வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

மணிமண்டபமும் நினைவிடமும் நுழைவாயிலும் தேவையில்லை


நாடு விடுதலை பெற்றது முதல், விடுதலைக்குப் பாடுபட்ட பெரியோர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் அருஞ்செயல்களையும் தந்நலமற்ற ஈகத்தையும் மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் அவர்களுக்கு மணிமண்டபமும் நினைவிடமும் அமைக்கப்பட்டன. அண்ணல் காந்திக்குச் சென்னை கிண்டியிலும் கன்னியாகுமரியிலும் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபங்களில் காந்தியடிகளின் உடலை எரித்த சாம்பல் கலயங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராசரின் நினைவிடம் சென்னை கிண்டியிலும் அவரின் மணிமண்டபம் கன்னியாகுமரியிலும் உள்ளன. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்குத் திருநெல்வேலியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைத் திருவிதாங்கோட்டில் இருந்து பிரித்துத் தமிழகத்துடன் இணைக்கப் பாடுபட்ட மார்சல் நேசமணிக்கு நாகர்கோவிலில் மணிமண்டபம் உள்ளது.
வழித்தோன்றல்கள் இல்லாத காமராசருக்கு அரசே நினைவிடமும் மணிமண்டபமும் கட்டியதை ஏற்கலாம். காமராசருக்கு முன்னே மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரைக்குச் சென்னைக் கடற்கரையில் சதுக்கம் அமைத்தவர் கருணாநிதி. 1987ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான ம.கோ.இராமச்சந்திரனுக்கு அதிமுக அரசால் சென்னைக் கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டது. இதற்குப் பின் கடற்கரையில் இயற்கைச் சூழலைப் பாதிக்கும் வகையில் அரைக் கிலோமீட்டர் தொலைவுக்கு எந்தக் கட்டுமானத்தையும் எழுப்பக் கூடாது எனக் கூறிக் கடற்கரை மேலாண்மை விதியே கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரும் கடற்கரையைக் கல்லறைத் தோட்டமாக்கும் போக்கு நிற்கவில்லை. 2016ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் செயலலிதா மறைந்தபோது அவரது உடல் ம.கோ.இராமச்சந்திரன் நினைவிடத்தின் அருகிலேயே வைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு கருணாநிதி மறைந்தபோது கடற்கரையில்தான் அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஒரு சட்டப்போராட்டமே நடைபெற்றது. இறுதியில் அரசும் நீதித்துறையும் சேர்ந்து அண்ணாதுரை சதுக்கத்தின் அருகில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய ஒப்புதல் அளித்தன. ஆகக் கடற்கரை மேலாண்மை விதிகளைக் கொண்டுவந்த பின் விதிகளை மீறிச் சென்னை மெரினா கடற்கரையில் இரு சமாதிகள் புதிதாக எழுப்பப்பட்டன. இதில் வியப்பு என்னவென்றால் உயிரோடு இருந்தபோது மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துப் பல்லாயிரம் கோடி ரூபாயையும் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் வளைத்தவர்களுக்கு அவர்களைச் சார்ந்தவர்கள் ஆறடி நிலங்கூடக் கொடுக்கவில்லை. கடற்கரைப் புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அது மட்டுமன்றித் தன்மான இயக்கம் எனக் கூறிக்கொண்டு சிலைவழிபாட்டைக் கண்டித்தவர்கள் இன்று சமாதியை வழிபட்டு வருகின்றனர்.
வீடற்ற மனிதர்கள் கடற்கரையில் குடிசை கட்டக்கூட அனுமதிக்காத அரசு, செயலலிதாவுக்குப் பொதுப்பணத்தில் ஐம்பது கோடி ரூபாயைச் செலவிட்டு நினைவிடம் அமைத்துள்ளது. செய்ந்நன்றி கூறலைத் தவிர இதில் வேறொரு சிறப்புமில்லை. தமிழகத்தின் ஆட்சியைத் தன்னிடம் வழங்கிய அண்ணாதுரைக்குச் சதுக்கம் எழுப்பினார் கருணாநிதி. அதிமுகவைவும் அதன்வழித் தமிழகத்தின் ஆட்சியையும் தன்னிடம் ஒப்படைத்த ம.கோ.இராமச்சந்திரனுக்கு மக்கள் பணத்தில் நினைவிடம் அமைத்தார் செயலலிதா. தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பு தங்களுக்கு வரக் காரணமான அந்தச் செயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்துள்ளது பழனிசாமி பன்னீர் அரசு. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரையில் கருணாநிதிக்குக் கோட்டம் அமைத்துவிடும்.
வீடற்று மரத்தடியிலும் குழாய்களுக்குள்ளும் சாலையோரத்திலும் கிடக்கும் இலட்சக்கணக்கானோர் இருக்கும் இந்த நாட்டிலே, தங்கள் நன்றிக் கடனைத் தீர்க்கப் பொதுப்பணத்தை வீணாக்கும் வீணர்கள் ஆட்சியாளர்களாக ஆனது தமிழகத்தின் இருண்ட காலங்களில் ஒன்றேயாகும். ஒரு குடும்பத்துக்கு 5 இலக்கம் ரூபாய் என்கிற கணக்கில் குறைந்தது ஆயிரம் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம் ஐம்பது கோடி ரூபாயில். மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
சென்னைக் கடற்கரையில் பொதுப்பணம் வீணாவது போதாதென்று திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டப்பெற்றுள்ளது. தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழுக்குத் தொண்டாற்றியதாகக் கூறி வருகிறார்கள். தமிழால் தினத்தந்தி வளர்ந்ததேயொழியத் தினத்தந்தியால் தமிழ் ஒருகாலும் வளரவில்லை. இன்னமும் ராஷ்டிரபதி, ஜனாதிபதி, சுப்ரீம்கோர்ட், ஐகோர்ட், கலெக்டர், கவர்னர், தாலுகா, தாசில்தார், வக்கீல் என்றெல்லாம் மொழிநடையைக் கையாண்டுவரும் தினத்தந்தியா தமிழ் வளர்க்கிறது? தமிழாலும் தமிழர்களாலும் தினத்தந்தி வளர்கிறது. அதன் உரிமையாளரின் சொத்துக்கள் வளர்ந்துள்ளன. பா.சிவந்தி ஆதித்தனின் மரபினருக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்துக்கள் உள்ள நிலையில், அவருக்குப் பொதுப்பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? எல்லாம் வாக்குவங்கி அரசியல்தான். அரசின் இந்தச் செயல், இல்லாதவனிடம் உள்ள தார்ச்சீலையை உரிந்து இருக்கிறவனுக்குத் தலைப்பாகை அணிவிப்பதை ஒக்கும்.
இதேபோல் சென்னைக் கடற்கரைச் சாலையில் சட்டமன்றத்தின் பெயரிலும், ம.கோ.இராமச்சந்திரனின் பெயரிலும் அமைக்கப்பட்டுள்ள 2 வளைவுகளும் தேவையற்றவை. மக்களின் பணத்தை இப்படியெல்லாம் வீணாக்க முடியுமா என உலகமே இந்த வீணர்களைக் கண்டு வியக்கும் நகைப்புக்குரிய அடையாளங்களாகவே இவை திகழ்கின்றன. சென்னைக் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மேற்கு நுழைவாயிலில் கருணாநிதியின் பெயரால் கட்டப்பட்டுள்ள நுழைவாயிலும் பொதுப்பணத்தை வீணாக்கும் பட்டியலிலேயே சேரும். இந்த நுழைவாயில்கள் இல்லாவிட்டால் பேருந்தும் மக்களும் செல்ல முடியாதா என்ன?
நுழைவாயில்கள் அமைக்கும் செலவில் வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம். ஊர்ப்புறங்களுக்குச் சாலை அமைக்கலாம். பாலங்கள் அணைகள் கட்டலாம். கால்வாய்கள் குளங்கள் வெட்டலாம். சிறு தொழிற்சாலைகள் அமைக்கலாம். ஆண்ட மரபினர் எனக் கூறித் தங்களுக்குள்ளே மோதிக்கொள்ளும் தமிழரே எண்ணிப் பார்ப்பீர். மீட்சி கொணர்வீர்..

4 கருத்துகள்: