பாளைவரா இளம்பனை (வடலி) |
தென்னைக்கு இரு வாரியங்கள்
மத்திய அரசின்
வேளாண் அமைச்சகத்தின் கீழ் தென்னைக்குத் தென்னை வளர்ச்சி வாரியம், கயிறு வாரியம் என இரு வாரியங்கள் உள்ளன.
தென்னை வளர்ச்சி வாரியம்
தென்னைக்குப்
பெயர்பெற்ற கேரளத்தின் கொச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் உள்ளது. 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வாரியத்துக்குப் பெங்களூர், சென்னை, குவகாத்தி ஆகிய ஊர்களில் மண்டல அலுவலகங்கள்
உள்ளன. புவனேசுவரம், கொல்கத்தா, பாட்னா,
தானே, ஐதராபாத், போர்ட்பிளேர்
ஆகிய மாநில நடுவங்களும் உள்ளன. இந்த வாரியம் கேரளத்தின் ஆலுவா அருகே
வாழைக்குளத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு நடுவத்தை அமைத்துள்ளது.
கயிறு வாரியம்
1953ஆம் ஆண்டு
தொடங்கப்பட்ட கயிறு வாரியத்தின் தலைமையகமும் கொச்சியில் உள்ளது. இந்த
வாரியத்துக்குக் கேரளத்தின் ஆலப்புழையிலும், கருநாடகத்தின்
பெங்களூரிலும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.
காப்பி வாரியம்
1942ஆம் ஆண்டில்
தொடங்கப்பட்ட காப்பி வாரியத்தின் தலைமையிடம் கருநாடகத்தின் பெங்களூரில் உள்ளது. 1995ஆம் ஆண்டு வரை காப்பி சந்தைப்படுத்தலில் முற்றுரிமை பெற்ற நிறுவனமாக இது
விளங்கியது. அதன்பின் தாராளமயமாக்கலால் தனியார்த் துறையினரும் காப்பிச்
சந்தைப்படுத்தலில் தலைப்பட்டனர்.
தேயிலை வாரியம்
1954ஆம் ஆண்டில் கொல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு தேயிலை வாரியம் தொடங்கப்பட்டது.
நறுமணப் பொருட்கள் வாரியம்
மிளகு, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட நறுமணப்பொருட்களுக்கான வாரியம் 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தேயிலை வாரியம், நறுமணப் பொருட்கள் வாரியம் ஆகிய இவ்விரு
வாரியங்களும் மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு
வருகின்றன.
மஞ்சள் வாரியம்
தெலங்கானா மாநிலம்
நிசாமாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த ஆண்டில் தேசிய மஞ்சள் வாரியம்
உருவாக்கப்பட்டுள்ளது. பயிரிடல், விளைச்சல், பதப்படுத்தல், சந்தைப்படுத்தல்
ஆகியவற்றில் மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் கோதாவரிப் பாசனப் பகுதிகள்
முன்னணியில் உள்ளன. இதேபோல் மகாராஷ்டிரம், கருநாடகம், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில்
உள்ள கிருஷ்ணையாற்றுப் பாசனப் பகுதிகளும் மஞ்சள் பயிரிடலில் குறிப்பிடத் தக்க இடங்களைப்
பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் பவானி, காவிரியாறுகளை ஒட்டிய ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டப்
பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. ஈரோட்டில் மஞ்சள் விற்பனைச் சந்தை
உள்ளது.
கரும்புக்கு முதலிடம்
இதேபோல் கரும்பு ஆராய்ச்சி, சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றுக்காக உணவுத்துறையின் கீழ்க் கரும்பு இயக்ககமே உள்ளது. ஆசியாவின் முதல் சர்க்கரை ஆலை தமிழ்நாட்டின் நெல்லிக்குப்பத்தில் கட்டப்பட்டது. கரும்புச் சர்க்கரைத் தொழிலைவிடக் குறைந்த செலவில் அதிகப் பயனுள்ள கருப்பட்டியைத் தயாரிக்க முடியும். 1980களில் ஒரு கிலோ கருப்பட்டி 3 ரூபாயாகவும் சீனி 5 ரூபாயாகவும் இருந்த்து. இப்போது சீனி 40 ரூபாயாகவும், கருப்பட்டி 400 ரூபாயாகவும் உள்ளது. இப்படிக் கருப்பட்டிக்கான தேவையும் விலையும் அதிகரித்துள்ளது.
பனைக்கு வாரியம் இல்லை
நாட்டின் கல்வி, அறிவு, சமூகம், பொருளியல், வணிகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றும் பனைக்குத் தனி வாரியம் இல்லை. தாராளமயம், தனியார்மயம், உலகமயம், தொழில்மயம் என்று 1990களில் தொடங்கிய போக்கு ஊரகத் தொழில்களில் பெரும்பாலானவற்றை அழித்தொழித்து விட்டது. அதில் முதலிடம் பெற்றுள்ளது பனைத்தொழிலாகும். ஒரு காலத்தில் 100 வீடுகள் உள்ள ஊரில் 40 பேர் பனையேறினர். அவர்களின் குடும்பத்தினர் அதைச் சார்ந்த தொழில்களைச் செய்தனர். இன்று அந்த ஊரில் ஒருவரோ இருவரோ தான் ஆண்டில் சில மாதங்களில், ஒருநாளில் சில மணி நேரங்களில் அந்தத் தொழிலைச் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில்
இருந்த பனை வாரியத்தையும் பனைத்தொழிலாளர் நலவாரியமாக மாற்றிவிட்டனர். இப்போது
மத்திய அரசின் சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் மத்தியப்
பனங்கருப்பட்டி மற்றும் பனம்பொருட்கள் நிறுவனம் சென்னை மாதவரத்தில் செயல்படுகிறது.
இந்திய அரசின்
சிறுகுறு நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் மும்பையில் காதி மற்றும்
ஊரகத் தொழில்கள் ஆணையம் செயல்படுகிறது. அந்த ஆணையத்தால் சென்னை மாதவரத்தில்
பால்பண்ணை நுழைவாயிலுக்கு மேற்குப் பக்கத்தில் மத்தியப் பனம்பொருட்கள் நிறுவனம்
நடத்தப்பட்டு வருகிறது. இப்போது மாதவரம் மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட்டுவரும்
பகுதியில் இது அமைந்துள்ளது. மத்தியக் கருப்பட்டி மற்றும் பனம்பொருட்கள் நிறுவனம் 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐம்பதாண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்நிறுவனம் 2000ஆவது ஆண்டிலிருந்து இப்போதுள்ள இடத்தில் சொந்தக் கட்டடத்தில் செயல்பட்டு
வருகிறது. பனங்கருப்பட்டி காய்க்கும் தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிப்பதற்காக
நாட்டில் உள்ள ஒரே மத்திய நிறுவனம் இதுவாகும்.
பதநீர் இறக்கிப்
பனங்கருப்பட்டி காய்த்தல், பனம்பொருட்களில் இருந்து பயன்படு
பொருட்கள் செய்தல் ஆகியன குறித்து ஆராய்ச்சி செய்வது, பயிற்சியளிப்பது,
பொருட்களைச் சந்தைப்படுத்தல், கடனுதவி
வழங்குதல் ஆகியன இந்த நிறுவனத்தின் முதன்மையான குறிக்கோள் ஆகும்.
மத்தியப்
பனம்பொருட்கள் நிறுவனத்தின் நோக்கங்கள்
பனங்கருப்பட்டி
காய்த்தல் மற்றும் பனம்பொருட்கள் செய்தல், ஊரகத் தொழில்கள்
ஆகியவற்றுக்கான பயிற்சிகள் அளிப்பது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
புதிய
தொழில்முனைவோரை உருவாக்குவதற்குப் பல்வேறு தொழில்திறன் பயிற்சிகளை அளிப்பதும் இதன்
நோக்கமாக உள்ளது.
பனைத்தொழிலில் புத்தாக்கத்தை
உண்டாக்கும் வகையில் புதிய அறிவு, திறன்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
உணவுப்பண்டங்கள்
செய்வது தொடர்பாகப் பயிற்சி பெறுவோருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகைகயில் பொது
வசதிகள் நிலையத்தை அமைத்துத் தேவையான தகவல்களை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
மத்தியப் பனம்பொருட்கள் நிறுவனத்தில் உள்ள பொறிகளும் கருவிகளும்
பனங்கருப்பட்டிப்
பிரிவில் பதநீர் அரிக்கும் கருவி, பதநீர் காய்ப்பதற்கான
விறகடுப்பு, கருப்பட்டிக்கான அச்சு, கலவை
மற்றும் படியவைத்தலுக்கான சுழலி, பனஞ்சீனி செய்வதற்கான கருவி
ஆகியன உள்ளன.
பனையோலைப் பிரிவில்
பல்வகை அரிவாள்கள், கத்திகள், நிறமூட்டும்
சாயங்கள், தையற்பொறிகள், ஓலையைச்
சீராக்கும் கருவிகள் ஆகியன உள்ளன.
பனந்தும்புப்
பிரிவில் மின்னாற்றலின் உதவியுடன் பனந்தும்பு பிரித்தெடுக்கும் பொறிகள், தும்பைப் பொருட்களாகச் செய்யும் பொறி, தும்புகளை
வெட்டும் பொறி ஆகியன உள்ளன.
தையல் பிரிவில்
தையல் பொறி, பூத்தையல் வேலைப் பொறி, விரும்பிய
வடிவில் மேலும் கீழும் தைக்கும் பொறி ஆகியன உள்ளன.
அடுமனைப் பிரிவில்
மின்னடுப்பு, மாவு பிசையும், குழைக்கும்
பொறிகள், பண்டங்களை நறுக்கும் கருவிகள், பண்டங்களைச் சுடும் பொறிகள் கருவிகள் உள்ளன.
நிறுவனத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் தொழிற்பயிற்சி
பனங்கருப்பட்டித்
தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்க மாதம் 3000 ரூபாய்
உதவித்தொகை வழங்கி 4 மாதப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்று 45 வயதுக்குட்பட்ட எவரும்
இந்தப் பயிற்சியில் சேரலாம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து
பயிற்சிபெறும் ஆண்களுக்கு மட்டும் தங்கும் விடுதி வசதியும் இங்குள்ளது.
நிறுவனத்தில்
கட்டணத்துடன் அளிக்கப்படும் தொழிற்பயிற்சிகள்
பனையோலையில்
கலைப்பொருட்கள் செய்தல், அழகுக்கலை ஆகியவற்றுக்கு ஒரு மாதப்
பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ஐந்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால்
போதும்.
அழகுக்கலை பற்றி
ஐந்துநாள் பயிற்சியும் உள்ளது.
தையல் மற்றும்
பூத்தையல் வேலை ஆகியவற்றுக்கு மகளிருக்கு மட்டும் மூன்றுமாதப் பயிற்சி
அளிக்கப்படுகிறது. இதற்கு எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
துணிகளில் மணிகள்
மின்னும் பொருட்கள் கோத்தல், பூத்தையல் வேலைக்கான 14 நாள் பயிற்சியும், இதே வேலைக்கு 5 நாள் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அடுமனைத்
தொழில்நுட்பம், தாளிலும் அட்டையிலும் பொருட்கள் செய்தல்,
வேதிப்பொருட்களில் மெழுகுத்திரி, சாம்பிராணி,
சலவைத்தூள், சலவை எண்ணெய், தூய்மைப்பொருட்கள் ஆகியன செய்தல், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சாறு, கூழ், பிழிவு ஆகியனவாக்கி மதிப்புக் கூட்டுப்பொருட்கள் செய்தல், மூலிகைப் பொருட்கள் செய்தல், நகைகள் செய்தல்,
வீட்டு சாக்கலேட் செய்தல், இனிப்பு, உறைப்பு தின்பண்டங்கள் செய்தல் ஆகியவற்றுக்கான ஐந்துநாள் பயிற்சிகளும்
அளிக்கப்படுகின்றன. இவ்வகைப் பயிற்சிகளுக்கும் ஐந்தாம் வகுப்புத் தேர்ச்சி
பெற்றிருந்தால் போதும்.
தொழில்முனைவோர்
விழிப்புணர்வுத் திட்டம் என்னும் பெயரில் ஒருநாள் பயிற்சித் திட்டமும் உள்ளது.
தங்க நகை
மதிப்பீட்டாளருக்கான 10 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்குப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தையல் மற்றும்
பூத்தையல், கருவிகளின் உதவியுடன் பூத்தையல், மணிகோத்தல், தையல் மற்றும் ஆடை வடிவமைப்பு
ஆகியவற்றுக்கு மூன்று மாதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவற்றில் சேர்வதற்கு
எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வீட்டுப்
பயன்பாட்டுக் கருவிகள் பழுதுபார்த்தல், வீட்டின் குளிர்
வெப்பநிலை சீராக்கல் ஆகிவற்றுக்கு 15 நாள்
பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் சேர்வதற்குப் பத்தாம் வகுப்புத்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிறுவனத்தில் உள்ள வசதிகள்
பயிற்சியில்
சேர்வோருக்குப் பிரதமர் வேலை உருவாக்கும் திட்டம், காதி
மற்றும் ஊரகத் தொழில் ஆணையத்தின் பிற திட்டங்கள் குறித்து வழிகாட்டல்கள்
வழங்கப்படுகின்றன.
பனங்கருப்பட்டி
காய்த்தல், பனம்பொருட்களில் இருந்து பயன்படுபொருட்கள்
செய்தல் ஆகியன தொடர்பான தகவல்கள் அடங்கிய நூலகம் இங்குள்ளது.
நிறுவனத்தால் செய்யப்படும் பிற உதவிகள்
மத்திய, மாநில அரசுகளின்
பல்வேறு திட்டங்களுக்கான உதவிகள்
ஆலைகளையும் கருவிகளையும் நிறுவிக் கொடுத்தல்
பனங்கருப்பட்டி காய்த்தல், பனம்பொருட்கள் செய்தல் தொழில் செய்வோரிடையே பொருட்களைச் சிறப்பாக
வடிவமைத்தலுக்கான இணைப்பை ஏற்படுத்தல்
தொழில் திட்டங்களைத் தீட்ட உதவுதல்
செய்பொருட்களைக் காட்சிப்படுத்தும் பணிமனைகளை
உருவாக்க உதவுதல்
தக்க தொழில்நுட்பங்களைத் திட்டங்களைத்
தேர்ந்தெடுத்தல்
சந்தைப்படுத்தலுக்கான உதவிகளைச் செய்தல்
திருநெல்வேலி,
தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், சேலம், நாமக்கல்,
ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின்
பெரும்பாலான மாவட்டங்களில் பனைத்தொழில் ஓரளவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில்
பனைத் தொழிலைச் செய்து வருவோரின் பிள்ளைகளும், ஆர்வமுள்ளோரும்
இப்பயிற்சியில் பங்கேற்றால் அவர்கள் தொழில் தொடங்கவும், தொழிலை
மேம்படுத்தவும், விரிவாக்கவும் ஆலோசனைகள் வழங்கவும், கடனுதவி பெறவும் இந்நிறுவனம் உதவியாக இருக்கும். பயிற்சியில் சேர்வதற்கு
முன்கூட்டிப் பெயரையும், செல்பேசி எண்ணையும் கொடுக்க
வேண்டும். ஓரணியின் பயிற்சிக்காலம் முடிந்து புதிய அணிக்கான பயிற்சியைத்
தொடங்கும்போது நிறுவனத்தில் இருந்து அழைப்பர். அப்போது கல்விச் சான்றிதழின் படி,
ஒளிப்படம், ஆதார் அட்டையின் படி, வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை அங்கு வழங்க வேண்டியிருக்கும். உண்மைச்
சான்றிதழைக் காட்டுவதற்காகக் கொண்டுசெல்ல வேண்டும்.
மத்தியப் பனம்பொருட்கள் நிறுவனத்தின் முகவரி:
மத்தியப் பனங்கருப்பட்டி மற்றும் பனம்பொருட்கள்
நிறுவனம்,
காதி மற்றும் ஊரகத் தொழில்கள் ஆணையம்,
மாதவரம் பால்பண்ணை அஞ்சல்,
சென்னை -600051.
தமிழ்நாடு
தொலைபேசி: 044-25555402/29555355
மின்னஞ்சல்: cppichennai.kvic@gov.in
palmgur_1974@yahoo.com
இணையத்தளம்: www.kvic.org.in
பனையின் பயன்கள்
தேக்குமரத்தைப் போன்று தூண், உத்தரம், சட்டம், விட்டம், வரிச்சு எனக் கட்டுமானத்துக்கு உதவும் வளைகளைக் கொடுக்கக் கூடியது பனை. கரும்புச் சாறு, முந்திரிச்சாறு ஆகியவற்றைப் போன்ற இனிய பதநீரைக் கொடுப்பது பனை. எந்தவொரு மேல்நாட்டுச் சாராய வகைகளையும் விடக் குறைந்த செலவில் உடலுக்குத் தீங்கில்லாக் கள்ளைக் கொடுக்கக் கூடியது பனை. கரும்புச் சர்க்கரையைவிட நல்ல இனிமையானதும் உடலுக்கு நலம் பயக்கக் கூடியதுமான கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றைத் தரக்கூடியது பனை. இன்று புழக்கத்தில் உள்ள நெகிழிப்பொருட்கள் (PET HDPE PVC LDPE PP PS OTHER PLASTIC) அனைத்துக்கும் மிகச்சிறந்த மாற்றாக உள்ளவை ஓலை, நார், ஈர்க்கு, தும்பு, மட்டை ஆகிய பனம்பொருட்களே. ஏற்கெனவே புழக்கத்தில் இருந்து இப்பொழுது வழக்கொழிந்துபோன இவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாலே சுற்றுச்சூழலை மாசடைவதில் இருந்து காக்கலாம்.
அரசுகள் செய்ய வேண்டியன
பனை ஆராய்ச்சி, பயிரிடல், கருப்பட்டித் தொழில்நுட்பம், உற்பத்தி விற்பனை, பதநீர் கள் பதப்படுத்தல், விற்பனை, பனையோலை, நார், மட்டை, தும்பு ஆகியவற்றில் வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள், கலைப்பொருட்கள் செய்தல், பனந்தண்டைக் கட்டுமானத்துக்கான தூணாகவும் சட்டமாகவும் பலகையாகவும் பயன்படுத்தல் இப்படிப் பல்வேறு தொழில்கள் உள்ளன. பனை தொடர்பான படிப்பு, ஆராய்ச்சி, பனம்பொருள் சேகரிப்பு, காட்சிப்படுத்தல், விற்பனை, ஏற்றுமதி என இதில் செயல்பட வேண்டிய துறைகளும் நிறைய உள்ளன. ஆகவே தேசிய அளவில் பனை வாரியத்தை அமைக்க வேண்டும். இந்த வாரியத்தின் தலைமையகத்தைத் திருநெல்வேலியில் அமைப்பது பொருத்தமாக இருக்கும். பனைசார் பல்கலைக்கழகத்தைத் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கலாம். பனம்பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தூத்துக்குடியில் ஓர் இயக்ககத்தை அமைக்கலாம்.
கருப்பட்டிக்கான தேவையும் விலையும்
அதிகரித்துள்ள இந்தக் காலமே பனை வாரியம், பனைசார் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைக்க மிகவும்
ஏற்றது. நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அக்கறை கொண்டிருந்தால் மத்திய மாநில
அரசுகள் இதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
புவி வெப்பநிலை உயர்வைத் தடுத்தல்,
சுற்றுச்சூழலை மாசுபடாமல் காத்தல், மட்காப் பொருட்களை ஒழித்து மட்கும் பொருளைப் பயன்பாட்டுக்குத்
தரல் ஆகியன பனம்பொருட்களால்தான் இயலும். இது ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததுதான். அந்தச்
சூழலை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
வ.உ.சிதம்பரம்பிள்ளையும், காந்தியடிகளும்,
குமரப்பாவும் கொண்டுவர நினைத்த ஊரகப் பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுப்போம். உலக மயமாக்கல்,
தனியார் மயமாக்கல், தாராய மயமாக்கல் என்னும் பெயரில் நம் நாடு மீண்டும் அடிமையாவதைத்
தடுப்போம்.
- சே.பச்சைமால் கண்ணன்
கோவன்குளம், திசையன்விளை வட்டம், திருநெல்வேலி மாவட்டம் - 627110. தமிழ்நாடு.
செல்பேசி: 9487266537
மின்னஞ்சல்: pachaimalkannan@gmail.com