டிருப்பதும், அதிக வாடகைக்கு ஆள் கிடைக்காவிட்டால் வீட்டை ஆளில்லாமல் அடைத்துப் போட்டிருப்பதுமே நாட்டில் வீட்டு வசதி போதுமான அளவுக்கு இல்லை எனச் சொல்லும்படி செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது.
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு வீட்டிலும் குடியிருப்போரிடம், அவர்கள் வாழ்வது சொந்த வீடா, வாடகை வீடா என வினவி அறிந்து அதைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாடகை வீடு எனில் அந்த வீட்டு உரிமையாளரின் பெயர், ஆதார் எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளவர்கள் நேர்மையாக அதைக் கணக்கெடுப்பில் சொன்னால், அவர்களுக்கு அரசின் வழிகாட்டி மதிப்பின்படி உரிய விலை கிடைக்கும். உரிமையாளர் ஒப்புக்கொள்ளாமல் அந்த வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் மட்டுமே தகவல் தெரிவித்தால், வீடுகளை அரசே கையகப்படுத்தி, வாடகைக்குக் குடியிருப்பவருக்கே அதைச் சொந்தமாக்கிவிட்டு, அவர்களிடம் பெறும் விலையைப் பொதுநிதியில் சேர்க்கலாம்.  பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பால் வீடுள்ளவர்கள், வீடற்றவர்கள், வாடகைக்குக் குடியிருப்பவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பவர்கள், பல வீடுகளை வைத்துக்கொண்டு கணக்கில் காட்டாதவர்கள், வரி ஏய்த்தவர்கள் ஆகியோரை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம்.
ஆதார் எண் பதியாததற்காகக் குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவது, எரிவளி மானியத்தை நிறுத்துவது என்பன போன்ற சில்லறைக் குறும்புகளைச் செய்வதை விட்டுவிட்டு, பொருளியல் அடிப்படையில் மக்களிடைய ஏற்றத்தாழ்வற்ற சமநிலையை எட்ட அரசுகள் பாடுபட வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்/ படுபயனும் பார்த்துச் செயல் எனக் கூறும் திருக்குறளை எண்ணி நடுவண் மாநில அரசுகள் செயலாற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக